Page 1 of 13 1 2 3 4 5 11 ... LastLast
Results 1 to 12 of 147

Thread: கடலோரக் குற்றங்கள்-நிறைவு

                  
   
   
  1. #1
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0

    கடலோரக் குற்றங்கள்-நிறைவு

    பாகம்-1

    1917..........வியாபாரத்துக்கு வந்த ஆங்கிலேயர்கள்...ஆட்சியாளர்களாகி போட்டுக்கொண்டிருந்த ஆட்டமெல்லாம்...ஆட்டம் கண்டுகொண்டிருந்த காலம். அவசர அவசரமாய் கொள்ளையடித்த பொருட்களையெல்லாம் ஏறக்கட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கும் ஒரு பகுதியை அனுப்பிவைக்க தீர்மானித்த மகாராணி அரசாங்கம்...இந்தியத் தங்கத்தை கப்பலேற்றி அனுப்ப முடிவு செய்தது.ஆனால் உலகநாடுகளின் பார்வைக்கு இவர்களின் திருட்டுபுத்தி தெரியக்கூடாது என்பதற்காக அதை ரகசியமாய் செய்ய முடிவெடுத்தனர். கப்பல் தயாரானது. கேப்டன் ரஸ்ஸலும்,உடன் பாதுகாப்புக்கு கப்பற்படை அதிகாரி ராபர்ட் ஸ்டீவும் அவருடைய ஒரு பிரிவு வீரர்களும் ரகசியமாய் தயார்படுத்தப்பட்டனர். மும்பையிலிருந்து புறப்பாடு என ஏற்பாடு.

    சரக்கு ஏற்றும் பகுதி...இரண்டு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு...உள் அடுக்கில் டன் கணக்கில் இருந்த தங்கப் பெட்டிகளும்,அதனைச் சுற்றி வெளி அடுக்கில் பார்ப்பவர்களுக்காக பருத்திப் பஞ்சு மூட்டைகளும் ஏற்றப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.ராணுவ வீரர்கள் சாதாரண கப்பல் தொழிலாளிகளாக மாற்றப்பட்டார்கள்.எல்லாம் மிகச் சரியாகத் திட்டமிடப்பட்டதும் பயணத்துக்கான நாள் குறிக்கப்பட்டது.

    பணியாளர்களுக்கு உணவு சமைக்கும் வேலையில் தமிழகத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தலைமைப் பொறுப்பில் இருந்தார். அவருக்கு ஆஸ்தான உதவியாளராக..மருதமுத்து. இருவரும் தென்கோடி பகுதியான நாகர்கோவில் பகுதியான குளச்சலைச் சேர்ந்தவர்கள்.மிக ரகசியமாக ஏற்றப்படும் சரக்கு இன்னதென சுந்தரலிங்கத்தால் முதலில் விளங்கிக்கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் அந்தக் காரியத்தின் ரகசிய செயல்பாடுகள் அவருக்கு சந்தேகத்தை தோற்றுவித்தது.கப்பலின் உள்ளே சர்வ சுதந்திரத்துடன் உலவும் அனுமதி பெற்றவரென்றாலும்...சரக்கு ஏற்றும் சமயத்தில் அவரையும்,அவருடைய உதவியாளர்களையும் உள்ளே அனுமதிக்காததிலிருந்து மிக முக்கியமான...மிகவும் மதிப்புள்ள பொருளை இந்தமுறை கொண்டுபோகிறார்கள் என்று யூகிக்க முடிந்தது.

    அது தங்கப்பாளங்கள்தான் என்பதையும் அவர் தெரிந்துகொண்டார்....பெட்டிகளில் அடுக்கப்பட்டிருக்கிறது...கனமான பூட்டும் போடப்பட்டிருக்கிறது....அந்தவகைப் பூட்டுகளை ஆங்கிலேயர்கள் மிக விலையுயர்ந்த பொருட்கள் இருக்கும் பெட்டிகளுக்குத்தான் உபயோகப்படுத்துவார்கள். சாதாரணமாக இரண்டுபேரால் இலகுவாய் தூக்கிவிட முடிந்த அளவில் இருந்த அந்தப் பெட்டிகளை மிகக் கஷ்டப்பட்டு அவர்கள் தூக்கியதிலிருந்தும்,வழக்கமாய் பயணிக்கும் வேலையாட்கள் மாற்றப்பட்டு புதிய ஆட்களை தயார்படுத்தியதிலிருந்தும்,அந்த புதுமுகங்களெல்லாம் கப்பற்படையைச் சேர்ந்தவர்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளிலேயே தெரிந்ததாலும்...சர்வ நிச்சயமாய் சுந்தரலிங்கத்தால் அதை யூகிக்கமுடிந்தது.

    அந்த நிமிடம்வரை அவருடைய மனதில் எந்த திட்டமும் இல்லை. ஆனால் போகும் வழியை கேப்டன் அவர்களுக்கு விளக்கிச் சொன்னபோதுதான்...மெல்ல அந்த திட்டம் அவருடைய மனதில் உருவானது.இலங்கையைச் சுற்றிக்கொண்டு போகவேண்டி இருந்ததால்...கப்பல் செல்லும் பாதையிலிருந்து ...தான் சர்வ சகஜமாய் புழங்கிக்கொண்டிருந்த கடல் பகுதி அருகில்தான் இருக்கும் என்பதை கணக்கிட்டு....திட்டத்தை உருவாக்கினார். தன் ஆஸ்தான உதவியாளரான மருதமுத்துவுக்கு அந்த திட்டத்தைச் சொன்னதும்...அவனுக்கு கை,காலெல்லாம் நடுங்கத்தொடங்கிவிட்டது.சாத்தியமா...இல்லை சாவு நிச்சயமா...என்று உதறலுடன் சுந்தரலிங்கத்தைக் கேட்டான்.

    துணிந்தவனுக்குத் துக்கமில்லை....கவலைப்படாதே எல்லாம் நல்லபடியாக நடக்குமென்று அவனுக்கு தைரியம் சொல்லிவிட்டு...தனது திட்டத்தின் அடுத்த பகுதியை விளக்கினார்.


    தென்தமிழகம்

    குளச்சல் ஒரு கடலோர கிராமம். அந்த கிராமத்து வாலிபன் பாண்டியன், திடகாத்திர வாலிபன்.சுந்தரலிங்கத்தின் உறவுக்காரனென்றாலும் மிக நெருங்கிய நன்பன். அந்த வட்டாரத்தில் அவனுடைய துணிச்சலுக்கு நல்ல பேர் இருந்தது.கையில் ஒரு கடிதத்தை வைத்துக்கொண்டு ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.அது சுந்தரலிங்கத்திடமிருந்து வந்திருந்தது.தங்களுக்குப் பழக்கமான அந்தக் கரைப்பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு, குறிப்பிட்ட தினத்தில் நள்ளிரவுக்கு மேல் வந்து நிற்குமாறும்...நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள சில பொருட்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடையும் செய்யுமாறும்...எழுதிவிட்டு...பின் குறிப்பாக..நம்மிடமிருந்து எடுக்கப்பட்ட பொருளை நாமே திரும்ப எடுத்துக்கொள்வது திருட்டு அல்ல...அதனால் நான் கொண்டுவரும் பொருளைப் பற்றின
    தவறான சந்தேகம் வேண்டாம்.ஆனால் சந்தேகமே இல்லாமல் நம் வாழ்க்கையை இது உயர்த்தும்.மிக எச்சரிக்கையாய் நடந்துகொள்.நான் அங்கு திரும்ப வந்த பிறகு பிரிட்டிஷார் என்னைத் தேடிக் கண்டுபிடித்து கொன்றுவிடுவார்கள்.என்
    உயிரைப் பற்றிக் கவலையில்லை...ஆனால் நம் குடும்பமும்,மருதமுத்துவின் குடும்பமும் உன்னால்தான் காப்பாற்றப் படவேண்டும்.உன்னைத்தான் நான் வெகுவாக நம்பியிருக்கிறேன்....என்று எழுதியிருந்தது.

    கடிதத்தை ஒன்றுக்கு மூன்றுமுறை படித்துப்பார்த்துவிட்டு..குழம்பிப்போனான். சுந்தரலிங்கம் கொண்டுவரப்போகிற பொருள் என்னவாக இருக்கும்,எப்படி அதைக் கரைவரைக் கொண்டுவரப்போகிறார்..அவர் வேலை செய்யும் கப்பல் வெள்ளைக்காரர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும், காவல் நிறைந்திருக்கும் அத்தனையையும் மீறி எப்படி அவரால் இதை சாதிக்க முடியும் இப்படி பலவேறான சந்தேகங்கள் கேள்விகளாய் குடைந்தன. தன் உயிருக்கே ஆபத்து வரும், நிச்சயம் இறக்கவேண்டிவரும் என்று அவரே சொல்வதைப் பார்த்தால் மிக மிக ஆபத்தான ஒரு காரியத்தில்தான் இறங்கியிருக்கிறார் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட வேலையில் என்னைத்தான் முழுதுமாக நம்புவதாகச் சொல்லியிருக்கிறாரே...எப்படி என்னால் அவருக்கு உதவமுடியும் என்று உள்ளுக்குள் நினைத்துக்கொண்டாலும்...அந்தக் கடிதத்தின் பின் குறிப்பு அவனை சமாதானப்படுத்தியது.

    தன்னை நம்பி இந்தக் காரியத்தில் இறங்கிவிட்டார்...கண்டிப்பாக எந்த கஷ்டம் வந்தாலும் இதில் அவருக்குத் துணையாக இருக்கவேண்டுமென உறுதி செய்துகொண்டு அந்தக் கடிதத்தை தன் நாட்குறிப்புப் புத்தகத்தில் மடித்து வைத்துவிட்டான். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோருக்கு அணில் உதவியாய் அவ்வப்போது சிலவற்றை செய்துகொண்டிருந்தான். அந்த நிகழ்வுகளை..பதித்து வந்த அந்த நாட்குறிப்பை...(நாட்குறிப்பென்றால் நாள்தோறும் அதில் எழுதும் பழக்கமில்லை. தன்னைப் பாதித்த நிகழ்ச்சிகளை,தனக்குத் தோன்றியதை...இப்படி அவ்வப்போது எழுதி வந்தான்.)மிகப் பத்திரமாக பாதுகாத்தான். அதனாலேயே அந்தக் கடிதத்தையும் அதனுடனே வைத்தான். அந்த நாட்குறிப்பை, பழம்பொருட்களைச் சேகரிக்கும் பழக்கத்தில் ஒரு நலிந்துவிட்ட சிற்றரசர் குடும்பத்தாரிடம் வாங்கிய ஒரு சின்ன அழகிய வேலைப்பாடுடன் கூடிய மிகப் பழைய காலத்து மரப்பெட்டியின் உள்ளறையில் வைத்தான்.

    சுந்தரலிங்கம் குறிப்பிட்டிருந்த அன்றையதினம்......வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு..மெல்ல வெளியேறினான் பாண்டியன். மங்கிய வெளிச்சத்தில் தெருவை சுற்றி நோட்டமிட்டான்.அந்த ஊரிலிருந்த அனைவரும் கடுமையான உழைப்பாளிகள்...அதுவுமல்லாமல் பட்டணத்தவர்களைப் போல அவர்களுக்கு கேளிக்கை என்பதெல்லாம் தினமுமல்ல... வருடம் ஒருமுறை நடக்கும் திருவிழாவும் தெருக்கூத்தும்தான். அதனாலேயே வெகு சீக்கிரமே கஞ்சியைக் குடித்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்துக்குப் போய்விடுவார்கள்.அப்படியே அன்றும் அனைவரும் உறங்கியிருந்தார்கள்.

    எங்கோ ஒரு உழவுமாடு கத்தும் சத்தமும்,சில் வண்டுகளின் சத்தமும்,பஞ்சாரத்தில் அடைபட்டுருந்த கோழிகளின் குக்குர்குரும் தான் கேட்டது. வேகமாக அதே சமயம் சத்தம் வராமல் நடந்து ஏற்கனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த மாட்டுவண்டி இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். சக்கரங்களில் அவன் இட்டு வைத்திருந்த மசையால்..அதிக சத்தம் வராமல் அவை உருண்டன.வண்டியை ஓட்டிக்கொண்டு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். தான் கொண்டு வந்திருந்த மாட்டுவண்டியை ஓரமாக மறைவிடத்தில் நிறுத்திவிட்டு...ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். பலவித எண்ணங்கள் மனதில் ஓடினாலும்...எதோ ஒருவித பரபரப்பு உடலில் ஓடிக்கொண்டிருந்தது.

    குறைந்த நிலா வெளிச்சத்தில் தண்ணீருக்கு மேல் தாவிய மீன்களின் மின்னல் வெட்டு மட்டும் அந்த கரிய கடலின் உடல்மீது தோன்றிக்கொண்டிருந்தது.காற்றில் சில்லிப்பு கூடியிருந்தது. நள்ளிரவைக் கடந்த சமயமல்லவா...ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு தயாராய் இருந்த மனது குளிரை உணரச் செய்யாததால்.....குளிர் உறைக்காமல்,தன் கண்முன்னாலேயே நிகழப்போகும் விபரீதத்தை அறியாமல்..பார்வையைக் கடல்மீதே பதித்து காத்திருக்கத் தொடங்கினான்.அலைகளின் ஓசை..வம்புபேசுபவர்களின் இரைச்சலைப் போல ஓயாது கேட்டுக்கொண்டிருந்தது.......


    தொடரும்
    Last edited by சிவா.ஜி; 07-04-2008 at 12:58 PM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு தயாராய் இருந்த மனது குளிரை உணரச் செய்யாததால்.....குளிர் உறைக்காமல்,தன் கண்முன்னாலேயே நிகழப்போகும் விபரீதத்தை அறியாமல்..பார்வையைக் கடல்மீதே பதித்து காத்திருக்கத் தொடங்கினான்.அலைகளின் ஓசை..வம்புபேசுபவர்களின் இரைச்சலைப் போல ஓயாது கேட்டுக்கொண்டிருந்தது.......
    ம் நல்ல துவக்கம் கொடுத்திருக்கிறீர்கள் அண்ணா.....
    தொடருங்கள்...
    சுந்தரலிங்கத்தின் திட்டம் என்ன?

    தங்கப் பாளங்கள் ஆஸ்திரேலியா சென்று சேர்ந்ததா?

    அந்த விபரீதம் என்ன?

    விடைகளுக்காக காத்திருக்கிறோம்....
    நெஞ்சில் . திடுக் திடுக்குடன்....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

  3. #3
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி செல்வா.முடிந்தவரை எழுத முயற்சிக்கிறேன்.சோதனை முயற்சிகளை நம் மன்றத்தில்தானே செய்யமுடியும்.கொட்டுகளையும்,முதுகுதட்டுகளையும் சமமான மனநிலையில் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இங்குதானே கிடைக்கும்.
    Last edited by சிவா.ஜி; 31-03-2008 at 08:19 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பாகம்-2

    2007ன் ஒரு மார்ச்சு மாதம்....சென்னை வெயில் மக்களை நனைத்துக்கொண்டிருந்தது.இதெல்லாம் ஒரு வெயிலா என அந்த மாநகரத்து மக்கள் வழிந்தோடும் வியர்வையையும் பொருட்படுத்தாமல்....நூற்றில் முப்பதுபேர் மற்ற எழுபது பேரை ஏமாற்ற ஆவலோடு ஓடிக்கொண்டிருந்தனர்.மஞ்சள்பையோடு வந்த பட்டிக்காட்டான்களும் மிட்டாய்கடைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.நாற்சந்திகளில் காவலர்கள் கப்பம் வசூலித்துக்கொண்டிருந்தனர்.வாலில் தீவைத்த மாடுகளைப் போல தண்ணீர் லாரிகள் அன்றைய பலி தேடி அசுர வேகத்தில் பறந்து கொண்டிருந்தன.சாவகாசமாக பள்ளியெழுந்து தாங்கள் இந்த உலகத்திலுள்ளோரில் வித்தியாசமானவர்கள் என்ற மிதப்பில் தரையிலிருந்து ஒரு அங்குலம் உயர பறந்து அலுவலகம் போய்க்கொண்டிருந்தனர் மென்பொருள் வல்லுனர்கள்.

    இந்த சென்னை மாநகரத்தின் அண்ணா சாலையின் பின்பக்கமிருந்த ஏராள சந்துகளில் ஒரு சந்தில்தான் அந்த சேட்டுக்கடை இருந்தது.சேட்டின் பையன்கள் பிறந்து வளர்ந்ததே இந்த சிங்காரச் சென்னையில்தான் என்பதால் தமிழில் பிளந்து கட்டிக்கொண்டிருந்தார்கள்.சரளமாய் அவர்கள் உதடுகள்...த்தா...வை உச்சரித்துக்கொண்டிருந்தன.அது ஒரு புராதானப் பொருட்களை வாங்கி விற்கும் கடை.வெளியே நியாயத்தை ஷோரூமில் வைத்துவிட்டு உள்ளே குடோனில் அநியாயத்தை அடுக்கிவைத்திருந்தார்கள்.

    ஏமாந்தவர்களிடமிருந்து மிகப் புராதானமான அரிய பொருட்களை அடிமாட்டுவிலைக்கு வாங்கி அதை புத்திசாலி வெளிநாட்டுக்காரனிடம் எக்கச்சக்கவிலைக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.ஒரு பெரிய கும்பலே இவர்களுக்காக நிழல் வேலைகளைச் செய்துவந்தது.கஸ்டம்ஸ் அதிகாரிகளிலிருந்து உள்ளுர் போலீஸ்வரை சேட்டுப் பணத்தில் சிக்கன் சாப்பிடாதவர்கள் யாருமில்லை.

    இந்த மகா கனம்பொருந்திய கீர்த்திலால் சேட்டின் இளையமகன் கன்வர்லால்..அப்பாவை ஏப்பமிட்டுவிடுமளவுக்கு கிரிமினல் மூளைக்காரன்.கீர்த்திலால் இப்போதெல்லாம் பஜன் கீர்த்தனைகளில் பாவத்தைக் கரைத்துக்கொண்டிருக்கிறார்.வியாபாரத்தின் முழுபொறுப்பையும் கன்வர்லாலே ஏற்று நடத்திக்கொண்டு வருகிறான்.

    அப்பாவோ முடிந்தவரை வன்முறைகளைத் தவிர்த்துவந்தார். ஆனால் மகன்...சாம,பேத,தானத்தையெல்லாம்...அவன் அமர்ந்திருந்த இலவம்பஞ்சு திண்டுக்கு கீழ் வைத்துவிட்டு அழுத்தமாய் அதன் மீது அமர்ந்துகொண்டு தண்டத்தை மட்டுமே சர்வசகஜமாய் செய்துவந்தான்.

    அன்று கடையில் கன்வர்லால் இருந்தான்.பக்கத்தில் அடியாளின் அத்தனை லட்சணத்தோடு இரண்டுபேர் நின்றுகொண்டிருந்தார்கள்..

    கஜா....தஞ்சாவூர் பக்கத்துல ஏதோ ஒரு வில்லேஜ்லருந்து கொண்டு வந்தீங்களே அந்த சிலை....அது நிஜமாவே 500 வர்ஷம் பழசான்ண்டா....நம்ம சேதுபாஸ்கர்...அதாண்டா..அந்த ஆர்கியாலஜியில இருக்கானே அவன்...ஹாங்...அவன்தான் சொன்னான்.நல்ல துட்டு கிடைக்கும் சேட்டுன்னான்.பார்ட்டிக்கும் சொல்லிட்டேன்.நாளைக்கு நைட் அம்பாள் பிரான்ஸ்க்குப் போகப்போறார்...நீங்கப் போய் அந்த கஸ்டம்ஸ் ஆளப் பாத்து சொல்லிட்டு வாங்க.சாலா அவன் ஒரு பேராசைப் புடிச்ச நாய்...என்ன ஏதுன்னு பொருளைப்பத்தி தோண்டித்தோண்டிக் கேப்பான்...வழக்கம்போல சிலைதான்...ஆனா..இது அவ்ளோபெரிய வேல்யூ இல்லாதது...பாண்டிச்சேரியிலருந்து போன ஒரு இந்து குடும்பத்துக்கு அது தேவைன்னு கேட்டதால அதை அனுப்பறோம் அப்படீன்னு மட்டும் சொல்லுங்க.புரியுதா.பேமெண்டுக்கு என்னைப் பாக்க வரவேண்டான்னு சொல்லிட்டுவாங்க.பொருள் போய் சேர்ந்ததும் தானா வந்துடுன்னு சொல்லிடுங்க.போனமுறைமாதிரி வந்து நிக்கப்போறான்....ஏற்கனவே புது கமிஷனருக்கு நம்ம மேல ஒரு கண் இருக்கு.....

    சரி சேட்டு....நாங்க கிளம்பறோம்...
    என்று உடனிருந்தவனையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

    சிறிது நேரத்தில் மைக்கேல் உள்ளே வந்தான்.அவனுடன்..கெச்சலான தேகத்தில்...கருப்பாக இருந்த ஒரு இளைஞனும் வந்தான்.அவன் கையில் ஒரு மரப்பிடி போட்ட ஏதோஒரு ஜவுளிக்கடையின் சாக்குப் பை இருந்தது.

    வாய்யா மைக்கலு....எங்க கொஞ்சநாளா ஆளக்காணோம்...வேலூரா,பாளையங்கோட்டையா...கிண்டலாக அவனை வரவேற்ற கன்வர்லாலை பார்த்து...

    வெள்ளாடாத சேட்டு...என்று சொல்லிவிட்டு பக்கத்திலிருப்பவனைக் கண்ஜாடையில் காட்டி அடக்கி வாசி என்றான்.

    சேட்டும் புரிந்துகொண்டு...சரி சரி தம்பி யாரு...

    ஊருக்கு புத்சு சேட்டு...கையில ஒரு பொருளை வெச்சிகினு...உன் கடை அட்ரஸைக் கேட்டுகினு இருந்தாரு...அதான் கையோட புட்ச்சி இங்க வலிச்சிகினு வந்துட்டேன்.

    எத்தினி கினு போடுவய்யா நீ...சரி..என்னப்பா எதுக்கு என் கடையை கேட்ட என்று அந்த வாலிபனைப் பார்த்துக் கேட்டான்.

    அந்த தேகத்துக்கு ஏற்றார்போல சச்சின் டெண்டுல்கரைப் போன்ற மெல்லிய குரலில்..

    ஒரு தடவை எங்க ஊருக்கு நீங்க வந்து எங்க தெருவுல இருந்த பெர்னாண்டஸ்கிட்டருந்து பழைய காலத்து காசு எல்லாம் வாங்கிட்டு போனீங்களே....என்றதும்

    யோசித்துக்கொண்டே எந்த ஊருப்பா...

    குளச்சல்ங்க....

    குளச்சலா...ம்...ஹாங்...ஆமா..ஆமா.. அந்த கடலுக்குப் பக்கத்துல இருக்கற ஊர்தானே....நாகர்கோயிலுக்குப் பக்கத்துல இருக்கில்ல...ஞாபகம் இருக்கு...சொல்லு..

    அவர்கிட்டதாங்க உங்க கடையைப் பத்தி விவரம் கேட்டுக்கிட்டு வந்தேன்.

    ரொம்ப நல்லது...என்ன விஷயம்...உன்கிட்ட ஏதாவது அந்த மாதிரி பொருள் இருக்கா...

    பதில் சொல்லாமல்...கையில் வைத்திருந்த பைக்குள்ளிருந்து அந்த அழகிய வேலைப்பாடோடிருந்த...சின்ன மரப்பெட்டியை வெளியில் எடுத்தான்.

    இது எங்க தாத்தாவோடதுங்க.அவர் இறந்து பத்துவருஷமாச்சு...இதுவரைக்கும் அவர் ஞாபகமா இதை வெச்சிருந்தோம்.இப்ப குடும்பத்துல ஒரு கஷ்டம்.பெர்னாண்டஸ்தான் சொன்னாரு...இது ரொம்ப பழைய பெட்டிடா...இப்பவெல்லாம் இந்தமாதிரி கிடைக்காது...அன்னைக்கு என்கிட்ட அந்த பழைய காசெல்லாம் வாங்கிட்டுப் போனாரே அவர்கிட்ட இதைக் குடுத்தா நிறைய பணம் கொடுப்பார்ன்னு.பெட்டி மட்டுமில்லைங்க...இதுல அந்தக் காலத்து காசும் கொஞ்சம் இருக்கு....
    என்று சொல்லிக்கொண்டே அதை கன்வர்லாலிடம் நீட்டினான்.

    உட்கார்ந்த இடத்திலிருந்தே அதை வாங்கிப் பார்த்த கன்வர்லாலுக்கு அவனுடைய புராதானப் பொருள்களின் மீதிருக்கும் அனுபவம் சொல்லிவிட்டது...மிகப் பழமையானதுதானென்று.உடனே அவனுடைய வியாபாரமூளை கணக்குப் போடத் துவங்கிவிட்டது.இதைப்போல பெட்டிகளின் மீது ஐரோப்பியர்களுக்கு மிகுந்த மோகம் என்பதால் நல்ல விலைக்குப் போகும்.அதே சமயம் ஏதோ நாணயங்களைப் பற்றி வேறு சொல்கிறானே.... எப்படிப்பட்ட நாணயங்கள் பார்க்கலாமென்று திறந்தான்.

    பெட்டி வெளியில் தெரிந்ததைவிட உள்ளே சிறிதாக இருந்தது.அத்தனைக் கணத்திலா மரத்தை உபயோகித்திருப்பார்கள்...ஆனால் அந்த அளவுக்கு அதன் எடையும் அதிகமாகத் தெரியவில்லையே...ஒருவேளை இதுதான் இந்தப் பெட்டியின் சிறப்பம்சமோ என்று நினைத்துக்கொண்டே அந்த நாணயங்களை கையில் எடுத்துப்பார்த்தான்.பழங்கால தமிழ் எழுத்துகள் தெரிந்தது.உடனே தன் அருகில் இருந்த இழுப்பறையைத் திறந்து ஒரு புத்தகத்தை வெளியில் எடுத்தான்.அது ஆர்கியாலஜி சம்பந்தப்பட்ட இதழ்களின் தொகுப்பு.

    அதில் பழங்காலத்து இந்திய நாணயங்களின் படங்கள் அச்சிடப்பட்டு..விவரங்களும் எழுதப்பட்டிருந்தன.கையிலிருந்த நாணயத்தையும் பார்த்துவிட்டு பக்கங்களிலிருந்த நாணயங்களின் படங்களையும் பார்த்துக்கொண்டு வந்தவன்...அந்தப் பக்கத்திற்கு வந்ததும் இன்ப அதிர்ச்சியில் திகைத்துப்போனான்.இவை பாண்டியர் காலத்து நாணயங்கள்.மிக அரிதாகக் கிடைப்பவை.இன்றைக்குக் காலை ஜான்வி முகத்துல விழித்தது நல்லதாகவே இருக்கிறதே...ஒரு மாக்கான் மாட்டியிருக்கிறான்.அடிமாட்டு...ம்ஹீம்..அடி ஆட்டு விலைக்கு வாங்கிவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்துக்கொண்டு....

    அடடா....இது ரொம்ப பழசு இல்லையேப்பா...இதுக்கு அவ்ளோ காசும் கிடைக்காதே...அதுவுமில்லாம இந்தப் பெட்டியும் அழகான வேலைப்பாடு இருக்கே தவிர அந்த ஆண்டிக் வேல்யு...அதாவது புராதான மதிப்பு அவ்ளோ இல்லையே...என்ன செய்யலாம்...என்று சொல்லிவிட்டு அந்த வாலிபனின் முகத்தைப் பார்த்தவனுக்கு கொஞ்சமே கொஞ்சம் பாவமாக இருந்தது....அழுதுவிடுவான் போல இருந்தான் அந்த வாலிபன்.

    பதைப்பதைப்புடன்...சார்...ரொம்ப நம்பிக்கையா வந்தேன் சார்.பஸ் செலவுக்குக்கூட கடன் வாங்கிட்டுதான் சார் வந்தேன்....

    சரி...சரி..உன்னப் பாத்தா பாவமாத்தான் இருக்கு....இந்த மாதிரி பொருளுக்கெல்லாம் நான் வழக்கமா 5 ஆயிரமோ 6 ஆயிரமோத்தான் தருவேன்...உனக்காக 10 ஆயிரம் தரேன்..சந்தோஷமா....

    ஒன்றுக்கும் உதவாத நாணயங்களுக்காக பெர்னாண்டஸுக்கு மூவாயிரம்தான் கொடுத்திருக்காரு, எனக்கு பத்தாயிரம் கிடைக்குதே என சந்தோஷத்தோடு ரொம்ப நன்றி சார்....என்றான்.

    சிறிதளவும் மனசாட்சியின்றி பத்தாயிரம் எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு...

    ஆமா உங்க தாத்தாவுக்கு இதெல்லாம் எப்படி கிடைச்சது..?என்று கேட்டதும்,

    அவரு அந்தக்காலத்துல சுதந்திரப் போராட்டத்துல கலந்துகிட்டு வெள்ளக்காரங்களுக்கு எதிரா நிறைய போராட்டமெல்லாம் செஞ்சிருக்கார்.அப்பவே அவருக்கு இந்த மாதிரி பொருளெல்லாம் சேகரிக்கறது பொழுதுபோக்கா இருந்துதாம்.எங்க பாட்டி சொல்வாங்க..
    ஆனா சொத்துதான் எதுவும் சேக்காம செத்துப்போய்ட்டார்.

    ஆமா எந்த உண்மையான சுதந்திரபோராட்ட தியாகிங்க சொத்து சேத்திருக்காங்க இவரு சேக்கறதுக்கு..சரி அவர் பேர் என்ன...?

    பாண்டியன் சார்...

    தொடரும்
    Last edited by சிவா.ஜி; 02-04-2008 at 04:27 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அட்டகாசமா போகுது தொடர்...
    கலக்கல்..
    தொடருங்கள்..

  6. #6
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    நன்றி மதி.குறைகளையும் தயவுசெய்து சொல்லுங்கள்.நல்ல படிப்பாளிகள் இருக்கும் இந்த மன்றத்தில் எழுதுகிறேன் என்ற அச்சத்தோடுதான் எழுதுகிறேன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  7. #7
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பாகம்-3

    1917........
    அந்த குளிரான இரவில் பாண்டியன் காத்துக்கொண்டிருந்த நேரத்தில்....அரபிக்கடலில் அந்த தங்கம் சுமந்த கப்பல் சீரான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது. ஆஸ்தான சமையல்காரரான சுந்தரலிங்கத்துக்கு அன்று வேலை அதிகமாக இருந்தது. கூடுதலாக ஒரு வேலையும் இருந்தது. மருந்து கலக்கும் வேலை. இரவு உணவுக்கு முன் கண்டிப்பாக சூப் சாப்பிடும் அந்த வெள்ளைக்காரர்களின் பழக்கம் அவருடைய திட்டத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. சாப்பிட்ட சிறிதுநேரத்தில் ஆழ்ந்த உறக்கத்துக்கு...கிட்டத்தட்ட மயக்கநிலைக்குக் கொண்டுபோகும் அந்த மருந்தை சூப்பில் கலந்தார்.

    வெகு எச்சரிக்கையாக கேப்டன் மற்றும் அவருடைய இரண்டு உதவியாளர்களின் உணவில் கலக்கவில்லை.அவர்கள் சரக்கு இருக்கும் பகுதிக்கு வர வாய்ப்பில்லை என்பதை நன்கு தெரிந்துகொண்டதாலும்,அவர்கள் இல்லாமல் கப்பல் பயணிக்காது என்பதாலும் அப்படி செய்தார். படைவீரர்களுக்கான உணவில் சூப் மட்டுமல்லாது மற்ற உணவிலும் அதைக் கலந்தார். உள்ளுக்குள் ஒரு பயப்பந்து உருண்டுகொண்டிருந்தாலும் வெகு சாமர்த்தியமாக அதை மறைத்துக்கொண்டிருந்தார். மருதமுத்துவுக்குத்தான் அந்த பக்குவம் இன்னும் வரவில்லை. இவனது நடுக்கமே நம்மைக் காட்டிக்கொடுத்துவிடப்போகிறதோ என அச்சம் ஏற்பட்டு அவனை தனியாக அழைத்து தைரியம் சொன்னார். அவனது நடுக்கம் வெகுவாகக் குறைந்தாலும்...லேசான தடுமாற்றம் அவன் செயல்களில் இருந்தது.

    கேப்டனின் உதவியாளர்களை உணவுபற்றி விசாரிக்கும் சாக்கில் அந்த சுக்கான் இருந்த அறைக்குப் போய் தங்களுடைய இலக்கு இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதென்று தெரிந்துகொண்டார். சரியான சமயம் இதுதான் என்று பரபரப்போடு உணவைத் தயார் செய்து அனைவரையும் மேசைக்கு அழைத்தார். எதிர்பார்த்ததைப்போல...அதிகாரிகள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு,ஏற்றிக்கொண்ட போதையாலும்,சுந்தரலிங்கத்தின் மருந்தாலும் வெகு சீக்கிரமே உறங்கிவிட்டார்கள்.

    மருதமுத்துவிடமும்,மற்ற சமையல் உதவியாளர்களிடமும் வீரர்களுக்கு உணவு பறிமாறுமாறு சொன்னார். பின் தங்கள் உதவியாளர்களையும் அதே உணவைச் சாப்பிடச் சொல்லிவிட்டு, இவரும் மருதமுத்துவும் பேருக்குச் சாப்பிட்டார்கள். இரவுமுழுவதும் விழித்திருக்கவேண்டிய வீரர்களும் அப்படி அப்படியே சாய்ந்தார்கள். மருதமுத்துவை..ஒவ்வொரு அறையாய்ப் போய் எல்லோரும் உறங்கிவிட்டார்களா என்று உறுதி படுத்திக்கொண்டு சரக்கு இருக்கும் இடத்துக்கு வந்துவிடும்படி சொல்லிவிட்டு,சரக்கு வைக்கும் பகுதிக்குப் போனார்.

    ஒரு நிமிடம் நின்று அதை நோட்டம் விட்டவர்,மருதமுத்து வந்து சேர்ந்த உடனே...வெளியே இருந்த பஞ்சுப்பொதிகளை மாற்றி வைத்துவிட்டு தங்கம் நிறைந்திருக்கும் அந்த கனமான பெட்டிகளை தூக்கிப்பார்த்தார். ஒவ்வொன்றும் எப்படியும் நூறு கிலோ எடை இருக்குமென்று அவருடைய மூளை கணக்குப்போட்டுவிட்டது. இவற்றை சுமந்து செல்லப்போகும் லைஃப் போட் என்று சொல்லப்படும் அவசரகால படகு 500 கிலோவுக்குமேல் தாங்காது என்பதால் ஐந்து பெட்டிகள் போதுமென்று தீர்மானித்தார். மருதமுத்துவை அழைத்து...இருவருமாக ஐந்து பெட்டிகளையும் அந்த படகுக்கு அருகில் ஒவ்வொன்றாய் வேகமாக..கொண்டு வந்து சேர்த்தார்கள்.


    இவர்கள் பெட்டிகளை இடம் மாற்றிக்கொண்டிருந்த அதே சமயம்...கேப்டன் தன் அறையிலிருந்தபடியே அவரது உதவியாளரை அழைத்தார். அவனிடம் நீ போய் சுந்தரலிங்கத்திடம் சொல்லி ஸ்டராங்காய் ஒரு ப்ளாக் டீ கலந்து எடுத்துக்கொண்டு வா என்றார். அவன் மீண்டும் சுக்கான் இருந்த பகுதிக்குப் போய் மற்றவனிடம் கவனமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சுந்தரலிங்கத்தைத் தேடி அவரது அறைக்குப் போனான்.

    சுந்தரலிங்கமும்,மருதமுத்துவும் அந்த ஐந்து பெட்டிகளையும் அங்கே கொண்டு வந்து சேர்ப்பதற்குள் வெகுவாகக் களைத்துப் போய் விட்டார்கள். சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு...மீண்டும் தம் கட்டி அந்தப் பெட்டிகளைத் தூக்கி தொங்கவிடப்பட்டிருந்த அந்த படகில் ஏற்றினார்கள். அலைகளின் தாளத்தில் ஆட்டம் போட்ட கப்பலின் அந்த ஆட்டத்துக்கு ஈடு கொடுத்து பெட்டிகளை தொங்கும் படகில் ஏற்ற மிக சிரமப்பட்டார்கள். பின் தங்களுடைய எல்லா உடமைகளையும் எடுத்துக்கொண்டு படகுக்கு வந்து சேர்ந்தார்கள்.

    அந்தப் படகை நீர்மட்டத்துக்கு கொண்டுபோக உதவியாக இருக்கும் விசையை இயக்கினார்கள். படகு மெதுவாக கீழே இறங்கத்தொடங்கியது. மருதமுத்துவை அதனுள் ஏற்றிவிட்டு,சிறிது தாமதித்து அதே சங்கிலியைப் பிடித்துக்கொண்டு அதனுள் இறங்க தீர்மானித்திருந்தார் சுந்தரலிங்கம்....படகு நான்கு அடி கூட இறங்கியிருக்காது....சட்டென்று ஏதோ அசைவு தெரிய திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தார் சுந்தரலிங்கம்...

    அருகில் அந்த கேப்டனின் உதவியாளன் நின்றிருந்தான்.


    தொடரும்
    Last edited by சிவா.ஜி; 02-04-2008 at 04:29 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  8. #8
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    கதையோட்டம் நன்றாக இருக்கு...மேலும் தொடருங்கள்..சிவாண்ணா

  9. #9
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி மதி.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
    Join Date
    27 Feb 2007
    Location
    Coimbatore
    Posts
    3,823
    Post Thanks / Like
    iCash Credits
    99,361
    Downloads
    10
    Uploads
    0
    ஆகா இப்பதான் இதை கவனித்தேன் அதற்க்குள் 3 பாகம் முடித்து விட்டீர்கள். இது போன்ற கதை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதை நான் சொல்ல வேன்டியதே இல்லை. காரனம் உங்களுக்கே தெரியும் ஆர்கியாலாஜி, வரலாறு கலந்தாலே எனக்கு கொள்ளை பிரியம். மேலும் திர்லிங்கையும் கல்ந்து அடிக்கிறீர்கள். என்ன கதை மிக வேகமாக போய் கொன்டிருகிறது. பாராட்டுகள் சிவாஜி
    அடுத்த பாகத்துக்கு ஆவலுடன் காத்திருகிறேன்
    லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
    என் படைப்புகள்
    என் கவிதைகள்

  11. #11
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வாத்தியார்.நீங்கள் அடிக்கடி வருவதில்லை..அதுதான் உங்கள் கண்ணில் படவில்லையென்று நினைக்கிறேன்.வேலைப்பளு அதிகமோ?
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  12. #12
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    பாகம்-4

    அவருக்குத் தூக்கிவாரிப்போட்டது.அவனை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. திகைத்து நின்றவரிடம் அவன்,என்ன செய்கிறீர்கள் இங்கே என்று கேட்டுவிட்டு எட்டிப்பார்த்தவன்..படகையும்,மருதமுத்துவையும் பார்த்ததும் அவசரமாய் தன் கைத்துப்பாக்கியை எடுக்க முயற்சித்தான். திகைத்து நின்ற சுந்தரலிங்கம் உடனடியாய் சுதாரித்துக்கொண்டு அவன் மேல் அசுர வேகத்தில் பாய்ந்து அவனைக் கீழேதள்ளி...வாயைப் பொத்திக்கொண்டே தன்னிடமிருந்த கத்தியை எடுத்து அவன் தொண்டையில் ஆழமாக இறக்கினார்.

    படகு கீழே இறங்கிக்கொண்டிருந்தது...தண்ணீரைத் தொட்டதும் இணைப்பு விடுவிக்கப்பட்டு கப்பலோடான தொப்புள்கொடி உறவு அறுந்துவிடும்...அதற்குள் இவன் துடிப்பும் அடங்கவேண்டுமே..கத்தி வெகு ஆழமாகப் பாய்ந்திருந்ததால் துடிப்பும் வெகுசீக்கிரம் அடங்கத் தொடங்கியிருந்தது. கத்தியை மீண்டும் ஒருமுறை அவனுடைய இதயத்தில் பாய்ச்சிவிட்டு இனி சந்தேகேமேயில்லாமல் இவன் இறந்துவிடுவான் என்று நம்பிக்கை வந்ததும்..அவனை அப்படியே விட்டு விட்டு கப்பலில் ஓரத்திற்கு வந்து எட்டிப்பார்த்தார். நல்லவேளை இன்னும் தண்ணீரைத் தொடவில்லை.

    அங்கிருந்தே வெகு வேகமாகப் பாய்ந்து அந்தச் சங்கிலியைப் பிடித்துக்கொண்டே சரசரவென்று கீழிறங்கவும்,படகு தண்ணீரைத் தொடவும் சரியாக இருந்தது. படகு கப்பலுடனான தன் இணைப்பைத் துண்டித்துக்கொள்ள...இவர்களை பின்னால் விட்டுவிட்டு அந்த பெரிய கப்பல்...வேகமாக முன்னால் போய்க்கொண்டிருந்தது.

    படகில் அமர்ந்துகொண்ட சுந்தரலிங்கம்...ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளிப்படுத்திவிட்டு...படகில் இருந்த உறுதியான கம்பிகளில் அந்த பெட்டிகளைக் கயிறைக்கொண்டு இறுக்கப் பிணைத்தார். அலையில் ஆடினால் சரிந்துவிழும் அபாயமிருந்ததால் அப்படிச் செய்தார். மருதமுத்துவைப் பார்த்தார். முகமெல்லாம் வெளிறிப்போய்....பயத்தில் வெலவெலத்துப் போயிருந்தான். ஆதரவாக அவனது கையைப் பிடித்த சுந்தரலிங்கம் கையில் எரிச்சலை உணர்ந்தார்.

    பெட்டிகளைக் கட்டும்போதுகூட அந்த எரிச்சலை உணரவில்லை. சங்கிலியில் தொங்கிக்கொண்டு வந்ததால் தோல் கிழிந்து ரத்தமாக இருந்தது. பையில் வைத்திருந்த துணியை எடுத்து கைகளில் சுற்றிக்கொண்டு துடுப்பை எடுத்து..மருதமுத்துவிடம் ஒன்றைக்கொடுத்துவிட்டு...மற்றொன்றை தான் துணிசுற்றிய ககைகளில் வைத்துக்கொண்டு தண்ணீரை வேகமாகத் தள்ளத்தொடங்கினார். கால்சட்டைப் பையில் வைத்திருந்த திசைக்காட்டியை எடுத்துப் பார்த்ததில் அவர் போக வேண்டிய இலக்கு தெரிந்தது. வலியையும் பொருட்படுத்தாமல் வெகு வேகமாக துடுப்பை போட்டார்.

    மருதமுத்துவும் திடகாத்திரமான ஆளென்பதால் இருவரின் துடுப்புப்போடுதலால் படகு நீரைக்கிழித்துக்கொண்டு முன்னேறியது. அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை ஆசையோடு பார்த்தார்கள். சாதித்துவிட்டோம் என்ற பெருமிதத்தில் இருவருக்கும் அச்சம் அகன்று முதல்முறையாய் சிரிக்க முடிந்தது.

    சில மணி நேரங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் அமைத்திருந்த தெரு விளக்குகளின் ஒளி மினுக்க கரை தென்படத்தொடங்கியது. இன்னும் இரண்டு மைல் தொலைவுதான் இருக்கும். இன்னும் சிறிது நேரத்தில் நம் இடத்தை அடையப்போகிறோம்....என்று நினைத்துக்கொண்டுஅந்தசமயத்தில்தேவைப்பட்ட...மிகமிக அவசியமான டார்ச் விளக்கை...பைக்குள் இருந்து எடுக்க பையைத் திறந்தார். பகீரென்றது.....அது அங்கு இல்லை.

    இங்கிருந்து அதை அடித்துக்காட்டினால்தான் கரையிலிருக்கும் பாண்டியனும் அங்கிருந்து விளக்கை காண்பிப்பான். அப்போதுதான் சரியான இடத்துக்குப் போய்ச் சேர முடியும் என்பதால் அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. துடுப்பை வைத்துவிட்டு எல்லா இடங்களிலும் தேடினார். படகின் மூலையில் இருந்தது. பையைக் கீழே போடும்போது அதிலிருந்து உருண்டுபோய் அங்கே விழுந்திருந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் அதை எடுத்துகொண்டு அதற்கு உயிர்ப்பூட்டினார்.

    அணைத்து...எரித்து...அணைத்து...எரித்து...மூன்றுமுறை அவர் காட்டியதும்...கரையிலிருந்து அதே போல மூன்றுமுறை ஒளிர்ந்தது. சுந்தரலிங்கம் சந்தோஷத்தில் மருதமுத்துவை கட்டிப்பிடித்துக்கொண்டார். இதோ என் முன்னால் என் ஊரின் கரை..கரையில் பாண்டியன்.....வந்தே விட்டோம்..என்று பரவசத்துடன்..எழுந்து நின்றார்.

    அதுவரை அமைதியாக வம்பு பேசிக்கொண்டிருந்த அலைகள் திடீரென்று பேச்சு வாக்குவாதமாகி...வாக்குவாதம் கைகலப்பில் வளர்ந்து...பின் வெட்டுக்குத்து அளவுக்குப் போய்விட்டது. வெகு ஆவேசமாய் அலைகள் அடித்துக்கொண்டன. அந்த ஆவேச அலைத்தாக்குதலில் ஏற்கனவே மிகுந்த பாரத்திலிருந்த அந்தப் படகு பேயாட்டம் போட்டது....இருவரும் தாயக்கட்டைகளாக உருட்டப்பட்டார்கள். எதைப் பிடிப்பது என இலக்கில்லாமல்..சுந்தரலிங்கம் கனத்த அந்தப் பெட்டியில் தலையை மோதிக்கொண்டதில் உடனடி மயக்கத்துக்குப் போனார்.

    ஏற்கனவே பீதியில் இருந்த மருதமுத்து தலைவனைத் தொடரும் தொண்டனாக அவனும் மயங்கி விழுந்தான். முன்னிலும் பெரிதாய் ஒரு ராட்சஸ அலை மேலெழுந்து அந்தப்படகை கவிழ்த்து முற்றிலுமாக தண்ணீருக்குள் அமிழ்த்தியது...ஆழத்துக்கு கொண்டுபோனது......இரண்டுபேருமே கப்பலில் பணிபுரிந்ததால் நீச்சலில் சிறந்தவர்கள்தானென்றாலும்,குழந்தையாய் இருந்ததிலிருந்தே இந்தக்கடலில் நீந்தி விளையாடிவர்கள் தானென்றாலும்..அந்த நேரத்தில் அவை எதுவுமே அவர்களைக் காப்பாற்றவில்லை.

    கவிழ்ந்த படகின் அடியில் இவர்கள்...இவர்களுக்குமேல் ஐந்து அதிகனமுள்ள பெட்டிகள்...வெகு வேகமாய் அவர்களை ஆழத்துக்கு அழைத்து சென்றது. அதிக செல்வம் ஆளை அழிக்குமென்பது இதுதானோ.....தங்கப் பெட்டிகளுடன் இரண்டுபேரும் ஜலசமாதியாகிவிட்டார்கள்

    கரையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பாண்டியனுக்கு அலைகளின் கோரத்தாண்டவம் மட்டும்தான் தெரிந்தது. படகு அமிழ்ந்ததையோ,அது ஆழத்துக்குப் போனதையோ அவனால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை. சுந்தரலிங்கத்தின் டார்ச் படகோடு சேர்ந்து ஆடிய ஆட்டத்தை மட்டுமே அவனால் அந்த இருளில் காணமுடிந்தது. பின் அந்த ஆட்டமும் அடங்கிப்போனதும்...அவனால் யூகிக்க முடிந்தது...கடலரசனின் பசிக்கு இருவரும் பலியாகிவிட்டார்களென்பதை.

    இருந்தும் உள்ளுக்குள் ஒரு நப்பாசை. படகு கவிழ்ந்தாலும்,இருவரும் நல்ல நீச்சல் வீரர்கள்,அதுமட்டுமல்லாமல்....இந்த பிரதேசம் முழுதுமே அவர்களுக்கு மிகப் பரிச்சயமானது...எப்படியும் நீந்தி வந்து விடுவார்களென்று காத்திருந்தான். நேரம் ஆக ஆக நிலை கொள்ளாமல் தவித்தான்........கடல்... குறும்பு செய்து விட்டு தான் எதுவுமே செய்யவில்லையே என நடிக்கும் சின்னப்பையனைப்போல அமைதியாக இருந்தது.

    சேவல் சத்தம் கேட்பதற்குள் விழித்துக்கொள்ளும் பழக்கமுடைய கிராமத்தவர்கள். வெள்ளென எழுந்து அன்றைய வேலைகளுக்குத் தயாராவதற்கான நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அனைவரும் எழுந்துகொள்ளுமுன் வீடு போய்ச் சேர வேண்டுமென்று எண்ணிக் கொண்டு...மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டவன், மீண்டும்,மீண்டும் கடலையே திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டு வந்தான். அந்த இருவரும் இனி வரமாட்டார்கள் என்ற அதிர்ச்சியான உண்மையை சிரமத்துடன் ஒத்துக்கொண்டாலும்,அது தந்த வேதனையையை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

    கலங்கிய மனதுடன்,சுந்தரலிங்கம் எதைக் கொண்டுவந்தார் என்பதையே தெரிந்துகொள்ளாமல்....அவரையும் கண்முன்னாலேயே இழந்துவிட்டு,தளர்ந்துபோய்....வீட்டுக்கு வந்தான். நல்லவேளை வீட்டிலிருந்தவர்கள் இன்னும் விழிக்கவில்லை.

    வெளியே வேலைக்குப் போகாமல் சுணக்கத்துடன் இருக்கும் மகனை இதுவரை அவனைப் பெற்றவர்கள் பார்த்ததில்லை. அந்த அதிசயத்தை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவனிடமே...

    என்னடா பாண்டியா...ஒரு மாதிரி இருக்கே..என்ன ஆச்சு..?எனக் கேட்டதும்,என்ன சொல்வது எனத் தெரியாமல் சற்று யோசித்துவிட்டு....

    ஒண்ணுமில்ல...ராத்திரி நீங்கள்லாம் தூங்கினதுக்கப்புறமா..நம்ம கந்தசாமி வந்து அய்யா கூப்பிட்டனுப்பிச்சதா சொன்னான். சரி உங்களைத் தொந்தரவு செய்ய வேணாமேன்னு அப்படியே கிளம்பிப் போயிட்டேன். வெள்ளைக் காரங்க ஜெயில்லருந்து தப்பிச்சு வந்த ரெண்டு பேரை பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிகிட்டு போய் தங்க வைக்க வேண்டியிருந்தது. அதான் ராத்திரி முழுக்கத் தூக்கமில்ல. வேற ஒண்ணுமில்லம்மா...நீங்க போங்க...நான் கொஞ்சம் அப்படியே கண்ணசந்துட்டு...பொறவு வாரேன்...என்று அடிக்கடி அவன் செய்துகொண்டிருந்த ஒரு காரியத்தை அந்த நேர சமாளிப்புக்குப் பயன்படுத்திக்கொண்டான்.

    அவர்கள் வேலைக்குப் புறப்பட்டு போனதும்,இரவு சம்பவங்களே அவனை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தன. ஏதோ யோசித்தவனாக அந்த நாட்குறிப்பை எடுத்து தான் கண்ட அனைத்தையும் எழுதி முடித்தான். இந்த நாட்குறிப்பு இன்னும் பல வருடங்களுக்குப் பிறகு எத்தனையெத்தனை சம்பவங்களை உருவாக்கப்போகிறது என்பதை உணராமலேயே....அதனைப் பத்திரப்படுத்தினான்.

    தொடரும்
    Last edited by சிவா.ஜி; 02-04-2008 at 04:37 AM.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

Page 1 of 13 1 2 3 4 5 11 ... LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •