எப்போது வேண்டுமானாலும்
பாய்ந்து குதறும் மிருகத்தை
பல்லணை போட்டு
உதடு கதவுகளுக்குள்
ஒளித்து வைத்திருக்கிறேன்!

இருந்தும் இற்றுப்போன
சங்கிலியை அற்றுக்கொண்டு பாய
சின்ன உசுப்பலை
தேடி அலைகிறது!

நட்பென்றும்,உறவென்றும்
பார்ப்பதேயில்லை அந்த
பாழும் மிருகம்!

குதறிவிட்டு ரத்தம் சுவைத்து
குரூரமாய் கூண்டுக்குள்
அடங்கிவிடுகிறது..மீண்டும்
வெட்கமின்றி வெளிவந்து
வேதனையின் வீச்சத்தை
முகர்ந்து ருசிக்கிறது!

அற்றுப்போகாத சங்கிலியாய்
அமைதி வேண்டி யோகித்தாலும்
அடங்காமல் ஆடும்
அந்த மிருகம்...அதன் ஆட்டத்தால்
என்னையும் அழித்துத்தான்
அடங்குமோ.......