காக்கி கால்சட்டையில் சிறுவன்
நீட்டிய நோட்டுப்புத்தகத்தில்
ஒற்றைரூபாய் தானத்துக்கு
கர்ண பிரபுக்கள் சிலரின்
கையெழுத்துகள்...........

நான் படித்தவனானதால்.......
நாலும் தெரிந்தவனானதால்....
நயா பைசா கிடையாது
நடையைக் கட்டு என
சிறுவனை விரட்டிவிட்டு
வீட்டுக்குள் வந்து
வீரத்தோடு சொன்னேன்.....
ஏமாற மாட்டோமில்ல....

சொன்ன அடுத்த நொடி
மூத்த மகன் முன்னால் வந்து
நேற்று வாங்கிய மோட்டார்
கருகிப்போனதை சொன்னான்!

நல்ல நிறுவனமென்று
நம்பி வாங்கி வந்தேனே..
ஓடிச் சென்று உற்றுப் பார்த்தால்
ஒற்றை எழுத்து வித்தியாசம்
பொட்டிலடித்தது..........

நோட்டில் ஐந்து ரூபாய்
நாமும் எழுதியிருக்கலாமோ......