Results 1 to 7 of 7

Thread: வாதாபி கணபதிம்

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் sadagopan's Avatar
    Join Date
    11 Aug 2007
    Location
    Tirunelveli
    Posts
    160
    Post Thanks / Like
    iCash Credits
    19,827
    Downloads
    15
    Uploads
    0

    வாதாபி கணபதிம்

    ராமசுப்பு சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். அவர் எதிரில் கமலம் தலை குனிந்து நின்று கொண்டிருந்தாள்.

    "உனக்கு உன்னை பத்தி ரொம்பப் பெருமை. நீ தான் உலக மகாமேதாவி, பாக்கிப் பேருக்கு அறிவு கிடையாது அப்படீன்னு ஒரு எண்ணம்."

    "இல்லைன்னா... நான் வந்து என்ன பண்ணிட்டேன் நம்ம குடும்ப ஷேமத்துக்கு."

    "ஆமாம்... நம்ம குடும்ப ஷேமத்துக்காகக் கண்டவனுக்குப் பணத்தைத் தூக்கிக் கொடுப்பே, அவன் பட்டை நாமம் போடுவான். நீ கொடுத்தது நம்ம குடும்ப ஷேமத்துக்கு இல்லை. அவனோட குடும்ப ஷேமத்துக்கு."

    "வந்து..."

    "வந்தும் இல்லை, போயும் இல்லை. அந்த ஆசாரி. அவன் பேர் என்ன? ஆ - தாமரைச் செல்வன். பேரைக் கேட்டதும் மயங்கிட்டே யாக்கும்? தமிழ்ப் பேர் இல்லையா? எங்கிட்டே ஒரு வார்த்தை கேட்டியா? ரெண்டாயிர ரூபாயைத் தூக்கிக் கொடுத்துவிட்டு இப்போ புலம்பறே... நான் வீட்டுச் செலவுக்குக் கொடுத்த பணத்தை இப்படித் தாரை வார்த்துட்டு... படு அவஸ்தைப் படு... இந்த மாசம் முழுக்க வயத்துல ஈரத்துணியைப் போட்டுண்டு இருப்போம்."

    கமலத்துக்கு அழுகை வந்தது.

    "நான் என்ன செய்து விட்டேன்? ஏற்கனவே தெரிஞ்சவன். நம்மாத்துக்கு வந்து சின்ன சின்ன ரிப்பேர் வேலையெல்லாம் செஞ்சிருக்கான். அதனால நம்பிட்டேன்."

    "என்னத்தை நம்பறது? உன் நெத்திப் பெரிசா இருக்கு. அதான் பட்டை நாமத்தைப் பக்குவமா போட்டுட்டான்! குத்துக் கல்லாட்டம் ஒருத்தன் உட்கார்ந்திருக்கேன். என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டாயா?"

    "வந்து... வந்து நீங்க கோபிச்சுண்டு..."

    "ஆமாம் இப்ப மட்டும் என்னவாம்? அடுத்த மாசம் ஏதோ கொஞ்சம் பணம் வரும் அதுக்குள்ளே என்ன அவசரம்? போ. போய் அக்கம் பக்கம் கடன் வாங்கி இந்த மாசத்தைச் சமாளி. எங்கிட்டே இனிமே ஒரு பைசா கேட்காதே..."

    கமலத்துக்கு நெஞ்சம் கனத்தது.

    பூஜை அறைக்குப் போனாள். கப்போர்டில் வீற்றிருந்த அந்த வினாயகப் பெருமானைப் பார்த்தாள்.

    "பிள்ளையாரப்பா வேழ முகத்து வினாயகனைத் தொழுதால்... வாழ்க்கை வளமாகும் என்பார்களே... நீ 'கப்போர்டில்' கதவுகள் இல்லாமல் காற்றாடிக் கொண்டிருக்கிறாய் என்றுதானே உனக்குக் கதவு போடச் சொன்னேன்..."

    அன்று நடந்த அந்தச் சம்பவத்தை மீண்டும் நினைத்துப் பார்த்துக் கொண்டாள் கமலம்.

    பிள்ளையார் இவளின் இஷ்ட தெய்வம். ஒரு கப்போர்டில் பிள்ளையாருக்கு என்று இடம் ஒதுக்கி இருந்தாள். நடுவில் ஒரு பீடத்தில் பிள்ளையார் இருபுறமும் குத்து விளக்கு. மேலே தோரணம், மாவிலை என்று ஏதோ அலங்காரம் செய்திருந்தாள். இருந்தாலும் மனத்துள் ஒரு ஆசை... இந்தக் கப்போர்டுகுக்கு ஆர்யபங்கிக் கதவு மாதிரி மணிகள் வைத்துக் கோவில் கதவு மாதிரி ஒரு கதவு போட்டால் எப்படி இருக்கும்? மனத்துள் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்த போது நன்றாகத் தான் இருந்தது. ஆனால் கம்பெனியை அணுகியபோது நீள அகலக் கணக்கைப் பார்த்து, பத்தாயிர ரூபாய் ஆகும் என்று அவர்கள் எஸ்டிமேட் தந்தபோது... இவள் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டாள்.

    அப்படிபட்ட ஒரு நாளில் தான் தாமரைச்செல்வன் வந்தான். கார்பெண்டர். இதற்க்கு முன் இவர்கள் வீட்டில் நிறைய ரிப்பேர் வேலைகள் செய்திருக்கிறான்.

    "அம்மா நல்லா இருக்கீங்களாம்மா? - என்று தாமரை கை குவித்து அன்புடன் கேட்டபோது அந்த வினாயகரே தனக்கு உதவுவதற்காக ஒரு தூதனை அனுப்பியதாகத்தான் நினைத்தாள்.

    "இப்போ மதுரையிலே இருந்து இந்த ஊரோட வந்துட்டேன். வேலை இருந்தாத கொடுங்க. உடனே செஞ்சு முடிக்கிறேன்..." - என்றபோது அவசரமும், ஆர்வமும் சேர பிள்ளையாரின் கப்போர்டிற்கு ஒரு கதவு வேண்டும் என்று சொல்ல --

    கையில் தயாராக வைத்திருந்த இன்ச்டேப்பால் கப்போர்டின் நீள அகலத்தை அளந்தான் தாமரை. ஒரு பேப்பரில் பென்சிலால் கணக்குப் போட்டான்.

    "அஞ்சுக்கும் ஏழு... கதவு போட்டால் பிரமாதமா இருக்கும். கோவில் கதவு மாதிரியே பண்ணிடலாம்..."

    "எவ்வளவு ஆகும்...?"

    "நீங்க மரத்துக்கு மட்டும் பணம் கொடுங்க. லேபர் ப்ரீயா பண்ணிக் கொடுக்கறேன். பிள்ளையாருக்கு என்னோட பங்கு. நீங்க எத்தனையோ பண்றீங்க. என் சேவை ஒரு அணில் சேவை மாதிரி..."

    "எவ்வளவு ஆகும் தாமரை?"

    "என்ன? மூவாயிர ரூபாய்க்குள்ளே முடிச்சுடலாம். மரத்துக்கு மட்டும் அட்வான்ஸ் ரெண்டாயிரம் கொடுங்க. பாக்கியை அப்புறமா பாத்துக்கலாம்..."

    மாத ஆரம்பம். ராம சுப்பு அப்போது தான் வீட்டுச் செலவுக்கென்று பணம் கொடுத்திருந்தார். ராம சுப்பு ரொம்ப கண்டிப்பானவர். ஒரு ரூபாய் செலவு என்றால் பத்து பைசா அதிகமானால் கூட சத்தம் போடுவார்.

    கமலம் யோசித்தாள். எப்படியும் ஒரு வாரத்தில் கதவு வந்துவிடும். அதற்குப் பிறகு ராமசுப்புவிடம் சொல்லி, சமாதானப்படுத்திப் பணத்தை வாங்கி விடலாம் என்று நம்பினாள். ஸ்வாமிக்குத் தானே ஒன்றும் சொல்ல மாட்டார்.

    இங்கு தான் இவள் தப்புப் பண்ணினாள் ராமசுப்புவிடம் கேட்காமல் சுளையாக ரூபாயை எடுத்துத் தந்தது தான் தப்பாகி விட்டது.

    ஒரு வாரம் ஆயிற்று... இரண்டு வாரம் ஆயிற்று... தாமரையைக் காணவில்லை.

    வெளியில் சொல்ல முடியாமல் தனக்குத் தானே புழுங்கினாள் கமலம்.

    தாமரை எங்கிருக்கிறான்? அதுவும் தெரியவில்லை. அவன் ஏதோ ஒரு போன் நம்பர் கொடுத்திருந்தான். ரகசியமாக கணவனுக்கு தெரியாமல் பப்ளிக் பூத்துக்குப் போய் ஒரு ரூபாய் காலுக்கு போன் செய்த போது...?

    "தாமரை செல்வனா? அப்படி யாரும் இங்கே இல்லையே?" - என்று எதிர்குரல் கேட்டது.

    கமலம் ஆடிப்போய்விட்டாள்.

    பொய் நம்பர்! பொய் சத்தியங்கள்... சத்யம் பொய்யாகலாமா?

    ஏன் ஆகக்கூடாது? கோர்ட்டில் வேதபுத்தகங்களைத் தொட்டு, நான் சொல்வதெல்லாம் சத்தியம் என்று சொல்லி, பொய் சாட்சி சொல்லவதில்லையா?

    நாட்கள் நகர்ந்தன. வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கக் கமலம் திணறினாள். 'அக்கெளண்டில்' வாங்கினால் ராமசுப்புவுக்குப் பிடிக்காது. மளிகைக் கடையில் அடுத்த மாதம் பணம் தருவதாகச் சொல்லிக் கொஞ்சம் 'அக்கெளண்டில்' வாங்கினாள்.

    எப்படியோ ராமசுப்புவிற்கு இந்த உண்மை தெரிய, அவர் காரணம் கேட்க... மேலும் பொய் சொல்லத் தெரியாமல் கமலம் அழ ஆரம்பித்தபோதுதான்...!

    ஆரம்பத்தில் சொன்ன மாதிரி ராமசுப்பு கோபத்துடன் பேசினார்.

    கமலத்திற்கு அழுகை வந்தது. இந்த அழுகைக்குக் காரணம் இரண்டாயிரம் ரூபாய் நஷ்டம் என்கிற உண்மையை விட, தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்கிற அடி அவளைப் பலமாகத் தாக்கியது.

    "நீங்க என் அம்மா மாதிரி. உங்களை பார்த்தா அந்த அம்மனைப் பார்க்கிற மாதிரி இருக்கு" - என்று சொன்னானே! அது பொய்யா?

    ஏன் இருக்கக் கூடாது! இந்தக் காலத்தில் அம்மாக்களைத் தானே முதியோர் இல்லம் அனுப்புகிறார்கள்?

    "அனாதை இல்லத்தில் அம்மா!

    ஆசிரமத்தில் அம்மா!

    மாமனார் பிறந்த நாளில் அன்னதானம் செய்கிறானாம்.

    வீட்டோடு மாப்பிள்ளையாகிப் போன ஒரே மகன்.."

    - என்ற கவிதையைப் படித்தபோது மனம் உருகி அழுதாளே! அந்த உண்மை இப்போது இவள் வாழ்விலேயேலே பார்த்தாகி விட்டது!

    இந்த இரண்டாயிர ரூபாய் பணம் பெரிய விஷயமல்ல. ஆனால் ஒரு நல்லவளை ஏமாற்றியது தான் பெரிய துரோகம்.

    இந்த ரூபாயைத் தாமரை கடனாகக் கேட்டிருக்கலாம். இல்லை இரண்டு மாதத்தில் திருப்பித் தருவதாகச் சொல்லி வாங்கி இருக்கலாம். எதுவும் இல்லை. பொய் விலாசம், பொய் போன் நம்பர்... பொய் காரணங்கள்.

    பொய்.. பொய்.. பொய்.. எல்லாமே பொய்.

    இனி யாரையும் நம்பக் கூடாது. இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்.

    நாட்கள் வேகமாக கழிந்தன.

    ராமசுப்பு வெளியே போவதும், வருவதும்.. சாப்பிட உட்கார்ந்தால்... இயந்திரத்தனமாகச் சாப்பிடுவதும், "இன்னிக்கு என்ன சமையல்?" என்று கேட்ட சகஜங்கள் மறைந்து போயின.

    "இன்னிக்கு வெள்ளிக்கிழமை. சாரதாம்பாள் கோவிலுக்குப் போகலாமா?" - என்று கேட்ட கேள்விகள் மறைந்து போயின.

    இந்த ஒதுக்கிவைப்பும், பாராமுகமும் தான் இவளை பெரிதும் பாதித்தன்.

    "போறது போ. ரெண்டாயிர ரூபாய் தானே? இதுலே உனக்கு ஒரு பாடம் கிடைச்சது இல்லையா? இனிமே ஜாக்கிரதையா இரு" - என்று இவள் கண்ணீர் துடைத்து ஆறுதல் தந்திருந்தால் கூடத் துன்பம் இத்தனை ஆழமாக இவள் நெஞ்சைக் காயப்படுத்தி இருக்காது.

    "பெரிய மேதாவி.. உனக்குத் தான் பக்தி. மத்தவாளுக்குப் பக்தி இல்லையா என்ன? உன்னோட சாமிக்குப் பூஜைக் கதவு போட்டாத்தான் கதவைத் திறந்துண்டு சாமி காட்சி தருமா என்ன? இந்தப் பொட்டைச்சிகளே இப்படித்தான். ஆம்படையானுக்குத் தெரியாம மேதாவித் தனமா ஏதாவது பண்ண வேண்டியது. அப்புறம் அழ வேண்டியது. இப்போ உன் சாமியா வந்து உன்னைக் காப்பாத்தப் போறது?"

    கமலத்தின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல் ஒவ்வொரு வார்த்தையும் உஷ்ணத்தால் மூழ்கி இவளைச் சுட்டெரித்தது!

    "பிள்ளையாரப்பா ஒளவையார் உன்னை வணங்கிப் பாடியபோது அவளோட ஆசைகளை நிறைவேற்றி வைத்த மூஷிக வாகனனே... நான் பண்ணின சதுர்த்தி விரதங்கள் உண்மை என்றால், சங்கட சதுர்த்தியின் போது சாயங்காலம் வரை பட்டினி கிடந்து, உனக்கு பூஜை செய்து நைவேத்தியம் படைத்து, கொழுக்கட்டை செய்து, நிலவைப் பார்த்த பின் தான் ஆகாரம் எடுத்துக் கொண்டேன் என்பது உனக்குத் தெரியும். நான் ஒளவையைப் போல் பக்தியில் பூர்ணநிலவாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நானும் ஒரு மின்மினிப் பூச்சியாக இருந்திருக்கிறேன். அந்தப் பூச்சிக்கும் தனக்கென்று ஒரு சிறிய ஒளி உண்டு. நல்லவர்களைச் சோதித்தால் பாக்கிப்பேர்களுக்கு இருக்கிற பக்தியும் போய்விடும். இனிமே நான் உன்கிட்டே பிரார்த்தனை செய்ய மாட்டேன். உன் பெயரை நீ காப்பாற்றிக் கொள்."

    - என்று மனமுருக வேண்டிக் கொண்டவள் தன் பணிகளை நிம்மதியாகச் செய்தாள்.

    அன்று --

    தேர்த்திருவிழா.

    மனதிற்கு வேதனையாக இருந்ததால் தேர் விழாவைக் காண இவள் கணவரிடம் சொல்லிவிட்டு டவுனுக்குக் கிளம்பினாள்.

    ராமசுப்பு சிரித்தார்.

    "தேர் பார்க்கப் போறியா? அந்தத் தேரிலே இருந்து ரூபாய் விழறதா பாரு. விழுந்தா பொறுக்கிண்டு வா..."

    ஏளனமும், எக்காளமும். அவர் பேச்சில் கொப்பளித்தன. வந்த அழுகையைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு தேர் உற்சவம் பார்க்க டவுனுக்குப் போனாள் கமலம்.

    ஏகக் கூட்டம்.

    தேரோட்டத்தைப் பார்க்க வீதி முழுவதும் கூட்டம், வடம் பிடிக்கக் காத்திருக்கும் கூட்டம்.

    தேரைப் பின்னாலிருந்து தள்ளக் கேரளாவிலிருந்து வரவழைக்கப்பட்ட யானைகள் முக அலங்காரங்களுடன் தயாராகக் காத்திருந்தன.

    வடம் பிடிக்க, வடத்தைத் தொட்டு வணங்கக் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. அந்த வீதியில் இருக்கும் கடைகளுக்கு விடுமுறை விட்டதால் எங்கும் எதிலும் மக்கள் கூட்டம், வீடுகளில், மாடிகளில், கடைப் படிகளில், மரங்களில்... என்று கூட்டம்... கூட்டம்...

    கமலம் ஒரு ஓரமாக நின்றபடிக் கூட்டத்தினரின் நெரிசலில் காத்திருந்தாள்.

    வி.ஐ.பிகள் வடம் தொட்டு ஆரம்பிக்க... தேர்ச்சக்கரங்களில் தேங்காய்கள் உடைபட, தேர்காலில் இருந்த தடைகள் அகற்றப்பட்டு தேர் மெதுவாக அசைய ஆரம்பித்தது.

    ஈஸ்வரி, தாயே... தெய்வமே...

    - என்று கூக்குரல்கள்...

    தேர் மெதுவாக அசைந்து அசைந்து... அதன் தோரணங்கள் ஆட... அதன் முகப்பு மாலைகள் அசைய, மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தது.

    "கற்பூர நாயகியே கனகவல்லி
    காளிமகமாயி.." - என்ற பாடல்கள்...

    "தேவி துர்க்கையே தேவி...துர்கையே..." - என்று மஞ்சள் துணி உடுத்திப் பாடியபடி முன்னே செல்லும் பக்தர்கள் கூட்டம்...

    திடீரென்று...

    "ஓடுங்க... ஓடுங்க... யானைக்கு மதம் பிடிச்சிடிச்சு... ஓடுங்க..."

    - என்று சப்தம்.

    அலங்கரிக்கப்பட்ட யானையுடன் கூட வந்திருந்த ஒரு குட்டியானை திடீரென்று மிரண்டு ஓட.. கூட்டம் சிதறியது.

    கூட்டத்தில் புகுந்த குட்டியானை விபரம் புரியாமல் தலைதெறிக்கப் பிளறியபடி ஓட...

    நாலாபுறமும் மக்கள் கூட்டம் சிதற... கமலம் ஸ்தம்பித்துப் போய் நின்று விட்டாள். அதன்பின் அமளிகள் ஓய்ந்து...

    வீடு வந்து சேர இரவு எட்டு மணிக்கும் மேலாகி விட்டது!

    "என்னடா இத்தனை நாழியாச்சே ஆளைக் காணோமேன்னு பார்த்தேன். ஒருவேளை தேர்கூட வீதி உலாப் போயிட்டியோன்னு பார்த்தேன்.." - என்று ராமசுப்பு கிண்டலடித்தார்.

    கமலம் பேசவில்லை.

    இரண்டு நாள் கழிந்து விட்டன. டி.வி.யில் கூட இந்தச் செய்தியை தேரோட்டத்தில் திடீரென்று குட்டியானை ஒன்று மிரண்டு ஓடிய செய்திகளைக் காண்பித்தார்களாம்... நல்லவேளை உயிர்ப்பலி ஏதுமில்லையாம். செய்தி பார்த்தவர்கள் சொன்னார்கள். அன்று--

    கமலம் வழக்கம்போல் பூஜை முடித்தபோது யாரோ வாசலில் காலிங் பெல்லை உயிர்ப்பித்தார்கள்.

    கதவு திறந்த கமலம் திகைத்தாள்.

    வந்தது...? தாமரைச் செல்வன்.

    தடாலென்று இவள் காலடியில் வீழ்ந்தான் அவன்.

    "அம்மா என்னை மன்னிச்சுடுங்க. ஏதோ பேராசை.. உங்க பணத்தை எடுத்துட்டு உங்களை ஏமாத்தப் பார்த்தேன். ஆனால் அந்த ஆத்தா எனக்குப் பாடம் கத்துக் கொடுத்துட்டாம்மா. ரெண்டு நாளுக்கு முன்னால் நடந்த தேர்திருவிழாவுக்கு நானும் என் சம்சாரத்தோடப் போயிருந்தேன். திடீர்ன்னு குட்டியானை கூட்டத்தில் ஓட, நானும் என் சம்சாரமும் ஆளாளுக்கு ஒரு பக்கம் சிதறிட்டோம். தலைதெறிக்க ஓடித் ததடுக்கி விழுந்தேன். அந்தக் குட்டியானை என்கிட்ட வந்துடிச்சும்மா. காலையும் தூக்கிடிச்சு... தூக்கின அந்தக் கால்லே சத்தியமா சொல்றேன்மா... உங்க முகம் தான் தெரிஞ்சது. புள்ளையாரப்பா... உன்னை ஏமாத்த நினைச்சது தப்பு. என்னை மன்னிச்சுடுன்னு கதறினேன்மா.. மந்திரம் போட்ட மாதிரி அந்த யானை காலை என் மேலே வைக்காம கீழே வைச்சுட்டுப் பேசாம போயிட்டது! தப்பும்மா... நல்லவங்களுக்குத் தெய்வபக்க்தி உள்ளவங்களுக்குத் தெய்வம் பக்கபலமா இருக்கும்கிற உண்மை தெரியாத முட்டாளா இருந்துட்டேன்மா.. என்னை மன்னிச்சுடுங்க. பூஜைக் கதவு பண்ணிக் கொண்டு வந்துட்டேம்மா. அதோ வாசல்லே 'த்ரீ வீலர்லே' இருக்கு. உத்தரவு கொடுங்கம்மா. என்னை.. என்னை உங்க வீட்டுப் பூஜை அறைக்குள்ளே நுழைய அனுமதி தாங்கம்மா. கதவைப் பொருத்திட்டுப் போயிடறேன். எனக்குக் கூலி வேண்டாம்"

    தாமரை அழுதான்.

    கமலம் பிரமித்தாள்.

    "என் தெய்வமே... கருமாரித் தாயே... அம்பிகையே... உன் குட்டிப் பையன் பிள்ளையாரப்பனை அனுப்பி எனக்கு அருள் பாலித்தாயா? என் பக்தியை நிருபித்தாயா?"

    மனத்துள் புலம்பியபடி இவள் நிமிர்ந்தபோது--

    ராமசுப்பு இவள் அருகில் நின்றபடி இவள் கைகளை மென்மையாகப் பற்றிய போது --

    அந்தப் பிடியில் - அன்பும், பாசமும், அங்கீகாரமும் அந்த ஸ்பரிச மொழியில் தெரிந்தன.

    தாமரைச் செல்வன் கதவு பொருத்த ஆரம்பிக்கிறான். அவன் அடிக்கும் ஆணியில் ஒவ்வொரு சப்தமும் --

    "வாதாபி கணபதிம் பஜே பஜே" - என்பது போல் ஒலிக்கிறது!
    நட்புடன்

    சடகோபன்

    வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
    கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
    நான்மறை அறங்கள் ஓங்க நற்றவ வேள்வி மல்க
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்

    திருசிற்றம்பலம்

  2. #2
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    வாங்க சடகோபன்..

    மீண்டும் ஒரு மென்மையான கதை சொல்லி மனதை நெருடுகிறீர்கள்..

    நிலவாக இல்லாவிட்டால் என்ன?
    மின்மினிக்கு சின்ன வெளிச்சம்..
    ஆனால் சொந்த வெளிச்சம்...

    பக்தியோ நம்பிக்கையோ - அது ஆக்கத்தில் முடிந்தால் ஆதரிக்க வேண்டியதே!

    கடையில் அன்புப்பிடி போட்ட ராமசுப்புவை ஏனோ மெச்ச முடியவில்லை!

    பொருளாதாரத்தில் தன்னை நம்பி இருக்கும் பெண்களை
    ஆண்கள் இப்படி நடத்த்துவதற்கு யார் உரிமை அளித்தார்கள் எனத் தெரியவில்லை...

    அவளின் அன்றாடப்பணிகளின் பொருளீடு அறிவாரா அவர்?

    மனவியல் வன்முறையை மாதம் முழுக்கப் பிரயோகித்தவருக்கு
    சம்பாதிக்கும் மனைவி இதே சிகிச்சை அளித்தால் தாங்கத் திராணி உண்டா?

    தாங்கி, மீளும் சக்தி இருப்பதாலேயே பெண்கள் விஞ்சுகிறார்கள் ஆண்களை!


    உங்கள் கதைகள் அடிக்கடி காணும் ஆவல் என்றும் எனக்குண்டு.

    ""மானுடம்'' போற்றும் உங்களின் ரசிகனின் வாழ்த்துகள்+ பாராட்டுகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    ஹே ஹே நல்ல கதை...
    அதில பாருங்கா எப்பவுமே பெண்கள் தங்களை ஒரு மேதாவின்னு நெனைச்சுக்கறத சொன்னீங்க பாருங்க. அதுக்கே உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சபாஷ்...
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by sadagopan View Post
    அந்த ஆசாரி. அவன் பேர் என்ன? ஆ - தாமரைச் செல்வன்.
    ஹி ஹி புலி வாலை புடிச்சிட்டீங்க... பென்ஸ கேளுங்க...

    அப்புறம் ஆ - தாமரைச் செல்வனா தான்..

    Quote Originally Posted by sadagopan View Post
    கமலத்துக்கு அழுகை வந்தது.
    கவலைப்படாதீங்க.. உங்களுக்கும் வரும்.

    Quote Originally Posted by sadagopan View Post
    தாமரை கை குவித்து அன்புடன் கேட்டபோது அந்த வினாயகரே தனக்கு உதவுவதற்காக ஒரு தூதனை அனுப்பியதாகத்தான் நினைத்தாள்.
    மதியும் இப்படித்தான் முதல் சந்திப்பில் நினைத்தார்.. இல்ல மதி..

    Quote Originally Posted by sadagopan View Post
    "எவ்வளவு ஆகும் தாமரை?"
    பென்ஸூ சொல்லுங்க...

    Quote Originally Posted by sadagopan View Post

    கதவு திறந்த கமலம் திகைத்தாள்.

    வந்தது...? தாமரைச் செல்வன்.
    சரியாப் போச்சு...

    Quote Originally Posted by sadagopan View Post
    தாமரை அழுதான்.

    கமலம் பிரமித்தாள்.
    நடக்குற கதய பேசுங்க...
    இத படிச்சி பிரதீப் கூட பிரமிச்சாச்சு..
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    கதை நகர்த்திய விதம் சலிப்பு தட்டாமல் இருக்கிறது.
    கருவையும், பாத்திரப் படைப்பையும் இதமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

    முடிவு எதிர்பார்த்ததே...ஆனால் கடவுளின் உள்ளீடு எதிர்பாராதது.
    சுவையாகவே இருக்கிறது.அழகாக கதை கூற வருகிறது உங்களுக்கு.
    வாழ்த்துக்கள் சகோதரரே...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    [QUOTE=இளசு;320561]சம்பாதிக்கும் மனைவி இதே சிகிச்சை அளித்தால் தாங்கத் திராணி உண்டா?

    [QUOTE]

    அதெப்படி இளசண்ணா...

    நீங்கெல்லாம் ஏமாந்தா...அது புத்திக்கொள்முதல்...
    நாங்க ஏமாந்தா அது அக்மார்க் முட்டாள்தனம்...

    நீங்க ஏமாந்துட்டு வர்ரது ஒரு எபிசோடோட முடிஞ்சுபோயிடும்.
    நாங்க ஏமாந்தா அது தான் அந்த வருச ஹிட் மெஹா சீரியல்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  7. #7
    இளையவர் பண்பட்டவர் பாபு's Avatar
    Join Date
    03 Jan 2008
    Location
    Hong Kong
    Posts
    79
    Post Thanks / Like
    iCash Credits
    8,962
    Downloads
    0
    Uploads
    0
    நன்றாக உள்ளது நண்பரே !!

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •