Page 1 of 3 1 2 3 LastLast
Results 1 to 12 of 33

Thread: மார்கழியில் எனக்குக் கிடைத்த என் மனைவி.

                  
   
   
  1. #1
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    சென்னை
    Posts
    27
    Post Thanks / Like
    iCash Credits
    8,968
    Downloads
    0
    Uploads
    0

    மார்கழியில் எனக்குக் கிடைத்த என் மனைவி.

    மார்கழியில் எனக்குக் கிடைத்த என் மனைவி.

    மார்கழி என்றால் திருப்பாவை இல்லாமலா! திருவெம்பாவை இல்லாமலா!!
    பனி இல்லாமலா!!! கோலம் இல்லாமலா!!!! கோலம் என்னும்போது என் மனைவியை நான் முதலில் சந்திக்க வைத்த அவள் போட்ட கோலம்.. ஞாபகத்திற்கு வருகிறது. மார்கழியில் யாரும் திருமணப் பேச்சு ஆரம்பிப்பது இல்லை. ஆனால் விதி விலக்காக என் திருமணம் மார்கழியில்தான் நிச்சயிக்கப் பட்டது.

    இந்த சுகானுபவமும் என்னுடைய வங்கிப் பணி ஆரம்ப காலத்தில் நிகழ்ந்தது. அப்பொழுது எனக்கு மதுரையில் வேலை. வார இறுதிகளில் என் அம்மாவைப் பார்க்க சென்னை சென்று விடுவேன். வார நாட்களில் கடுமையான உழைப்பு என கிட்டத் தட்ட இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.

    மதுரைப் பெண்கள் அமைதியாக இருப்பது போல் மேலுக்குத் தெரியும். ஆனால் களவாணிப் பிள்ளைகள். அப்பூ. உடனே வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடாதீர்கள். கதையை நீங்கள் கடைசி வரை படித்தால் இது உண்மை என்று ஒத்துக் கொள்வீர்கள். (விஜய் டி வி யில் மதுர என்றொரு நீண்ட தொடர் வருகிறதே பார்க்கிறீர்களோ!! அதில் வரும் மீனா(ட்)ச்சியைப் பாருங்கள். அப்போது ஒப்புக் கொள்வீர்கள்)

    நான் அப்போது திருமங்கலத்தில் (மதுரையிலும் ஒரு திருமங்கலம் உண்டுங்கோ) தங்கி இருந்தேன். வழக்கம் போல் ஒரு சக ஊழியரின் வீட்டில், பணமளிக்கும் விருந்தாளியாக. திருமங்கலம் ஒரு முன்னேறிய (!!) கிராமமாக அப்போது இருந்தது. மதுரையையே இப்போதும் என் நண்பர்கள் நகரம் என ஒத்துக் கொள்வதில்லை. ஒரு புகழ் மிக்க பெரிய கிராமம் என்றுதான் இப்போதும் என் நண்பர்களின் கணிப்பு. மதுரையே அப்படி என்றால், மதுரையின் புற நகரான திருமங்கலத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். மதுரைக்கு வெகு அருகில்; ஆனால் மதுரையின் குறைந்த பட்ச நாகரீகம் கூட ஒட்டாமல்.

    ஒரு நாள் காலை நாலு மணிக்கே விழிப்பு வந்து விட்டது. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தேன். தூக்கம் மட்டும் தொடரவில்லை. எங்கோ தொலைவில் இருக்கும் கோயிலில் இருந்து சுப்ரபாதம் ஒலித்தது. அப்போதுதான் இது மார்கழி மாதம் என்று என மண்டையில் உறைத்தது. டிசம்பர் என்னும் ஆங்கில மாதம்தான் நினைவில் நிற்கிறதே தவிர, தமிழ் மாதங்கள் பிறப்பது மனதிற்கு பிடிபடுவதில்லை. (என்னுடைய கல்லூரி நாட்களில், சென்னை மேற்கு மாம்பலத்தில் நாங்கள் இருந்தபோது, இருந்த இனிமையான காலைப் பொழுதுகள் நினைவுக்கு வந்தன. மார்கழி வந்தாலே கொண்டாட்டம்தான். நான் கூட கோலப் போட்டிகளில் கலந்து, கோலம் போட்டு வென்றிருக்கிறேன்.)

    சரி ஏதாவது பக்கத்தில் இருக்கும் கோயிலுக்குப் போகலாம் என முடிவு செய்து, எழுந்து, குளித்து விட்டு, வெளியே கிளம்பினேன். மார்கழி மாதக் காலை நேரம் ஓஜோன் குவிந்திருக்கும் நேரம்; பிரம்மனுக்கு உகந்த நேரம்; என்றெல்லாம் சொல்வார்கள். எனக்கென்னவோ, அந்த நேரத்தில் வெளியில் நடக்கையில், ஒரு போக்குவரத்தும் இல்லாத அமைதியான அந்த சூழ்நிலை பிடித்திருந்தது.

    வீட்டை விட்டு வெளியே வந்ததும் என்னை முதலில் கவர்ந்தது, அந்தத் தெருவில் பல வீடுகளின் முன் பெண்கள் கும்பல் கும்பலாகக் கூடி போட்டுக் கொண்டிருந்த பெரிய கோலங்கள்தான். எந்தக் கோலத்தையும் மிதித்து, சிதைக்காமல், இடமும் வலமுமாக சுற்றி, நடந்து செல்வதே ஒரு வித்தியாசமான, வேடிக்கையான அனுபவம்.

    அந்தத் தெருவைக் கடந்து, சுப்ரபாதம் ஒலித்த திசையைக் கருத்தில் கொண்டு, கோயிலைக் குறி வைத்து நடந்தேன். அந்த இளம் விடியலில் அநேகமாக எல்லா தெருக்களிலுமே இப்படித்தான் மார்கழிக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தனர். (சென்னையில் மார்கழி விடியலின் குளிருக்குப் பயந்து, முன்னிரவே கோலங்களைப் போட்டு விடுகின்றனர். பழமையைக் காப்பாற்றிப் பாதுகாப்பதாக நினைப்பு. சென்னையில் எப்பொதும் இருக்கும் போக்குவரத்தில், போட்ட ஓரிரண்டு மணி நேரத்திலேயே இந்தக் கோலங்கள் சிதைக்கப் பட்டு.. கண்றாவி.) கிராமங்களை கிராமங்களாகவே இருக்க விட்டால் நன்றாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

    கோயிலைக் கண்டு பிடித்து, சுவாமி தரிசனம் செய்கையில்தான் மார்கழி பிறந்து அன்று ஐந்தாவது நாள் என்று தெரிய வந்தது. மூட நெய் பெய்து முழங்கை வழி வார வெண் பொங்கல் பிரசாதமாகக் கிடைத்தது. கோயிலில் சற்று நேரம் அமர்ந்து அந்த நெய் வழியும் பொங்கலைச் சுவைத்தவாறே, சுற்றிலும் பலர் இருந்தும், யாரும் இல்லாத ஒரு ஏகாந்தத்தைக் கொடுக்கும் கோயிலின் சூழ்நிலையை அனுபவித்தேன்.

    பின்பு இது தினசரி நிகழ்வாயிற்று. கோயிலின் பட்டருக்கு, பட்ணத்துப் புள்ளாண்டான், கோயிலுக்கு வந்து போவது மிக்க மகிழ்ச்சியை அளித்திருக்கக் கூடும். நான் வருவதற்கு சற்று தாமதம் ஆனாலும், அன்றைய நைவேத்ய பிரசாதத்தை எனக்கென தனியாக எடுத்து வைத்து விடுவார்.

    பிரசாத அறத்தில் ஒரு தளி, அரை தளி என்றெல்லாம் அளவு முறைகள் உண்டு. நானும் பிரசாதம் செய்து அளிப்பதற்கு உரிய அறத்தில் அவ்வப்போது பங்கேற்பேன். இவ்வாறே மேலும் சில நாட்கள் கழிந்தன. கோயிலின் மணியை அசைத்து அடிப்பது, பிரசாதத்தினை பக்தர்களுக்கு பங்கீட்டளிப்பது, மடப் பள்ளியில் சிறு உதவிகள், சுவாமிக்கு அர்ச்சனை மலர் கொணர்தல் என கோயிலின் அனைத்து மார்கழி மாத இளங்காலை நடவடிக்கைகளிலும் என்னை ஆர்வமாக இணைத்துக் கொண்டேன்.

    அன்றும் அப்படித்தான், விடியலில் கோயிலுக்குச் சென்றேன். வழக்கமாகச் செல்லும் வழியில், ஒரு தெரு முனையில் ஏதோ தோண்டி வழி அடைபட்டிருந்தது. எனவே அந்தத் தெருவை ஒட்டிய மற்றொரு தெரு வழியாக கோயிலுக்கு செல்ல நேர்ந்தது.

    பின்பு அதே வழியாக வீடு திரும்புகையில், வழியில் ஒரு இளம் பெண் தனியாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அநேகமாக முடிவடைந்த கோலம். இளங்காலைப் பனி மூட்டத்தில் முதலில் அவளைக் கவனிக்கவில்லை. கிட்டத்தில் வருகையில்தான் அவளைப் பார்த்தேன். ஒரு இளம் பெண் போடுகின்ற கோலம் என்பதாலோ, என்னவோ, அவள் போட்டிருந்த கோலம் கலை உணர்வோடு அழகாக இருப்பது போல் தோன்றியது. அங்கேயே நின்று அவள் போட்ட கோலத்தை ரசித்தேன். அவள் என்னைப் பார்த்து சிறிது பயந்தாற்போல் தொன்றியது. அவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டி அவளிடம் கோலம் நன்றாக இருக்கிறது என்று கூறினேன். வெட்கத்துடன் என் புகழ்ச்சியை ஏற்றுக் கொண்டாள். இதற்குள் அவள் கோலம் முடிவடைந்து, வீட்டிற்கு செல்லத் தொடங்கியவள், திரும்பிப் பார்த்து ஒரு நட்புப் புன் முறுவலை வீசி விட்டுப் போனாள்.

    திரும்பவும் 7 மணிக்கு நான் வங்கிக்குச் செலகையில், எதிரே அந்த இளம் பெண் வந்தாள். காலையில் கோலம் போடுகையில் பாவாடை சட்டையில், சிறிய பெண்ணாக, பள்ளிக்குச் செல்லும் பிள்ளை போல்; ஆனால் இப்பொதோ, சூடிதாரில். புதிதாகப் பறித்த மலர் போல; காலையில் அவள் போட்ட கோலத்தில்தான் கவனம்; இப்போது இளம் பெண்ணாக அவள் மீதே ஒரு லயிப்பு.
    கையில் ஒரு பரிசோதனைச் சாலைக்குரிய வெள்ளை மேல் கோட் ஒன்று வைத்திருந்தாள்.

    காலையில் கிடைத்த அறிமுகத்தின் விளைவாக அவளைப் பார்த்து நானும், என்னைப் பார்த்து அவளும் புன்னகைத்துக் கொண்டோம். என்னை அவள் கடக்கையில் என்னா காலேஜுக்கா என்று சென்னைத் தொனியில் நானும், ஆமண்ணே(ய்) என்று மதுரைத் தொனியில் சிரித்தவாறு கூறி அவளும்; கடந்தோம். என் மனதில் அவளின் வசீகரச் சிரிப்பு அன்று முழுவதும் நிழலாடி என்னை அலைக்கழித்தது. அவள்தான் என் வாழ்க்கைத் துணை என உறுதி கொண்டேன். அவளை என்னோடு துணை சேர்க்கத்தான் காலையில் என்னைக் கடவுள், அவள் இருந்த தெருவிற்கு என்னைத் திருப்பி விட்டார் போலும்

    மாலை நான் வீடு திரும்பியதும், அவள் இருந்த தெருவில் நான்கு முறைக்குக் குறையாமல் நடை பழகினேன். சென்னை மொழியில், அவளை டாவு அடிக்க முயன்றேன். தெருவில், அவள் கண்ணுக்குத் தெரியவில்லை. ஐந்தாவது முறை திரும்ப வருகையில், ஒரு மதுரைப் பெரிசு, என்ன தம்பி வ்லாசம் தெர்லீங்களா என்று ரவுசு பண்ணியது. இதற்கு மேலும் நடை பழகினால், முதுகில் டின்னுதான் என்பதால் ஒழுங்கு மரியாதையாக என் வீட்டிற்குத் திரும்பி விட்டேன்.

    இரவு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை. என்னுடன் கொண்டு வந்த காமிராவில் பிலிம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன். (அப்போதெல்லாம் டிஜிடல் படம் எடுக்கும் கருவிகள் புழக்கத்திற்கு வரவில்லை. வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். உங்களுக்கெல்லாம், வார்த்தை ஜாலம் காட்டாமல், நேரடியாக அவளின் படத்தை ஏற்றி, ரசிக்கும்படி வைத்திருப்பேனே!!) மூன்று மணிக்கு அலாரம் வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டேன். சக ஊழியர் என்னை பட்ணத்து லூசு என நினைத்து, ஒரு மாதிரியாகப் பார்த்தார்! நான் அவரைக் கண்டு கொள்ளவில்லை!!

    காலையில் எழுந்து, அவசரம் அவசரமாகக் குளித்து, காமிராவை எடுத்துக் கொண்டு நான் வெளியே செல்கையில். காலை மணி மூன்றரை. பெருமாளைக் கூட சுப்ரபாதம் பாடி எழுப்பக் கூடாத நேரம். அவள் தெருவில் யாரும் காணோம். ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள். அவள் வீட்டில் விளக்கு கூட எரியக் காணோம்.

    நேராகக் கொயிலுக்குச் சென்றேன். கோயிலில் கம கமவென்று பொங்கல் வாசனை. யாருமில்லாத அந்த ஏகாந்தத்தில், கண்ணனை அடைய ஆண்டாள் பாவை நோன்பு மேற்கொண்டது போல், என்னை நானே உணர்ந்தேன். ஒரே ஒரு வித்தியாசம்தான். இங்கு நான்தான் ஆண்டாள்!!!

    கோயிலில் சுப்ரபாதம் போட ஆரம்பித்து விட்டார்கள். பொங்கல் விநியோகத்திற்காக காத்திராமல், சுவாமி தரிசனம் முடிந்தவுடன் அங்கிருந்து கிளம்பி விட்டேன். கோயிலின் பட்டர், நான் பிரசாதம் பெறாமல் கிளம்பியதை கவனித்திருக்கக் கூடும்..

    நிதானமாக அடி மேல் அடி எடுத்து, அந்தப் பெண் இருந்த தெருவினை நோக்கி நடந்தேன். தெரு முனையில் நுழைகையிலேயே, அவள் கோலம் போட ஆரம்பித்து விட்ட காட்சியைக் கண்டேன். மனசு பட படவென்று; ஏதோ கள்ளத்தனம் செய்யப் போவது போல; கையில் இருந்த காமிராவில், சார்ஜ் சரியாக இருக்கிறதா, பிளாஷ் அடித்தால் ஒழுங்காக வேலை செய்யுமா என்று ஒரு முறை பார்த்துக் கொண்டு, கோலம் போட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை நெருங்கினேன்.

    எனக்கு திடுக் திடுக் என்று இருந்தாலும், அவள் முன் போய் நின்றபோது, இயல்பாக உணர்ந்தேன். எனக்கு வசதியாக அன்று மிகப் பெரிய கோலம் போடுவதற்கான ஆயத்தங்களில் அவள் இருந்தாள். என்னைப் பார்த்தவுடன் அதே சினேகிதப் புன்முறுவல். சிறப்பான முத்துப் பல் வரிசை. என் காமிராவையும் பார்த்து விட்டாள். அவள் கண்களில் ஒரு கேள்விக் குறி. அதனைத் தொடர்ந்த பய உணர்ச்சி. எனக்கு அழகான கோலங்கள் பிடிக்கும். நீ, நேற்று போட்ட கோலம் அழகாக இருந்தது. இன்று நீ போடும் கோலத்தைப் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என்று அவள் அனுமதியைக் கேட்டேன்.

    நான் அவளிடம் அனுமதி கேட்ட விதமோ, அல்லது அவள் கோலத்தைப் புகழ்ந்த விதமோ, அல்லது என்னையோ அவளுக்குப் பிடித்திருக்க வேண்டும். மெல்லிதாகத் தலை அசைந்து அனுமதி கொடுத்தாள். அந்த மெல்லிய அசைவுக்கே அவள் காதில் இருந்த ஜிமிக்கிகள் ஆடின.

    அவள் கோலம் போடத் தொடங்கினாள். நான் அவளைப் படம் எடுக்கத் தொடங்கினேன்; கோலத்துடன் சேர்த்துதான்!! ஐந்து நிமிடத்திற்குள் அவளின் அம்மாவும் கோலம் போட வந்தார்கள். எனக்கு உதறல்தான். ஆனால் அவளோ தன் அம்மாவிடம் என் தெருப் பெயரைச் சொல்லி, அங்கு வசிப்பவர் என்று சொல்லி, கோலத்தை நான்புகைப்படம் எடுக்க வந்துள்ளதாக என்னை அறிமுகப் படுத்தி வைத்தாள். அவளின் அம்மாவும் அதற்குப் பிறகு ஒன்றும் சொல்லவில்லை. இருவருமாக கலந்து, கலகலப்பாக என்னிடமும் பேசிக் கொண்டே, அடுத்த அரை மணி நேரத்தில் கோலத்தினை முடித்தனர். நானும் காமிராவில் இருந்த ரோல் முழுவதும் தீரும் வரை க்ளிக்கி முடித்தேன். அவ(ளு)ர்களுக்கு நன்றி சொல்லி வடை பெற்றுக் கொண்டேன்.

    உடனே பிலிம் ரோலை மதுரை எடுத்துச் சென்று, டெவலப் செய்து, பிரின்ட் எடுத்துப் பார்த்த பின்தான் எனக்குத் திருப்தியாயிற்று. என்னவள் அற்புதமாகவும், அவள் கோலம் நேர்த்தியாகவும் புகைப் படத்தில் பதிவாயிருந்தது. வங்கிக்குப் போகாமல், லீவினைத் தொலைபேசியில் சொல்லிவிட்டு; ஓடு; ஓட்டம் சென்னைக்கு; என் அம்மாவைப் பார்க்க. என் அம்மாவிடம் அவர்களின் வருங்கால மருமகளின் படத்தினைக் கொடுத்தேன். டேய் நீ தேவையில்லாமல் இன்னக்கி வந்தபோதே, இப்படி ஏதாவது இருக்கும்னு நினச்சண்டா! என்றார்கள். என்னைப் பெற்ற அம்மாவாயிற்றே! நான் எம்மாதிரியான சந்தர்ப்பங்களில் எவ்வாறு நடந்து கொள்வேன் என்பதை சிறு வயதிலிருந்தே பார்த்தவர்களாயிற்றே!!

    மேலும் கதையை வளர்த்தாமல், என் அம்மா என்னுடன் அன்றிரவே மதுரை வந்தார்கள். மறு நாள் விடியலில், அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று, முறைப்படி பெண் கேட்டோம். எங்களைப் பற்றிய விவரம் தெரிந்தவுடன், அவர்கள் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தார்கள்.

    அவளுக்கு முகத்தில் அசாத்திய வெட்கம். அவளை நான் முதலில் சந்த்தித்த அன்று மாலை அவள் தெருவில் நான் நடை பழகியதை, அவள் வீட்டிலிருந்தபடியே பார்த்திருக்கிறாள். நான் 04 X 02 முறை அவள் வீட்டினைக் கடந்து சென்றதைப் பார்த்திருக்கிறாள். ஐந்தாவது முறை, அந்த தெரு பெரிசு என்னை மடக்கியதையும் பார்த்திருக்கிறாள். ஆனாலும் அவள் முகத்தை எனக்குக் காண்பிக்காமல், என் தவிப்பினை ரசித்திருக்கிறாள். என்னை அவள் விரும்பினாலும், இயல்பான வெட்கம் அவளைத் தடுத்து விட்டிருக்கிறது. அடுத்த நாள் காலையில் நான் கோலத்தைப் புகைப்படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு ரோல் முழுவதும் அவளையே எடுத்ததையும் ஊனர்ந்து அனுபவித்திருக்கிறாள்!!

    இப்போது சொல்லுங்கள். மதுரை இளம் பெண்கள், களவாணிப் பிள்ளைகள் என்று நான் இக்கதையின் முதலில் சொன்னதில் ஒன்றும் தப்பில்லையே!!

    அன்றே முறைப்படி நிச்சயதார்த்தமும் முடிந்தது. ஆனால் திருமணம் மட்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து, அவளின் கல்லூரிக் கல்வி முடிந்தபின்புதான் நடந்தது. காத்திருத்தலின் சுகத்தை நாங்கள் இருவருமே பரிபூர்ணமாக உணர்ந்தோம்.

    ம்ம்ம்.. சொல்ல மறந்து விட்டேனே. எங்களின் திருமண நிச்சயம் நடந்த நாள், மார்கழியின் கூடாரவல்லி நாள். பாடகமே என்றனைய பல்கலணும் ஆண்டாள் அணிந்த நாள். கண்ணனுடன் கூடியிருந்து குளிர்ந்த நாள்.

    கண்ணனுக்கு, எனக்கு, என் ஆண்டாள் கிடைத்த நாள்!!

    பின் குறிப்பு: தமிழ் மன்றத்தில், இக்கதையைப் பதிவு செய்யும் நாள் கூடாரவல்லித் திருநாளாகும். மாதங்களில் நான் மார்கழி என்றவனை நோக்கி, பாவை நோன்பிருந்து ஆண்டாள் அடைந்த நாள்.

    மார்கழியின் பனியையும், குளுமையையும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள்.

    இவண் இளஞ்சூரியன்.

  2. #2
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் sarcharan's Avatar
    Join Date
    20 Dec 2005
    Location
    மும்பை
    Posts
    3,553
    Post Thanks / Like
    iCash Credits
    46,708
    Downloads
    290
    Uploads
    27
    Quote Originally Posted by இளஞ்சூரியன் View Post
    மதுரைப் பெண்கள் அமைதியாக இருப்பது போல் மேலுக்குத் தெரியும். ஆனால் களவாணிப் பிள்ளைகள்.
    ஹ ஹா ஹாஅ ஹாஆஆஅ... சிப்பு வருது சிப்பு...
    மதுரைக்காரப் பயலுவளும் அப்படித்தானோ இளஞ்சூரியன்??
    சொன்னீங்கண்ணா வசதியாய் இருக்கும்.

    Quote Originally Posted by இளஞ்சூரியன் View Post

    வீட்டை விட்டு வெளியே வந்ததும் என்னை முதலில் கவர்ந்தது, அந்தத் தெருவில் பல வீடுகளின் முன் பெண்கள் கும்பல் கும்பலாகக் கூடி போட்டுக் கொண்டிருந்த பெரிய கோலங்கள்தான். எந்தக் கோலத்தையும் மிதித்து, சிதைக்காமல், இடமும் வலமுமாக சுற்றி, நடந்து செல்வதே ஒரு வித்தியாசமான, வேடிக்கையான அனுபவம்.
    ஹ்ம்ம் அது ஒரு கனாக்காலம். அதை ஏன் இப்போ ஞாபகப்படுத்திக்கிட்டு.
    பெங்களூரிலும் தான் இருக்காங்களே.. விடியற்காலை 8:00 மணிக்கு எழுந்து....

    Quote Originally Posted by இளஞ்சூரியன் View Post
    பின்பு அதே வழியாக வீடு திரும்புகையில், வழியில் ஒரு இளம் பெண் தனியாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அநேகமாக முடிவடைந்த கோலம். இளங்காலைப் பனி மூட்டத்தில் முதலில் அவளைக் கவனிக்கவில்லை. கிட்டத்தில் வருகையில்தான் அவளைப் பார்த்தேன். ஒரு இளம் பெண் போடுகின்ற கோலம் என்பதாலோ, என்னவோ, அவள் போட்டிருந்த கோலம் கலை உணர்வோடு அழகாக இருப்பது போல் தோன்றியது. அங்கேயே நின்று அவள் போட்ட கோலத்தை ரசித்தேன். அவள் என்னைப் பார்த்து சிறிது பயந்தாற்போல் தொன்றியது. அவளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டி அவளிடம் கோலம் நன்றாக இருக்கிறது என்று கூறினேன். வெட்கத்துடன் என் புகழ்ச்சியை ஏற்றுக் கொண்டாள். இதற்குள் அவள் கோலம் முடிவடைந்து, வீட்டிற்கு செல்லத் தொடங்கியவள், திரும்பிப் பார்த்து ஒரு நட்புப் புன் முறுவலை வீசி விட்டுப் போனாள்.
    அப்புறம் அனுபவம் புதுமைன்னு வீட்டுக்கு போய் பாடினீங்களா...

    Quote Originally Posted by இளஞ்சூரியன் View Post
    இப்போது சொல்லுங்கள். மதுரை இளம் பெண்கள், களவாணிப் பிள்ளைகள் என்று நான் இக்கதையின் முதலில் சொன்னதில் ஒன்றும் தப்பில்லையே!!
    அப்ப முடிவோட தான் இருக்கீங்க. ஆட்டோ அனுப்புபவர்கள் கவனிக்க.
    சாணக்கியன் சொல்: கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசிச்சா சரி!

  3. #3
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வெட்கத்துடன் என் புகழ்ச்சியை ஏற்றுக் கொண்டாள். இதற்குள் அவள் கோலம் முடிவடைந்து, வீட்டிற்கு செல்லத் தொடங்கியவள், திரும்பிப் பார்த்து ஒரு நட்புப் புன் முறுவலை வீசி விட்டுப் போனாள்.
    ஒரு திரைப்படம் பார்த்தது போன்ற பிரமை. அழகான விபரிப்பு. அசத்தல்.

    தெய்வீகமான உங்கள் உறவு தெய்வத்தின் அனுக்கிரகத்துடன் கிடைத்திருக்கிறது போலும். பிந்திய வாழ்த்துக்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  4. #4
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    அடடா...நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் இளஞ்சூரியன்...

    சிலநாட்களுக்கு முன்னர் தான் கோலம் பற்றி வண்ணதாசனின் வரிகள் படித்தேன்.

    நிஜமாகவே கோலம் போடும் போது பெண்களின் முகத்தில் ஒரு அசாத்திய அழகும்,கர்வமும்,தன்னம்பிக்கையும் மிளிரும்.மார்கழி மாதச் சாணிப்பிள்ளையார் கோலங்கள் இன்னும் விசேசமானவை.கோலம் போட்டு முடித்து பின்னலை விசிறி அடித்து எழும்பும் போது ஒரு மகிழ்ச்சியும் திருப்தியும் கலந்த முகபாவம் நிலவுவதைப் பார்த்திருக்கிறேன்.இப்போதும் உங்கள் வீட்டம்மா அதே போல கோலம் போடுகிறார்களா? இல்லை 20 புள்ளி 20 வரிசைக் கலர்க் கோலம் போய்...குட்டி நெளிக் கோலம் ஆகி விட்டதா?

    என் தோழியர் கேட்பர்...இத்தனை நேரம் கை வலிக்க வேலை வெட்டி இல்லாமல் கதை கவிதைன்னு டைப் பண்ணனுமா...அப்படி எத்தனை பேரு படிக்கப் போறாங்க?அப்படின்னு...
    எத்தனை பேரு பார்க்கறாங்களோ இல்லையோ மனதில் தோன்றியதை வடித்து முடித்து விட்டு...தலை தூக்கி எப்படி வந்திருக்கு அப்படின்னு பார்ப்பது எவ்வளவு பெரிய சுகம்? அது கோலமோ...கதையோ...கவிதையோ எதுவாக இருந்தாலும்...

    உங்கள் மனைவியின் கோலம் வெகு அழகாக இருந்ததாக நான் சொன்னதாகச் சொல்லுங்கள் தோழரே...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  5. #5
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    வெகு அழகான விவரிப்பு.காட்சியை மனக்கண்முன் கொண்டு வரும் எழுத்து.
    மார்கழி பிரசாதமாய் திருமதி உங்களுக்கு வெகுமதியாய் கிடைத்திருக்கிறார்.
    நானும் கோலங்களின் ரசிகன்தான். இந்த பொங்கலுக்குக்கூட என் அன்புத்தங்கை பூமகள் மிக அழகான கோலம் போட்டு அதை படமெடுத்து என் மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்தார். வெகு அழகு.
    சில கோலப்போட்டிகளில் நடுவராக இருந்திருக்கிறேன்.சுகமான அனுபவம்.அனைத்தையும் நினைவுகூற வைத்த உங்கள் பதிவுக்கு மனமார்ந்த நன்றி இளஞ்சூரியன்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  6. #6
    புதியவர் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Posts
    30
    Post Thanks / Like
    iCash Credits
    62,598
    Downloads
    12
    Uploads
    0
    என்ன அழகா ஒரு அற்புதமான கதை இளஞ்சுரியனாரெ....
    உங்களுக்கு உங்கள் மனைவி மார்கழியில் கிடைத்தாள்...
    மார்கழி குளிரும் மாங்கனி சுவையும் எப்போதும் சுகம் தான் இல்லையா...
    உங்கள் கனவும் உங்கள் நினைவும் அற்புதம் தான்....

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சூரியன்'s Avatar
    Join Date
    06 May 2007
    Location
    Tirupur
    Posts
    3,009
    Post Thanks / Like
    iCash Credits
    49,665
    Downloads
    12
    Uploads
    1
    ஒரு சுவையான அனுபவத்தை அழகாக சொல்லி முடித்திருக்கிறீர்கள்.
    மார்கழியில் கோவிலுக்கு போவதே ஒரு புண்ணியம் தான்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    ரொம்ப நாளா எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. காதலே தெய்வீகமானது தான். அதென்ன தனியா தெய்வீக காதல்.? உங்க பதிவு படிச்ச போது தான் புரிஞ்சிக்கிட்டேன் இதான் தெய்வீக காதல்-னு..! காரணம், நீங்க உங்கள் காதல் முளைச்ச நிமிடம் முதல், அது நிச்சயத்தில் முடிந்தது வரை காதலும், கடவுள் சார்ந்த ஆன்மீகமும் பின்னி, பிணைஞ்சே வருது..! கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்துறீங்களா.. இல்ல சகோதரிக்கு தினமும் ஆறுகால பூஜை பண்ணி வழிபாடு நடத்துறீங்களா..? ஏன் கேட்கிறேன்னா இது தெய்வீக காதலாச்சே..!!

    உங்க காதல் இத்தனை சின்ன கால இடைவெளியில் முகிழ்த்தது பெரும் ஆச்சரியம். ஒரு வேளை பூர்வ ஜென்ம பந்தம்கிறாங்களே, அதுவோ இது..? மதுரையை நகரம்னு ஒத்துக்காத உங்க நண்பர்கள் தமிழகத்தில் வாழவே பொருத்தமில்லாதவர்கள். ஏன்னா நிறைய வீடுகள்ல மதுரை ஆட்சி தான் நடக்குதுன்னு அவங்க கேள்விப்பட்டதில்லையா..? நீங்க உங்க முன்னாள் காதலியை பார்க்க போறேன்னு கோவில் பிரசாதத்து மேலயும் ரொம்ப காதலாத்தான் இருந்திருக்கீங்க..!!

    மதுரை பொண்ணுங்க கோவக்காரங்கன்னு நானும் கேள்விப்பட்டிருக்கேன். ஆனா உங்க பதிவை பார்த்தா நம்ப முடியலை..! உங்க காதலி கோலத்தோட அவங்களையும் சேர்த்து ஃபோட்டோ எடுக்கிற வரைக்கும் ஒத்துழைச்சிருக்காங்களே..! ஒரு வேளை உங்களுக்கு முன்னாடியே அவங்களுக்கு உங்க மேல ஒரு (ரெண்டு!!) கண்ணோ..?!!!

    மகனோட விருப்பம் தெரிஞ்சி நடக்கிற நல்ல பெற்றோர்கள் உங்களுக்கு. அதான் விருப்பம் சொன்னதும் உடனே ஒத்துக்கிட்டு இருக்காங்க..! மத்தவங்களா இருந்தா அந்த பொண்ணு என்ன குலம், கோத்திரம்னு கேட்டிருப்பாங்க..!

    சுவையான பொங்கல்ல அதிக சர்க்கரை சேர்ந்திட்ட தித்திப்பா திகட்டிடும்கிற மாதிரி உங்க காதல் அனுபவத்துல அதிகம் ஆன்மீகம் கலந்து இருக்கிறதால, காதல் உணர்வை விட ஆன்மீகம் மேலோங்கி இருக்கிறது இந்த காதல் அனுபவத்தின் சுவையை நிச்சயம் குறைக்குது. அதுக்கு உங்கள் இயல்பும் ஒரு காரணமா இருக்கலாம். அதனாலென்ன... மனம் பொருந்திய இணையை அடைஞ்ச உங்க அனுபவத்தை படிக்கும் போது மார்கழிக்குளிர் தரும் சிலிர்ப்பை மனசு உணர்ந்ததை மறுப்பதற்கில்லை..!!

    அருமையான பதிவு இளஞ்சூரியன்..! பாராட்டுக்கள்..!!
    Last edited by இதயம்; 17-01-2008 at 07:55 AM.
    அன்புடன்,
    இதயம்

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    ஆஹா..! உங்களுடைய சொந்த அனுபவம் ரொம்பவே நல்லா இருக்கிறது இளஞ்சூரியரே...!

    காதல் எப்படியெல்லாம் தோனுது பாருங்க..?! மதுரை மல்லிக்குதான் மயங்குவாங்க.. ஆனா நீங்க கோலம் போட்ட அண்ணிக்கே மயங்கிட்டீங்க..போலிருக்கு..!

    நிகழ்வுகளுடன் சில தகவல்களையும் சேர்த்து எழுதியிருந்தது மிகவும் ரசிக்கும்படி அமைந்துள்ளது..! வாழ்த்துக்கள் அண்ணா..! தொடர்ந்து நிறைய எழுதலாமே..?!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  10. #10
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    இதயமே..........

    உங்கள் காதலை நீங்கள் எப்படி வளர்த்தீர்கள்.?
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் இதயம்'s Avatar
    Join Date
    20 Feb 2005
    Location
    தஞ்சவூதி
    Posts
    3,565
    Post Thanks / Like
    iCash Credits
    59,045
    Downloads
    72
    Uploads
    2
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இதயமே..........உங்கள் காதலை நீங்கள் எப்படி வளர்த்தீர்கள்.?
    அது என்னாத்துக்கு இங்க..? வந்தமா..படிச்சமா.. ஏதாவது கருமத்தை பின்னூட்டத்தில் எழுதிட்டு போனமான்னு இருக்கணும்..!! சரியா..?
    அன்புடன்,
    இதயம்

  12. #12
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் praveen's Avatar
    Join Date
    05 Oct 2006
    Posts
    1,771
    Post Thanks / Like
    iCash Credits
    60,428
    Downloads
    51
    Uploads
    112
    உங்கள் முதல் உண்மை? நிகழ்வு சூப்பர். இன்னும் இப்படி உங்கள் வாழ்வில் நிகழ்ந்த (குறிப்பாக வங்கிப்பணியில் நடந்த சில நகைச்சுவையான) தகவல்களை, இப்படி விவரித்த மாதிரி தாருங்கள். நன்றாக கதை விடுகிறீர்கள் என்பதால் தான் சொல்கிறேன் ,


    Quote Originally Posted by இதயம் View Post
    Quote Originally Posted by அன்புரசிகன் View Post
    இதயமே..........

    உங்கள் காதலை நீங்கள் எப்படி வளர்த்தீர்கள்.?
    அது என்னாத்துக்கு இங்க..? வந்தமா..படிச்சமா.. ஏதாவது கருமத்தை பின்னூட்டத்தில் எழுதிட்டு போனமான்னு இருக்கணும்..!! சரியா..?
    ரொம்ப அடிபட்டிருக்கிறார் போல தெரிகிறது. இவருக்கு வாய்ப்பே கொடுக்காமல் இந்த விசயத்தில் எனக்கு நடந்தது போல மணம் முடித்திருக்கிறார்கள் போல. வீட்டிற்கு அடங்கின நல்ல பிள்ளை .
    இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

Page 1 of 3 1 2 3 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •