Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 39

Thread: ஒரு வீடும் சில மனிதர்களும்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0

    ஒரு வீடும் சில மனிதர்களும்

    "பால்காரரே... இன்னிலிருந்து ஒரு மாசத்துக்கு 2 லிட்டர் பால் சேர்த்து ஊத்துங்க..." சொன்ன கோகிலா அறுபதுகளின் ஆரம்பத்தில் இருந்தாள். அறுபது வயதில்... என்ன அப்படி ஒரு சந்தோசம் இருந்து விடப்போகிறது?... என்று நாம் யோசிக்கும் வண்ணம்... முகம் மகிழ்ச்சியில் பூரித்திருந்தது.

    "என்ன கோகிலாம்மா... பையனும் பொண்ணும் வெளிநாட்டிலிருந்து வந்திட்டாங்க போல... எங்களுக்கொண்ணும் விசேமில்லையா... எப்பம்மா வந்தாங்க... பேரம் பேத்திய பாத்த சந்தோசத்தில பத்திருபது வயது கொறைஞ்சு போயிடுச்சு போல...." பாலை ஊற்றிய படி பேச ஆரம்பித்தார் பால்கார கோணார்.

    ஆமாம்பா... முந்தாநாளே வந்திட்டாங்க. மூணு வருசம் கழிச்சு அண்ணனும் தங்கச்சியும் ஒட்டுக்கா லீவு போட்டிட்டு வந்திருக்காங்க.. உனக்குத் தான் தெரியுமே... நம்ம சிவசு இருக்கிறது அமெரிக்காவில... கல்யாண முடிஞ்சவுடனேயே மருமகனோட ஆஸ்திரேலியா போயிட்டா மீரா... ரெண்டு பேரும் சொல்லி வெச்சி லீவு வாங்கி அம்மாவப் பாக்க வந்திருக்காங்க... அந்த ஊரிலெல்லாம் லீவு கிடைக்கறதே கஷ்டம்பா....

    சரிம்மா, நம்ம குழந்தகளைப் பத்தித் தான் எனக்கு நல்ல தெரியுமே... நான் பால் ஊத்தி வளந்த பசங்க... பேரக்குட்டிங்க சேதி என்ன அத சொல்லுவீங்களா.....

    பேரக் குழந்த என்று சொன்னவுடன் தனிச்சோபை வந்து உக்காத்து கொண்டது கோகிலாம்மா முகத்தில்.

    அய்யோ... அதை ஏன் கேக்கறீங்க... அப்படியே வாத்தியாரய்யாவ உரிச்சு வெச்சிருக்கு சிவசுவோட சின்னக்குட்டி அர்ஜூன். பெரிய பொண்ணு அனாமிகா ரொம்ப அமைதி. நம்ம மீராவோட குட்டி சோனு இருக்கானே ரெட்டை வாலு... பால்காரரே இதுகெல்லாம் தஸ்ஸு புஸ்ஸுன்னு அதுகளுக்குள்ள இங்கிலீஸ்ல தான் பேசிக்குது. ஆனா தமிழும் தக்கி முக்கி பேசுதுக... சும்மா சொல்லக் கூடாது... என் கூடவே சுத்திட்டு இருக்குதுக...

    சரி மருமகப் பொண்ணு அமெரிக்காக்காரப் பொண்ணாமே?... சிவசு மனசுக்குப் புடிச்சுப் போயி கண்ணாலம் கட்டிக்கிச்சாமே.. அப்படியா?

    ஆமாங்க கோணாரே... அமெரிக்காவில கூட வேலை செய்யறவங்களாம். பூர்வீகம் இந்தியா தானாம். அங்கியே பிறந்து வளந்த ஐயர் வீட்டுப் பொண்ணு ... பேரு என்ன தெரியுமா... அங்கையர்கண்ணி... அம்முனு சிவசு கூப்பிடுறான்... நல்ல பாந்தமான பொண்ணு... யாரை கல்யாணம் செஞ்சா என்ன? கடைசி வரை பசங்க நிம்மதியா இருந்தா சரி...

    அம்மா.... அம்மா... என்று மீராவின் குரல் கேட்டு...

    சரி பால்காரரே.... புள்ளங்க எந்திருச்சுட்டாங்க போல..... சாவகாசமா சாய்ந்திரம் வாங்க... சிவசு கூட உங்களப் பத்திக் கேட்டான். நான் காப்பி போடறேன். மீரா பல்விளக்காமயே காப்பி குடிக்கற புள்ள... உங்களுக்குத் தான் தெரியுமே...

    என்ன மீரா... காப்பியா... என்ன சீக்கிரம் எந்திருச்சிட்டே....

    அம்மா இங்க வாயேன்... சோனு கை, காலப்பாரேன்... அம்மை போட்ட மாதிரி தடிச்சிருக்கு...

    அடிப்பாவி மகளே... என்ன சொல்ற, புள்ளையக் கொண்டா இங்கே... ஆமாமா... இதென்ன இது நேத்துக் கூட நல்லாத்தானே இருந்தான்... உடம்பெல்லாம் முத்து முத்தா இருக்கே... போ சிவசுவ கூப்பிடு...

    அண்ணா... அண்ணா... தூங்கினது போதும் இங்க கொஞ்சம் வாயேன்... எந்திரி.... சரியான தூங்கு மூஞ்சி...

    சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்து வந்த சிவசுசுக்கு 35 வயது. மருத்துவருக்கே உரிய அந்த தோரணையும் கம்பீரமும் முகத்தில் இருந்தது.

    என்ன ஆச்சு மீரா... என்னம்மா ஆச்சு.... லீவுக்கு வந்தாக்கூட நிம்மதியா தூங்க விடமாட்டீங்களா?

    'புள்ளய பாரு சிவசு... கை காலெல்லாம் கொப்பளம்... என்னாச்சுனு தெரியல..' பதறியபடி கோகிலாம்மாள்.

    இது தானா... சோனுக்கு கொசுக்கடி புதுசும்மா... அலர்ஜியாயிருக்கு... மீராவப் பத்தி தெரியாதா? எறும்பு கடிச்சாலே தேள் கொட்டின மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் செய்வா... நீயும் அவ பேச்ச கேட்டிக்கிட்டு.... பார்மஸில மருந்து வாங்கிப் போட்டா சரியாகும். நீதான் மஞ்சள அரைச்சுப் பூசுவியே எல்லாத்துக்கும்... இதுக்கும் பூசு... அது போதும்.

    சோனு.. யு வில் பீ ஆல்ரைட் மேன்.... டோன் வொர்ரி... ஏண்டி வந்தவுடன் ஆரம்பிச்சிட்டியா... உங்கூட 40 நாள் எப்படித்தான் இருக்கப் போறேனோ தெரியலயே...

    போடா உனக்கென்ன... புள்ளைக்கு ஏதாவது ஒண்ணுன்னா அந்த மனுசன் எம்மேல தான் பாய்வாரு... தெரிஞ்ச கதைதான?

    ஹாரிபிள்... ஐ கேன்ட் இமேஜின் திஸ்... ஐ வாண்ணா கோ பேக் டு மை கண்ட்ரி" பாய் கட் வெட்டப்பட்ட தலை முடியை சிலுப்பிக் கொண்டே... சிணுங்கலுடன் வந்தாள் 8 வயது அனாமிகா... சிவசுவின் சீமந்த புத்திரி.
    "வாட் ஹேப்பண்ட்... வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்" சிவா கேட்பற்குள், மீரா குறுக்கிட்டாள்.
    என்னம்மா பினாமி என்ன ஆச்சு?...
    ஆண்ட்டி எனக்கு டாய்லெட் போகணும்...
    அதுக்கென்ன போ...
    "வ்வேர் இஸ் வெஸ்டெர்ன் குளோசெட்... எனக்கு இந்த டைப் பழக்கம் இல்ல"
    இப்படி ஒரு பிரச்சனையை யாரும் எதிர் பார்க்கவில்லை...
    இதை நான் யோசிக்கவே இல்லையே� பாவம் குழந்தைகள் அதுங்களுக்கு இதெல்லாம் பழக்கமில்லியே! பாட்டியப் பாக்க வந்து கஷ்டப்படுதுக.. கோகிலம்மாவின் முகம் வாடியது.

    அதனால தான் அப்பவே சொன்னேன். வீட்ட இடிச்சிட்டு மாத்திக் கட்டலாம்னு. நீதான் அப்பா கட்டின வீடு.. ஒரு செங்கல்லக் கூட தொந்தரவு செய்யக் கூடாதுன்னு அடம் புடிக்கிற. காலத்தோட மாறப் பழகிக்கணும்மா.. இது சிவசு.

    இத்தன வருசம் சொல்லியும் அம்மா கேக்கல. இப்ப சொன்னா மட்டும் கேக்கப் போறாங்களா. இப்ப அனாமிகாவோட பிரச்சினைக்கு வழியப் பாருன்னா.
    இன்னைக்கு ஒரு நாள் ... ட்ரை டு அட்ஜஸ்ட்... அப்புறம் பாக்கலாம்... இது சிவசு.
    வாட் டேட்... டாய்லெட் உள்ள விழுந்துட்டா... பயம்மா இருக்கு டேட்... அனாமிகா.
    அம்மா... இவளுக்கு இரண்டு ஸ்பூன் விளக்கெண்ணையும் ஒரு வாழப்பழமும் குடு... அப்புறம் எங்க போகச் சொன்னாலும் போவா பாறேன்..
    அண்ணி எங்க அண்ணா... தூங்கறாங்களா... புருசனும் பொண்டாட்டியும் சரியான ஜோடி தான்... சரியான தூங்கு மூஞ்சிக் குடும்பம்... எங்க நீ பெத்தெடுத்த அடுத்த முத்து அர்ஜூன். ஏன்னா இதென்ன பேரு அனாமிகான்னு.... அமானுஷ்யமா இருக்கு... வேற பேரே கிடைக்கலையா உனக்கு? , இது மீரா.

    அனாமிகான்னா பேரே இல்லாதவள்ன்னு அர்த்தம்... இதுக்கெல்லாம் ஒரு ரசனை வேணும்டி... உன் பையனுக்கு வெச்சிருக்க பாரு சுப்பிரமணின்னு... அனாமிகா பக்கத்தில் நிக்க முடியுமா...

    நான் ஒண்ணும் வெக்கல சுப்பிரமணின்னு... அது அவரோட அப்பா பேரு ... என் மாமியாரு செலக்சன்... என்றாள் மீரா.

    இருக்கட்டும்... உன்னைக் வெக்கச் சொன்னா மட்டும் என்ன சொல்லிருப்ப.... கமலஹாசன்னு வெச்சிருப்ப... கூடவே பத்மஷ்ரின்னு பட்டத்தோட வெச்சிருப்ப... அதும் இல்லன்ன பத்தாப்பு படிக்கும் போது உன் பின்னாலே சுத்தனானே... அவன் பேரு என்ன... மோகன் விஜி... அவன் பேரு வெச்சிருப்ப... அவன் மேல உனக்கொரு சாப்ட் கார்னர் இருந்த மாதிரி தெரிஞ்சிதே... இது சிவசு.

    அம்மா... பாரும்மா அண்ணாவ... என்கிட்ட மட்டும் எப்பப்பாரு வம்ப்பிழுப்பான்... அவன் பொண்டாட்டிகிட்ட பேசச் சொல்லு... அம்மு.. அம்முன்னு ஒரே வழிசல்...

    என் பிரச்சினைக்கு ஒரு வழி சொல்லுங்க டேட், சிணுங்கினாள் அனாமிகா.

    பொறு டியர், உள்ள போனா வெளிய வந்து தான தீரணும். தீர்வில்லாத பிரச்சனைகள் எதுவுமே கிடையாது, மரணத்தைத் தவிர. மரணம் பல பிரச்சனைகளுக்குத் தீர்வா அமையும். ஆனா அது கூட இன்னொரு பிரச்சனைக்கு ஆரம்பம் தான், மறுபடி பிறக்கனும். அம்மா வயித்தில இருந்து வெளியே வந்ததும் அழணும் புணரபி மரணம் புணரபி ஜனனம்- சிவசு.

    என்ன ஆண்ட்டி, ஷிவா பிலாசபி பேச ஆரம்பிச்சிட்டாரா? திடிருன்னு ஒரு நாள் உங்க புள்ளையாண்டான் கசாயம் கட்டிண்டு, கமண்டலம் எடுத்துட்டுப் போயிருவாரோன்னு பயமா இரூக்கு ஆண்ட்டி நீங்க கொஞ்சம் அட்வைஸ் பண்ணப் படாதோ? இப்பத்தான் எழுந்து வருகிற அம்மு என்கிற அங்கயர்கண்ணி. தூக்கக் கலக்கத்தில் அங்கங்கே வேண்டுமென்றே கலைத்து விடப்பட்ட மாடர்ன் ஓவியம் போல் இருந்தாள்.

    வாம்மா நீ காப்பி குடிப்பியா�

    ஓ பேஷா, குடிப்பனே. தாங்க்ஸ் ஆண்ட்டி.

    சிவசு அந்த மேஸ்திரியக் கூப்பிட்டு பாத்ரூம மாத்தி உங்க வசதிக்கு கட்டிக்கலாம். நான் போய் சொல்லிட்டு வரேன்.

    இரும்மா என்ன அவசரம். பசங்க எல்லாரும் எந்திரிக்கட்டும். என்ன டிபன் பண்ணிருக்க.

    இட்லி, புதினாச் சட்னி கேட்டா மீரா . உனக்கு அடைன்னா பிடிக்குமே! வெல்லமும், வெண்ணையும் கூட இருக்கு, உனக்கு என்னம்மா வேணும்?�மருமகளைப் பார்த்துக் கேட்டாள், கோகிலம்மாள்.

    எனக்கு எதுவா இருந்தாலும் ஒ.கே. ஆண்ட்டி. நான் பசிக்கு சாப்பிடறவ. ருசிக்கு இல்லை. உங்க புள்ளைக்குத்தான் நாக்கு நீளம் அதிகம். நான் எது செஞ்சாலும் அம்மா மாதிரி இல்லைம்பார். அவர கவனிங்க அது போறும். ஆனாலும் இப்படி பிள்ள வளத்தக் கூடாது ஆண்ட்டி. இப்ப நான்னா சிரமப் படறேன்.

    இதற்குள் பொடிப் பட்டாளங்கள் எல்லாம் எழுந்து விட்டன போலும். அமளி துமளி ஆரம்பித்து விட்டது. தினமும் நெட்டில் சாட் செய்தாலும் நேரில் பார்த்து பேசுவது போல ஆகுமா?

    யு னோ வாட் ஹேப்பண் இன் மை ஸ்கூல். பொடிசுகள் அததுகள் கதைகளை நெல்லிக் காய் மூட்டையாய், அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தனர். கொண்டு வந்த டாய்ஸ் , புக்ஸ் எல்லாம் இறைத்து வைத்துக் கொண்டு.

    ஒரு வழியாக சாப்பாட்டுக் கடை ஓய்ந்தது.

    அம்மா உனக்கும் வயசாயிடுச்சு. தனியாத் தான் இருப்பேன்னு அடம் பண்ணறே. ஒண்ணு எங்ககூட அமெரிக்கா வந்திடு. இல்ல மீரா கூட ஆஸ்திரேலியா போ. இப்படி தனியா உன்ன விட்டிட்டு போக எங்களுக்கு மனசே வரலை. ஏம்மா வர மாட்டேங்கிற. அப்படி என்ன தான் இருக்கு இந்த வீட்டில? பழைய காலத்துக் கட்டு வீடு. உதிந்து போன காரையும், கல்லுமா! இடிச்சிட்டாவது கட்டித்தர்றேம்மா. கொஞ்சம் வசதியாவாவது இரேன். நான் கொஞ்சமாவது சந்தோசப் படுவேன், என்றான் சிவசு.

    ஆமா பாட்டி ரெம்ப சூடா இருக்கு பாட்டி. சென்ரலைஸ்டு ஏஸி பண்ணித்தாங்க, டேட்..அனாமிகா முனகிக் கொண்டே வரவும். அவள் பின்னேயே அர்ஜுனும், சோனுவும் வந்தார்கள்.

    பாட்டி முறுக்கு சூப்பர். இன்னொன்னு வேணும். இது சோனு.

    அம்மா இங்க பாரு கதவு நெலவெல்லாம் உளுக்க ஆரம்பிச்சிட்டு உள்ள கரையான் வெச்சிருக்கு போல - மீரா

    நெலவுன்னா என்ன மம்மி. யு மீன் மூன்? இது சோனு.

    கோகிலம்மா மெல்ல எழுந்து கதவின் அருகே போய் நிலைப்படியை தடவினாள்.

    இந்த நெலவு வைக்கும் போது மீரா மூணு வயசு குழந்த. என்ன செஞ்சா தெரியுமா. எங்களுக்குத் தெரியாம, பாத்ரூம் கழுவ வெச்சிருந்த ஆசிட் பாட்டில் எடுத்து தண்ணி குடிக்கிற மாதிரி குடிச்சிட்டா. புள்ள செத்துட்டான்னே நினைச்சோம். எப்படியோ பொழைச்சு வந்தா. எம் மாமியாரு மீராவோட பாட்டி, சிவன் கோயில் போயி 3 நாளு பழியாக் கிடந்தாங்க. எம் பேத்தி பிழைச்ச சேதி வந்தாத் தான் நான் வீட்டுக்குப் போவேன்னுட்டு. அவங்க வேண்டுதல் தான் மீரா பிழைச்சது..கோகிலாம்மாவின் கண்கள் பழைய கால நினைவுகளால் முன்னை விட ஒளிர ஆரம்பித்தது.

    ரியல்லி பாட்டி. வெரி ஃபன்னி? இது அனாமிகா.

    ஆமாண்டா கண்ணு. உங்க அப்பா மாத்திரம் சாதாரணப் பட்டவன் இல்ல. இந்த வீடு கட்ட பூஜை செஞ்சப்ப, தேங்கா உடைச்சோமா. தேங்காய நான் தான் உடைப்பேன்னு ஒரே அழுகை. தேங்கா சரியா உடையனுமே, அது தான சாஸ்திரம். அப்புறம் ஒரு வழியா சமாதானம் பண்ணி மேஸ்திரியும், அவனும் சேந்து தேங்கா உடைச்சாங்க. பூ விழுந்த தேங்கா, எவ்வளவு சந்தோசம் சிவசு அப்பா முகத்தில. எம் பிள்ள ராசிக்காரண்டா, அப்படின்னு தலைல தூக்கி வெச்சு ஆடினார். அப்பவும் விட்டானா! தேங்காத் தண்ணி தனக்குத்தான் வேணும்னு, மண்ணில தெளிக்கக் கூடாதுன்னு புரண்டு புரண்டு அழ ஆரம்பிச்சிட்டான். அவன் அழுதது எனக்கு இன்னும் கண்ணுக்குள்ளையே இருக்கு.

    யூ டூ டாட். வெரி இண்டெஸ்டிங். பாட்டி வேறென்ன ஸ்டோரி சொல்லுங்க பாட்டி. அதீத ஆர்வத்துடன் அனாமிகா.

    வெளிய தெரியுதே தென்னை மரம். அதில முதல்ல இருக்கே அது சிவசு வெச்சது. ரெண்டாவது மீரா வெச்சது. இரண்டு பேரும் போட்டி போட்டுட்டு தண்ணி ஊத்துவாங்க. சிவசு கீழே விழுந்த அவனோட பல் எல்லாத்தையும் அந்த மரத்துக்குக் கீழ தான் புதைச்சி வெச்சிருக்கான்.

    அய்யே சேம் சேம் பல் விழுந்தா அத டூத் பேரி கிட்டத் தான் குடுக்கணும். இது அர்ஜூன்.

    ஐ வாண்ணா டிக் தட் ப்ளேஸ். கமான் யார்மரத்தின் கீழே தோண்டி, பல்லை எடுத்து விடும் ஆர்வத்துடன் அனாமிகா வெளியே ஓடினாள்.

    எல்லாரும் அவளைத் தொடர்ந்து வெளியே வந்தனர்.

    அம்மா இது தான் உங்க தென்ன மரமா? லவ்லி. இது சோனு மீரா பெத்த வாண்டு.

    உங்க அம்மாவுக்கு தென்ன மரத்தை விட அதோ அந்த மாமரம் தான் ரொம்பப் பிடிக்கும் பாவாடைய வழிச்சுக் கட்டிட்டு ஏறுவா பாரு.. பசங்க தோத்தாங்க.. ஒரு நாள் அப்படித்தான் மாங்கா பறிக்க மரமேறி.. மரத்து மேல இருந்த பச்சோந்தியப் பாத்து பயந்து கீழ விழுந்தா. மோவாய்க்கட்டைல 4 தையல் போட்டோம். அதோட மரமேறுறதை நிறுத்திட்டா.

    மீரா அழகாய் சிரித்தாள். கீழே விழுந்த போது அணிந்திருந்த பாவாடை மேலேறி விட்டது. அருகில் விளையாடிக் கொண்டிருந்த அண்ணனின் தோழர்கள் வேறு� அப்போது அநியாயத்துக்கு வெட்கப்பட்டது. இப்போது நினைத்தால் கூட முகத்தில் சிவப்பைத் தந்தது.

    இந்த வேப்ப மரத்துக்குக் கீழ தான் சிவசு சைக்கிள் நிறுத்துவான். ஒரு நாளைப் போல, காக்கா வந்து அவன் சீட்டு மேலயே கழிஞ்சு வைக்கும். தினமும் காக்காவைத் திட்டிட்டுத்தான் சைக்கிள் எடுப்பான். காக்காக்கு சோறு வைக்காதேன்னு கலாட்டா பண்ணுவான்.

    இப்போது சிவசு முகம் விசகித்தது, கண்களில் லேசான கண்ணீர்.

    இந்த இடத்தில தான் மீராவும் எதித்த வீட்டு நிம்மியும் எப்பப் பாத்தாலும் கோடு வரைஞ்சு பாண்டி விளையாடுவாங்க. மீரா இடைக்கண்ணால பாத்துட்டே. ரைட்டா ராங்கான்னு அழுகுணி அட்டம் ஆடுவா.

    அம்மா அழுகுணியா. ஐய்யே ஷேம் ஆப் யூ மாம்..சோனு.

    இது என்ன இவ்வளவு பெரிய கண்டைனர். தண்ணியா பாட்டி இதுல? அர்ஜூன்.

    இது தண்ணித் தொட்டி கண்ணு. இதில தான் தண்ணி புடிச்சு நெறைச்சு வெப்போம். சிவசு குழந்தையா இருந்தப்ப இதில தான் டயர் கட்டி நீச்சல் அடிப்பான். புள்ள டாக்ரருக்குப் படிக்கும் போது விடிய விடிய படிப்பான். தூக்கம் வந்தா நடு ராத்திரி தலைல தண்ணி ஊத்திட்டு ஈரத் தலையோட படிப்பான் உள்ள டாக்டர் ஆகணும்னு ஒரு தீ இருக்கும்மா. இந்த பச்சத்தண்ணி தான் அந்த தீக்கு பெட்ரோல், அப்படீனு எனக்குப் புரியாத மாதிரி பேசுவான். இந்த புள்ள நல்லாயிருக்கணும்ன்னு எனக்குள்ளே ஓயாம ஒரு பிரார்த்தனை இருக்கும்.

    சிவசு அந்தக்கால நினைவுகளுக்கு போய் விட்டதை அவன் மௌனம் காட்டிக் குடுத்தது.

    ஆண்ட்டி இது துவைக்கிற கல் தான்� இதிலயா இன்னும் துவைக்கறீங்க. மெஷின் பாத்தனே ஆத்துல. சிவசுவின் மனைவி. அம்மு.

    ஆமாம்மா. மெசின்ல தான் போடுறேன் .குனிஞ்சு துவைக்க முடியரது இல்ல. இது மீராவோட கல்லு துக்கமோ சந்தோசமோ எது வந்தாலும் இந்தக் கல்லு மேல தான் உக்காந்துக்கும். ஒரு கையில டீ டம்ளரும். மறு கையில ஏதாவது புக்கும் வெச்சிட்டு மீரா உக்காந்திருக்கும். மீரான்னு சரியா தான் பேரு வெச்சிருக்காங்க உனக்கு. எப்பப் பாத்தாலும் தனியா புக்கும் கையுமா உக்காந்திட்டு சரி தம்புராக்கு பதிலாத் தான் டீ க்ளாசா? அப்படின்னு சிவசு கிண்டல் பண்ணுவான் அவள.

    ஆண்ட்டி இது என்ன பூவு பச்சைக் கலர்ல. நல்ல மணமா இருக்கே? பச்சைக் கலரில் இலை போலும் இருந்த பூவைப் பறித்த படி கேட்டாள் அம்மு.

    இது மனோரஞ்சிதம். சிவசுவுக்கு இந்த வாசம் ரொம்பப் பிடிக்கும். பக்கத்தில ஜாதி மல்லி, சாயந்திரம் விரிய ஆரம்பிக்கும், தொடுத்துத் தரேன்.

    மீராவுக்கு அப்ப நல்ல முடி. நெகு நெகுன்னு நாகப் பாம்பு மாதிரி சிக்கெடுத்து பின்னல் போடறதுக்குள்ள கை கடைஞ்சு போயிரும். ஜாதி மல்லி அவ பின்னலுக்குன்னே பூத்த மாதிரி இருக்கும்.

    தலை குளிக்கறதுன்னா அவ்வளவுதான் சீயக்காய் தேய்ச்சு குளிச்சு, காயவெச்சு... அப்படியே விரிச்சுப் போட்டுட்டு ஊஞ்சல்ல படுத்து தூங்கிடுவா. எந்திருக்கும் போது தல வலி வராம என்ன செய்யும். ஈரத் தலையோட படுக்காதேன்னா கேப்பாளா. சாம்பிராணி போட்டு முடிக்கும் வரை கூட பொறுமையா இருக்க மாட்டா. கண்ணு சொக்கி விழுவா. இப்பப்பாரு அத்தனை முடியயையும் கன்னா பின்னான்னு வெட்டி வெச்சிருக்கா முடி தானே பொண்ணுங்களுக்கு அழகுன்னு சொன்னா அவளுக்கு சுருக்குன்னு கோபம் வருது இப்ப பொண்ணுகள முடியாவும் முகமாவும் மட்டும் தான் பாக்கணுமான்னு கேக்கறா என்ன செய்ய அவ முடிய வெட்டி எறிஞ்ச மாதிரி என்னால இந்த ஞாபகங்களை வெட்டி எறிய முடிஞ்சா எப்பவோ நான் வீட்ட இடிக்க ஒத்துருப்பேன்.

    வீட்டுக்கு முன்னால் இருக்கே இந்த வராந்தா. இதில தான் உங்க தாத்தா கடைசியா படுத்திருந்தார் கண்ணுங்களா. ஸ்கூலுக்கு பொறப்புடும் போதே நெஞ்சில சுருக்குன்னு இருக்கு. இனிமே வாழைக்கா சமைக்காத அப்படின்னு சொன்னார். போகும் போது மீராவுக்கும், சிவசுவுக்கும் ஏதாவது வேணுமானு கேட்டார்.

    திரும்பி வரும்போது, மாலையும், கழுத்துமா தான் வந்தார். சிரிச்ச மாதிரியே உயிர் போயிருந்தது. மாரடைப்பு. கண்ண மூடி தூங்கிறாப்பில இருந்தார், சத்தம் போட்டா முழிச்சு திட்டுவார்ன்னு பயந்தேன். கத்தி அழக் கூட முடியல. இந்த வராண்டால தான் உக்காந்து பொழுதன்னைக்கும் எழுதுவார். பேப்பர் படிப்பார்...குயில் கத்துச்சின்னா பதிலுக்கு இவரும் கூட விசிலடிப்பார். அதுவும் இவருக்கு பதில் குடுக்கற மாதிரி திரும்பக் கூவும்.

    கோகிலம்மாவின் கண்களினின்றும் முத்துப் போல உருண்டு வந்த கண்ணீர்த் துளி சிவசு, மீரா, அம்முவின் உள்ளம் நனைத்து, உதிர்ந்து போனது.


    இப்ப என் பிள்ளைங்க நியாபகங்களோட தினமும் வாழ்ந்திட்டு இருக்கேன். இனி நீங்க போன பின்னால, என் பேரக் குழந்தைகள் விட்டுட்டுப் போன செருப்பும் அழுக்குத்துணியும் வீடு பூரா கேட்ட பேச்சுச் சத்தமும். சோனு வோட சிரிப்பும் உடைச்சுப் போட்ட சாமான்களும் பிள்ளைகளுக்கு நான் சொன்ன கதைகளும் பிள்ளைகள் என்னைக் கேட்ட கேள்விகளும் என்னை அடுத்த முறை நீங்க வர்ற வரை உயிரோட வைக்கும். என்னைப் பத்திக் கவலைப் பட ஒண்னுமில்லை.. ஞாபகங்களை எங்கிட்ட இருந்து யாரும் பிரிச்சுக் கூட்டிட்டுப் போக முடியாது.

    வெறும் காற்று வீசும் சத்தமும் குயில் கூவும் சத்தமும் மட்டும் அங்கே கேட்டது கொஞ்ச நேரம். கனத்த அமைதி. மௌனம் மனித மனங்களை புதுப்பித்துக் கொண்டிருந்தது.

    அனாமிகா வாய் திறந்தாள்.

    பாட்டி. அடுத்த முறை நான் வரும் போது பார்பி கேர்ள் மாதிரி நிறைய முடி வளத்துட்டு வர்றேன். எனக்குத் தலைபின்னி அந்த வொயிட் கலர் பூ வெச்சு விடுவீங்ளா..?



    (முற்றும்)
    Last edited by அமரன்; 17-03-2008 at 12:36 PM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    அப்பப்பா..!!
    படிச்சு.. கண்ணு கலங்குது..!!
    யவனிகா அககாவினுள் இப்படி ஒரு அனாசிய திறமை ஒளிஞ்சிட்டா இருந்தது????!!

    கதை மனதை வருடிவிட்டது..! இதற்கு மேல் எழுத என்னால் ஏனோ முடியவில்லை. குரல் கம்மி... தொண்டை அடைத்து வார்த்தை வரமாட்டீங்குது..!!

    எதார்த்தம்-மண் வாசம்..
    இவற்றை அழகாய் காட்டுவதில் யவனி அக்காவுக்கு நிகர் யவனி அக்காவே தான்.

    அசத்திட்டீங்க..!!

    பாராட்டுகள் அக்கா.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #3
    மட்டுறுத்தினர் பண்பட்டவர் மதி's Avatar
    Join Date
    10 Aug 2005
    Location
    சென்னை
    Posts
    8,263
    Post Thanks / Like
    iCash Credits
    77,744
    Downloads
    78
    Uploads
    2
    அக்கா.. என்ன சொல்றதுன்னே தெரியல... விதவிதமான உணர்ச்சிகள்.. சின்ன வயசில கிராமத்துக்கு போனது...இத்யாதி இத்யாதி...எல்லாம் ஞாபகத்துக்கு வருது. வேகமாகிவிட்ட வாழ்க்கையில் இம்மாதிரி நினைவுகள் தான் பல வலிகளுக்கு ஒத்தடமாயிருக்கும். அது போல கலாச்சார மாறுபாட்டையும் சரியா சொல்லியிருக்கீங்க... மொத்தத்தில்ல்ல்ல்ல்ல் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்..

    ஒரு இடத்தில் கோகிலம்மா பேர சொர்ணத்தம்மாள்னு எழுதியிருக்கீங்க.. மாத்திடுங்களேன்..

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    தலைமுறை இடைவெளி,தாய்பாசம்,நினவுகளின் மேலுள்ள நேசம்,உயிரற்ற பொருட்களின் மீதும் உயிராய் இருக்க வைக்கும் ஆழ்ந்த பிணைப்பு...ஆஹா....இதை ஒரு கதையென்று என்னால் சொல்ல முடியவில்லை.

    லா.ச.ரா வும்,தி.ஜானகிராமனும்,கரிச்சான்குஞ்சுவும் இப்படித்தான் வாசகர்களின் உணர்வுகளோடு விளையாடுவார்கள்.வாசித்துமுடித்ததும் அந்த பிரமையிலிருந்து வெளியில் வர கொஞ்ச நேரமாகும்.எனக்கு கொஞ்சம் அதிகமாகவே நேரமாகிவிட்டது. பதிவிட்ட அடுத்த நொடி படிக்க ஆரம்பித்தேன்.நிதானமாகப் படித்துவிட்டு அதைவிட நிதானமாக என் எண்ணங்களிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன்.

    கோகிலாம்மாவைப் போன்ற அம்மாக்கள் இப்போது எத்தனையோபேர் தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு மின்னஞ்சலிலும்,செல்லிடை பேசியிலும் பாசத்தை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

    வீடு என்பது ஜடப் பொருள் அல்ல என்பதை அதில் ஒட்டுணர்வோடு வாழ்ந்துபார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.ஒவ்வொரு இடமும் ஓராயிரம் நினைவுகளை கிளறும்.என்னற்ற கதைகளை மனதுக்கு மட்டும் கேட்கும் மொழியில் பேசும்.அதனோடு ஐக்கியமாகி வாழ்ந்தவர்கள் அதைவிட்டு பிரிந்துபோவதென்பது கிட்டத்தட்ட இயலவே இயலாத காரியம்.அந்த பிணைப்பை,பந்தத்தை இந்த கதையின் வரிகள் பூரணமாக வெளிப்படுத்தியிருக்கிறது.அதனாலேயே கதையின் கடைசி வரிகள் வலியுடன் விழுந்திருக்கிறது

    இப்ப என் பிள்ளைங்க நியாபகங்களோட தினமும் வாழ்ந்திட்டு இருக்கேன். இனி நீங்க போன பின்னால, என் பேரக் குழந்தைகள் விட்டுட்டுப் போன செருப்பும்அழுக்குத்துணியும்வீடு பூரா கேட்ட பேச்சுச் சத்தமும்.சோனு வோட சிரிப்பும்உடைச்சுப் போட்ட சாமான்களும்பிள்ளைகளுக்கு நான் சொன்ன கதைகளும்பிள்ளைகள் என்னைக் கேட்ட கேள்விகளும்என்னை அடுத்த முறை நீங்க வர்ற வரை உயிரோட வைக்கும். என்னைப் பத்திக் கவலைப் பட ஒண்னுமில்லை..ஞாபகங்களை எங்கிட்ட இருந்து யாரும் பிரிச்சுக் கூட்டிட்டுப் போக முடியாது.

    தேர்ந்த ஒரு எழுத்தாளரால் மட்டுமே இந்த வரிகளை எழுத முடியும்.

    உரையாடல்கள் அத்தனை இயல்பாக இருக்கிறது.ஒவ்வொரு பாத்திரப் படைப்பையும் அவர்களின் வார்த்தைகளிலேயே உருவாக்கியிருப்பது மிக அருமை.போன தலைமுறையிலிருந்து இன்றைய ஹை-டெக் இளைய தலைமுறை வரை அவர்களை அவர்களாவே கொஞ்சமும் செயற்கைத் தன்மையின்றி காட்டியிருப்பது மிகப் பெரிய சிறப்பம்சம்.

    மனம்நிறைந்த வாழ்த்துகள் தங்கையே.பெருமையாக இருக்கிறது.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    இளம் புயல் பண்பட்டவர் IDEALEYE's Avatar
    Join Date
    14 Nov 2007
    Location
    Island
    Posts
    235
    Post Thanks / Like
    iCash Credits
    8,958
    Downloads
    2
    Uploads
    0
    மனிதனுடைய அறிவு வளர்ச்சி, மனிதன் தான் வாழும் இடத்தை பூகோளக்கிராமம் என்ற நிலைக்கு கொண்டுவந்துள்ளது: இங்கு மொழி,கலாசாரம் என எல்லாமே கலப்பாகத்தான் கிடைக்கும்,
    யவனியின் கதை நடை அபாரம், அதிலும் அவர் எடுத்துக்கொண்டா கதைக்கருவை களைக்காமல் தத்ரூபமாக நகர்த்தியிருப்பது அவரது திரமையைக்காட்டுகின்றது
    வாழ்த்துக்கள் யவனி அக்கா...
    அன்புடன்
    ஐஐ
    மனிதம் வாழட்டும்

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by பூமகள் View Post
    அசத்திட்டீங்க..!!

    பாராட்டுகள் அக்கா.
    நன்றி தங்கையே...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by மதி View Post
    ஒரு இடத்தில் கோகிலம்மா பேர சொர்ணத்தம்மாள்னு எழுதியிருக்கீங்க.. மாத்திடுங்களேன்..
    மாற்றி விட்டேன் மதி.நன்றி.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  8. #8
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by சிவா.ஜி View Post
    மனம்நிறைந்த வாழ்த்துகள் தங்கையே.பெருமையாக இருக்கிறது.
    நன்றி அண்ணா...பேரப் பிள்ளகளின் பிஞ்சு விரல் ஸ்பரிசத்திற்காகக் காத்துக் கிடக்கும் பாட்டி,தாத்தாக்களுக்கும்...தங்களுடைய தேவதை மாயக் குச்சியால் தாத்தா பாட்டிகளின் உலகின் வண்ணத்தை, மகிழ்ச்சின் நிறமாக... தற்காலிக விடுமுறையில் மாற்றி விடும் பேரக் குழந்தைகளுக்கும் இந்தக் கதை அர்ப்பணம்.

    விடைபெறும் நேரம் பேரனின் கையை தன் கையிலிருந்து என் அம்மா, விடுவிக்கும் போது...மலர்ந்திருந்த மலர் ஒன்று தீயும் பொசுங்கும் வாசம் முகர்கிறேன்.

    என் பாட்டியிடம், வீட்டிலிருந்து விடை பெறும் போது,என்னிடம் என் பாட்டி சொன்ன அதே வாசகத்தை, ஏர்போர்டில் என் மகனிடம் என் அம்மா சொன்ன போது..நிஜமாகவே அந்த வேதனையிலும் வியந்து போனேன்.

    அது என்ன தெரியுமா... "பாட்டி திடிருன்னு செத்துப் போனா நீ வந்திருவ தானே? எப்படியாவது வந்திரு..."
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by IDEALEYE View Post
    கதைக்கருவை களைக்காமல் தத்ரூபமாக நகர்த்தியிருப்பது அவரது திரமையைக்காட்டுகின்றது
    வாழ்த்துக்கள் யவனி அக்கா...
    அன்புடன்
    ஐஐ
    என் திறமை ஒன்றுமில்லை தம்பி..பாசம் அதன் இருப்பை இட்டு கதையை நிரப்பி இருக்கிறது...அவ்வளவே..
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    வீடு என்பது வெறும் மணலாலும் கல்லாலும் கட்டப்பட்டதல்ல என்பதை அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். சில நேரங்களில் எப்போதாவது வருவதாலோ என்னவோ பிரியம் அதிகமாகிறதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும் அத்தகைய சந்திப்புகள்தான் மனதை வாழ்க்கையுடன் கட்டிப்போடும் மந்திரக்கயிறு! எதிர்பார்ப்பு இருக்கக்கூடாதென்றாலும் அதுதான் ஏமாற்றத்தை தவிர்க்க உதவும் கருவியாகவும் இருக்கிறது என்பது விந்தை.. மரங்களும் உங்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கின்றன என்பது எழுத்தில் புலனாகிறது. உங்கள் படைப்புகள் மெருகேறி வருகின்றன என்பதற்கு இந்தப் பதிவும் ஒரு எடுத்துக்காட்டு. பாராட்டுக்கள் யவனி(க்)கா!
    Last edited by பாரதி; 12-01-2008 at 11:30 PM.

  11. #11
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    பாராட்டுக்கள் யவனி(க்)கா!
    நன்றி தோழரே...உண்மையில் இந்தக் கதையை நான் எழுதியதில் முக்கியப் பங்கு வகிப்பது உங்களது "வீடு" பற்றிய அனுபவம் தான். அதற்கு பின்னூட்டம் எழுதுவதற்கு வேண்டி ஆரம்பித்தேன்...அது இந்தக்கதைக்குள் என்னை இழுத்து வந்து விட்டது. உங்களது "வீடு" க்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் உண்மையில்...
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    வழக்கம் போலவே... யவனியக்காவின் எளிய நடை. ஜாலியாக ஆரம்பித்து கண்ணீரில் முடிக்கும் காட்சிகள். வழக்கம் போலவே... இது போல எழுதவேண்டும் என்ற ஏக்கம் எனக்குள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக ஒரு ஆதங்கம். விருதுகள் பெறவேண்டிய இப்படைப்புக்கள் வெறுமனே தூங்குகின்றனவே என.....
    அன்புடன்...
    செல்வா

    பின்னூட்டங்களில் முன்னுரிமை, மன்றப் படைப்புகளுக்கே...!

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •