இணையம் மூலம் பண மோசடி : 12 பேர் கொண்ட கும்பல் பெங்களூரில் கைது
December 15th, 2007

பல்வேறு இணையதள குற்றங்களில் ஈடுபட்டு வந்த விருதுநகரைச் சேர்ந்த ஜோசப் என்பவர் தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவை பெங்களூர் சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் குழுவைச் சேர்ந்த மேலும் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஜோசப் தனது நண்பர்கள் உள்பட 15 பேருடன் சேர்ந்து இணையதளங்கள் மூலமாக, பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளுக்குள் புகுந்து பல லட்சம் பணத்தை சுருட்டியுள்ளார். மேலும் பெருமளவிலான தொகைக்கும் முறைகேடாக செல்போன்களுக்கு ரீசார்ஜ் செய்துள்ளனர்.

இவர்களின் மோசடி இந்த அக்டோபரில்தான் தெரிய வந்த்து. அனலாக் இன்போடெக் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த கார்ல் பிரகன்ஸா என்பவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.40,000 பணம், மும்பையில் உள்ள, மெல்பா ஜெரோலின் நாடார் என்பவரின் சிட்டி வங்கிக் கணக்கு ஒன்றுக்கு முறைகேடாக மாற்றப்பட்டிருப்பதாக பெங்களூர் சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இந்த விசாரணையில் ஜோசப்பின் குற்றம் வெளிப்பட்டது. இதேபோல கார்ல் பிரகன்ஸாவிடமிருந்து ரு. 1 லட்சத்து 27 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.

ஜோசப் இதுபோல 7 சைபர் குற்றச்செயல்களில் தொடர்புகொணடுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இன்டர்நெட் மையத்தைப் பயன்படுத்தி இந்த மோசடிச் செயல்களில ஈடுபட்டுள்ளார். இவரும், இவரது கூட்டாளிகளும் சேர்ந்து ரூ. 4 லட்சம் வரை மோசடி செய்திருப்பதாக தெரிகிறது.

விருதுநகரைச் சேர்ந்த ஜோசப் 1998ம் ஆண்டு பெங்களூருவிற்கு வந்தார். இங்குள்ள விஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலையில் சேர்ந்தார். தற்போது இந்தியா மார்க்கெட் ரிசர்ச் பீரோவில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

AOL/tamil