நன்றி ஓவியா,ஆதவா,சிவா.ஜி...
நன்றி ஓவியா,ஆதவா,சிவா.ஜி...
வெளியே சென்றேன்.
நாணா கோஷ்டி(சுப்புணி,பஞ்சு,கிட்டு,கிச்சா,பத்து,சாம்பு) போஸ்ட் மாஸ்டராத்து திண்ணையில் உட்கார்ந்து,போறவ,வரவா எல்லாத்தையும் வேடிக்கை பாத்துண்டிருந்தா.
அக்ரஹாரத்து மானத்த வாங்கறத்துக்குன்னே பொறந்ததுகள் ன்னு
பெரியவ முணுமுணுப்பா நாணாவைப் பார்த்து.
நான் மெதுவாக அவர்களிடம் சென்றேன்.
நாணா சிரிச்சுண்டேக் கேட்டான்"எங்கேடா கல்யாணி"
அதற்குள் எதித்தாத்து வச்சு,"என்டா நாணா நோக்கு வேற வேலையே இல்லையாடா" ன்னு கனகு மாமி பொண்ணு வாசல் தெளிக்க,படி இறங்கினாள்.
அசடு வழிய சிரித்தபடி"இல்லடி வச்சு" என்றான்.
நாணா இருந்தால் வச்சுவுக்கும் கோலம் மறந்து போய் தப்புத்தப்பாய்
வரும்.அழித்து,அழித்து போடுவாள்.
வச்சுவுக்கு கல்யாணம் நிச்சயமானதும்,நாணா கோண்டு மாமாவாத்துத் திண்ணைக்கு தன் இருபிடத்தை மாற்றிக் கொண்டான்.
எனக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரியும்,புரியாத மாதிரியுமிருந்தது.
மறுநாள் காலை.
ரேழியில்,மேஜை டிரையரில் குடைந்துக் கொண்டுயிருந்தேன்.
பழகிய கொலுசுச் சப்தம்.நிமிர்ந்தேன்.
கல்யாணி........
முடியினடியில் முடிச்சிட்டு ஈரத்தலையில்,காதோரம் ஒற்றை ரோஜா.
கன்னத்தின் மினுகினுப்பு,ஏதோ ஒரு புதுக் கவர்ச்சி கன்னத்தைப் பிடித்துக் கிள்ள வேண்டும் போல் தோணித்து.ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது.
அவளை இப்பொழுதுதான் பார்ப்பது போல் பாக்கத் தோணித்து.
"எப்படா வந்தே?"
நான் நேத்திக்கே வந்திட்டன்,மகராணிக்கு இப்பத்தான் சமயம் வாய்ச்சது....என்று இழுத்து பின்,
இந்தாடி,ருக்கு, நோக்கு கோல நோட்டுக் கொடுத்து விட்டிற்கா என்றேன்.
"மாமாவாத்துல எல்லொரும் சௌக்கியமாயிருக்காளா?"
இருக்கா,இருக்கா என்றேன்.
"நீ இல்லம நேக்கு ரொம்ப போரான்னா இருந்துச்சு" என்றாள்.
ஆமாண்டி நேக்குகூட அப்படித்தான் தோன்றது.நீ எங்காத்து பின்கட்டுல இருந்துடு என்றேன் சீரியஸ்யாக.
"அப்படியெல்லாம் எங்காத்துல விடமாட்டா"
சரிடா என்றவள் "அக்கா" என்றழைத்தபடியே உள்ளுக்குச் சென்றாள்.
ஊரில் விச்சு,ருக்கு,லல்லி,பாச்சு என்று அடித்த கொட்டமொல்லாம் அவளிடம் கத,கதையாய் சொல்லணும் என்றால்
அக்காவிடம் அவளுக்கு என்ன பேச்சும்,கொம்மாளமும்.
அக்காவும்,அவளும் சிரிக்கும் சப்தம் காதில் விழ,கோபம்,கோபமாக வந்தது.
சனியன் எப்படியாவது போகட்டும்,மூஞ்சியிலேயே இனி முழிக்கப்படாது.
வரேண்டா சீமாச்சு என்றவள் போயே போய்விட்டாள்.
பத்தாவது நல்லமார்க் எடுத்து +1 ப்ர்ஸ்ட் குருப்பில் சேர்ந்தேன்.
கல்யாணி 10 படித்தாள்.
இளம் வைலட் கலரில கண்ணை உறுத்தாத சிவப்பு பார்டர் பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு கொலுசு சப்திக்க மாமி என்று அழைத்த வண்ணம வந்தாள் கல்யாணி
கொலுவிற்கு அலங்காரித்த மின்விளக்குகள் கண்சிமிட்டி வெவ்வேற வண்ணங்களில் ஒளிவீசியது.
நெற்றியில் நெற்றி சுட்டி,காதில் லோலாக்கு,கழுத்தில் நெக்லஸ்,ஆரம்,லாங்க் செயின்,கையில் தங்க,கண்ணாடி வளையல்,இடுப்பில் சரம்,சரமாகத் தொங்கும் ஹிப் செயின் என சர்வலங்கார பூஷதையாக வந்து நின்றாள் கல்யாணி.
வீசிய ஒளியில் கல்யாணி ஜொலி ஜொலித்தாள்.
டமுக்கு டப்பா ஆயலோ,
டமுக்கு டப்பா ஆயலோ என்று பாடினேன்.
"பாட்டி இவனை பாருங்கோ பாட்டி"
"அவன் கிடக்கிறான்"
'பாட்டி ஆசிர்வாதம் பண்ணுங்கோ"என்றபடி காலில் விழுந்தாள்.
"ஷேமமா இருடி குழந்தே" "இந்த டிசைன் நெக்லஸ் நோக்கு நன்னாயிருக்குடி"என்றாள் பாட்டி.
'டி விசாலி நீயும் இவளுமா எல்லார் ஆத்துக்கும் போய் கொலுவுக்கு அழைச்சுண்டு,சுருக்க வந்துருங்கோ"இது அம்மா.
அக்காவும் எல்லாத்தையும் மாட்டிண்டு தயாரா இருந்தா.
கல்யாணியின் எழில் மனதை விட்டு விலகவே இல்லை.
அதே நேரம் எனது வட்டம் வெளியில் விரிந்தது.பெண் நண்பிகளும்
கிடைத்தனர்.ஆனால் கல்யாணி அவர்களை எல்லாம் மீறி மனதில.
நின்றாள்.
கல்யாணி என்னிடம் விலகியும்,விலகாமலும் இருந்தாள்.
"சீமாச்சு இந்த சம் எப்படிடா போடணும்?"
"இந்த படம் போட்டுக் கொடுடா"
"கட்டுரைப் போட்டிக்கு கட்டுரை எழுதிக் கொடுடா"
என்று எதாச்சும் வேலை வாங்குவாள்.
நானும் ஜீனி பூதம் மாதிரி செய்து தர தயராக இருந்தேன். குறும்பு,கும்மாளம் எல்லாம் போய் என் அப்பா மாதிரி மாறிவிட்டேன்.
கல்யாணியோ அக்காவோட ஈஷிண்டு சே என்னதான் பேசுவாளோ இந்த பொம்மனாட்டிகள்!!!
பாட்டி எனக்கு படிப்பு அதிகமாதால் இப்படி ஆயிட்டேன் என்று பாட்டி அங்கலாய்த்தாள்.
எப்படியோ சற்றே சிரமப்பட்டு +2ல் மார்க் எடுத்து,சென்னையில் எஞ்சினரிங் கல்லூரியில் அடித்து பிடித்து சீட் வாங்கியாகி விட்டது.
சீர்காழியிலிருந்து சென்னை வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற கவலையை விட கல்யாணியின் பிரிவுதான் கஷ்டப்படுத்தியது.
கிளம்பும் நாளன்று கூட கல்யாணி கண்கலங்க, குரல்கம்ம தனியாக என்னிடம் வந்து,"சீமாச்சு என்னையெல்லாம் நினைச்சுப்பாயடா"என்று
விம்மிய வண்ணம் கேட்டாள்.
"சீ அசடு உன்னை மறப்பன்னாடி"என்றேன் அழுகையை அடக்கியபடி.
"நேக்கு அழ வரதுடா"
என்று கூறியபடி தன் வீட்டிற்கு ஓடிவிட்டாள்.
வேறு வழியின்றி எல்லாரும் கஷ்டத்துடன் என்னை சென்னைக்கு
அனுப்பி வைத்தனர்.
"போய் சேர்ந்த்தும் கடிதம் போடு"
போட்டேன்.
"போன் பண்ணேன்டா"
பண்ணினேன்.
கல்யாணி வீட்டில் இருந்தால் அவளும் பேசுவாள்.
சென்னைப் பெண்களைப் பார்க்க முதலில் பயமாக இருந்தது.பிறகு பழகிவிட்டது.
கல்யாணி +2 படிக்கும் பொழுதே வரன் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்
என்று பாட்டி போனில் சொன்னாள்.
திருச்சிக்காரா,பிள்ளையாண்டான் நாக்பூரிலே வேலை,கல்யாணி பரிட்சை
எழுதியதும் நிச்சயம்.ஏதோ தூரத்துச் சொந்தம்,அவாளா வந்து கேட்கிறாள்.
இதுவும் பாட்டி தகவல்.
ஏதோ ஒரு வகையில் கல்யாணி வீட்டில் எல்லோரையும் வசியப் படுத்தி வைத்திருந்தாள்.
கல்யாணியின் திருமணப் பேச்சு நடைபெற்றதாலோ என்னவோ ஊருக்குப் போக விருப்பமிருக்கவில்லை.
"ஊருக்கு எப்படா வருவ" பாட்டி கேட்டதற்கு,"போ பாட்டி இது என்ன ஸ்கூலா இஷ்டத்திற்கு வர,பாடம் ரொம்ப இருக்கு பாட்டி"என்றேன்.
செமஸ்டர் முடியவும் கல்யாணிக்கு நிச்சியம் நடக்கவும் சரியாக இருந்தது.15 நாளில் கல்யாணம்.ஏதோ சாக்கு சொல்லி ஹாஸ்டலியே
தங்கி விட்டேன்.
பாட்டியும் போனில் வருந்தி அழைத்தாள்.
"நம்மாத்து பொண்ணாட்டம் வளர்ந்தவள் கட்டாயம் வந்து விடு"
"இல்ல பாட்டி,நோக்கு சொன்னா புரியாது.ரிக்கார்ட்ஸ் சம்மிட் பண்ணனும்"
கல்யாணம் முடிந்து கல்யாணி புக்காத்துக்குக் கிளம்பும்போது "மாமி சீமாச்சு வரவேயில்லை அவன்கிட்டே பேசவே மாட்டேன்,வராமலே
ஏமாத்திட்டான்'' என்று கண் கலங்க கூறிவிட்டுச் சென்றளாம்.
அக்கா விசாலிக்கும் வரன் பார்த்தார்கள்.நாக்பூரில் கல்யாணி இருந்ததால் கல்யாணத்திற்கு வரவில்லை.
அவளும்,அக்காவும் கடிதத் தொடர்பு,போன் தொடர்பு,ஈ-மெயில் தொடர்பு என எல்லாத் தொடர்பும் வைத்திருந்தனர்.
பிள்ளையாண்டிருக்கா,சீமந்தம்,ஆண்பிள்ளை.
எப்படியோ அவளைப் பற்றி தகவல் காதில் விழுந்து விடும்.
ஏனோ கல்யாணியை பார்ப்பதை கூடியமட்டும் தவிர்த்தே வந்தேன்.
எது என்னைத் தடுத்தது என்று இதுவரை புரியாத புதிராகவே இருந்து
வருகிறது.
கால ஓட்டத்தில் 5 வருடம் ஓடி "காம்பஸ் இண்டர்வ்யூ"வில் செலக்ட்
ஆகி வேலையும் சென்னையில் செட்டிலாகி விட்டேன்.
பிறகு கல்புவின் வருகை.கல்புவும் மனதைக் கொள்ளை கொண்டாள்,
மென்மையான அணுகுமுறையால்.
இதோ கல்யாண மண்டப முகப்பு.மாலை நேரம்.
அன்று கண்ட கல்யாணி போலவே சர்வ அலங்கார பூஷதையாக வாயிலில் நின்றிருந்தாள்.
எங்களைக் கண்டதும் வாடா என்று வரவேற்றவள்,
"ஏன்னா சித்த இங்க வரேளா,எங்க சீமாச்ச்சு இவன் தான்"என்று
தன் கணவனுக்கு என்னை அறிமுகப்படுத்தினாள்.
"ஒ,ஐ ஸீ,ஐயாம் சிவராமன்"என்று கைக் குலுக்கினார்.
'ஐ நோ" என்றேன் நான் கைக் குலுக்கியபடியே.
"எங்காத்துல ஓரே சீமாச்சு புராணம் தான் போங்கோ.உங்க ஸ்மரணை
இல்லாத கல்யாணிக்கு பொழுது விடியாது"என்றார் சிவராமன் விகல்பம் இல்லாமல்.
எனக்குள் இருந்த மெல்லிய திரை அகன்றது போல உணர்ந்தேன்.
"கல்யாணி இது கல்பு"
புன்னகையோடு இருந்த கல்புவை கல்யாணி இழுத்து அணைத்து
நெற்றியில் முத்தமிட்டாள்.
இப்பொழுது கல்பு விடுங்கோ யாரன பாத்துட போற என்று கூறவில்லை.
end of the platonic love,
touch with two pair of lips.
இருவரின் இதழ்கள் முத்தமிட்டுக் கொள்வதோடு platonic love முடிவடைகிறது என்னும் ஒரு வழக்குச் சொல் இருக்கிறது.(மேற்கத்தியது)
இக்கதையிலும் ஒரு முத்தம் platonic loveவை முடிவுக்குக் கொண்டு
வருகின்றது.
இக்கதையில் வரும் மெல்லிய platonic loveவை உணர முடிந்தால் நான் எழுதிய கதைக்கு பாஸ் மார்க்.
ஆதவாவின் விருப்பத்திற்காக முழுக்கதையும் போட்டு விட்டேன்..
ஒரே நாளில் அனைத்து பாகத்தையும் போட்டு முடித்து விட்டீர்கள் ஒரே மூச்சில் நானும் படித்து விட்டேன். இதுவரை நான் படித்த கதையிலேயே இது வித்தியாசமாக இருந்தது. ஆனால் படு வேகமாக நகர்ந்ததாக ஒரு பீல்ங். ஐயிர் வீட்டு பாசையில் நான் படித்த முதல் கதை என்றே சொல்லலாம். அமரர் கல்கியின் அலைஓசை என்ற கதையில் கூட ஐயிர் குடும்பம் தான் வரும். ஆனால் அது இந்த அளவுக்கு பாசை கஸ்டமாக இருக்கவில்லை. உங்கள் கதையில் எனக்கு சற்றே பாசை தடுமாற்றம் ஏற்பட்டது.
கதையின் கரு நன்றாகவே புரிந்தது. ஒரு இளம் வயது காதல் மனதில் உனரபட்டு ஆனால் வெளிகாட்டாமெலே திசை மாறி கடமையை நோக்கி சென்று விட்டது.
இது எனக்கு புதிய வார்த்தை புரியவில்லை விக்கிபிடியாவில் பார்த்தேன், ஓரளவுக்கு தான் புரிந்தது, இன்னும் அதை பற்றி நிதானமாக படிக்க ஆசை வந்துவிட்டது. பிளாடானிக் லவ் விளக்கம் முழுமையாக புரியாவிட்டாலும் உங்கள் கதை மூலம் அதை உனர முடிந்தது. பாராட்டுகள்
நன்றி வாத்தியார்..
ஐயர் பாஷையில் கடினமான வார்த்தைகளை நான் தவிர்த்தே இருக்கின்றேன்.
இருப்பினும் புரியாத வார்த்தைகளை கூறுங்கள் அர்த்தம் தருகிறேன்.
நேக்கு-எனக்கு
நோக்கு-உனக்கு...
என் விருப்பப் படியே முழுக்கதையும் போட்டமைக்கு நன்றி மேடம்.
கதை - விமர்சனம் பண்ணூமளவுக்கு எனக்குத் திறமை வளரவில்லை. இருப்பினும்,
கதையோடு நகர்ந்த அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. அதற்கு ஐயர் பாஷை மட்டுமே காரணம்... வழங்கப்பட்ட பெயர்கள் கூட ஏதேனும் அர்த்தத்திலிருக்குமோ என்றே யோசித்து சென்றேன்... கதையின் வேகம் படு ஸ்பீடு.
(ஈஷிண்டு - ஒட்டிக் கொண்டு???)
கதையில் சின்னதாய் என் வாழ்வுப் பகுதியும் இருக்கிறது. கடமைக்காக காதலைத் தியாகம் செய்யும் எத்தனையோ பேரோடு.... நானும். கல்யாணியைப் போல ரோசா... சீமாச்சுவைப் போல ஆதவன்.
அவளையே மீண்டும் பார்க்கும் வாய்ப்பு.?? எனக்கு கிட்டவில்லை.. சீமாச்சுவுக்குக் கிட்டியதுபோல. அப்படியென்றால் அவன் மனதில் ஏதுமே இல்லையா?
அவன் மனைவியின் ஆக்ரமிப்பு காரணமாக இருக்கலாம். இருவரின் சந்திப்பிலும் சிறு இழையாவது காதல் நுழைந்திருக்காதா?
நீங்கள் எழுதிய முதல் பகுதி கதை, நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதிய கவிதை..... அதே தேநீர், அதே கல்யாணி,,, அதே சீமாச்சு, அதே அதே... எல்லாம் அதே...
மெல்லிய காதல் !!! உணரமுடிகிறது..... ஏற்கனவே உணர்ந்ததாலோ என்னவோ??
கதையின் இயல்பு, யதார்த்தம்... அழகு..
மேலும் தொடருங்கள் அம்மா.
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
அய்யர்,அய்யங்கார் பிரிவுகளில் இவ்வாறாகவே நிக் நேம் சூட்டி அழைப்பார்கள்.உண்மையில் வேறு பெயர்கள் இருக்கும்.
கல்பு-கற்பகம்.வச்சு-வச்லா,லல்லி-லலிதா என்பது போன்று.
வட்டார வழக்குகளில் எழுதினாலும் இப்பிரச்னை இருக்குமே ஆதவா...
மலையாளம்,தெலுங்கு பேசும் கதை மாந்தர் என்றாலும்
இவ்வனுபவம் ஏற்படுமே ஆதவா..கதையோடு நகர்ந்த அனுபவம் எனக்கு ஏற்படவில்லை. அதற்கு ஐயர் பாஷை மட்டுமே காரணம்...
அப்படி என்றால் அம்மாதிரியான கதைகள் இடக்கூடாதா?
பரந்துபட்ட படிக்கும் பழக்கம் இக்குறையை களைந்து விடும் ஆதவா..
ஆனால் இப்பொழுது உள்ள சூழலில் படிக்கும் பழக்கம் அருகி விட்டது.
பணம் சார் விஷயமே நம்மை இயக்குவதால் வரும் நிலை இது.
எழுத்தாளர்களுக்குத் தேவையான ஒன்று உன்னிப்பாக கவனிக்கும் தன்மை.
அத்துடன் கிரகித்தல்.அதாவது எதையும் உள்வாங்குதல்.இப்பொழுது பாணியில் சொல்வதென்றால் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும்.
எனக்கே இப்பொழுது தோன்றுகிறது.இலக்கியம்,இலக்கணம் படித்து என்ன
ஆகப்போகிறது,கணினி சார் வளர்ச்சியின் முன் இவ்விஷயங்கள் அடிப்பட்டு
போகிறதே என்று.
எழுதுவதின் ரகசியம் இதுவும் தான் ஆதவா..கதையின் வேகம் படு ஸ்பீடு.
நன்றி ஆதவா...கொங்கு தமிழிலும் கொஞ்சி விளையாடலாமென்று இருக்கின்றேன்...யோசிக்க வைக்கின்றாயே ஆதவா....மெல்லிய காதல் !!! உணரமுடிகிறது..... ஏற்கனவே உணர்ந்ததாலோ என்னவோ??
கதையின் இயல்பு, யதார்த்தம்... அழகு..
மேலும் தொடருங்கள் அம்மா.
Last edited by jpl; 08-12-2007 at 05:04 PM.
சே சே! நீங்கள் சொல்வது தவறூ... எனக்க்கு கதைகளைப் படிக்கும்போது நிதானம் தேவை.. (நேற்றே பணிச்சுமை...) அதனால் காரணமாக இருக்கலாம்.. இருந்தாலும் எனக்கு அனுபவமின்மை மிக முக்கிய காரணம்.... நண்பர்கள் எல்லாருக்கும் இந்தக் கதை நன்றாக ஒட்டியிருக்கும்... அதோடு, எதையும் மறைக்காமல் சொல்லும் பழக்கம் எனக்கு (இல்லையென்றால் மறைமுகமாக சொல்லும்பழக்கம்)
பெயர்களை கவனிக்காதது என் குற்றம். வித்தியாசமாக இருப்பதால் என்று நினைக்கிறேன்... என் கதை படிக்கும் திறனில் கோளாறு..
நிச்சயம் அடுத்த உங்கள் கதை கோவைத் தமிழா? (நம்ம ஊர் பாசை) படிக்க ஆவலாக இருக்கிறேன்....
இயற்கையின் குழந்தைகள் நாம்; நமது குழந்தைகள் இயற்கை!
There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)
Bookmarks