Page 1 of 5 1 2 3 4 5 LastLast
Results 1 to 12 of 49

Thread: நிலமெல்லாம் இரத்தம்

                  
   
   
  1. #1
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் இரத்தம்

    1] அரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும்


    ஓர் அரசியல் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்துகொள்வது வியப்பல்ல. உலக நாடுகளெல்லாம் இரங்கல் தெரிவிப்பது புதிதல்ல. ஆனால் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட அத்தனை பேரும் இனி தாம் அநாதைகளாகிவிட்டதாகக் கருதி, விம்மியழுதது வியப்பு. இரங்கல் தெரிவித்த நாடுகளெல்லாம் உள்ளார்ந்த துக்கத்தை வடிக்கச் சொற்கள் போதாமல் என்னென்னவோ சொல்லிப் புலம்பியது வியப்பு. படித்தவர்கள், பாமரர்கள், அறிவுஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் இன்னும் சொல்லலாம். ஒட்டுமொத்த மானுடகுலமே ஒரு தலைவரின் மரணச்செய்தியால் நிலைகுலைந்து போனது உண்மை.

    இது வேறெந்தத் தலைவரின் மரணத்தின்போதும் இதற்குமுன் நடந்திராதது. வருத்தம் இருக்கும். துக்கம் இருக்கும். வாயடைத்துப் போகலாம். "அப்பா, செத்தானே" என்று சந்தோஷம் கூடச் சிலருக்குக் கொப்பளிக்கும். ஆனால் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சில நிமிடங்களாவது செயலற்றுச் சமைந்து நின்றதில்லை. யாசர் அராஃபத்தின் மரணத்தால் நிம்மதிப் பெருமூச்சு விடக்கூடிய இஸ்ரேலியத் தலைவர்கள் கூட, நவம்பர் 11, 2004 அன்று ரமல்லா நகரில் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காகக் குழுமிய கூட்டத்தின் கேவல் ஒலியில், சற்றே அசந்துதான் போனார்கள். எந்தத் தருணத்திலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத ராணுவ வீரர்கள் அன்று அழுதபடியே அணிவகுத்துச் சென்றார்கள். இறுதிச் சடங்குகளைப் படமெடுத்துக் கொண்டிருந்த பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிச் செய்தியாளர்களும் கண்கலங்கி, ரகசியமாகத் துடைத்துக்கொண்டதைத் தொலைக்காட்சியில் நாம் பார்த்தோம்.

    பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக்கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச் சுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்தபிறகும் அடிமை வாழ்வைத்தொடரும் பாலஸ்தீனில் அப்படி என்னதான் பிரச்னை என்று அறிய விரும்புவோருக்கும் இது ஒரு சந்தர்ப்பம்.

    காலம் இரக்கமற்றது. ஒரு சரியான தலைவன் இல்லாத காரணத்தினாலேயே சொந்தநாட்டில் அகதிகளாக லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்களை அது ஐம்பதாண்டுகளுக்கு மேலாக வறுத்தெடுத்துவிட்டது. பிறகு, அராஃபத் என்றொரு தலைவனைக் கொடுத்தது. இன்னொரு ஐம்பதாண்டு காலத்துக்கு, அவர் இடைவிடாத போராட்டங்களை நடத்திவந்தார். முதலில் ஆயுதப்போராட்டம். பிறகு, அமைதிப் போராட்டம். சுதந்திர சூரிய வெளிச்சம் அம்மக்களின்மீது இன்னும் விழவில்லை. அராஃபத்தால் சிறு மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றிவைக்க முடிந்தது. இப்போது அவரது அத்தியாயமும் முடிந்துவிட்டது. மீண்டும் பாலஸ்தீனின் கழுத்துக்கு மேலே கேள்விக்குறியாக அந்தப் பழைய கத்தி தொங்கத் தொடங்கிவிட்டது. நூற்றாண்டுகாலக் கத்தி, இன்னும் கூர்மழுங்காத கத்தி.

    அதன் கூர்மை மழுங்கிவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலுக்கு கவனம் அதிகம். இஸ்ரேல் அந்த விஷயத்தில் கவனமாக இருப்பதைக் கண்காணிப்பதில் அமெரிக்காவுக்கு ஆர்வம் அதிகம். அமெரிக்காவின் அந்த ஆர்வத்துக்கு உடன்படுவதில் பிரிட்டனுக்கு விருப்பம் அதிகம். இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரிட்டனும் எடுக்கும் நிலைப்பாட்டை, இந்த ஒரு விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் ஈடுபாடு அதிகம்.

    எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு மண்ணில், எண்ணெயே இல்லாத ஒருபகுதி உண்டென்றால் அது பாலஸ்தீன்தான். அங்கே எண்ணெய் இல்லாதது இன்று ஒரு பொருட்டே இல்லை. முதலில், பாலஸ்தீனே இப்போது இல்லை என்பதுதான் விஷயம்.

    பாலஸ்தீன் என்றொரு பிரதேசத்தை இந்தியா போன்ற சில நாடுகள் இன்று அங்கீகரித்து, தூதரக உறவுகள் வைத்துக்கொண்டிருந்தாலும் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனை இன்னும் அங்கீகரிக்கவில்லை. புரியும்படி சொல்லுவதென்றால், உலக வரைபடத்தில் இன்று பாலஸ்தீன் என்றொரு சுதந்திர தேசத்தைப் பார்க்க முடியாது. லெபனான், சிரியா, ஜோர்டன், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய தேசங்கள் சுற்றி நின்று கும்மியடிக்க, நடுவே ஒரு சிறு எலும்புத்துண்டு மாதிரி இருக்கும் பிரதேசத்தில் புள்ளிவைத்து, எழுதக்கூட இடமில்லாமல் சற்றுத்தள்ளி இஸ்ரேல் என்று குறித்திருப்பார்கள். அந்தச் சிறிய புள்ளியை உற்றுப்பார்த்தால் அதற்குள் இன்னும் இரண்டு சிறிய புள்ளிகள் தெரியும். ஒன்றில் ஜெருசலேம் (Jerusalem) என்றும் இன்னொன்றில் காஸா (Gaza) என்றும் எறும்பு எழுத்தில் எழுதியிருக்கும்.

    எங்கே பாலஸ்தீன்?
    அதுதான் கேள்வி. அதுதான் பிரச்னை. உண்மையில் "பாலஸ்தீன்" என்பது இன்று வரையிலும் ஒரு கோரிக்கை மட்டுமே. ஒரு தனிநாட்டுக்கான கோரிக்கை. என்னதான் 1988-லேயே அராஃபத், சுதந்திர பாலஸ்தீன் பிரகடனத்தை அறிவித்துவிட்டாலும், 1993-ல் இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தாலும், அமைதிக்கான நோபல் பரிசை இஸ்ரேலியப் பிரதமர் யிட்ஸாக் ராபினுடன் (Yitzhak Rabin) அவர் பகிர்ந்துகொண்டிருந்தாலும், 1996-ல் அங்கே ஒரு பொதுத்தேர்தலே நடந்து, அராஃபத் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாலஸ்தீனிய அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டாலும், ஒரு குட்டி நாடாளுமன்றம் அங்கே செயல்பட்டாலும் பாலஸ்தீன் ஒரு சுதந்திர தேசம் இல்லை. இன்றுவரையிலும் இல்லை. இல்லாவிட்டால் எப்படி அவரை இஸ்ரேல் அரசு வீட்டுச் சிறையில் மாதக்கணக்கில் வைத்திருக்க முடியும்? ஒரு சுதந்திர தேசத்தின் அதிபரை, அவரது சொந்த மண்ணில், சொந்த வீட்டில் இன்னொரு தேசம் சிறைவைப்பது என்பதைக் கதைகளில் கூடப் படிக்க முடியாதல்லவா? திரைப்படங்களில் கூடப் பார்க்க முடியாதல்லவா?

    இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சரித்திர மோசடி என்றால் அது இஸ்ரேல், பாலஸ்தீனுக்கு இழைத்ததுதான். இதில் சந்தேகமே இல்லை. கற்பனைக்கு அப்பாற்பட்ட தீவிரவாதச் செயல்கள் அங்கே நடந்தன. கொத்துக்கொத்தாகக் கொன்று குவித்தார்கள். இடித்த கட்டடங்கள், உடைத்த சாலைகள், அடைத்த கதவுகளுக்கு அளவே இல்லை. குழந்தைகள், ஆண்கள், பெண்கள் பாகுபாடே கிடையாது. "கொல், கொல், கொல்" என்னும் சொல் மட்டுமே தாரக மந்திரமாக இருந்தது.

    அங்கே பொருளாதாரம் உயரவில்லை. போராட்டங்கள் மிகுந்தன. கல்வி வளரவில்லை. கலவரங்கள் மிகுந்தன. அடியில் குண்டு வைத்துவிட்டே அமைதி குறித்துப் பேசினார்கள். அரபு மண்ணின் சவலைக் குழந்தையான பாலஸ்தீன் என்பது இறுதிவரை ஒரு கனவுக்குழந்தையாகவே இருந்துவிடுமோ என்கிற அச்சம் இன்று உலக நாடுகள் அனைத்துக்கும் எழுந்திருக்கிறது. யாசர் அராஃபத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், "இனி அங்கே அமைதிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்று பேசியதன் உள்ளர்த்தம் புரிந்த அனைவருமே நிலைகுலைந்து போனார்கள்.

    அராஃபத் இல்லாத பாலஸ்தீனியர்களின் வாழ்வில் அமைதி என்பது இல்லை என்பது, சற்றே விவரமறிந்தவர்களுக்குத் தெரியும். ஏனென்றால், கடந்த நூறு வருடங்களில் பாலஸ்தீன் கண்ட ஒரே தலைவர் அராஃபத்தான். இன்னொரு பெயரை யோசித்துச் சொல்ல முடியுமா யாராலாவது? இப்போது இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றிருக்கும் ராவி ஃபட்டோவின் (Rawhi Fattouh) பெயரையோ, பிரதமர் அகமது கரியின் (ỆAhmed Qurie) பெயரையோ இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறோமா நாம்?

    அதுதான் பிரச்னை. பாலஸ்தீன் ஒரு தலைவனற்ற தேசமாகப் பிறந்து, வளர்ந்து, நடுவில் ஒரு தலைவரைப் பெற்று, இப்போது மீண்டும் தலைவனற்ற தேசமாகியிருக்கிறது. மீண்டும் அங்கே கோரத்தாண்டவமாட நாள் பார்த்துக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்.

    யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் இருக்கும். 1948-ம் வருடம் வரை இஸ்ரேல் என்றொரு தேசம் கிடையாது. அது, யூதர்களின் மனத்தில்தான் அதுநாள்வரை கருவாக வளர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒருநாள் பிரிட்டிஷ்காரர்கள் பாலஸ்தீனைக் கூறுபோட்டார்கள். அவர்கள்தாம் அப்போது அந்தப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தவர்கள். ஒரு கூறுக்கு இஸ்ரேல் என்று பெயரிட்டார்கள். அது யூதர்களின் தேசமானது. இன்னொரு கூறு பாலஸ்தீனிய அரேபியர்களின் இடமாகவே தொடர்ந்து இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் நடந்தது வேறு.

    இஸ்ரேலை யூதர்கள் ஸ்தாபித்ததை விரும்பாத சில அரேபிய தேசங்கள் (எகிப்து, ஜோர்டன், சிரியா, லெபனான், ஈராக்) தலைவர்களற்ற பாலஸ்தீனியப் போராளிகளுடன் இணைந்து இஸ்ரேலை எதிர்த்தன. 1948-ம் ஆண்டு நடைபெற்ற இந்த முதல் யுத்தத்தின் இறுதியில் இஸ்ரேல் ஒவ்வொரு நாட்டுடனும் ஓர் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டு, போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது. அந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஜோர்டன் படை முன்னேறி வந்த மேற்குக்கரை (West Bank)யின் பெரும்பகுதி அந்நாட்டுக்கே சொந்தம் என்றானது. எகிப்துப் படைகள் நிலைகொண்ட காஸா பகுதி, எகிப்தின் சொந்தமானது. கூறுபோட்ட பிரிட்டன், தன்வேலை அதோடு முடிந்ததாகச் சொல்லி விலகிக்கொண்டது. பாலஸ்தீனிய அராபியர்கள் வேறுவழியின்றி, தனியே போராட்டத்தில் குதித்தார்கள். ஐம்பதாண்டு காலத்துக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் அந்தப் போராட்டத்தில் அவர்கள் எத்தனையோ வீழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், அராஃபத்தின் மறைவைக் காட்டிலும் ஒரு பெரிய வீழ்ச்சி அங்கே இதுகாறும் ஏற்பட்டதில்லை.

    இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் சுருக்கத்தை நான்கு வரியில் சொல்லுவதென்றால், அது மேலே உள்ளதுதான். ஆனால் இது நான்கு வரிகளில் முடிகிற விஷயம் இல்லை. நாலாயிரம் வருட சரித்திரச் சிக்கல்களை உள்ளடக்கியது.

    எத்தனையோ நூற்றாண்டுகளாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊர் ஊராகத் தப்பியோடிக் கொண்டிருந்தவர்கள் யூதர்கள். இதிகாச காலங்களில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். புராண காலங்களில் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார்கள். சரித்திர காலம் வந்தபோதும் வாழவழியில்லாமல்தான் ஓடிக்கொண்டிருந்தார்கள். பின்னால் நவீன உலகம் உருவான பிறகும் அவர்களது ஓட்டம் ஓயவில்லை. சொந்தமாக ஒரு துண்டு நிலம் இல்லாமல், எல்லா தேசங்களிலிருந்தும் அடித்துத் துரத்தப்பட்டவர்கள் அவர்கள். ஜெர்மனியில் ஹிட்லரால் யூதகுலத்துக்கு நேர்ந்த கொடுமைகள் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டவை. ரத்தக்கறை படிந்த அந்தச் சரித்திரமெல்லாம் இன்னமும்கூட உலராமல் அதே ஈரத்துடன்தான் இருக்கிறது. காலம் காலமாக வதைபட்டே மடிந்தவர்கள், 1948-ல்தான் இஸ்ரேல் என்றொரு தேசத்தைத் தமக்காக உருவாக்கிக்கொண்டு அதில் வந்து வாழ ஆரம்பித்தார்கள். வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமில்லாது போவதன் முழு வலியும் அறிந்தவர்கள், எப்படி பாலஸ்தீனிய அராபியர்களை அதே அவதிக்கு உள்ளாக்கினார்கள்? பழிவாங்குவதென்றாலும் விரட்டியவர்களையல்லவா பழிவாங்கவேண்டும்? விரட்டியவர்களுடனேயே சேர்ந்து, வாழ இடம்கொடுத்தவர்களையா பழிவாங்குவார்கள்? இஸ்ரேல் ஏன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும்?

    தொட்டால் அல்ல முகர்ந்து பார்த்தாலே கூடப் பற்றிக்கொள்ளக்கூடிய மிகத்தீவிரமான பிரச்னையின் மையப்புள்ளி இது. ஏனெனில் இதில் அரசியல் மட்டுமல்ல; மதமும் கலந்திருக்கிறது. மதமும் அரசியலும் இரண்டறக் கலந்த இடத்தில் பற்றிக்கொள்ள பெட்ரோல் இருந்துதான் ஆகவேண்டுமென்று அவசியமா என்ன? இருபத்தோறாம் நூற்றாண்டில் மிகப்பெரிய சிக்கல்களை உலகுக்குத் தரப்போகிற இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையின் வேர்களை முதலில் ஆராயலாம். விழுதுகளிலும் கிளைகளிலும் பரவியிருக்கும் விஷத்தின் வீரியம் அப்போதுதான் புரியும்.

    தொடரும்...
    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 25 நவம்பர், 2004

  2. #2
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    நீங்கள் மீள்பதித்த கட்டுரையின் மூலம் பாலஸ்தீன் பற்றிய பெரும்பாலான விசயங்களை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. தேவையான கட்டுரை. சிரமம் பாராது தொடருங்கள் நண்பரே....!
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  3. #3
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    நண்பரே.. அறியாத சில விசயங்களை அறிந்த திருப்தி இந்த கட்டுரையை படித்த எனக்கு... உலகம் முழுதும் இதுபோன்ற ஆதிக்க தாக்குதல் நடந்தாலும் பாலஸ்தீன பிரச்சனை எல்லாவற்றையும் விட சற்று கனமானதாகத்தான் தெரிகிறது... இன்னும் முழுமையாக அறிய ஆவல்.. அண்ணன் ஜெயஸ்தா சொன்னதுபோல் சிரம் பாராமல் தொடர்ந்து கொடுக்குமாறு வேண்டிகொள்கிறேன்..தங்களிடம்..!மிக்க நன்றி நண்பரே..!
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  4. #4
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் ரத்தம் பாகம் 2

    ஆப்ரஹாம் முதல்

    அந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன்? அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார்.

    ஆனால் அவர் மனைவிக்கு மட்டும் ஒரு யோசனை. ஒருவேளை பிரச்னை தன்னிடம்தான் இருக்குமோ? தன்பொருட்டுத் தன் கணவர் எதற்காக போகிற காலத்தில் வருத்தத்துடன் போகவேண்டும்? தானே இன்னொரு திருமணம் செய்துவைத்துவிட்டால் என்ன என்று நினைத்தான்.

    எண்பத்தைந்தெல்லாம் அப்போது ஒரு வயதே அல்ல. ஆகவே அவர் துணிந்து தன் வேலைக்காரியைத் தன் கணவருக்கு இரண்டாந்தாரமாகத் திருமணம் செய்துவைத்தார். சொல்லிவைத்த மாதிரி அந்தப் பெண் உடனே கர்ப்பம் தரித்துவிட்டாள்.

    அதுவரைக்கும், தன் கணவன் வாரிசில்லாமல் போய்விடக்கூடாதே என்று மட்டுமே நினைத்து வந்த அந்தப் பெண்மணிக்கு, தன் வேலைக்காரி கர்ப்பமானது தெரிந்தது முதல், துக்கமும் பொறாமையும் பொங்கியெழ ஆரம்பித்துவிட்டது. அவளைப் பற்றி அடிக்கடி தன் கணவரிடம் குறை கூற ஆரம்பித்தாள்.

    பெரியவருக்கு தன் முதல் மனைவியின் மனநிலை புரிந்தது. அவரால் என்ன செய்துவிடமுடியும்? இதோபார், உன் இஷ்டம். உன் சௌகரியம். அவளை இங்கே வைத்துக்கொள்ள இஷ்டமில்லையென்றால் வெளியே அனுப்பிவிடு. நீ பார்த்துக் கொடுத்த பெண்தான் அவள். உனக்காகத்தான் அவளை மணந்தேன். உனக்குப் பிடிக்கவில்லையென்றால் அனுப்பிவிடுவதில் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார்.

    இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அந்த வேலைக்காரப் பெண்ணுக்கு எத்தனை சங்கடமாக இருந்திருக்கும்! ச்சே என்று வெறுத்தே போனாள். சொல்லிக் கொள்ளாமல் அந்தக் கணமே வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டாள். ஆனால் வழியில் யாரோ நல்ல புத்தி சொல்லி அவளைத் திரும்ப வீட்டுக்குப் போகும்படி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

    பெரியவருக்கு எண்பத்தாறு வயதானபோது அவரது இரண்டாவது மனைவியான அந்த வேலைக்காரப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது.

    சந்தோஷம்தான். இந்த வயதில் இப்படியும் விதித்திருக்கிறதே என்கிற சந்தோஷம். ஆனாலும் தன் முதல் மனைவி மூலமாக ஒரு குழந்தை இல்லாத வருத்தமும் இருக்கவே செய்தது.
    பெரியவருக்கு இப்போது தொண்ணூற்றொன்பது வயது. அவரது மகனுக்கு பன்னிரண்டு வயது. முதல் மனைவிக்கு எண்பத்தொன்பது வயது. இரண்டாவது மனைவியின் வயது அப்போது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. இத்தனை தள்ளாத காலத்தில் அவரது கனவிலோ, நினைவிலோ ஒருநாள் கடவுள் வந்து பேசினார்.

    இதோ பார். உனக்கு இன்னொரு குழந்தை பிறக்கப்போவது உறுதி. அதுவும் இத்தனை நாளாகக் குழந்தை இல்லாத வருத்தத்தை மட்டுமே கருவாகச் சுமந்துகொண்டிருந்த உன் முதல் மனைவி மூலம் அது நடக்கப்போகிறது என்று ஒரு குரல் கேட்டது.

    பெரியவரால் இதை நம்ப முடியவில்லை. இதென்ன கூத்து? நானோ தொண்ணூற்றொன்பது வயதுக்கிழவன். என் மனைவிக்கு என்னைவிடப் பத்து வயதுதான் குறைவு. இந்த வயதில் இன்னொரு குழந்தை எப்படி சாத்தியம் என்று அவநம்பிக்கையாகக் கேட்டார்.

    அதுசரி. கடவுள் தீர்மானித்துவிட்டால் வயது ஒரு பிரச்னையா என்ன?

    சீக்கிரமே அவரது முதல் மனைவி கருவுற்றாள். அடுத்த வருடம் குழந்தையும் பிறந்துவிட்டது. அவருக்கு அப்போது நூறு வயது.

    இரண்டு மனைவிகள். இரண்டு ஆண் குழந்தைகள். இதற்கு மேல் என்ன? நிம்மதியாகக் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டு, அந்தக் குடும்பம் ஒரே வீட்டிலேயே தழைத்திருந்திருக்கலாம். ஆனால் சக்களத்திப் பிரச்னை இப்போது முன்னைக்காட்டிலும் தீவிரமடைந்துவிட்டது. இது அவரை வருத்தியது.

    ரொம்ப நாள் இச்சிக்கலை இழுத்துக்கொண்டே போகமுடியாது என்று முடிவு செய்தவர், தமது இரண்டாவது மனைவியை ஒருநாள் அழைத்துப் பேசினார். குடும்ப அமைதியின் பொருட்டு அவள் அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிடவேண்டும் என்றும் சொன்னார். என்னதான் அவள், அவருக்கு முதல் முதலில் வாரிசு என்று ஒன்றை உருவாக்கி அளித்தவள் என்றாலும், பெரியவரால் தன் மூத்த மனைவிக்குப் பிறந்த குழந்தையைத்தான் உண்மையான வாரிசாக எண்ண முடிந்தது.

    மனிதர்கள் விசித்திரமானவர்கள். சில சந்தர்ப்பங்களும் விசித்திரமானவையாகவே அமைந்துவிடுகின்றன.

    மறுபேச்சில்லாமல் அந்தப் பெண், தனக்குப் பிறந்த மகனை அழைத்துக்கொண்டு அந்த வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்.

    அந்தப் பெரியவர் இன்னும் எழுபத்தைந்து வயதுகாலம் வாழ்ந்தார். தம் முதல் மனைவி இறந்த பிறகு வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டார். அவள் பெயர் கேதுரா (Keturah) அவளுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.

    கதையென்று நினைத்தால் கதை. வாழ்க்கை என்று நினைத்தால் வாழ்க்கை. ஆனால் இஸ்ரேலிய யூதர்களுக்கும் பாலஸ்தீனிய அரேபியர்களுக்குமான பிரச்னையின் மூலவித்து மேற்சொன்ன பெரியவரிடமிருந்துதான் தொடங்குகிறது.

    அவர் பெயர் ஆபிரஹாம் (Abraham). அவருடைய முதல் மனைவியின் பெயர் சாரா. சாராவிடம் வேலைக்காரியாக (அடிமையாக) இருந்த பெண் ஆகார் Hagar) அவள் எகிப்து தேசத்தைச் சேர்ந்தவள். அவளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் இஸ்மயீல் (Ishmael). சாராளுக்குப் பிறந்த குழந்தையின் பெயர் ஈஸாக் (Issacc).

    ஆபிரஹாமால் வீட்டைவிட்டு அனுப்பப்பட்ட ஆகாரின் மகனான இஸ்மயீலின் வம்சத்தவர்கள்தான் அரேபியர்கள். சாராவுக்குப் பிறந்த ஈஸாக்கின் வழிவந்தவர்கள் யூதர்கள். (இந்த வகையில் யூதர்களைக் காட்டிலும் அரேபியர்கள் பன்னிரண்டு வயது மூத்தவர்கள் என்றாகிறது.)

    ஈஸாக் பிறந்ததை முன்னிட்டுத்தான் இஸ்மயீல் வீட்டைவிட்டு விரட்டப்பட்டான். இது நான்காயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்ததாக யூதர்களின் வேதமான தோரா (Torah) சொல்கிறது.

    இஸ்ரேல்_பாலஸ்தீன் பிரச்னையின் அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னால், இப்படி தோராவிலிருந்து ஒரு கதையை நினைவுகூர்வதற்குக் காரணம் உண்டு. யூதர்களின் வேதமான இந்நூல், மிகச் சில மாறுபாடுகளுடன் அப்படியே கிறிஸ்தவர்களின் பைபிளிலும் பழைய ஏற்பாடாக வருகிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலும் இக்கதைகள் வருகின்றன. மூன்று மதங்களுமே ஆதாம்_ஏவாள்தான் கடவுளால் உருவாக்கப்பட்ட முதல் மானுடப்பிறவிகள் என்பதிலிருந்து ஆரம்பித்து உலகம் தோன்றிய கதையென்று ஒரே விதமான அபிப்பிராயத்தைத்தான் கொண்டுள்ளன. மூன்று மதத்தின் புனித நூல்களிலும் ஆபிரஹாம், மெசபடோமியாவிலிருந்து (யூப்ரடிஸ், டைக்ரிஸ் ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதியான இன்றைய ஈராக்) புறப்பட்டு, கானான் என்று அழைக்கப்பட்ட இன்றைய பாலஸ்தீன நிலப்பகுதிக்குப் போய் வசிக்கத் தொடங்கியதை ஒப்புக்கொள்கின்றன. அவரது சந்ததி தழைக்கத் தொடங்கியது அங்கேதான். முதலில் சாராவும் பிறகு ஆபிரஹாமும் இறந்தபோது புதைக்கப்பட்டது அல்கே ஹெப்ரான் (Hebran) என்னும் இடத்திலுள்ள மக்பெலா (Machbelah) என்ற குகையில்தான். (இந்த இடம் இப்போது ஜோர்டனில் உள்ளது.) இதே குகையில்தான் ஆதி மனிதர்களான ஆதாமும் ஏவாளும்கூட அடக்கம் செய்யப்பட்டதாக நம்பிக்கை. இந்த நம்பிக்கையும் மூன்று மதத்தவர்களுக்கும் பொதுவானது. மக்பெலா குகை அவர்களுக்கு ஒரு புனிதத்தலம்.
    யூதர்கள் சொல்லும் நாலாயிரம் வருடம் என்பதற்குச் சரித்திரபூர்வமான ஆதாரங்களைத் திரட்டுவது சிரமம். இயேசு கிறிஸ்துவின் காலத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக வைத்துக்கொண்டு கணக்கிட்டால், பைபிளின் பழைய ஏற்பாடு சொல்லும் காலம்தான் இது. வழிவழியாக ஏற்கப்பட்ட நம்பிக்கைதானே தவிர அறுதியிட்டுச் சொல்லமுடியாத காலக்கணக்கு. அப்படிப் பார்த்தாலும் யூதமதம் காலத்தால் முற்பட்டதுதான். நோவா, ஆபிரஹாம், மோசஸ் தொடங்கி தீர்க்கதரிசிகளாக பைபிள் வருணிக்கும் வம்சத்தின் கடைசி யூத தீர்க்கதரிசி என்றால் அது இயேசுநாதர்தான். இயேசுநாதருக்கு முன்பு தோன்றிய தீர்க்கதரிசிகள் யாரும் தனியே மதம் என்று ஒன்றை ஸ்தாபிக்கவில்லை. யூதமதம் ஒன்றுதான் மத்தியக்கிழக்கில் வலுவான மதமாக இருந்திருக்கிறது. வேறு சில மேற்கத்திய _ குறிப்பாக கிரேக்க, ரோமானிய இனத்தவரின் ஆதி மதங்களும் வழிபாட்டு முறைகளும், ஆங்காங்கே பரவியிருந்தாலும், அரேபிய மண்ணிற்கே உரிய சிறுதெய்வ வழிபாடுகள் இருக்கவே செய்தாலும், ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட, ஒரே கடவுள் என்னும் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்ட (யூதக் கடவுளின் பெயர் ஜெஹோவா.) உருவ வழிபாடில்லா மதம், யூத மதம்தான்.

    யூதர்கள் தமக்கென்று ஒரு மொழியைக் கொண்டிருந்தார்கள். எபிரேயு என்று பைபிள் சொல்லும் ஹீப்ரு மொழி. புராதனமான செமிட்டிக் மொழிகளுள் ஒன்று இது. தோரா எழுதப்பட்டது இம்மொழியில்தான். கி.மு. பன்னிரண்டாம் நூற்றாண்டில் பேசப்பட்ட, எழுதப்பட்ட ஹீப்ரு, பொனிஷியன் (Phoenician) போன்ற சில செமிட்டிக் மொழிகளுடன் பெருமளவு ஒற்றுமை கொண்டு காணப்பட்டது. ஆனால் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பாலஸ்தீனிய யூதர்கள் பேசிய ஹீப்ரு, தன் முகத்தைப் பெருமளவு மாற்றிக்கொண்டது. ரொம்ப கவனித்துப் பார்த்தால் மட்டுமே அது ஹீப்ரு என்று புரியும். அராபிக் தாக்கம் மிகுந்திருந்தது அப்போது. பாலஸ்தீனுக்கு வெளியே _ அரபு மண்ணின் பிற பகுதிகளில் அப்போது வாழ்ந்த யூதர்கள், அந்தந்தப் பிராந்தியங்களின் மொழியையே உபயோகித்துக்கொண்டிருந்தார்கள். இப்போதுள்ள ஹீப்ருவின் வரிவடிவம் கி.மு. முதல் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. வலமிருந்து இடமாக எழுதப்படும் மொழி அது. (அரபிக் மாதிரி.)

    அப்போதெல்லாம் யூதர்களின் மொழி என்பதாக ஹீப்ரு இருந்ததே தவிர, அது ஒரு தலையாய அடையாளமாகக் கருதப்படவில்லை. மதநூல்கள் மட்டுமே ஹீப்ருவில் எழுதப்படும் என்றும், அத்தகைய புனிதமான பிரதிகளுக்கு மட்டுமே பயன்படுத்தத்தக்க மொழி அது என்பதாகவும் ஒரு கருத்து இருந்தது. இதனாலேயே காலப்போக்கில் ஹீப்ரு இறக்கத் தொடங்கியது.
    மிகச் சமீபகாலத்தில் _ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில்தான் யூதர்கள் தம் மொழியை ஒரு புதைபொருள் போல மீட்டெடுத்தார்கள்.

    யூதகுலம் அழியாமல் தடுக்க, தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முழுமூச்சுடன் அவர்கள் பாடுபடத் தொடங்கியபோது, தமது அடையாளங்களை வரிசைப்படுத்த அவர்களுக்கு ஹீப்ரு மிக முக்கியத் தேவை என்று தோன்றியது. 1880_ஆம் ஆண்டு யூத இனத்துப் பண்டிதர்கள் கூடி, ஹீப்ருவில் எழுதப்பட்ட பழைய பிரதிகளைத் தேடிக் கண்டுபிடித்து எடுத்து ஆராய்ச்சிகள் செய்யத் தொடங்கினார்கள். எப்படியாவது பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் என்கிற தேசத்தை ஸ்தாபித்தே தீருவது என்று முடிவு செய்ததும், கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பகுதியில் ஹீப்ரு மொழி பள்ளிக்கூடங்களைத் திறந்தார்கள். 1913_ஆம் வருடம் பாலஸ்தீனிலுள்ள பள்ளிகளில் ஹீப்ருவே போதனாமொழி என்கிற அளவுக்கு அதன் தாக்கம் மிகுந்திருந்தது. 1948_ல் இஸ்ல் சுதந்திரம் பெற்றதும், ஹீப்ரு அதன் தேசிய மொழியாகவே ஆகிப்போனது.
    இன்றைக்கு இஸ்ரேலில் பேசப்படும் மொழி ஹீப்ரு. எழுதுவது போலவே பேசப்படும் மொழி அது. அதாவது, பேச்சு வழக்கு என்றுகூடத் தம் மொழியைச் சிதைக்க யூதர்கள் விரும்பவில்லை. அது ஒரு அடையாளம். மிகப் பெரிய அடையாளம். ஜெருசலேம் நகரைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் பிரும்மாண்டமான சுவரைப் போல யூதர்கள் தம் அடையாளச் சுவராகத் தம் மொழியைக் கொண்டிருக்கிறார்கள். மொழி மட்டுமல்ல. பண்பாடு, கலாசாரம், வழிபாடு, வாழ்க்கை முறை என்று எல்லாவற்றிலும் தமது மூதாதையர்கள் கடைப்பிடித்த முறையையே இன்றுவரை பின்பற்றி வருபவர்கள் அவர்கள்.

    இன்று தொழில்நுட்பத்திலும் விவசாயத்திலும் உலகின் அதிநவீன சூத்திரதாரிகளாக இருக்கும் அதே யூதர்கள்தான், தமது அடையாள விஷயங்களில் மிக கவனமாகத் தொன்மம் பேணிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.
    பாலஸ்தீனியர்களுடனான இஸ்ரேலிய யூதர்களின் யுத்தத்துக்கு வேண்டுமானால் ஐம்பத்தாறு வயது இருக்கலாம். ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளும் யூதர்களின் மீது நிகழ்த்திய யுத்தத்துக்கு வயது பல நூறு ஆண்டுகள்.

    ஈஸாக்கின் வழித்தோன்றல்கள், புராண காலத்தில் பட்ட கஷ்டங்களுக்குக் கதைகள்தான் ஆதாரம். ஆனால் சரித்திர காலம் தொடங்கியதிலிருந்து அவர்கள் எதிர்கொண்ட சங்கடங்களுக்கு இன்றைக்கும் ஏராளமான சாட்சியங்கள் உண்டு.
    பார்க்கலாம்.
    தொடரும்...........

    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 28 நவம்பர், 2004

  5. #5
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Apr 2007
    Location
    dubai - native -tanjore
    Posts
    2,849
    Post Thanks / Like
    iCash Credits
    9,053
    Downloads
    32
    Uploads
    0
    மொழி,பண்பாடு வாழ்க்கை கலாச்சாரம்,வாழ்க்கை முறை இவற்றிலிருந்து தடம் புரளமால் இருப்பதற்கே யூதர்களை பாரட்ட வேண்டும்.மொழியின் விழ்ச்சியெ மற்றவற்றிக்கு விழ்ச்சியா அமையும்.அதை தான் நம் கண் கூடாக பார்க்கிறோம்

  6. #6
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் ரத்தம் 3

    3] யூதர்கள்



    அது, 44வது வருடம். அதாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நாற்பத்து நான்காவது வருடம். ஜெருசலேம் நகரிலிருந்த நீதி மன்றத்துக்கு ஒரு வழக்கு வந்திருந்தது.

    நீதிமன்றம் என்றால் அரசின் நீதிமன்றம் அல்ல. அது யூத மதகுருக்களின் நீதிமன்றம். மன்னர்களைக் காட்டிலும் அன்றைக்கு அவர்களுக்குத்தான் அதிகாரம் இருந்தது. மத குருக்கள் ஒரு தீர்ப்புச் சொல்லிவிட்டார்கள் என்றால் மன்னரேகூட அதனை மாற்றுவது சிரமம். காரணம், மக்கள் மன்னர்களை மதித்தார்களே தவிர, மதகுருக்களைத்தான் வணக்கத்துக்குரியவர்களாக நினைத்தார்கள். அவர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்கள் சொல்வதுதான் தீர்ப்பு.

    வழக்கு என்ன? அப்போது ஹாஸ்மோனியன்களின் (Hasmoneans - ஆழ்ந்த மதப்பற்றுமிக்க ஒரு யூதவம்சம்.) ஆளுகைக்கு உட்பட்டிருந்த அந்தப் பகுதியில் கவர்னராக இருந்தவர், ஓர் உள்நாட்டுப் புரட்சிக் குழுவினருடன் யுத்தம் செய்யவேண்டியிருந்தது. கலவரக்காரர்களை அடக்குவது கவர்னரின் பணியே அல்லவா? அதை அவர் திறம்படச் செய்து முடித்தார். கலவரம் முடிந்தது. புரட்சிக்குழுவினர் அடக்கப்பட்டார்கள். புரட்சிக்காரர்களின் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். இனி, முறைப்படி விசாரணை நடத்தப்படவேண்டும்.

    அங்கேதான் பிரச்னை ஆரம்பித்தது. கவர்னர் அவர்களிடம் விசாரணை ஏதும் மேற்கொள்ளவில்லை. மாறாக, அரசுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவர்கள் என்று சொல்லி, புரட்சிக்குழுத் தலைவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்.

    இது மிகப்பெரிய குற்றம். கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்காமல் எப்படி கொலை செய்யலாம்? கவர்னரே ஆனாலும் குற்றம்தான். நீதிமன்றத்துக்கு வந்த வழக்கின் சுருக்கம் இதுதான். எப்படியும் கவர்னருக்கு அதிகபட்ச தண்டனைதான் கிடைக்கும் என்று ஜெருசலேம் மக்கள் நினைத்தார்கள். அதிகபட்சம் என்றால் மரணம்.

    ஆனால், விசாரணை ஆரம்பிப்பதற்குச் சற்று நேரம் முன்னதாக ஹாஸ்மோனிய மன்னர் ஹிர்கனஸ் (Hyrcanus2) ரகசியமாகச் செயல்பட்டு, கவர்னர் ஜெருசலேத்திலிருந்து தப்பிச் சென்றுவிடுவதற்கு ஓர் ஏற்பாடு செய்தார். மன்னரே ஆனாலும் ரகசியமாகத்தான் இதைச் செய்யவேண்டியிருந்திருக்கிறது!

    ஜெருசலேத்திலிருந்து வெளியேறிய கவர்னர், மூச்சைப் பிடித்துக்கொண்டு வடக்குத் திசையாக ஓடினார். அவரது இலக்கு, எப்படியாவது சிரியாவை அடைந்துவிடுவது. அதன்பின் ஜெருசலேம் மதகுருக்களால் பிரச்னை இருக்காது.

    சிரியா அப்போது ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. வேறு தேசத்தவர் என்றாலும் இந்த கவர்னரின் ஆட்சி செய்யும் திறமை குறித்து அப்போது சிரியாவை ஆண்டுகொண்டிருந்தவர்களுக்கு நன்கு தெரிந்திருந்ததால், அடைக்கலம் கோரி வந்தவரை அரவணைத்து, சிரியாவின் ஒரு சிறு மாகாணத்துக்கு அவரை கவர்னராக நியமித்து கௌரவித்துவிட்டார்கள். உயிர்பிழைக்க வந்த சிரியாவில், பதவியும் கிடைத்ததுமே அவர் ரோமானியத் தளபதி மார்க் ஆண்டனியுடன் (Mark Antony) நட்பையும் நெருக்கத்தையும் வளர்த்துக்கொண்டார். (பிறகு ஆண்டனியே ரோமானிய மன்னராகவும் ஆனார்.) அவ்வப்போது நிறைய பணமும் தந்து நீடித்த நல்லுறவை உறுதிப்படுத்திக்கொண்டார்.
    காரணம், அவருக்கு ஒரு கனவு இருந்தது. எப்படியாவது ஜுதேயாவின் (Judaea இஸ்ரேலின் அன்றைய பெயர்) மன்னனாக தான் ஆகிவிடவேண்டும். அதற்கு முதலில் ஹாஸ்மோனியர்களின் ஆட்சியை ஒழிக்கவேண்டும். அதற்கு ரோமானியர்களின் உதவி வேண்டும். தளபதி மனம் வைத்தால் காரியம் நடக்கும்.

    ஒரு சரியான சர்வாதிகாரியின் மனோபாவம் அந்த கவர்னருக்கு இருந்தது. நினைத்ததைச் செயல்படுத்த என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தார். பொறுமையாக, தருணத்துக்குக் காத்திருந்து மார்க் ஆண்டனியிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். நண்பர் என்று ஆகிவிட்டபடியால் அவரும் கவர்னரின் விருப்பத்துக்குத் தன் சம்மதத்தைத் தெரிவித்து ஒத்துழைப்பதாக வாக்களித்தார்.

    விஷயம் ஜெருசலேமுக்குத் தெரியாமல் இருக்குமா? அந்த கவர்னர் யார், எப்படிப்பட்டவர், அவர் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன அபாயங்கள் நேரும் என்றெல்லாம் எடுத்துச் சொல்வதற்காக இரண்டு பெரிய தூதுக்குழுக்களை ஜெருசலேம் சமூகம் சிரியாவுக்கு அனுப்பியது.
    ஆனால் பயனில்லை. ஆண்டனி, தூதுக்கு வந்தவர்களைச் சிறைப்பிடித்து, மரணதண்டனை அளித்துவிட்டு, ஒரு படையுடன் ஜெருசலேமை நோக்கி கவர்னர் முன்னேற உடனடி ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தார்.

    ஐந்து மாதங்கள் வரை முற்றுகை நீடித்தது. மிகக் கடினமான யுத்தமாக அது இருந்தது. ஆனால், கவர்னர் தப்பிச்செல்வதற்கு உதவிய ஹாஸ்மோனிய மன்னரால் இறுதியில் அவரது முற்றுகையையும் தாக்குதலையும் சமாளிக்க முடியவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்த கவர்னரிடம் ஆட்சி அதிகாரத்தை இழந்து மன்னர் போரில் வீழ்ந்தார். ஜுதேயா தேசத்தையே ரத்தக்களறியாக்கிவிட்டுத்தான் அந்த முன்னாள் கவர்னரால் ஆட்சிப்பீடத்தில் ஏறமுடிந்தது. அவரை நன்கறிந்த இஸ்ரேலிய மக்கள், இனி தங்கள் எதிர்காலம் என்னாகுமோ என்று அஞ்சிக் கலங்குவதை தம் தினசரிக் கடமையாக்கிக்கொண்டார்கள்.

    கி.மு. 37_ம் ஆண்டிலிருந்து தொடங்கி அடுத்த முப்பத்து மூன்று வருடங்கள், தன் மரணம் வரை ஜுதேயா எனப்பட்ட இஸ்ரேலை ஆண்ட அவரது பெயர் ஹெரோத். இவரது காலத்தில்தான் பாலஸ்தீன யூதர்கள் முதல்முதலில் அந்த மண்ணில் வாழ்வதிலுள்ள சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவந்தது.

    இத்தனைக்கும் ஹெரோத் ஒரு யூதர். ஆனால், சர்வாதிகாரி என்றானபிறகு மதம் ஒரு பொருட்டா என்ன? தனது பதவிக்குப் பிரச்னை தரக்கூடியவர்கள் என்று அவர் நினைத்த நண்பர்கள், உறவினர்கள் தொடங்கி சாதாரணப் பொதுமக்கள் வரை யாரை வேண்டுமானாலும் கொன்று வீழ்த்தினார்.

    எந்த ரோமானிய மன்னன் ஆண்டனி, தான் பதவிக்கு வருவதற்கு உதவி செய்தாரோ, அதே ஆண்டனி, அங்கே ஆட்சியை ஆக்டேவியன் (Octavian) என்கிற தமது அரசியல் எதிரியிடம் இழந்து மரணமடைந்தபோது, சற்றும் யோசிக்காமல் ஆக்டேவியனுக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்தார் ஹெரோத். அகஸ்டஸ் என்கிற பட்டப்பெயருடன் ஆக்டேவியன், ரோமானிய மன்னராக முடிசூட்டிக்கொண்டபோது, ஹெரோத் தன்னை ஆதரித்தமைக்காகக் கூப்பிட்டு கௌரவித்துப் பரிசுகளும் பதக்கங்களும் அளித்து அனுப்பிவைத்தார்!

    தமது ராணுவத்தை மிக கவனமாகப் பராமரித்த ஹெரோத், ஓரளவு மட்டுமே யூதர்களை அதில் சேர்த்தார். பெரும்பாலும் வெளிநாட்டு வீரர்களையே தருவித்து, தன் ராணுவத்தில் இடம்பெறச் செய்தார். ரோம், பிரான்ஸ் போன்ற தேசங்களிலிருந்தெல்லாம் அப்போது ஹெரோதின் ராணுவத்தில் ஆட்கள் சேர்க்கப்பட்டார்கள்.

    தவிர, முன்னர் தாம் கவர்னராக இருந்த காலத்தில் திருமணம் செய்துகொண்டிருந்த ஹாஸ்மோனியப் பெண்ணையும் அவளுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு, டோரிஸ் என்று ஜெருசலேமிலிருந்து புதிதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். போதாமல், இன்னும் எட்டுப் பெண்களையும் மணந்துகொண்டு சுமார் பதினான்கு குழந்தைகளைப் பெற்றார். எல்லாமே அரசியல் காரணங்களுக்காக!

    ஹெரோதின் காலத்தில் பல இஸ்ரேலிய யூதர்கள், வேறு வழியில்லாமல் நாட்டைத் துறந்து வெளியேறிப்போனார்கள். சகிக்கமுடியாத ஆட்சி என்று வருணிக்கப்பட்டாலும் ஹெரோத் ஒரு தீவிர யூதர் என்பதால், தாம் பதவிக்கு வந்ததுமுதல் யூதர்களுக்கான பாதுகாப்பு என்கிற பெயரில் நிறைய கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் கொண்டுவந்தார். அவர் செய்தவற்றுள் உருப்படியான பணி என்றால், பாலைவனமாக இருந்த அன்றைய இஸ்ரேலில், நிலமற்ற அத்தனைபேருக்கும் ஒரு துண்டு நிலமாவது கிடைக்கும்படிச் செய்து விவசாயத்தை ஊக்குவித்தது. அது ஓர் அற்புதம்தான்.

    இன்றைக்கு இஸ்ரேல் நவீன விவசாயத்தில் எத்தனையெத்தனையோ சாதனைகளைச் செய்துகாட்டியிருக்கும் நிலையில், துளி அறிவியல் வாசனையும் இல்லாத காலத்தில் ஹெரோத் மன்னர் அங்கே விவசாய மறுமலர்ச்சிக்கு வித்திட்டது வியப்புக்குரிய விஷயம். பாழ் நிலங்களைச் செம்மைப்படுத்தி நகரங்களாக்கியது, விதவிதமான கட்டடங்களைக் கட்டுவித்தது (ஹெரோத் கிரேக்க கட்டடக்கலை, கலாசார விஷயங்களில் ஒரு மயக்கம் கொண்டிருந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலில் அதன் பிரதிபலிப்புகள் அதிகம் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.) போன்ற சில செயல்கள் குறிப்பிடப்படவேண்டியவை.

    கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் ஜெருசலேம் நகரிலிருந்த புராதனமான யூத ஆலயம் (மன்னர் சாலமன் காலத்தில் கட்டப்பட்டது) பல்வேறு தாக்குதலுக்கு இலக்காகி, சிதைந்துபோயிருந்தது. ஒரே ஒரு சுவர்தான் அதில் மிச்சம். கொடுங்கோலன் ஆனாலும் பக்திமானாக இருந்த ஹெரோதின் காலத்தில் அந்தக் கோயில் இருந்த இடத்திலேயே இரண்டாவது முறையாகக் கோயில் எழுப்பப்பட்டது. பழைய கோயில் இருந்த நிலப்பரப்புடன் இன்னும் கொஞ்சம் நிலத்தை இணைத்து, உறுதியான கட்டுமானத்தில் கோயில் உருப்பெற ஹெரோத் உத்தரவிட்டார். தவிர கோயிலைச் சுற்றி இருந்து, சிதைந்துபோயிருந்த சுற்றுச் சுவரையும், அதன் பழைய மிச்சங்களுடனேயே மீண்டும் புதுப்பித்து முழுமைப்படுத்தினார்.

    இந்தக் கோயிலைக் கட்டுவதற்காக பத்தாயிரம் ஊழியர்களும் ஆயிரம் மதகுருக்களும் பணியில் அமர்த்தப்பட்டதாக வரலாறு சொல்கிறது. சுமார் ஒன்பதாண்டுகால உழைப்புக்குப் பின் ஹெரோதின் இரண்டாவது ஆலயம் என்று அழைக்கப்பட்ட அந்தப் புராதனமான கோயிலின் மறு உருவாக்கப்பணி முற்றுப்பெற்றது.

    ஹெரோதின் ரோமானிய மோகமும் கிரேக்க கட்டடக்கலைத் தாக்கமும் அக்கோயிலின் கட்டுமானத்தில் மிகுந்திருந்ததாக ஒரு விமர்சனம் உண்டென்றாலும், அந்தக் காலத்தில், அதற்குமுன் அப்படியரு பிரமாண்டமான கலைப்படைப்பு வேறெங்கும் கிடையாது என்று அடித்துச் சொல்கிறது யூத சரித்திரம்.

    இந்தக் கோயிலைக் கட்டிய ஒரு காரணத்தினால் மட்டுமே யூதர்கள் இன்றுவரை ஹெரோத் மன்னரை நினைவிலும் சரித்திரத்திலும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவரது காலத்தில் நடந்த அட்டூழியங்களை விமர்சனம் இல்லாமல் ஒரு செய்திபோலவே சரித்திரத்தில் பதிவு செய்கிறார்கள்.

    ஹெரோதின் ஆட்சி முப்பத்துமூன்று வருடங்கள்தான். அது அத்தனை பெரிய பிரச்னை இல்லை. ஆனால் அவரது ஆட்சிக்காலத்திலேயே ஒரு சம்பவம் நடந்தது. பின்னால் மாபெரும் சரித்திரமான சம்பவம்.

    ஒரு பிறப்பு. பிறக்கும்போதே இது சாதாரணக் குழந்தை இல்லை என்று வானவர்கள் அறிவித்துவிட்ட பிறப்பு. யூத குலத்திலேயே நிகழ்ந்த பிறப்பு. யூத குலத்துக்கே ஒரு பெரிய சவாலாகப் பின்னால் விளங்கப்போகிற பிறப்பு. ஹெரோத் மன்னன் கட்டுவித்த கோயில் மீண்டும் இடிபடப் போகிறது என்று தீர்க்கதரிசனமாகப் பார்த்துச் சொன்னவரின் பிறப்பு.
    அந்தக் குழந்தைக்கு ஜோஷுவா (Joshua) என்று பெயரிட்டார்கள். அது ஹீப்ரு மொழிப்பெயர். ஆங்கிலத்தில் ஜீஸஸ் என்று அது வழங்கப்படும். நமக்கு இயேசு என்றால் புரியும்.

    உண்மையில் யூத மதத்துக்கு விடப்பட்ட முதல் பெரிய சவால், கிறிஸ்தவம் தோன்றி, பரவ ஆரம்பித்தபோதுதான் நேர்ந்தது. இயேசுவை வைத்துக்கொள்ளவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் ஆரம்பத்தில் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்கள். தேவகுமாரன் என்று கிறிஸ்தவர்கள் கொண்டாடும் இயேசுவை ஒரு கலகக்காரராக மட்டுமே யூதர்களால் பார்க்க முடிந்தது. புராதனமான தமது மதத்தின் பெருமைகளைக் கெடுக்கவந்த ஒரு குட்டிச்சாத்தானாகவும் பார்த்தார்கள்.

    கிருஷ்ணன் பிறந்தபோது, அவனைக் கொல்லுவதற்கு கம்சன் மேற்கொண்ட முயற்சிகளை எப்படியெல்லாம் ஹிந்துமதக் கதைகள் விவரிக்கின்றனவோ, அதற்குச் சற்றும் சளைக்காத கதைகள் இயேசுவின் பிறப்பு தொடர்பாகவும் உண்டு.

    அங்கே கம்சனின் பெயர் ஹெரோத். இரண்டாவது கோயிலைக் கட்டிய அதே யூதமன்னன் ஹெரோத்.

    ஏரோது மன்னன் என்று பைபிள் குறிப்பிடுவது இவரைத்தான்.

    தொடரும்.......

  7. #7
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் ரத்தம் 4

    கி.பி.

    யூதர்களின் சரித்திரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிக முக்கியமானதொரு நிகழ்ச்சி.

    மோஸஸுக்குப் பிறகு இன்னுமொரு தேவதூதனின் வரவு அவர்களுக்கு நியாயமாக மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், யூத குலத்தின் அடையாளமே தேவதூதனுக்காகக் காத்திருக்கும் குலம் என்பதுதான். ஆனால் இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை.

    பெத்லஹெமில் (Bethlehem) இயேசு பிறந்தபோதே யூத மதகுருமார்கள் உள்ளுணர்வின் மூலமும் பழைய வேத வசனங்களின் மூலமும் அவரை அடையாளம் கண்டு, ஹெரோத் மன்னரிடம் இயேசுவின் பிறப்பைக் குறித்துத் தெரிவித்துவிட்டார்கள். இஸ்ரேல் மக்களை ஆளப்போகும் தலைவன் இன்ன இடத்தில், இன்ன காலகட்டத்தில் பிறப்பான் என்று எழுதி வைக்கப்பட்ட பழைய தீர்க்கதரிசன வரிகளைச் சுட்டிக்காட்டி அவனுக்குத் தகவல் சொன்னார்கள்.
    ஹெரோத் ஒரு மன்னன். அதுவும் சர்வாதிகாரி. மக்களை ஆளப்போகும் தலைவன் என்கிற பிரயோகம் அவனுக்கு ஒரே ஒரு அர்த்தத்தை மட்டுமே தரமுடியும். அதாவது, தன் பதவிக்கு ஆபத்து.

    ஆகவே இயேசுவைக் கொன்றுவிட விரும்பி, ஆட்களை ஏவினான் ஹெரோத்.
    உயிர்பிழைக்க, இயேசுவின் தந்தை ஜோசப், தம் மனைவி மேரியை (ஹீப்ரு மொழியில் மிரியம் Miriam) அழைத்துக்கொண்டு, குழந்தையுடன் எகிப்துக்குத் தப்பிப்போனார். பயமும் வெறுப்பும் மிகக்கொண்ட ஹெரோத், இந்த விஷயம் தெரியாமல் பெத்லஹெமில் அப்போது இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் எத்தனைபேர் இருந்தார்களோ, அத்தனை பேரையும் கொன்று வீசினான். கொன்ற குழந்தைகளில் ஒன்று எப்படியும் இயேசுவாக இருக்கும் என்கிற குருட்டு நம்பிக்கை!

    ஹெரோத் உயிரிழக்கும்வரை இயேசு ஜெருசலேமுக்குத் திரும்பி வரவில்லை. மன்னன் இறந்த செய்தி கிடைத்தபிறகே அக்குடும்பம் ஊர் திரும்ப முடிவு செய்தது. அப்போதும் கூட ஹெரோதின் மகன்தான் பட்டத்துக்கு வந்திருக்கிறான் என்று கேள்விப்பட்டு ஜெருசலேமுக்கு வராமல் நாசரேத்துக்குப் போய்விட்டார்கள். இயேசுவுக்கு அப்போது எட்டு வயது.
    தமது வாலிப வயதில்தான் முதல்முதலில் ஜெருசலேமுக்கு வந்தார் இயேசு. இளைஞர் இயேசுவை அங்கே மிகவும் கவர்ந்த இடம், கோயில். கி.மு. 950_ல் முதல்முதலில் கட்டப்பட்ட கோயில். பிறகு இடிக்கப்பட்டு, பல்லாண்டுகாலம் இருந்த அடையாளம் மட்டுமே மிச்சமிருக்க, ஹெரோத் மன்னரால் மீண்டும் கட்டப்பட்ட கோயில்.

    மணிக்கணக்கில், நாள்கணக்கில் கோயிலிலேயே இருந்தார் அவர். பல சமயங்களில் சுயநினைவின்றியே பிரார்த்தனையில் தோய்ந்திருந்தார். அப்போதெல்லாம் ஜெருசலேம் மக்கள் அவரை ஒரு தேவதூதராக யோசித்துப் பார்க்கவில்லை. பக்தி மிக்க ஓர் இளைஞர். அவ்வளவுதான்.

    இதோ, தேவதூதன் வருகிறான், வரப்போகிறான், வந்தேவிட்டான் என்று தொடர்ந்து இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருந்த ஜான் என்கிற பாதிரியாரிடம் (யோவான் என்று பைபிள் சொல்லும். ஒட்டக ரோமத்தால் ஆன உடை அணிந்தவர், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் உணவாக உட்கொள்பவர் என்றெல்லாம் ஜானைப் பற்றிய நுணுக்கமான விவரங்களைத் தருகிறது பைபிள்.) ஜோர்டன் நதி தீரத்தில் ஞானஸ்நானம் பெற்று இயேசு தன் பேருரைகளை நிகழ்த்தத் தொடங்கியபோதுதான் மக்கள் அவரைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்.

    அவரைத் தனித்துக்காட்டிய முதல் விஷயம், அவர் தம்மை மனிதகுமாரன் (பைபிளில் மனுஷகுமாரன் என்று வரும். Son of Man) என்று குறிப்பிட்டது. இது மிக முக்கியமான குறிப்பு. ஏனெனில் யூதகுலம் அப்படியருவனைத்தான் காலம் காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. யூதர்களின் வேதத்தில், மனிதகுமாரன் எப்படி இருப்பான் என்பது பற்றி ஒரு குறிப்பு உண்டு. இறுதித் தீர்ப்பு நாளில் நீதி வழங்கும் நீதிபதியைப்போல் அவன் இருப்பான் என்று தான் கனவில் கண்டதாக யூதர்களின் வேதத்தில் டேனியல் என்கிற தீர்க்கதரிசி எழுதிய பகுதிகளில் வருகிறது.

    டேனியலின் கனவில் கிடைத்த குறிப்பு தன்னைப்பற்றியதுதான் என்பதாக இயேசு ஒருபோதும் சொன்னதில்லை. கர்த்தரால் மனிதகுமாரனுக்குச் சொல்லப்பட்டது என்பதுபோல அவர் விளக்கிய விஷயங்கள் கூட படர்க்கையில்தான் (Third person) வருகின்றனவே தவிர ஒருபோதும் கர்த்தரால் எனக்குச் சொல்லப்பட்டது என்பதுபோல அவர் குறிப்பிட்டதில்லை.
    இயேசுவை ஏற்க மனமில்லாத யூதர்கள், இதையெல்லாமும் ஆதாரமாகக் காட்டி, வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மனிதகுமாரன் இவர் அல்லர் என்று சொன்னார்கள்.
    ஆனால், இதெல்லாம் இயேசுவுக்கு ஆதரவாளர்கள் பெருகுவதைத் தடுக்கவில்லை. காரணம், எல்லாவற்றையும் விட முக்கியமாக அவர் ஒரு தெய்வீக மருத்துவராக இருந்தார். குருடர்களைப் பார்க்கச் செய்வது, செவிடர்களைக் கேட்கச் செய்வது, ஊமைகளைப் பேசச்செய்வது முதல், இறந்த ஒரு குழந்தையை உயிர் பிழைத்து எழச்செய்தது வரை அவர் நிகழ்த்திய அற்புதங்களை பைபிள் பக்கம் பக்கமாக விவரிக்கிறது.

    எளிய மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டு பின்பற்ற இது ஒரு முக்கியக்காரணம். பிறகு அவரது மலைப் பிரசங்கங்கள். அதில் இருந்த எளிமை. ஏழைகளின் மீதான பரிவு. வன்முறைக்குப் பதிலாக வன்முறையை அல்லாமல் சமாதானத்தைத் தீர்வாகச் சொன்ன நூதனம். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு நெருக்கடி என்றால் மதவழக்கத்தை மீறுவதும் தவறல்ல என்கிற முற்போக்கு மனப்பான்மை.

    யூதர்களிடையே ஒரு வழக்கம் உண்டு. வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அவர்களுக்கு ஓய்வுநாள். அன்று எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார்கள். முற்றிலும் பிரார்த்தனைக்கான தினம் என்று பொருள். (Sabbath day)

    அப்படியான ஒரு தினத்தில் இயேசு ஒரு தேவாலயத்தில் கை ஊனமாகி, சூம்பிய நிலையில் இருந்த ஓர் ஏழையைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார். (மத்தேயு 12:10)
    இது மத விரோதச் செயல் என்று யூத குருமார்கள் குற்றம் சாட்டினார்கள். மனுஷகுமாரன், ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்று சொல்லிவிட்டார் இயேசு.
    உங்கள் ஆடு ஓய்வுநாளில் ஒரு குழியில் விழுந்தால் உடனே போய் தூக்கி எடுக்கமாட்டீர்களா? ஆட்டைவிட மனிதன் எவ்வளவோ மேலானவன் என்கிற அவரது மனிதநேயம் அங்கே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. மதத்துரோகி என்பதாக அவர் வருணிக்கப்பட்டார்.

    இயேசுவைக் கொல்லவும் முடிவு செய்தார்கள்.

    இந்த ஒருமுறை மட்டுமல்ல. இம்மாதிரி பல தருணங்களில் கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்து வேறு வேறு இடங்களுக்குப் பயணம் செய்தபடியே இருந்தார் அவர். போகிற இடங்களிலெல்லாம் மக்கள் கூட்டம் அவர் பின்னால் போனது.

    இதன் தொடர்ச்சியாகத்தான் ஜெருசலேம் தேவாலய மதகுருமார்களின் நடத்தை மீதான அவரது விமர்சனங்களும், கோயில் நிச்சயமாக இடிக்கப்படும் என்கிற தீர்க்கதரிசனமும், அவரைக் கொலை செய்தே ஆகவேண்டும் என்கிற தீர்மானத்துக்கு யூத மதகுருக்களைக் கொண்டுவந்து சேர்த்தன.
    தாம் கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் இரவு, தமது பன்னிரண்டு சீடர்களுடன் இறுதி விருந்து அருந்தினார் இயேசு. யூதாஸ் என்கிற சீடன் முப்பது வெள்ளிக்காசுகளுக்காக அவரை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்க உடன்பட்டான்.

    அன்றிரவு அது நடந்தது. இயேசு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தபோது யூத மதகுருக்கள் அனுப்பிய அடியாள்களுடன் அங்கே வந்த யூதாஸ், இயேசுவை நெருங்கி முத்தமிட்டுக் காட்டிக்கொடுத்தான். உடனே அவரைக் கைது செய்து இழுத்துப்போனார்கள்.

    ஆனால், அவர்கள் முன்னமே தீர்மானித்திருந்தபடி இயேசுவுக்கு மரணதண்டனை விதிக்கவேண்டுமானால் அதற்குப் போதிய காரணங்கள் வேண்டும். சாட்சிகள் வேண்டும். ஜெருசலேமில் அப்படியான காரணங்களையோ, அவற்றைச் சுட்டிக்காட்டும் சாட்சிகளையோ குருமார்களால் உடனே தேடிக்கண்டுபிடிக்கமுடியவில்லை.

    ஆகவே, கஷ்டப்பட்டு இரண்டு பொய்சாட்சிகளைத் தேடிப்பிடித்தார்கள். அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டு இதுதான்:

    ஜெருசலேம் நகரின் பெருமைமிக்க கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கவும், மூன்றே நாட்களில் திரும்பக் கட்டவும் தன்னால் முடியும் என்று இயேசு சொன்னார்.
    போதாது? மரணதண்டனை விதித்துவிட்டார்கள். ஆனால் ஒரு மரியாதைக்காகவாவது மன்னருக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தியாக வேண்டும்.

    அப்போது இஸ்ரேல், ரோமானியர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. ரோம் மன்னரின் பிரதிநிதியாக கவர்னர் பான்ட்டியஸ் பிலாட் (Pontius Pilate பைபிளில் பொந்தியு பிலாத்து என்று குறிப்பிடப்படும் பிலாத்து மன்னன் இவனே.) ஆட்சிசெய்துகொண்டிருந்தார். வழக்கைக் கேட்ட அவருக்கு, இது ஓர் அநியாயமான வழக்கு என்றே தோன்றியது. ஆயினும் மதகுருக்கள் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கூட்டத்தினர், இடைவிடாமல் இயேசுவுக்கு மரணதண்டனை தந்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்தியதால், வேறு வழியில்லாமல் தம் சம்மதத்தைத் தெரிவித்தார்.
    இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக ஒரு சம்பவம் நடந்தது. அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், தன் பிழைக்கு வருந்தி, குற்ற உணர்ச்சி மேலோங்க, தற்கொலை செய்துகொண்டான். முன்னதாக, தனக்கு சன்மானமாக அளிக்கப்பட்ட முப்பது வெள்ளிக்காசுகளையும் மதகுருக்களிடமே திருப்பிக்கொடுத்துவிட்டுத்தான் வந்திருந்தான்.
    கொஞ்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு, ஒருவிநாடி சலனமடைந்து அவன் செய்த காரியம் இயேசுவின் உயிரைக் குடித்தது. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மிகப்பெரிய இரும்புச்சுவர் ஒன்று எழுப்பப்படுவதற்கும் காரணமானது. யூதாஸ் தன் தவறுக்கு அன்றே வருந்தியதும், தற்கொலை செய்துகொண்டதும், யாருக்கும் ஒரு பொருட்டாக இல்லை. அவனைத் தூண்டிவிட்ட யூத மதகுருக்களே கூட, குற்றமில்லாத ரத்தத்தைக் காட்டிக்கொடுத்து நான் பாவம் செய்தேன் என்று வருந்திய யூதாஸிடம், எங்களுக்கென்ன? அது உன்பாடு! என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

    இஸ்ரேலின் கவர்னராக பிலாட் இருந்தது, கி.பி. முதல் நூற்றாண்டின் 27லிருந்து 36_ம் வருடங்களுக்கு இடைப்பட்ட காலம் என்று சரித்திரம் சொல்கிறது. இதனடிப்படையில் இயேசுவின் மரணம் 30_35_ம் ஆண்டுகளுக்கு இடையில் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று கணிக்கப்படுகிறது. துல்லியமான விவரங்கள் ஏதும் இதுபற்றிக் கிடையாது.

    சிலுவையில் அறையப்பட்டு, மீண்டும் உயிர்த்தெழுந்து அவர் விண்ணுக்குச் சென்றார் என்கிற கிறிஸ்தவர்களின் நம்பிக்கைதான் யூதர்களிடமிருந்து அவர்களை வேறுபடுத்திக்காட்டும் முதல் ஆதாரம். ஏனெனில், யூதர்களின் நம்பிக்கையின்படி, மரணத்துக்குப் பின் தேவதூதன் உயிர்த்தெழுவதென்பது கிடையாது. வேறுபாடு அங்கேதான் தொடங்குகிறது.

    இயேசு உயிர்த்தெழுந்ததாக நம்பியவர்கள், இயல்பாக சனாதன யூதர்களிடமிருந்து கருத்தளவில் விலகிப்போனார்கள். இயேசுவுக்குப்பின் அவர் விட்டுச்சென்றதைத் தொடரும் பொறுப்பின் தலைமை அதிகாரியாக இருந்த ஜேம்ஸ், (ஹீப்ரு மொழியில் ஜேக்கப். பைபிளில் யாக்கோபு என்று வரும்.) அவர்களின் வழிகாட்டியாக இருந்தார்.

    கி.பி.62_ல் ஜேம்ஸும் யூதர்களால் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். தொடர்ந்தும் தீவிரமாகவும் அவர் இயேசுவை தேவகுமாரனாகவும் கடவுள் அம்சம் பொருந்தியவராகவும் சித்திரித்துச் சொற்பொழிவுகள் ஆற்றியதே இதற்குக் காரணம்.

    ஜேம்ஸுக்குப் பிறகு ஜெருசலேம் நகரின் கிறிஸ்தவ தேவாலயத் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் சைமன்.

    இவர்களெல்லாம் இயேசுவின் மறைவுக்குப் பிறகு ஜெருசலேம் நகரில் இருந்தபடியே தமது பிரசாரங்களை நிகழ்த்திவந்தார்கள். ஆனால், முதல் முதலாக கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதை ஓர் இயக்கமாக ஆரம்பித்துச் செயல்படுத்தியவர், பால். (Paul. பைபிளில் பவுல் அப்போஸ்தலர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.)

    ஸால் (Saul) என்ற இயற்பெயர் கொண்ட யூதரான இவர், கிறிஸ்தவ மதத்தை நம்பி ஏற்றபிறகு பால் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். துருக்கியில் பிறந்த பால், மத்திய ஆசியாவெங்கும் கிறிஸ்தவத்தைப் பரப்புவதைத் தம் வாழ்நாள் நோக்கமாகக் கொண்டு, மத்தியதரைக்கடலின் கிழக்குக் கரை வழியே மிக நீண்ட பயணம் மேற்கொண்டார். உண்மையும் உருக்கமும் கொண்ட அவரது பேச்சால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கவரப்பட்டு கிறிஸ்தவ மதத்தைத் தழுவினார்கள். ஊர் ஊராக, நகரம் நகரமாக, தேசம் தேசமாக கிறிஸ்தவ மதம் வேகம் கொண்டு பரவத் தொடங்கியது.

    தொடரும்..............
    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 5 டிசம்பர், 2004

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    16 Feb 2007
    Location
    சுவாசம்
    Age
    43
    Posts
    21,007
    Post Thanks / Like
    iCash Credits
    362,234
    Downloads
    151
    Uploads
    9
    அன்புள்ள ரமணன்..
    படிப்பதை இலகுவாக்கவும் சுவை ஆக்கவும் எல்லா பாகங்களையும் ஒன்றிணைத்து, இலக்கியங்கள் புத்தகங்கள் பகுதியில் பத்திரப்படுத்தி இருக்கின்றேன்.
    Last edited by அமரன்; 05-12-2007 at 07:13 PM.

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    15 Nov 2007
    Location
    பாலைவனம்
    Posts
    2,785
    Post Thanks / Like
    iCash Credits
    55,551
    Downloads
    114
    Uploads
    0
    சிறந்த வரலாற்றுத் தொகுப்பு..... நன்றி....

  10. #10
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    வெகு நாட்களாகவே நான் தெரிந்து கொள்ள நினைத்த விசயங்கள்.கண்டிப்பாகத் தொடருங்கள்.தொகுத்தற்கு நன்றி ரமணன்.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

  11. #11
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் ரத்தம் 5

    கிருஸ்துவமும் யூதர்களும்

    கிறிஸ்தவ மதத்தின் எழுச்சி, யூதகுலத்துக்கு விடப்பட்ட முதல் மற்றும் மிகப்பெரிய சவால். இதில் சந்தேகமே இல்லை. கி.பி. 300-ம் ஆண்டு சிரியா, ஆசியா மைனர், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் வசித்துவந்த யூதர்களில் மிகப்பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டிருந்தார்கள். கிறிஸ்தவத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்ட ஜேம்ஸ், பால் போன்ற இயேசுவின் தோழர்கள் அக்காரணத்தாலேயே சிறைப்பிடிக்கப்பட்டதும் படுகொலை செய்யப்பட்டதும் (ஜேம்ஸை யூதர்கள் கல்லால் அடித்துக் கொன்றார்கள். பால், ரோம் நகருக்குச் சென்றபோது மன்னர் நீரோ அவரை சிறையில் அடைத்தார். அங்கேயே அவர் உயிரையும் விட்டார்.) மக்களிடையே மிகப்பெரிய அனுதாபத்தை உண்டாக்கியது. இது, முன்னைக்காட்டிலும் வேகமாக கிறிஸ்தவம் பரவ உதவியாக அமைந்ததை மறுக்க இயலாது.கிறிஸ்தவம் இப்படிப் பரவத் தொடங்கிய அதே வேளை, ஜுதேயாவின் யூதர்களுக்கு வேறொரு வகையிலும் நெருக்கடி ஆரம்பமானது.இயேசுவின் சீடர்களால் புதிய ஏற்பாடு எழுதப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் பாலஸ்தீன் என்பது (அப்போது பலெஸ்தீனா) வடக்கே சிரியா, லெபனான் தொடங்கி தெற்கே எகிப்தின் சில பகுதிகள்வரை நீண்டதொரு மிகப்பெரிய நிலப்பரப்பு. அதில் ஜுதேயா என்கிற இஸ்ரேலின் இடம் மிகச் சொற்பமானது. ஆனபோதும் (ரோமானிய ஆளுகைக்கு உட்பட்ட அளவில்) அப்போது அது தன்னாட்சி அதிகாரம் பெற்றது. ஹெரோத் மன்னன் இருந்தவரை, ரோமானிய சக்கரவர்த்திக்கு அவர் யாராக இருந்தாலும் மிக நெருக்கமானவராக இருந்தான். இதனால் படையெடுப்பு போன்ற ஆபத்துகள் ஏதும் ஜுதேயாவுக்கு இல்லாமல் இருந்தது. அங்கே ஏதாவது ஒரு பிரச்னை என்றால் அது ஹெரோதால் மட்டுமே உண்டாக்கப்படக் கூடியதாக இருந்தது.கி.மு. நான்காம் நூற்றாண்டில் ஹெரோத் இறந்ததும், ரோம் அதிகாரபீடம் ஜுதேயாவை முழுவதுமாகத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டுவிட்டது. அதன்பிறகு, ஹெரோத் மாதிரி முடிசூடிக்கொண்டு யாரும் ஆட்சிபுரிய முடியவில்லை. ரோமானிய மன்னரின் பிரதிநிதியாக கவர்னராக மட்டுமே ஆள முடிந்தது. அது, ஹெரோதின் மகனே ஆனாலும் சரி.ஹெரோதின் மரணம் தொடங்கி பல நூற்றாண்டுகளுக்கு இப்படித்தான் இஸ்ரேல், ரோமானியக் காலனியாக இருக்கவேண்டியிருந்தது. ரோம் அதிகாரபீடம் எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படவேண்டியிருந்தது. அரசியல் ரீதியில் இதனால் பெரிய பிரச்னைகள் ஏதுமில்லாத போதும் மத ரீதியில் அவர்களுக்குச் சில தர்மசங்கடங்கள் இருந்தன. காரணம், அப்போது ரோமில் திட்டவட்டமான மதம் என்று ஏதும் கிடையாது. ஆங்காங்கே சிறு தெய்வ வழிபாடுகள் இருந்தன. பெரும்பாலும் மக்களுக்கு மன்னரே கடவுள். ரோமில் பரவியிருந்த யூதர்களாலேயே இதனைச் சகிக்க முடியவில்லை என்கிறபோது, இந்த "மன்னரே கடவுள்" திட்டம் ஜுதேயாவுக்கும் பொருந்தும் என்றொரு சட்டம் கி.பி 40-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.அப்போது ரோமானிய மன்னராக இருந்தவரின் பெயர் காலிகுலா (சிணீறீவீரீuறீணீ). அவர்தான், இனி ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட அனைத்து இடங்களில் உள்ள தேவாலயங்களிலும் தன் சிலையை மட்டுமே வைத்து, தன்னை மட்டுமே தொழவேண்டும் என்றொரு விபரீத உத்தரவைப் பிறப்பித்தார்.அரசியல் ரீதியிலான எந்தவிதத் திணிப்பையும் சகித்துக்கொள்ளத் தயாராக இருந்த யூதர்களால், இந்த வழிபாட்டுத் திணிப்பை மட்டும் ஏற்க முடியவில்லை. யூதர்களுக்கு ஒரே கடவுள். அவர்கள் தம் கடவுளை ஜெஹோவா என்று அழைப்பார்கள். அவரைத்தவிர வேறு யாரையும் தொழ அவர்கள் தயாராக இல்லை. (இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பே "ஒன்றே கடவுள்" என்கிற கருத்தாக்கத்தைக் கொண்டிருந்த மதம் யூத மதம்தான்.)ஆகவே அவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இப்படியரு உத்தரவுக்கு அடிபணிவதைக் காட்டிலும் இறப்பதே மேல் என்று முழங்கினார்கள்.ஜுதேயாவின் அப்போதைய கவர்னராக இருந்தவர், ஆக்ரிப்பா-1 என்பவர்.
    அவர், நிலைமையை எடுத்துச் சொல்லி விளக்கம் அளிப்பதற்காக ரோமுக்குப் போனார். யூதர்களின் வழிபாட்டு முறை என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவது. திடீரென்று அதை மாற்றச் சொல்வது முடியாத காரியம். ரோமானிய மன்னரின் மீது அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால் தொழுவதற்குரிய கடவுளாக அவரை எந்த யூதரும் ஏற்கமாட்டார்கள் என்பதைக் கொஞ்சம் சுற்றி வளைத்து ஒருவாறு தெரியப்படுத்திவிட்டார் ஆக்ரிப்பா-1.அவருடைய நல்லநேரம், ரோமானிய மன்னர் காலிகுலா, கோபமடையாமல், ஜுதேயாவின் தேவாலயங்களில் தன்னுடைய சிலையை வைத்துத் தொழவேண்டுமென்கிற அரசு உத்தரவைத் திரும்பப்பெற முடிவு செய்தார்.ஆனாலும் போராட்டத்தில் இறங்கியதால் கைதுசெய்யப்பட்ட யூதர்களை அவர் மன்னிக்கத் தயாராக இல்லை. அவர்கள் யாவரும் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியவர்களே என்று நினைத்தார். அரசர் சொல்வதைக் கேட்டால் அது ராஜ விசுவாசம். கேட்க மறுத்தால் ராஜதுரோகம். ராஜதுரோகக் குற்றச்சாட்டுக்குத் தண்டனை என்றால், அது மரணம் மட்டுமே. இதனடிப்படையில் ஆயிரக்கணக்கான ஜுதேயா யூதர்கள் மரணத்தின் வாசலில் காத்திருந்தபோது, அவர்களுக்கு ஓர் அதிர்ஷ்டம் அடித்தது. தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, சற்றும் எதிர்பாராத வகையில் மன்னர் காலிகுலா அவரது அரசியல் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார். ரோமில் நிகழ்ந்த ஆட்சிமாற்றம், இங்கே இஸ்ரேல் யூதர்களின் உயிரைக் காப்பாற்றியது.இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கி.பி. 66-ம் ஆண்டு வரை ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக இருந்த ஜுதேயா என்கிற இஸ்ரேலில் வேறெந்தப் பிரச்னையும் பெரிதாக எழவில்லை. சுதந்திர வேட்கையோ, தனிநாடு கோரிக்கையோ அவர்களிடம் இல்லை. பாலஸ்தீனப் பெருநிலத்திலிருந்த மற்ற சில நாடுகளும் கூட இப்படி ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டுத்தான் இயங்கின என்பதால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாகவே படவில்லை. ரோமானியர்கள், ஆளப்பிறந்தவர்கள். நாம் அடங்கி வாழவேண்டியவர்கள். இது இயல்பாக மக்கள் மனத்தில் ஊறிப்போயிருந்தது.கி.பி.66-ல்தான் அங்கே முதல்முதலில் ஒரு புரட்சி ஏற்பட்டது. புரட்சி செய்தவர்களும் யூதர்களே. ஜெருசலேமை முற்றிலுமாக ரோமானிய ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்து, ஒரு முழுமையான யூத சாம்ராஜ்ஜியத்தை அமைக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட அந்தப் புரட்சியை "ஸிலாட்" (ஞீமீணீறீஷீts) என்கிற அமைப்பினர் முன்னின்று நடத்தினார்கள். ஒட்டுமொத்த ஜெருசலேம் யூதர்களின் எண்ணிக்கையைப் பார்க்க, ஸிலாட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையோர்தாம். அவர்களது புரட்சி, மக்களுக்கு சந்தோஷத்தைக் காட்டிலும் பயத்தையே தந்தது. ஏனெனில், அவர்கள் எதிர்ப்பது ஒரு சாதாரண தேசத்தையோ, குறுநில மன்னனையோ அல்ல. மாபெரும் ரோம சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியை எதிர்த்துப் புரட்சி செய்ய ஆரம்பித்திருந்தார்கள். இது நிச்சயம் அபாயகரமானது என்று கருதினார்கள்.ஆனால், புரட்சிக்காரர்கள் மிகச் சுலபமாக ஜுதேயா கவர்னரின் ராணுவத்தைச் சிதறடித்து ஜெருசலேமைக் கைப்பற்றிவிட்டார்கள். தவிர இஸ்ரேலின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளிலும் கணிசமான இடத்தை அவர்களால் ஆக்கிரமித்துவிட முடிந்தது. ஆனால், எப்படியும் ஒரு முழுமையான யூத அரசை நிறுவிவிட முடியும் என்று அவர்கள் கொண்ட நம்பிக்கை, அடுத்த ஒரு வருடத்தில் தரைமட்டமானது.இப்போது, ரோமானியப்படை முழு வேகத்தில் இஸ்ரேலின் மீது தாக்குதலை ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக இழந்த இடங்களை மீட்கத் தொடங்கியது.கி.பி. 70-ம் ஆண்டு அது நடந்தது. பிரளயம் வந்தது போல இஸ்ரேலுக்குள் நுழைந்த மாபெரும் ரோமானியப் படையன்று, இண்டு இடுக்கு விடாமல் அடித்து துவம்சம் செய்ய ஆரம்பித்தது. புரட்சி செய்த ஸிலாட் அமைப்பினர் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனார்கள். கோரதாண்டவம் என்பார்களே, அது! ஜெருசலேம் உள்பட புரட்சிக்காரர்கள் கைப்பற்றியிருந்த அத்தனை இடங்களையும் ஒட்டுமொத்தமாகக் கையகப்படுத்தியது ரோமானிய ராணுவம். ரோமானியச் சக்கரவர்த்தியின் மகனான டைடஸ் (ஜிவீtus) என்பவனே அப்போது ராணுவத் தளபதியாக வழிநடத்திக்கொண்டு வந்திருந்தான். தம்மை எதிர்த்த அத்தனை பேரையும் அவர்கள் கொன்றார்கள். தடுத்த சுவர்களையெல்லாம் இடித்தார்கள். கண்ணில்பட்ட கட்டடங்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கினார்கள். சாலைகள் சிதைந்தன. குளங்கள் உடைந்தன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என்று அவர்கள் வித்தியாசம் பார்க்கவே இல்லை. கண்ணில் தென்பட்ட அத்தனை யூதர்களையும் கதறக் கதறக் கொன்று வீசினார்கள்.இந்தத் தாக்குதலின் உச்சகட்டம் ஜெருசலேம் நகரில் நிகழ்ந்தது. ஆ, அந்தக் கோயில்! இந்தக் கோயிலை முன்னிட்டு அல்லவா யூதர்கள், ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆணையை முதல் முதலில் எதிர்த்துக் கலகம் செய்தார்கள்? இதைத்தானே ஒட்டுமொத்த யூதர் குலத்துக்கே புனிதத்தலம் என்று சொல்லி, தம்பட்டம் அடித்துக்கொண்டார்கள்? அவர்களது ஆணவத்தின் அடையாளமல்லவா இது? இதன் பழம்பெருமைதானே அவர்களைத் திமிர் பிடித்து ஆடவைத்தது?இனி எக்காலத்துக்கும் யூதர்கள் புரட்சி என்று இறங்க நினைக்கக்கூடாதபடிக்குத் தாக்குதலை முழு வேகத்தில் நடத்தவேண்டும் என்று நினைத்தவர்கள், கோயிலை இடிக்க ஆரம்பித்தார்கள். தாக்குதல் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அது தூள்தூளாகச் சிதறி, உதிர ஆரம்பித்தது. கதவுகள் பெயர்த்து எடுக்கப்பட்டன. அலங்கார விளக்குகள் உடைத்து நொறுக்கப்பட்டன. தூண்கள் இடிக்கப்பட்டன. மாடங்களில் தீவைத்தார்கள். முன்னதாக வெகு ஜாக்கிரதையாக உள்ளே இருந்த அத்தனை மதிப்புள்ள பொருள்களையும் சுருட்டி வாரி மூட்டைகட்டி ரோமுக்கு அனுப்பிவிட்டார்கள். அவற்றுள் முக்கியமானவை, கோயிலின் மிகப்புனிதமான பொருள்களாகக் கருதப்பட்ட தங்கத்தாலான பாத்திரங்களும், வேலைப்பாடுகள் மிக்க, பிரமாண்டமான தங்க மெழுகுவர்த்தித் தாங்கி (நிக்ஷீமீணீt விமீஸீஷீக்ஷீணீலீ என்பார்கள். சிணீஸீபீமீறீ ஷிtணீஸீபீ.) ஒன்றும். ரோமானியர்களின் படையெடுப்பை, படுகொலைகளைக் கூட யூதர்கள் அமைதியுடன் சகித்துக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் ஜெருசலேம் தேவாலயத்தை அவர்கள் தாக்கத் தொடங்கியதும், பொறுக்கமுடியாமல் எதிர்த்துப் போரிட வீதிக்குத் திரண்டு வந்தார்கள்.ஆனால், பிரமாண்டமான ரோமானியப் படையின் எதிரே ஜெருசலேம் யூதர்கள் வெறும் கொசு. கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் யூதர்கள் அந்தப் போரில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிறது வரலாறு. இதைத்தவிர, ஜெருசலேம் தேவாலயத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்த மதகுருக்களைத் தனியே நிற்கவைத்துக் கழுவிலேற்றினார்கள் ரோமானியர்கள்.ஜெருசலேம் நகரமே ஒரு மாபெரும் குப்பைத்தொட்டி போலக் காட்சியளித்தது. எங்கும் பிணங்கள். ரத்தம். இடிபாடுகளின் இடையே கேட்ட கதறல் ஒலிகள். வல்லூறுகள் வானில் வட்டமிட்ட வேளையில் கொள்ளையடித்த பொருள்களை மூட்டைகட்டிக்கொண்டு ரோமானியப்படை ஊருக்குத் திரும்ப ஆரம்பித்தது.இரண்டாவது முறையாகக் கட்டப்பட்ட அந்த ஆலயம் மீண்டும் இடிக்கப்படும் என்று முன்னரே யூகித்துச் சொன்ன இயேசுவைத்தான் அப்போது ஜெருசலேம் நகரத்து யூதர்கள் நினைத்துப்பார்த்தார்கள்.கிறிஸ்தவத்தின் மீதான அவர்களது வெறுப்பு இன்னும் பல மடங்காக உயர ஆரம்பித்தது.

    தொடரும்.............

    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 9 டிசம்பர், 2004

  12. #12
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் ரத்தம் 6

    பிரித்து ஆளும் சூழ்ச்சி

    ஒரு கோயிலை இடிப்பதென்பது எப்பேர்ப்பட்ட சரித்திர வடு என்பது மற்ற யாரையும் விட நமக்கு மிக நன்றாகத் தெரியும். முதல் தலைமுறைக்குக் கண்ணைவிட்டு அகலாத காட்சியாகவும், எந்தத் தலைமுறைக்கும் நெஞ்சைவிட்டு நகராத சம்பவமாகவும் அப்படியே படிந்துவிடக்கூடியது அது.
    யூதர்களைப் பொறுத்தவரை அப்படியரு சம்பவத்தைத் தம் வாழ்நாளில் இரண்டாவது முறையும் அவர்கள் பார்த்துவிட்டார்கள். கி.பி. 70-ம் ஆண்டு ரோமானியத் தாக்குதலுக்கு இலக்காகி, இடிக்கப்பட்ட அந்தத் தேவாலயம் இன்றுவரை மீண்டும் கட்டப்படவில்லை. இன்னொரு தேவதூதன் இறங்கிவந்து மீண்டும் அதைக் கட்டித்தருவான் என்று யூதகுலம் காத்திருக்கிறது. இடிந்த கோயிலின் ஒரு செங்கல்லைக்கூட அவர்கள் திரும்ப எடுத்து அடுக்க முயற்சி செய்யவில்லை. அப்படியே விட்டுவிட்டார்கள். படையெடுப்பின் ஞாபகார்த்தமாக இன்னும் மிச்சமிருக்கும் கோயில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியைத்தான் அவர்கள் தம் புனிதத்தின் மிச்சமாக வைத்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள். கதையல்ல. உண்மையிலேயே இன்று உலகெங்கும் பரவி வசிக்கும் (இஸ்ரேலில் மட்டும் தொண்ணூறு சதவிகிதம்) சுமார் ஐம்பது லட்சம் யூதர்களுக்கும் அதுதான் நம்பிக்கை. அதுதான் ஞாபகார்த்தம்.
    கோயிலை தேவதூதன் வந்து கட்டித்தருவான். உடைந்த மனங்களை யார் வந்து கட்டித்தருவார்கள்?
    அதுதான். அந்தத் தருணம்தான். முதல்முதலாக யூதர்கள் தம்மையரு தனித்தீவாக்கிக்கொண்டுவிட முடிவு செய்த தருணம் அதுவேதான். தமது மதத்துக்கும் கலாசாரத்துக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் எந்தக் காலத்திலும் மற்றவர்களால் ஆபத்து இருந்தே தீரும் என்று ஜுதேயா யூதர்களுக்கு அன்று உறுதியாகத் தோன்றியது. முக்கியமாக, "இயேசுவைக் கொன்றவர்கள்" என்று கிறிஸ்தவப் பிரசாரகர்கள் மிகத்தீவிரமாக உலகெங்கும் சொல்லிக்கொண்டு போனது மாபெரும் அவமானமாக அவர்களின் வாழ்வின் மீது கவிந்து நின்றது.
    மிகக்கூர்மையாக கவனிக்கவேண்டிய விஷயம் இது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட காலத்தில் ஜுதேயா யூதர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். லட்சத்தைக் கூடத் தொடவில்லை. ஆயிரங்களில்தான் இருந்தது அவர்களது எண்ணிக்கை. இயேசுவின் மரணத்தையும் உயிர்த்தெழுந்து விண்ணேறிய சம்பவத்தையும் அடுத்து, அதே ஜுதேயா யூதகுலம்தான் இரண்டாகப் பிரிகிறது. இயேசுவைப் பின்பற்றி, அவர் பேசிய மொழிகளின் அடியற்றி வாழ முடிவெடுத்தவர்கள், கிறிஸ்தவர்கள் எனப்பட்டார்கள். அவர்களேதான் மிச்சமுள்ள தமது பூர்வீகக் குலத்தவரை அப்படிப் பழிக்கவும் தொடங்கினார்கள். வேற்று இனத்தவர்கள் அல்லர். முக்கியமாக, அராபியர்கள் அல்லர்.
    இந்தச் சம்பவங்கள் நடந்துகொண்டிருந்தபோது பாலஸ்தீன அராபியர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்தார்கள். அவர்களது தேவதூதர் அப்போது பிறக்கவில்லை. இன்னும் சில நூற்றாண்டுகள் அவர்கள் காத்திருந்தே தீரவேண்டும். அதுவரை தமக்குத் தெரிந்த சிறுதெய்வங்களை (முக்கியமாக, கற்களை நட்டு வணங்கும் வழக்கம் அராபியர்களிடையே அதிகம்.) வணங்கிக்கொண்டு, உழுது பிழைத்து வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
    அப்போதைய பிரச்னை, அராபியர்களுக்கும் யூதர்களுக்குமானதல்ல. யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமானது. யூதர்களுக்கும் ரோமானியர்களுக்குமானது. (ரோம் அப்போது கிறிஸ்தவத் தலைமையகமாக ஆகியிருக்கவில்லை. மன்னர் மற்றும் சிறு தெய்வ வழிபாடுகள்தாம் அங்கேயும்.) ரோமானிய ஏகாதிபத்தியம், கிறிஸ்தவத்தின் அசுரவேக வளர்ச்சி என்கிற இரண்டு காரணிகள்தாம் யூதர்களின் அன்றைய பிரதானமான பிரச்னைகள்.
    ஆகவே கோயிலில் இடிக்கப்பட்ட சுவரை அவர்கள் தம் மனங்களுக்குள் எழுப்பிக்கொண்டார்கள். யூதகுலம் என்பது இறைவனால் "தேர்ந்தெடுக்கப்பட்ட" ஓர் இனம் என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்து, யூதர்களுக்கு இடையிலான ஒற்றுமையைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். தமக்குச் சவால்விடுகிற சக்திகள் அனைத்தையுமே அவர்கள் சாத்தானாகக் கருதத் தொடங்கினார்கள்.
    ரோமானியர்களுக்கு எதிராக முதல் கலகத்தை உண்டாக்கிய "ஸிலாட்" இயக்கம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியது. முன்னைவிட வலுவானதாக - முன்னைவிட ஆதரவாளர்கள் நிறைந்த ஓர் இயக்கமாக - முன்னைவிட திட்டமிட்டுச் செயல்படக்கூடிய அமைப்பாக!
    அந்தக் காலத்தில் ரோமானியக் காலனிகளாக இருந்த எல்லா இடங்களிலும் "தாம் ரோமின் குடிமக்கள்" என்று சொல்லிக்கொள்வது ஒரு கௌரவமான விஷயமாகக் கருதப்பட்டது. முதல் முதலில் கலாசாரச் செழுமை கொண்டதொரு சமூகமாக மேற்கில் ரோமானிய சாம்ராஜ்ஜியமே சொல்லப்பட்டது. இது ஓரளவு உண்மையும்கூட. அடிப்படைப் பொருளாதார வசதி, அடிப்படைக் கல்வி இரண்டிலும் அன்றைய ரோமானிய மன்னர்கள் தீவிர கவனம் செலுத்தியதே இதன் காரணம். கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்ந்த சமூகம், மேம்பட்ட சமூகமாக வருணிக்கப்படுவதில் வியப்பில்லை.
    ஆனால் இதெல்லாம் ரோமில் மட்டும்தானே தவிர மத்தியக்கிழக்கில் பரவியிருந்த ரோமானியக் காலனிகள் அனைத்திலும் அல்ல. பாலஸ்தீன் தவிர அன்று ரோமானியக் காலனிகளாக இருந்த பெர்சியா, பாபிலோன், (இன்றைய ஈரான், ஈராக்), எகிப்து போன்ற இடங்களிலும், பொருளாதாரமல்ல; வறுமையே தாண்டவமாடியது. கல்வியெல்லாம் சிறுபான்மையோரின் ஆடம்பர விஷயமாக இருந்தது. வாய்வார்த்தைக்கு "ரோமானியக் குடிமக்கள்" என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாமே தவிர, உண்மையில் அவர்கள் பரிதாபத்துக்குரிய வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். விளைச்சல் வருமானமெல்லாம் ரோமுக்குப் போய்க்கொண்டிருக்க, ஏழைமையும் குறுங்குழு மனப்பான்மையும் மட்டுமே அப்பகுதி மக்களின் வாழ்க்கையாக இருந்தது.
    இந்நிலையில், ஜுதேயா (இஸ்ரேல்) யூதர்களின் ஸிலாட் இயக்கம் மீண்டும் புத்துருவம் கொண்டு சிலிர்த்து எழ ஆரம்பித்தபோது, பாலஸ்தீனுக்கு வெளியே வசித்துவந்த யூதர்களும் அவர்களை ஆதரிக்க முன்வந்தார்கள். தேச எல்லைகளால் தாங்கள் பிரிந்திருந்தாலும் "யூதர்கள்" என்கிற அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இந்த ஒற்றுமை அவசியம் என்று கருதினார்கள்.
    யூதர்களின் எழுச்சியில் இந்தச் சம்பவம் மிக மிக முக்கியமானதொன்று. உலகின் எந்த மூலையில் அவர்கள் பிரிந்து வசித்தாலும் ஒரு பிரச்னை என்றால் ஒன்று சேர்ந்தே தீர்வது என்கிற முடிவை முதல் முதலில் எடுத்தது அப்போதுதான். இன்றைக்கும் உலகின் எந்த மூலையில் உள்ள எந்த ஒரு யூதருக்கு என்ன பிரச்னை என்றாலும் அந்த நாட்டு அரசல்ல; இஸ்ரேல் அரசுதான் முன்னால் வந்து நிற்கிறது! அதேபோல் இஸ்ரேலின் பிரச்னை எதுவானாலும் அது தன் சொந்தப் பிரச்னை என்றே எந்த நாட்டில் வசிக்கும் யூதர்களும் நினைக்கிறார்கள்.
    இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் அதாவது, பாலஸ்தீன மண்ணில் யூதர்களின் தனி நாட்டை உருவாக்கியே தீருவது என்று முடிவு செய்து அதற்கான வேலைகளை யூதர்களின் அரசியல் பிரிவுத் தலைவர்கள் ஆரம்பித்தபோது ஒரே ஓர் அழைப்பைத்தான் விடுத்தார்கள். அதுவும் மென்மையாக. மிகவும் ரகசியமாக. "யூதர்களே, இஸ்ரேலுக்கு வாருங்கள்!"
    அவ்வளவுதான். லட்சக்கணக்கான யூதர்கள், காலம் காலமாகத் தாங்கள் வசித்துவந்த நாடுகளை அந்தக் கணமே துறந்து, சொத்து, சுகங்கள், வீடு வாசல்களை அப்படியே போட்டுவிட்டு இஸ்ரேலுக்குக் கிளம்பிவிட்டார்கள். இஸ்ரேல் நிச்சயமாக உருவாக்கப்பட்டுவிடுமா என்று அவர்கள் கேட்கவில்லை. புதிய இடத்தில் தாங்கள் வசிக்க சௌகரியங்கள் இருக்குமா என்று பார்க்கவில்லை. வேலை கிடைக்குமா, வீடு கிடைக்குமா, வாழ விடுவார்களா, யுத்தங்களைச் சந்திக்க நேரிடுமா என்றெல்லாம் யோசிக்கவே இல்லை.
    ஒரு சொல். ஒரு கட்டளை. ஒரே முடிவு. யூதர்கள் என்கிற ஓர் அடையாள நிமித்தம் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒருங்கிணைந்த கதையைப் பின்னால் விரிவாகப் பார்க்கப்போகிறோம். இதற்கெல்லாம் ஆரம்பக் காரணியாக அமைந்த "ஸிலாட்" இயக்கத்தின் மறுபிறப்பை ஒட்டி நடந்த சம்பவங்களை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
    ஜெருசலேம் நகர ஆலயத்தை ரோமானியர்கள் இடித்தது, கி.பி. 70-ம் ஆண்டில். அதன் தொடர்ச்சியாகச் சுமார் மூன்றிலிருந்து நான்கு ஆண்டுகள் யூதர்களுக்கும் ரோமானியர்களுக்குமான யுத்தங்கள் விட்டுவிட்டு நடந்துகொண்டுதானிருந்தன. ஜெருசலேம் யூதர்களுக்கு, பாலஸ்தீனுக்கு வெளியே இருந்த யூதர்கள் தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்தார்கள்.
    அடிபணியக்கூடாது என்பது மட்டும்தான் அவர்களது திடசித்தமாக இருந்தது. யூதர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்லர். தாங்கள் வசிக்கும் நிலப்பரப்பைத் தாங்களே ஆளத் தகுதி படைத்தவர்கள். ரோமானியச் சக்கரவர்த்திக்கு அடிவருடிக்கொண்டிருக்க இனியும் அவர்கள் தயாராக இல்லை. ரோமானியச் சக்கரவர்த்திக்குப் பெரிய படை இருக்கலாம். ஆள் பலமும் பணபலமும் இருக்கலாம். ஆனால் யூதர்களிடம் ஒற்றுமை இருக்கிறது. யுத்தத்தில் வீரமரணம்தான் என்பது தெரிந்தே அவர்கள் துணிவுடன் இறங்கினார்கள். வெல்வதைக்காட்டிலும், தம் எதிர்ப்புணர்வைத் தொடர்ந்து பதிவு செய்துகொண்டு இருக்கவே அவர்கள் அப்போது விரும்பினார்கள். ஏனெனில், ரோமானியப் படைகளை எதிர்த்து வெற்றி பெற இயலாது என்பதை அவர்கள் மிக நன்றாக உணர்ந்திருந்தார்கள்.
    கி.பி. 73-ம் வருடம் அது நடந்தது. சாக்கடல் ஓரத்தில் உள்ள மஸதா என்கிற இடத்தில் யூதர்கள் மீது ரோமானியர்கள் தாக்குதல் நிகழ்த்தினார்கள். யூத குல வரலாற்றில் அப்படியரு கோரசம்பவம் மிக அரிதாகவே நிகழ்ந்திருக்கிறது.
    யுத்தமும் மரணமும் வாழ்வின் ஓர் அங்கம் என்று முடிவு செய்துவிட்ட யூதர்கள் ஒருபுறம். ஒரு யூதக் கொசுவும் உயிருடன் இருக்கக்கூடாது என்கிற வெறியுடன் மோதிய ரோமானியப்படை மறுபுறம். ரோமானியர்களைப் பொறுத்தவரை, யூதர்கள் சுயராஜ்ஜியத்துக்காக நிகழ்த்தும் கிளர்ச்சிகளை ஒடுக்குவதில் அது ஒரு பகுதி. யூதர்களுக்கோ, சுயராஜ்ஜியம் என்பது வெறும் நிலம் சம்பந்தப்பட்ட விஷயமல்ல. அது அவர்களின் சுயமரியாதை. காலனியாதிக்க ஒழிப்பை முன்னிட்ட சுய ஆஹுதி.
    மிகவும் கோரமான தாக்குதல் அது. முன்பே தீர்மானிக்கப்பட்ட முடிவுடன் ஆரம்பமான யுத்தம். எப்படியும் ரோமானியர்கள்தான் வெல்லப்போகிறார்கள் என்பது தெரிந்தே யூதர்கள் தம் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கினார்கள். ஆனால் ரோமானியர்கள் நேரடி யுத்தத்தைக் காட்டிலும் அந்த முறை கெரில்லா முறைத் தாக்குதலையே அதிகம் மேற்கொண்டார்கள். இரவில் கிராமம் கிராமமாகப் புகுந்து தீவைத்துவிட்டு, அலறியோடும் யூதர்களை வெட்டிக்கொன்றார்கள். குழந்தைகளை உயரே தூக்கிக் கழுத்தை நெரித்து அப்படியே கடலில் வீசினார்கள். கண்ணில் பட்ட யூதப்பெண்கள் அனைவரின் மீதும் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டது. யூதர்களின் கால்நடைகளை வெட்டி வீதிகளில் எறிந்தார்கள். வீடுகள் இடிக்கப்பட்டன. கல்விக்கூடங்கள், கோயில்கள் அனைத்தும் கொளுத்தப்பட்டன.
    ரோமானியர்களிடம் பிடிபடுவதை விரும்பாத பல யூதக்குடும்பங்கள், அகப்படுவதைக் காட்டிலும் தற்கொலை செய்துகொண்டுவிடுவது சிறந்தது என்று முடிவு செய்து, கொத்துக்கொத்தாக இறந்துபோனார்கள். குடும்பத் தலைவர்கள் தம் மனைவி, குழந்தைகளைக் கொன்று, தன்னையும் மாய்த்துக்கொண்டார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான யூதக்குடும்பங்கள் இப்படித் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றன.
    மரணத்தின் சகிக்கமுடியாத வாடை நிறைந்த சரித்திரத்தின் இந்தப்பக்கங்கள், இச்சம்பவம் நடந்ததற்குச் சுமார் 1,900 வருடங்கள் கழித்து மீண்டும் வெளிச்சத்துக்கு வந்தன. 1960களில் பாலஸ்தீனப் பகுதிகளில் நடத்தப்பட்ட தொல்பொருள் ஆய்வுகள், மஸதா யுத்தத்தின் எச்சங்களை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன. ஒரு சிறு குகையினுள் சுமார் இருபத்தைந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் எலும்புக்கூடுகள் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டன. கார்பன் பரிசோதனைகள், அந்த எலும்புக்கூடுகளின் வயதைத் துல்லியமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன. ரோமானியர்களின் பிடியில் அகப்படுவதை விரும்பாத யூதக்குடும்பங்கள் மொத்தமாகத் தம்மை மாய்த்துக்கொண்ட பெருங்கதையின் ஏதோ ஓர் அத்தியாயம் அது!
    இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஜெருசலேம் யூதர்களைச் சமாளிப்பதற்கு ரோமானியர்கள் ஒரு புதிய வழியை யோசித்தார்கள். ஜெருசலேம் நகரின் தெய்வீகப் பெருமையும், அந்தக் கோயிலின் ஞாபகங்களும் இயல்பாகவே அந்த நகரில் வசிப்பவர்களின் மனத்தில் பொங்கும் பெருமித உணர்வும்தான் அவர்களை, சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராகக் கலகம் செய்யத் தூண்டுகின்றன என்று கருதிய ரோமானியர்கள், யூதர்களைப் பிரித்து ஆளலாம் என்று முடிவு செய்தார்கள்.அதன்படி, ஜெருசலேமில் எந்த ஒரு யூதரும் இருக்கக்கூடாது. ஜுதேயாவின் யூதர்கள் அனைவரும் கடற்கரையோர கிராமங்களுக்குப் போய்விடவேண்டியது. (இன்றைய காஸா, அதன் சுற்றுப்புறப்பகுதிகள்.)
    இதை ஓர் உத்தரவாகவே ரோமானியப் பேரரசு ஜுதேயாவில் கொண்டுவந்தது. கடற்கரையோர கிராமங்களில் கூட யூதர்கள் மொத்தமாக வசிக்கக்கூடாது என்று நினைத்தவர்கள், அங்கே ஏற்கெனவே இருந்த பிற அராபிய சமூகத்தினரிடையேதான் துண்டு துண்டாக யூதர்களைக் கொண்டுபோய்ச் சொருகினார்கள்.இப்படிப் பிரித்தாளுவதன்மூலம் யூதர்களின் கிளர்ச்சியை அடக்கலாம் என்று நினைத்தது ரோமானிய அரசு.
    ரோமானியர்கள் எதிர்பார்த்தபடியே கிளர்ச்சி அடங்க ஆரம்பித்தது உண்மைதான். ஆனால் கடற்கரையோர கிராமங்களுக்குக் குடிபெயர்ந்த யூதர்கள் வேறொரு காரியத்தை மிகத்தீவிரமாக அப்போது ஆரம்பித்திருந்தார்கள்.
    கிளர்ச்சியைக் காட்டிலும் பெரியதொரு புரட்சி அது.

    தொடரும்.............
    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 12 டிசம்பர்,

Page 1 of 5 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •