Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast
Results 13 to 24 of 49

Thread: நிலமெல்லாம் இரத்தம்

                  
   
   
  1. #13
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
    Join Date
    23 Jun 2007
    Posts
    3,869
    Post Thanks / Like
    iCash Credits
    237,295
    Downloads
    69
    Uploads
    1
    நண்பர் ரமணரே... நிறைய தெரிந்து கொண்டேன் இந்த கட்டுரையில்.. மிக்க நன்றி தங்களின் இந்த சேவைக்கு... தொடர்ந்து கொடுக்கவும்.. அத்துடன் வேறுசில உலக வரலாறு ஏதாவது கைவசம் இருப்பினும் இங்கே தந்தருள வேண்டுகிறேன் தங்களை...நட்பன்புடன்..நான்..!
    Last edited by சுகந்தப்ரீதன்; 11-12-2007 at 09:10 AM.
    ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
    வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
    உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
    பழுதுண்டு வேறோர் பணிக்கு.
    -நல்வழி

  2. #14
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் ரத்தம் - 7

    புத்தியால் வெல்வது

    முன்குறிப்பு: இந்த அத்தியாயத்தில் வருகிற மத குருக்கள், யூதப் பள்ளி ஆசிரியர்களின் ஓவியங்கள் எதுவும் துரதிர்ஷ்ட வசமாக இன்று நமக்குக் கிடைப்பதில்லை. யூதர்கள் தம் செயல்பாடுகளை மிக ரகசியமாக வைத்துக்கொண்ட ஒரு காலகட்டத்தைச் சித்திரிக்கும் அத்தியாயம் என்பதால் சம்பந்தப்பட்ட நபர்களின் ஓவியங்கள் எதுவும் வரையப்பட்டிருக்கவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.)
    மஸதா தாக்குதலுக்கும் அழிவுக்கும் பிறகு பாலஸ்தீனின் கடற்கரையோரப் பகுதிகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட யூதர்களுக்கு, வாழ்க்கை எப்போதும் போல் பிரச்னைகள் மிக்கதாகத்தான் இருந்தது. ஆனால் அழிவுகளாலும் இழப்புகளாலும் இடமாற்றத்தாலும் அவர்கள் நிலைகுலைந்து போய்விடவில்லை.
    ரோமானியர்களை எதிர்த்து அவர்கள் செய்த கலகங்களும் சிறு புரட்சிகளும் தொடர்ந்து தோல்வியையே தழுவி வந்தாலும் ஒரு சிறிய நம்பிக்கைக்கீற்று அவர்களிடையே இருந்தது.யுத்தத்தால் ஜெயிக்க முடியாதவர்களை புத்தியால் ஜெயித்தால் என்ன?
    இதுதான் அவர்களது யோசனையின் ஒருவரிச் சுருக்கம். பின்னாளில் தமது சரித்திரமெங்கும் அறிவாளிகள் என்றும் புத்திசாலிகள் என்றும் ராஜதந்திரம் மிக்கவர்கள் என்றும் குயுக்திக்குப் பேர்போனவர்களாகவும் யூதர்கள் சித்திரிக்கப்பட்டதற்கெல்லாம் ஆரம்பம் இங்கேதான் நிகழ்கிறது.
    அன்றைய ஜெருசலேம் யூதர்களிடையே இத்தகைய யோசனையை முன்வைத்து, நம்பிக்கையூட்டியவர்கள், சில துறவிகள். யூதத் துறவிகள். ரோமானியர்களால், ஜெருசலேம் ஆலயம் இடிக்கப்படுமுன்பே பல்லாண்டுகளாக அக்கோயிலில் வசித்துவந்த ஜொஹனன் பென் ஸகாய் (Johannan Ben Zachai) என்கிற துறவி அவர்களுள் முக்கியமானவர்.
    ஸகாயின் யோசனை என்னவென்றால், ரோமானியர்களின் தனிச்சிறப்பாக என்னென்ன உள்ளதோ, அவற்றையெல்லாம் யூதர்களும் முதலில் பெறவேண்டும். அவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் என்றால், யூதர்களும் கல்வியில் சிறந்தவர்களாக ஆகிவிடவேண்டும். அவர்கள் பணபலம் படைத்தவர்கள் என்றால் நாமும் பணத்தைப் பெருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அவர்களது கலாசாரப் பெருமைக்கு யூதர்களின் பெருமை எள்ளளவும் குறைந்ததல்ல என்பதை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டவேண்டும். நமது தேசத்துக்குள் வேண்டுமானால் யாரும் ஊடுருவலாமே தவிர, நமது இனத்துக்குள் அது முடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். பிரித்து வாழ வைத்தாலும் மனத்தால் ஒன்றாகவே எப்போதும் இருப்பவர்கள் என்பதை ஆணித்தரமாக உணரச் செய்யவேண்டும்.
    மாபெரும் யூத சாம்ராஜ்ஜியம் ஒன்றை நிறுவுவது என்கிற பெருங்கனவின் முதல் செங்கல், இந்த யூதத் துறவியினாலேயே முதல்முதலில் எடுத்து வைக்கப்பட்டது. "புத்தியால் வெல்வது" என்கிற அவரது வார்த்தைகள் ஒவ்வொரு யூதரின் மனத்திலும் மந்திரம் போல பரவிப் படர்ந்தது.அன்று தொடங்கி, அவர்கள் கிளர்ச்சி செய்வதை அறவே நிறுத்தினார்கள். மாறாக, தம் சந்ததியினருக்கு முறையான கல்வி அளிப்பதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள்.
    ஸகாய், வேறு சில யூத மத குருக்களையும் அழைத்துக்கொண்டு ரோமுக்குப் போனார். சக்கரவர்த்தியைச் சந்தித்து, ஜுதேயா யூதர்கள் இனி கிளர்ச்சி செய்யமாட்டார்கள் என்று நம்பிக்கை அளித்தார். ரோமானிய ஆளுகைக்கு உட்பட்ட குடிமகன்களாகவே அவர்கள் நடந்துகொள்வார்கள் என்று வாக்களித்து, பதிலுக்கு ஒரே ஒரு உத்தரவாதத்தை மட்டும் கேட்டார்.
    பாலஸ்தீன் நிலப்பரப்பின் கடற்கரையோர கிராமங்களிலும் நகரங்களிலும் யூதக் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை ரோமானியப்படை இடிக்கக் கூடாது. அங்கே யூத சாதுக்கள் மதப்பாடங்களை நடத்துவதற்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது.
    ரோமானிய மன்னர் இந்த எளிய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். பள்ளிக்கூடங்களை இடிக்கக்கூடாது; மதபோதனைகளைத் தடை செய்யக்கூடாது. அவ்வளவுதானே என்று அவர் நினைத்திருக்கலாம்.
    ஆனால், இதற்குள் ஒரு சூட்சுமம் இருக்கிறது. ஸகாயின் கோரிக்கை, யூதகுலமே அழியாமல் தடுப்பதற்கான ஒரு கேடயம். கல்வி வளர்ந்து, மதமும் தழைப்பது என்றால் என்ன அர்த்தம்? அதைக்காட்டிலும் யூத குலத்துக்கு ஒரு பெரிய பாதுகாப்பு ஏது? சுயராஜ்ஜியம் என்றைக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம். அதற்காக எப்போது வேண்டுமானாலும் போராடலாம், வெற்றி பெறலாம். முதலில் இனம் அழியாமல் காப்பதல்லவா முக்கியம்? மதம் காணாமல் போய்விடாதவாறு தடுப்பதல்லவா முக்கியம்?
    அதுவும் எப்படிப்பட்ட காலகட்டம் அது! காட்டுத்தீ மாதிரி மத்தியக் கிழக்கு முழுவதும் கிறிஸ்தவம் பரவிக்கொண்டிருந்தது. பல யூதர்கள் கிறிஸ்தவர்களாக மாறிக்கொண்டிருந்தார்கள். சிறு தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பல அராபிய இனக்குழுக்களும் மொத்தமாக கிறிஸ்தவத்தைத் தழுவிக்கொண்டிருந்தன. அராபிய நிலப்பரப்பைத் தாண்டி, ஐரோப்பாவிலும் கிறிஸ்தவம் காலெடுத்து வைக்க ஆரம்பித்திருந்தது.
    பாலஸ்தீன் முழுவதுமே கிறிஸ்தவ மிஷனரிகள் தழைத்தோங்கத் தொடங்கியிருந்தது. அணி அணியாகப் பாதிரியார்கள் தேசம் கடந்து பிரசாரத்துக்குப் போய்க்கொண்டிருந்தார்கள். கிறிஸ்தவம் எந்த நாட்டுக்குப் போகிறதோ, அந்த நாட்டின் நடை உடைகளை, கலாசாரத்தை அப்படியே ஏற்றுக்கொண்டது. அந்தந்த நாட்டு மக்கள் பேசும் மொழியிலேயே கிறிஸ்தவம் பேசப்பட்டது. புதியதொரு திணிப்பாக அல்லாமல், புதியதொரு தரிசனமாகவே கிறிஸ்தவம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மிகச்சுருக்கமாகச் சொல்லுவதென்றால், யூதமதத்தின் எளிய, ஆனால் செம்மைப்படுத்தப்பட்ட வடிவமாகவே ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவம் பார்க்கப்பட்டது.
    இது சநாதன யூதர்களுக்கு மாபெரும் இடைஞ்சலாக இருந்தது. எண்ணிக்கையில் குறைவானவர்கள் என்றபோதும் யூதர்களின் மதம் எத்தனை சிறப்பு மிக்கது, புராதனமானது என்பதையெல்லாம் தம் குலத்தைச் சேர்ந்தவர்களுக்கே எடுத்துச் சொல்லியாக வேண்டிய கட்டாயம் யூத குருமார்களுக்கு இருந்தது. இதற்காகவாவது யூதப்பள்ளிக்கூடங்களில் "தோரா"வைச் சொல்லிக்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
    ஸகாய் குருவுக்கு ரோமானியச் சக்கரவர்த்தி அளித்த உத்தரவாதம் இதற்குச் சாதகமாக அமைந்ததில் வியப்பில்லை அல்லவா?
    ஆகவே, யூதர்கள் கிளர்ச்சியை நிறுத்தினார்கள். அறிவுப்புரட்சியை ஆரம்பித்தார்கள். பெற்றோர்கள் தம் குழந்தைகளைத் தவறாமல் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். தாமும் மிகத்தீவிரமாக மதக் கடமைகளைச் செய்யத் தொடங்கினார்கள். உழைக்கும் நேரமெல்லாம், வேறு சிந்தனையில்லாமல் உழைப்பது. சம்பாதிப்பதை கவனமாகச் சேமிப்பது. ஓய்வு நேரத்தில் பிரார்த்தனைகள், பிரசங்கங்கள் கேட்பது. கோயிலுக்குத் தவறாமல் செல்வது. குழந்தைகளின் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவது. அவர்களை மதத்தின் பாதையிலிருந்து வழுவாமல் பாதுகாப்பது.
    மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இதெல்லாம் ஒன்றுமேயில்லாத காரியங்களாகத் தோன்றலாம். ஆனால் அன்றைக்கு ஒட்டுமொத்த ஜுதேயா யூதர்களும் இவற்றை ஒரு வேள்வி போலச் செய்தார்கள். தம்மைச் சுற்றி அவர்கள் எழுப்பிக்கொண்ட பெருஞ்சுவரின் அடிக்கற்களாக அமைந்தது, கல்விதான். இதில் சந்தேகமே இல்லை. இன்றைக்கும் சர்வதேச அளவில் தொழில்நுட்பத்திலும் நவீன வேளாண்மையிலும் தலைசிறந்தவர்களாக யூதர்களே விளங்குவதைப் பார்க்கலாம். இந்த வளர்ச்சிக்கான வித்து அன்று ஊன்றப்பட்டதுதான்.
    இதனிடையில், யூத மதகுருக்களின் அதிகாரபீடத்தில் நம்ப முடியாத அளவுக்குச் சில கொள்கை மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ரபன் கமால்யேல் (Rabban Gamaliel) என்கிற மதப்பள்ளி போதகர், மதச் சடங்குகளில் சில மாற்றங்களை வலியுறுத்தி, காலத்தின் தேவைக்கேற்ற வகையில் புதிய யோசனைகளை முன்வைத்தார்.
    மத நம்பிக்கைகளுக்குப் புறம்பான யோசனைகள் அல்ல அவை. மாறாக, மக்கள் மத்தியில் மதப்பற்று மேலும் அதிகரிக்க வழிசெய்யும் யோசனைகள். உதாரணமாக, அந்நாளைய யூதர்கள் தாம் செய்த பாவங்களைப் போக்கிக்கொள்ள கால்நடைகளை பலி கொடுப்பது என்கிற வழக்கத்தை வைத்திருந்தார்கள். இது பிற்போக்கான செயல் எனக் கருதிய மதப்பள்ளிக்கூட ஆசிரியர்கள் சிலர், "கால்நடைகளை பலியிட்டுப் பாவத்தைப் போக்கிக்கொள்வதைக் காட்டிலும் அவற்றின்மீது முன்னைக்காட்டிலும் பேரன்பைச் செலுத்திப் பராமரித்தும் பாவம் போக்கிக்கொள்ளலாம்" என்று சொன்னார்கள்.
    ஜொஹனன் பென் ஸகாய் போன்ற குருமார்களும் பேரன்பைக் காட்டிலும் பெரிய பரிகாரமில்லை என்று அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி மக்களை பலியிடும் பழக்கத்திலிருந்து மீட்டார்கள்.
    இது யூத மதகுருமார்களின் சபையில் கணிசமான மாறுதல்களை விளைவித்தது. அதுவரை தனியரு அதிகாரபீடமாக மதகுருக்களின் சபை மட்டுமே விளங்கி வந்த நிலைமை மாறி, பள்ளி ஆசிரியர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்தது. ஆசிரியர்களும் குருமார்களும் சம அந்தஸ்து உள்ளவர்களாக அறியப்பட்டார்கள். அதாவது, மதகுருக்களுக்கு அளிக்கப்பட்டுவந்த அதே அளவு மரியாதை கல்வியாளர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் "ரபி" (Rabbi) என்று அழைக்கப்படத் தொடங்கினார்கள்.
    ஒட்டுமொத்த யூத குருமார்களும் இந்த மாறுதலை ஏற்கவில்லை என்றாலும் பெரும்பாலான குருமார்கள் காலத்தின் தேவை கருதி, கல்வியாளர்களைத் தங்களுக்குச் சமமானவர்களாக அங்கீகரிக்கவே செய்தார்கள். ரபன் கமால்யேல், இது தொடர்பான விழிப்புணர்வை ஊட்டுவதற்காக சிரியா, ரோம் என்று யூதர்கள் அதிகம் வாழ்ந்துவந்த பிற நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.
    காலடியில் இட்டு நசுக்கப்படும் ஒரு சமூகம் எழுந்து நிற்கவேண்டுமென்றால் கல்வி வளர்ச்சியினால் மட்டுமே அது சாத்தியம் என்பதே அப்போதைய ஜுதேயா யூதர்களின் தாரக மந்திரம். இந்தக் காரணத்தினால்தான் அவர்கள் கல்வியாளர்களை மதகுருக்களுக்கு நிகரான அந்தஸ்தில் வைத்தார்கள். அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டார்கள். கிடைத்த அறிவுச் செல்வத்தையெல்லாம் மனத்தில் இருத்திக்கொண்டார்கள். அடுத்துச் செய்யவேண்டியதென்ன என்கிற கட்டளைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
    நாற்பத்தைந்து வருடங்கள்.
    அதாவது, ஜெருசலேம் கோயில் இடிக்கப்பட்ட கி.பி. 70-ம் ஆண்டு தொடங்கி கி.பி.115-ம் ஆண்டு வரை அவர்களுக்கு வேறு சிந்தனையே இருக்கவில்லை. கற்பது. கற்றதைச் சொல்லிக்கொடுப்பது. மதக்கடமைகளை விடாமல் செய்வது. யூத இனத்துக்குள் ஊடுருவல் இல்லாமல் பாதுகாப்பது. (அதாவது கிறிஸ்தவம் மேலும் பரவாமல் தடுப்பது.) கிளர்ச்சி, புரட்சி என்று இறங்காமல், ஒழுங்காகத் தொழில் செய்து வருமானத்தைச் சேமிப்பது.சாதாரண விஷயங்கள்தாம். ஆனால் அசாதாரண கவனம் செலுத்தி இவற்றை அவர்கள் செய்தார்கள். மிகக் கவனமாக, தமது இந்த முடிவையும் செயல்பாடுகளையும் பிற தேசங்களில் குறிப்பாக ரோமானிய ஆதிக்கத்துக்குட்பட்ட நாடுகளில் வசிக்கும் யூதர்களுக்கும் தெரியப்படுத்தி, அவர்களையும் இதனைக் கடைப்பிடிக்கச் செய்திருந்தார்கள், பாலஸ்தீன யூதர்கள்!
    அந்த நாற்பத்தைந்து ஆண்டுகளை, அவர்கள் தவமிருந்த ஆண்டுகள் என்றே சொல்லவேண்டும்.
    கி.பி. 115-ல் அவர்கள் தம் தவத்தைக் கலைத்தார்கள். முதல்முதலில் எகிப்திலும் லிபியாவிலும் வசித்து வந்த யூதர்கள், அங்கே இருந்த ரோமானிய ஆட்சியாளர்களை எதிர்த்துப் புரட்சியில் குதித்தார்கள். "ஏதோ ஒரு அசுரசக்தி அவர்களை இயக்கியது போல நடந்துகொண்டார்கள்" என்று அச்சம்பவத்தை வருணிக்கிறார் ஒரு ரோமானிய சரித்திர ஆசிரியர். இரு தேசங்களிலும் என்ன நடக்கிறது என்று விளங்கிக்கொள்ளும் முன்னரே மத்திய தரைக்கடலில் உள்ள சைப்ரஸ் தீவில் வசித்து வந்த யூதர்கள், அங்கே ஆட்சி அதிகாரத்தில் இருந்த கிரேக்க கவர்னருக்கு எதிராகப் புரட்சியில் குதித்தார்கள். பார்வையை அந்தப் பக்கம் திருப்புவதற்கு முன்னால் இங்கே மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட ஈராக்கில் ரோமானிய ஆட்சியாளருக்கு எதிராக யூதர்கள் யுத்தம் தொடங்கினார்கள்.எகிப்து, லிபியா, சைப்ரஸ், ஈராக். ஒரே சமயத்தில் இந்த நான்கு தேசங்களில் வசித்து வந்த யூதர்கள் சுதந்திர தாகம் கொண்டு புரட்சியில் குதித்தது, மத்தியக்கிழக்கு முழுவதையும் பெரும் பரபரப்புக்குள்ளாக்கியது. ரோம் தலைமையகம் கவலை கொண்டது.
    அமைதியாக அடங்கியிருந்த யூதர்களுக்கு திடீரென்று என்ன ஆனது? இந்தப் புரட்சிகளின் வேர் எங்கிருந்து தொடங்குகிறது?
    அவர்களுக்குப் புரியவில்லை. ஏனெனில் இத்தனை களேபரத்துக்கு நடுவிலும் பாலஸ்தீன யூதர்கள் அதே நாற்பத்தைந்தாண்டுகால அமைதியைத்தான் அப்போதும் மேற்கொண்டிருந்தார்கள். புரட்சி வாசனை ஏதும் அங்கிருந்து வரவில்லை.
    உண்மையில், ஜெருசலேமிலிருந்து வலுக்கட்டாயமாக கடலோர கிராமங்களுக்கு விரட்டப்பட்ட ஜுதேயா நகரின் யூதர்களல்லவா புரட்சியில் ஈடுபட்டிருக்கவேண்டும்?
    யூதர்களின் அந்தத் திட்டமிட்ட புரட்சி ரோமானியர்களுக்குப் புரியவில்லை என்பதையே பாலஸ்தீன யூதர்கள் தமக்குக் கிடைத்த முதல் வெற்றியாகக் கருதினார்கள். நீண்ட நெடுங்காலத்துக்குப் பிறகு முதல் முறையாக அவர்கள் முகத்தில் ஒரு குறும்புப் புன்முறுவல் எட்டிப்பார்த்தது.

    தொடரும்.....

    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 16 டிசம்பர், 2004

  3. #15
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் ரத்தம - 8

    யூதப்புரட்சி

    யூதர்கள் அதிகம் வாழ்ந்த பாலஸ்தீன், எகிப்து, லிபியா, சிரியா, ஈராக் போன்ற நாடுகள் அன்றைக்கு ரோமானியப் பேரரசின் அங்கங்கள். ரோம் சக்ரவர்த்தியின் பிரதிநிதியாக கவர்னர் ஒருவர் அந்தப் பகுதிகளை ஆண்டுவருவார். ஒரு பேச்சுக்கு அவர் மன்னர் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டாலும் அவர் கவர்னர்தான். அதிகாரம் என்று எதுவும் பிரமாதமாகக் கிடையாது. கவர்னர்களுக்கு எந்தக் காலத்தில், எந்த தேசத்தில்தான் அதிகாரம் இருந்திருக்கிறது? ரோம் தலைமையகம் எடுக்கும் முடிவை அறிவித்துச் செயல்படுத்துவதுதான் அவர் வேலை. தவிரவும், புரட்சிகள் ஏதுமற்ற காலகட்டத்தில் உண்மையிலேயே அவர்களுக்கு வேலையும் கிடையாது. கொலுமண்டபத்தில் கச்சேரிகள் கேட்டுக்கொண்டு, நடனங்களை ரசித்துக்கொண்டு ஒரு மாதிரி உல்லாசமாகப் பொழுதைக் கழித்திருப்பார்கள் போலிருக்கிறது.
    அதுவும் நீண்டநெடுங்காலம் போராடிவிட்டு, திடீரென்று அமைதியாகி, நாற்பத்தைந்து வருடங்கள் அமைதியைத் தவிர வேறொன்றையும் நினைத்துக்கூடப் பார்க்காமல் இருந்த யூதர்கள் விஷயத்தில் அவர்களுக்குத் துளி சந்தேகமும் எழவில்லை. திடீரென்று அவர்கள் புரட்சியில் இறங்கக்கூடும் என்று யாரும் நினைத்துப் பார்த்திராததால் உரிய ஆயத்தங்கள் ஏதும் செய்திருக்கவில்லை.
    ஆனால், அப்படியரு தருணத்துக்காகத்தான் அந்த நாற்பத்தைந்து வருடங்களுமே யூதர்கள் தவமிருந்திருக்கிறார்கள். யாரும் எண்ணிப்பார்க்க முடியாத தருணம். யாரும் ஆயத்தமாக இல்லாத நேரம். யாரும் சிந்திக்கக்கூட அவகாசம் இல்லாத ஒரு பொழுது.
    அப்படித்தான் வெடித்தது யூதப்புரட்சி.
    முதலில் எகிப்திலும் லிபியாவிலும் அது ஆரம்பித்தது. அந்தப் பகுதிகளை ஆண்டுவந்த ரோமானிய ஆட்சியாளர்கள், என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் ஏராளமான இழப்புகளைச் சந்திக்க வேண்டிவந்தது. படைகள் சின்னாபின்னமாயின. ரோமானிய வீரர்கள் துரத்தித்துரத்தி அடிக்கப்பட்டார்கள். இங்கொன்றும் அங்கொன்றுமாக சிறு கிராமங்களையும் நகரங்களையும் யூதர்கள் வளைத்து, ரோமானிய வீரர்களை விரட்டியடித்து, கைப்பற்றிக்கொண்டுவிடுவார்கள். பிறகு, கைப்பற்றிய நிலப்பகுதியைப் பாதுகாக்கும் விதமாகச் சுற்றி வளைத்து வியூகம் அமைத்து, அப்படியே மேலும் முன்னேறி, அடுத்த இலக்கைத் தாக்குவார்கள்.
    ரோமானிய அரசால் முதலில் இந்தத் திடீர் எழுச்சியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஏனெனில், எந்த ஒரு தனி புரட்சிக்குழுவும் போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக, ஒட்டுமொத்த யூதர்களும் இணைந்து போராடிக்கொண்டிருந்தார்கள். எல்லோருமே தளபதிகள். எல்லோருமே சிப்பாய்கள். அப்படியரு இணக்கமான மன ஒருங்கிணைப்பு உலக சரித்திரத்தில் வேறெந்தப் பகுதி மக்களிடமும், எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்று வியக்கிறார்கள் சரித்திர ஆசிரியர்கள்.
    எகிப்தில் புரட்சி உச்சகட்டத்தை அடைந்துவிட்டது என்கிற செய்தி மத்தியக்கிழக்கில் பரவிய வேகத்தில் சைப்ரஸ் தீவில் வாழ்ந்துகொண்டிருந்த யூதர்கள், அங்கே இருந்த கிரேக்க ஆட்சியாளரை எதிர்த்துப் புரட்சி செய்யத் தொடங்கினார்கள். ஏற்கெனவே கடும் கோபத்தில் இருந்த ரோமானியப் பேரரசு, இம்முறை, தானே வலிந்து போய் கிரேக்க அரசுக்கு உதவி செய்வதாக அறிவித்து, புரட்சியாளர்களை ஒடுக்க ஆரம்பித்தது. நடந்த களேபரங்கள் ஏற்படுத்தியிருந்த அதிர்ச்சி அப்போது சற்றுத் தணிந்திருந்தது. ரோமானிய வீரர்கள் சுதாரித்துக்கொண்டுவிட்டார்கள்.
    "புரட்சியாளர்கள் என்று தேடாதே. யூதனா என்று பார்" - இதுதான் அவர்களுக்கு இடப்பட்டிருந்த கட்டளை. ஆகவே, ஓட ஓட விரட்டினார்கள். விரட்டி விரட்டிக் கொன்றார்கள். ஒரு மாபெரும் மரணத் திருவிழாவையே நடத்தி, வெறி தணிந்த ரோமானியப்படை, போனால் போகிறதென்று மிச்சமிருந்த கொஞ்சம் யூதர்களை நாடு கடத்திவிட்டுத் தன் ஊருக்குப் போய்ச் சேர்ந்தது.
    மறுபுறம் மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈராக்கில் புரட்சியில் ஈடுபட்டிருந்த யூதர்கள், அங்கிருந்த ரோமானிய கவர்னரை விரட்டிவிட்டு, ஆட்சியையே பிடித்துவிட்டார்கள். எகிப்திலும் லிபியாவிலும் கூட அப்படியானதொரு சந்தர்ப்பம் மிக விரைவில் அமைந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
    ஆனால், பிரமாண்டமான ரோமானியப்படை, அதன் முழு அளவில் வந்திறங்கி, கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ஆரம்பித்தபோது நிலைமை அப்படியே தலைகீழாகிவிட்டது. போராடும் தீவிரமும் சுதந்திர தாகமும் இருந்தாலும் யூதர்களை ஒரு ராணுவமாக வழிநடத்தச் சரியான தலைமை இல்லாததே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டு காலத்துக்கு மேலாக அவர்களால் புரட்சியைத் தொடர்ந்து நடத்தவும், தாக்குப்பிடிக்கவும் முடிந்தபோதிலும் திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை.
    உண்மையில், மத்திய ஆசியாவிலும் ஒருசில ஆப்பிரிக்க நாடுகளிலும் ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டு வாழ்ந்த யூதர்கள், தம் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் புரட்சி செய்து, ரோமானியப்படைகளை ஒழித்துக்கட்டி, ஒரு பரந்த யூத சாம்ராஜ்யத்தை நிறுவுவது என்றதொரு மாபெரும் கனவைத்தான் அந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாகப் பயிரிட்டு வந்தார்கள். அப்படியரு யூதப்பேரரசு உருவாகிவிட்டால், அதற்கென்று தனியரு ராணுவம் ஏற்படுத்தப்பட்டுவிட்டால், பின்னால் யார் படையெடுத்தாலும் சமாளிப்பது சிரமமல்ல என்று நினைத்தார்கள். ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூத சாம்ராஜ்ஜியம். வளமான சரித்திரத்தையும் அழகான புனிதத்தையும் அடித்தளமாக இட்டு, மேலே ஒரு சாம்ராஜ்யம். ஒன்றே மதம். ஒரே கடவுள். ஒரு பேரரசு. ஒருங்கிணைந்த குடிமக்கள். ஹீப்ரு என்கிற புராதன மொழி. மதத்தின் அடியற்றிய ஆட்சி. மேலான நிம்மதி.
    இந்தக் கனவின் மையப்புள்ளி, ஜுதேயா என்கிற இஸ்ரேலில் இருந்தது. ஜெருசலேம் என்கிற புனித பூமியை ஒரு பகுதியாகக் கொண்ட இஸ்ரேல் - சுற்றுவட்டாரமெங்கும் புரட்சியில் ஈடுபட்டுக் கொந்தளித்துக்கொண்டிருந்தபோதும் அமைதியைக் கலைக்காமல் அதே சமயம் ஒரு மாபெரும் பூகம்பத்தை உற்பத்தி செய்வதற்கான முகூர்த்தத்தை எதிர்நோக்கிக்கொண்டிருந்த இஸ்ரேல்.
    கி.பி. 132 - ல் அது நடந்தது, எகிப்தில் புரட்சி வெடித்து சரியாகப் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு. ஒரு சரியான தளபதி இல்லாத காரணத்தினால்தானே யூதர்களின் புரட்சிகள் அடக்கி ஒடுக்கப்பட்டன?
    இப்போது அவர்களுக்கும் ஒரு தளபதி கிடைத்தார். அவர் பெயர் சிமோன் பார் கொச்பா. (Simon Bar Kochba)
    பல நூற்றாண்டுகள் வரை யூத குலம் தம்மை மீட்க வந்த இன்னொரு தேவதூதராகவே அவரைக் கொண்டாடிக்கொண்டிருந்தது. வீரம் என்றால் அது. எழுச்சி என்றால் அது. உணர்ச்சிகரமான பேச்சு என்றாலும் அவருடையதுதான். ஆனால், வெறும் பேச்சுப் போராளியல்ல அவர். செயலில் அவரது உயிர் இருந்தது. சிந்தனை முழுவதும் சுதந்திர யூதப்பேரரசு பற்றியதாகவே இருந்தது.
    சிமொன் பார்கொச்பா, கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட தளபதி. போராட்ட வெறியை மக்களிடையே எழுப்புவதற்கு அவர் கையாண்ட உபாயங்கள் கொஞ்சம் நாடகத்தனம் பொருந்தியவை என்றாலும், யூதர்களுக்கு அவர் செய்ததெல்லாமே இறைக்கட்டளையின்படி செய்யப்பட்டவையாகவே தோன்றின.
    உதாரணமாக, பார்கொச்பாவின் ராணுவத்தில் சேருவதென்றால், முதல் நிபந்தனை - யூதர்கள் தம் தியாகத்தின் அடையாளமாகக் கைவிரல்களில் ஒன்றை வெட்டிக்கொள்ளவேண்டும்! பின்னால் போர்க்களத்தில் உயிரே போகக்கூடிய சூழ்நிலை வரலாம். அதற்குத் தயாரானவர்கள்தானா என்பதை அந்த விரல் தியாகத்தின் மூலமே அவர் ஒப்புக்கொள்வார். கையை நீட்டிக் காட்டி, யாராவது வெட்டுவார்களா என்றால் அதுவும் இல்லை. சம்பந்தப்பட்டவர்கள், பார்கொச்பா முன்னிலையில் ஒரு கை விரலை நீட்டி, மறு கையால் தானே சொந்தமாக வெட்டிக்கொள்ளவேண்டும். விரல் துண்டாகி விழுந்து, ரத்தம் சொட்டும்போதும் முகத்தில் எவ்வித உணர்ச்சி மாறுதலையும் காட்டாதிருக்க வேண்டும். மனத்தைப் பாறையாக்கிக் கொண்டவர்களால்தான் ஒரு ஜீவ மரணப் போராட்டத்தில் பங்கெடுக்க முடியும் என்பது அவரது கருத்து.
    இன்னொரு உதாரணமும் சொல்லலாம். புரட்சி குறித்தும் சுதந்திர யூத சாம்ராஜ்யம் குறித்தும் தான் பேசுகிற பேச்சுகளெல்லாம் தீப்பிழம்பு போன்றவை என்பதை நேரடி அர்த்தத்தில் நிரூபிக்கும் விதமாக, பழுக்கக்காய்ச்சிய மெல்லிய இரும்புத் தகடொன்றைத் தன் பற்களுக்கிடையில் பொருத்திக்கொண்டுதான் அவர் சொற்பொழிவை ஆரம்பிப்பார்! தகிக்கும் தகடு நாக்கில் பட்டுப் பழுத்து, சொற்கள் தடுமாறும்போது அவரது சொற்பொழிவின் சூடு மேலும் அதிகரிக்கும். வலி தாங்காமல் கண்ணில் நீர் பெருகினாலும் அவரது சொற்பொழிவு நிற்காது.
    ஒரு சமயம், இரு சமயங்களிலல்ல. தம் வாழ்நாள் முழுவதும் சிமொன் பார்கொச்பா இப்படியான உணர்ச்சிக் கொந்தளிப்புகளுடன்தான் வாழ்ந்தார்.
    யூதர்களுக்கான விடுதலையைக் கடவுள் தருவார் என்கிற ஜுதேயா யூதர்களின் நம்பிக்கையை அவர் முற்றிலுமாக நிராகரித்தார். "நீங்கள் போராடுங்கள். உங்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்றால் நீங்கள்தான் போராடியாகவேண்டும். கடவுள் உதவமாட்டார்; உங்கள் பின்னால் வரவும் மாட்டார். சுதந்திரத்தைப் பொறுத்த அளவில் போராட்டம்தான் கடவுள் என்பது அவரது பிரசித்திபெற்ற போதனை.
    இஸ்ரேலில் வெடித்த புரட்சி சாதாரணமானதல்ல. மற்ற நாடுகளில் நடத்தப்பட்ட புரட்சிகளுடன் அதனை ஒப்பிடக்கூட முடியாது. ஒரு பூகம்பமே எழுந்தது போலானது ஜுதேயா. ரோமானிய ஆட்சியாளரையும் அவரது படைகளையும் துவம்சம் செய்துவிட்டார் கொச்பா. இரவெல்லாம், பகலெல்லாம், நாளெல்லாம், வார, மாதங்களெல்லாம் யுத்தம். யூதர்கள் உணவு, உறக்கம் குறித்துச் சிந்திக்கவே கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார் கொச்பா. அவர்களுக்கான சரியான முன்னுதாரணமாகத் தாமே இருந்தார். பல வாரங்கள் ஒருகை உணவோ, ஒருதுளி நீரோகூட அருந்தாமல் அவர் இருந்திருக்கிறார். அவர் எப்போது உறங்குவார், எப்போது கண்விழிப்பார் என்று யாருமே பார்த்ததில்லை.
    ஜுதேயாவில் இருந்த ரோமானியப் படையை விரட்டியடித்து, அங்கே ஆட்சியை அமைக்க, கொச்பாவுக்கு அதிகக் காலம் ஆகவில்லை. புயல் மாதிரி மோதி, வென்று, அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டார்கள் யூதர்கள். யூதர்களின் எழுச்சியின் அடையாளமாக விளங்கிய அந்த 132 - ம் வருடத்தையே யூத நாள்காட்டியில் முதல் வருடமாகக் குறித்தார் கொச்பா.
    சுதந்திர யூத சாம்ராஜ்யத்தின் முதல் செங்கல் நடப்பட்டுவிட்டதை ஓர் உணர்ச்சிமயமான கடிதத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்துவிட்டு, யூதர்களுடைய சுதந்திரத்தின் அடையாளமாகச் சில நாணயங்களையும் அவர் வெளியிட்டார். (அதிர்ஷ்ட வசமாக அவரது கடிதம் ஒன்றின் சில பகுதிகளும் அவர் வெளியிட்ட நாணயங்களும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இன்றும் நமக்குக் காணக்கிடைக்கின்றன.)
    அப்போது ரோமானியச் சக்ரவர்த்தியாக இருந்தவர் ஹேட்ரியன் (Hadrian). ஜுதேயா கையைவிட்டுப் போய்விட்டது என்பதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. யூதர்கள் இனி காலகாலத்துக்கும் எழ முடியாதவாறு ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவு செய்து, ஒரு படையை அனுப்பினார். முப்பத்தைந்தாயிரம் பேர் அடங்கியதொரு மாபெரும் படை.
    கொச்பாவின் படையில் அப்போது இருந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் குறைவு.
    மிகவும் கோரமாக நடந்து முடிந்த அதனை யுத்தம் என்றே சொல்லமுடியாது. படுகொலை என்று குறிப்பிடுவதுதான் சரி. ஏனெனில் ரோமானியப்படை, கொச்பாவின் சிறிய படையை ஓரிரு மணி நேரங்களுக்குள் அடித்துத் துவைத்துக் காயப்போட்டுவிட்டது. அப்புறம், ஜெருசலேம் நகரில் வசித்துவந்த அத்தனை யூதர்களையும் நடுச்சாலைக்கு இழுத்து வந்து வெட்டத் தொடங்கினார்கள். ஒரு உயிர் கூடத் தப்பி விடாதபடிக்குப் பார்த்துக்கொண்டார்கள். எதிர்த்து நிற்கக்கூட யூதர்களுக்கு அவகாசம் தரப்படவில்லை. ஆண், பெண் வித்தியாசம் பார்க்கப்படவில்லை.
    அந்தச் சம்பவத்தின் போது சுமார் பத்தாயிரம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் ஒரு லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் இருவிதமான கருத்துக்கள் இருக்கின்றன. இரண்டுக்குமே சரியான ஆதாரம் கிடையாது என்றபோதும், ரோமானியப்படை திரும்பிப் போகும்போது ஜெருசலேமில் ஒரு யூதர்கூட உயிருடன் இல்லை என்பது மட்டும் உண்மை.
    கொச்பா கைது செய்யப்பட்டார். கி.பி.135 - ல் அவர் மரணமடைந்தார். (காவலில் இருந்தபோதே மரணமடைந்தாரா, வேறு விதமாக இறந்தாரா என்பது பற்றிய திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லை.) யூதர்கள் மீண்டும் அநாதை அடிமைகளானார்கள்.

    தொடரும்.......
    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 19 டிசம்பர், 2004

  4. #16
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் இரத்தம் -9

    யூதர்கள் இல்லாத ஜெருசலேம்
    ஒட்டுமொத்த யூத இனமும் அப்படியரு விஷயத்தைச் சிந்தித்துப் பார்க்கவே கஷ்டப்பட்டது. கடவுளுக்கு உகந்த இனம் என்றும், தேவதூதர் மோசஸின் வழி நடப்பவர்கள் என்றும் பெருமையுடன் சொல்லிக்கொண்டு என்ன பயன்? ஜெருசலேம் இல்லை என்றால் ஒவ்வொரு யூதருக்கும் வாழ வீடில்லை என்றுதான் பொருள். நடமாடிக்கொண்டிருந்தாலும், உடலில் உயிர் இல்லை என்றே அர்த்தம். எங்கெங்கோ பதுங்கி வாழ்ந்துகொண்டிருந்த நடைப்பிணங்களாகத்தான் அவர்கள் தம்மை உணர்ந்தார்கள்.

    கி.பி. 135-ல் நடந்த ரோமானியப் படையெடுப்புக்குப் பிறகு பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காரியங்கள் மளமளவென்று நடக்க ஆரம்பித்தன.அவற்றுள் மிக முக்கியமான இரண்டைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். முதலாவது, யூதர்களுக்கும் ஜெருசலேமுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கக்கூடாது என்று ரோமானிய அதிகாரபீடம் பார்த்துப் பார்த்துச் செய்த ஏற்பாடுகள். ஜெருசலேமில் இருந்த யூதர்களைக் கொன்று வீழ்த்தியது, அதில் முதல் நடவடிக்கை. தொடர்ந்து ஜெருசலேமின் சுற்றுப்புறங்களில் வசித்து வந்த யூதர்களையும் கவனமாகக் கைதுசெய்து நாடு கடத்தினார்கள். எங்காவது போய் ஒழி. இங்கே இருக்காதே என்பதுதான் ரோமானியர்களின் நிலை.இதனடிப்படையில் இஸ்ரேல் (அன்று ஜுதேயா) யூதர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக நாடு கடத்தப்பட்டு, சுற்று வட்டார தேசங்களில் அகதிகளாகப் போய் வசிக்கப் பணிக்கப்பட்டார்கள். சுற்று வட்டாரங்களிலும் ரோமானிய ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது என்றாலும், ஜுதேயாவிலிருந்து வரும் யூதர்கள் அங்கு மிகக் கவனமாக மூன்றாந்தரக் குடிமக்களாகவே நடத்தப்பட்டார்கள். தனிக் காலனிகளிலேயே அவர்கள் தங்கவைக்கப்பட்டார்கள். எப்போதும் கண்காணிப்புக் கழுகுகள் சுற்றிக்கொண்டே இருக்கும். யூதப்பள்ளிக்கூடங்கள் இழுத்துமூடப்பட்டன. யூத மதபோதனைகள் தடுத்து நிறுத்தப்பட்டன. "ரபி" என்கிற யூத ஆசிரியர்களை எப்போதும் ஒற்றர்கள் பின் தொடர்ந்துகொண்டே இருந்தார்கள். யூத மக்கள் மீண்டும் ஒருங்கிணைந்து புரட்சி, போராட்டம் என்று எதிலும் இறங்கிவிடாதபடிக்கு ஒட்ட நறுக்கிவைக்க எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.இரண்டாவதாக, ஜெருசலேம், ஜுதேயா என்கிற பெயர்களையே அவர்கள் சிந்தனையிலிருந்து துடைத்து அழித்து விடும்படியாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஜெருசலேம் நகரம், ஏலியா கேப்டோலினா (Aelia Capitolina) என்கிற பெயரால் அழைக்கப்படத் தொடங்கியது. ஜுதேயா என்கிற தனி நாடு, சிரியாபலஸ்தினா என்கிற பிராந்தியத்தின் பெயரையே தன் சொந்தப்பெயராக ஏற்கவேண்டியதானது.அதாவது, இனி ஜுதேயா கிடையாது. ஜெருசலேமும் கிடையாது. அங்கே யூதர்கள்? கிடையவே கிடையாது.ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும். அந்தக் காலத்தில் "தேசம்" என்று வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு மிகவும் சிறிது. இன்றைய மாவட்டங்கள், மாநிலங்கள் அளவுக்குக் கூடக் காணாது. அன்றைய பாலஸ்தீன் நிலப்பரப்பில் ஜுதேயாவைப் போல நான்கைந்து "தேசங்கள்" இருந்தன. உங்களிடம் பைபிள் பிரதி இருக்குமானால், எடுத்து கடைசிப் பக்கங்களைப் பாருங்கள். "பலெஸ்தினா தேசம் புதிய ஏற்பாட்டின் காலத்தில்" என்று குறிப்பிட்டு மிகத்தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும். இது மேயா, ஜுதேயா, பெரேயா, தெக்கப்போலி, சமாரியா, பெனிக்கியா, கலிலேயா என்கிற பெயர்களைத் தற்காலப் பெயர்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காணுவதில் சிறு குழப்பங்கள் நேரலாம். ஒரு தற்கால அட்லஸைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒப்பிட்டால் புரிந்துவிடும்.எதற்கு இந்த விவரங்கள் என்றால், ஜெருசலேமைச் சுற்றிக் குறைந்தது நூறு மைல் பரப்பளவுக்காவது எந்த யூதரும் இல்லாமல் பார்த்துக்கொள்வதுதான் அன்றைய ரோமானிய அரசின் பிரதான கவனமாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டவே.சிமோன் பார்கொச்பாவின் மரணத்துக்குப் பிறகு யூதர்கள் புரட்சி குறித்து மீண்டும் சிந்திக்கவே எப்படியும் பல காலம் ஆகக்கூடும் என்று ரோமானிய தலைமைப்பீடம் நினைத்தது. இருப்பினும் பாதுகாப்பு விஷயத்தில் அசிரத்தையாக இருக்கக்கூடாது என்று தீர்மானித்தார்கள். இது, ஜெருசலேம் நகரின் கிறிஸ்துவர்களுக்கு மிகவும் சாதகமான அம்சமாகிப்போனது. யூதர்கள் இல்லாத ஜெருசலேமில் அவர்கள் மதப்பிரசாரம் செய்யவும் கிறிஸ்துவ தேவாலயங்களை எழுப்பி, தினசரி பிரார்த்தனைகளை நடத்தவும், மக்களை (அதாவது, அங்கே வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களை) இயேசுவின் பாதையில் அழைக்கவும் சௌகரியமாக இருந்தது. ரோமானியர்களைப் பொறுத்தவரை அப்போது யூதர்களை ஒடுக்குவது என்கிற திட்டத்துக்கு இந்த, கிறிஸ்துவப் பரவல் சாதகமான அம்சமாக இருந்ததால், கண்டுகொள்ளாமல் விட்டார்கள். ரோமிலும் அப்போது கிறிஸ்துவத்தின் செல்வாக்கு பெருகிக்கொண்டிருந்தது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஜெருசலேமில் மட்டுமல்லாமல் அந்நகரத்தின் யூதர்கள் அகதிகளாகத் துரத்தப்பட்ட பிற தேசங்களின் எல்லைப்புற முகாம்களிலும் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட எந்தத்தடையும் இருக்கவில்லை!யூதர்களுக்குப் பேச்சளவில்கூட நம்பிக்கை தர ஆளில்லாத சூழ்நிலை. எப்படியும் தங்கள் தேவதூதன் வந்தே தீருவான்; மீண்டும் இஸ்ரேலுக்குத் தாங்கள் திரும்பிப் போய், ஜெருசலேமின் ஆலயம் மீண்டும் எழுப்பப்படுவதைப் பார்ப்போம் என்கிற புராணகால நம்பிக்கை மட்டும்தான் அவர்கள் வசம் இருந்தது. நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி அவர்கள் இருளில் நடைபயிலத் தொடங்கியபோது அந்த அற்புதம் நிகழ்ந்தது.ஒரு குரல். அதுவும் ரகசியக் குரல். ஓர் இருட்டுச் சிறைக்கூடத்திலிருந்து வந்த கிழக்குரல். எப்படியும் அந்தக் குரலுக்குத் தொண்ணூறுக்கு மேற்பட்ட வயது இருக்கும். நடுக்கம், குரலுக்குத்தானே தவிர, அதன் உறுதிக்கு அல்ல.அவர் பெயர் அகிவா. (Akiba ben Joseph என்பது முழுப்பெயர்.) ஜெருசலேம் யூதர்களுக்கு முன்னரே மிகவும் பரிச்சயமான மனிதர்தான் அவர். அகிவா, ஒரு ரபி. மதப்பள்ளி ஆசிரியர். சிமோன் பார்கொச்பா புரட்சி செய்த காலத்தில் அவருக்குத் தம் ஆதரவைத் தெரிவித்து, ரோமானியப் பேரரசுக்கு எதிராகக் கலகத்தைப் பரப்பினார் என்று குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர்.புரட்சி நடந்த சமயத்தில் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு, இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு எங்கெங்கோ சிறைச்சாலைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதில், ஜெருசலேம் மக்களுக்கு அகிவாவின் ஞாபகமே அப்போது சுத்தமாக இல்லை. அவர் என்ன ஆனார், எங்கே போனார் என்று கூட யோசிக்க முடியாமல் காலம் அவர்களை உருட்டி விளையாடிக்கொண்டிருந்தது.அப்படியரு தருணத்தில்தான் ஒரு சிறைச்சாலைக்குள்ளிருந்து அகிவாவின் ரகசியச் செய்தி, எழுத்து வடிவில் முதன்முதலில் யூதர்களுக்கு அனுப்பப்பட்டது. ஒன்று சொல்லவேண்டும். ஜெருசலேமில் அகிவா வசித்துவந்த காலத்தில் அவருக்கு ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் இருந்தார்கள். அவர் எங்கே போனாலும் பின்னால் ஒரு படைபோல மாணவர்கள் நடந்து போவது, கண்கொள்ளாக் காட்சி என்று எழுதுகிறார்கள் அக்காலத்தில் வாழ்ந்த சரித்திர ஆசிரியர்கள். அந்த மாணவர்கள் சிலரின் உதவியுடன்தான் தமது செய்தியை யூத குலத்துக்குச் சிறையிலிருந்து அனுப்பத் தொடங்கினார் அகிவா.யூத சரித்திரத்தில் அகிவாவின் பெயர் இடம்பெற்றதன் காரணம், அவர் தமது வேத வரிகளின் உள்புகுந்து, அர்த்தத்துக்குள் அர்த்தம் தேடி, மக்களுக்கான வாழ்க்கை நெறிமுறைகளையும் சட்டதிட்டங்களையும் அதிலிருந்தே எடுத்துக் கொடுத்ததுதான் என்கிறார்கள் யூத ஆய்வாளர்கள்.மோசஸுக்கு இறைவன் வழங்கியதாக நம்பப்படும் பத்துக் கட்டளைகள் அடங்கிய யூதர்களின் வேதமான "தோரா", அதுவரை ஒரு மத நூலாக மட்டுமே கருதப்பட்டு வந்தது. வாழ்க்கைக்கான நெறிமுறைகளும் அதிலேயே இருக்கிறது என்று கண்டெடுத்துக்கொடுத்தவர் அகிவா. இதனால்தான் "மோசஸின் ஆன்மாவே அகிவாவாக மீண்டும் வந்த"தென்று யூதர்கள் சொன்னார்கள்.சிறைக்கூடத்திலிருந்து அகிவா அனுப்பிய செய்திகள் எல்லாமே இந்த, தோராவிலிருந்து கண்டெடுத்த வாழ்வியல் ஒழுக்கப் பாடங்களாகவே இருந்தன. வாழ்க்கை அமைப்பு, அரசியல் அமைப்பு, சிவில் சட்டங்கள் என பார்த்துப்பார்த்து அவர் தேர்ந்தெடுத்து அனுப்பியவற்றின் அடியற்றித்தான் இன்றுவரையிலும் இஸ்ரேலின் சட்டதிட்டங்கள் வகுக்கப்படுகின்றன.அகிவாவின் நோக்கம் மிகத் தெளிவாக இருந்தது. தமது மக்கள் இன்று அநாதைகளாக இருக்கிறார்கள். இந்நிலை மாறும். நிச்சயம் ஒருநாள் அவர்கள்தம் புனித மண்ணை மீண்டும் பெறுவார்கள். அப்போது அமைக்கப்படும் யூதர்களின் ஆட்சி, யூதர்களின் வேதத்தை அடியற்றியதாக அமையவேண்டும். ரோமானிய, கிரேக்க இரவல் சட்டங்களின் நிழல் அதன்மீது படிந்துவிடக்கூடாது. மக்களின் வாழ்க்கை முறையிலும் அந்தத் தாக்கங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது. யூதர்கள், யூதர்களாகவே இருக்கவேண்டும். மத நம்பிக்கையும் மொழி நம்பிக்கையும் அதன் அடிப்படைகள். அடிமைத்தளை அல்ல; சுதந்திரமே நிரந்தரமானது. அப்படியரு தருணம் வரும்போது அவர்கள் சுயமாக வாழத் தெரிந்தவர்களாக இருக்கவேண்டும்.இதனைக் கருத்தில் கொண்டுதான் தம் செய்திகளை சிறைச்சாலைக்கு உள்ளிருந்து வெளியே ஊடுருவ விட்டார் அகிவா. நம்பமுடியாத ஆச்சர்யம், அவருக்கு அப்போது வயது தொண்ணூறு!தாம் எண்ணியதை ஓரளவு செம்மையாக நடத்தி முடித்துவிட்ட தருணத்தில், அகிவாவின் செயல்பாடுகள் ரோமானியச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிந்துபோனது. அவர்கள் அந்தக் கிழவரைச் சித்திரவதை செய்ய ஆரம்பித்தார்கள்.அவரை நிற்கவைத்துக் கைகளை உயரக் கட்டி, கூர்மையான இரும்புக் குச்சிகளால் அவரது உடலைக் குத்தி, துண்டு துண்டாகச் சதையைக் கிள்ளி எடுத்தார்கள். கையளவு ரம்பத்தால் அவரது முதுகிலும் வயிற்றிலும் கீறிக்கீறி ரத்தம் கொட்டச் செய்தார்கள். நகங்களைக் கிள்ளியெடுத்து, தொடையில் சூடு போட்டார்கள். சிறு சிறு ஊசிகளைத் தீயில் வாட்டி அவர் முகமெங்கும் குத்தினார்கள்.இத்தனை விவரங்களும் ஒன்றுவிடாமல் வெளியே இருந்த அவரது சிஷ்யர்களுக்கும் பிற யூதர்களுக்கும் அவ்வப்போது அரசாங்க ஊழியர்களாலேயே "அழகாக" விவரிக்கப்பட்டன. துடித்துப்போனது யூதகுலம்.அகிவா அனுப்பிய இறுதிச் செய்தியில் தனக்கு இழைக்கப்படும் சித்திரவதைகளைக் குறிப்பிட்டு, "வாழ்நாள் முழுவதும் உடலாலும் உயிராலும் ஆன்மாவாலும் இறைத்தொண்டு செய்வது என்கிற முடிவுடன் வாழ்ந்தேன். ஆன்மாவால் செய்யப்படும் இறைத்தொண்டு எத்தகையது என்பதை இப்போது நான் முழுவதுமாக அறிந்துகொண்டேன்"" என்று குறிப்பிட்டிருந்தார்!சித்திரவதைகளின் இறுதியில் அகிவா மரணமடைந்துவிட்டார் என்கிற செய்தி யூதகுலத்துக்கு இறுதியாக இருந்த ஒரு நம்பிக்கையையும் தகர்த்துவிட்டது. சந்தேகமில்லாமல் தாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம் என்பது அவர்களுக்குப் புரிந்துபோனது.இனி நம்பிக்கை ஒன்றைக் கொண்டுதான் அவர்கள் உயிர்வாழ்ந்தாகவேண்டும். அதுவும் எப்படிப்பட்ட காலகட்டம்!கிட்டத்தட்ட பாலஸ்தீன் நிலப்பரப்பு முழுவதிலுமே அப்போது கிறிஸ்துவம் பரவிவிட்டிருந்தது. கிறிஸ்துவ மதத்தின் தலைமையகம் போலவே ஆகியிருந்தது ஜெருசலேம். அது, யூதர்களின் நகரம் என்பதை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்த மாபெரும் அடையாளமான கோயிலும் அப்போது இல்லை. எங்கு திரும்பினாலும் கிறிஸ்துவ தேவாலயங்கள். பாதிரியார்களின் பிரசாரங்கள். பிரசங்கங்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் சுவரோவியங்கள், சிற்பங்கள், புதிய ஏற்பாட்டின் பரவல்.நான் ஒரு யூதன் என்று சொல்லிக்கொண்டாலே பிரச்னை என்றானது யூதர்களுக்கு.என்ன செய்வது? எங்கே வாழ்வது? எப்படி மீண்டும் ஜெருசலேமுக்குப் போவது? இப்படியே கிடைத்த இடத்தில், அகதி முகாம்களில் வசித்தே காலம் கழிக்க வேண்டியதுதானா? ரோமானியர்களின் அடிமையாகவே வாழ்ந்து தீர்ப்பதுதான் எழுதி வைக்கப்பட்ட விதியா?யூதர்களின் மௌனக் கதறல் யார் காதிலும் விழவில்லை. மாறாக, ஒரு சம்பவம் நடந்தது. முதன்முதலாக ஒரு ரோமானிய மன்னன், கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டு மதம் மாறினான்.யூதர்கள் இடி விழுந்தாற்போல நொறுங்கிப்போனார்கள்.

    தொடரும்..........
    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 23 டிசம்பர், 2004

  5. #17
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    அடுத்த பகுதியை படிக்க ஆவலாய் காத்திருக்கிறோம் ரமணா
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  6. #18
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    முன்பு ஒரு முறை வலைபதிவில் பார்த்து படித்தேன் ஆச்சரிய பட்டேன்
    இதை எப்படி தொகுத்தீர்கள் என்று சொல்லுங்கள் ரமணா அவர்களே
    நன்றி தொடர்ந்து தாருங்கள்
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  7. #19
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் ரத்தம் 10

    கான்ஸ்டன்டைன்

    கி.பி. 313-ல் அது நடந்தது. யாரும் அவ்வளவாக எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ரோமிலிருந்த கிறிஸ்துவர்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.கிறிஸ்துவம் பரவத் தொடங்கிய காலத்தில் அது எத்தனைக்கெத்தனை அடித்தட்டு மக்களைக் கவர்ந்திழுத்ததோ அதே அளவுக்கு ஆட்சியாளர்களின் விரோதத்தைச் சம்பாதித்துக்கொண்டும் இருந்தது. ஐரோப்பாவெங்கும் கிறிஸ்துவப் பாதிரியார்கள் இயேசுவின் மகிமையைக் கொண்டுசேர்க்கப் போன வழிகளிலெல்லாம் ஏராளமான எதிர்ப்புகளையும் அவமானங்களையும் கடுமையான தண்டனைகளையும்தான் சந்தித்துக்கொண்டிருந்தார்கள். யூதர்கள் இயேசுவுக்கு இழைத்ததைக் காட்டிலும் அதிகமாகவே கிறிஸ்துவப் பாதிரியார்கள் பலர் ஐரோப்பாவில் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது.ஆயினும் மனம் சோராமல் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் பலன் என்றுதான் அதனைச் சொல்லவேண்டும். முதல் முதலாக கான்ஸ்டன்டைன் என்கிற ரோமானிய மன்னன் கிறிஸ்துவத்தை நம்பி ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் அம்மதம் பரவுவதற்கும் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினான்.இது ரோமில் வசித்துவந்த கிறிஸ்துவர்களுக்கு மட்டுமல்லாமல் மத்தியக்கிழக்கில் ரோமானியக் காலனிகளில் வசித்துவந்த அத்தனை கிறிஸ்துவர்களுக்குமே மிகப்பெரிய நன்மையானது. அதுவரை யூதர்களும் கிறிஸ்துவர்களும் தம் மத வழக்கங்களைப் பின்பற்றி வாழ்வதில் ஏராளமான சிக்கல்கள் இருந்துவந்தன. ரோமானியச் சக்ரவர்த்தியைத்தான் வழிபடவேண்டும் என்கிற உத்தரவுக்குக் கீழ்ப்படியவும் முடியாமல் எதிர்க்கவும் வழியில்லாமல் நரக அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தார்கள். இப்போது மன்னரே கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொண்டு இயேசுவின் பெருமைகளைப் பரப்ப முன்வந்து விட்டதால் அவர்களுக்கிருந்த மாபெரும் பிரச்னை அடிபட்டுப் போனது. கிறிஸ்துவ குருமார்கள் பாடுபட்டுச் செய்துகொண்டிருந்த காரியத்தை ரோமானிய மன்னனின் அந்த மதமாற்றம் மிகச் சுலபமாக்கிவிட்டது. ரோமில் மட்டுமல்லாமல் ஏனைய ரோமானியக் காலனிகளெங்கும் கிறிஸ்துவத்துக்கு மாறும் மக்களின் சமூக அந்தஸ்து மிக உயர்ந்ததாக மதிப்பிடப்பட்டது. அவர்களும் அடிமைத்தளையில் வாழ்வதாக அல்லாமல் ஒரு "கிறிஸ்துவ சாம்ராஜ்ஜியத்தின் பிரஜைகள்" என்கிற பெருமித உணர்வுடன் வாழத் தொடங்கினார்கள்.யூதர்களின் வாழ்வியல் போராட்ட வரலாற்றில் ரோமானிய மன்னன் கான்ஸ்டன்டைன் கிறிஸ்துவத்துக்கு மாறிய சம்பவம் மிக முக்கியமானதொரு கட்டம். பொதுமக்கள் மதம் மாறுவதற்கும் அந்நாளில் ஒரு மன்னனே வேறொரு மதத்தை அங்கீகரித்து ஏற்பதற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு. அதுவும் தன்னைத்தான் மக்கள் வணங்கவேண்டும் என்று உத்தரவு போட்டுக்கொண்டிருந்த சக்ரவர்த்திகளின் வம்சத்தில் வந்த ஒருவன்! சக்ரவர்த்தியே தன்னை வணங்கச் சொல்லுவதை விடுத்து இயேசுவின் போதனைகளை ஏற்று மதம் மாறுகிறார் என்றால் நிச்சயம் கிறிஸ்துவத்தை விட மேலானதொரு மதம் இருக்க முடியாது என்று மத்தியக் கிழக்கில் ரோமானியக் காலனிகளில் வசித்து வந்த பாமர யூதர்களும் அரேபியர்களும் கருதத் தொடங்கினார்கள். இச்சம்பவம் ரோமானிய ஆட்சி எல்லைக்கு வெளியே இருந்த பல இடங்களிலும் தீவிர சிந்தனைக்கு வித்திட்டதைக் குறிப்பிடவேண்டும். முக்கியமாக "இயேசுவைக் கொன்ற இனம்" என்கிற குற்றஉணர்ச்சிக்கு ஆட்பட்டிருந்த யூதர்கள் அத்தனை பேருமே கண்ணை மூடிக்கொண்டு இதன்பின் கிறிஸ்துவத்துக்கு மாறத்தொடங்கினார்கள்.இதனால் பிரசாரங்களுக்குப் போகும் கிறிஸ்துவப் பாதிரியார்களுக்கு பிரச்னைகள் குறைய ஆரம்பித்தன. கல்லடிகள் கட்டிவைத்து எரித்தல் சூடு போடுதல் என்று அவர்கள் அதுவரை போகிற இடங்களிலெல்லாம் பட்ட எத்தனையோ பல கஷ்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கின. பாதிரியார்களின் வருகையைச் சகிக்க முடியாதவர்கள் கூட மௌனமாக முணுமுணுத்துக்கொண்டு ஒதுங்கிப் போனார்களே தவிர முன்னைப்போல் தொந்தரவுகள் தருவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டார்கள். மறுபுறம் ரோமானிய மன்னன் கான்ஸ்டன்டைன் மதம் மாறியதன் விளைவாக யூதர்களும் அரேபியர்களும் அல்லாத பிற சிறுதெய்வ வழிபாட்டாளர்களும் கிறிஸ்துவத்துக்கு மாற முன்வந்தார்கள். ரோம் நகரிலேயே வசித்துவந்தவர்கள் அவர்கள். அவர்கள் மூலமாகத்தான் ரோம் நகருக்கு வெளியே ஐரோப்பா முழுவதுமே கிறிஸ்துவம் கம்பீரமாகத் தலை நிமிர்த்திப் பரவ ஆரம்பித்தது. இதில் யூதர்களின் பிரச்னை என்ன?முதலாவது தர்மசங்கடம். தத்துவங்களின் உட்புகுந்து பார்க்கத் தெரியாத விரும்பாத பாமர மக்களிடையே கிறிஸ்துவம் வேகமாகப் பரவிக்கொண்டிருந்தாலும் படித்தவர்கள் மத்தியில் அப்போதும் கிறிஸ்துவம் என்பது "யூத மதத்தின் சுத்திகரிக்கப்பட்ட வடிவம்" என்பதான கருத்தாக்கமே மேலோங்கி இருந்தது. யூதமதம் உலகின் ஆதி மதங்களுள் ஒன்று. மிகப் புராதனமானது. நீண்ட பாரம்பரியம் கொண்டது. ஆயினும் செம்மைப்படுத்தப்படாத வடிவம் கொண்டது. யூத மதத்தின் பிற்கால குருமார்கள் சிறுதெய்வ உருவ வழிபாடுகளை அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மதச் சடங்குகளைத் தம் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளத் துணிந்துவிட்டார்கள். அதையெல்லாம் விமர்சனம் செய்தவர்தாம் இயேசு. புதியதொரு மதத்தை உருவாக்க அல்ல; இருக்கும் யூத மதத்தைத்தான் ஒழுங்குபடுத்த அவர் நினைத்தார். அப்படிப்பட்ட ஒழுங்குக்குக் கட்டுப்பட்டவர்கள்தாம் கிறிஸ்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்றால் தாமும் ஒரு கிறிஸ்துவராக அடையாளம் காணப்படுவதில் என்ன தவறு என்று அவர்கள் நினைக்கத் தொடங்கினார்கள்.இது சநாதன யூதர்களுக்கு மிகப்பெரிய தலைவலியானது. கிறிஸ்துவத்தைக் காட்டிலும் யூதமதம் உயர்வானது; இரண்டுக்கும் சம்பந்தமில்லை என்று நிரூபிக்க அவர்கள் துடித்தார்கள். ஆனால் தமது வாதங்களைப் பட்டியலிட்டு விளக்க அவர்களுக்குச் சாத்தியமில்லாமல் இருந்தது. சக்கரவர்த்தியே கிறிஸ்துவராக இருந்தது காரணம்.யூதர்களின் இரண்டாவது பிரச்னை வழிபாடு தொடர்பானது. அதுவரை மன்னரை வழிபடச்சொல்லி அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். தமது மத வழக்கங்களை வழிபாடுகளை அவர்கள் ரகசியமாகவே வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. அவ்வப்போது ரோமானியச் சக்கரவர்த்தியுடன் ஏதாவது சமரசம் பேசி தமது மத வழக்கங்களைத் தொடருவதற்கு அனுமதி பெற்று வந்தார்கள். இப்போது மன்னரே கிறிஸ்துவத்தை ஏற்று மதம் மாறிவிட்டபடியால் கிறிஸ்துவமே ரோமின் ஆட்சிமதமாகிப் போனது. அதாவது ஆட்சி புரியும் மதம். மன்னரை இனி வழிபடவேண்டாம்; கர்த்தரை வழிபடுங்கள் இயேசுவின் பாதையில் செல்லுங்கள் என்று மன்னர் கான்ஸ்டன்டைன் சொல்லிவிட்டார்.இது யூதர்களுக்கு சகிக்கமுடியாததொரு விஷயம். மன்னரையே கூட வழிபட்டுவிடலாம் கிறிஸ்துவத்தின் பாதையை எப்படி அவர்கள் ஏற்பார்கள்? ஒருங்கிணைந்து இதற்கு எதிரான குரல் கொடுக்கவும் அவர்களால் முடியவில்லை. சரியான தலைவர்கள் யாரும் அவர்களிடையே அப்போது இல்லை. ஆகவே மனத்துக்குள் மட்டுமே புழுங்கினார்கள்.மூன்றாவதும் மிக முக்கியமானதுமான பிரச்னை பிழைப்பு. ரோமானிய ஆளுகைக்கு உட்பட்டிருந்த அன்றைய பாலஸ்தீனில் கிறிஸ்துவத்துக்கு மாறியவர்களின் வாழ்க்கைத்தரம் மிக வேகமாக உயரத் தொடங்கியது. அரசு வேலைகள் அவர்களுக்கு மிகச் சுலபமாகக் கிடைத்தன. மேலை நாடுகளுக்குச் சென்று கல்வி பயிலவும் தொழில் செய்யவும் சக்கரவர்த்தி ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தார். கிறிஸ்துவத்துக்கு மாறுவோருக்கு அரசாங்கச் செலவில் நிலங்கள் கிடைத்தன. வீடுகள் வழங்கப்பட்டன. இதெல்லாம் மன்னர் தம் தனிப்பட்ட மகிழ்ச்சியைத் தெரிவிக்க மேற்கொண்ட முயற்சிகள்தாம்.இந்த கிறிஸ்துவப் புரட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டோர் யூதர்கள். அவர்களுக்கு ரோமானியப் பேரரசுக்குள் பிழைப்பதே பெரும்பாடு என்றாகிப்போனது. வாழ்க்கைத்தரம் உயர்வதற்காக மதம் மாறக்கூடாது என்று உறுதியாக இருந்த சிறுபான்மை யூதர்கள் வேறு வழியில்லாமல் தமது தாயகத்தைத் துறந்து வெளியே போய் வசிக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.ஒரு பெரும் கூட்டமாக அவர்கள் ஸ்பெயினுக்குப் போனார்கள். இன்னொரு கூட்டம் ரஷ்யாவுக்குப் போனது. வேறொரு குழு போலந்துக்குப் போனது. கொஞ்சம் பேர் ஜெர்மனிக்குப் போனார்கள். வடக்கு ஆப்பிரிக்காவின் சில தேசங்களுக்கும் போனார்கள். ரோமானியப் பேரரசுக்கு வெளியே எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் போனார்கள்.புராண காலத்தில் எகிப்தில் அடிமைகளாக வசித்துக்கொண்டிருந்த யூதர்களை எப்படி மீட்டுக்கொண்டுவரக் கடவுள் மோசஸ் என்னும் தூதரை அனுப்பினாரோ அதே போல ஒரு தூதன் மீண்டும் வருவான் தங்களை மீண்டும் ஜெருசலேமின் மடியில் கொண்டுவந்து சேர்ப்பான் என்கிற ஒரு நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. கண்ணீருடன் அவர்கள் தம் தாய்மண்ணைத் துறந்து ரோமானிய எல்லையைக் கடந்தார்கள்.சரித்திரத்தில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காகப் பாலஸ்தீனிலிருந்து யூதர்கள் வெளியேறியிருக்கிறார்கள். அவற்றுள் இது மிக முக்கியமானதொரு கட்டம். கிறிஸ்துவம் போல இஸ்லாம் போல யூதமதத்தில் "பரவல்" என்கிற ஓர் அம்சம் கிடையாது. யூத மதத்தில் மதமாற்றம் என்கிற விஷயம் அறவே கிடையாது. யாரும் யூதமதத்துக்கு மாறவேண்டும் என்று அவர்கள் கேட்கமாட்டார்கள். அதேபோல் யூதமதத்திலிருந்து வெளியேறி பிற மதங்களைத் தழுவுவோர் எண்ணிக்கையைக் குறைக்கவும் பாடுபடுவார்கள்.அப்படியிருக்க எகிப்து, சிரியா, ஜோர்தான், பாலஸ்தீன், லிபியா, ஈரான், ஈராக் போன்ற தேசங்களில் மட்டுமே இருந்த யூதர்கள் எப்படிப் பிற்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பரவினார்கள், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஓட ஓட விரட்டப்பட்டார்கள் என்கிற சந்தேகம் எழலாம்.இந்தச் சம்பவம்தான் அவற்றின் தொடக்கப்புள்ளி. ரோமானியப் பேரரசின் அதிகார எல்லைக்கு வெளியே போய்விடவேண்டும் என்றுதான் முதல் முதலாக அவர்கள் புறப்பட்டது. அவர்களை யாரும் வெளியேற்றவில்லை. அவர்களாகவேதான் வெளியேறினார்கள். அப்படி தேசத்தைவிட்டு வெளியேறியவர்களைத் தடுக்காததுதான் ரோமானிய ஆட்சியாளர்களின் பங்கு.நிம்மதியான வாழ்வை உத்தேசித்து இப்படி இடம் பெயர்ந்த யூதர்கள், குடியேறிய நாடுகளிலும் தனித்தீவுகளாகவே வசிக்கத் தொடங்கினார்கள். அதாவது, அந்தந்த நாட்டு மக்களுடன் அவர்கள் கலக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு நாட்டுக்குப் போகும் யூதர்களும் தனிக் காலனிகளை ஏற்படுத்திக்கொண்டு, யூதக் குடும்பங்களாகவே சேர்ந்து வசிக்கத் தொடங்கினார்கள்.ஸ்பெயினில் இருந்த ஆலிவ் தோட்டங்களில் அவர்களுக்கு வேலை கிடைத்தது. ஒயின் தயாரிப்பில் அவர்கள் ஈடுபட்டார்கள். பிற தேசங்களுக்குப் போன யூதர்கள், நெசவுத் தொழிலிலும், ஆடை வியாபாரத்திலும் அதிக கவனம் செலுத்தினார்கள். இத்தாலியில் அவர்கள் பேக்கரிப் பொருள்கள் தயாரித்து விற்பதைப் பிரதான தொழிலாகக் கொண்டார்கள். இன்னும் சிலர் சிறிய அளவில் வர்த்தகக் கப்பல்கள் வாங்கி, வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். ஷிப்பிங் ஏஜெண்டுகளாகவும் பலர் பணியில் அமர்ந்தார்கள்.இடமும் தொழிலும் மாறினாலும் அவர்கள் தம் பழக்கவழக்கங்களையோ, வாழ்க்கை முறையையோ மாற்றிக்கொள்ளவில்லை. எங்குபோனாலும் சுலபத்தில் அடையாளம் கண்டுகொள்ளும் விதமாகவே இருந்தன அவர்களது நடவடிக்கைகள். தமது அடையாளங்களை விட்டுக்கொடுக்க யூதர்கள் ஒருபோதும் சம்மதித்ததில்லை என்பதுதான் மிக முக்கியமான விஷயம். அவர்களது மிகப்பெரிய பலம் அதுதான்.அதுவேதான் பிற்காலத்தில் மாபெரும் பலவீனமாகவும் ஆகிப்போனது.
    தொடரும்.........
    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 26 டிசம்பர்இ 2004

  8. #20
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நன்றி
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  9. #21
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் ரத்தம் 11

    கிருஸ்துவத்தின் வளர்ச்சி

    11 கி.பி. நான்காம் நூற்றாண்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும்விதமாக ஒரே ஒரு விஷயத்தைக் குறிப்பிடவேண்டும் என்றால், ஒட்டுமொத்த சரித்திர ஆசிரியர்களும் சுட்டிக்காட்டுவது, கிறிஸ்துவத்தின் பரவலைத்தான். இயேசுவின் மரணத்தை அடுத்து ஆரம்பமான இயக்கம் அது. இன்றுவரையிலும் தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடவடிக்கையே என்றபோதும், நான்காம் நூற்றாண்டில் அதன் வீச்சு, கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.மத்தியக் கிழக்கிலும் ஐரோப்பாவிலும் நன்கு பரவி, வேரூன்ற ஆரம்பித்துவிட்டிருந்தது அது. கான்ஸ்டன்டைனை அடுத்து வந்த ரோமானிய ஆட்சியாளர்களும் கிறிஸ்துவத்தின் வளர்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்ததால், கிறிஸ்துவர்கள் ஒரு பொற்காலத்துக்குள் நுழைகிற உணர்வில் திளைத்திருந்தார்கள்.இந்நிலையில் பாலஸ்தீன நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டிருந்த கிறிஸ்துவர்கள், ஜெருசலேமையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் முழுவதுமாக கிறிஸ்துவ பூமியாகக் காட்டும் முடிவில், கண்ணில் பட்ட இடங்களிலெல்லாம் தங்கள் தேவாலயங்களை எழுப்ப ஆரம்பித்தார்கள். இதனால், ஒருபக்கம் ரோமானியச் சக்கரவர்த்தியையும் சந்தோஷப்படுத்திய மாதிரி ஆகும்; இன்னொரு பக்கம், புனித பூமியான ஜெருசலேமும் கிறிஸ்துவர்களின் நகரமாகவே காலப்போக்கில் அங்கீகரிக்கப்பட்டுவிடும். பெரும்பாலான யூதர்கள் ஜெருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் இதற்குப் பெரிய தடைகளும் வராது என்று அவர்கள் கருதினார்கள்.இப்படி ஜெருசலேமிலும் சுற்றுப்புற நகரங்களிலும் பெரிய பெரிய தேவாலயங்களை எழுப்பிய கிறிஸ்துவர்கள், அப்போது கிறிஸ்துவம் நன்கு பரவியிருந்த ஐரோப்பிய நாடுகளிலிருந்து குறிப்பாக கிரீஸ், இத்தாலி, பால்கன் தீபகற்பம் யாத்ரீகர்கள் பலரை ஜெருசலேமுக்கு வரவழைக்கவும் ஏற்பாடுகள் செய்தார்கள். மேலை நாட்டு யாத்ரீகர்கள், இயேசுவின் பூமிக்கு வந்து தரிசித்துவிட்டு, திரும்பிச்சென்று தங்கள் நாட்டில் கிறிஸ்துவத்தை மேலும் பரப்ப வேண்டுமென்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. அப்படி வருகிற மேலை யாத்ரீகர்களுள் சிலரை நிரந்தரமாகவே ஜெருசலேமில் தங்கவைத்து, அவர்களைக் கொண்டும் உள்ளூரில் கிறிஸ்துவத்தைப் பரப்ப முடிவு செய்தார்கள். அதாவது, "நமது மண்ணின் பெருமையை, அயல்நாட்டுக்காரர்களே உணர்ந்திருக்கிறார்கள் பார், நீ இன்னும் உணரவில்லையா?" என்று பாலஸ்தீனத்து யூதர்களையும் அரேபியர்களையும் பார்த்து மறைமுகமாகக் கேட்பது.இந்த முயற்சியில், பாலஸ்தீனக் கிறிஸ்துவர்களுக்குக் கணிசமான வெற்றி கிடைத்தது என்றே சொல்லவேண்டும். ஏராளமான அரேபியர்களையும் அதிகபட்சம் சுமார் ஆயிரம் யூதர்களையும் அவர்கள் அப்போது கிறிஸ்துவர்களாக மாற்றிக்காட்டினார்கள்.நான்காம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 375-395) ரோமை ஆண்ட மன்னன் தியோடோசியஸ் (Theodosius 1) ஒரு சட்டமே பிறப்பித்தான். ரோமானிய சாம்ராஜ்ஜியத்தில் கிறிஸ்துவத்தைத் தவிர, வேறு எந்த மதத்துக்கும் அனுமதியே கிடையாது!இதன் தொடர்ச்சியாக, அடுத்து வந்த புதிய நூற்றாண்டின் தொடக்கத்தில் சில கிறிஸ்துவத் துறவிகள் பாலஸ்தீனில் இருந்த யூத தேவாலயங்களை (யூதக் கோயில்களுக்கு Synagogues என்று பெயர்.) இடிக்க ஆரம்பித்தார்கள். சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வந்த பார் ஸெளமா (Bar Sauma) என்கிற ஒரு கிறிஸ்துவப் பாதிரியார் ஜெருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்த ஏராளமான யூத தேவாலயங்களை இடித்ததாக யூத சரித்திர ஆசிரியர்கள் பலர் குறிப்பிடுகிறார்கள்.இடிக்கப்பட்ட தேவாலயங்களை மீண்டும் கட்டுவது, மீண்டும் அவை இடிக்கப்படுவது என்று இது ஒரு தொடர் நடவடிக்கையாக இருந்துவந்திருக்கிறது. கி.பி. 614-ல் யூதர்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடும்விதமாக ஒரு சம்பவம் நடந்தது.அப்போது ரோமானியர்களுக்கு எதிராக யுத்தம் செய்ய பெர்சிய ராணுவமொன்று கிளம்பி, ஜெருசலேமை நோக்கி வந்துகொண்டிருந்தது. பாலஸ்தீன யூதர்கள், இதனை ஒரு வாய்ப்பாகக் கருதி அவர்களுடன் பேசினார்கள். ஒப்பந்தம் என்னவென்றால், ஜெருசலேமை பெர்சிய ராணுவம் வெற்றிகொள்ள, பாலஸ்தீன யூதர்கள் உதவுவார்கள். பதிலாக, ஜெருசலேமில் பெர்சியாவுக்குக் கட்டுப்பட்டதொரு யூத அரசு அமைய அவர்கள் உதவவேண்டும்.இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது. கி.பி. 614-ல் நடந்த யுத்தத்தில் பெர்சிய ராணுவத்துடன் பாலஸ்தீன யூதர்களும் இணைந்து, ரோமானிய ஆட்சியாளரை எதிர்த்துப் போரிட்டார்கள். இறுதி வெற்றியும் யூதர்களுக்கே கிடைத்தது. பெர்சியத் தளபதி கொடுத்த வாக்குப்படி நெஹேமியா பென் ஹுஸெய்ல் (Nehemiah ben Husheil) என்கிற யூத இனத் தலைவர் ஒருவரை ஜெருசலேமின் மன்னனாக அமர்த்திவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்.நீண்ட நெடுநாட்களுக்குப் பிறகு சுதந்திர யூத அரசு! யூதர்களால் முதலில் நம்பவே முடியவில்லை. சந்தோஷத்தில் என்ன செய்வதென்றே புரியாமல், நாட்டில் இருந்த அத்தனை கிறிஸ்துவர்களையும் அவர்கள் துரத்தித் துரத்தி விரட்ட ஆரம்பித்தார்கள். பாலஸ்தீனின் எல்லை வரை ஓடஓட விரட்டிவிட்டே திரும்பி வந்தார்கள். அங்கிருந்த அத்தனை கிறிஸ்துவ தேவாலயங்களும் உடனடியாக இழுத்துப் பூட்டப்பட்டன. இஸ்ரேலில் ஒரு கிறிஸ்துவரும் இருக்கக்கூடாது என்று கோஷம் செய்தார்கள். கொண்டாடினார்கள். குதித்துக் கும்மாளமிட்டார்கள்.இதெல்லாம் மூன்றாண்டுகள் வரைதான். யூதர்களுக்காக கிறிஸ்துவர்களைப் பகைத்துக்கொள்வது எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று பெர்சிய மன்னர் முடிவு செய்துவிட்டார். மேலும், இஸ்ரேல் விஷயத்தில் மட்டும் தலையிடாமல் இருந்தால் ரோமானியப் பேரரசால் எந்தப் பெரிய தொல்லையும் எக்காலத்திலும் வராது என்றும் அவர்களுக்குத் தோன்றியது. ஆகவே, அரசியல் ராஜதந்திரம் என்கிற ரீதியில், பாலஸ்தீன யூதர்களுக்குத் தாங்கள் அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டுவிடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள்.இதெல்லாம் ஒரு பெரிய காரியமா? மீண்டும் ஒரு படையெடுப்பு. ஒரு யுத்தம். தாங்கள் பதவியில் அமர்த்திவிட்டு வந்த அதே யூத மன்னன் நெஹேமியா பென் ஹுஸெய்லைக் கொன்றுவிட்டு, கிறிஸ்துவர்களுக்கே தங்கள் ஆதரவு என்று சொல்லிவிட்டு வந்துவிட்டது பெர்சிய ராணுவம்.அடுத்த ஐந்தாண்டு காலத்துக்கு பாலஸ்தீன மண், பெர்சியர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. யூதர்கள் மீண்டும் தங்கள் பழைய கஷ்டங்களை அனுபவிக்கப் பணிக்கப்பட்டார்கள். வழிபடக்கூடாது; மதப்பள்ளிக்கூடங்களை நடத்தக்கூடாது; மத போதனைகள் கூடாது; கிறிஸ்துவத்துக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளக்கூடாது. இஷ்டமிருந்தால் பாலஸ்தீனில் வாழலாம்; இல்லாவிட்டால் வேறெங்காவது கிளம்பிப் போக எந்த ஆட்சேபணையும் இல்லை.இந்தச் சமயத்திலும் பல யூதர்கள் தேசத்தை விட்டு வெளியேறினார்கள். ஒழுங்காக ரோமானியச் சக்ரவர்த்தியிடமே கோரிக்கை வைத்து, தமது மதக்கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள அனுமதி கோரியிருக்கலாம். தாமதமானாலும் நிச்சயம் கிடைத்திருக்கும். இப்படி அவர்களையும் பகைத்துக்கொண்டுவிட்டோமே என்று வருந்தினார்கள். கிறிஸ்துவர்களுடனேயேகூட சமரசமாக நடந்துகொண்டிருக்க முடியும். சம்பந்தமில்லாமல் ஒரு மூன்றாம் தரப்பினரை நம்பி மோசம் போய்விட்ட வருத்தம் அவர்களுக்குப் பல்லாண்டுகாலம் தொடர்ந்து இருந்துவந்தது.ஆனால், வருந்திப் பயனில்லை. ஹெராக்ளிடஸ் (Heraclitus) என்கிற ரோமானிய மன்னன் பாலஸ்தீன் மீது மீண்டும் படையெடுத்து வந்தான். மிகக் கடுமையான யுத்தம். இறுதியில் மீண்டும் பாலஸ்தீன் ரோமானிய ஆட்சிக்குள் வந்தது. அங்கு மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச யூதர்களையும் துடைத்து நாடு கடத்தினார்கள். மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, கிறிஸ்துவத்தை ஏற்கச் சம்மதித்த சில யூதர்கள் மட்டுமே இஸ்ரேலில் வாழ அனுமதிக்கப்பட்டார்கள். அப்படி அனுமதி பெற்று, பிறகு முரண்டு பிடித்தவர்களையெல்லாம் கணக்கு வழக்கில்லாமல் கழுவில் ஏற்றினார்கள். (நூற்றுக்கணக்கானோரை வலுக்கட்டாயமாக கிறிஸ்துவத்துக்கு மாற்றியதாகவும் சில குறிப்புகள் இருக்கின்றன.)தொடர்ந்து அவல வாழ்வைத்தான் வாழவேண்டும் என்று இருந்த தம் விதியை நினைத்து யூதர்கள் வருந்தினார்கள். அதுவும் இம்முறை ரோமானியப் படையெடுப்புக்குப் பிறகு சிவில் அரசல்ல; ஒரு ராணுவ அரசாகவே அங்கே ஆட்சி அமைக்கப்பட்டது. கிறிஸ்துவ ராணுவம். ரோமானியச் சக்ரவர்த்தியின் பிரதிநிதியாக பாலஸ்தீனை ஆள நியமிக்கப்பட்டவர், சக்ரவர்த்தியின் மந்திரிப் பிரதானிகளுள் ஒருவரல்லர். ராணுவத் தளபதிகளுள் ஒருவர். இன்னும் எத்தனை காலம் இந்தப் போராட்டமோ என்று ஒவ்வொரு இஸ்ரேலிய யூதரும் மனத்துக்குள் அழுதார்கள்.உண்மையில், யூதர்கள் அப்போது ரோமானிய ஆட்சியை நினைத்துக் கலங்கியிருக்கவே வேண்டாம். கிறிஸ்துவர்களுடனான அவர்களது உரசல்கள் எல்லாமும் கூட அர்த்தமே இல்லாதவையாக ஆகிப்போகும் காலம் வெகுசீக்கிரம் வரவிருப்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.யூதர்களாகவும் இல்லாமல், கிறிஸ்துவர்களாகவும் இல்லாமல் பாலஸ்தீனமண்ணின் பழங்குடி இனத்தவர்கள் என்கிற ஒரே அடையாளமுடன் எவ்வித கலாசார வளர்ச்சியும் அற்று, வெறும் மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்களின் வாழ்க்கையில் அப்போதுதான் முதல்முறையாக ஒரு மலர்ச்சி ஏற்பட்டது. ரோமானியர்கள் ஆண்டாலும், கிரேக்கர்கள் ஆண்டாலும், வேறு யார் ஆண்டாலும் அதுவரை அவர்கள் வெறும் சுண்டைக்காயாகவே இருந்தார்கள். ஆள்பவர்கள் அவர்களைப் பொருட்படுத்தமாட்டார்கள். யூதர்கள் அவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள். கிறிஸ்துவர்களோ, மதம் மாற்றமுடியுமா என்கிற நோக்கில் மட்டுமே அவர்களைப் பார்ப்பார்கள். இத்தனைக்கும் அவர்கள்தாம் அங்கே பெரும்பான்மை மக்கள்!யூதமதமும் கிறிஸ்துவ மதமும் பண்பட்ட மதங்கள் என்றும், சிறு தெய்வ வழிபாடுகளில் மூழ்கியிருந்த அரேபியர்களின் நம்பிக்கைகள் எதுவுமே பொருட்படுத்தத்தக்கவையல்ல என்றும் ஒரு கருத்து அங்கே ஆழமாக வேரூன்றியிருந்தது.அரேபிய மண்ணின் ஆதிவாசிகளான அவர்களுக்குக் கல்வி கூடக் கிடையாது. உழைப்பது, சாப்பிடுவது, சந்ததி பெருக்குவது என்கிற மூன்று காரியங்கள் தவிர, வேறு எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று கருதப்பட்டார்கள். அப்படிப்பட்ட இனத்தில் முதல் முதலாக ஓர் எழுச்சி கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது.எழுச்சி என்றால், வெறும் சொல்லில் அடங்கிவிடக்கூடிய எழுச்சியல்ல அது. உலக சரித்திரத்தில் வேறு எங்கும், எப்போதும், எந்தக் காலத்திலும் இன்றுவரையிலும் கூட அதற்கு நிகரான எழுச்சி நடந்ததில்லை. ஒட்டுமொத்த அரேபியர்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்ட எழுச்சி அது.அது கி.பி. 622-ம் வருடம், செப்டம்பர் மாதம் 27-ம் தேதி, திங்கட்கிழமை. ஒரு மனிதர், ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம் பெயர்ந்தார்.அவ்வளவுதான். ஒட்டுமொத்த அரேபியர்களும் மதம் பெயர்வதற்குத் தயாராகிவிட்டார்கள்.அவர் பெயர் முகம்மது. இயேசுவுக்குப் பிறகு இறைவன் அனுப்பியதாக நம்பப்படும் இறைத்தூதர் (நபி) இறுதித் தூதரும் அவரேதான்

    தொடரும்.........

  10. #22
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் மனோஜ்'s Avatar
    Join Date
    16 Jan 2007
    Location
    திருச்சி
    Posts
    4,192
    Post Thanks / Like
    iCash Credits
    12,656
    Downloads
    14
    Uploads
    0
    நன்றி தொடருங்கள்
    இதை எப்படி தொகுத்தார்கள் என்று செல்லவே இல்லையே
    Last edited by மனோஜ்; 16-01-2008 at 06:30 PM.
    உங்கள் அன்பு மனோஜ் அலெக்ஸ் எனது கவிதைகள் தமிழ்கணபுலி பட்டம் வெல்ல இங்கு சொடுக்கவும்
    இதுவரை 28தமிழ்கணப்புலிகள் அடுத்து அறிஞர் மற்றும் அமரரின் சிறப்பு பரிசுடன் கேள்வி

  11. #23
    அனைவரின் நண்பர் பண்பட்டவர் ஜெயாஸ்தா's Avatar
    Join Date
    09 Mar 2007
    Posts
    1,073
    Post Thanks / Like
    iCash Credits
    23,920
    Downloads
    61
    Uploads
    0
    Quote Originally Posted by ramanan4u View Post
    உழைப்பது, சாப்பிடுவது, சந்ததி பெருக்குவது என்கிற மூன்று காரியங்கள் தவிர, வேறு எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று கருதப்பட்டார்கள்.
    அரேபியர்கள் அப்போது மட்டுமல்ல இன்னும் கூட அப்படியேத்தான் இருக்கிறார்கள்.... அதனால் யூத சமுதாயம் அப்போது அனுபவித்த இன்னல்களைப்போல் இப்போது இவர்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். தொடருங்கள் ரமணன்.
    அடிபட்டு துடிக்கும்
    நடைபாதையோர சிறுவனை
    கண்டும் காணாமல்
    அலறி துடித்து
    விரைகிறது ஆம்புலன்ஸ்....!
    உள்ளே உயிருக்குப்போராடும்
    பணக்கார நாய்...!
    (உண்மையிலே நாய்தாங்க)

  12. #24
    இளையவர் பண்பட்டவர் ramanan4u's Avatar
    Join Date
    02 Nov 2007
    Posts
    86
    Post Thanks / Like
    iCash Credits
    8,960
    Downloads
    1
    Uploads
    0

    நிலமெல்லாம் ரத்தம் 12

    [B]இறைதூதர் முகம்மது[/B

    முகம்மது என்கிற மனிதரின் பிறப்பு, அவர் ஓர் இறைத்தூதர் என்று அறியப்பட்ட தருணம் - இந்த இரண்டுமே அரேபியர்களின் சரித்திரத்தில் மிக முக்கியமான அம்சங்கள்.ஒரு மனிதரின் பிறப்பே எப்படி முக்கியத் தருணமாகும்? என்கிற கேள்வி எழலாம். மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது. காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின. இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன. ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது.இதன் அடிப்படையில்தான் இப்படியொரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. முகம்மது பிறக்கும் முன்னரே அவரது தந்தை இறந்துவிட்டார். பிறந்த சிலகாலத்துக்குள்ளாகவே தாயையும் இழந்தவர் அவர். ஏழை வியாபாரியான அபூதாலிப் என்கிற தமது பெரியப்பாவின் அரவணைப்பில்தான் அவர் வளர்ந்தார்.இந்தப் பின்னணியை ஒரு காரணமாகக் கருதிவிட முடியாது என்றாலும், மிக இளம் வயதிலேயே கேளிக்கைகளையும் விளையாட்டுப் பேச்சுகளையும் அறவே தவிர்க்கக் கூடியவராக இருந்திருக்கிறார். இளம் வயதென்றால் பத்துப் பன்னிரண்டு வயதுகளிலேயே. அபூதாலிப்பால் முகம்மதுவுக்குச் சரியான பள்ளிப்படிப்பைத் தர இயலவில்லை. அவரது ஏழைமை அதற்குப் பெரும் தடையாக இருந்தது. அன்றைய தினம் அரேபியாவின் பெரும்பான்மை மக்களின் நிலைமை இதுதான். வளமை என்பது மிகச்சிலருக்கே உரிய விஷயமாக இருந்திருக்கிறது. கல்வியும் அத்தகையவர்களுக்கே உரித்தானதாக இருந்திருக்கிறது. படிப்பில் ஈடுபடாத அரபுக் குழந்தைகள், இளம் வயதிலேயே முரட்டு விளையாட்டுகளில் ஈடுபடுவதும், வாலிப வயதில் வாளேந்துவதும் சர்வ சாதாரணமாக இருந்திருக்கிறது. முகம்மதுவின் வயதில் இருந்த அத்தனை பிள்ளைகளும் வீதியில் ஆடிப்பாடி, அடித்துப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்த காலத்தில், முகம்மது மட்டும் தனியே எதையோ சிந்தித்தபடி அமர்ந்திருப்பவராக இருந்திருக்கிறார். அதைப் பார்த்து கேலி செய்யும் பிள்ளைகளிடம் "பிறவி எடுத்ததன் நோக்கம் இந்தக் கேளிக்கைகளில் இருப்பதாக நான் கருதவில்லை" என்று சொல்லக்கூடியவராக இருந்திருக்கிறார். அவரது தனிமை விரும்பும் சுபாவத்தையும், எப்போதும் சிந்தித்தபடி இருக்கும் இயல்பையும் மிகச்சிறிய வயதிலிருந்தே மற்றவர்கள் கவனித்து வந்திருந்தாலும், அதை ஆன்மிகத்துடன் தொடர்புபடுத்தி அப்போதே யாரும் யோசித்ததில்லை.அன்றைய அரேபியர்களின் இயல்புக்குச் சற்றும் நெருக்கமில்லாதது அது. அவர்கள் பக்திமான்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்ராஹிம் (ஆபிரஹாம்) நபி கட்டுவித்த "கஃபா" என்கிற பல நூற்றாண்டுகள் புராதனமான வணக்கஸ்தலத்தை பயபக்தியுடன் வலம் வந்து வணங்குபவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். எங்கெங்கிருந்தோ முந்நூற்று அறுபது இறை உருவங்களை எடுத்துவந்து அங்கே பிரதிஷ்டை செய்து தினமொரு கடவுளை பிரார்த்திப்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.ஆனால், இந்த பக்திப்பாதை, முகம்மதுவின் ஆன்மிகப் பாதைக்குச் சற்றும் சம்பந்தமில்லாததாக இருந்தது. துளியும் படிப்பறிவில்லாதவராக இருந்த முகம்மது, தமக்குள் ஒடுங்கி, அதன்மூலம் பெற்றிருந்த ஆன்மிகத் தேர்ச்சியை அநேகமாக யாராலுமே உணர இயலவில்லை. ஆனால், அவர் மீது அனைவருக்குமே ஒரு மரியாதை இருந்தது. பண்பான இளைஞர், பக்தி மிக்க இளைஞர் என்கிற அளவில் ஏற்பட்டிருந்த மரியாதை. ஏழைகளுக்கு வலிந்து போய் உதவக்கூடியவராக இருக்கும் இளைஞர் என்பதால் உண்டாகியிருந்த மரியாதை.தாம் ஓர் இறைத்தூதர் என்பதை அவர் அறிவதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்பே உருவாகியிருந்த மரியாதை அது. என்ன வித்தியாசம் என்றால், அரேபியர்களிடம் அன்று பக்தி உண்டே தவிர, "ஆன்மிகம்" என்பது அவர்களுக்கு அந்நியமானதொன்று. தமது குழுச் சண்டைகளுக்கும் இனப்போர்களுக்கும் கடவுளர்களைத் துணைநிற்கச் சொல்லி வேண்டுவார்களே தவிர, உள்ளார்ந்த அன்பை விதைத்து, சகோதரத்துவம் பயிரிடும் உத்தேசம் யாருக்கும் கிடையாது.இந்தக் காரணத்தினால்தான் அரேபியர்களிடையே சுலபமாக கிறிஸ்தவம் ஊடுருவ முடிந்தது. இதே காரணத்தினால்தான் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அடுத்தபடியாகவே அவர்கள் பொருட்படுத்தப்பட்டார்கள். இதனாலேயேதான் "காட்டரபிகள்" என்றும் அவர்கள் அன்று வருணிக்கப்பட்டார்கள்.இப்படிப்பட்டதொரு இனத்தில்தான் முகம்மது பிறக்கிறார். ஒன்றல்ல; இரண்டல்ல; முந்நூற்று அறுபது கடவுள்களை சிலைகளாகச் செய்துவைத்து வணங்கும் இனம். உழைத்துச் சாப்பிட்டு, சந்ததி பெருக்கி, மாண்டுபோய்க்கொண்டிருந்த இனம். பெண்கள் படைக்கப்பட்டதே, சந்ததி பெருக்குவதற்குத்தான் என்று உறுதிபட நம்பியதோர் இனம். ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் முட்டிமோதிக்கொண்டிருந்த இனம். படிப்பறிவில்லாத இனம். முரட்டு இனம். யுத்தவெறி பிடித்த இனம். தமது பெருமை என்னவென்றே உணராமல் காலம் காலமாக வீணடித்துவிட்ட இனம்.ஒரு சம்பவம் நடந்தது. கடும் மழை. பெரிய வெள்ளம். மெக்கா நகரின் மத்தியில் இருந்த "கஃபா" ஆலயத்தின் புராதனமான சுவர்கள் வெள்ளத்தில் இடிந்து விழுந்துவிட்டன. ஏற்கெனவே மிகவும் பழுதாகியிருந்த ஆலயம் அது. இடித்துவிட்டுப் புதுப்பிக்கலாம் என்று நினைத்த அரேபியர்களுக்குக் கொஞ்சம் பயம் இருந்தது. இறைவனின் ஆலயத்தை இடிப்பதன்மூலம் ஏதாவது அபவாதம் நேருமோ என்கிற பயம். ஆனால், அந்த வெள்ளத்தில், ஆலயத்தின் சுவர்கள் தாமாகவே இடிந்ததில் மிகவும் நிம்மதியடைந்தார்கள்.இனி பிரச்னையில்லை. இறைவனே உத்தரவு கொடுத்துவிட்டான்; ஆலயத்தை மீண்டும் திருத்தமாக எழுப்பிவிடலாம் என்று முடிவு செய்தார்கள். பல்வேறு இனக்குழுவினராகப் பிரிந்து இருந்த அரேபியர்கள் இந்த ஒரு விஷயத்தில் ஒன்றுசேர்ந்து, நிதி சேர்த்து, ஆலயப் புனரமைப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினார்கள்.ஆரம்பத்தில் எல்லாமே சிறப்பாகத்தான் இருந்தது. கட்டுமானப்பணி வேகமாகத்தான் நடைபெற்று வந்தது. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டம் வந்தபோது, அவர்களின் இயல்பான முரட்டு சுபாவம் மேலோங்கி, அடித்துக்கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.விஷயம் இதுதான். "கஃபா"வின் இடிக்கப்பட்டதொரு சுவரிலிருந்து, "ஹஜ்ருல் அஸ்வத்" என்ற கல் ஒன்றை எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருந்தார்கள். கொஞ்சம் விசேஷமான கல் போலிருக்கிறது. அதைத் திரும்பப் பதித்தாகவேண்டும். ஆனால் யார் பதிப்பது? எத்தனையோ இனக்குழுவினர் (கோத்திரத்தார் என்று அவர்களைக் குறிப்பிடுவது இஸ்லாமியர் வழக்கம்.) சேர்ந்துதான் கோயிலைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். கோயிலைச் சேர்ந்து கட்டுவதும் ஹஜ்ருல் அஸ்வத்தைத் திரும்பப் பதிக்கும் பணியை மேற்கொள்வதும் ஒன்றல்ல. இது பெருமை சம்பந்தப்பட்டது. கௌரவம் தொடர்பானது.ஆகவே, நீயா நானா போட்டி எழுந்துவிட்டது. எந்தக் கணமும் மோதல் யுத்தமாகி, ரத்தம் பெருகலாம் என்கிற நிலைமை. முன்னதாக, இதேபோல் எத்தனையோ பல உப்புப்பெறாத காரணங்களுக்காக வாளேந்தித் தலைசீவியவர்களே அவர்கள். சமாதானமல்ல; சண்டையே அவர்களின் அடையாளமாக இருந்தது. ஒரு சிறு வாய்ப்புக்கிடைத்தாலும் அடித்துக்கொண்டு மடிவதற்கு அத்தனை பேருமே தயாராக இருந்தார்கள்.இவர்களின் இத்தகைய இயல்பையும், "கஃபா" மறுகட்டுமானம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையையும் நன்கறிந்த மெக்கா நகரப் பெரியவர்களுக்கு மிகவும் அச்சம் ஏற்பட்டது. எப்படியாவது ரத்த நதி பெருகுவதைத் தடுத்தாகவேண்டும் என்று நினைத்தார்கள். எத்தனையோ விதமாகக் குரைஷிகளிடம் (மெக்காவில் வசித்துவந்த அரேபியர்கள் இவர்கள்தாம்.) பேசிப்பார்த்தார்கள்.ஆனால் எதற்கும் பலனில்லை. யாரும் உரிமையை விட்டுத்தரத் தயாராக இல்லை என்று சொல்லிவிட்டார்கள். யுத்தம் செய்வோம். வெற்றி பெறுபவர்கள் அந்தப் புனிதக் கல்லைத் திரும்பப் பதிக்கும் பரிசினைப் பெறுவார்கள் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்கள்.கட்டக்கடைசி முயற்சியாக ஒரு முதியவர், தன் பங்குக்கு ஒரு யோசனையை முன்வைத்தார். யுத்தத்தை ஒருநாள் ஒத்திப்போடலாம். யாராவது ஒருவர் சொல்லும் யோசனைக்காவது கொஞ்சம் செவிசாய்க்கலாம்.ஆனால், யார் அந்த ஒருவர்?அன்றைய பொழுது மறைந்து, மறுநாள் காலை விடியும்போது யார் முதலில் "கஃபா"வுக்குள் வணங்குவதற்காகச் செல்கிறாரோ, அவர்தான். யாராயிருந்தாலும் சரி. அந்த முதல் வணக்கம் செலுத்தப் போகிறவரிடம் பிரச்னையைக் கொண்டுசெல்வது. அவர் சொல்லும் யோசனை எதுவானாலும் கேட்டு, அதன்படி செயல்படுவது.அதுசரி. அவர் என்ன யோசனை சொல்லவேண்டும்? சண்டைக்குத் தயாராக இருக்கும் இனக்குழுவினரிடையே, யார் அந்தக் கல்லைப் பதிக்கலாம் என்று மட்டுமே அவர் சொல்லலாம். அவர் குறிப்பிடும் குழுவினர் கல்லைப் பதிப்பார்கள். மற்றவர்கள் ஒத்துழைக்கவேண்டும்.ஆர்வமுடனும் எதிர்பார்ப்புடனும் இரு தரப்பினருமே அன்றைய இரவு முழுவதும் "கஃபா"வின் வெளியே காத்திருந்தார்கள். மறுநாள் பொழுது இன்னும் விடியக்கூட இல்லை. இருள் பிரியாத அந்நேரத்தில் ஓர் உருவம் அமைதியாக "கஃபா"வுக்குத் தொழச் சென்றது. அவர்தான், அவர்தான் என்று அனைவரின் உதடுகளும் முணுமுணுத்தன.தொழுது முடித்து அவர் திரும்பியபோது அத்தனை பேரும் மொத்தமாக எதிரே வந்து நின்று யாரென்று உற்றுப்பார்த்தார்கள்.முகம்மதுதான் அவர். அப்போது அவருக்கு இருபத்துமூன்று வயது. ஆணழகராகவும் அறிவில் சிறந்தவராகவும் அமைதிவிரும்பியாகவும் ஒட்டுமொத்த மெக்காவுக்கும் அவர் அப்போது நன்கு அறிமுகமாகியிருந்தார். முன்பே சொன்னதுபோல், அவரிடம் அனைவருக்குமே அன்பும் மரியாதையும் மேலோங்கியிருந்தது.ஆகவே, ஒரு சரியான நபர்தான் ஆலயத்துள் முதல் நபராகச் சென்றிருக்கிறார், இவரிடம் நமது பிரச்னையைச் சொல்லித் தீர்வு கேட்கலாம் என்று நம்பிக்கையுடன் அவரை அணுகிப் பேசத் தொடங்கினார்கள்.முகம்மது பொறுமையாகக் கேட்டார். இப்போது நான் என்ன செய்யவேண்டும்?இரு தரப்பினர் இருக்கிறோம். "ஹஜ்ருல் அஸ்வத்" என்கிற கல்லை யார் "கஃபா"வின் சுவரில் பதிக்கவேண்டும்? முகம்மதுதான் சொல்லவேண்டும்.முகம்மது புன்னகை செய்தார். இரண்டடி நகர்ந்து, தன் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்துத் தரையில் விரித்தார். அந்தக் கல்லைக் கொண்டு வாருங்கள் என்று உத்தரவிட்டார்.கல் வந்தது. அதைத் துண்டின் நடுவே வைக்கச் சொன்னார். வைத்தார்கள். அவ்வளவுதான். இனி ஆளுக்கொரு புறம் துண்டின் நுனியைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்றார். பிடித்துக்கொண்டார்கள். அப்படியே எடுத்துப் போய்ப் பொருத்தி, பூசிவிடுங்கள் என்றார்.நன்கு கவனிக்கவேண்டிய இடம் இது. முகம்மது மூலம் உலகுக்கு வழங்கப்பட்ட இஸ்லாம் என்கிற மார்க்கத்தின் ஆதாரப்புள்ளி இந்தச் சம்பவத்துக்குள்தான் புதைந்திருக்கிறது. அரேபியர்களிடையே ஒற்றுமை என்கிற அவரது பெருங்கனவின் தொடக்கப்புள்ளியும் இதுதான். அவர் ஒரு நபி என்று அறியப்படுவதற்கெல்லாம் பல்லாண்டுகளுக்கு முன்னதாகவே நடந்த சம்பவம் இது.நாற்பது, நானூறல்ல; நாலாயிரம் துண்டுகளாகச் சிதறிக்கிடந்த அரேபியர்களை ஒரு மேல்துண்டின் நான்கு முனைகளை ஒற்றுமையுடன் பிடிக்க வைத்ததன்மூலம் மாபெரும் யுத்தமொன்றைத் தவிர்த்தாரே, அது. அதுதான் ஆரம்பம்.முகம்மது என்றொருவர் உதிக்காமலே போயிருந்தால் அரேபியர்களுக்கு சரித்திரம் என்று ஒன்று இருந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.
    தொடரும்.............
    நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 02 ஜனவரி, 2005

Page 2 of 5 FirstFirst 1 2 3 4 5 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •