Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 13

Thread: சந்தி இலக்கணம்

                  
   
   
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3

    சந்தி இலக்கணம்

    அன்பு நண்பர்களே,
    சமீபத்தில் எனக்கு சந்தி இலக்கணம் என்ற கோப்பு கிடைத்தது. அதில் இருக்கும் விடயங்கள் விருப்பமுள்ள நண்பர்களுக்கு உதவக்கூடும் என்பதால் இங்கே தருகிறேன். சில பதிவுகளாக அதை இட வேண்டியதிருக்கும்.
    நன்றி : இரா.விஜயராகவன்.

    தமிழில் சந்தி இலக்கணம்

    1.அறிமுகம்
    ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டல் (spelling) தொல்லை, தமிழில் சந்தித் தொல்லை. ஆங்கிலத்தில் ஒலிப்பது போல் எழுதுவது இல்லை; ஒலிப்பது ஒரு முறையாகவும், எழுதுவது ஒரு முறையாகவும் உள்ளது. தமிழில் சொற்களுக்கு இடையே சில மெய்யெழுத்துகளைச் சேர்த்துச் சேர்த்து எழுதுதல் வேண்டும்; மெய்யெழுத்தை எங்கே
    சேர்ப்பது, எங்கே சேர்க்கக் கூடாது என்பது தெரிவதில்லை --இது பலரது இடர்ப்பாடு.

    ஆங்கிலத்தில் எழுத்துக் கூட்டல் முறையால் வரும் ஐயங்களையும், இடர்ப்பாடுகளையும் எளிதில் போக்கிக்கொள்ள அகராதிகள் பேருதவி புரிகின்றன. தமிழில் எந்த அகராதி கொண்டும் சந்தி பற்றிய ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள வழி இல்லை. பல்லாண்டுகள் ஆழ்ந்து தமிழ் கற்றுப் பின்னர் தொன்னூல் விளக்கம் என்னும் விரிவான தமிழ் இலக்கண நூலை எழுதிய ஐரோப்பியத் தமிழறிஞரான வீரமாமுனிவர் என்னும் ரெவெரண்ட் பெஸ்கி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்: ------ he can neither understand them himself, nor will he ever be able to find them in any lexicon. ------Still I shall here copiously give many rules, which I have learnt by long experience
    and accurate study. -- Rev. Beschi, A Grammar of the Common Dialect of the Tamil Language, p.14.

    தமிழில் சந்தி இருப்பதற்குக் காரணம், பழங்காலத்தில் பார்த்துக் கற்ற கல்வி குறைவு; கேட்டுக் கற்ற கல்வியே மிகுதி. பார்த்துக் கற்கும் கல்வி மிகுந்துள்ள இக்காலத்தில், சந்தி ஒலிகள் வேண்டாதவையாக உள்ளன. இருப்பினும் பார்க்கும் கண்களுக்கு, சொற்கள் தனித்தனியே தோன்றுமே தவிர, கேட்கும் செவிக்குத் தனித்தனியே ஒலிப்பதில்லை. 'செவி' 'செல்வம்' எனும் இரண்டு சொற்களைத் தனித்தனியே எழுதிப் பார்க்க இயலும்; ஆனால் ஒலிக்கும்போது "செவிச் செல்வம்" என்று சேர்த்து ஒலிக்காமலிருக்க இயலாது. அது போன்றே "சொல்லி கொடுத்தான்" எனும் இரு சொற்களையும் ஒலிக்கும்போது "சொல்லிக் கொடுத்தான்" என்று இடையில் "க்" சேர்த்தே ஒலிக்க வேண்டும். இத்தகைய மாறுதல்களையே சந்தி இலக்கணம் கூறும். ஆங்கிலத்திலும் சந்தி உண்டு. கீழ்க்கண்ட சொற்களை நோக்குக:

    in + proper = improper
    in + mature = immature
    in + rational = irrational
    in + logical = illogical

    ஆங்கிலத்தில் in- என்னும் எதிர்மறை முன்னொட்டு (negative prefix) அடுத்து வரும் சொற்களின் முதலெழுத்துக்களுக்கேற்ப im-, ir-, il- என மாறுவது சந்தி மாற்றமேயாகும்.

    பழந்தமிழில் "கட்டீமை விளைவிக்குமெனவுணர்ந்தானென்றம்பி" என்று எழுத வேண்டியதை, இக்காலத்தில் "கள் தீமை விளைவிக்கும் என உணர்ந்தான் என் தம்பி" என்று பிரித்து எழுதுவது தவறாகாது. ஆனால் எனக்குத் தெரியும் என்பதை எனக்கு தெரியும் எனவும், ஆளப் படும் என்பதை ஆள படும் எனவும் எழுதுவது தவறே. எனவே இன்றியமையாத இடங்களில் சந்தியைப் பயன் படுத்துவது தவிர்க்க இயலாததாகிறது.

    அதனைப் பற்றி இக்கட்டுரையில் அறிய முயல்வோம். அதற்கு முன்பு, பள்ளியில் கற்ற தமிழ் இலக்கணங்கள் சிலவற்றை நினைவில் கொள்வோம்.

    2. தமிழ் எழுத்துக்களும் அதன் வகைகளும்:

    உயிரெழுத்துக்கள்: 12 (குறில் 5 + நெடில் 7), மெய்யெழுத்துக்கள்: 18 (வல்லினம் - 6,மெல்லினம் - 6, இடையினம் - 6) எனத் தமிழில் முப்பது முதலெழுத்துக்கள் உள்ளன. இவையன்றி ஒவ்வொரு மெய்யெழுத்தும் உயிருடன் இணைந்து 12 வருக்க எழுத்துக்களை உருவாக்கும்; இவை உயிர்மெய் எனப்படும்; எனவே 18 மெய்யும் 12 உயிர்களுடன் இணைந்து 216 உயிர்மெய் எழுத்துக்களை உருவாக்குகின்றன; இவை வரிவடிவங்களேயன்றி முதலெழுத்துக்கள் அல்ல. அடுத்து ஆய்த எழுத்து என்ற () முப்பாற்புள்ளி ஒன்றும் உண்டு. உயிர்மெய்யும், ஆய்தமும் சார்பெழுத்துகள் எனப்படும். இவையனைத்தும் நாம் அறிந்தவையே.

    2.1. மொழி முதல் மற்றும் மொழி இறுதி எழுத்துக்கள்:
    ஒரு சொல்லின் முதலில் வரும் எழுத்து மொழி முதல் எழுத்தாகும்; கடைசியில் வரும் எழுத்து மொழி இறுதி அல்லது ஈற்றெழுத்தாகும். கீழ்க்கண்ட சொற்களை நோக்குக:
    அவன் என்னும் சொல்லில் மொழி முதல் எழுத்து அ, மொழி இறுதி எழுத்து அல்லது ஈற்றெழுத்து ன். பலகை என்னும் சொல்லில் மொழி முதல் எழுத்து ப், மொழி இறுதிஎழுத்து ஐ.

    [பலகை என்ற சொல்லில் முதலெழுத்தாக வரும் ப என்பது ப் என்னும் மெய்யெழுத்தும் அ என்னும் உயிர் எழுத்தும் சேர்ந்த உயிர்மெய் ஆகும்; (அதாவது ப = ப் + அ) எனவே மொழி முதல் எழுத்து ப் என்னும் மெய்யெழுத்தே. அதேபோன்று கை என்னும் எழுத்து க் என்னும் மெய்யும் ஐ என்னும் உயிரும் சேர்ந்த உயிர்மெய் ஆகும் (அதாவது கை = க்+ஐ); எனவே மொழி இறுதி எழுத்து ஐ என்னும் உயிரெழுத்தே.]

    கனல் என்னும் சொல்லில் மொழி முதல் எழுத்து க், மொழி இறுதி எழுத்து அல்லது ஈற்றெழுத்து ல். அவளா என்னும் சொல்லில் மொழி முதல் எழுத்து அ, ஈற்றெழுத்து ஆ இப்போது சொல்லுக்கு முதலிலும், ஈற்றிலும் வரும் மொழி முதல் எழுத்து மற்றும் மொழி இறுதி எழுத்துகளை எவ்வாறு காண்பது என்பது விளங்குகிறதல்லவா? சுருங்கக் கூறினால் மொழிக்கு முதலிலும், ஈற்றிலும் வரும் எழுத்து முதலெழுத்தாக (அதாவது உயிர் அல்லது மெய்) மட்டுமே இருக்கும்; ஆனால் மொழி முதல் எழுத்தாக மெய் எழுத்து தனித்து வருவதில்லை; உயிருடன் இணைந்து உயிர் மெய்யாக மட்டுமே வரும்;

    எடுத்துக்காட்டாக ப்ரம்மா என்பது பிரம்மா என்றே எழுதப்படும்.
    Last edited by பாரதி; 19-11-2007 at 05:28 PM.

  2. #2
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    பாரதி அண்ணா...
    எல்லாமே சீன மொழியில் இருக்கோ??
    ஒன்னுமே புரியலையே...!!
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  3. #3
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    Quote Originally Posted by பூமகள் View Post
    பாரதி அண்ணா...
    எல்லாமே சீன மொழியில் இருக்கோ??
    ஒன்னுமே புரியலையே...!!
    இல்லையம்மா... சீன மொழியில் வார்த்தை எழுத்துக்களாக எழுதப்படும். (நான் சீனம் கற்கும் இரகசியம் எப்படி உங்களுக்கு தெரிந்தது..!?) ஒரு வேளை திஸ்கியில் இட்டிருப்பேனோ? இப்போது சரியாக தெரிகிறதா..?

  4. #4
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் அக்னி's Avatar
    Join Date
    21 Apr 2007
    Age
    44
    Posts
    9,836
    Post Thanks / Like
    iCash Credits
    79,004
    Downloads
    100
    Uploads
    0
    Quote Originally Posted by பாரதி View Post
    இப்போது சரியாக தெரிகிறதா..?
    ஆமா... இப்போ சரியாக உள்ளது...
    Last edited by அக்னி; 19-11-2007 at 05:35 PM.

    "தமிழ் தந்தது என் நாவுக்கு துடிப்பு..,
    தமிழ்மன்றம் தருவது என் தமிழுக்கு உயிர்ப்பு..!"

  5. #5
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1
    Quote Originally Posted by பாரதி View Post
    இல்லையம்மா... சீன மொழியில் வார்த்தை எழுத்துக்களாக எழுதப்படும். (நான் சீனம் கற்கும் இரகசியம் எப்படி உங்களுக்கு தெரிந்தது..!?) ஒரு வேளை திஸ்கியில் இட்டிருப்பேனோ? இப்போது சரியாக தெரிகிறதா..?
    இப்போது நம் செந்தமிழ் மொழியில் இருப்பதால் புரிகிறது.
    மிக மிக தேவையான பகிர்வு..
    பல இடங்களில் நான் குழப்பிக் கொள்வேன்.
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் பாரதி அண்ணா.


    ஆஹா... சீன மொழி கத்துட்டு இருக்கீங்களா??? அது தான் பூமகள்..!
    எப்படிக் கண்டுபிடிச்சேன் பார்த்தீங்களா?
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


  6. #6
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    2.1.1. மொழி முதல் எழுத்துக்கள்
    1. அ முதல் ஔ வரையிலான 12 எழுத்துக்களும் மொழிக்கு முதலில் வரும்.
    (எடுத்துக்காட்டுகள்: அம்மா, ஆணி, இன்பம், ஈகை, உணவு, ஊர், எட்டு, ஏற்றம், ஐவர், ஒலி, ஓடு, ஔவை என்பன போன்று).

    2. க், ச், த், ப், கிய 4 வல்லின எழுத்துக்களும் உயிருடன் இணைந்து மொழிக்கு முதலில் வரும். (எ-டு கடல், சிறகு, தென்றல், பொழுது, காற்று, சீற்றம், துணி, பெண்மை ஆகியன போன்று).

    3. ந், ம், ஞ், என்னும் மெல்லின மெய்யெழுத்துக்கள் உயிருடன் இணைந்து மொழிக்கு முதலில் வரும் (எ-டு நான், மலை, ஞாயிறு, மொழி, நன்மை என்பவை போன்று).

    4. வ், ய் என்னும் இடையின மெய்கள் உயிருடன் இணைந்து உயிர் மெய்யாக சொல்லுக்கு முதலில் வரும். (எ-டு வீடு, யானை போன்று)

    2.1.2. மொழி இறுதி எழுத்துக்கள்அல்லது மொழி ஈற்றெழுத்துக்கள்
    1. எ, ஒ தவிர்த்து ஏனைய 10 உயிர்களும் மெய்யோடு சேர்ந்து உயிர் மெய்களாக சொல்லின் இறுதியில் வரும் (எ-டு பல, பலா, மணி, தீ, படகு, அவனே, புதுமை, அவளோ, வௌ என்பன போன்று)

    2. ஞ், ண், ந், ம், ன், ஆகிய 5 மெல்லின மெய்களும், ய், ர், ல், வ், ழ், ள், ஆகிய 6 இடையின மெய்களும், க 11 மெய்யெழுத்துக்கள் மொழியின் ஈற்றில் வரும் (எ-டு
    உரிஞ், கண், பொருந், ம், மென், வாய், கார், ல், தெவ், தமிழ், கள் என்பன போன்று)

    3. புணர்ச்சி, நிலைமொழி, வருமொழி
    இரண்டு சொற்கள் ஒன்றோடொன்று சேர்வதைப் புணர்ச்சி என இலக்கணம் கூறும். அவ்விரு சொற்களில் முதலில் நிற்கும் சொல் நிலைமொழி எனப்படும்; அடுத்து சேர வரும் சொல் வருமொழி எனப்படும். கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளை நோக்குக.

    கண்ணன் + வந்தான் = கண்ணன் வந்தான்
    வாழை + கனி = வாழைக்கனி
    மரம் + நிழல் = மர நிழல்
    சமையல் + கலை = சமையற்கலை

    மேற்கூறிய எடுத்துகாட்டுகளில் கண்ணன், வாழை, மரம், சமையல் என்பன நிலைமொழிகள், வந்தான், கனி, நிழல், கலை என்னும் சொற்கள் வருமொழிகள். முதல் எடுத்துக்காட்டில், புணர்ச்சிக்குப் பின்னர் இரு சொற்களிலும் எவ்வித மாற்றமுமில்லை; எனவே இது இயல்புப் புணர்ச்சி எனப்படும். அடுத்த எடுத்துக்காட்டுகளில் புணர்ச்சிக்குப் பின்னர் சில மாற்றங்கள் தோன்றியுள்ளன எனவே இவை விகாரப் புணர்ச்சிகள் (விகாரம் என்றால் மாறுதல்) எனப்படும். இரண்டாம் எடுத்துக் காட்டில் க் என்னும் மெய்யெழுத்து புணர்ச்சிக்குப்பின் தோன்றியுள்ளதால் இது தோன்றல் விகாரப் புணர்ச்சியாகும். மூன்றாம் எடுத்துக்காட்டில் ம் என்னும் மெய்யெழுத்து புணர்ச்சிக்குப் பின் மறைந்து விட்டது அல்லது கெட்டுவிட்டது; எனவே இது கெடுதல் விகாரப் புணர்ச்சியாகும். கடைசி எடுத்துக்காட்டில் புணர்ச்சிக்குப்பின் ல் என்னும் மெய்யெழுத்து ற் என்னும் மெய்யெழுத்தாகத் திரிந்து விட்டதால் இது திரிதல் விகாரப் புணர்ச்சியாகும்.

    4. சந்தி
    இரு சொற்கள் சேரும் போது நிலைமொழியின் (அதாவது முதல் சொல்லின்) இறுதி எழுத்தும், வருமொழியின் (அதாவது அடுத்த சொல்லின்) முதல் எழுத்தும் இணைகின்றன; அப்போது உண்டாகும் மாற்றமே சந்தி எனப்படுகிறது என்பதை ஏற்கனவே கண்டோம். மேலும், சொல்லின் இறுதியில் வரும் மொழி ஈற்றெழுத்துக்கள், சொல்லின் முதலில் வரும் மொழிமுதல் எழுத்துக்கள் எவையெவை என்பதையும் பார்த்தோம். இப்போது சந்தி மாற்றங்களைப் பற்றி அறிவோம்.

    4.1. நிலைமொழியின் ஈற்றெழுத்தும், வருமொழியின் முதலெழுத்தும் உயிர் எழுத்தாக இருத்தல் (உயிர் முன் உயிர் புணர்தல், அதாவது உயிர் + உயிர்) நிலைமொழியின் ஈற்றிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்துக்கள் அமைய இரு சொற்கள் இணைவதை உயிர் முன் உயிர் புணர்தல் என்பர். அவ்வாறு இரு சொற்களிலும் உயிர் எழுத்துக்கள் வந்தால் அவை இரண்டையும் ஒன்றுபடுத்தும் பொருட்டு இடையில் சில மெய்யெழுத்துக்கள் தோன்றிப் புணரும். அம்மெய்யெழுத்துக்கள் வ் மற்றும் ய் என்னும் இரண்டுமாகும். இரு உயிர்களை ஒன்றுபடுத்தும் மெய் என்பதால் இவற்றை உடம்படுமெய்கள் என அழைப்பர்; அதாவது வகர உடம்படு மெய், யகர உடம்படுமெய் என இவை கூறப்படும். கீழ்வரும் எடுத்துக்காட்டுகளை நோக்குக:

    அடி + இணை = அடியிணை
    தீ + அணைப்பு = தீயணைப்பு
    வேலை + ஆள் = வேலையாள்
    கோ + இல் = கோவில் / கோயில்
    மா + இலை = மாவிலை
    பூ + இதழ் = பூவிதழ்
    சே + அடி = சேவடி
    வர + இல்லை = வரவில்லை

    இ, ஈ, ஐ என்பவை நிலைமொழியின் ஈறாக வந்தால் யகர உடம்படு மெய்யும், ஓ என்பது நிலை மொழியின் ஈறாக வந்தால் வகர/யகர உடம்படு மெய்களும், ஏனைய உயிரெழுத்துகள் நிலை மொழியின் ஈறாக வந்தால் வகர உடம்படு மெய்யும் புணர்ச்சியில் தோன்றும்.

  7. #7
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    4.2. நிலைமொழியின் ஈற்றில் உயிரும் வருமொழி முதலில் மெய்யும்(அதாவது உயிர்மெய்யும்) வருதல். [உயிர் முன் மெய் புணர்தல், அதாவது உயிர் + மெய்]

    4.2.1. நிலைமொழியின் ஈற்றில் அ

    1. அ, இ எனும் சுட்டெழுத்துக்களின் பின்னும் எ என்னும் வினா எழுத்தின் பின்னும் அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயரடைகளின் பின்னும், எந்த என்னும் வினாப்பெயரடையின் பின்னும், வல்லினம் (ஒற்று) மிகும்.

    எடுத்துக்காட்டு:
    அ + காடு = அக்காடு
    இ + சோதனை = இச்சோதனை
    எ + தோட்டம் = எத்தோட்டம்?
    அந்த + பெயர் = அந்தப்பெயர்
    இந்த + திருடன்= இந்தத்திருடன்
    எந்த + பாடம் = எந்தப்பாடம்?

    2. போக, வர, படிக்க(செய) என்னும் வினையெச்சங்களின் பின் வல்லினம் மிகும்.
    எ - டு
    போக + கண்டேன் = போகக் கண்டேன்
    வர + சொல் = வரச்சொல்
    படிக்க + படிக்க = படிக்கப் படிக்க

    3. நல்ல, இன்ன, இன்றைய போன்ற பெயரடைகளின் பின்னும் படித்த, எழுதாத போன்ற பெயரெச்சங்களின் பின்னும் வல்லினம் மிகாது.
    எ - டு:
    நல்ல + கதை = நல்ல கதை
    இன்ன + பெயர் = இன்ன பெயர்
    இன்றைய + தமிழ் = இன்றைய தமிழ்
    படித்த + புத்தகம் = படித்த புத்தகம்
    எழுதாத + கவிதை = எழுதாத கவிதை

    4.2.2. நிலைமொழியின் ஈற்றில் ஆ

    1. சில தொகைச் சொற்களில் வல்லின ஒற்று மிகும் (தொகைச் சொற்கள் பற்றி இங்கு விளக்கப்படவில்லை)
    எ-டு:
    பலா + கொட்டை = பலாக் கொட்டை
    பாப்பா + பாட்டு = பாப்பாப் பாட்டு
    திருவிழா + கூட்டம் = திருவிழாக் கூட்டம்
    ஊதா + பூ = ஊதாப் பூ

    2. சில பெயர்-வினை கூட்டுச் சொற்களில் வல்லின ஒற்று மிகும். -கள் என்னும் பன்மை விகுதி சேரும்போது சில இடங்களில் ஒற்று மிகும்; சில இடங்களில் மிகாது.

    எ-டு:
    கனா + கண்டு = கனாக் கண்டு
    விலா + புடைக்க = விலாப் புடைக்க
    புறா + கள் = புறாக்கள்
    வெண்பா + கள் = வெண்பாக்கள்
    ஆனால் வீடு + கள் = வீடுகள் என்றே வரும்.

    காடுகள், புலவர்கள், பெட்டிகள், பெண்கள், பாடல்கள் ஆகியவற்றிலும் ஒற்று
    மிகுவதில்லை.

    4.2.3. நிலைமொழி ஈற்றில் இ
    1. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையிலும்,
    பெயர்ச்சொல் அடை போன்றவற்றின் பின்னும் வல்லின ஒற்று மிகும்.
    எ-டு :
    துணியை விற்கும் கடை என்னும் பொருளில் ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாக துணி + கடை = துணிக்கடை என வரும்.
    வண்டி + காளை = வண்டிக்காளை
    எலி + பொறி = எலிப்பொறி
    குட்டி + பையன் = குட்டிப் பையன் (குட்டி என்பது பெயரடை)

    2. வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
    எ-டு:
    தேடி + சென்றான் = தேடிச் சென்றான்
    ஆடி + களித்தான் = ஆடிக் களித்தான்
    ஓடி + களைத்தான் = ஓடிக் களைத்தான்
    நாடி + போனான் = நாடிப் போனான்

    3. உம்மைத் தொகையில், முதற் சொல் வினையடியாக இருக்கையில் (வினைத்தொகையில்), -கள் பன்மை விகுதி சேர்கையில் வல்லின ஒற்று மிகாது.
    எ-டு:
    செடி + கொடி = செடி கொடி (செடியும் கொடியும் எனும் சொற்களில் உம்
    விகுதி தொக்கி/ மறைந்து வருவது உம்மைத் தொகை).
    பொரி + கடலை = பொரி கடலை
    வெடி + குண்டு = வெடி குண்டு
    குடி + தண்ணீர் = குடி தண்ணீர்
    செடி + கள் = செடிகள்
    கல்லூரி + கள் = கல்லூரிகள்

    4.2.4. நிலைமொழி ஈற்றில் ஈ
    1. ஈ, தீ, போன்ற ஓரெழுத்துச் சொற்களின் பின்னும் -கள் என்னும் பன்மை விகுதியிலும் வல்லின ஒற்று மிகும்.
    எ - டு:
    ஈ + கடி = ஈக்கடி
    தீ + சுடர் = தீச்சுடர்
    தீ + பிடித்தது = தீப்பிடித்தது
    ஈ + கள் = ஈக்கள்

    4.2.5. நிலைமொழி ஈற்றில் உ
    1. கு, சு, டு, ணு, பு, து, று, ரு, ழு, வு கிய எழுத்துக்களில் முடியும் பெயர்ச் சொற்களின் பின்னர் வல்லின ஒற்று மிகும்.
    எ-டு
    தேக்கு + கட்டை = தேக்குக் கட்டை
    பஞ்சு + பொதி = பஞ்சுப் பொதி
    துண்டு + தாள் = துண்டுத் தாள்
    அணு + திரள் = அணுத் திரள்
    மருந்து + பை = மருந்துப் பை
    வம்பு + சண்டை = வம்புச் சண்டை
    மாற்று + தொழில் = மாற்றுத் தொழில்
    தெரு + சண்டை = தெருச் சண்டை
    முழு + பொறுப்பு = முழுப் பொறுப்பு
    நெசவு + தொழில் = நெசவுத் தொழில்

    2. டு, று என்பதில் முடியும் பெயர்ச்சொற்களின் இறுதி இரட்டித்து வல்லின ஒற்று மிகும். -ட்டு, -த்து, -ற்று என முடியும் வினையெச்சங்களின் பின்னும் வல்லினம் மிகும்.
    எ - டு :
    ஆடு + தலை = ஆட்டுத் தலை
    சோறு + பானை = சோற்றுப் பானை
    கேட்டு + சொல் = கேட்டுச் சொல்
    விற்று + கொடு = விற்றுக் கொடு
    செத்து + பிழைத்தான் = செத்துப் பிழைத்தான்

    3. கூட்டுச் சொற்களில் முதல் சொல் வினையடியாக இருந்தால் (வினைத் தொகையில்)வல்லின ஒற்று மிகாது.
    எ - டு :
    சுடு + சோறு = சுடு சோறு
    ஆடு + களம் = ஆடு களம்
    தேடு + பொறி = தேடு பொறி

    4. -ண்டு, -ந்து, -ய்து, -ன்று என முடியும் வினையெச்சங்களின் பின் வல்லின ஒற்று மிகாது.
    எ - டு:
    கண்டு + திகைத்தான் = கண்டு திகைத்தான்
    செய்து +பார்த்தனர் = செய்து பார்த்தனர்
    வந்து + காத்திரு = வந்து காத்திரு
    மென்று + சாப்பிடு = மென்று சாப்பிடு

    5.சு, ணு, ரு, ழு, னு ஆகியவற்றில் முடியும் ஈரசை சொற்களின் முதலெழுத்து உயிர்க்குறிலாக இருந்தால் கள் விகுதி சேரும் போது வல்லின ஒற்று மிகும்.
    எ - டு :
    கொசு + கள் = கொசுக்கள்
    அணு + கள் = அணுக்கள்
    தெரு + கள் = தெருக்கள்
    குழு + கள் = குழுக்கள்
    மனு + கள் = மனுக்கள்

    ஈரசைச் சொற்களின் முதலெழுத்து உயிர் நெடிலாக இருப்பின் ஒற்று மிகாது.
    எ - டு :
    காசு + கள் = காசுகள்

    6. மூவசைச் சொற்களின் பின்னும், வு என்பதில் முடியும் பெயர்ச்சொற்களின் பின்னும் ஒற்று மிகாது.
    எ - டு:
    கொலுசு + கள் = கொலுசுகள்
    தராசு + கள் = தராசுகள்
    ஆய்வு + கள் =ஆய்வுகள்

    7. -ட்டு, -த்து கியவற்றின் பின் -கள் சேரும் போது வல்லின ஒற்று மிகலாம், மிகாமலும் இருக்கலாம்.
    எ- டு :
    பாட்டு + கள் = பாட்டுக்கள்/பாட்டுகள்
    வாழ்த்து + கள் = வாழ்த்துக்கள்/வாழ்த்துகள்
    எழுத்து + கள் = எழுத்துக்கள் (letters) /எழுத்துகள் (writings)

    8. அங்கு, இங்கு, எங்கு போன்ற சொற்களின் பின் வல்லினம் மிகுவது தற்காலத்தமிழில் இல்லை.
    எ - டு :
    அங்கு + கண்டேன் = அங்கு கண்டேன்
    இங்கு + பார் = இங்கு பார்
    எங்கு + செல்வது = எங்கு செல்வது?

    4.2.6. நிலைமொழி ஈற்றில் ஊ
    1. பூ போன்ற ஓரெழுத்துச் சொல்லின் பின்னர் வல்லின ஒற்று மிகும்
    எ - டு :
    பூ + செடி = பூச்செடி
    பூ + போல = பூப்போல
    வாழைப்பூ + பொரியல் = வாழைப்பூப் பொரியல்

    2. க், ச், த், ப் என்பவற்றின் இன எழுத்துக்களான ங், ஞ், ந், ம் தோன்றுவதும் உண்டு.
    எ - டு :
    பூ + கொடி = பூங்கொடி
    பூ + செடி = பூஞ்செடி
    பூ + தோட்டம் = பூந்தோட்டம்
    பூ + பாவை = பூம்பாவை

    4.2.7. நிலைமொழி ஈற்றில் ஏ
    1. வல்லின ஒற்று மிகுவதில்லை
    எ - டு:
    அங்கே + கண்டேன் = அங்கே கண்டேன்
    இங்கே + பார் = இங்கே பார்
    உள்ளே + செல் = உள்ளே செல்
    வெளியே + துரத்து = வெளியே துரத்து
    எங்கே + போகிறாய் = எங்கே போகிறாய்?

    4.2.8. நிலை மொழி ஈற்றில் ஐ
    1. கை, தை போன்ற ஓரெழுத்துச் சொற்களின் பி வல்லின ஒற்று மிகும்.
    எ - டு :
    கை + துண்டு = கைத்துண்டு
    தை + பொங்கல் = தைப்பொங்கல்

    2. இரு பெயர்கள் இணைந்து வரும்போது முதல் பெயர் சிறப்புப் பெயராகவும், இரண்டாவது பொதுப் பெயராகவும் இருப்பின் வல்லின ஒற்று மிகும்.
    எ - டு :
    பச்சை + கிளி = பச்சைக்கிளி
    மல்லிகை + பூ = மல்லிகைப்பூ,
    சாரை + பாம்பு = சாரைப்பாம்பு
    சித்திரை + திங்கள் = சித்திரைத்திங்கள்

    3. இடப்பெயர்கள், திசைகள் ஆகியவற்றின் பின்பு பெயர்ச் சொற்கள் வந்தால் வல்லின ஒற்று மிகும்.
    எ - டு: மதுரை + கல்லூரி = மதுரைக் கல்லூரி
    கீழை + தெரு = கீழைத் தெரு
    மேலை + சேரி = மேலைச் சேரி

    4. சில வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகும்.
    எ - டு:
    குதிரை + குளம்பு = குதிரைக் குளம்பு
    கை + தொழில் = கைத் தொழில்
    மண்பானை + சமையல் = மண்பானைச் சமையல்
    அவை + தலைவர் = அவைத் தலைவர்

    5. இரண்டாம் வேற்றுமை உருபு ஐ மறையாமல் வந்தால், அதாவது இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லின ஒற்று மிகும்.
    எ - டு:
    கையை + பிடி = கையைப் பிடி
    பழத்தை + கடி = பழத்தைக் கடி
    பணத்தை + செலுத்து = பணத்தைச் செலுத்து
    கதவை + தட்டு = கதவைத் தட்டு

    ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிகாது.
    எ-டு:
    மோர் + குடி = மோர் குடி

    6. உம்மைத் தொகையில் வல்லின ஒற்று மிகாது.
    எ - டு:
    கை + கால் = கை கால்
    இலை + தழை = இலை தழை
    சண்டை + சச்சரவு = சண்டை சச்சரவு
    நிலை மொழி ஈற்றில் ஏ, ஒ என்னும் உயிரெழுத்துக்கள் வருவதில்லை; ஓ ஆகியன வருவதும் மிக மிகக் குறைவு.]

  8. #8
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மிக்க நன்றி பாரதி.

    கேட்கும் காலம், மணல் மேல் எழுதிய காலம், ஓலையில் எழுதிய காலம்,
    பலகையில், காகிதத்தில் எனக் காலங்கள் மாற மாற -
    இப்போது அவசர யுகத்தில் தட்டச்சில் அதிகமாய்த் தமிழ் வாழ...

    குறைக்கும் போதெல்லாம் குறைத்து எழுதினால்..
    சொல் - வாக்கியப்பொருள் மாறாதிருக்குமென்றால்

    குறைத்தே எழுதப்படும் இனி நம் தமிழ்..

    அரிய இப்பணிக்கு மூலவருக்கும் (இரா. விஜயராகவன் அவர்கள்)
    அளிப்பவருக்கும் ( நீ) என் நன்றிகள்..

    வாழ்த்துகள்/வாழ்த்துக்கள் இப்படி '' டிரா''வில் முடிந்துவிட்டதே!
    (குறைந்த எழுத்துகள் என்பதால் வாழ்த்துகள் எனவே தொடர்வேன்.)

    பொருள்கள்/பொருட்கள் முடிவறிய அவா!
    நிலைமொழி ஈற்றில் ள் வரும்வரை பொறு மனமே!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  9. #9
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    கருத்துக்கு மிக்க நன்றி அக்னி, அண்ணா.
    நம் வாழ்வில் காணா
    சமரசம் உலாவும் இடமே..! நீங்கள் எதிர்பார்ப்பதிலும் சமரசம்தான்..!
    --------------------------------------------------------------------------
    4.3. நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்தும், வருமொழி முதலில் உயிரெழுத்தும் இருத்தல் (மெய் முதல் உயிர் புணர்தல், அதாவது மெய் + உயிர்)

    4.3.1. நிலை மொழி ஈற்றில் க்

    எ-டு:
    பிளாஸ்டிக் + ல் = பிளாஸ்டிக்கால்
    (க் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வருமொழி வேற்றுமை உருபாக இருப்பின் க் இரட்டிக்கும்).

    4.3.2. நிலைமொழி ஈற்றில் ங்

    எ - டு:
    மன்மோகன்சிங் + ஆல் = மன்மோகன்சிங்கால்
    (ங் என்ற எழுத்தில் முடியும் பிறமொழிச் சொற்களோடு தமிழ் விகுதி இணையும்போது ங்-இன் இன எழுத்தான க் வந்து சேர்கிறது.)

    4.3.3. நிலைமொழி ஈற்றில் ச்

    எ-டு :
    சர்ச்+ இல் = சர்ச்சில்
    சர்ச் + உம் = சர்ச்சும்
    (ச் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வேற்றுமை உருபுகளையும், இடைச் சொற்களையும் ஏற்கும்போது இரட்டிக்கிறது.)

    எ-டு:
    பிராஞ்ச் + இல் = பிராஞ்சில்
    (தனது இன எழுத்தாகிய மெல்லின ஞ் உடன் ச் வரும்போது இரட்டிப்பத்ல்லை.)

    4.3.4. நிலைமொழி ஈற்றில் ட்

    எ - டு:
    பட்ஜெட் + ஐ = பட்ஜெட்டை
    பட்ஜெட் + ஆனது = பட்ஜெட்டானது
    (ட் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வேற்றுமை உருபுகளையும், இடைச்
    சொற்களையும் ஏற்கும் போது இரட்டிக்கிறது.)

    4.3.5. நிலைமொழி ஈற்றில் ண்

    எ - டு :
    பெண் + ஆசை = பெண்ணாசை
    விண் + உலகம் = விண்ணுலகம்
    (முதல் சொல் ஓரசையாகவும் அதில் வரும் உயிர் குறிலாகவும் இருந்தால் ண் இரட்டிக்கும்).

    4.3.6. நிலைமொழி ஈற்றில் த்

    எ - டு:
    காமன்வெல்த் + இல் = காமன்வெல்த்தில்
    குவைத் + உம்= குவைத்தும்
    (த் பிறமொழிச் சொல்லின் இறுதியாக இருந்து வேற்றுமை உருபுகளையும், இடைச்சொற்களையும் ஏற்கும்போது இரட்டிக்கிறது.)

    எ-டு:
    பிரேம்சந்த் + இன் = பிரேம்சந்தின் (தனது இன எழுத்தாகிய மெல்லின ந் உடன் த் வரும்போது இரட்டிப்பத்ல்லை.)

    4.3.7. நிலைமொழி ஈற்றில் ம்

    எ - டு:
    அகம் +இதழ் = அகவிதழ்
    புறம் + ஊர் + புறவூர்
    (ம் மறைந்து, வ் என்னும் உடம்படு மெய் வருவதுண்டு.)

    எ - டு:
    பழம் + உற்பத்தி = பழ உற்பத்தி
    கணிதம் + ஆசிரியர் = கணித ஆசிரியர்
    மாநிலம் + அளவில் = மாநில அளவில்
    (ம் மறைந்தாலும், உடம்படு மெய் வராமல் எழுதப்படுகிறது.)

    எ - டு:
    ஆயிரம் + ஆயிரம் = ஆயிரமாயிரம்
    குற்றம் + அனைத்தும் = குற்றமனைத்தும்
    (நிலைமொழி இறுதி மெய்யும் வருமொழி முதலிலுள்ள உயிரும் இணைந்து உயிர் மெய்யாக மாறுகிறது.)

    4.3.8. நிலைமொழி ஈற்றில் ய்

    எ - டு:
    மெய் + அன்பு = மெய்யன்பு
    பொய் + க = பொய்யாக
    (முதல் சொல் ஒரசையாகவும், அதில் வரும் உயிர் குற்லாகவும் இருப்பின் ய் இரட்டிக்கும்.)

    4.3.9. நிலைமொழி ஈற்றில் ல்

    எ - டு:
    சொல் + அடுக்கு = சொல்லடுக்கு / சொல் அடுக்கு
    பல் + இடுக்கு = பல்லிடுக்கு / பல் இடுக்கு
    சொல் + ஆராய்ச்சி = சொல்லாராய்ச்சி / சொல் ஆராய்ச்சி
    (ஈறிலுள்ள எழுத்து இரட்டித்த நிலையில் சேர்த்தும், இயல்பு நிலையில் பிரித்தும் எழுதப் படுகின்றன.)

    4.3.10. நிலைமொழி ஈற்றில் ள்

    எ-டு :
    எள் + அளவும் = எள்ளளவும்
    கள் + உண்ணல் = கள்ளுண்ணல்/கள் உண்ணல்
    (முதல் சொல் ஒரசையாகவும், அதில் வரும் உயிர் குற்லாகவும் இருப்பின் ள் இரட்டிக்கும்; இயல்பாக எழுதுவதும் உண்டு.)

    4.3.11. நிலைமொழி ஈற்றில் ன்

    1. எ - டு :
    சூர்யன் +ஆற்றல் = சூரிய ஆற்றல்
    சந்திர + ஒளி = சந்திர ஒளி
    (வேற்றுமை உறவு கொண்ட சொற்களின் ந் மறையும்; ன் மறைந்தாலும், உடம்படு மெய்
    வராமல் எழுதப்படுகிறது)

    2. எ - டு:
    பொன் + ஆசை = பொன்னாசை/ பொன் ஆசை
    மின் + அணு = மின்னணு / மின் அணு
    மின் + அஞ்சல் = மின்னஞ்சல் / மின் அஞ்சல்
    மின் + இணைப்பு = மின்னிணைப்பு / மின் இணைப்பு
    (முதல் சொல் ஓரசையாகவும், அதில் வரும் உயிர் குற்லாகவும் இருப்பின் ன் இரட்டிக்கும்; இயல்பாக எழுதுவதும் உண்டு.)

    4.3.12. நிலைமொழி ஈற்றில் ஜ், ஷ், ஸ்

    எ - டு:
    காலேஜ் = இல் + காலேஜில்
    தமாஷ் +ஆ = தமாஷாக
    பஸ் + ஐ= பஸ்ஸை
    (ஜி, ஷா, என உயிர் மெய்யாக எழுதப்படுகின்றன; ஸ் இரட்டித்து ஸ்ஸை வரும்)

    4.4. நிலைமொழி ஈற்றிலும் மெய், வருமொழி முதலிலும் மெய் (அதாவது, உயிர் மெய்)இருத்தல் [மெய் முதல் மெய் புணர்தல், அதாவது மெய் + மெய்]

    4.4.1. நிலைமொழி ஈற்றில் ண்


    1. வருமொழி முதலில் க்,ச்,த்,ப்,ம் இருந்தால் மாற்றமின்றி எழுதுவதே இப்போதைய
    வழக்கு.

    எ - டு:
    மண் + குடம் = மண் குடம்
    மண் + சுவர் = மண் சுவர்
    மண் + பானை = மண் பானை
    கண் + மலர் = கண் மலர்

    2. வரு மொழி முதலில் ந் இருப்ப்ன், அது ண் என மாற்றமடையும்.

    எ- டு:
    தண் + நீர் = தண்ணீர்
    விண் + நோக்கி = வ்ண்ணோக்கி

    4.4.2. நிலைமொழி ஈற்றில் ம்

    1. வேற்றுமை உறவில், அடை ஏற்ற நிலையில், உவமிக்கும் வகையில் இரு பெயர்ச் சொற்கள் இணையும் போது வல்லின ஒற்று மிகும்.

    எ - டு :
    மரம் + கிளை = மரக் கிளை
    சட்டம் + திருத்தம் = சட்டத் திருத்தம்
    காலம் + சக்கரம்= காலச் சக்கரம்
    நகரம் + பேருந்து = நகரப் பேருந்து
    சங்கம் + பாடல் = சங்கப் பாடல்
    நாகரிகம் + செயல்= நாகரிகச் செயல்

    2. வருமொழி முதலில் க், ச், த், மெய்கள் உயிருடன் இணைந்து வரும்போது, நிலை மொழி ஈற்றிலுள்ள ம் அம்மெய்களின் இன எழுத்துக்களாக மாறும்

    எ - டு:
    மனம் + கலங்கு = மனங்கலங்கு
    கடும் + சொல் = கடுஞ்சொல்
    மாதம் + தோறும் = மாதந்தோறும்
    நிலம் + கள் = நிலங்கள்

    3. வேற்றுமை உறவில் ம் என்னும் எழுத்து மறையும்.

    எ - டு:
    குலம் + முறை = குல முறை
    திருமணம் + வாழ்த்து = திருமண வாழ்த்து

    வேற்றுமைத் தொகை இல்லாத நிலையில் ம் மறைவதில்லை

    எ - டு:
    மாநிலம் + முழுவதும் = மாநிலம் முழுவதும்

    4. வருமொழி முதலில் ப் இருப்பின், ம் மறைவதில்லை.

    எ - டு:
    பெரும் + பங்கு = பெரும் பங்கு
    மூன்றாம் + பிறை = மூன்றாம் பிறை

    4.4.3. நிலைமொழி ஈற்றில் ய்

    1. வேற்றுமை உறவில், இரு பெயர்ச் சொற்கள் இணைகையில், ய் என்பதில் முடியும்
    வினையெச்சத்தின் பின்னர் க், ச், த், ப் ஆகிய வல்லொற்றுக்கள் மிகும்.

    எ - டு:
    பேய் + காற்று = பேய்க் காற்று
    தாய் + பாசம் = தாய்ப் பாசம்
    வாய் + சொல் = வாய்ச் சொல்
    பொய் + தூக்கம் = பொய்த் தூக்கம்
    போய் + சேர் = போய்ச் சேர்
    நன்றாய் + தெரிகிறது = நன்றாய்த் தெரிகிறது

    4.4.4. நிலைமொழி ஈற்றில் ர்

    1. வேற்றுமை உறவில், இரு பெயர்ச் சொற்கள் இணைகையில் க், ச், த், ப் ஆகிய
    வல்லொற்றுக்கள் மிகும்.

    எ - டு:
    நீர் + கோவை = நீர்க் கோவை
    நகர் + பகுதி = நகர்ப் பகுதி
    தயிர் + சோறு = தயிர்ச் சோறு
    வெளிர் + பச்சை = வெளிர்ப் பச்சை
    திடீர் + புரட்சி = திடீர்ப் புரட்சி
    உயிர் + தோழன் = உயிர்த் தோழன்

    2. வினைத் தொகையில் வல்லின ஒற்று மிகுவதில்லை.

    எ - டு:
    உயர் + குடி = உயர் குடி
    வளர் + தமிழ் = வளர் தமிழ்

    4.4.5. நிலைமொழி ஈற்றில் ல்

    1. சில கூட்டுச் சொற்களில் ல் என்பது ற் என மாற்றமடையும்.

    எ - டு:
    நெல் + கதிர் = நெற் கதிர்
    கல் + சிலை + கற் சிலை
    பால் + குடம் = பாற் குடம்
    கல் + குவியல் = கற் குவியல்
    சொல் + செட்டு = சொற் செட்டு
    சொல் + கள் = சொற்கள்
    ஏற்றால் + போல் = ஏற்றாற் போல்
    தகுந்தால் + போல் = தகுந்தாற் போல்

    2. சில கூட்டுச் சொற்கள் இயல்பாகவும், சந்தி மாற்றத்துடனும் எழுதப்படுகின்றன.

    எ - டு:
    முதல் + கடவுள் = முதல் கடவுள் / முதற் கடவுள்
    சொல் + பயிற்சி = சொல் பய்ற்சி / சொற் பயிற்சி
    சொல் + தொகை = சொல் தொகை / சொற்றொகை
    மனத்ல் + கொண்டு = மனதில் கொண்டு / மனதிற் கொண்டு

    3. சில கூட்டுச் சொற்களில் சந்தி மாற்றம் உண்டாவதில்லை.

    எ - டு:
    கேட்காமல் + கொடு = கேட்காமல் கொடு
    காணாமல் + போல் = காணாமல் போ

    4.4.6. நிலைமொழி ஈற்றில் ழ்

    1. பொதுவாக வல்லின ஒற்று மிகும்.

    எ - டு:
    தமிழ் + கல்வி= தமிழ்க் கல்வி
    தமிழ் + செய்யுள் = தமிழ்ச் செய்யுள்
    கீழ் + கூரை = கீழ்க் கூரை
    கீழ் + தாடை = கீழ்த் தாடை
    கீழ் + பகுதி = கீழ்ப் பகுதி

    4.4.7. நிலைமொழி ஈற்றில் ள்

    1. சந்தியில் ள் என்பது ட் என மாறுவதுண்டு; இயல்பாக எழுதப்படுவதும் உண்டு.

    எ - டு:
    திங்கள் + கிழமை = திங்கட் கிழமை / திங்கள் கிழமை
    செய்யுள் + சிறப்பு = செய்யுட் சிறப்பு / செய்யுள் சிறப்பு

    2. சில இடங்களில் சந்தி வருவதில்லை.

    எ - டு:
    மக்கள் + தொகை = மக்கள் தொகை
    தோள் + பட்டை = தோள் பட்டை

    3. -கள் விகுதி சேர்கையில் ள், ட் என மாறாமல் இருப்பதும், இரு வகையில் வருவதும் உண்டு.

    எ- டு:
    தாள் + கள் = தாள்கள்
    சுருள் + கள் = சுருள்கள்
    ஆள் + கள்= ஆட்கள் / ஆள்கள்
    நாள் + கள் = நாட்கள் / நாள்கள்
    பொருள் + கள் = பொருட்கள் / பொருள்கள்

    4. நிலைமொழியின் உயிரெழுத்து குறிலாக இருகும் ஓரசைச் சொற்களில், உ சாரியையுடன் ள் இரட்டித்து ஒற்று மிகும்.

    எ - டு:
    கள் + கடை = கள்ளுக் கடை
    எள் + பொடி = எள்ளுப் பொடி
    முள் + செடி = முள்ளுச் செடி

    4.4.8. நிலைமொழி ஈற்றில் ன்

    1. வேற்றுமை உறவு கொண்ட சொற்களிலும், வருமொழி முதலில் ந்,ம்,வ் இருப்பினும், ன் மறையும்.

    எ - டு:
    அரசன் + கட்டளை = அரச கட்டளை
    மன்மதன் + பாணம் = மன்மத பாணம்
    அரசன் + நீதி = அரச நீதி
    சந்திரன் + மண்டலம் = சந்திர மண்டலம்
    சூரியன் + வழிபாடு = சூரிய வழிபாடு

    2. சில கூட்டுச் சொற்களில் ன் எனும் எழுத்து ற் ஆக மாறுவதுண்டு.

    எ - டு:
    பொன் + காசு = பொற்காசு
    முன் + காலம் = முற்காலம்
    பொன் + சிலை = பொற்சிலை

    3. நிலை மொழி ஓரசைச் சொல்லாக இருந்து, வருமொழி முதல்ல் ந் இருப்பின் ன் இரட்டிப்பதுண்டு. தற்காலத்தில் சந்தியில்லாமலே எழுதும் வழக்கமும் உள்ளது.

    எ - டு:
    பொன் + நிறம் = பொன்னிறம் / பொன் நிறம்
    முன் + நோக்கி = முன்னோக்க் / முன் நோக்கி
    பின் + நோக்கி = பின்னோக்கி / பின் நோக்கி

  10. #10
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர்
    Join Date
    17 Apr 2003
    Posts
    7,901
    Post Thanks / Like
    iCash Credits
    20,940
    Downloads
    62
    Uploads
    3
    5. நிறைவுரை

    இக்கட்டுரையில் சந்தி பற்றி கூறப்பட்டுள்ள கருத்துகள் முழுமையானவை என்று கூற முடியாது. ஆனால் போதுமான அளவு செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. சந்தி பற்றித் தமிழறிஞர்களிடையே ஒருமித்த கருத்து உள்ளது எனவும் கூற இயலாது. மேலும் வல்லெழுத்து மிகுந்தால் ஒரு பொருளும், மிகாவிடின் வேறொரு பொருளும் தருவதால், பொருளறிந்து சந்தியைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. கீழ் வரும் எடுத்துக்காட்டுகளை நோக்குக:

    ஓதி கண்டான் (கூந்தலைக் கண்டான்)
    ஓதிக் கண்டான் (படித்துக் கண்டறிந்தான்)
    பாடி கண்டான் (வீரர் தங்கியுள்ள பசறையைக் கண்டான்)
    பாடிக் கண்டான் (பாடல் பாடி அறிந்தான்)

    பொருளுணர்ச்சி தெளிவாக விளங்க இக்காலத்தில் முற்றுப்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி, வியப்புக் குறி, வினாக் குறி போன்றவை பெரும் துணை புரிகின்றன. கீழ் வரும் எடுத்துக்காட்டில், காற்புள்ளி (comma) இடுவதன் வாயிலாக, சந்தி எழுத்து தவிர்க்கப்படுதைக் காணலாம்.

    தாய் அழ, குழந்தை சிரிக்கும்
    தாய் அழக் குழந்தை சிரிக்கும்

    எனவே இடமறிந்து, பொருளறிந்து சந்தியைப் பயன்படுத்துவது இன்றியமையாதது. மேலும், ஆங்கிலத்தில் ஒரு சொல் அல்லது தொடர் பிழை உள்ளது போல் தோன்றி, அந்தப் பிழை என்ன என்று சொல்ல முடியாத நிலையில் "அது நன்றாக ஒலிக்கவில்லை (it does not sound well)" என்று செவியின் மீது பழியைப் போடுவர். தமிழிலும் சந்தி பற்றிய தடுமாற்றங்களுக்கு இது பொருந்தும். வாழ்த்துகள் - வாழ்த்துக்கள், பொருள்கள் - பொருட்கள், மேல்படி - மேற்படி, இவற்றில் எது சரி என
    அறிய இலக்கணத்தைத் தேடுவதும் உண்டு, செவியின் துணையை நாடுவதும் உண்டு.

    இறுதியாக ஒன்றைக் கூறி இக்கட்டுரையை நிறைவு செய்வோம். "செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்" என்பது முதுமொழி. தமிழில் நிறையச் சிந்திப்போம், படிப்போம், பேசுவோம், எழுதுவோம். சந்தி பற்றி மட்டுமல்ல, அனைத்தையும் பற்றிய தெளிவு பிறக்கும்.
    Last edited by பாரதி; 20-11-2007 at 10:33 PM. Reason: இருமுறை பதிவு நீக்கம்.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    [QUOTE=பாரதி;299859] "செந்தமிழும் நாப்பழக்கம், வைத்ததொரு கல்வி மனப் பழக்கம்" என்பது முதுமொழி. தமிழில் நிறையச் சிந்திப்போம், படிப்போம், பேசுவோம், எழுதுவோம். சந்தி பற்றி மட்டுமல்ல, அனைத்தையும் பற்றிய தெளிவு பிறக்கும்.



    ஆஹா வாட்கள் கொண்டு போரிட வந்தால்... வெள்ளைப்பூக்கள் புன்னகை காட்டி சமரசம் தந்தாய் பாரதி!

    நாட்கள் இவ்வகைப் பயிற்சியில் பழகப்பழக நம்
    ஆட்கள் சந்திப்பிழைகளைச் சந்திப்பது குறையும்!

    என் தனிப்பட்ட சந்தேகங்களை '' சமரசமாய்த்'' தீர்த்துவைத்தமைக்கு
    சிறப்பு நன்றிகள் பாரதி..

    இத்திரி மன்றத்தின் மிகப் பயனுள்ள திரிகளில் ஒன்று. வாழ்த்துகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
    Join Date
    22 Sep 2007
    Location
    கோவை
    Posts
    2,233
    Post Thanks / Like
    iCash Credits
    35,848
    Downloads
    29
    Uploads
    0
    மறுபடியும் பண்ணென்டாம் வகுப்பில் தமிழ் இலக்கணம் கற்பது போலவே உள்ளது. என்ன அந்த தமிழம்மா தப்பு விட்டா ஓங்கி கொட்டுவாங்க...புணர்ச்சி விதிகளை உணர்ச்சியே இல்லாமல் உருப்போட்ட காலங்கள் அவை.

    இதைப் படித்த*பின் சந்திப்பிழை செய்தால் பாரதி கொட்டு வைப்பாரா தெரியவில்லை.

    நல்ல, அவசியமான திரி. அனைவரும் படிக்க வேண்டியதும் கூட. எளிமையாக விளக்கியுள்ளார் பாரதி. நன்றி பாரதி அவர்களே!
    Last edited by யவனிகா; 21-11-2007 at 03:34 PM.
    சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
    சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •