22-6-2008

*1*சரப்ஜித்சிங்குக்கு தூக்கு தண்டனை ரத்து

இஸ்லாமாபாத் : தூக்கு தண்டனையிலிருந்து தப்பினார் சரப்ஜித்சிங். பாகிஸ்தான் அரசு மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. இதனால் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை ரத்து ஆகியுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் பரிந்துரையின் படி சரப்ஜித்தின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

*2*யூரோ 2008 : ஸ்பெயின் இத்தாலி அணிகள் காலிறுதியில் மோதல்

பேடன் : யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நாளை ஸ்பெயின் இத்தாலி அணிகள் மோதுகின்றன. ஸ்பெயின் ,இத்தாலி அணிகள் பலம் வாய்ந்த அணிகள் என்பதால் ரசிகர்களிடையே இந்த போட்டி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

*3*ஒலிம்பிக் ஜோதி திபெத் வந்தடைந்தது


லாசா : ஒலிம்பிக் ஜோதி திபெத் தலைநகர் லாசா வந்தடைந்தது. பலத்த பாதுகாப்புடன் ஜோதி 9.2 கி.மீ தூரம் பயணம் செய்யும் என தெரிகிறது. முன்னதாக குறிப்பிட்ட தூரத்தை விட குறைவான தூரமே ஜோதி பயணம் செய்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜோதி தொடர் தூரம் குறைக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 156 பேர் ஜோதியை எடுத்து செல்கின்றனர், இதில் 75 பேர் திபெத்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

*4*முஷாரப் பதவி விலக வேண்டும் : பாக்., மக்கள் விருப்பம்

வாஷிங்டன் : பாகிஸ்தான் அதிபர் முஷாரப் பதவி விலக வேண்டும் என பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஏஜென்சியின் சர்வேபடி பாகிஸ்தான் மக்களில் நான்கில் மூன்று பேர் அதிபர் முஷாரப் பதவி விலக வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் தங்களை அச்சுறுத்தும் நாடுகளாக முதலில் அமெரிக்காவையும், அடுத்ததாக இந்தியாவையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

*5*காலம் தாழ்த்தினால் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவது கடினம் : அமெரிக்கா


வாஷிங்டன் : அணுசக்தி ஒப்பந்தத்தை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பால் இழுபறி நிலையிலேயே உள்ளது. வரும் ஜனவரி மாதத்திற்குள் நிறைவேற்றப்படாவிடில் ஒப்பந்தம் காலாவதியாகி விடும். காலம் தாழ்த்தினால் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவது கடினமாகிவிடும் என அமெரிக்கா எச்சரித்துளளது.