Page 1 of 4 1 2 3 4 LastLast
Results 1 to 12 of 43

Thread: செண்பக மரம்

                  
   
   
 1. #1
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  32,158
  Downloads
  29
  Uploads
  0

  செண்பக மரம்

  நான் கோகிலா. உங்களுக்கு என்னைப் பற்றிச் சொல்லும் இந்நேரம்... தலைப்பிரசவத்திற்காக சவூதியிலிருந்து கோவை செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறேன். மெல்லிய அதிர்வுகளுடன், சீராகப் பறந்து கொண்டிருக்கிறது சவூதி ஏர்லைன்ஸ் விமானம். லிப்ஸ்டிக் தீட்டப்பட்ட உதடுகளால் செயற்கையாகச் சிரித்து, பழரசம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர் விமானப் பணிப்பெண்கள். எட்டு மாதம் நிரம்பிய என் குட்டிப்பெண் ஸ்ருதிகா, கொலுசணியாத குட்டிக்கால்களால் என் வயிற்றுக்குள் உதைத்துக் கொண்டிருக்கிறாள்.

  எதிர் சீட்டிலும் தமிழ் குடும்பம்தான். அந்தத் தம்பதியினரின் சுட்டிப்பயல் சரியான அறுந்த வால் போலும். சீட்டின் மேல் ஏறுவதும் இறங்குவதுமாக சேட்டை செய்து கொண்டிருக்கிறான்."டேய் அருண், குரங்கு மாதிரி சீட்டு மேல ஏறாத.. பைலட் அங்கிள்கிட்ட பிடிச்சு குடுத்துருவேன்" என்று அவனுடைய தந்தை அவனை மிரட்டுகிறார்.

  குரங்கு மாதிரியா? அவருடைய வார்த்தைகள் எனக்கு சிரிப்பை வரவழைத்து, என் பதின்ம வயதுகளை நினைவுக்குக் கொண்டுவருகிறேன்... இதோ நினைத்தாலே தித்திக்கும் அந்த நினைவுகள்...

  அப்போது எனக்கு வயது 16. பள்ளி இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். அது மார்கழி மாதத்தின் புலர் காலைப் பொழுது... கோவை மாவட்டம், சிங்காநல்லூர், இயற்கையாகவே ஏஸி செய்யப்பட்டு குளிரில் இருந்தது. தெருக்களெல்லாம் சுத்தமாகப் பெருக்கித் துடைக்கப்பட்டு, அவரவர் கைத்திறனுக்கேற்ப கோலங்கள் வரையப்பட்டு... கோலத்தின் நடுவில் சாணிப்பிள்ளையார் எருக்கம்பூச்சூடி ஜம்மென்று அமர்ந்திருந்தார்.

  "டீ கோகிலா... காலங்காத்தால எந்திருச்சமா... குளிச்சிட்டு கோயிலுக்குப் போனமான்னு இல்லாம... குரங்கு மாதிரி மரம் ஏற ஆரம்பிச்சாச்சா? எறங்கு கீழே... பூப் பறிச்சதெல்லாம் போதும்...", என்று உச்ச ஸ்தாயில் அலறுகிறாளே இது என் அம்மா.

  கொப்பும், கிளையுமாய் அடர்ந்திருந்த செண்பக மரத்தின் மேல்கிளையில் லாவகமாய் கால்களைப் பதித்தவாறு நின்று கொண்டு, "அம்மா, இங்கிருந்தே பிள்ளையார் கோயில் தெரியுதே... சாமியெல்லாம் கும்பிட்டாச்சி... வேணும்ணா தோப்புகரணமும் போடவா?" என்று பதிலுக்கு நானும் கத்தினேன்.

  "சனியனே... கீழே விழுந்து கையக் கால உடைச்சாதான் உனக்கு புத்தி வரும். ஏங்க இங்க பாருங்க உங்க செல்ல மகள.. மரத்து மேல நின்னுகிட்டு பதிலுக்கு பதில் எகத்தாளமா பேசிட்டிருக்கா..." என்று அப்பாவை துணைக்கழைத்தார் அம்மா.

  அப்பா வருவதற்குள் எல்லாப் பூவையும் பறித்துவிட்டு இறங்கலாமென்றால், பறிக்கும் படியாகவா பூத்திருக்கிறது செண்பக மரம்... நூற்றுக்கணக்கில் பூக்கள்... பச்சை இலைகளுக்கிடையில் மஞ்சள் நிறப் பூக்கள். கவிதை போல பூத்து பூரித்து நின்றிருந்தது என் செண்பக மரம். கைக்கு வந்ததெல்லாம் பறித்து விட்டு கிளை கிளையாக கால் வைத்து கவனமாக இறங்கினேன். கடைசிக் கிளைக்கு வந்து தொப்பென்று நான் குதிக்கவும், அப்பா வரவும் சரியாக இருந்து.

  என்ன கோகி இது.. பூ வேணும்னா மோகனைக் கூப்பிட்டு பறிக்க வேண்டியது தானே.. நீ ஏண்டா மரமேறுற? செல்லமாய்த் திட்டினார் அப்பா. போப்பா, மோகன் பறிச்சா பாதிப் பூவை அவன் ஸ்கூல் பிள்ளைங்களுக்கும், டீச்சருக்கும் கொண்டு போய்விடுவான். அப்புறம் என் ஃபிரண்ஸ்க்கு ஒன்னுமே இருக்காது...

  "தினமும் தானடி உன் சினேதிகளுக்குப் பூ குடுக்கிறே? ஒரு நாள் அவங்க பூவெக்கலேன்னா, எந்த மாப்பிள்ளை கோவிச்சுகப்போறானாமா?" திட்டியபடியே நான் பறித்து வைத்திருந்த செண்பக மலர்களை ஊசி நூலால் கோர்க்க ஆரம்பித்தாள் அம்மா. ஊர்ல எல்லாரும் மல்லிகை, கனகாம்பரம், முல்லைன்னு கோத்து சரம்மா வெப்பாங்க... உங்க பொண்ணு மட்டும் தான் செண்பகத்தையே அறையடி நீளத்திக்கு கோர்த்து வெக்கிறா. இவ பவிசுக்கு நாளைக்கு புள்ளய வளத்த லச்சணம் பாருன்னு மாமியாக்காரி என்னை திட்டப்போறா?

  போகுது போ. சும்மா கிடக்கிற பூவுதானெ... வெச்சிட்டுப் போறா விடு.. வேணும்னா மாமியார் இல்லாத குடும்பமாப் பாத்து அவளக் குடுத்தாப் போகுது.

  அப்பா எனக்கு சப்போர்ட்டுக்கு வந்ததில் ஏக குசி. அவசர அவசரமாகக் குளித்துக் கிளம்பி, தலை பின்ன அம்மாவிடம் வந்தேன். அம்மா எண்ணை வெக்காதே. தளரப் பின்னுமா, டைட்டா பின்னல் போடாதே... அப்புறம் தலை வலிக்கும், என்று கண்டிசன்களைப் பிறப்பித்துக் கொண்டே தலை பின்னி முடித்தேன்.

  அம்மா அழகாக கோர்த்து வைத்திருந்த செண்பகச் சரத்தை, தலையில் வைத்து ஹேர்பின் கொண்டு குத்தினாள். கோகி எல்லாப் பூவையும் ஸ்கூலுக்கு எடுத்துட்டு போகாதடி. கொஞ்சம் வீட்ல வெச்சிட்டுப் போ. நம்ம கமலா வந்தா குடுக்கலாம்.

  இங்க பாரு, அடுத்த வாரம் எனக்கு எல்லா சப்ஜெட்டிலும் இன்டெர்னல் இருக்கு. இப்பவே எல்லா டீச்சரையும் பூவக் குடுத்து சரிக்கட்னாத்தான் நல்ல மார்க்கு போடுவாங்க.. உனக்கு நான் நல்ல மார்க் வாங்கனுமா வேண்டாமா? சொல்லுமா? வேணும்னா மோகன் கிட்ட சொல்லி மரத்தில மீதியிருக்கிற பூவ பறிக்கச் சொல்லி, கமலா அத்தைக்கு குடு சரியா? தலையில் அம்மா சூடி விட்ட பூச்சரத்தை கண்ணாடியில் சரிபார்த்தபடி பள்ளிக்குக் கிளம்பினேன்.

  என்னுடைய வாகனம் என் லேடிஸ் சைக்கிள். அவள் சும்மா சிங்கம் மாதிரி பாய்ந்து செல்வதால் "சிம்ம ராணி" என்று பெயரிட்டு இருந்தேன். சிம்ம ராணியின் மேல் ஆரோகணித்தேன், யாரோ தலை முடியைப் பிடித்து இழுப்பது போல இருந்தது... என்னுடைய நீண்ட கருங்கூந்தல், சைக்கிள் கேரியரின் கீழுள்ள பிரேக் வொயரில் பட்டு இழுத்துக் கொண்டிருந்தது. அதை சரி செய்து விட்டு சைக்கிளை பள்ளியை நோக்கிச் செலுத்தினேன், பயணிக்கும் இந்த நேரத்தில் என் செண்பக மரத்தைப் பற்றிச் சொல்லி விடுகிறேன்.

  நான் ஆறாவது படிக்கும் போது, கோவை அக்ரி காலேஜில் ஒரு பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டேன். அதில் முதல் பரிசு ஜெயித்த போது தான், மிகச் சிறிய இந்த செண்பக நாற்றை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். அதை முகமெல்லாம் பல்லாக வீட்டுக்குக் கொண்டு வந்தேன். என்னடி இது போட்டில ஜெயிச்சா ஒரு சோப்புப் பெட்டி, புஸ்தகம்னு குடுக்காம செடியக் குடித்து விட்டிருக்காங்கனு பாட்டி கிண்டல் செய்ததக் கூட பொருட்டாவே எடுக்கலை நான்.

  செடி நடும் வைபவம் சீரும் சிறப்புமாக அன்று மாலையே நடைபெற்றது. கொல்லைப் புறத்தில் குழிதோண்டி ராசியான என் கையால் செடியையும் நட்டாகி, நன்றாக வளர வேண்டி சாமி விபூதியையும் மண்ணில் போட்டாச்சி. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இலை விட்டு வளர்ந்தாள் செண்பா... நான் அவளை அப்படித்தான் கூப்பிடுவேன். இடையில் அவளைக் காப்பாற்ற நான் கொஞ்சம் கஸ்டம் தான் பட்டுப் போனேன். வில்லன் என் சித்தி மகன் மோகன் ரூபத்தில் வந்தான்.

  எங்கள் வீடும் சித்தப்பா வீடும் தனி தனி தான் என்றாலும் இருவருக்குமே கொல்லைத் தோட்டம் பொதுவானது. நான் எப்போதெல்லாம் மோகனுடன் சண்டையிடுகிறேனோ, அப்போதெல்லாம் அவன் என் மீது உள்ள கோபத்தில் செண்பாவின் இலையை உருவுவது, கிளையை உடைப்பது போன்ற பழி தீர்க்கும் செயல்களில் ஈடுபடுவான். இதனைத் தடுக்க நான் வெண்ணிற அட்டைகளில் வாசகங்களை எழுதி மரத்தில் மாட்டி வத்தேன். "உன்னைப் போல நானும் உயிர்தானே.. என்னைக் கிள்ளாதே... "தயவு செய்து உன் கோபத்தை என் மேல் காட்டாதே" போன்ற வாசகங்கள்...

  இதனால் மோகனின் தொந்தரவு குறைந்தாலும்... செண்பாவிற்கு வேறுவழியில் அபாயங்கள் காத்திருந்தது. செண்பாவின் பக்கத்துத் தோழியான முருங்கை மரத்து கம்பளிப் பூச்சிகள் செம்பாவைத் தாக்காமலும்... அவ்வப்போது கவனக்குறைவாகத் திறந்து போட்ட கொல்லைப் படல் வழியாக வரும் வெள்ளாடுகளிடமிருந்தும் செம்பாவைக் காப்பாற்ற நான் அரும் பாடு பட்டேன்.

  ஒத்தச்செடிய நட்டு வெச்சிட்டு பொழுதன்னைக்கும் அதையே பாத்திட்டு இருக்காதே, ஆகற பொழைப்ப பாரு என்று பாட்டி என்னை திட்டினாலும், நான் செம்பாவிடம் தான் பழியாய் கிடப்பேன். காலை எழுந்ததும் பிரஸ்ஸை எடுத்திட்டு மரத்துக்கிட்ட போனா, பல்லு போதும் போதும் சொல்லர வரைக்கும் தேய்ச்சிட்டு, இன்னைக்கு எத்தனை எலை புதிசா வந்திருக்குன்னு கணக்கெடுத்துட்டுத் தான் வருவேன். இப்படியாக செம்பா என் வாழ்வில் மாற்ற முடியாத பாகமாக மாறிப்போனாள்.

  இரண்டு ஆண்டுகளில் இரண்டு ஆள் உயரத்திற்கு வளர்ந்து விட்டாள். "ஏன்டி இத்தனை வருசமாகியும் மரம் பூக்கலையே... அந்த வெளக்குமாரை எடுத்து நல்ல நாளு அடி வைய்யு... பூக்காத மரமும் வெக்கப்பட்டுட்டு பூத்திடும்" பாட்டி இப்படி சொன்னவுடன் வரிந்து கட்டிக் கொண்டு பாட்டியிடம் சண்டைக்குப் போனேன்.

  "அவ பூக்கிறப்ப பூப்பா.. உனக்கு என்ன இப்ப பூவெக்க அவசரம்... உன் வேலையப் பாத்தமா வெத்தலையப் போட்டமான்னு இருக்கனும்.. யோசனை சொல்ற வேலையை எல்லாம் தாத்தாவோட நிறுத்திக்கோ புரியுதா?

  "எனக்கென்னடி ஆத்தா வந்தது, நீயாச்சு உன் மரமாச்சு..." என்று பாட்டி முகவாய் கட்டையை தோளில் இடித்தபடி போய் விட்டாள்.

  அந்த வருடம் பத்தாம் வகுப்பு பரிச்சை லீவில் தான் நான் பெரிய மனுசி ஆனேன். விடுவார்களா வீட்டில்? வாழை மரம் கட்டி, தெருவை அடைத்து பந்தல் போட்டு ஊரையே அழைத்திருந்தார்கள் சீருக்கு. மாடிக்கு மைக் செட் கட்டப் போன என் தம்பி மோகன் அலறி அடித்து ஓடிவந்தான்."அக்கா...அக்கா.. செம்பக மரம் பூத்திருச்சி...ஓடிவா..மஞ்சள் பூவு ஓடிவா..."

  பெரிய பச்சை நிறப் பட்டுப் புடவை தடுக்க, வந்திருந்த விருந்தினர்களையெல்லாம் கடந்து கொல்லைக்கு ஓடினேன். என்னடா மோகன் பூவையே காணமே? என் கண்னுக்கு பூ தட்டுப்படாத ஏமாற்றம், அக்கா மாடிக்குப் போனாத் தெரியும் வாக்கா என்று அவன் சொல்ல, தட தடவென்று மாடியில் ஏறினோம் இருவருமாக..

  அக்கா அங்க பாரு மஞ்சக் கலருல அடுக்குப் பூ. டேய் ஆமாண்டா.. கண் நிறையப் பூவை பார்ப்பதற்குள்ளாகவே தலையில் குட்டி, உறவுப் பட்டாளம் என்னை கீழே இழுத்து வந்து விட்டார்கள். அம்மாவின் அர்ச்சனை வேறு. அன்று நடந்த என்னுடைய பூப்பு நன்னீராட்டு விழாவில் எல்லாரும் சொன்னது இன்னைக்கும் நினைவு இருக்கிறது "புள்ளைக்கு சுத்திப் போடுங்க... முகம் என்னைக்கும் இல்லாம இன்னைக்கி பூரிப்பா இருக்கு..." அது செம்பா பூத்ததனால் வந்த பூரிப்பென எனக்குத்தான் தெரியும்.

  அதன் பின் சம்பா நூற்றுக் கணக்கில் பூத்துத் தள்ளியதும் அதைப் பறிக்க எனக்கும் மோகனுக்கும் அடிதடி நடந்ததும் வேரு விசயம். செண்பகம் மற்ற பூக்களை போலன்றி மிகவும் அரிதான பூ. மணமும் ரம்மியமானது. அதும் செம்பா பூப்பது அடுக்கு செண்பகம்... செண்பகாவினால் அந்த சுற்றுவட்டாரத்திலேயே எங்கள் வீட்டுக்குத் தனிப் பெருமை.

  பூ வாங்க வரும் சிறுமிகளும்.. அக்கா நாளைக்கி கல்யாணத்துக்குப் போரேன் பத்து பூ வேணும் என்று முன்பதிவு செய்பவர்களாலும் அம்மா தன்னை ஒரு விஐபியாக உணர்ந்தாள். மரமேறிப் பூப் பறித்ததும், செண்பகப் பூவை சரமாகத் தொடுத்து சூடுவதும், நான் கல்லூரி செல்லும் போதும் தொடர்ந்தது.

  அப்போது தான் ஒருநாள் என்னவர் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தார். மிகுந்த சங்கோஜத்துடன் பெண்ணிடம் தனியாகப் பேச வேண்டும் என்று ஒரு அசட்டு சிரிப்புடன் கூறினார், எங்களுக்கென இரண்டு நாற்காலிகள் கொல்லையில் செண்பக மரத்தின் கீழ் போடப்பட்டன. மென்று முழுங்கி இவர் என்னைப் பிடித்திருக்கிறதா என்று கேட்டு முடிப்பதற்குள், முப்பது முறை கைக்குட்டையால் முகம் துடைத்து விட்டார்.

  திடீரென செண்பகப்பூ ஒன்று அவர் தலையில் பட்டென்று விழுந்தது. ஏற்கனவே படபடப்பில் இருந்த அவர் தலையில் பாறாங்கல் விழுந்தது போல எழுந்தார். நான் என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன். எனக்கு ஆச்சர்யம்... செண்பகத்தின் காம்பு வலிமையானாது... பறித்தாலன்றி உதிராது.. எப்படி அவர் தலையில் விழுந்தது, செம்பா அவரை ஒ.கே சொல்லிவிட்டாளோ? எனக்கும் அவரைப் பிடித்துப் போய் விட்டது.

  எங்கள் திருமணம் தட தடவென்று நடந்து முடிந்தது. அவர் சவூதியில் வேலை பார்ப்பதனால் உடனே நாங்கள் சவூதி கிளம்ப வேண்டியதாகிவிட்டது. என் குடும்பத்தையும், செண்பகாவையும் பிரிந்த இந்த ஒருவருடத்தைப் பற்றி எழுதக்கூட நான் விரும்பவில்லை.

  இந்த ஒருவருடத்தில் ஊரில் எத்தனை மாற்றங்கள்... பாட்டி இறந்து போய்விட்டாள். சித்தப்பா பக்க வாதத்தால் படுத்த படுக்கை ஆகிவிட்டார். எல்லோரையும் பார்க்கும் சந்தோசத்தில், என் நிறைமாத வயிற்றைத் தூக்கிக் கொண்டு, இமிக்கிரேசன் எல்லாம் முடித்து வெளியே வந்தேன். நான் எதிர்பார்த்தபடியே அம்மா, அப்பா, அவர் வீட்டு உறவுகள் எல்லாரும் சூழ்ந்து கொண்டனர். அங்கிருந்து வீடு செல்லும் போது நடு இரவாகிவிட்டது.

  போன உடன் உடல்நிலை சரியில்லாத சித்தப்பாவை பார்த்து பேசி... அம்மா கையால் தோசை சாப்பிட்டு, கட்டிலில் அம்மா மடியில் சாய்ந்தபடியே பிரயாணக் களைப்பில் உறங்கிப் போனேன். விடியக் காலையில் தான் உறக்கம் கலைந்தது. செம்பாவின் ஞாபகம் வந்தவளாய் கொல்லைப் பக்கம் போனவள்... கோடாரி கொண்டு யாரோ வயிற்றைக் கிழித்தது போல அதிர்ந்து அலறினேன். என் சத்தம் கேட்டு, தூக்கத்திலிருந்து அம்மா அடித்துப் பிடித்து ஓடி வந்தாள்.

  "அம்மா செம்பா எங்கே? யாரு வெட்டினா? எதுக்கு வெட்டினா?" என் அலறலுக்குக் காரணமான செம்பா வெட்டுண்டு, அடிமரம் மட்டும் ஒரு அடி நீளத்திற்கு துருத்திக் கொண்டிருந்தது.

  அம்மா ஆயிரம் சமாதானம் சொன்னாள். பாட்டி இறந்தபின் சொத்து தகறாரில், சித்தப்பா மதில் சுவர் எழுப்புவதற்கு வசதியாக, இரவோடு இரவாக மரத்தை வெட்டியதாகவும்... அடுத்த நாள் அவர் பக்க வாதத்தில் விழுந்து விட்டதாகவும்.. அது பச்சை மரத்தை வெட்டிய சாபம் தான் என்று ஊரே பேசுவதாகவும் அம்மா கூறிய எதுவுமே என் காதுகளில் விழவில்லை.

  என் உயிரையே யாரோ உருவி எடுத்துவிட்டது போல உணர்ந்தேன், வெட்டப்பட்ட அடிமரத்தில் ஈரமாக ஏதோ கசிவிருந்தது. என் நிலையைப் பார் என்று செம்பா என்னிடம் அழுவதாகப்பட்டது. ஏராளமான கற்பனைகளுடன் வந்த எனக்கு ஏமாற்றங்கள் மட்டுமே மிச்சமானது. அத்துனை உறவுகளும் அருகில் இருந்தாலும், மிக நெருங்கிய ஒருவரை இழந்த உணர்வு...

  மோகன் இப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான்.அவன் என்னைப் பார்க்கும் போதெல்லாம் குற்ற உணர்வில் குறுகிப்போனான். அவன் தந்தை தானே மரத்தை வெட்டியது. அவன் பலமுறைகள் மன்னிப்புக் கேட்டுவிட்டான். யாரை நொந்து என்ன பயன்?

  இந்த நிலையில் ஒரு நல்ல முகூர்த்தத்தில், ஸ்ருதிகாவைப் பெற்றெடுத்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன். குழந்தையைக் குளிக்க வைக்க ஒரு பாட்டி வருவார்கள். எங்கள் ஊர்ப்பகுதியில், அண்டா நிறைய தண்ணீரில் குழந்தையை நீவிக் குளிக்க வைப்பார்கள். அதற்கு கொல்லைபுறம் தான் ஏது எனப்பட்டதால், அங்கேயே குளியல் திருவிழா போல நடைபெறும். நான் கொல்லைப் பக்கம் போவதையே தவிர்திருந்தாலும், பாட்டிக்கு உதவி செய்ய போகவேண்டியதாய் இருந்தது.

  கொல்லையில் புத்தகம் படித்தபடி இருந்த மோகன், என்னைப் பார்த்ததும் எழுந்து வந்தான். வீட்டுப்பிரச்சனைக்குப் பின் எங்கள் சகஜ நிலை பாதிக்கப்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். மோகனுக்கு என்ன தோணியதோ தெரியவில்லை, அருகில் வந்து ஸ்ருதியை பார்த்தவன், "அக்கா உனக்குப் பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு நான் தானே பூப்பறிக்க மரமேற வேண்டும் என்று நினத்திருந்தேன்..." என்றபடி வெட்டுப்பட்ட மரத்தினருகே போனவன் "அக்கா, அக்கா இங்கே வாயேன் என்று கத்தினான்.இங்க பாருக்கா செம்பா இலை விட்டிருக்கா... மீண்டும் துளித்துருக்கா..." என்றான் சந்தோசத்துடன்"

  ஆமாம்.நான் பார்த்த போது, வெட்டுண்ட இடத்தில் வெளிர்பச்சை நிறத்தில் புதியதாக நான்கு இலைகள் வந்திருந்தன. செம்பா மீண்டும் உயிர்த்திருந்தாள் என் ஸ்ருதிக் குட்டிக்காக.

  (சுபம்)
  Last edited by அமரன்; 17-03-2008 at 02:15 PM.
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 2. #2
  மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
  Join Date
  10 Aug 2007
  Location
  பூக்கள் நடுவில்
  Posts
  6,617
  Post Thanks / Like
  iCash Credits
  68,868
  Downloads
  89
  Uploads
  1
  அக்கா...ஆரம்பமே..... விண்ணைத் தொடும் உயரத்தில்... அசத்திட்டீங்க..
  முழுகதையும் படிக்க இமைகள் இடர்செய்வதால்... நாளை படித்து விலாவாரியாக பின்னூட்டம் இடுகிறேன். இது முதல் பின்னூட்டம் தர வேண்டி அன்பு அக்காவிற்காய்...!!
  மன்னித்தருள்க அக்கா..!!
  அப்படியே... என் கதையையும் ("பருவநட்சத்திரங்கள்") பாருங்க... யவனி அக்கா..!!
  Last edited by பூமகள்; 15-10-2007 at 08:34 PM.
  -- பூமகள்.

  "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
  உளக்கண் தாண்டும் வேலை..!!"


  பூமகள் படைப்புகள்


 3. #3
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  134,511
  Downloads
  161
  Uploads
  13
  கதையை அருமையாகவும் தத்ரூபமாகவும் உண்மைச்சம்பவம் போலவும் (உண்மைச்சம்பவமா??) தந்திருக்கிறீர்கள். உணர்ச்சிபூர்வமாக இருக்கிறது... (எனக்கு செண்பகப்பூ தெரியாது. சிலவேளை பார்த்திருப்பேன். இதுதான் அது என்று தெரிந்திருக்காது)

  பாராட்டுக்கள்.
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

 4. #4
  மன்றத்தின் தூண் பண்பட்டவர்
  Join Date
  15 Apr 2007
  Location
  dubai - native -tanjore
  Posts
  2,849
  Post Thanks / Like
  iCash Credits
  5,363
  Downloads
  32
  Uploads
  0
  அவளின் அன்புக்காக துளிர் விட்டதோ அல்லது அவள்து குழந்தைக்காக .
  ஆரம்பம் முதல் முடிவு வரை கதை நகர்த்தி சென்ற விதம் பல படைப்புகளை தந்தவர் பொல் இருந்தது. வாழ்த்துக்கள் யவனிக்கா

 5. #5
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
  Join Date
  05 May 2007
  Location
  பிருந்தாவனம்
  Posts
  3,852
  Post Thanks / Like
  iCash Credits
  13,188
  Downloads
  37
  Uploads
  0
  யவனிகா அக்கா....
  முதலில் பிடியுங்கள்
  என்னுடைய பாராட்டுக்களை...
  கதையோடு ஒன்றியே போய்விட்டோம்......தெரியுமா..

  ஒவ்வொரு வரியுமே அழகாக சித்தரிச்சிருக்கீங்க....
  செம்பாவை வெட்டியபோது உண்மையிலே கொஞ்சம் வலித்தது..
  ஆனால் மறுபடியும் ஸ்ருதிக் குட்டிக்காக செம்பா துளிர்த்த போது.. நிரம்ப சந்தோஷம்......
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 6. #6
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் மலர்'s Avatar
  Join Date
  05 May 2007
  Location
  பிருந்தாவனம்
  Posts
  3,852
  Post Thanks / Like
  iCash Credits
  13,188
  Downloads
  37
  Uploads
  0
  Quote Originally Posted by பூமகள் View Post
  .. நாளை படித்து விலாவாரியாக பின்னூட்டம் இடுகிறேன். இது முதல் பின்னூட்டம் தர வேண்டி அன்பு அக்காவிற்காய்...!!
  யக்கோவ் இங்கேயும் அடிச்சி புடிச்சி
  துண்டு போட்டு முத சீட்டு பிடிச்சிட்டியா.....
  ஹீ....ஹீ....வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

 7. #7
  இளையவர் பண்பட்டவர் பூந்தோட்டம்'s Avatar
  Join Date
  15 Oct 2007
  Posts
  85
  Post Thanks / Like
  iCash Credits
  5,287
  Downloads
  7
  Uploads
  0
  நல்ல கதை.

  அடுத்த தொடர் எப்போது? கதை எழுதுவது பற்றி எங்களுக்கும் சொல்லித்தரலாமே..மன்றத்தில் ஏதும் திரி இருந்தால் தாருங்கள் நண்பர்களே
  Last edited by அமரன்; 16-10-2007 at 09:55 AM.

 8. #8
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  32,158
  Downloads
  29
  Uploads
  0
  அன்புத் தங்கைகளின் வாழ்த்து கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.பெண்களின் மனம் இயல்பிலேயே வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலார் குணம் பெற்றது...அதுவும் நாம் வைத்து வளர்தத மரத்தை யாரேனும் வெட்டினால், தாங்குமா...கதைப்படிதான் அந்த மரம் என் ஆசைக்காகத் மீண்டும் துளிர்தது.ஆனால் நிஜத்தில்...இருந்த சுவடே தெரியாமல் அந்த இடத்தையே சிமெண்ட் போட்டு மூடிவிட்டார்கள்...
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 9. #9
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் சுகந்தப்ரீதன்'s Avatar
  Join Date
  23 Jun 2007
  Posts
  3,869
  Post Thanks / Like
  iCash Credits
  163,116
  Downloads
  69
  Uploads
  1
  சொந்த கதையை சுவையாக சொல்லியிருக்கிறீர்கள் அக்கா..! ஒவ்வொரு வரியிலும் தாங்கள் வாழ்வை ரசித்து வாழ்வதை அழகாக வெளிபடுத்தி உள்ளீர்கள்..! அதற்க்கு பக்கபலமாய் தங்களின் உரைநடை அமைந்துள்ளது..! மேலும் மேலும் தொடர எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்..!
  ஆற்றங் கரையின் மரமும் அரசறிய
  வீற்றிருந்த வாழ்வும் விழுமன்றே - ஏற்றம்
  உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
  பழுதுண்டு வேறோர் பணிக்கு.
  -நல்வழி

 10. #10
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் lolluvathiyar's Avatar
  Join Date
  27 Feb 2007
  Location
  Coimbatore
  Posts
  3,823
  Post Thanks / Like
  iCash Credits
  95,671
  Downloads
  10
  Uploads
  0
  ஆரம்பத்தில் ஒரு நகைசுவை கதைபோல அனுபவ கதை போல சென்றது. அந்த சென்பா மீது ஒரு சகோதரி பாச பினைப்பை விளக்கி நெகிழ வைத்து விட்டீர்கள். என்ன செய்ய தவிர்க முடியாத சில காரனங்களால் நாம் வளர்த்த மரத்தை நாம் சில சமயங்களில் வெட்ட வேண்டி வருகிறது.
  ஆனால் அந்த செம்பா மீண்டும் வளர ஆரம்பித்து விட்டது அடுத்த யவனிக்காவுக்காக.
  பாராட்டி 5 * மற்றும் 500 இபணம்
  Last edited by lolluvathiyar; 16-10-2007 at 08:57 AM.
  லொள்ளுவாத்தியார் ஆனால் நல்லவாத்தியார்
  என் படைப்புகள்
  என் கவிதைகள்

 11. #11
  மன்றத்தின் தூண் பண்பட்டவர் யவனிகா's Avatar
  Join Date
  22 Sep 2007
  Location
  கோவை
  Posts
  2,233
  Post Thanks / Like
  iCash Credits
  32,158
  Downloads
  29
  Uploads
  0
  Quote Originally Posted by மலர் View Post
  யக்கோவ் இங்கேயும் அடிச்சி புடிச்சி
  துண்டு போட்டு முத சீட்டு பிடிச்சிட்டியா.....
  ஹீ....ஹீ....வாழ்த்துக்கள்
  என்னா தங்கச்சி இப்படி சொல்லிட்ட...நீ சீட்டுப் போட்டுத் தருவேன்னு எத்தனை நேரம் காத்திருந்தேன் தெரியுமா? அப்புறம் தான் நானே சீட்டுப் புடிச்சேன். ஒருபக்கம் உனக்கும் மறுபக்கம் பூவுக்கும் துண்டு போட்டு இடம் பிடிச்சிருக்கேன், ஊரச் சுத்தாம வந்து சேருங்க..

  ளொள்ளு வாத்தியாரண்ணாவிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
  சாகும்வரை தமிழ் பயின்று சாக வேண்டும் − என்
  சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்.

 12. #12
  பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
  Join Date
  04 Feb 2007
  Location
  நமக்கு நாடு இருக்கா என்ன?
  Posts
  11,476
  Post Thanks / Like
  iCash Credits
  134,511
  Downloads
  161
  Uploads
  13
  Quote Originally Posted by யவனிகா View Post
  அன்புத் தங்கைகளின் வாழ்த்து கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன்.பெண்களின் மனம் இயல்பிலேயே வாடும் பயிரைக் கண்டபோதெல்லாம் வாடும் வள்ளலார் குணம் பெற்றது...அதுவும் நாம் வைத்து வளர்தத மரத்தை யாரேனும் வெட்டினால், தாங்குமா...கதைப்படிதான் அந்த மரம் என் ஆசைக்காகத் மீண்டும் துளிர்தது.ஆனால் நிஜத்தில்...இருந்த சுவடே தெரியாமல் அந்த இடத்தையே சிமெண்ட் போட்டு மூடிவிட்டார்கள்...
  பாத்தீங்களா... நம்மள கண்டுக்கவே இல்ல...
  தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
  தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

Page 1 of 4 1 2 3 4 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •