Results 1 to 12 of 56

Thread: 500வது படைப்பு-கொக்கரக்கோகுமாங்கோ பூமகளைக

                  
   
   

Threaded View

Previous Post Previous Post   Next Post Next Post
  1. #1
    மன்றத்தின் சுடர் பண்பட்டவர் பூமகள்'s Avatar
    Join Date
    10 Aug 2007
    Location
    பூக்கள் நடுவில்
    Posts
    6,617
    Post Thanks / Like
    iCash Credits
    72,958
    Downloads
    89
    Uploads
    1

    500வது படைப்பு-கொக்கரக்கோகுமாங்கோ பூமகளைக

    கொக்கரக்கோகுமாங்கோ பூமகளைக் காணலைங்கோ......!!

    மன்றம் தந்த அன்பாலும் ஆசியாலும் மன்றத்தில் இன்று எனது 500 வது பதிப்பை தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

    எனக்கு என் மழலைப் பருவத்தில் நடந்த சுவையான சம்பவத்தை உங்களோடு பகிர விரும்புகிறேன். இந்தச் சம்பவம் என் வாழ்வில் மறக்கவே முடியாத ஒன்று.

    என் ஆரம்பக் கல்வி ஒரு ஆங்கில வழி பள்ளிக் கூடத்தில் எல்.கே.ஜி (ப்ரி கே. ஜி எல்லாம் அப்ப இல்லீங்க மக்களே...!)ஆரம்பித்தது. முதலாம் வகுப்பு வரை அங்கு பயின்றேன். என் குடும்பத்தின் தமிழ் பற்று காரணமாக நான் இரண்டாம் வகுப்பில் பள்ளி மாற்றப்பட்டேன். ஏதும் அறியாமல் விழி பிதுங்கி மழலை உள்ளத்தோடே உள் சென்றேன் அரசு பள்ளிக்கு.

    தரையில் அமர்ந்து படிப்பு, புதிய முகங்கள், நாலணா நெல்லிக்காய், காரமான மாங்கா துண்டு,பத்து பைசா தேன் மிட்டாய் என்று எல்லாமே எனக்கு புதியதாக இருந்தது. அப்போதெல்லாம் அம்மா தான் எப்போதும் பள்ளி முடிந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வார்.

    இரண்டாம் வகுப்பின் ஆரம்ப நாட்கள். முதல் இரண்டு நாட்கள் வந்து அழைத்துச் சென்றார். எனக்கு அரை நாள் மட்டுமே வகுப்புக்கள் நடந்தன. முதல் வரிசையில், தரையில் கரும்பலகை அருமே அமர்ந்து நிமிர்ந்து பார்த்து படிப்பது விசித்திர அனுபவம் எனக்கு.

    அப்போது தான் அந்த நாள் வந்தது.

    முத்தான புதன் கிழமை. பள்ளிக்கு எப்போதும் போல் புறப்பட்டு சென்றேன் அம்மாவுடன். அம்மா புதிதாக ஒரு கட்டளை இட்டார். பள்ளி முடிந்ததும் என்னையே திரும்பி வரச் சொன்னார். ஏனெனில் அது நான் முதலில் சென்ற பள்ளி செல்லும் வழியிலேயே இருந்தது தான். நானும் சரி என்று சொல்லி வைத்தேன் விழித்துக் கொண்டே. அன்றைய காலங்களில் சாலையில் செல்வது மிகப் பெரிய சாதனையாக நினைப்பேன். சாலையில் செல்லும் பலதரப்பட்ட மனிதர்கள், விர் என்று பறக்கும் வாகனங்கள், வாகன நச்சுப்புகை, வாகன ஒலிப்பான்கள் எல்லாம் பூச்சாண்டி காட்டி பயமுறுத்தும் என் பிஞ்சு மனத்தை.

    அன்று காலை வகுப்புகள் நன்றாகச் சென்றன. காலம் கரைந்து கொண்டிருந்தது. காலை இடைவேளை மணி அடித்தது. எல்லோரும் வெளி சென்று தேன் மிட்டாயும் எனக்குப் பிடித்த நெல்லிக்காயும் வாங்கி ருசித்தவண்ணம் இருந்தோம். புதிய முகங்களின் அறிமுகம் மட்டுமே இருந்தது. நான் புதிதாகையால் யாருடனும் ஒட்டவில்லை மனம் அப்போது.
    நட்பு பாராட்ட ஆளின்றி தனி தேவதையாய்(சும்மா தாங்க சொன்னேன்....... கோவிச்சுகாதீங்க... குழந்தைகள் தெய்வம் தானுங்களே...) பள்ளியைச் சுற்றி(புதிய பள்ளியாகையால்) வலம் வந்த வண்ணம் இருந்தேன்.

    இடைவேளை முடிந்தது. வகுப்புக்கள் மீண்டும் கூடின. எனது முதல் இருக்கை தேடி சென்று அமர்ந்து கொண்டேன். பின் பாடங்கள் நடத்தி முடிந்து மீண்டும் மணி அடித்தது. எல்லோரும் வெளியில் சென்றனர்.அனைவரோடும் நானும் சென்றேன். யாரோடும் அறிமுகம் இல்லாததால் எனக்கு திக்கு தெரியாத காட்டில் விட்டதாய் உணர்ந்தேன். சிட்டாய் பறந்தனர் என் வகுப்பு மாணவர்கள். என்னுடன் வகுப்பில் அப்போது படித்துக் கொண்டிருந்த பரிச்சயமே சரியாக ஆகாத முகங்களை நினைவில் நிறுத்தி பள்ளிக்குள் தேட முற்பட்டு தோற்றுபோனது என் உள்ளம்.

    தேடிக்களைத்து சோர்ந்து இருக்கையில் வகுப்புக்கள் மீண்டும் கூடும் நேரம் ஆரம்பித்தது. எனக்கு முதலில் படித்த பள்ளியின் நியாபகம் வரவே..அதே போல் மணி அடித்ததும் மதியமும் வகுப்பு தொடங்கும் என நினைத்து என் வகுப்பு அறையிலேயே அமர்ந்து கொண்டேன். அப்போது மதிய நேரத்திற்கான வகுப்பு ஆரம்பித்தது.

    நேரம் ஓடிக்கொண்டு இருந்தது. வீட்டிற்கு என் வகுப்பில் அனைவரும் சென்றுவிட்ட நிலையில் மீண்டும் புதிய முகங்கள் என்று அறியாமல் மதிய வகுப்பு பிள்ளைகளுடன் அமர்ந்து கொண்டேன் அதே முதல் வரிசையில்.

    2 மணி நேரம் ஓடியிருக்கும். வகுப்புக்கள் நடந்த வண்ணம் இருந்தன. நான் மும்முறமாக வகுப்புக்களை கவனித்துக் கொண்டு இருந்தேன். என் அம்மா என் முன் கலங்கிய கண்களுடன் பள்ளிக்கு என் வகுப்பிற்கு தேடி வந்திருந்தார் தனியாய். என்னைப் பார்த்து மேலும் அழத்தொடங்கினார். ஒன்றும் புரியாமல் விழித்தேன் இப்போதும்.

    நடந்தது இது தான்.

    பள்ளி விட்டு வீடு வராததால் அம்மா தவித்து,புலம்பி, அழுதவண்ணம் சாலையில் எல்லா இடத்திலும் தேடி பின் கடைசியாய் என் பள்ளி வந்து தலைமை ஆசிரியரை சந்தித்துக் கூறியிருக்கிறார். அவரும் கனிவான குரலில் உங்கள் மகள் எங்கும் சென்றிருக்க மாட்டாள். பள்ளியில் உள்ள எல்லா வகுப்புக்களையும் சென்று பார்த்து வாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
    அம்மாவும் ஒவ்வொரு வகுப்பாக தேடி அழுதழுது வந்திருக்கிறார்.
    கடைசியாய் என் வகுப்பிற்கு வந்து வகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியையிடம் பேசி என்னை அழைத்துச் சென்றார்.

    மதிய உணவு பற்றிய எண்ணமோ... பசியோ என்னை ஆட்கொள்ளாது இருந்தது ஆச்சர்யமாய் இருந்தது எனக்கு இன்று வரை. வகுப்பு கவனித்த வண்ணமே அனைத்தையும் மறந்து கிடந்தேன் என்று அம்மா சொல்லி இன்றும் கேளி செய்வதுண்டு.

    அன்று முதல் என் அம்மாவே வந்து என்னை பள்ளியிலிருந்து கூட்டிச் சென்றது வேறு விசயம். நான் இதற்காக அடிவாங்கவே இல்லை என்பது கூடுதல் சிறப்பு.

    கலங்கிப் போன அம்மாவின் முகம் இன்னும் என் கண்முன் நிழலாடுகிறது.
    அவரின் நேசத்தை மிக வலுவாக என்னும் விதைத்தது இந்த நிகழ்ச்சி.
    Last edited by பூமகள்; 01-09-2007 at 05:40 PM.
    -- பூமகள்.

    "விண்தாண்டும் வேலையின் கடிது - உன்
    உளக்கண் தாண்டும் வேலை..!!"


    பூமகள் படைப்புகள்


Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •