மூன்று பேர்தான் வந்திருந்தார்கள்.மாப்பிள்ளையும் அவருடைய சித்தப்பா,சித்தி மட்டுமே கலந்துகொண்ட பெண்பார்க்கும் படலம்.காஃபி,சிற்றுண்டி எல்லாம் முடிந்ததும்,கொடுக்கல் வாங்கல் விவகாரங்கள் அலசப்பட்டு ஒரு முடிவுக்கு வந்தது. பையன் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு நாக்பூரில் ஒரு பண்ணாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலையில் இருப்பதால்...ரொக்கமும்,தங்கமும் தாரளமாகவே தருவதாய் வித்யாவின் தந்தை ஒத்துக்கொண்டார்.

மாப்பிள்ளை பையனுக்கு பெற்றோர் இல்லாததால் சித்தப்பாவும் சித்தியும்தான் முன்னின்று திருமணத்தை நடத்தப்போவதாகசொன்னார்கள்.புகுந்த வீட்டில் பிக்கல் பிடுங்கல் இருக்காது,மகள் நிம்மதியான திருமண வாழ்க்கையை நடத்த முடியுமென்று சந்தோஷப்பட்டுக்கொண்டார்கள் வித்யாவின் பெற்றோர்.பத்திரிக்கை அடிக்கப்பட்டுவிட்டது.திருமணவிழா மும்பையிலேயே நடத்தப்படுமென்று முடிவு செய்யப்பட்டது.

தன் பங்குக்கு சில பத்திரிக்கைகளை எடுத்துக்கொண்டு அன்று அலுவலகம் வந்தாள் வித்யா.முதல் பத்திரிக்கையை தன் மேலதிகாரிக்கு கொடுத்துவிட்டு பின் தன் சக ஊழியர்களுக்கும் கொடுத்து வரவேற்றாள்.சதீஷிடம் கொடுக்கும்போது மட்டும் லேசான நடுக்கத்தை உணர்ந்தாள்.ஏற்கனவே அவன் வித்யாவை காதலிப்பதாகச் சொல்லி இவள் சம்மதம் கேட்ட போது..தான் தன்னுடைய பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்துகொள்ள போவதாக சொல்லி அவனுடைய காதலையும் அவனையும் நிராகரித்துவிட்டாள். அதனால் தன் கல்யாண பத்திரிக்கையை அவனிடம் தருவதற்கு தயங்கினாள்.உள்ளுக்குள் லேசான உறுத்தல்.சதீஷ் நல்லவன்.அமைதியான குனம்.எந்த கெட்டபழக்கமும் இல்லாதவன்.அவனை நிராகரிக்க எந்த காரணங்களும் இல்லையென்றாலும்,தன் கொள்கைக்காக அவள் அப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது.சதீஷும் அவளின் பெற்றோர்களை சந்தித்து சம்மதம் கேட்டதற்கு சாதி, அந்தஸ்து, எனக் காரணங்கள் காட்டி வித்யாவின் தந்தை அவனுக்கு வாசல் காட்டிவிட்டார்.

கிடைத்த பத்திரிக்கையை வாங்கிக்கொண்ட சதீஷ் ஒரு அடிபட்ட பார்வையை வித்யாவை நோக்கி செலுத்தினான்.அதை அவசரமாகத் தவிர்த்து,உடனே நகர்ந்தாள்.

திருமணம் மிக விமரிசையாக நடந்தது.மாப்பிள்ளை பக்கத்தில் சொற்ப உறவினர்களும் நன்பர்களும் மாத்திரமே இருந்தார்கள்.கொண்டாட்டங்களெல்லாம் முடிந்து தம்பதிகள் நாக்பூர் சென்று விட்டனர். ஒருவாரம் கழித்து வித்யாவின் பெற்றோர் நாக்பூர் சென்று இரண்டு நாள் மகளுடன் தங்கி ஒரு இல்லத்தரசியாக வாழத்தொடங்கி விட்ட மகளை பூரிப்புடன் பார்த்து சந்தோஷமாக வீடு திரும்பினர்.

இரண்டு வாரங்கள் கழிந்திருக்கும்...அன்று பின்னிரவில் வித்யா தனியாக வீட்டுக்கு வந்தாள்.அவள் கோலத்தை பார்த்து இருவரும் அதிர்ந்து விட்டார்கள்.கையில் காதில்,கழுத்தில் இவர்கள் பூட்டி அனுப்பிய ஆபரணங்கள் எதுவுமில்லாமல்,கன்னிப்போன கன்னங்களுடன்,வாராத தலையும்,கலங்கிய கண்களுமாய் வந்திருந்த வித்யாவைப் பார்த்து பதறிப்போய்"என்னம்மா வித்யா என்ன நடந்தது...ஏன் இப்படி இந்த கோலத்தோட எந்த தகவலுமில்லாம இந்த நேரத்துல வந்திருக்கியே...."வரிசையாக கேள்விகள் கேட்டுக்கொண்டே கதவைத்திறந்து விட்டார். எந்த பதிலும் சொல்லாமல் உள்ளே வந்து அமர்ந்து தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு..வித்யா பேச ஆரம்பித்தாள்.
"எல்லாமே தப்புப்பா....ஆசையாசையா ஒரே பொண்ணுன்னு என்னை வளர்த்து இப்படி ஒரு நரகத்துல தள்ளிட்டீங்களே..."சொல்லச்சொல்லவே துக்கம் தாளாமல் விசும்பி அழத்தொடங்கிவிட்டாள்.

"அய்யய்யோ என்னம்மா என்னென்னவோ சொல்றியே..என்னதாம்மா நடந்தது"கேட்டவரை பார்த்துக்கொண்டே.."நடக்கக்கூடாததெல்லாம் நடந்துடிச்சிப்பா...உங்க மாப்பிள்ளை...த்தூ...அவனெல்லாம் மனுஷனே இல்ல..அவனோட வேலை பொய்,படிப்பு பொய்,சித்தப்பா சித்தி எல்லாருமே பொய்ப்பா.அவன் ஒரு பிம்ப்...இது அவனுக்கு நாலாவது கல்யாணம்..ஏற்கனவே மூணு பொண்ணுங்கள சீரழிச்சிருக்கான்...வேற வேற இடங்கள்ல..நாம அவனோட வலையில விழுந்துட்டோம்.பணத்துக்காக எத வேணுன்னாலும் செய்யறவன்.நீங்க போட்ட எல்லா நகைங்களையும் என்கிட்டருந்து பறிச்சிக்கிட்டான்.போய்த்தொலையுதுன்னு பாத்தா...ரெண்டு நாளைக்கு முன்னால வீட்டுக்கு ரெண்டு பேரக்கூட்டிகிட்டு வந்து என்னை கூட்டிக்குடுக்கறதுக்கு முயற்சி பன்னாம்ப்பா அந்த கேடுகெட்டவன்.ரொம்ப போராட வேண்டியிருந்ததுப்பா அந்த மிருகத்துக்கிட்டருந்து தப்பிக்கறதுக்கு..."தாளமாட்டாமல் அவள் அழுத அந்த அழுகையிலேயே தெரிந்தது எவ்வளவு வேதனையை அவள் அந்த நேரத்தில் அனுபவித்திருப்பாளென்று..தன்னையறியாமலேயே வழிந்த கண்ணீரை துடைக்கக் கூட தோணாமல்,தன் செல்ல மகளின் கைகளை ஆதரவுடன் பற்றிக்கொண்டார்.

விசும்பல்களுக்கிடையே தொடர்ந்தாள்..."என்னோட மூர்க்கமான எதிர்ப்பை பாத்துட்டு..உன்னை நாளைக்குப் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டு கதவை வெளிப்புறமா பூட்டிட்டு போயிட்டான். நான் எப்படியோ அந்த பில்டிங் வாட்ச்மேனைக் கூப்பிட்டு சொசைடி ஆபீஸ்லருந்து சாவிய வாங்கிட்டு வரச்சொல்லி, அந்த நல்ல மனுஷனோட உதவியால இங்க வந்து சேர்ந்தம்ப்பா.." எல்லாவற்றையும் கொட்டிவிட்டு கதறினாள்.
என்ன சொல்வது,என்ன செய்வது என்று எதுவுமே தோன்றாமல் இருவரும் மகளின் அழுகையோடு தாங்களும் சேர்ந்துகொள்ளத்தான் முடிந்தது.

நல்லவேளையாக வித்யாவின் அலுவலக மேலாளர் அவள் நிலையறிந்து மீண்டும் அதே வேலையை அவளுக்குத் தந்தார். நேர்ந்த துன்பங்களிலிருந்து வெளிவர இந்த வேலை மிகவும் உதவியாக இருந்தது.வித்யாவின் நிலையை அறிந்ததும் சதீஷ் துடித்துப்போய்விட்டான்.அவளுக்கு ஆறுதலாக எல்லோருமிருப்பதாக சொல்லி அவளைத் தேற்றினான்.முதல் முறையாக வித்யா சதீஷை வேறு கோணத்தில் பார்த்தாள்.இவனுக்கும் அந்த மிருகத்துக்கும் எத்தனை வித்தியாசம்...நான் இவனை நிராகரித்தது தவறோ என நினைக்கத்தொடங்கினாள். சிறிது நாட்க்களிலேயே எல்லா அதிர்ச்சிகளும் விலகி தெளிவானாள்.

அன்று அலுவலகம் வந்ததும் அவள் பார்வை சதீஷின் மேசைபாக்கம் பாய்ந்தது.உடனே ஒரு தெளிவான முடிவோடு அவனை நோக்கி நடந்தாள்.
"சதீஷ் உங்க கூட கொஞ்சம் பேசனும்'
"என்ன வித்யா.."
இங்க இல்ல டீ ரூமுக்கு போகலாம் வாங்க.."

குழப்பமான உணர்ச்சிகளோடு சதீஷும் அவளை பின் தொடர்ந்தான்.

" சதீஷ் நான் நேரடியாவே கேட்டுடறேன்....உங்களுக்கு இன்னமும் என் மேல அதே காதல் இருக்கா..?"

சட்டென்று கேட்டதும் உடனே பதில் சொல்ல கொஞ்சம் திணறிவிட்டு சொன்னான்..
"அப்கோர்ஸ் வித்யா...சாகுற வரைக்கும் அது இருக்கும்.நீதான் என்னை காதலிக்கலயே தவிர நான் உன்னை காதலிச்சது சத்தியம். ஏன் இப்ப இந்த கேள்வி?"

"ரொம்ப சந்தோஷம் சதீஷ். என்னை கல்யாணம் செஞ்சுக்க உங்களுக்கு விருப்பமான்னு நான் கேக்கப்போறதில்ல..ஏன்னா அது நீங்க என் மேல வெச்சிருக்கிற காதலை அவமானப்படுத்துறமாதிரி ஆகிடும்.அதனால நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்"

சதீஷ் சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் மெல்ல அவள் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக்கொண்டான்.



குறிப்பு: என் தோழி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவம் இது. இதை நான் ஏன் உண்மைச்சம்பவம் பகுதியில் இடவில்லையென்றால்...இந்த கதையின் நாயகியைப்போல என் தோழி தைரியமாக முடிவெடுக்க துணிவில்லாமல் இன்னமும் தனி மரமாகத்தான் வாழ்கிறாள்.எனக்கு அதில் உடன்பாடு இல்லாததால் அவளை காதலித்த என் நன்பனோடு என் கற்பனையில் அவளைச் சேர்த்துவைத்தேன். கற்பனை கலந்துவிட்டதால் இது கதையாகிவிட்டது.ஆனால் இது உண்மையாக வேண்டுமென்பதே என் விருப்பம்.