வாகனங்கள்
சீறிப் பாயும்
வற்றிய
நெடுஞ்சாலை.

அதன்
ஊடுருவலில்
கதறி,
அழுது,
அலறி,
அடங்கும் மெளனம்!

தடம் புரளும்
வாகனங்களால்
விழுப்புண்
வாங்கும்
போர்க்களம்!

தன் மேல்
உமிழ்பவர்களையும்
குப்பை
போடுபவர்களையும்
கருணையோடு
ஏற்கும்
அந்த நெடுஞ்சாலை
பொறுமையின்
சிகரம் மட்டுமல்ல!
வெறுமையின்
நீளமும் கூட!!

மரங்கள்
சேவகர்களாக
மிரட்ட
ஒரு ராஜபாட்டை!

ராஜா
உறங்கிக்கொண்டிருக்கிறான்
அதன் ஓரத்தில்...

வறுமைப் போரில்
தோற்ற அவன்
இன்று அரசன்
அந்த
ராஜபாட்டைக்கு...

சோகம்,
பசி,
அழுகை,
மயக்கம்,
அவமானம்
அனைத்தும்
பரிமாறப்பட்டிருக்கின்றன
அந்த நெடுஞ்சாலைக்கு...
புலம்பும்
அவன் வாயிலாய்!

சலனமில்லாமல்
விழுங்கியதுதான்
பதில் அவனுக்கு!

மின்னல் வேக
வாகனம்
எறிந்து சென்ற
எச்சில் சோற்றுப்
பொட்டலம்!

கண் கொட்டாமல்
கவர்ந்து இழுத்தது...

அனிச்சைச்
செயலாய்
எழுந்த அவன்
இச்சையுடன்
பயணித்தான்
பசியைத் தணிக்க...

நொடிப்பொழுதில்
நிறுத்தப்பட்டது
அவன் பயணம்.

'பொக்' கென்று
பொட்டலம்
சிதைந்தது...

'ஆயிரம் ஏழைகளுக்கு
அன்னமளித்துத்
திரும்பும்
அமைச்சரின்
போக்குவரத்தால்'

கத்தினான்...
அழுதான்...
திட்டினான்...
உமிழ்ந்தான்.

ஏற்கப்படவில்லை
அவன் கோரிக்கை
ஆண்டவனால் கூட!

வேகப் புயலாய்ப்
பார்வையைத்
தாண்டியது
வாகனம்!

விழுங்கிக் கொண்டது
நெடுஞ்சாலை!

*******
நட்புடன்

சடகோபன்