Page 1 of 2 1 2 LastLast
Results 1 to 12 of 15

Thread: கறுப்பினழகு - (சிறுகதை)

                  
   
   
  1. #1
    இளம் புயல் பண்பட்டவர் sadagopan's Avatar
    Join Date
    11 Aug 2007
    Location
    Tirunelveli
    Posts
    160
    Post Thanks / Like
    iCash Credits
    19,827
    Downloads
    15
    Uploads
    0

    கறுப்பினழகு - (சிறுகதை)

    ஸ்வேதா அலுவலகத்துக்குக் கிளம்பும் அவசரத்திலிருந்தாள். "அம்மா என் டிபன் பாக்ஸ் எங்கே? டைமாகுதும்மா!" என்று குரல் கொடுத்தாள். "ஏண்டீ கத்தறே! நேத்து நான் படிச்சிப் படிச்சி சொன்னதெல்லாம் மறந்து போச்சா? இன்னிக்கு உன்னைப் பெண் பார்க்க வராங்க! அரை நாள் லீவு போட்டுட்டு வந்திடுன்னு நேத்தே சொன்னேனில்லை?" என்று சற்றே கோபமானார் வனஜா, ஸ்வேதாவின் அம்மா! பதிலுக்கு ஸ்வேதாவும் கோபமாக 'நானும்தான் நேத்தே இதுல எனக்கு இஷ்டம் இல்லை, என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டேனே! இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்? என்னைக் கேட்காமல் நீங்களே எப்படி முடிவு பண்ணுவீங்க?" என்று பட படவெனப் பொரிந்தாள்.

    "உனக்கு 23 வயசாயிடுச்சி ஞாபகம் இருக்கா? இன்னும் எவ்வளவு நாள் தள்ளிப்போட முடியும்? பெத்தவங்க எங்களுக்கு இல்லாத அக்கறையா?"

    "ஆமாம் ரொம்பதான் அக்கறை, பார்த்தேனே உங்க அக்கறையையும், ரசனையையும். போன வாரம் அப்பா அவரோட கூட வேலை பார்க்கற பார்த்திபனைக் கூட்டிட்டு வந்தாரே? ச்சே! அந்த ஆளும் மூஞ்சியும், தொட்டாலே ஒட்டிக்கும் போல ஒரு நிறம், ராத்திரியில வாயை விட்டு சிரிச்சாதன் இருட்டுல அப்படி ஒரு ஆள் நிக்கறதே தெரியும். எனக்கு எந்த விதத்துல பொருத்தம்னு அவனைக் கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சார் உன் வீட்டுக்காரர்?"

    "என்னடி பேச்சு இது, அப்பான்னு சொல்லக் கூடாதா? ஆனாலும் ரொம்ப ஆங்காரம் உனக்கு. சரி! சரி! உனக்கு வர இஷ்டமில்லைன்னா நீயே நேரடியா உங்க அப்பா கிட்ட சொல்லிட்டுப் போயிடு, இல்லைன்னா 2 மணிக்கு வீட்டுக்கு வந்து சேரு. அவங்கள்லாம் 3.30 மணிக்கு வந்திடுவாங்க" என்று பேச்சை அத்தோடு கத்தரித்தார் வனஜா.

    அம்மாவிடம் மட்டும்தான் ஸ்வேதாவின் வாய் எல்லாம்! அப்பாவிடம் சின்ன வயதிலிருந்தே பயம் கலந்த மரியாதை, வாய் பேச மாட்டாள். அதனால் தனக்குள் முணுமுணுத்தவாறே "வந்து தொலைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஆபிஸிற்கு கிளம்பினாள்.

    ஸ்வேதா - வயது 23, ஐந்தடி ஆறங்குலம், உயரத்திற்கேற்ற உடல் வாகு, தாழம்பூவை ஞாபகப் படுத்தும் நிறம் என்று கடந்து செல்பவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு அழகாகவே இருந்தாள். அதில் அவளுக்கு ஒரு கர்வம் கூட. நல்ல படிப்பாளி, அனைவரிடமும் சிரிக்கச் சிரிக்கப் பேசுவாள் அதே சமயம் ஆட்களை அவர்களுக்குத் தகுந்த தூரத்தில் நிறுத்தி வைப்பதும் அவளுக்கு கைவந்த கலை. தோழிகள் எப்போதும் அவள் அழகைப் பற்றிப் பேசிப் பேசி அதில் அவளுக்கு கர்வம் வளர்ந்ததே தவிர மற்றபடி நல்ல பெண்தான்.

    சென்ற வாரம் சனிக்கிழமை அவளுக்கு அலுவலக விடுமுறை. வீட்டில் எப்போதும் போல ஆற அமரக் குளித்து, அம்மாவின் சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு, ஒரு குட்டித் தூக்கத்தின் பின் அப்போதுதான் எழுந்திருந்தாள். வரவேற்பரையில் ஏதோ பேச்சுச் சத்தம் கேட்கவே யாரென்ற ஆவலுடன் எட்டிப் பார்த்தாள்.

    எட்டிப் பார்த்த ஸ்வேதாவை அப்பா, "வாம்மா ஸ்வேதா! சார் என்னோட ஆபிஸ்ல பர்சனல் மானேஜரா இருக்கார். அப்பா சின்ன வயசிலேயே தவறிட்டார். அம்மாவும் இவரும்தான். மாம்பலத்துல சொந்த வீடு கட்டிட்டார். இந்தக் காலத்துல மாம்பலத்துல சொந்த வீடுன்னா சும்மாவா? நல்ல உழைப்பாளி, எல்லாத்துக்கும் மேல எல்லாருக்கும் உதவுற நல்ல மனசு" பெரிதாக அறிமுகம் செய்து வைத்தார். இப்போது எதற்கு இவ்வளவு பெரிய அறிமுகம்?! என்று நினைத்தவாறே "என்ன சார்! ரொம்ப அதிகமா சொல்றீங்க" என்று சங்கடத்துடன் இடையிட்டவனைத் திரும்பி முழுமையாகப் பார்த்தாள். மாநிறத்திற்கும் குறைவான நிறம், அந்த நிறக்குறைவை இன்னும் அதிகப்படுத்திக் காட்டும் பளீர் சிரிப்பு என்று அமர்ந்திருந்த பார்த்திபன் மேல் அவளுக்கு சுவாரஸ்யம் எதுவும் தோன்றவில்லை. ஆனாலும் மரியாதைக்காக ஒரு சிரிப்பைச் சிந்தி விட்டு "நான் உள்ளே போய் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வர்றேன் என்று நழுவினாள். உள்ளே அம்மா பரபரப்பாக அவசரத்துக்குக் கை கொடுக்கும் இனிப்பாகக் கேசரி கிளறிக் கொண்டிருந்தார். "என்னம்மா ஞாயிற்றுக்கிழமைதானே ஏதாவது ஸ்பெஷலா பண்ணுவீங்க, இன்னிக்கு என்ன விசேஷம்?" என்று தட்டில் கொட்டி வைத்திருந்த மிக்ஸரில் இருந்த முந்திரிப்பருப்பை எடுத்து கொறித்தாள்.

    "வந்துட்டியா? இந்தா, இந்த இனிப்பு, காரத்தை எடுத்துட்டுப் போய் அவருக்குக் குடு, அதுக்கு முன்னாடி கொஞ்சம் பளிச்சுனு டிரஸ் பண்ணிக்கிட்டுத் தலை நிறைய பூ வெச்சிகிட்டுப் போ" கேசரியை தட்டில் எடுத்து வைத்துக் கொண்டே அவள் பக்கம் கூடத் திரும்பாமல் காபி கலக்கும் வேலையில் ஈடுபட்டார்.

    "என்னம்மா என்ன விஷயம், என்னவோ பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை முன்னாடிப் போற மாதிரி கண்டிஷன் போடறீங்க" என்று ஒரு மாதிரிக் குரலில் வினவியவளை, "மாதிரி என்ன, அப்படியேதான்! ஹால்ல பார்த்தே இல்லை, அப்பா ஆபிஸ்ல வேலை பார்க்கறவராம், பார்க்கவும் பழகவும் நல்ல விதமா தெரியறார். உங்க அப்பாவுக்கு, உனக்கு அவரைப் பார்க்கலாம்னு ஒரு ஆசை, அதான் சும்மா வீட்டுக்கு வர மாதிரிக் கூட்டிட்டு வந்திருக்கார்" என்று கூறி அதிர வைத்தார்.

    பொங்கி வந்த கோபத்துடன், "ஏம்மா, உங்க ரெண்டு பேருக்கும் என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு, அந்த மனுஷனுக்கும் எனக்கும் கொஞ்சமாவது பொருத்தம் இருக்கா? ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்த்தா எள்ளும் அரிசியும் கலந்து வைச்ச மாதிரி இருக்கும். இருந்திருந்து இவனைப் போய் எனக்குப் பார்க்கணும்னு அப்பாவுக்கு ஏன் தான் தோணுச்சோ!" என்று சீறினாள்.

    "பொருத்தம் வெறும் உருவத்துல கிடையாதுடி, மனசுல இருக்கணும். அப்படி ஒண்ணும் அவர் கறுப்பா இல்லை, உன் கூடச் சேர்த்து பார்த்தா வேணா அப்படித் தோணும். மத்தபடி நல்ல குணம், நல்ல மாமியார், பிக்கல் பிடுங்கல் எதுவும் கிடையாது. எனக்கு வர்ற மருமக வீட்டுக்கு விளக்கேத்தற மகாலஷ்மியா இருந்தா போதும், எதையும் கொண்டு வர வேண்டியதில்லைங்கறாங்களாம். இதை விட ஒரு பொண்ணுக்கு என்னடி வேணும்? உனக்கு எப்பவுமே பொறுமை கொஞ்சம் குறைவுதான். அதுக்கு இந்த மாதிரி பொறுமையான, தன்மையான மாப்பிள்ளை அமைஞ்சாத்தான் வாழ்க்கை நல்லபடியா அமையும். மனசுப் பொருத்ததை விட வேறெதுவும் முக்கியமில்லை தெரிஞ்சிக்கோ. இன்னிக்கு இருக்கற அழகும் நிறமும் இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சி காணாமப் போகப் போற ஒண்ணுதான். அதை நினைச்சிகிட்டு நல்ல வாழ்க்கை அமையப் போறதை கெடுத்துக்காதே" என்று கண்டித்தார் வனஜா.

    ஆனாலும் கண்டிப்பாகத் தாயின் மூலமாகவே தனது மறுப்பை அப்பாவிடம் தெரிவித்து விட்டாள் ஸ்வேதா. அதற்கடுத்து இதோ அடுத்த படலம்.

    மனதில் ஒரு கடுப்புடனேயே பெண் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்பை எடுத்துக் கொண்டு போனாள் ஸ்வேதா. அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே மாப்பிள்ளையிடம் வரும்போது நிமிர்ந்து பார்த்தாள். நல்ல சிகப்பு, ஸ்வேதா தாழம்பூ நிறம் என்றால் மாப்பிள்ளை அதனோடு ரோஜா சேர்ந்த நிறம். பார்த்த மாத்திரத்தில் திலீபனுக்கும் ஸ்வேதாவுக்கும் ஒருவரை ஒருவருக்குப் பிடித்துப் போயிற்று. திலீபனின் தாயார் மளிகை சாமான் லிஸ்ட் போல பெரியதாகத் தயாரித்துக் கொண்டு வந்திருந்த சீர் வரிசைப் பட்டியலைப் பார்த்து ஸ்வேதாவின் பெற்றோருக்கு மயக்கம் வராத குறை. திலீபனும் தாயாரை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாமல் சத்புத்திரனாக மெளனம் சாதித்தான். அவனது தோற்றத்தில் மயங்கி இருந்த ஸ்வேதாவுக்கு இவை எதுவும் மனதில் பதியவில்லை.

    ஆயிற்று, நிச்சயம் எல்லாம் முடிந்து இன்னும் மூன்று வாரங்களில் திருமணம். அன்று காலையில் ஸ்வேதாவின் கன்னத்தில் தடித்துச் சிவந்த ஒரு வீக்கம். ஏதாவது பூச்சி கடித்திருக்கும் தானே சரியாகிவிடும் என்று அலட்சியப்படுத்தியதற்கு மாறாக மாலையில் வீக்கமும் சிவப்பும் அதிகரித்திருந்தது. சுண்ணாம்பு, நாமக்கட்டி என்ற கைவைத்தியம் எதற்கும் கட்டுப் படாமல் மறு நாள் காலை கன்னத்தில் நீர் கோர்த்துக் கொண்டு கறுத்துப் போயிருந்தது. "என்னடி இது, இன்னும் மூணு வாரத்துல கல்யாணம், இப்போப் போயி முகத்துல இந்த மாதிரி ஆயிடுச்சே" என்று புலம்பியவாறே மருத்துவரிடம் அழைத்துப் போனார் வனஜா. "பயப்பட ஒண்ணுமில்லைம்மா. ஏதோ பூச்சிதான் கடிச்சிருக்கு. ஒரு வாரத்துல சரியாயிடும்" என்று மருந்து எழுதிக் கொடுத்தார்.

    மூன்று நாட்களுக்குப் பிறகு அன்றுதான் ஸ்வேதா அலுவலகம் சென்றாள். முகத்தின் வீக்கம் வற்றி இருந்தாலும் கன்னத்தின் கருத்த நிறம் இன்னும் மாறவில்லை. மாலை அலுவலக நேரம் முடிந்த பிறகு ட்ரீட் கேட்டுத் தொல்லை செய்த தோழிகள் புடை சூழ அந்த ஹோட்டலில் உட்கார்ந்திருந்தாள் ஸ்வேதா. எல்லோரும் சாப்பிட்டு விட்டு பில்லுக்காகக் காத்திருக்கும் நேரம் நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவருடன் அதே ஹோட்டலுக்குள் நுழைந்த திலீபனை முகம் சிவக்கப் பார்த்திருந்தாள். "ஹேய்! உன் அழகுக்கும் நிறத்துக்கும் நல்ல பொருத்தம்தாண்டி" என்ற தோழிகளின் கிண்டல் வேறு. அதை அதிகமாக்குவது போல அவளைப் பார்த்து விட்ட திலீபனும் உடன் வந்திருந்தவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து விட்டு இவளை நோக்கி ஆவலுடன் வந்தான். அருகில் வந்து அவளது முகத்தைப் பார்த்தவன் திடுக்கிட்டுப் போனான். வாசலிலிருந்து பார்க்கும்ப்போது ஸ்வேதாவின் முகத்தின் மறுபக்கம் அவனுக்குத் தெரியவில்லை. அருகில் பார்த்ததும் பேயறைந்த மாதிரி அதிர்ந்துபோனான். ஆவலுடன் வந்தவன் எதுவும் பேசாமல் அதிர்ந்து போய்த் திரும்புவதை ஒரு குழப்பத்துடன் பார்த்திருந்தாள் ஸ்வேதா.

    குழப்பம் தெளியாமலே வீடு திரும்பி அம்மாவுக்கு உதவிக் கொண்டிருந்தவளுக்கு அப்பா வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அதற்கான காரணம் தெரிய வந்து மனதைச் சாட்டை கொண்டு விளாசியதைப் போல வலிக்க வைத்தது.

    "மாப்பிள்ளை சாயந்திரம் செல்லுல போன் பண்ணார். ஸ்வேதாவின் கன்னத்துல இருக்கற காயம் பத்திக் கேட்டார். அதைப் பத்தி ஏன் சொல்லலைன்னு ரொம்பக் கோவிச்சிட்டார். அது மட்டுமில்லை," என்று இழுத்தபோதே அம்மாவுக்கும் ஸ்வேதாவுக்கும் ஏதோ புரிந்தது போல இருந்தது.

    "என்னங்க சொல்றீங்க, மாப்பிள்ளை கல்யாணத்தை நிறுத்தச் சொல்றாரா? இது என்னங்க அநியாயம்? கன்னத்துல காயம் பட்டதைச் சொல்லலைன்னு கல்யாணத்தையே நிறுத்துவாங்களா? நீங்க கிளம்புங்க, மாப்பிள்ளையோட அம்மாவைப் பார்த்துப் பேசிட்டு வரலாம், பெரியவங்களா அவங்க புத்தி சொன்னா மாப்பிள்ளை கேட்டுப்பார்" என்ற மனைவியை நிராசையோடு பார்த்தார்.

    "பிரயோஜனமில்லை வனஜா, நான் நேரா மாப்பிள்ளை வீட்ல இருந்துதான் வரேன். மாப்பிள்ளையும் சரி அவங்க அம்மாவும் சரி இது பூச்சிக் கடிதான்றதையோ சரியாயிடும்கறதையோ நம்பவே இல்லை. வேற எதோ பெரிய விஷயத்தை நாம வேணும்னே மறைச்சிட்டோம்னு நினக்கறாங்க. பொண்ணோட அழகைப் பார்த்துதான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டதே, இந்த முகத்தை எப்படி வெளியே வாசல்ல கூட்டிட்டுப் போவான்னு ரொம்ப கடுமையாப் பேசறாங்கம்மா" என்று கண் கலங்கினார்.

    "என்னங்க இது, நம்ப மகளுக்கேத்த மாப்பிள்ளை கிடைச்சிட்டார், அவள் கால முழுசும் சந்தோஷமா இருப்பான்னு நிம்மதியா இருந்தோமே, இவ்வளவு சின்ன விஷயத்துக்காக கல்யாணத்தை நிறுத்துவாங்களா? இனிமே அவ வாழ்க்கை என்ன ஆகும்? கடவுளே!" என்று அழ ஆரம்பித்த அம்மாவையும் அப்பாவையும் ஸ்வேதாதான் தேற்ற வேண்டியிருந்தது.

    ஆயிற்று! குறிப்பிட்ட முகூர்த்தத்தில் ஸ்வேதாவின் கழுத்தில் தாலி ஏறியது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரிய நிம்மதி. அவர்களின் நிம்மதிக்காகத் தான் ஸ்வேதா மனசேயில்லாமல் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டதே. திலீபனோடான கல்யாணம் நின்று போனதில் நடைப்பிணமாகி விட்ட தாயையும், மனதிற்குள்ளேயே போட்டுப் புழுங்கிக் கொண்டிருந்த தந்தையையும் ஆறுதல் படுத்த பார்த்திபனை மணப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

    இடிந்து போயிருந்த தாயையும் தந்தையையும் விஷயம் கேள்விப்பட்டு வந்திருந்த பார்த்திபன் ஆறுதல் கூறித் தேற்றினான். அது மட்டுமல்லாமல் அவர்களுக்குச் சம்மதமென்றால் ஸ்வேதாவை மணந்து கொள்ளத் தான் தயார்தான் என்று இன்ப அதிர்ச்சி அளித்தான். ஆரம்பத்தில் ஸ்வேதாவுக்கு இதில் விருப்பமில்லையென்றாலும் பெற்றோருக்காகவே ஒத்துக் கொண்டாள். அவளுக்குமே இந்த இரண்டு வாரங்களில் பார்த்திபனின் நல்ல குணம் ஓரளவுக்குப் பிடிபட்டிருந்தது. இருந்தாலும் ஒரு விஷயம் உறுத்திக் கொண்டே இருந்தது. அன்று இரவில் அதையும் அவனிடம் கேட்டுத் தெளிந்து கொள்வது என்றிருந்தாள்.

    ஆரவாரமேதுமில்லாமல் அலங்கரிக்கப்பட்டிருந்த கட்டிலில் தன்னருகே அமர்ந்த பார்த்திபனை யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்வேதா. "என்ன ஸ்வேதா, என்ன தலை போற யோசனை" என்று கிண்டலுடன் வினவிய பார்த்திபனிடம் தயக்கத்துடன் "இல்ல.... நான் ஒண்ணு கேட்கணும், தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே!" என்று இழுத்தாள். "ம்ம்ம்ம்ம்... தப்பான விஷயமா இல்லைன்னா கண்டிப்பா தப்பா நினைக்க மாட்டேன்" என்று கண் சிமிட்டினான். "வந்து... இந்தக் கல்யாணத்துக்கு நீங்க எதுக்காக ஒத்துக்கிட்டீங்க?"

    ஆச்சரியத்தோடு புருவத்தை உயர்த்தியவன் "ஏற்கனவே உங்க அப்பாவுக்கு நம்ப ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்கற எண்ணம் இருந்துச்சி. ஆனா நம்ப ரெண்டு பேருக்குமே அதிலே இஷ்டமில்லாததால அந்த யோசனையை நிறுத்தியாச்சு. ஆனா உன்னோட கல்யாணம் நின்னதுக்கப்புறம் அவங்க ரெண்டு பேரும் பட்ட பாட்டை என்னால பார்க்க முடியல. அவங்களைத் தேற்ற நீ பட்ட அவதியையும்தான்... அதனாலதான் அதுக்கு ஒரு தீர்வா எனக்குத் தோணினதைச் சொன்னேன்". "இந்தத் தகவல் அவளுக்குப் புதிது!! அவளை இந்தப் பார்த்திபன் மறுத்தானா??!!

    "ஆனா முதல்ல இஷ்டமில்லைன்னு மறுத்துட்டு எப்படி ரெண்டாவது முறை முயற்சி பண்ணீங்க? அப்போ நாங்க பலவீனமா இருந்ததாலயா? ஒரு வேளை இந்தக் காயம் ஆறாத தழும்பா என் முகத்துல நின்னுடுச்சின்னா என்ன பண்ணுவீங்க? ஏமாந்து போயிட்டோமேன்னு தோணாதா?" கவலையோடும் குழப்பத்தோடும் கேட்டவளைக் கனிவுடன் பார்த்தான் பார்த்திபன்.

    "உன்னோட தவிப்பு எனக்குப் புரியுது. ஏதாவது ஒரு விதத்துல வாழ்க்கையோட சந்தோஷங்கள் மறுக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும்கறதுதான் என்னோட லட்சியமா இருந்துச்சி. அதனாலதான் உனக்கும் எனக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு உங்க அப்பா ஆசைப்பட்டப்போ நான் மறுத்திட்டேன். அன்னிக்கு அந்த மாதிரி எண்ணத்தோடதான் என்னை வீட்டுக்குக் கூப்பிட்டிருக்கார்னே எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா உனக்கும் அப்போ தர்ம சங்கடம் இருந்திருக்காது. எனக்கு எப்பவுமே உன் அப்பாவைப் பிடிக்கும். எல்லார் கிட்டயும் கனிவா பேசறதையும், இரக்க சுபாவத்தையும், மரியாதை, பணிவு இன்னும் நிறைய விஷயங்கள் அவர் கிட்டே இருந்துதான் நான் கத்துகிட்டேன். அவரோட மனசு கலங்கறதை என்னால தாங்க முடியலை. அதுவுமில்லாம ஒரு முறை திருமணம் நிச்சயமாகி நின்னு போனா அந்தப் பெண்ணுக்கு கல்யாணம் நடக்கறது நம்ப சமூகத்துல எவ்வளவு கஷ்டம்னு எனக்கும் தெரியும். அப்படிப் பார்த்தா நீயும் ஒரு வகையில பாதிக்கப்பட்ட பொண்ணுதானே! அதான் உன்னை மனப்பூர்வமா கல்யாணம் பண்ணிகிட்டேன். என்ன அப்படிப் பார்க்கறே?! இன்னும் குழப்பம் தீரலியா?"

    ஒரு கணம் அவன் கண்களைத் தவிப்போடு பார்த்து விட்டுக் குனிந்தாள் "அப்போ வெறுமனே என் மேல இருக்கற அனுதாபத்துல தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?"

    "என்னம்மா இது, கஷ்டப்பட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதை நியாயப்படுத்த ஒரு காரணம் கண்டு பிடிச்சி சொன்னா அதைப் புரிஞ்சிக்காம..... ஏற்கனவே என் நிறத்தைப் பார்த்து நிராகரிச்ச உன்னோட மனசை எப்படி கவர்றதுன்னு குழம்பிட்டிருக்கேன், இப்பொ இப்படி ஒரு மக்கைக் கல்யாணம் பண்ணிகிட்டோமேன்ற வருத்ததையும் குடுக்கறியே!"

    சரேலென்று நிமிர்ந்தாள் ஸ்வேதா! பளிச்சென்ற மின்னல் கண்களில் மின்ன "நிஜம்மாவா?! இத்தனைக்கும் அந்தப் பூச்சிக்குத்தான் நான் நன்றி சொல்லணும், இல்லைன்னா திலீபனோட புற அழகைப் பார்த்து ஏமாந்திருப்பேன்" என்று புன்னகைத்தாள்.

    சமயம் பார்த்து எங்கிருந்தோ ஒரு ரேடியோ "கறுப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு.. சாமி கருப்புத்தான் சாமி சிலையும் கருப்புத்தான்.." என்று பாடியதைக் கேட்ட இருவரும் ஒரு கணம் திகைத்துப் பின் வாய் விட்டுச் சிரித்தனர்.


    *******

    நண்பர்களே இது என் முதல் படைப்பு

    நட்புடன்

    சடகோபன்

  2. #2
    இளம் புயல் பண்பட்டவர் வெண்தாமரை's Avatar
    Join Date
    27 Jul 2007
    Location
    mukkadal sangamikkum
    Posts
    194
    Post Thanks / Like
    iCash Credits
    8,965
    Downloads
    34
    Uploads
    0
    உங்களது முதல் படைப்பு மிகவும் அருமை.. பெண் பார்க்கும் படலத்தை பற்றி அழகாக கூறியுள்ளீர்கள். முக அழகு முக்கியமில்லை.. அகஅழகு முக்கியம் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளீர்கள்.

  3. #3
    இளம் புயல் பண்பட்டவர் sadagopan's Avatar
    Join Date
    11 Aug 2007
    Location
    Tirunelveli
    Posts
    160
    Post Thanks / Like
    iCash Credits
    19,827
    Downloads
    15
    Uploads
    0
    மனம் நிறைந்த நன்றிகள் திரு தாமரை

  4. #4
    நட்சத்திரப் பதிவாளர் பண்பட்டவர் சிவா.ஜி's Avatar
    Join Date
    23 May 2007
    Location
    வளைகுடா நாடுகள்
    Posts
    15,360
    Post Thanks / Like
    iCash Credits
    253,759
    Downloads
    39
    Uploads
    0
    சடகோபன் முதல் படைப்பு என்று நம்பமுடியாத அளவுக்கு இருக்கிறது உங்களின் எழுத்துத் திறன். உரையாடல்கள் தெளிவான வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. தேவையில்லாத எந்த வார்த்தைகளையும் சேர்க்காமல்,கதையை கொண்டு சென்ற பாங்கு அருமை. கரு பழையதானாலும், நல்ல கருவானதாலும்,அதனை அளித்திருந்த விதமும் அருமையாக இருக்கிறது. மேலும் மேலும் படைப்புகளை தந்திட வாழ்த்துக்கள்.
    அன்புடன் சிவா
    என்றென்றும் மன்றத்துடன்
    கவலை என்பது கைக்குழந்தையல்ல
    எல்லா நேரமும் தோளில் சுமக்க
    கவலை ஒரு கட்டுச் சோறு
    தின்று தீர்க்க வேண்டும் அல்லது
    பகிர்ந்து தீர்க்க வேண்டும்...!!!

  5. #5
    பொறுப்பாளர் பண்பட்டவர் அன்புரசிகன்'s Avatar
    Join Date
    04 Feb 2007
    Location
    நமக்கு நாடு இருக்கா என்ன?
    Posts
    11,476
    Post Thanks / Like
    iCash Credits
    138,201
    Downloads
    161
    Uploads
    13
    வாழ்த்துக்கள் சடகோபன்... தற்காலத்தில் சூழ்ந்திருக்கும் மாயைசை சித்தரித்து கதை தந்துள்ளீர்கள்.....

    பாராட்டுக்கள்... இன்னும் படையுங்கள்.
    தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
    தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

  6. #6
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    சடகோபனின் கதையினை நகர்த்திச்செல்லும் பாங்கு அழகாகவும் அற்புதமாகவும் இருக்கிறது. நிலையான அழகு எது நிலையில்லாத அழகு எது என்பதினை சொல்லியவிதம் பாராட்டத்தக்கது.

    வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சடகோபன்

  7. #7
    மன்றத்தின் தூண் பண்பட்டவர் leomohan's Avatar
    Join Date
    22 Sep 2006
    Location
    தமிழ் இணையம்
    Posts
    3,998
    Post Thanks / Like
    iCash Credits
    51,922
    Downloads
    126
    Uploads
    17
    அற்புதமான முதல் படைப்பு. பார்த்திபன் அழுத்தமான பாத்திரம். இவ்வாறு பல ஆதர்ஷங்களுடன் வாழுபவர்கள் பெண்கள் வெளியழகை மட்டும் பார்த்து ஏன் தான் நிராகரிக்கிறார்களோ.

    கடைசி லைன் சூப்பர். நானும் கறுப்பு தான். எனக்கு பிடிச்ச கலரும் கறுப்பு தான்.
    அன்புடன்,

    லியோமோகன்
    தனித்திரு விழித்திரு பசித்திரு

  8. #8
    இளம் புயல் பண்பட்டவர் sadagopan's Avatar
    Join Date
    11 Aug 2007
    Location
    Tirunelveli
    Posts
    160
    Post Thanks / Like
    iCash Credits
    19,827
    Downloads
    15
    Uploads
    0
    நன்றிகள் நண்பர்களே

  9. #9
    மன்றத்தின் தூண் பண்பட்டவர்
    Join Date
    03 Feb 2007
    Location
    அப்பிடீன்னா?
    Posts
    4,596
    Post Thanks / Like
    iCash Credits
    60,222
    Downloads
    84
    Uploads
    0
    Quote Originally Posted by leomohan View Post
    பெண்கள் வெளியழகை மட்டும் பார்த்து ஏன் தான் நிராகரிக்கிறார்களோ.
    இதைப் ப*டித்த*துமே,

    இதைப் புரின்துகொண்டேன்.
    Quote Originally Posted by leomohan View Post
    நானும் கறுப்பு தான்.
    வாழ்க கறுப்பு.

  10. #10
    இளம் புயல் பண்பட்டவர்
    Join Date
    08 Apr 2007
    Posts
    469
    Post Thanks / Like
    iCash Credits
    8,991
    Downloads
    0
    Uploads
    0
    கருப்பின் அழகை அழகாக படைத்துள்ளார்.இது முதல் படைப்பல்ல.முத்தான படைப்பு.200 முத்து சன்மானம் உங்களுக்கு நண்பரே.

  11. #11
    மன்றத்தின் மகுடம் பண்பட்டவர்
    Join Date
    31 Mar 2003
    Posts
    15,683
    Post Thanks / Like
    iCash Credits
    122,654
    Downloads
    4
    Uploads
    0
    மனமார்ந்த பாராட்டுகள் சடகோபன்..

    தங்கம் பழையதானாலும் மதிப்பு குறைவதில்லை..
    நல்ல கதைக்கருக்களும் அப்படியே!

    தங்கமான கதைக்கரு எடுத்து, சரளமாகச் சொல்லி
    பார்த்திபனின் சுவையான கவரும் வரிகளோடு சுகமாக முடிந்த கதை!

    பழக்கமான வீட்டு உணவைப் பக்குவமாய்ச் சாப்பிட்ட முழு மனதிருப்தி!

    நன்றியும் பாராட்டுகளும்!

    விரைவில் பண்பட்டவர் தகுதி வந்துசேர வாழ்த்துகள்!
    எத்தனை மனிதர்கள் உலகத்திலே...
    எத்தனை உலகங்கள் இதயத்திலே...

  12. #12
    இளம் புயல் பண்பட்டவர் gayathri.jagannathan's Avatar
    Join Date
    13 Dec 2006
    Location
    Bangalore
    Posts
    273
    Post Thanks / Like
    iCash Credits
    8,995
    Downloads
    9
    Uploads
    0
    சடகோபன்... இது தங்களுடைய முதல் பதிப்பாகவே தெரியவில்லை... தேர்ந்த எழுத்தாளரின் பக்குவப்பட்ட நடை...
    பாத்திரப் படைப்பு அபாரம்...
    நிதானமாகச் சென்றாலும் நல்ல மெஸேஜை இக்கதை மூலமாக சொல்லியுள்ளீர்கள்.. பாராட்டுக்கள்...

    மன்றத்துக்கு மற்றொரு திறமையான படைப்பாளி கிட்டியுள்ளார்...
    தமிழபிமானி
    ஜெ.காயத்ரி.

Page 1 of 2 1 2 LastLast

Thread Information

Users Browsing this Thread

There are currently 1 users browsing this thread. (0 members and 1 guests)

Bookmarks

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •