பாலைவனங்களில் கூட பனி பொழிகிறது!
எரிமலைகளில் கூட ஈரம் கசிகிறது!
என் வாழ்க்கையில் மட்டும் இப்படி ஒரு வறட்சியா?
எனக்கு மட்டும் திருமணம் என்பதே புரட்சியா?

இன்னும் எத்தனை காலம் தான் இந்த வாழ்க்கை,
பாதையே தெரியாமல் பயணம் செய்யும்?

நான் பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் எப்படி
சோக ஊருக்கு சொல்லாமலேயே செல்கின்றன?

எனக்கு கட்டிய மாலையில் மட்டும் ஏன்
முல்லை வைக்காமல் முள்ளை வைத்தான் அந்த முப்பெரும் தேவன்?

மேளச்சத்தமும் மெட்டி ஒலியும்
என்னை தீண்டத்தகாதவள் என்று நினைத்ததா?

பந்தி வைத்து பரிமாறக் காத்திருந்தும்
என் வீட்டிற்கு திருமண விருந்தாளி வராமலேயே போவதேன்?
புத்தாடை கட்டி பட்டாசு வெடித்தும்
என் வீட்டிற்கு திருமண தீபாவளி திரும்பாமலேயே போவதேன்?

திருமணம் காணாமலேயே இந்த ஒருமணம்
துருமணம் ஆகிவிடுமோ?

வீட்டிற்கு வரும் அழைப்பிதழ்களில் எல்லாம்
எத்தனை நாள் தான் என் பெயரை எழுதிப் பார்ப்பது?
எப்போது தான் என் பெயரையும் மணப் பெண்ணாய் அச்சிட்டுப் பார்ப்பது?

கல்யாண ஆசை கழுத்து வரை நிற்க
காதல் ஆசை கழுத்தைப் பிடித்து நெறிக்க
என் வாழ்க்கையே விழிகளில் பிதுங்கி வழிகிறதே!

என் விதை வந்து விளையாட வேண்டிய மடியில்
இப்படி விதி வந்து விளையாடுகிறதே!

கல்யாணக் கடவுளே!
என்னையும் கொஞ்சம் கட்டிப் பிடி!
என் வீட்டுத் தோட்டத்திலும்
மஞ்சளும் குங்குமமும் பூத்துக் குலுங்கட்டும்!
என் கழுத்தில் தாலியும் என் இடுப்பில் குழந்தையும்
காய்த்துத் தொங்கட்டும்!!!