PDA

View Full Version : குயவனை வனையும் வாழ்க்கை சக்கரம்!ஷீ-நிசி
06-06-2007, 04:09 AM
குனிஞ்சி, நிமிர்ந்து
இடுப்பு நோவ -நான்
வனஞ்சி வார்த்த,
அடுப்பும், பானைங்களும்,

நேத்தடிச்ச பேய் புயலில்
காத்தடிச்சு உடைஞ்சி போச்சே!

சேதாரத்துல சிக்காம,
செவத்தோரத்துல இருந்த,
மிச்சமீதி பானைங்கள,
பச்ச தண்ணி பருகாம,

சந்தைக்கு தூக்கிட்டு ஓடினேன்!
வந்த வெலைக்கு தள்ளிடலாம்னு!
சந்தையில வியாபாரமில்ல..
எங்கையில ஒரூவாயுமில்ல....

இன்னிக்கோ, நாளக்கோன்னு,
மவராசனை வயித்துல சொமந்துகிட்டு -என்
மவராசி வந்திருக்கா தாய்வூடு!

மவராசிய பார்க்க -எம்
மருமவனும் வந்திருக்கான்!

வரச்சொல்லோ,
சந்தையில நாட்டுகோழியும்,
கந்தசாமி கடையில
ரெண்டு கிலோ அரிசியும்,

வாங்கிட்டு வாங்கன்னு,
பொஞ்சாதி சொன்னது,
நெஞ்சுக்குள்ள நின்னது!

கண்ணுல பொசுக்குன்னு
தண்ணி எட்டி பார்க்குது!
பத்துரூவா கடன்வாங்க கூட
பக்கத்தூருதான் போவனும்!

என் குல சாமி!
எனக்கொரு வழி காமி!

கொக் கொக் கொக்
கொக்கரக்கோ...
கொக் கொக் கொக்
கொக்கரக்கோ...

நடுரோட்டுல ஓடிட்டிருந்துச்சி
நாட்டு கோழி ஒன்னு!
கத்தி ஓடுற கோழியத்தவிர,
சுத்தி பார்த்தா யாருமில்ல!

மனசில பாரம் இறங்கிபோச்சி
பயம் மனசோரம் ஏறிப்போச்சி

வழிஞ்ச வேர்வைய,
கிழிஞ்ச துண்டால தொடச்சிவுட்டு,
கந்தசாமி கடைக்கு நடந்தேன்!

அரிசி மட்டும் கடன்
சொல்லிக்கலாம்னு.....

சிவா.ஜி
06-06-2007, 04:20 AM
ஒமனில் புயலடித்ததும் ஷீயின் கவிதை பிறந்துவிட்டது. அழகான,எளிமையான வார்த்தைகள்.எதார்த்தமான வரிகள்.
என் குல சாமி!
எனக்கொரு வழி காமி!
இயல்பாய் வரும் வேண்டுதல். வேண்டி முடித்ததும் கொக்கரக்கோவென கண் முன்னால்....பிள்ளை சுமக்கும் மகளுக்கும் கூட வந்திருக்கும் மருமகனுக்கும் ஆசையாய் ஆக்கிப்போட அரிசி மட்டும் கடனில்.மண்வாசனையோடு ஒரு கவிதை. மிக அழகு ஷீ. பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
06-06-2007, 04:26 AM
நன்கு ரசித்து விமர்சித்திருக்கிறீர்கள். நன்றி சிவா..

இதயம்
06-06-2007, 04:50 AM
கிராம களத்தில் வறுமை மண் எடுத்து, பாச நீர் விட்டு குழைத்து ஷீ-நிசி என்ற குயவர் செய்த அழகான பானை இந்த கவிதை. கவிதையின் எளிமையும், வரிகளின் உள் பொதிந்த பொருளும் இந்த கவிதையை மேலே மேலே உயர்த்துகின்றன. அதுவும் கடைசி வரியில் அமைந்துள்ள உள் பொதிந்த முடிவு அனைவருக்கும் புரியுமா என்று தெரியவில்லை. அதை நீங்கள் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கலாம்.
கொக்கரக்கோ கும்மாங்கோ தெரிந்த நம் மக்களுக்கு உங்களின்
கொக் கொக் கொக்
கொக்கரக்கோ...
கொக் கொக் கொக்
கொக்கரக்கோ...

பிடித்திருக்க வேண்டுமென்பது என் அவா..!

ஷீ-நிசி
06-06-2007, 05:10 AM
நன்றி இதயம்... நிச்சயம் அனைவருக்குமே புரியும் என்று நம்புகிறேன்....

அக்னி
06-06-2007, 09:44 AM
ஒரு குயவனின் வாழ்க்கைப் போராட்டம் என்பதை மேற்கோள்காட்டி, அன்றாடம் தொழில் செய்து பிழைப்பவனின் வாழ்வைப் படம் பிடித்திருக்கிறீர்கள்...

பெண் கருத்தரித்துவிட்டால், பிள்ளைப்பேற்றுக்கு தாய்வீடு அனுப்புவது தாய்மையடையும் பெண்ணுக்கு சிறந்த கவனிப்புக் கிடைப்பதற்காகவே...

ஆனால், பெண்வீட்டாரின் குடும்பநிலையக் கருத்தில் கொள்ளாமல், வாட்டி வதைக்கக் கூடாது. அவர்களுடன் மருமகன்களும் ஒத்தாசையாக இருந்தால் நெருக்குதல்கள் வரா...

அப்படியில்லாமல், மாமனார் வீட்டில் கால் மேல் கால் போட்டு மட்டும் இருந்தால், நல்ல மாமனாரும் இயலாத இடத்தில் தவறாக போயிடுவர் என்பதை கருப்படுத்தியிருக்கிறீர்கள்...


நடுரோட்டுல ஓடிட்டிருந்துச்சி
நாட்டு கோழி ஒன்னு!
கத்தி ஓடுற கோழியத்தவிர,
சுத்தி பார்த்தா யாருமில்ல!

இயற்கை, கடவுள், அரசுகள் என்று எல்லோரும் ஏழைகளைச் சோதித்தால், என்செய்வது...?

பாராட்டுக்கள் ஷீ-நிசி...

ஷீ-நிசி
06-06-2007, 11:03 AM
அருமையான விமர்சனம்... நன்றி அக்னி....

பென்ஸ்
06-06-2007, 03:22 PM
கவிதை வாசித்து அனுபவிப்பது ஒரு அருமையான விசயம்..

மனம் கவிதையை வாசித்து லயிக்க விரும்பும் தருனங்களில் மறைமுகமாக வார்த்தைகளை கொடுக்கும் போது அதை அர்த்தபடுத்தி புரிந்து கொள்வதில் ஒரு சுகம்.

புதுக்கவிதைகளின் வெற்றி என்பது காட்சியை அப்படியே அந்த கதாபாத்திரத்தின் இடத்தில் இருந்து சொல்லும் போது , அதை வாசிப்பவனும் அதை அவன் இடத்தில் இருந்து வாசிக்க கடைசி வரிகள் வந்ததும் , மீண்டும் ஒரு முறை கவிதையை வாசிக்க கண்கள் மீண்டும் முதல் வரிகளை தேடும்.

ஷீ...
உங்கள் கவிதையை வாசிக்கும் போது அப்படியே ஒரு குயவனின் இடத்தில் இருந்து வாசித்த ஒரு உணர்வு.

நேற்றிய மழை...
மகள் பிரசவம்
மருமகன் விருந்து..
வியபாரமில்லை
பணசிக்கல்..
தேவைகள்
இயலாமை
தவறிழைக்கிறான்..
அருமையாக கொண்டு செல்லபடும் கவிதை ... ஒரு சாதாரன மனிதனிம் மனநிலமையை அப்படியே படம் பிடித்து காட்டி இருக்கிறிர்கள்...

ஆனாலும்....
தவறு செய்பவர்கள் தன் தேவைகளை பூர்த்தி செய்ய முன் வைக்கும் நியாயங்கள் சரியா....
யாருக்கும் தெரியாமல் செய்தால் தவறில்லை என்பது சரியா..???
அவன் தவறு நியாயபடுத்த படவில்லையே???

மனோஜ்
06-06-2007, 03:40 PM
கவிதை ஏழையின் சிரிப்பை இயல்பாய் காட்டுகிறது ஷீ
தவறுநேர செய்யும் தருனங்கள் படமாக்கப்பட்டுள்ளது

lolluvathiyar
06-06-2007, 03:40 PM
ஆனால், பெண்வீட்டாரின் குடும்பநிலையக் கருத்தில் கொள்ளாமல், வாட்டி வதைக்கக் கூடாது. அவர்களுடன் மருமகன்களும் ஒத்தாசையாக இருந்தால் நெருக்குதல்கள் வரா...

அப்படியில்லாமல், மாமனார் வீட்டில் கால் மேல் கால் போட்டு மட்டும் இருந்தால், நல்ல மாமனாரும் இயலாத இடத்தில் தவறாக போயிடுவர் என்பதை கருப்படுத்தியிருக்கிறீர்கள்...


ஐயா, மகள் வாயும் வயிருமாய் வீட்டில் இருந்தால் அவளுக்கு நாட்டு கோழி ஆக்கி போது கிராமத்தில் உள்ள மாத்த முடியாத பழக்கம்
மனையாளை பார்க்க கனவன் வருவதும் இயல்பல்லவா,
கடனை வாங்கியாவது மருமகனுக்கு கோழி ஆக்கி போடுவது ஒரு பழக்கம்
அதே மகளை பார்க்க மருமகன் வீட்டுக்கு போனால் சம்மந்தி வீட்டார்
கோழி மட்டுமல்ல சாராயமும் வாங்கி தந்து உபசரிப்பார் கிராமங்களிலே.

ஷிநிசி விளக்குவது ஏழ்மையிலும் விருந்தோம்பல் மகிமையை பற்றி தானே
நீங்கள் பாவம் மருமகனை ஏசுகிறீர்களே. அப்படி அவர் யாரையும் திட்ட வில்லையே

ஷீ-நிசி
06-06-2007, 03:42 PM
பென்ஸ் உங்களின் ஆழ்ந்த விமர்சனங்கள் என்றுமே எனக்கு உற்சாக டானிக்..

அவன் தவறு என்றைக்குமே நியாயபடுத்தமுடியாதுதான்...

போகிற வழியில் 500 ரூபாய் நோட்டு கத்தையாக இருக்கிறது.. சுற்றிலும் யாருமே இல்லை.. எடுத்து பாக்கெட்டில் வைப்பவர் 99% பேர்... காவல் நிலையம் செல்பவர் 1% பேர்... காவல் நிலையம் சென்றாலும் அவர்கள் தானே பங்கிட்டுக்கொள்ளப்போகிறார்கள் என்று பலவாறு காரணமிட்டு பணத்தை சொந்தமாக்கிகொள்ளும் ஒவொருவருமே அந்த 99% அடங்குவர்..

எவ்வித தேவையுமின்றிம் எதிர்பார்ப்புமின்றி வழியில் கிடைத்ததை அடைய நினைக்கும் உலகில், தேவைகளும், எதிர்பார்ப்புகளும் நெருக்க அந்த குயவன் அந்த செயலை செய்ய ஏற்படுத்தின சூழ்நிலை தான் அவனின் தவறுக்கு முழுக்காரணமும்.

நன்றி பென்ஸ்.

ஷீ-நிசி
06-06-2007, 03:52 PM
ஐயா, மகள் வாயும் வயிருமாய் வீட்டில் இருந்தால் அவளுக்கு நாட்டு கோழி ஆக்கி போது கிராமத்தில் உள்ள மாத்த முடியாத பழக்கம்
மனையாளை பார்க்க கனவன் வருவதும் இயல்பல்லவா,
கடனை வாங்கியாவது மருமகனுக்கு கோழி ஆக்கி போடுவது ஒரு பழக்கம்
அதே மகளை பார்க்க மருமகன் வீட்டுக்கு போனால் சம்மந்தி வீட்டார்
கோழி மட்டுமல்ல சாராயமும் வாங்கி தந்து உபசரிப்பார் கிராமங்களிலே.

ஷிநிசி விளக்குவது ஏழ்மையிலும் விருந்தோம்பல் மகிமையை பற்றி தானே
நீங்கள் பாவம் மருமகனை ஏசுகிறீர்களே. அப்படி அவர் யாரையும் திட்ட வில்லையே

அடடா... கலக்கலா சொல்லிட்டீங்க வாத்யாரே.. கவிதை ஒவ்வொருவரின் மனதிலும் பயணித்து அவர்கள் தருகிற புதுப்புது கரு ஒவ்வொன்றுமே அருமையாக இருக்கிறது..

ஷீ-நிசி
06-06-2007, 03:52 PM
நன்றி மனோஜ்

அமரன்
06-06-2007, 04:15 PM
அருமையான கவிதை நிஷி. காட்சியைக் கண்முன்னே காட்டி நிற்கின்றது. கோழி கிடைத்த விதத்தை கூறியுள்ள பாங்கு தேர்ந்த கவிக்கே உரித்தானது. மீண்டும் உங்கள் புலமையை நிரூபித்துவிட்டீர்கள்.
நான் சொல்ல நினைத்ததை நண்பர்கள் அனைவரும் சொல்லி விட்டார்கள். முதல்ல சித்தாள். இப்போ குயவன். சிந்தனை அருமை.பாராட்டுகள் நிஷி.

ஷீ-நிசி
07-06-2007, 04:06 AM
நன்றி அமரன்.....

இந்தக் கவிதை உருவாக காரணம் நம் ஆதவாதான்... அவரே வந்து அதைப்பற்றி சொல்லுவார்..

rocky
07-06-2007, 04:58 PM
நன்பர் நிசி அவர்களுக்கு கவிதை மிகவும் அருமையாக இருந்தது. இதை கவிதை என்பதைவிட ஒரு சிறுகதை என்றே சொல்லலாம். வட்டார வழக்கு மொழியோடு சொல்லியது மிகவும் இயல்பாகவும் அழகாகவும் உள்ளது. வருமையின் கொடுமையில் மருமகனை உபசரிக்க திருடவும் துனிந்த மாமனார் நிச்சயம் நம்மூரில் இருந்திருப்பார். உங்களின் வேண்டுகோளுக்காக நான் ஒரு காதல்தோல்வி கவிதை எழுதியுள்ளேன். படித்துப்பார்த்து குறைகளைக் கூறவும்.

ஷீ-நிசி
08-06-2007, 03:46 AM
நன்பர் நிசி அவர்களுக்கு கவிதை மிகவும் அருமையாக இருந்தது. இதை கவிதை என்பதைவிட ஒரு சிறுகதை என்றே சொல்லலாம். வட்டார வழக்கு மொழியோடு சொல்லியது மிகவும் இயல்பாகவும் அழகாகவும் உள்ளது. வருமையின் கொடுமையில் மருமகனை உபசரிக்க திருடவும் துனிந்த மாமனார் நிச்சயம் நம்மூரில் இருந்திருப்பார். உங்களின் வேண்டுகோளுக்காக நான் ஒரு காதல்தோல்வி கவிதை எழுதியுள்ளேன். படித்துப்பார்த்து குறைகளைக் கூறவும்.

நன்றி ராக்கி...நான் உங்களிடம் வேண்டுகோள் ஏதும் வைக்கவில்லையே காதல் கவிதை எழுத சொல்லி.. பரவாயில்லை... படித்து பார்க்கிறேன்...

ஓவியா
08-06-2007, 12:58 PM
ஷீ-நிஷி, கவிதை பிரமாதம்.

வார்த்தை உபயோகம் மிகவும் அற்புதம்.

கிராமிய வாசம் ரொம்பவே தூக்கள், ஒரு ஜான் வயிறுக்கு மனதில் எத்தனை ரணம்.

ரசித்துப்படித்தேன், வர வர உங்கள் கவிதை உயர உயர போய்கொண்டே இருகின்றன. பாராட்டுக்கள்.


அனைத்து பின்னூட்டங்களும் அருமை.

பென்சின் கேள்வி ஆழயோசிக்க வைகின்றது.

அக்னி
08-06-2007, 01:10 PM
ஐயா, மகள் வாயும் வயிருமாய் வீட்டில் இருந்தால் அவளுக்கு நாட்டு கோழி ஆக்கி போது கிராமத்தில் உள்ள மாத்த முடியாத பழக்கம்
மனையாளை பார்க்க கனவன் வருவதும் இயல்பல்லவா,
கடனை வாங்கியாவது மருமகனுக்கு கோழி ஆக்கி போடுவது ஒரு பழக்கம்
அதே மகளை பார்க்க மருமகன் வீட்டுக்கு போனால் சம்மந்தி வீட்டார்
கோழி மட்டுமல்ல சாராயமும் வாங்கி தந்து உபசரிப்பார் கிராமங்களிலே.

ஷிநிசி விளக்குவது ஏழ்மையிலும் விருந்தோம்பல் மகிமையை பற்றி தானே
நீங்கள் பாவம் மருமகனை ஏசுகிறீர்களே. அப்படி அவர் யாரையும் திட்ட வில்லையே
அந்த நடைமுறை தெரியாததால் வந்த வினை வாத்தியாரே...
தெரிவித்ததற்கு நன்றி...
எனது பார்வையில் பட்டதைக் குறிப்பிட்டேன். உங்களது பார்வையின் வித்தியாச நோக்கு எனக்கு இன்னும் வளர வேண்டும்...

ஷீ-நிசி
09-06-2007, 04:07 PM
நன்றி ஓவியா

இளசு
11-06-2007, 11:44 PM
வாழ்த்துகள் ஷீ-நிசி..

விவசாயி ஒருவன் சந்தைக்கு விளைச்சல் விற்கப்போய்
ஒரு 'கிளாஸ்' டீ குடித்துவிட்டு வரும் நிதர்சன அவலத்தை
அழகான வழக்குமொழியில் வைரமுத்து எழுதிய கவிதை உண்டு..

அதைப் படித்தபோது வந்த இதமான சோகம் இந்தக்கவிதை வாசித்தபோதும் வந்து அப்பிக்கொண்டது..

நண்பர்கள் - குறிப்பாய் இனிய பென்ஸின் சூட்டுக்கோல் விமர்சனங்களால்
கவிதைப்பானை பொங்கல் பானையாய் ஜொலிக்கிறது..


--------------------------------------

நிகழ்வுகளின் ஈரத்தால்
பச்சை மண்ணாய்
குழைந்தவன் வாழ்க்கையை
நிர்ப்பந்த சக்கரம்
தன்னிஷ்டத்துக்கு வளைத்து வனைய..

வாய்த்துவிட்ட சிறுகோணல்
வடிவம் பற்றி வருத்தம் சொல்ல
வாய் வரவில்லை!

ஷீ-நிசி
12-06-2007, 03:35 AM
நிகழ்வுகளின் ஈரத்தால்
பச்சை மண்ணாய்
குழைந்தவன் வாழ்க்கையை
நிர்ப்பந்த சக்கரம்
தன்னிஷ்டத்துக்கு வளைத்து வனைய..

வாய்த்துவிட்ட சிறுகோணல்
வடிவம் பற்றி வருத்தம் சொல்ல
வாய் வரவில்லை!


இந்த விமர்சனம் பலவாறு சிந்திக்க வைத்தது.. நன்றி இளசு அவர்களே!

sreeram
12-06-2007, 03:36 AM
குனிஞ்சி, நிமிர்ந்து
இடுப்பு நோவ -நான்
வனஞ்சி வார்த்த,
அடுப்பும், பானைங்களும்,

நேத்தடிச்ச பேய் புயலில்
காத்தடிச்சு உடைஞ்சி போச்சே!
-------------- யதார்த்தத்தை அழகாய் சித்தரிக்கின்றது....

சேதாரத்துல சிக்காம,
செவத்தோரத்துல இருந்த,
மிச்சமீதி பானைங்கள,
பச்ச தண்ணி பருகாம,

சந்தைக்கு தூக்கிட்டு ஓடினேன்!
வந்த வெலைக்கு தள்ளிடலாம்னு!
சந்தையில வியாபாரமில்ல..
எங்கையில ஒரூவாயுமில்ல....

----------- ஏழ்மையின் சோகம்....

இன்னிக்கோ, நாளக்கோன்னு,
மவராசனை வயித்துல சொமந்துகிட்டு -என்
மவராசி வந்திருக்கா தாய்வூடு!

மவராசிய பார்க்க -எம்
மருமவனும் வந்திருக்கான்!

-------- பட்ட காலிலே படும் என்பது மெய்யோ....?

வரச்சொல்லோ,
சந்தையில நாட்டுகோழியும்,
கந்தசாமி கடையில
ரெண்டு கிலோ அரிசியும்,

வாங்கிட்டு வாங்கன்னு,
பொஞ்சாதி சொன்னது,
நெஞ்சுக்குள்ள நின்னது!

கண்ணுல பொசுக்குன்னு
தண்ணி எட்டி பார்க்குது!
பத்துரூவா கடன்வாங்க கூட
பக்கத்தூருதான் போவனும்!

என் குல சாமி!
எனக்கொரு வழி காமி!

கொக் கொக் கொக்
கொக்கரக்கோ...
கொக் கொக் கொக்
கொக்கரக்கோ...

நடுரோட்டுல ஓடிட்டிருந்துச்சி
நாட்டு கோழி ஒன்னு!
கத்தி ஓடுற கோழியத்தவிர,
சுத்தி பார்த்தா யாருமில்ல!

------ வறுமை ஒரு மனிதனின் குணாதிசயங்களை உரசிப்பார்க்கின்றதே...!

மனசில பாரம் இறங்கிபோச்சி
பயம் மனசோரம் ஏறிப்போச்சி

வழிஞ்ச வேர்வைய,
கிழிஞ்ச துண்டால தொடச்சிவுட்டு,
கந்தசாமி கடைக்கு நடந்தேன்!

அரிசி மட்டும் கடன்
சொல்லிக்கலாம்னு.....

------- காலம் ஒரு நாள் மாறும் என்பதைவிட காரணம் என்ன என்று ஆராய்வதே மேல்...

ஷீ-நிசி
12-06-2007, 04:22 AM
நன்றி ஸ்ரீராம்!

ஆதவா
13-06-2007, 07:36 AM
பாராட்டுக்கள் ஷீ-நிசி.

குயவனும் படிக்கும்படியான வழக்கு மொழி. ஒரு வீட்டைக் கட்டுவதுபோல பார்த்து பார்த்து செதுக்கிய கவிதை போல..

பிளாஸ்டிக் வருகையில் சுழழும் சக்கரம் ஓய்வெடுக்கிறது. இரும்பு வர்ண உடலும் கறுத்துப் போய் இத்துப் போகிறது.

வீட்டுப் பிரச்சனைகள் ஏகம்
அதிலே உறவினர்களுக்குத் தெரியாமல் பொருளாதாரத்தை மறைக்க முயலும் கட்டத்தை அனுபவித்திருக்கிறேன்.
கோழி பிடிக்கிறேன் என்று போய் கோழி கிடைக்காமல் ஆடு பிடித்துவந்த அனுபவமும் உடன் இருக்கு... இதிலே கொடுமை என்னவென்றால் ஆட்டை விற்று கோழியும் குடியும் வாங்கி கோழி எனக்கு குடி அவர்களுக்கு என்று பிரித்து மகிழ்ந்த கட்டத்தை நினனத்துப் பார்த்தால் பரவசம்.

இன்னும் சில கிராமத்தில் பானை வாங்கும் பழக்கம் இருக்கிறது. சமீபத்தில் இரயில்வே அமைச்சர் பானையில்தான் புழங்கவேண்டும் என்ற சட்டம் கொண்டுவந்ததும் அதனால் ஒரு பயனுமில்லாமல் போன குயவர்கள் நிலையும் கண்களுக்கு வருகிறது,

நீட்டி முறித்து நெஞ்சை மென்மையாக்க நினைத்து கல்லாக்கி
திரியும் கூட்டத்தினருக்கு
பானை வனைபவன் மனதைப் புரிந்துகொள்ள இயலாது.

இறுதி வரை கடன்களால் ஓடுகிறது கவிதைநாயகன் வாழ்க்கை. இது நிசத்தின் நிழல்தான்.. நிசமும் அப்படித்தானே..

வாழ்த்துக்கள். ஒரு அருமையான படைப்புக்கு...

ஓவியன்
13-06-2007, 07:54 AM
அருமை ஷீ!

உங்களது சித்தாளைத் தொடர்ந்து இந்த மட்பாண்ட தொழிலாளியின் மண் வாசம் மிக்க கவிதை....

அருமையாக இருக்கிறது, அந்த தொழிழாளியின் நிலையிலிருந்து அவரது பேச்சு வழக்கிலேயே கவிதையைத் தொடரும் பாங்கு சிறப்பாக உள்ளது.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
13-06-2007, 08:37 AM
நன்றி ஆதவா, நன்றி ஓவியன்