PDA

View Full Version : உள்காயம்பாரதி
17-05-2003, 12:00 PM
இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 4 வருடங்கள் ஆகி இருக்கும். நீண்ட வருடங்களுக்குப் பின் தொழிலாளர்கல்வியின் ஒரு பகுதியாக ஆலைகளை சுற்றிப்பார்ப்பதற்கான சுற்றுலாவில் நண்பர்களுடன் கலந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. செல்லும் வழியில் கோவில்பட்டியில் காலை உணவுக்குப் பின் உணவகத்தின் வெளியில் நின்று பேசிக்கொண்டு இருந்தோம்.

அப்போது சுமார் 45-50 வயது இருக்கக்கூடிய ஒரு மனிதர் எங்களிடம் வந்து " அய்யா.... சாப்பிட்டு ரெண்டு நாளாச்சுங்க" என்றார்.அவர் முகத்தில் சில நாட்களாக சவரம் செய்யப்படாததால் வெள்ளைமுடிகளும், உதவி கேட்கிறோமே என்கிற வேதனை உணர்ச்சியுடன் சோர்வும் தெரிந்தது. சில நண்பர்கள் கேலி செய்ய முற்பட, நானும் சில நண்பர்களும் " அப்போ இந்த ஹோட்டலிலேயே சாப்பிடுறீங்களா?" என்று வினவினோம். அவர் முகத்தில் கொஞ்சம் தயக்கம் தெரிந்தது. அவர் " அதெல்லாம் வேணாம்ங்க... அருப்புக்கோட்டை போற அளவுக்கு பணம் வேணும்னாக் குடுங்க" என்றார். " பெரியவரே... சாப்பிடுறீங்களா? இல்லை பஸ்ஸக்குப் போக பணம் வேணுமா?" என்றேன். "பஸ்ஸக்கு பணம் கொடுத்தீங்கன்னா புண்ணியமாப் போகும் தம்பி" என்றார் அவர்.

என் மனதில் லேசாக சந்தேகப் பொறி - 'அந்த மனிதர் ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பாரோ?' (இதைப்போல மதுரைப் பேருந்து நிலையத்தில் உதவி கேட்டு ஏமாற்றப் பார்த்த ஒரு வயதான பெண்மணியின் கதை நினைவுக்கு வந்தது - ஒரு ஊருக்கு போக வேண்டும் என்று எல்லோரிடமும் பணம் கேட்டுக் கொண்டிருந்தார் அவர். நான் அவரிடம் " அம்மா... நீங்க எந்த ஊருக்குப் போகணுமோ, அந்த பஸ்ல ஏத்தி விடுறேன். டிக்கெட்டும் எடுத்துத் தர்றேன்.வாங்க" என்று சொன்னதும் அவர் " உங்களுக்கு ஏந்தம்பி...சிரமம்.. உங்களால ஆனத குடுங்க" என்றார். நான் விடாப்பிடியாக அவரை அழைத்துச் செல்ல... சில நிமிடங்களுக்கு பின் என் பின்னே நடந்து வந்த அவரைக் காணவில்லை.!)

அதனால் அவரிடம் "உங்களுக்கு அருப்புக்கோட்டை பஸ்ஸிலே நாங்களே ஏத்தி விடுறோம்" என்றோம். அவர் முகத்தில் கொஞ்சம் குழப்பம். என்னை நம்பவில்லையா என்பதைப் போல தர்மசங்கடத்துடன் ஒரு பார்வை பார்த்தார். மெளனமாக சம்மதித்தார். வரும்போது அவருடன் பேச்சுக் கொடுத்ததில் அவர் சங்கரன்கோவிலில் இருந்து நடந்து வருவதாக சொன்னார்!!. அவர் அதிகம் பேச விரும்பவில்லை என்பதும் தெரிந்தது.

பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அருப்புக்கோட்டை பேருந்தில் அவரை அமர வைத்து நடத்துனரிடம் பயணச்சீட்டையும் வாங்கி அவரிடம் கொடுத்தோம். அவர் முகத்தில் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருப்பது போல எனக்குத் தோன்றியது. அப்போதுதான் அவர் இன்னும் சாப்பிடவில்லை என்பது எனக்கு உறைத்தது. பேருந்து கிளம்ப சற்று நேரம் இருந்ததால் அவரிடம் "டிபன் ஏதாச்சும் சாப்பிடுறீங்களாய்யா?" என்று வினவினோம். "வேண்டாம் தம்பி" - என்றார். மறுபடி வற்புறுத்திய பின் "நம்பிக்கையோட (!?) வந்து நீங்க டிக்கெட் வாங்கிக் குடுத்ததே எனக்கு போதுந் தம்பி" என்றார். குளிர்பானம், தேநீர் போன்ற எதையும் சாப்பிட மறுத்த அவர் ஒரே ஒரு டம்ளர் நீர் மட்டுமே அருந்தினார். சில நிமிடங்களுக்குப் பின் கரிப் புகையைக் கக்கிக் கொண்டு பேருந்தும் கிளம்பி விட்டது.

உதவி செய்தோம் என்கிற உணர்வை விட ஒரு மனிதனின் வார்த்தையை நம்பாமல் அவரை சோதனை செய்தோமே என்கிற வெட்கமும், சாப்பிடாமல் இருந்த ஒரு மனிதனுக்கு ஒரு வேளை உணவை வழங்க முடியாமல் போனதே என்கிற வேதனையும்தான் அதிகம் எனக்கு. இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் என் மனதில் ஆழப்பதிந்து விட்ட இந்த உள்காயம் ஆறுமா என்று தெரியவில்லை.

poo
17-05-2003, 12:35 PM
நீங்கள் செய்ததில் தவறிருப்பதாய் தோன்றவில்லை மனிதரே... ஆனால் உண்மை தெரிந்ததும் அந்த கணமே அந்த பெரியவரிடம் மன்னிப்பு கேட்டிருந்திக்கலாம்.. நடந்ததையெண்ணி வருந்தாமல் ஒருவருக்கு உதவினோம் என்ற திருப்தியோடு இருக்க முயலுங்கள்!!!

aren
17-05-2003, 12:45 PM
நீங்கள் இதற்கு வருத்தப்படத் தேவையில்லை. இப்படி உண்மையாக பேசுபவர்கள் வெகு சிலரே. ஆகையால் நீங்கள் செய்தது சரிதான். அதற்கு அவரும் வருத்தப்பட மாட்டார், அவர் உலகம் தெரிந்தவராக இருந்தால்.

நீங்கள் மீண்டும் கேட்டும் அவர் உணவு வேண்டாம் என்று சொல்லிவிட்டாரே. எதற்கு இன்னும் கவலை.

உங்கள் சேவைக்கு என் பாராட்டுக்கள்.

rambal
17-05-2003, 03:25 PM
சில சம்பவங்கள் மனிதாபிமானத்தை சோதிப்பதாக
அமைந்துவிடுவதால்,
உண்மையாக போய் சேர வேண்டியவரை நாம் சந்தேகம் கொள்வது இயற்கை..
இதற்காக கலங்கக் கூடாது.. அதுதான் அவருக்கு உங்கள் உதவி சரியாய் போய் சேர்ந்துவிட்டது அல்லவா..

Nanban
17-05-2003, 06:35 PM
முகவரியைக் கொடுங்கள் கண்டிப்பாய் திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று கூறி பணம் கேட்கும் நபர்கள் (எத்தர்கள் ) நிறைய உண்டு. ஆனாலும், நீங்கள் உதவி செய்தவர் உண்மையானவர் என்பதில் மகிழ்ச்சி. மனித நேயம் கொண்ட செயலுக்கு உங்களிடம் உதவி பெற்ற அந்த மனிதர் நிச்சயம் உங்களை மனதார வாழ்த்தியிருப்பார்.....

நாங்களும் உங்களை வாழ்த்துகிறோம் - உங்கள் மனிதாபிமானமிக்க நற்செயலுக்கு......

இளசு
17-05-2003, 11:16 PM
என் அன்புத்தம்பி பாரதி!

உன் இதயம் மிகப்பெரியது என்று
முன்னரே கண்டவன் இந்த அண்ணன்...

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பதை
என்றோ சொன்னவன் கவிஞன்

Emperor
18-05-2003, 02:53 PM
பாரதி அவர்களே இது மாதிரி சம்பவம் எங்கும் எப்போதும் நடக்கும், ஏன் எனக்கும் இது போல ஆனதுண்டு, நீங்கள் செய்த உதவியே போதுமானது, உங்களை அவர் மனம் குளிர வாழ்த்தியிருப்பார் கவலைவேண்டாம்.

அதேயே எண்ணி கொண்டிருந்தால் அது உள்காயம் தான், காலம் தான் எல்லா உள்காயங்களுக்கும் ஒரு அரிய மருந்து, கடந்தகாலம் அது இறந்தகாலம், அப்போது நடந்த சம்பவங்களும் இறந்து போயிற்று என்று எண்ணி வெற்றி நடை போடுங்கள். வாழ்த்துக்கள்

karikaalan
18-05-2003, 03:05 PM
பாரதிஜி!

நண்பர்கள் அனைவரும் கூறியதுபோல் தாங்கள் செய்ததுதான் சரி. இதில் வருத்தம் வேண்டாம்.

====கரிகாலன்

அறிஞர்
19-05-2003, 09:48 AM
முகவரியைக் கொடுங்கள் கண்டிப்பாய் திருப்பி அனுப்பி விடுகிறேன் என்று கூறி பணம் கேட்கும் நபர்கள் (எத்தர்கள் ) நிறைய உண்டு. ......

நண்பா.. நீர் சொல்வது.. முற்றிலும் உண்மை.. இரக்க குணம் கொண்ட எனது அப்பாவை.. சிலர் இவ்வாறு ஏமாற்றியுள்ளனர்.....

பாரதி வாழ்த்துக்கள்.......

karikaalan
19-05-2003, 12:57 PM
முகவரியை நிச்சயமாகக் கொடுக்கக் கூடாது; தொடர்ந்து அங்கேயும் நாமில்லா சமயம் பார்த்து ரகளை செய்துவிடுவார்கள். கவனம் தேவை.

===கரிகாலன்

பாரதி
20-05-2003, 05:56 PM
அருமருந்து போல ஆறுதல் கூறிய அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றி.

anushajasmin
21-05-2003, 01:09 AM
சின்னதொரு அனுபவத்தை கதை வடிவில் தந்தமைக்கு பாராட்டுக்கள்

Dinesh
26-05-2003, 04:42 PM
சிலரின் தவறான நடவடிக்கைகளால்
உண்மையாக உதவி பெறவேண்டிய பரிதாபத்திற்குள்ளோரும்
உதவி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்..
இதில் நீங்கள் வருத்தப்படுவதற்கு ஏதுமில்லை நண்பரே!

தினேஷ்.

முத்து
26-05-2003, 08:22 PM
பாரதி .. உதவியதற்காக உண்மையில் சந்தோசப்படவேண்டும்.. நீங்கள் இதற்காக வருத்தப்படத்தேவையில்லை.. உங்களின் சந்தேகம் நியாயமானதே.. நானே எத்தர் சிலரிடம் பணத்தைக் கொடுத்திருக்கிறேன்...அதற்காக நான் எப்போதும் வருத்தப்பட்டதில்லை...என்ன செய்வது.. உதவி யாருக்குத் தேவை .... யார் ஏமாற்றுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது சாத்தியமானதே....பலரை நான் அடையாளம் கண்டு ஒதுங்கியிருக்கிறேன் .. ஆனால் இன்னும் சில நேரங்களில் கண்டறிவது சிரமம், குறிப்பாக நாம் அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருக்கும்போது.....

சகுனி
17-07-2003, 07:59 AM
இதே போன்ற சம்பவம் என் வாழ்விலும் ஒருமுறை நடந்தது. திருநெல்வேலில்யில் பேருந்துநிலையத்தில் ஒரு முறை ஒரு பார்க்க நாகரிகமாயிருந்த இளைஞன் என்னிடம் வந்து தான் தூத்துக்குடியிலிருந்து வந்திருப்பதாகவும் தன் பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்க்ப்பட்டதாகவும் கூறி பயணம் செய்ய டிக்கெட் எடுக்க பணம் வேண்டுமென்று கேட்க நான் அவனை அழைத்து கண்டக்டரிடம் செல்ல அந்த கண்டக்டர் டிக்கெட் கொடுத்து நான் payபண்ணினேன். பஸ் கிளம்பியது ஆனால் அவன் பஸ்ஸ்டாண்டின் திருப்பத்தில் இறங்கி மீண்டும் திரும்பிவந்து வேறொரு ஆளிடம் மீண்டும் பணம் கேட்டான் நான் அவனைப்பிடித்து அடிக்காத குறைதான்.
ஆகவே நண்பரே நீங்கள் செய்தது முற்றிலும் சரியே!

puppy
07-01-2004, 09:42 PM
கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய் ......அப்படிதானே செய்து இருக்கீங்க பாரதி....இதில் காயம் எங்கே.......

ஓவியன்
22-11-2007, 03:48 AM
அன்பான பாரதி அண்ணா!

போலிகள் நிறைந்து கிடக்கும் உலகிலே நிஜத்தைக் கூட சந்தேகிக்கும் அளவிற்கு போலிகள் நிறைந்து விட்டது கொடுமை.....

அதன் நிமித்தம் ஏற்பட்டதே உங்கள் உள்காயம், என்றோ நடந்ததை ஞாபகமூட்டி நான் செய்தது தப்பென வருந்தி இருக்கின்றீர்களே அப்போது அந்த சிறு தவறும் சீர்செய்யப்பட்டு விட்டது. உங்களைப் போன்ற சீரிய குணமிக்கவர்களோடு ஒன்றாக மன்றிலே பயணிப்பதிலே மிக்க மகிழ்சி...!! :)

பூமகள்
22-11-2007, 07:26 AM
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்..
ஆனால் ஒரு அப்பாவி கூட தண்டிக்கப்படக்கூடாது என்று இந்திய காவல்த்துறை இயங்குவதாக பல படங்களில் வசனம் வரும்.

அது போல், ஆயிரம் போலி மனிதர்களுக்கு உதவியிருக்கலாம்.
ஆனால், ஒரு உண்மையான மனிதருக்கு உதவு செய்யாமல் போகக்கூடாது.
அந்த வகையில் இந்த நபருக்கு, உதவி போய் சேர்ந்தது ஆறுதலும் மன நிம்மதியும் தருகிறது.

இன்றைய காலத்தில் உண்மையைக் கூட சோதித்துத் தான் பார்க்கவேண்டியுள்ளது யாவரும் அறிந்ததே..!
உண்மையை உண்மையென்று சொல்லி நிரூபித்த அந்த மனிதருக்கு வருத்தம் இருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றுகிறது.

அன்போடு வந்து பேருந்து ஏற்றிய தங்களிடம் உணவும் கேட்டு வருத்த வேண்டாமென்றும் அப்பெரியவர் நினைத்திருக்கலாமே??

அவரின் சோக முகத்துக்கு காரணம், பசியும் சொந்த வாழ்வின் பிரச்சனைகளாகக் கூட இருந்திருக்க கூடுமே..!!

சரியான நபருக்கு சரியான நேரத்தில் உதவி போய் சேர்ந்தது கண்டு மன நிம்மதி கொள்ளுங்கள் பாரதி அண்ணா.

அழகான எழுத்து நடை..!
பாராட்டுகள்.

நேசம்
22-11-2007, 07:38 AM
உதவி செய்வதில் மட்டுமில்லமால் அது சரியான நபருக்கு போய் சேருகிறாதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.நிங்கள் மீண்டும் கேட்டு அவர் உணவை மறுத்தற்கு காரணம் தெரியவில்லை.அதனால் கவலைபடாமல் பெரியவருக்கு செய்த உதவியை நினைத்து திருப்தி அடைந்து கொள்ளுங்கள்

அக்னி
23-11-2007, 12:37 PM
பாத்திரம் அறிந்து பிச்சை இடுதல் வேண்டும் என்பார்கள்.
அந்த வகையில், சரியானதே...
எத்தர்களும், ஏமாற்றுக்காரர்களும் நிறைந்த உலகில்,
உண்மையானவர்கள் சோதனைக்குள்ளாக்கப்படுவது தவிர்க்க முடியாததே.

பாரதி
23-11-2007, 03:37 PM
ஆறிய வடுவை ஆதரவாய் தடவும் உங்களின் சொற்களுக்கு நன்றி ஓவியன், பூமகள், நேசம், அக்னி.
(மூன்று வருடங்களுக்கு முந்தைய பதிவை ஒருங்குறியாக்கி மேலெழுப்பியமைக்கும் நன்றி ஓவியன்.)