PDA

View Full Version : நினைவுகளை தூக்கிலிடுங்கள்.



சிவா.ஜி
02-06-2007, 02:39 PM
நினைவுகளை தூக்கிலிடமுடியுமா?
முடியுமெனில் நாள் குறித்து தாருங்கள்
இம்சை தரும் அவள் நினைவுகளுக்கு
இ.பி.கோ. 302-ஐ
நான் விதித்து தருகிறேன்!

கனவுகளே கண்திறந்தால்
கலைந்துவிடும்
இவள் நினவுகள் மட்டும்
இதயத்திலிருந்து
இறங்க மறுக்கிறது!
அம்மாவின் முந்தானை பிடித்து
மூக்கொழுக ஓடிவரும்
குழந்தையைப்போல
இந்த நினைவுகளும்
கண்ணீர் ஒழுக கூடவே வருகிறது!

என் நிழல் கூட
நிழலில் மறைந்துவிடுகிறது
நினைவுகள் மறையவில்லை!
பழயன கழிதலும்
புதியன புகுதலும்
நினைவுகளுக்கு இல்லையா?

பழஞ்சோறும்
பழங்கள்ளும்
பழமொழியும் சுவையூட்டும்
பழம் நினைவுகள்
மட்டும் தீயூட்டும்
என்னை அவை
சிதையிலிடுமுன்
அவற்றைக்கொஞ்சம்
சிறையிலிடுங்கள்
முடிந்தால் உடனே
தூக்கிலிடுங்கள்!

அமரன்
02-06-2007, 08:53 PM
நிலைமாறும் உலகில்
நிலைத்து விட்ட
நினைவுகளில்
காதல் நினைவுகள்
கொல்லுகின்றனவோ!
அருமை சிவா.
அன்புடன்

சிவா.ஜி
03-06-2007, 01:52 PM
மிக்க நன்றி அமரன்.உங்கள் விமர்சனமே நல்ல கவிதை.

இதயம்
03-06-2007, 02:05 PM
உருவக உத்திகளை மிகவும் அருமையாக கையாண்டு இந்த கவிதையை மிக ரசனையாக எழுதியிருக்கிறீர்கள். உதாரணத்திற்கு "அம்மாவின் முந்தானை பிடித்து மூக்கொழுக ஓடிவரும் குழந்தையைப்போல". வேண்டாம் என்று சொன்னாலும் அடம்பிடித்து பின் வரும் குழந்தையுடன் பெண்ணின் நினைவுகளை ஒப்பிட்டது மிகவும் பொருத்தம். உங்கள் கவிதைகள் நாளுக்கு நாள் மெருகேறிவருவதை நான் உணர்கிறேன். பாராட்டுக்கள்..!!

சிவா.ஜி
03-06-2007, 02:10 PM
நன்றி இதயம்.எல்லாம் தமிழ் மன்றத்தின் தயவு விமர்சனங்களின் விளைவு.