PDA

View Full Version : மின்னலே.......!அமரன்
01-06-2007, 12:06 PM
பனிப்புலத்தில் ஒரு காலைவேளை. புலர்ந்தும் புலராத காலையில் குளிருக்கு இதமாக போர்வைக்குள் சுருண்டிருந்தேன். அலார அரக்கன் பலமாக அடித்தும் கட்டிலைவிட்டு எழாத எனக்கு அலுவலகத்தில் எனக்கே எனக்காக காத்திருக்கும் மேலதிகாரியின் முகம் நினைவில் வந்தது. துள்ளி எழுந்து தயாராகி ரயிலைப்பிடிக்க பாதாள ரயில்நிலையத்துக்கு விரைந்தேன்.

மணி எட்டானாலும் இருட்டு அப்பி இருந்தது. பனிகாலத்தில் பொதுவாக அப்படித்தான் என்றாலும் இன்று அதிகமாகவே இருட்டாக இருந்தது. திடீரென வெளிச்சம் பளிச்சிட்டது. ஆகா மின்னல் அடிக்கிறதே என நினைத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தான் தண்ணீர் மேகங்கள் கருக்கட்டி இருந்தன. ஓட்டமும் நடையுமாக ரயில் நிலையத்தை நோக்கிப் போனேன்.. மின்னலும் என்னை விரட்டிக்கொண்டே இருந்தது.

பாதாள ரயில் நிலையத்துக்குள் நுழைந்தேன். புறப்படுவதற்குத் தயாராக இருந்த ரயில் ஒன்றில் ஏறிக்கொண்டேன். ரயிலுக்குள் பார்வையைப் பரவவிட்ட எனக்கு மீண்டும் மின்னலடித்தது போன்ற உணர்வு. பாதாளத்தில் செல்லும் ரயிலில் எப்படி மின்னலடிக்க முடியும். இது மழை மின்னல் போல இல்லையே? என் வாழ்வில் இதே போன்ற ஒரு மின்னலை முதல் ஒருதடவையும் உணர்ந்திருக்கின்றேனே? எப்போது...? சிந்தித்தேன்.ஆம். இன்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதே மின்னல் என்னைத்தாக்கியது. கல்லூரிப்பருவத்தில் தாக்கியது. பாதாளரயில் முன்னோக்கிப்போக எனது நினைவு ரயில் என் வாழ்க்கைப்பாதையில் பின்னோக்கிப் போனது.

அம்மன் கோவில்த் திருவிழாக்காலம். ஊரெல்லாம் விழாக்கோலம். முழு நிலவு ஒளியைப்பாய்ச்ச மின்நிலவுகள் வெளிச்சம்பாய்ச்ச ஆத்தா வீதிஉலா வந்தா. வழக்கம் போல நம் நாட்டுமின்சாரம் வேலை நிறுத்தம் செய்ய நிலவு மட்டும் ஒளிதந்துகொண்டிருந்தது. சும்மா சொல்லக்கூடாது. நிலவில் கூட ஆத்தா ஜொளித்தா. அப்போது ஒரு மின்னல். பக்கத்தில் நின்ற நண்பனைக் கேட்டேன். தனக்கு அப்படி உணர்வில்லை என்று சொன்னான். அப்படியானால் எனக்கு மட்டுமா? ஆம்... எனக்கு மட்டுமே. அத்தாவுக்குப் பக்கத்தில் ஒரு மின்னல் பெண். அவளே எனக்கு மட்டும் பளிச்சிட்ட மின்னலுக்குக் காரணம்.

நிலவொளியில் அவள்கூட தேவைதயாகவே இருந்தாள். ஒரு தேவதை இன்னொரு தேவதையை வணங்குகின்றது என நினைத்துக்கொண்டேன். நிலவு போன்ற முகம். வில் போன்ற புருவங்கள். கவிதை சிந்தும் கண்கள். கூரான மூக்கு. ஆப்பிள் கன்னம். அப்போதடித்த குளிர் காற்றில் நெற்றியில் விழுந்த சுருள்முடியை அவள் லாவகமாக எடுத்துவிட்டபோது என் இதயத்தையும் சேர்த்து எடுத்துவிட்டாள். பிரம்மன் என் முன் வந்து அவளை விட அழகான ஒருத்தியைப் படைத்துத் தருகின்றேன்; அவளை விட்டு விடு என்று சொன்னால் மறுத்து விடுவேன். இவள் போன்ற ஒருத்தியையே அவன் படைப்படு முடியாத காரியமாக இருக்கும்போது அவளை விட அழகானவளை எப்படி.......?

அப்போதுதான் வானத்து நிலவும் என் பூமி நிலாவைக் கண்டிருக்கும் போல. அது இரு நிலவு தேவையில்லை என நினைத்து மறைந்துகொண்டது. இல்லை..இல்லை...அவள் அழகைப் பார்த்து வெட்கத்தில் மறைந்துகொண்டது. எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. தான் செய்த தவறை உணர்ந்து வானத்து நிலா வெளியே வந்தபோது என் மின்னல்நிலா மறைந்துபோனது. கண்களில் அவளைச் சுமந்துகொண்டு மறுநாள் கல்லூரிக்குப் போனேன்.

அங்கே அதே மின்னல்பெண். எனது வகுப்பறையில். ஆசிரியர் உதவியுடன் அவள் பெயர் நிஷா என்று தெரிந்தது. நிலவுக்கு நிஷா என்ற பெயர். பொருத்தமாக இல்லை? அன்று முதல் அவளை பார்ப்பதே என்வேலையாகிப் போய்விட்டது. அதனால் மற்றவர்களை என்னாம் பார்க்க முயாமல் போனது. அதை நான் உணர்ந்தது காலம் கடந்தபின்னரே!

அவளை நான் பார்த்ததும் அவள் என்னுள் புகுந்ததையும் என் நண்பனுக்குக் கூட சொல்லவில்லை. அவளை எனக்குள் சுமந்துகொண்டு காதலில் மிதந்தேன். அவள் என்னைக் காதலிக்கின்றாளா என அரிய ஆவல் கொண்டேன். அவளை அறிய முன்னர் நண்பனிடம் கேட்ட்கலாம் என நினைத்தேன். அவனிடம் சொல்ல நான் வாயெடுக்க அவன் முந்திக்கொண்டான்.

வாழ்த்துகள் சொன்னான் எனக்கு. காரணம் புரியவில்லை. அவனே சொன்னான். 'நிஷா உன்னைக் காதலிக்கிறாள்' என்று. ஆகாயத்தில் மிதப்பதுபோன்ற உணர்வு எனக்கு. ஆகாயம் என்ன ஆகாயம். வேறொரு உலகத்தில் நானும் அவளும் பறப்பதுபோன்ற உணர்வு. அந்த உணர்வுடன் இருந்திருக்கலாம். அப்போது பார்த்தா என் ஆறாவது அறிவு வேலை செய்யவேண்டும். 'உனக்கு எப்படித் தெரியும்?' என்று அவனைக் கேட்டேன். பார்வையைத் தாழ்த்திக்கொண்டு'நான் அவளைக் காதலித்தேன். காதலைத் தெரியப்படுத்தும்போது அவள் உன்னைக் காதலிப்பதாகச் சொன்னாள்' என்றான்.

ஆகாயத்தில் பறந்த நான் சட்டென்று கீழே வீழ்ந்த மாதிரி உணர்வு. வேறொரு உலகத்தில் இருந்தவன் மீண்டும் நரக பூமிக்கே வந்த்துவிட்டேன். தலையைத் தாழ்த்திய நண்பனின் கண்களில் கண்ணீர் அரும்புவதைப் புரிந்துகொண்டேன். காதலை மறந்தேன். நட்பை நினைத்தேன். நிஷாவிடம் போனேன்.

அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. நிலத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னேன். 'நீ....நீங்க என்னைக் காதலிப்பதாக நண்பன் சொன்னான். மன்னித்து விடுங்கள். நான் உங்களைக் காதலிக்கவில்லை' சொல்லி முடித்ததும் திரும்பி நடக்க முயன்ற என்னை தேன்மதுரக் குரல் நிறுத்தியது. சித்திரம் முதன்முதலாக என்னிடம் பேசுகின்றது. 'நான் கூட உங்களைக் காதலிக்கவில்லை' இதற்கு அவள் பேசாமலே விட்டிருக்கலாம். 'உங்கள் நண்பனின் காதலை மறுப்பதற்காகப் பொய்சொன்னேன். . உங்கள் நண்பனிடம் அவ்வாறு சொன்னதற்காக மன்னித்து விடுங்கள்' சொல்லி விட்டு அவள் சென்று விட்டாள்.அதன் பின்னர் அவளை நான் காணவில்லை.

அன்று அவளைப் பார்த்தபோது வெட்டிய அதே மின்னலே இப்போதும். ஆழமாக ரயிலைத் துலாவினேன். ஆம்....அவளேதான். அதே மின்னல் பெண்! அதே அழகு! அதே நிலவு முகம்! ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங். என்ன எனது புரியவில்லை. அவளும் என்னை அடையாளம் கண்டுகொண்டாள். என்னை தன்னருகே அழைப்பது போன்ற உணர்வு. அவளை நெருங்கினேன். எனது பெயரைச் சொல்லி பக்கத்திலிருந்தவனுக்கு என்னை அறிமுகப்படுத்தினாள். அவனைத் தனது கணவன் என்று எனக்கு அறிமுகப்படுத்தினாள்.

ஹல்லோ என்றவாறு கையை நீடினேன். கையைப்பிடித்துக் குலுக்கியவன் தனது பெயரைச் சொன்னான். ஏதோ ஒன்று சடுதியாக நின்றதுபோல இருந்தது. என் இதயமோ என நினைத்தேன். ரயில் என்று தெரிந்த பின்னரே நான் உயிருடன் இருப்பது தெரிந்தது. அவன் பெயரும் எனது பெயரும் ஒரே பெயர். நிஷாவின் முகத்தை ஏறிட்டுப்பார்த்தேன். என் காதலியாக கவிதை சிந்திய கண்களில் இப்போ நிரந்தரமாகிவிட்ட கண்ணீர் மேகங்கள் கருக்கட்டியிருந்தன. அவளும் என்னைக் காதலித்தாள் என்ற செய்தியை மௌனமொழியில் சொல்லின.

ராஜா
01-06-2007, 12:15 PM
வலி மிகுந்த அத்தியாயம்..!

இதை விடச் சிறப்பாக காதலின் ரணத்தையும் நட்பின் ஆழத்தையும் யாரும் சொல்லிவிட முடியாது.

படிப்பவர்கள் மனதில் ஆவலைத் தூண்டி கருங்கல்லை ஏற்றிவைக்கும் கிளைமாக்ஸ்..!

சூரியன்
01-06-2007, 12:39 PM
வலிக்கத்தான் செய்யும் நம் மனத்திக்கு பிடித்தவர்களை விட்டு பிரியும் போது,நம் மனதை தெற்றிக்கொள்ளத்தான் வேண்டும்..

சக்தி
01-06-2007, 04:15 PM
காதலைக் காட்டிலும் நட்பு உயர்ந்தது என்பதை உணர்த்து உணர்ச்சி மிக்க கதை. பாராட்டுக்கள் அமரன்

அமரன்
01-06-2007, 05:02 PM
நண்பர்களே மன்னித்து விடுங்கள். தவ்றுதலாக நிறைவு பெறாத கதையைப் பதிந்து விட்டேன். இப்போ கதையை நிறைவு செய்துவிட்டேன்.

அக்னி
01-06-2007, 06:08 PM
காட்சிகளின் விளிப்பு அருமையாக உள்ளது...


பாதாளரயில் முன்னோக்கிப்போக எனது நினைவு ரயில் என் வாழ்க்கைப்பாதையில் பின்னோக்கிப் போனது.

இவ்வரி, பின்னோக்கும், கதைக்கு அழகிய இணைப்பு...


அப்போது ஒரு மின்னல். பக்கத்தில் நின்ற நண்பனைக் கேட்டேன். தனக்கு அப்படி உணர்வில்லை என்று சொன்னான். அப்படியானால் எனக்கு மட்டுமா? ஆம்... எனக்கு மட்டுமே.
அழுத்தமான உண்மை ஒன்றை இலகுவாக சொல்லியிருக்கின்றீர்கள்...
ஒவ்வொருவனின் மனதும், வாழ்வு என்ற நிலை வரும்போது, தனித்தனியாகத்தான் துணை தேடும்.
யாரும் யாரையும் ரசிக்கலாம். ஆனால் மனதில், எனக்கு வாழ்வில் துணையாக வேண்டும் என்ற உணர்வு, அதிகமாக ஒருவரிடம்தான் ஏற்படும்.
படைப்பின் மகத்துவத்தில் ஒன்று...


அப்போதுதான் வானத்து நிலவும் என் பூமி நிலாவைக் கண்டிருக்கும் போல. அது இரு நிலவு தேவையில்லை என நினைத்து மறைந்துகொண்டது. இல்லை..இல்லை...அவள் அழகைப் பார்த்து வெட்கத்தில் மறைந்துகொண்டது. எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. தான் செய்த தவறை உணர்ந்து வானத்து நிலா வெளியே வந்தபோது என் மின்னல்நிலா மறைந்துபோனது. கண்களில் அவளைச் சுமந்துகொண்டு மறுநாள் கல்லூரிக்குப் போனேன்.

இருளில் கண்பார்வையிலிருந்து மறைந்துவிட்டாள் என்பதை,
அழகாக ரசனைப்படுத்திய வார்த்தைகளில், வெளிப்படுத்தியமை, தேர்ந்த எழுத்தாளனுக்குரிய, திறமை...

பார்வை பேசும் மொழிகளின் புரிதல், காலம் கடந்து வருகின்றமை..,
கதையில் திருப்பமான முடிவு...

அலட்டாத, அழகான சிறுகதை....

தந்த அமரனுக்குப் பாராட்டுக்கள்... மேலும் எதிர்பார்ப்புக்கள்...

அமரன்
01-06-2007, 07:48 PM
நன்றி தோழர்களே!

கலைவேந்தன்
05-06-2007, 02:02 AM
மிக நல்லதொருகதை நண்பரே!
காதலின் வலி காதலித்தவரே அறிவர்.
அந்தபெண் நிஷாவின் மனம் அறியாக் காதலன் பரிதாபத்துக்குரியவனா?
அந்தப் பேதை இரக்கத்துக்குரியவளா? சொல்ல முடியவில்லை.
எதையும் தீர அறிந்து செயல் படவேண்டும். அது காதலாயினும் சரி!
தங்கள் எழுத்துக்களில் ஒரு மென்மை இழைந்தோடுகிறது.
பாராட்டுக்கள் நண்பரே!

விகடன்
05-06-2007, 03:41 AM
படிக்கும்போது மனதில் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்கள் சுமை என வரிசையாக அடுக்கியே வைத்துவிட்டீர்கள்.

நண்பனின் காதலை மறுத்ததற்காக நீங்களும் காதலிப்பதில்லை என்று சொல்வது முட்டாள்த்தனம். ஏனெனிலுங்களுக்கும் உங்கள் நண்பனிற்கும் மட்டுமா மனமென்று ஒரு விடயமிருக்கிறது?
விருப்பு வெறுப்பென்று ஒன்று இருக்கிறது??

இருவரும் விரும்பினால்த்தான் அது காதல்.விட்டுக்கொடுத்து காதலை உருவாக்கிட முடியாது.-இது எனது கருத்து.

கலையில் ஓடோடிவந்து படித்தேன் அமரன். நான் காதலித்து தவற விட்டதைப் போல் உணர்வை ஏற்படுத்தி மனதை கனமாக்கி விட்டீர்கள்.

விகடன்
05-06-2007, 03:44 AM
காதலின் வலி காதலித்தவரே அறிவர்.

இதென்னப்பா கருத்து?
நான் அறிந்து கொள்ளவில்லையா?

அதற்காக நான் காதலித்ததென்றாகிவிடுமா?

காதல் வலியை எடுத்துக்கூறும் முறையில் மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியும்.

அமரன்
05-06-2007, 07:21 AM
நன்றி கலைவேந்தன். கதையை ஆழமாகப் படித்துப் பின்னூட்டம் இட்டிருக்கின்றீர்கள். தமிழ் மன்றத்தில் வந்த பின்னரே எழுததொடங்கியவன் நான். உங்களைப் போன்று சக நண்பர்களின் பின்னூட்டங்களே எனது ஓரளவு எழுத்துத் திறமையை வளர்த்துள்ளது. மீண்டும் நன்றி.

அமரன்
05-06-2007, 04:28 PM
படிக்கும்போது மனதில் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்கள் சுமை என வரிசையாக அடுக்கியே வைத்துவிட்டீர்கள்.

நண்பனின் காதலை மறுத்ததற்காக நீங்களும் காதலிப்பதில்லை என்று சொல்வது முட்டாள்த்தனம். ஏனெனிலுங்களுக்கும் உங்கள் நண்பனிற்கும் மட்டுமா மனமென்று ஒரு விடயமிருக்கிறது?
விருப்பு வெறுப்பென்று ஒன்று இருக்கிறது??

இருவரும் விரும்பினால்த்தான் அது காதல்.விட்டுக்கொடுத்து காதலை உருவாக்கிட முடியாது.-இது எனது கருத்து.

கலையில் ஓடோடிவந்து படித்தேன் அமரன். நான் காதலித்து தவற விட்டதைப் போல் உணர்வை ஏற்படுத்தி மனதை கனமாக்கி விட்டீர்கள்..
ஜாவா உங்கள் கருத்துக்கு நன்றி.
உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். ஆழமாக விளக்கம் சொன்னால் பல உண்மைகள வெளியே வரவேண்டி இருக்கும் என்பதால் தவிர்க்கின்றேன். கதை படித்ததும் உங்கள் மனதில் ஏற்பட்ட உணர்வு ர்ரிதியாக கதாசிரியனாக நான் ஜெயிக்து விட்டேன்.

மனோஜ்
04-07-2007, 05:50 PM
நல்லதொருகதை பிரிவு கதையில் மட்டும் அல்ல நண்பரே எங்களுக்குள்ளும் புகுந்தது

இனியவள்
04-07-2007, 05:57 PM
கதை அருமை அமர்.. தற்செயலாக பார்த்தேன் மனோஜ் அவர்களின் பின்னூட்டத்தை அடுத்து....

சொல்லாக் காதல் செல்லாக் காசாய்..

எனது வாழ்த்துக்கள் அமர்

இளசு
04-07-2007, 09:31 PM
பாராட்டுகள் அமரன்!

பருவ வயலில் காதல் மின்னல் விழுந்தால் வரும் வேதியயல் மாற்றங்களை
மென்சொற்களால் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..

கதை நிகழ்வுகள்.. முடிச்சுகள்... முடிவில் அதிர்வு
எனச் சிறுகதை இலக்கணத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறீர்கள்..

பெற்ற மகனு(ளு)க்கு காதலன்(லி) பெயரை வைத்த கதை கேட்டதுண்டு..
(நண்பர் நண்பனின் ஒரு கவிதை கூட நம் மன்றத்தில் உண்டு..)
இங்கே கணவனுக்கும் அதே பெயர்.... புதிய திருப்பமாய்..
மறைத்த விருப்பு சொல்லும் துருப்பாய்..

அருமை..அமரன்..அசத்திவிட்டீர்கள்!

Gobalan
07-07-2007, 04:42 PM
நம் பருவ கால காதல் எப்படி நம் மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கிறது என்பதை மிக நேர்த்தியாக இந்த சிறுகதையில் வர்ணித்துருக்றீர்கள், அமரன். கதையை படித்த பிறகு, ஒரு சோக கீரல் என் மனதில் பறிகொண்டது.

சிறிய வயதில் தன் காதலை சரியாக வெளிபடுத்த தெரியாமல் பலரும் திண*றியதுண்டு. அது தன் மனதையே சரியாக புரிந்து கொள்ள தெரியாத வயது. அந்த தருணத்தில் ஏற்பட்ட எந்த காதலும் வாழ்நாள் முழுவதும் மனதின் ஓர் ஓரத்தில் வருடிகொண்டுதான் இருக்கும்.

இந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையில் நடக்கும் பருவ கால வஸந்த்தத்தை மிக அழகாக கைஆண்டு இருக்கிறீர்கள் இந்த சிறுகதையில். கடைசியில் மனத்தின் பாரத்தினுடன் முடித்திருப்பது வெகு அறுமை. நன்றி.

அமரன்
07-07-2007, 05:50 PM
மனோஜ்,இனியவள், இளசுஅண்ணா,கோபாலன் அனைவருக்கும் நன்றிகள். உங்கள் பின்னூட்டத்தைப் பார்க்கும்போது அடுத்த கதை எழுதவேண்டும் போல் இருகின்றது.

MURALINITHISH
18-09-2008, 09:10 AM
பருவத்தில் வந்த நிலா அன்று மின்னலாக
ஆனால் இன்றோ இன்னலாக என்ன செய்வது