PDA

View Full Version : உதிராத நினைவுகள்!ஷீ-நிசி
01-06-2007, 07:54 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/UthirathaNinaivugal-New.jpgஉதிராத நினைவுகள்

எத்தனை ரம்மியமான
நினைவுகள் அவை...
நீ என்னை காதலிக்கிறேன்
என்று சொல்லிய தருணம்!

கல்லூரி மரநிழல்!

கீழே இறைந்து கிடந்தன
மரத்தின் வியர்வைகள்!
இலைகளும், பூக்களுமாய்!

சிமெண்ட் பெஞ்சில்
நான் மட்டும்
அமர்ந்திருந்தேன்!

என் நெஞ்சில்
நீ மட்டும்
அமர்ந்திருந்தாய்!

வெட்கம்
இருவருக்குமிடையில்,
வெட்கமில்லாமல்
இருந்ததால்,

காதல் அறிவிப்பு
வாசிக்கபடாமலே இருந்தது!

தூரத்தில் நடந்து
வந்துக்கொண்டிருந்தாய்!

நடை அசைவைக் கண்டே,
மூளை மனதிற்கு
செய்தி அனுப்பியது!

விழிகளிரண்டும்
வழி பார்த்தே குதூகலித்தன!

கைகள் கலையாத
கூந்தலை சரிசெய்தன!

இதழ்கள் உன் பெயரை
செல்லமாய் உச்சரித்தன!

அருகே வந்துவிட்டாய்,

தலை கவிழ்த்திருந்தேன்!
புத்தகம் பார்த்தபடி,

கையில் ஒற்றை பூவோடு
என் அருகில் வந்தாய்!

ரோஸி என்றாய்!

நிமிர்ந்தவளின் இதழுக்கு
நேராய் இருந்தன,
ரோஜாவின் இதழ்கள்!

ஐ லவ் யூ..... என்றாய்!

முத்தமழை கொடுத்து
கட்டிக்கொள்ள துடித்தன
என் கரங்கள்!

நெஞ்சம் புகுந்த உன்னோடு
கொஞ்சம் விளையாட
விரும்பினேன்!

முடியாது என்றேன்!

உன் இருவிழியில்
கருமேகங்கள் கூடி,
முதல் துளிகளுக்கு
தயாரானது!

மனம் வலித்தது!

முடியாது!
இப்படி சொன்னால்
முடியாது!

கட்டியணைத்து முத்தமிட்டு
சொல் உன் காதலை
என்றேன்!

அரை நொடியில்
ஆறங்குலம் வளர்ந்தேன்!
உன் கரங்களால்!

பூமிக்கும் பாதத்திற்கும்
இடைவெளி ஏற்படுத்தினாய்...

காற்றில் காதலை
சத்தமாய் அறிவித்தாய்
என்னை ஏந்தியபடி....

டெலிபோன் அலறியது!

மெல்ல விலக்கினேன்
என் பார்வையை,
சுவரில் மாட்டியிருந்த
அவன் புகைப்படத்திலிருந்து!

இரண்டு மெழுகுவர்த்திகளும்
கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது!

சிவா.ஜி
02-06-2007, 05:12 AM
காதலின் வலியில் வந்த கவிதை.நிகழ்வுகளை நினைத்துக்கண்ணீரில் கரையும் இதயம்.காதலன் காற்றில் கரைந்தபின்னும் கலையாத அவன் நினைவுகள். அவன் அருகாமையை அனுதினமும் உணரும் காதல் மனது.காதலின் சக்தியே மகத்தானதுதான்.இல்லாதவரையும் உடன் இருக்கவைக்கும்.மனதை பாரமாக்கிவிட்ட கவிதை. பாராட்டுக்கள் ஷீ.

ஆதவா
02-06-2007, 05:19 AM
ஷீ!! எழுத்து வடிவத்தைக் காணோமே? பின் எப்படி விமர்சிப்பது.. அதுசரி.. இது ஏற்கனவே எழுதிய கவிதையா?

இதயம்
02-06-2007, 05:29 AM
மிக அருமையான கவிதை. விமர்சிக்க எழுத்து வடிவம் தேவையில்லை. சொந்தக்கருத்து வடிவம் போதுமானது. அது நிறையவே ஷீ-நிசியின் கவிதையில் இருக்கின்றன.

பாராட்டுக்கள்.

அமரன்
02-06-2007, 09:06 PM
ஷீ!! எழுத்து வடிவத்தைக் காணோமே? பின் எப்படி விமர்சிப்பது.. அதுசரி.. இது ஏற்கனவே எழுதிய கவிதையா?
எழுத்து வவிவம் இருக்கின்றது ஆதவா வாசிக்க முடியாத அளவுகளில். நிஷி கவிதையைத் தனியே பதிந்துவிடுங்களேன்.

ஷீ-நிசி
04-06-2007, 04:05 AM
காதலின் வலியில் வந்த கவிதை.நிகழ்வுகளை நினைத்துக்கண்ணீரில் கரையும் இதயம்.காதலன் காற்றில் கரைந்தபின்னும் கலையாத அவன் நினைவுகள். அவன் அருகாமையை அனுதினமும் உணரும் காதல் மனது.காதலின் சக்தியே மகத்தானதுதான்.இல்லாதவரையும் உடன் இருக்கவைக்கும்.மனதை பாரமாக்கிவிட்ட கவிதை. பாராட்டுக்கள் ஷீ.

நன்றி சிவா...மிக அழகாக தொகுத்திருக்கிறீர்கள் கவிதையை...

ஷீ-நிசி
04-06-2007, 04:07 AM
ஷீ!! எழுத்து வடிவத்தைக் காணோமே? பின் எப்படி விமர்சிப்பது.. அதுசரி.. இது ஏற்கனவே எழுதிய கவிதையா?

மன்னிக்கவும் ஆதவா... எழுத்து வடிவம் கொடுத்திருக்கிறேன்.. இது ஏற்கெனவே எழுதியதல்ல ஆதவா.. (அன்புடன் கவிதைப்போட்டிக்காக அனுப்பியது.. வெற்றி கிட்டவில்லை :( )

சீக்கிரம் விமர்சனம் போடுப்பா......

ஷீ-நிசி
04-06-2007, 04:09 AM
மிக அருமையான கவிதை. விமர்சிக்க எழுத்து வடிவம் தேவையில்லை. சொந்தக்கருத்து வடிவம் போதுமானது. அது நிறையவே ஷீ-நிசியின் கவிதையில் இருக்கின்றன.

பாராட்டுக்கள்.

நன்றி நண்பரே!

ஆதவா விமர்சனத்தின்போது மேற்கோளிட்டு காட்டுவதற்காக எழுத்து வடிவத்தைக் கேட்டிருந்தார்.. அவர் விமர்சன பாணி தாங்கள் அறிந்திருப்பீர்களே...

ஷீ-நிசி
04-06-2007, 04:11 AM
எழுத்து வவிவம் இருக்கின்றது ஆதவா வாசிக்க முடியாத அளவுகளில். நிஷி கவிதையைத் தனியே பதிந்துவிடுங்களேன்.

நன்றி அமரன்... தனியே பதித்துவிட்டேன்....