PDA

View Full Version : உறுத்தியதொன்று...



ஆதவா
31-05-2007, 10:59 AM
துயில் களைந்த
ஆதவன்
தூக்கி எறிந்த
கதிரெல்லாம்
கயல் ஓடிய
கண்மணியைக்
கட்டியணைத்ததுவே

உலர்ந்த மேனியை
நீர்கொண்டு
புலர்த்திய பின்னாலே
முடக்கிய சோம்பலை
முடுக்கிய தென்றலாய்

ரோமங் கலைந்து
நிலைக் கண்ணாடியில்
மேவிச் சீவி
வறத்த வதனத்தில்
பொடியெடுத்துப்
புலர்த்திவிட்டு
நெஞ்சு நிமிர்க்க
நேரம் தவிர்க்க

கண்மணி
ஓடி வந்தாள்.

சில்லறைபெற்று
சிரிப்பொன்று நாட்டினாள்.

ஒருவனிடம் வாங்கியிருந்தால்
மகிழ்வொன்று பூத்திருப்பேன்.
என்று நெக்கிய நெஞ்சத்தை
புதைக் குழியில் புதைத்துவிட்டு
பொய்ச் சிரிப்பை
விடைக்கனுப்பினேன்.
சூத்திரங்கள் அறியாது
போகிறாள் என் மகள்..

அமரன்
31-05-2007, 11:02 AM
ஆதவா இது சரியில்லை. நீர் முதல் எழுதிய கவிதைகளே படித்து முடிக்கக்காணொம்... நீர் தொடர்ந்து எழுதிட்டே போறீர்..வேகத்தைக் குறையும்.....

இதயம்
31-05-2007, 11:06 AM
ஆமா ராஜா..!! நீங்க எழுதுனது மட்டுமில்ல..குழப்பிவிட்டதுலேர்ந்தும் இன்னும் யாரும் தெளியல. அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டீங்க..!! படிக்கிற எங்களுக்கே மலைப்பா இருக்கே, எழுதுற உங்களுக்கு..??

எழுதுறீங்களா..? இல்லே எதிலிருந்தாவது வெட்டி ஒட்டுறீங்களா..??

(ம்ஹும்.. வேற எப்படித்தான் என் பொறாமையை தீர்க்கிறது..?!!)

ஷீ-நிசி
31-05-2007, 11:08 AM
மன்றத்தில் மிகவும் கடினமான வேலை எனக்கு என்னவென்றால் ஆதவாவின் கவிதைக்கு விமர்சனம் அளிப்பதுதான்.... இங்கேயும் நான் காலி.... எனக்கு புரியவில்லை... ஆனால் வார்த்தைகள் எல்லாம் ஆச்சரியமூட்டுகின்றன....

கயல் ஓடிய, புலர்த்திய பின்னாலே, வறத்த வதனத்தில்..

நண்பர்களின் விளக்கத்திற்காய் காத்திருக்கிறேன்...

இதயம்
31-05-2007, 11:11 AM
ஐயா ஆதவா..? நீர் சிற்றிதழ்கள் குருகுலத்தில் கவி கற்றவரா..??

ஆதவா
31-05-2007, 11:50 AM
ஆதவா இது சரியில்லை. நீர் முதல் எழுதிய கவிதைகளே படித்து முடிக்கக்காணொம்... நீர் தொடர்ந்து எழுதிட்டே போறீர்..வேகத்தைக் குறையும்.....

நான் கடைசியாக கவிதை எழுதி நான்கு நாட்கள் ஆகிறதப்பா.... இதைவிட வேகம் குறைக்க வேண்டுமென்றால் நான் என்ன செய்ய??


ஆமா ராஜா..!! நீங்க எழுதுனது மட்டுமில்ல..குழப்பிவிட்டதுலேர்ந்தும் இன்னும் யாரும் தெளியல. அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டீங்க..!! படிக்கிற எங்களுக்கே மலைப்பா இருக்கே, எழுதுற உங்களுக்கு..??

எழுதுறீங்களா..? இல்லே எதிலிருந்தாவது வெட்டி ஒட்டுறீங்களா..??

(ம்ஹும்.. வேற எப்படித்தான் என் பொறாமையை தீர்க்கிறது..?!!)

குழப்பம் இருந்தால் மன்னிக்கவும்.. கவிதையை கொஞ்சம் நோண்டினீர்களென்றால் விஷயம் புரியும்... அதோடு உங்கள் பொறாமை எனக்கு வசதிதான், :D... நமக்கு வெட்டி ஒட்டும் பழக்கமே இல்லை..:)


மன்றத்தில் மிகவும் கடினமான வேலை எனக்கு என்னவென்றால் ஆதவாவின் கவிதைக்கு விமர்சனம் அளிப்பதுதான்.... இங்கேயும் நான் காலி.... எனக்கு புரியவில்லை... ஆனால் வார்த்தைகள் எல்லாம் ஆச்சரியமூட்டுகின்றன....

கயல் ஓடிய, புலர்த்திய பின்னாலே, வறத்த வதனத்தில்..

நண்பர்களின் விளக்கத்திற்காய் காத்திருக்கிறேன்...

நன்றி ஷீ! பொதுவாக இம்மாதிரி கவிதைகளுக்கு வார்த்தைகள் தேடுவேன்... அதனால் பிரயத்தனப்பட்டு எழுதவேண்டியிருந்தது. கொஞ்சம் நோண்டி படித்தால் நிச்சயம் கருத்து உண்டு...


ஐயா ஆதவா..? நீர் சிற்றிதழ்கள் குருகுலத்தில் கவி கற்றவரா..??

அதென்ன குருகுலம்??? எனக்குத் தெரியாதே?

சிவா.ஜி
02-06-2007, 05:26 AM
ஒருவனிடம் வாங்கியிருந்தால்
மகிழ்வொன்று பூத்திருப்பேன்.
என்று நெக்கிய நெஞ்சத்தை
புதைக் குழியில் புதைத்துவிட்டு
பொய்ச் சிரிப்பை
விடைக்கனுப்பினேன்.
சூத்திரங்கள் அறியாது
போகிறாள் என் மகள்..
மகிழ்வொன்று பூத்திருப்பேன். என முற்றுப்புள்ளி வைத்துவிட்டு 'என்று நெக்கிய' என தொடங்கியுள்ளீர்களே ஆதவா எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.விளக்குவீர்களா?

ஆதவா
02-06-2007, 05:44 AM
மகிழ்வொன்று பூத்திருப்பேன். என முற்றுப்புள்ளி வைத்துவிட்டு 'என்று நெக்கிய' என தொடங்கியுள்ளீர்களே ஆதவா எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.விளக்குவீர்களா?


நன்றி சிவாஜி. மிகச் சரியாக அந்த வரிகளைக் குறித்தமைக்கு மகிழ்ச்சி..

ஒருவனிடம் வாங்கியிருந்தால்
மகிழ்வொன்று பூத்திருப்பேன்.
என்று நெக்கிய நெஞ்சத்தை
புதைக் குழியில் புதைத்துவிட்டு
பொய்ச் சிரிப்பை
விடைக்கனுப்பினேன்.

ஒருவனிடம் காசு வாங்கியிருந்தால் மகிழ்ந்திருப்பேன் என்று நெக்கிய (எளிமையான தமிழ்பதம் தெரியவில்லை நெக்குதல்-அடித்தல் என்று நினைக்கிறேன். நெக்கு என்று சொல்வார்கள்.. ) நெஞ்சத்தை தூக்கி எறிந்துவிட்டு பொய்யான சிரிப்பைச் சிரிக்கிறாள் ஒரு அழகிய மகளைப் பெற்ற விபச்சாரி..

சிவா.ஜி
02-06-2007, 05:51 AM
நன்றி ஆதவா. உங்கள் விளக்கத்திற்குப்பிறகு மீண்டும் படித்தேன் அந்த 'ஒருவனிடம் வாங்கியிருந்தால்' என்ற வரியில்தான் இவள் விலமகள் என்றே தெரிகிறது. நல்ல வார்த்தை பிரயோகங்கள். பாராட்டுக்கள்.

ஆதவா
02-06-2007, 06:02 AM
நன்றி சிவா.. இம்மாதிரி கவிதைகளை சற்று மறைத்து எழுதுவது தற்போதைய பாணி.. எழுதாமல் விட்டிருந்தேன்.. ஆனால் கொஞ்சம் சமூகக் கருத்து உள்நுழையவே எழுதிவிட்டேன்... (எனது மற்ற கற்புற்ற காமக் கவிதைகள் அனைத்தும் சமூகக் கருத்தடங்கியவையே! )

நன்றி சிவாஜி.

இதயம்
02-06-2007, 06:17 AM
அன்பு ஆதவனுக்கு இந்த இதயத்தின் இனிய வேண்டுகோள். படைப்புக்கள் என்பது எத்தனை இதயங்களை சென்று கவர்கிறதை என்பதை வைத்து தான் படைப்பின் வெற்றி அமைகிறது. புரியாத வார்த்தைகள், வர்ணனைகள் படிப்பவர்களுக்கு மலைப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி "இதைப்புரிந்து கொள்ளும் அளவுக்கு நமக்கு ரசனை இல்லை" என்ற நினைப்பை ஏற்படுத்தலாம். அந்த எண்ணம் உங்கள் மீது ஒரு அச்சத்துடன் கூடிய மரியாதையை ஏற்படுத்தலாம். ஆனால், ஒரு படைப்பாளிக்கு கிடைக்கவேண்டிய மரியாதை, கௌரவம் அது அல்ல என்பது என் கருத்து. பயனாளர்களின் கைத்தட்டல், இதயபூர்வமான பாராட்டுக்கள் தான் ஒரு உண்மையான படைப்பாளியின் எதிர்ப்பார்ப்பும், சந்தோஷமும்.

படைப்புக்களில் எளிமை என்பது மிகச்சரியான விலாசமிட்ட கடிதம் போன்றது. அது எந்த ஒரு கஷ்டமுமில்லாமல் படைப்பாளியின் இதயத்தை அடையும். படைப்புக்களை படித்தபிறகு அதன் விளக்கம் கோருவது என்பது உங்கள் படைப்பில் உள்ள குற்றமே என்பது என் கருத்து. உங்கள் பொருள் வேண்டுமானால் மேல் தட்டு வர்க்கம் உபயோகிக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால், அதை நீங்கள் விற்பது பாமர மக்கள் புழங்கும் இடத்தில் என்பதை உணர்வீர்களா..? இதன் தாக்கத்தில் தான் "சிற்றிதழ் குருகுலமோ" என்று உங்களிடம் வினா எழுப்பினேன். உங்கள் படைப்புக்களில் உள்ள அர்த்தம், ஆழம் புரிந்தவன் என்கிற முறையில் உங்களின் படைப்புக்கள் வெகுஜன பயனாளர்களால் புறக்கணிக்கப்பட்டுவிடுமோ என்ற ஆதங்கத்தில் விளைந்த வேண்டுகோள் இது. தயவு செய்து தவறாக எண்ணமாட்டீர்கள் என நம்புகிறேன்.

குறிப்பு: நெக்கி என்பதன் பொருள் நெக்குதல். அதாவது நெக்குருகுதல். மனம் இளகுதல், நெகிழுதல் என்பது பொருளாகும்.

ஆதவா
02-06-2007, 06:34 AM
அன்பு இதயத்திற்கு...

நீங்கள் சொல்வது உண்மையே! ஆனால் நான் எழுதவதெல்லாம் மேல்தட்டு மக்களுக்கு என்ற முறையில் என் கவிதைகள் செல்வதென்றால் அது என் துரதிர்ஷ்டம். அதோடு எனக்குத் தெரிந்து நான் எளிமையாக கவிதை எழுதியது கிடையாது. சிறு வயதிலும் கூட.. நான் படித்த இலக்கிய புத்தகங்களில் கண்ட ஆழமான வார்த்தைகளை மட்டுமே உபயோகிக்கிறேன்.. இந்த வார்த்தைகளையேதான் உபயோகிக்கவேண்டும் என்று பிரயத்தனப்பட்டது கிடையாது.. அது என் தவறும் கூட. அதோடு புரிந்துகொள்ளும் அளவிற்கு எழுதும் பக்குவம் என்னிடம் இருப்பதாக உணர்கிறேன். எத்தனையோ பேர் புரியாமல் எழுதி கைதட்டல் வாங்கும்போதும்கூட....

அதே சமயம் பழைய வார்த்தைகளை கொண்டு வந்து சேர்க்கவேண்டும் என்ற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு.

நீங்கள் சொல்வதில் தவறென்ன இருக்கிறது? நிச்சயமாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் மன்றம் வந்தபிறகுதான் இன்னும் கொஞ்சம் எளிமையாக எழுதிப் பழகினேன் என்று கூட சொல்லலாம்.. கீழ்காணும் சுட்டியில் ஒரு கவிதை உண்டு.. நான் 15 வயதில் எழுதியது. கொஞ்சம் கடினமான வார்த்தையாக மன்றம் காணும் கவிதை அது.. அப்போழுது மட்டுமல்ல இப்போழ்தும் கூட அம்மாதிரி எழுதுவதில் எனக்கு விருப்பமில்லை.. ஆனால் எழுத்து வரவேண்டுமல்லவா? நான் கிணற்றுக்குள் சுற்றும் பாம்பு.. வெளியே வரத் துடிக்கும் பாம்பு..

கிங்கிரன் கொடுங்கீறு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7565)

சரி.. கவிதை யார் படிக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.. கீழ்தட்டு மக்கள் என்று நினைக்கிறீர்களா? ஒரு கவிஞன் கவிதை எழுதி புத்தகமாய் விற்கிறான் என்றால் அதை வாங்குவது மற்ற கவிஞனும் கவிதையைப் புரிந்து விரும்பி வாங்குபவனும்தானே தவிர, ஒரு சினிமா புத்தகத்தை வாங்குவது போல சாதாரண மக்கள் வாங்குவதில்லை.. அப்படி அவர்களுக்குப் புரியும்படி எளிமை படுத்தி ஆழமான அர்த்தம் கொண்ட வார்த்தைகளைத் தவிர்க்கவும் எனக்கு விருப்பமில்லை.

மற்றபடி மற்றவருக்குப் புரியக் கூடாது என்ற நினைப்பே எனக்குக் கிடையாது.. அப்படி இருந்தால் நான் கவிஞனுமல்ல..

( உண்மையிலேயே இந்த கவிதை கடினமாக இருக்கிறதா? அய்யோ!! இதைவிட எளிமையாக நான் எப்படிங்க இதயம் எழுதுவது.. எனக்குத் தெரியாதே! )

நான் சொன்ன மேல்தட்டு கீழ்தட்டு அறிவைப் பொருத்தது.

இதயம்
02-06-2007, 06:46 AM
உங்களின் 15 வயது கவிதை கண்டு பயந்து தான் போனேன். அத்தனை வயதில் ஒரு தேர்ந்த, முதிர்ந்த ஆழமான கருத்துக்களை உடைய கவிஞானம் எங்கிருந்து வந்தது என்னை வியக்கவைக்கும் விஷயம். ஆதவன் எத்தனை திறமையாளன் என்று சந்தோஷப்பட வைக்கும் அதே விஷயம் இந்த திறமையாளனை எத்தனை பேர் ஒப்புக்கொண்டிருப்பார்கள் என்ற விஷயம் என்னை வருந்த வைக்கிறது.

இலக்கியங்களில் படித்த வார்த்தைகளுக்கு மறுவாழ்வு கொடுப்பதை விட இதயத்தில் உள்ள எண்ணற்ற கருத்துக்களஞ்சியத்தை பாமர மக்களுக்கும் எடுத்துச்செல்வது தான் உங்கள் கடமை என நான் நினைக்கிறேன்.

மேல்தட்டு மக்கள் தான் கவிதைகளை படிக்கிறார்கள் என்ற உங்கள் கருத்தில் நான் முரண்படுகிறேன். மத்திய அரசின் விருது பெற்ற கவிஞர் வைரமுத்து அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசத்தில் இடம்பெற்றது இலக்கிய வார்த்தையல்ல, அந்த கவிதைத்தொகுப்பு கௌரவிக்கப்பட காரணமாக அமைந்தது மேல்தட்டு மக்களும், நீங்கள் சொன்ன கவிஞர்களும் அல்ல.

கவிஞனின் ஒவ்வொரு கவிதையும் ஒரு பிரசவத்தின் வலி, இம்சைகளுடன் தான் பிறக்கின்றன. அந்த குழந்தை சமுதாயத்தால் கொஞ்சப்படும் போதும், பாராட்டப்படும் போதும் தான் அந்த தாய் பெற்ற வேதனை மறந்து மகிழ்கிறாள். அந்த தாயாக நீங்கள் இருக்க வேண்டும் என்ற என் ஆசையில் அர்த்தமில்லையா ஆதவா..?

ஆதவா
02-06-2007, 07:05 AM
நன்றி இதயம்.. இந்த மாதிரி எழுதி அடிவாங்கியவைகள் அதிகம். குருவிக்குஞ்சு பிறந்ததும் பறக்க முயற்சிக்கிறது என்றால் உடனே அதை எழுப்பிவிட்டு பறக்கவைக்க தாய்க்குருவி ஆவன செய்யவேண்டும்.. அந்த பலன் எனக்கு இன்று வரை கிடைக்கவில்லை.. எனது ஒரு கவிதத கூட என் தந்தை படித்தது கிடையாது... இதில் கொடுமை அவருக்கு புத்தக அறிவு அதிகம்..

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ஒருவேளை அவர் எளிமைபடுத்தாமல் சொந்த பாசை இன்றி எழுதியிருந்தால் அந்த காவியம் இந்நேரம் குப்பையில் விழுந்திருக்கும் என்பதையும் அறிகிறேன்.. அதேநேரம் கதை வேறு கவிதை வேறு... ஒரு வரியை ஒரு வார்த்தைக்குள் அடக்குவது கவிதை... அந்த வார்த்தைதான் கடினமானது. ஆனால் வரி எப்போதுமே எளிமையாகத்தான் இருக்கும்.. அதுவே கதை.. இன்று நேற்றல்ல.. நிறைய பேர் சொல்லிவிட்டார்கள். கவிதையை கொஞ்சம் புரியும்படி எழுதவேண்டுமென்று.. அதன் காரணமாகவே பலமுறை யோசித்து யோசித்து எழுதவேண்டிய சூழ்நிலை எனக்கு உண்டாகிறது.. நான் ஏன் இப்படி வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்..?? எனக்கே தெரியவில்லை.



இலக்கியங்களில் படித்த வார்த்தைகளுக்கு மறுவாழ்வு கொடுப்பதை விட இதயத்தில் உள்ள எண்ணற்ற கருத்துக்களஞ்சியத்தை பாமர மக்களுக்கும் எடுத்துச்செல்வது தான் உங்கள் கடமை என நான் நினைக்கிறேன்.


உண்மைதான்.. அதை ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்ல பழைய வார்த்தைகளால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஆரம்பகாலம் முதல் விதைக்கப்பட்டிருக்கிறது..

கவிதை வந்தால் எழுது அல்லது கிடாசு என்ற ரகம் நான். அதனால் வார்த்தை சிக்கினால் எழுதுவேன் அல்லது விட்டுவிடுவேன்.. அந்த வார்த்தைக்கு மாற்று வார்த்தை நிச்சயம் இருக்கும் என்னிடம்.

உதாரணத்திற்கு இரத்தம் என்ற வார்த்தை பிடிபடாவிடில் உடனே எனக்குத் தோன்றுபவை குருதி உதிரம் என்பவை... அதிலே இன்னும் மாற்றாக செங்குருதி வெங்குருதி, செந்நீர், செந்திரவம் உயிர்த்திரவம் என்று பல வார்த்தைகள் மனதில் உண்டாகும்..

உங்கள் ஆலோசனை எனக்கு நிச்சயம் தேவை.. அடுத்தடுத்து எளிமையாக எழுத முயல்கிறேன்.. எனக்கு ஒருவகை பயமும் வந்துள்ளது...

இதயம்
02-06-2007, 07:20 AM
விருதுக்கவிதையின் வெற்றிக்கு நீங்கள் சொன்னது போல் எளிமையும் ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒரு வரியை வார்த்தையில் அர்த்தத்துடன் அடக்குவது கவிதைக்கு அழகு. ஆனால், விளங்காக்கவிதைகள் ஒரு வார்த்தைக்கு பல வரி விளக்கத்தை எழுத வைத்துவிடுகிறது என்பது கவிதையின் தோல்வி தானே?

உங்களுக்கு எல்லாவகையான எழுத்து வசப்படும் என்பது என் கருத்து. ஆனால், பெரும்பாலான உங்கள் பயணம் மேல் தட்டு கவிதைகளில் பயணப்பட்டதால் அது தான் எழுத எளிமையாக இருப்பது போல் ஒரு பொய்த்தோற்றம் தெரிகிறது. உலக ஞானம் உண்ட கவிஞன் நீங்கள். உங்கள் எல்லை திரை கிழித்து வெளிவாருங்கள். உங்களால் முடியும். உங்களாலும் முடியும்.

ஆதவா
02-06-2007, 08:39 AM
விருதுக்கவிதையின் வெற்றிக்கு நீங்கள் சொன்னது போல் எளிமையும் ஒரு காரணம் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஒரு வரியை வார்த்தையில் அர்த்தத்துடன் அடக்குவது கவிதைக்கு அழகு. ஆனால், விளங்காக்கவிதைகள் ஒரு வார்த்தைக்கு பல வரி விளக்கத்தை எழுத வைத்துவிடுகிறது என்பது கவிதையின் தோல்வி தானே?

உங்களுக்கு எல்லாவகையான எழுத்து வசப்படும் என்பது என் கருத்து. ஆனால், பெரும்பாலான உங்கள் பயணம் மேல் தட்டு கவிதைகளில் பயணப்பட்டதால் அது தான் எழுத எளிமையாக இருப்பது போல் ஒரு பொய்த்தோற்றம் தெரிகிறது. உலக ஞானம் உண்ட கவிஞன் நீங்கள். உங்கள் எல்லை திரை கிழித்து வெளிவாருங்கள். உங்களால் முடியும். உங்களாலும் முடியும்.

நிச்சயமாக இல்லை இதயம்... நானும் உங்களைப் போலத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கவிதையே பல அர்த்தங்கள் தருமானால் அது பார்வையாளன் பார்வையின் பல கோணமே தவிர வேறில்லை.. இங்கே பூ (Poo) என்ற நண்பர் எழுதிய கவிதைகளைப் பாருங்கள்... பல அர்த்தங்கள் தோன்றும்... ஒரு கவிதைக்கு பல அர்த்தங்கள்.... நினைத்துப் பாருங்கள்... படிப்பவனை யோசிக்க வைக்கிறான் கவிஞன்... யோசிப்பது மனித குணம்..

இளசு அண்ணா ஒரு முறை சொல்லியிருக்கிறார்.. கவிதைகளில் இருவககயுண்டு.. ஒன்று குறியீடுகளாய் எழுதுவது மற்றொன்று எளிமையாக எழுதுவது. முதல் முறைக்கு ரசிகர் கூட்டம் குறைவு.. நான் இரண்டுக்கும் இடையே தவித்துக் கொண்டிருக்கிறேன்..

நீங்கள் சொல்வதுபோல நிச்சயம் முயல்வேன்..