PDA

View Full Version : அப்பாசிவா.ஜி
31-05-2007, 09:12 AM
என் வாழ்நாளில்
ஒரே ஒருமுறை மட்டும்
என்னை அடித்த என்
அன்புள்ள அப்பா!
அதுகூட உணவை அவமதிப்பது
மன்னிக்க முடியாத குற்றமென்ற
உன்னதமான உண்மையை உணர்த்த!

மதிய உணவுக்குப்பிறகு
சிறிய உறக்கத்திலிருக்கும்
உனக்குத் தெரியாமல்
சட்டை பையில் சில்லறை எடுத்ததை
அரைக்கண்ணால் பார்த்தும்
பார்க்காததுபோல்
அதை அனுமதித்து சிரித்தது,

காதர்பாய் கடையில்
பரோட்டாவும் கறிக்குழம்பும்
வாங்கித்தந்து,உன் தட்டிலிருந்த
நல்லகறியை பதம் பார்த்து
என் தட்டுக்கு மாற்றியது,
சுற்றுலா செல்ல எனக்குமட்டுமின்றி
காசில்லா என் நன்பனுக்கும் தந்து
என்னை முக மலர்த்தியது,

ஆனந்தவிகடனையும்,குமுதத்தையும்
அறிமுகப்படுத்தி,இன்றளவும்
என் படிப்பார்வத்துக்கு வித்திட்டது,
கடன் கொடுத்து திரும்ப வந்த
கதைப்புத்தகத்துக்குள் இருந்த
காதல் கடிதத்தைக் காட்டி
என் விருப்பம் கேட்டு
கண்ணியத்தை காட்டியது,

வருமானமில்லா வேளையிலும்
பிடிவாதமாய் என்னை படிக்கவைத்தது,
எல்லோருக்கும் இளையவனாய் நானிருந்தும்
எடுக்கும் எல்லாமுடிவுகளிலும்
என்னையும் பங்கேற்க வைத்தது,

இருக்கும் காலம்வரை
இனிய நன்பனாய் இருந்தது
எல்லாம் எதற்காக?
புகையால் வரவழைத்துக்கொண்ட
புற்றால் பாதியில் விட்டு போவதற்கா?

உன்காசும் கவனிப்பும்
என்னை வாழவைத்தது!
என் காசால் உன்னை
வாழவைக்க முடியவில்லையே
என் மகனில் உன்னைப்பார்த்து
நீ தந்ததையெல்லாம் அவனுக்கு நான் தந்து
நன்றி செலுத்த முயலுகிறேன்!

அமரன்
31-05-2007, 09:13 AM
அபாவுக்கு கவிபடைத்த சிவாவுக்கு வாழ்த்துகள். விமர்சனத்துடன் விரைவில் வருகின்றேன்.

ஷீ-நிசி
31-05-2007, 10:56 AM
ஆனந்தவிகடனையும்,குமுதத்தையும்
அறிமுகப்படுத்தி,இன்றளவும்
என் படிப்பார்வத்துக்கு வித்திட்டது,

இது எனக்கு அப்படியே பொருந்தும் நண்பரே! இன்றும் நான் ஆனந்த விகடன் வாங்குகிறேன் என்றால் அன்று என் அப்பா எனக்கு அறிமுகபடுத்தியது..

அருமை சிவா.. ரசித்தேன் உங்கள் கவிதையை!

சிவா.ஜி
31-05-2007, 11:03 AM
நன்றி ஷீ-நிசி

ஆதவா
31-05-2007, 11:06 AM
கவிதை = அருமை
கரு - சூப்பரோ சூப்பர்
நடை - சுமார்
--------------------
அப்பா கவிதை சீக்கிரமே கிடைக்குமென்று எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் நடையை கவிதைத் தனத்தை முக்கி எடுத்திருக்கலாம்... இது என் கருத்து மட்டுமே.. மேலும் வரிகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.. அது சிறந்தது... சுருங்கச் சொல்லி விளங்கச் செய்தல்..
தவறாக எண்ணமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்

சுட்டிபையன்
31-05-2007, 11:13 AM
அப்பாவுக்கு பாமாலை சூடிய சிவாஜிக்கு வாழ்த்துக்கள்

அழகிய கவி

சிவா.ஜி
31-05-2007, 11:13 AM
கண்டிப்பாக தவறாக நினைக்கமாட்டேன்.வரிகள்.... அது தானாக வந்துவிட்டது. அனுபவம் என்னை கூர்மையாக்குமென்று நம்புகிறேன். உங்கள் எல்லோருடைய ஆதரவும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. நன்றி ஆதவா.

ஆதவா
31-05-2007, 11:21 AM
நல்லது சிவா.... சில சமயங்களில் நடுக்கத்தோடே சொல்லவேண்டியிருக்கிறது.. உங்களைப் போல ஈஸியாக எடுத்துக் கொள்வாரிருந்தால் போதும்.. தயக்கம் எனக்கு வந்திடாது..

lolluvathiyar
31-05-2007, 02:26 PM
காதலிக்கு கவிதை படைக்க லட்சம் பேர் இருப்பார்கள்
அம்மாவுக்கு கவிதை படைக்க ஆயிரம் பேர் இருப்பார்கள்
மனைவிக்கு கவிதை படைக்க நூறு பேர் இருப்பார்கள்
அப்பாவுக்கு கவிதை படைக்க பத்து பேர் கூட இருக்க மாட்டார்கள்

அந்த உத்தமர் கூட்டத்தில் நீயும் ஒருவராகி விட்டீர்கள்

மனோஜ்
31-05-2007, 02:40 PM
தந்தைக்கு கவிதந்த நண்பரே வாழ்த்துக்கள் நல்ல தந்தையாய்
வாழ்வதற்கும் வாழ்வில் தந்தையை பிரதிபலிக்கவும்

சிவா.ஜி
02-06-2007, 04:42 AM
நன்றி மனோஜ் அன்றும் இன்றும் என்றும் நான் நல்ல தந்தைதான். என் அப்பா என்ற பல்கலைகழகத்தில் படித்த மாணவன் அல்லவா?

இதயம்
02-06-2007, 04:59 AM
அப்பாவுக்கு கவிதை படைக்க பத்து பேர் கூட இருக்க மாட்டார்கள்

பொதுவாகவே இளைஞர்களுக்கு அப்பா என்பவர் அறிவிக்கப்படாத வில்லனாகவே இருப்பார். தந்தை மகன் உறவிற்கிடையே பாம்பன் பாலம் போல் மிக நீண்ட இடைவெளி இருக்கும். இது அவர்களுக்குள் புரிதலில் ஏற்படும் இடற்பாடால் வரும் தலைமுறை இடைவெளி. இந்த வெற்றிடத்தை நிரப்ப இருவரும் புரிந்து நடக்கவேண்டும். அப்படி இல்லாததால் வரும் பிரச்சினை தான் இந்த வில்லன் இமேஜ். அந்த வகையில் சிவா.ஜி கொடுத்துவைத்தவர் தான். தன் தந்தைக்கு கவிபாடி விட்டாரே.

தாயின் இடம் என்பது யாரும் பூர்த்திசெய்யமுடியாத புண்ணிய இடம். அதை நிரப்ப முயல்பவர்கள் கூட ஆணின் ஆழ்ந்த அன்பை பெற்றுவிடுவார்கள். உதாரணம், மனைவியும், சகோதரிகளும். தாயின் அன்பு எல்லையில்லாதது, சுயநலமற்றது. தாய்மையில் முரண் என்பது மிக, மிக அரியது. அதனால் தான் தாய்க்கு கவிபாட பல்லாயிரம் பேர்.

வெய்யிலின் கொடுமை நிழலில் தெரியும் என்பது போல் பெற்றோரின் அருமை அவர்கள் இல்லாத போது புரியும்.

அக்னி
04-06-2007, 12:29 AM
அப்பாவிற்குக் கவிதை...
தந்தைப் பாசம் பின்னிய கவிதை...
பாசத்தை முழுமையாக கொட்டி வளர்த்த தந்தைக்கு எத்தனை பேர் கவிபாடியிருப்பர்?
பாராட்டுக்கள் சிவா.ஜி


புகையால் வரவழைத்துக்கொண்ட
புற்றால் பாதியில் விட்டு போவதற்கா?
உன்காசும் கவனிப்பும் என்னை வாழவைத்தது!
என் காசால் உன்னை வாழவைக்க முடியவில்லையே

ஒரு சமுதாய சிந்தனை..,
புகைத்தல் உடல்நலத்திற்குக் கேடாகலாம்...

ஒரு தத்துவச் சிந்தனை..,
பணத்தால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியாது...

தொடருங்கள் நண்பரே...
சிறு சிறு பந்திகளாக்கி கவி வடித்தல், வாசித்தலை இலகுவாக்குவதோடு, ஒரு வடிவினையும் கவிதைக்கு அமைத்து தரும்...

சிவா.ஜி
04-06-2007, 04:31 AM
விரிவான விமர்சனத்திற்கு நன்றி அக்னி.