PDA

View Full Version : உயிர் மீண்டு வந்த மீனவர்கள் வாக்குமூலம்



சுட்டிபையன்
26-05-2007, 12:47 PM
அறுபத்து எட்டு நாட்கள் வனவாசத்தின் மிச்சம், முகத்தில் தாடியாய் நீண்டிருக்கிறது. தாங்கள் உயிர்பிழைத்து வந்துவிட்டோம் என்பதையே இன்னும் முழுமை யாக நம்ப மறுக்கும், அந்த மீனவர் களின் கண்களில் மரணபயம் மிச்சமிருக்கிறது. திடீரென்று நடுக்கடலில் கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டிருக்கும் அந்தக் கன்னியகுமரி மீனவர்கள் பதினொரு பேருக்கும் கண்ணீர் பெருக்கெடுக்க நெகிழ்ச்சியோடு வரவேற்பு கொடுத்தனர், குமரி மாவட்ட மீனவர்கள்.

கடந்த மார்ச் மாதம் 6-ம் தேதி குளச்சல் அருகேயுள்ள கோடிமுனையைச் சேர்ந்த ஏழு பேரும், அருகிலுள்ள கொட்டில்பாடு கிராமத்தைச் சேர்ந்த மூவரும், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரும், கேரளாவைச் சேர்ந்த மற்றொருவருமாக மொத்தம் பன்னிரண்டு மீனவர்கள் ஸ்ரீகிருஷ்ணா என்ற படகில் மீன் பிடிக்கக் கிளம்பியபோது, வங்கக்கடல் துன்பக்கடலாக மாறும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. வழக்கமாகக் கடலுக்குப் பாடு பார்க்கப்போனால், கிளம்பியதிலிருந்து ஒன்பதாவது நாளில் கரை திரும்புவது இந்தப் பகுதி மீனவர்களின் வழக்கம். அந்தக் கணக்குப்படி, மார்ச் 15-ம் தேதி திரும்பி வரவேண்டிய மீனவர்கள், 20-ம் தேதிவரை கரை திரும்பவில்லை என்றதும்தான் அவர்களின் குடும்பங்கள் பதறத்தொடங்கின.

அவர்களை கடத்திச் சென்றிருப்பது புலிகள்தான்... என்று போலீஸ் தரப்பு ஆதாரத்துடன் சொல்லிக் கொண்டிருக்க, இந்த நிலையில்தான் கடந்த வாரம் பன்னிரண்டு மீனவர்களில் பதினொரு பேர் விடுவிக்கப்பட்டுத் தமிழகம் வந்து சேர்ந்தனர். சென்னையில் முதல்வரை சந்தித்துவிட்டு, 20-ம் தேதி மாலையில் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களான கொட்டில்பாடு மற்றும் கோடிமுனைக்கு போய்ச் சேர்ந்தனர்.

அவர்களது வீடு முழுக்க உறவினர்களின் கூட்டம் நிறைந்திருந்து உணர்ச்சிப் பெருக்கோடு அவர்களை வரவேற்றார்கள்.

அனிஸ்டன் என்ற சிறுவனின் நிலைதான் பரிதாபம். இவனுக்குப் பதினாலு வயதாகிறது. இவனது தந்தை பார்த்தலோம் என்பவர், 92-ம் ஆண்டு பாகிஸ்தான் கடற்படையால் கடத்தப் பட்டு 59 நாட்கள் சிறைவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். அதிலிருந்து அவர் கிட்டத்தட்ட மனநிலை சரியில்லாத நிலைக்குச் சென்றுவிட்டார். குடும்பத்தில் சம்பாதிப்பதற்கு வேறு ஆளில்லாததால், சிறுவன் அனிஸ்டன் சமீபகாலமாக பாடுபார்க்க கடலுக்குச் சென்றுள்ளான். அப்படிப் போனவன்தான் கடத்தப்பட்டுவிட்டான். அவனைக் கண்டதும் தந்தையும், தாய் ரோஸ்மேரியும் உடல் துடிக்க, கண்ணீர் பெருக்கெடுக்கக் கட்டித் தழுவிக்கொண்டனர்.

கடத்தப்பட்ட படகில் படகோட்டியாக செயல்பட்ட கிளைமான்ஸிடம் பேசியபோது, எங்களைக் கடத்துனவங்க தமிழ்தான் பேசுனாங்க. எங்களை வச்சிருந்த இடங்கள் அனைத்திலும் பிரபாகரன் படம் இருந்துச்சு. பத்து நாள் வரைக்கும் ஜெயில் மாதிரியான ஒரு இடத்துல அடைச்சு வச்சிருந்தாங்க. எங்களுக்குப் பாதுகாப்பா இருந்தவங்க, சிலோன் ரேடியோ, சூரியன் எஃப்.எம்., திருச்சி ரேடியோ கேப்பாங்க. அந்த ரேடியோ நியூஸைக் கேட்டுத்தான், நாங்க கடத்தப்பட்ட விஷயம் இங்க பெருசா பேசப்படுறதைத் தெரிஞ்சுகிட்டோம். மத்தபடி எப்படி கடத்துனாங்க, என்னங்குறதெல்லாம் ஏற்கெனவே செய்திகளா வெளில வந்துருச்சு... வேறெந்த தகவலையும் இப்போதைக்கு நாங்க சொல்றாப்ல இல்லை என்றார், களைப்பான கண்களோடு. இவர் மட்டுமின்றி, அனைவருமே கடத்திச் சென்ற வர்கள் தமிழ்தான் பேசியதாக உறுதி யோடு சொல்கிறார்கள்.

அதேநேரம், விடுதலைப் புலிகளைத் தாக்கி எழுதாதீங்க. அவங்க, எங்க யாரையும் ஒரு வார்த்தைகூட கூட்டிக் குறைச்சு பேசலை. இதுவே சிங்கள ராணுவம் கடத்தியிருந்தா, உயிரோடவே திரும்பியிருக்க மாட்டோம்.

தவிரவும், நாங்க மறுபடியும் தொழில் பார்க்கணும். எங்க பத்து பேருக்காக பத்து லட்சம் பேரோட பொழப்புக்கு சிக்கல் பண்ணிட வேண் டாம்... என்று எதிர்காலம் பற்றிய எச்சரிக்கை உணர் வோடு பேசுகிறார்கள், அந்த மீனவர்கள்.

அகில இந்திய மீனவர்கள் சங்கத்தின் தலைவர் ஆண்டன் கோமஸிடம், கடத்தப்பட்ட மீனவர்கள் திரும்பி இருப்பது குறித்துக் கேட்டோம். இது பத்து லட்சம் மீனவர்களின் பிரச்னை. கடலுக்குப் போகும் மீனவர்களை அனாமத்தாகக் கடத்த முடிகிறது, மறுபடியும் கொண்டு வந்து விடமுடிகிறது என்றால் இங்கே பாதுகாப்பு இல்லை என்றுதானே அர்த்தம்..? உயிரைப் பணயம் வைத்துத் தொழில் பார்க்கும் மீனவர்களுக்கு அச்ச உணர்வில்லாத சுதந்திரமான சூழலை உருவாக்கித் தரவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இப்போது தமிழக மீனவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர். ஆனால், ஒரே ஒரு கேரள மீனவர் சைமன் மட்டும் இன்னும் மீட்கப்படவில்லை. இதன்மூலம் கேரள மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் கசப்பு உணர்வு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளது. இதையும் கருத்தில் கொண்டு அவரைத் துரிதமாக மீட்பதோடு, மீனவர்களோடு கடத்திச் செல்லப்பட்ட லட்சக்கணக்கான மதிப்பிலான அந்தப் படகையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது அந்தப் படகுக்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையை உடனடியாக அரசாங்கம் வழங்க வேண்டும்... என்றார்.

இந்த மீனவர்களைக் கடத்தியது விடுதலைப்புலிகள் தான் என்று பல தரப்பிலும் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் கடத்தியிருக்க வாய்ப்பே இல்லை... என்று மறுத்துச் சொல்லி, அதற்கான காரண காரியங்களை விளக்குபவர்கள் சிலரும் அந்த மீனவர்கள் வாழும் பகுதியிலேயே இருக்கிறார்கள். சைமன்.... மர்மம்!

கடத்தப்பட்டு மீண்டு வந்திருக்கும் தமிழக மீனவர்கள் பற்றி க்யூ பிரிவு உயரதிகாரியிடம் கேட்டபோது, ஆரம்பத் திலிருந்து மீனவர்களைக் கடத்தியது புலிகள்தான் என்று சொல்லி வந்தோம். அது தற்போது நிரூபிக்கப்பட்டு விட்டது. கடத்தப்பட்ட பன்னிரண்டு பேரில் பதினோரு பேர் திரும்பி வந்து எங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்கள், எங்களைக் கடத்தியது புலிகள்தான் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்கள். இந்த விஷயத்தை அவர்கள் உரக்கச் சொன்னால், மீண்டும் அவர்கள் தொழிலுக்காக கடலுக்குள் போகும்போது புலிகளால் பிரச்னை ஏற்படலாம். அதனால், அதனை அவர்கள் வெளியில் சொல்ல அஞ்சுகிறார்கள். இதற்கிடையில், கடத்தப்பட்ட பன்னிரண்டு பேரில் கேரளாவைச் சேர்ந்த சைமன் என்பவர் மட்டும் இன்னும் திரும்பவில்லை. அவரைப் பற்றி நாங்கள் விசாரித்தபோது தெரிந்தது இதுதான் & அவர் படகு இன்ஜினீயரிங் தெரிந்தவர் என்பதால் புலிகள் தங்களது படகுகளை ரிப்பேர் பார்ப்பதற்காக துப்பாக்கி முனையில் நம் மீனவர்களிடமிருந்து பிரித்து எடுத்து சென்று விட்டார்கள். ஒருகட்டத்தில், ஆயுதக் கடத்தல் படகுகளில் சைமனையும் அவர்கள் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்போது, மாலத் தீவு ராணுவத்துடன் அவர்கள் சண்டையிட்டிருக்கிறார்கள். இதில் புலிகள் படகு மூழ்கடிக்கப்பட்டு விட, புலிகள் தரப்பில் நான்கு பேர் இறந்து போய்விட்டார்கள். மற்றவர்கள் மாலத்தீவு ராணுவத்திடம் பிடிபட்டிருக்கிறார்கள். அவர்களில் சைமனும் ஒருவர். அனைவரும் தற்போது மாலத்தீவு ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். மாலத்தீவு அரசி டம் பேச்சுவார்த்தை நடத்தித்தான் இனிமேல் சைமனை இந்திய அரசு மீட்க முடியும்... என்கிறார்.

நன்றி - விகடன்

மனோஜ்
26-05-2007, 01:26 PM
நாம் சாப்பிடும் மீனுக்கு இத்தனை சேக கதை கொடுமையே
பல கோடிகளுக்கு சில இலட்சங்கள் படும் அவஸ்தை கொடுமையே

அமரன்
26-05-2007, 03:49 PM
இது பழைய செய்திதான் இருந்தாலும் பரவாயில்லை. நன்றி சுட்டி

gragavan
26-05-2007, 04:01 PM
அந்தச் சின்னப்பையன் மக்கள் தொலைக்காட்சியில கடத்துனவங்க சிங்களக்காரங்கதான்னு சொல்லீருக்கானே. எனக்கு இந்த விஷயத்துல ஏதோ தவறு நடந்திருக்குறதா தெரியுது.

தமிழ் பேசினாங்கன்னா....கருணாஸ் குழு (இப்ப கருணாசே தப்பி ஓட்டமாம்) ஆளுங்களை வெச்சு இலங்கை அரசு செஞ்சிருக்குமோ! இருக்கலாம். அல்லது வேறெதும் காரணத்துக்காக இந்திய அரசாங்கம் அல்லது தமிழக அரசாங்கம் அவசரப்பட்டு அரசியல் காரணங்களுக்காகப் பொய் சொல்லியிருக்குமோ. போன எல்லாரும் (ஒருத்தரத் தவிரன்னு நெனைக்கிறேன்) திரும்பி வந்ததும் சந்தேகமா இருக்கு. இதுல ஏதோ பெரிய நாடகம் இருக்குன்னு மட்டும் புரியுது.

அமரன்
26-05-2007, 04:12 PM
இது ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்தித்து நிதானித்து கருத்துச் சொல்லவெண்டிய விடயம் என்றே எனக்குப் படுகின்றது. அவசரப்பட்டு எந்த அரசியல்வாதியும் கருத்துச் சொல்லக்கூடாது. இலங்கை அரசாங்கமே அதைச் செய்திருக்கும் என நம்பினாலும் ஒரு நாட்டுக்கு எதிராக கருத்துச் சொல்ல பலர் முன்வரமாட்டார்கள். அதுவே ஒரு அமைப்பு எனும்போது தைரியமாக விரல் நீட்டிச் சொல்லுவார்கள்.