PDA

View Full Version : சித்தாள்



ஷீ-நிசி
25-05-2007, 09:01 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Sithaal.jpg

உச்சி வெயிலு
கால பதம் பார்க்குது
மிச்ச(ம்) இருக்குற
கல்லப் பார்த்தா,
எச்சி வறண்டு
நாக்கும் ஒட்டி போகுது!

கல்ல தலயிலயும்
கனவ மனசிலயும்
தூக்கிட்டு போறேன்...

எனக்கும் வருவான்
ஒருத்தன் ராசாப் போல!
என்ன பார்த்துபான்
அவன் ரோசாப் போல!

சொமதூக்க விடமாட்டான்
ஒருநாளும்! -எனக்கு
இமப்போல காவலிருப்பான்
எந்நாளும்!

வேர்த்து வேலைசெஞ்சி
பசியா வரும் என் ராசாக்கு
சோறு கறி சமைச்சி
ருசியா நான் போடுவேன்!

ஏப்பம் விட்டு என் ஐயா
எழுந்த பின்னே
அந்த எச்சி தட்டில்
சோறுபோட்டு சுவையா
நானும் திம்பேன்!

புள்ளைங்க ரெண்டு
சீக்கிரமா பெத்துபேன்...
அதுங்க கிட்ட நானும்
அ.ஆ.இ.ஈ... கத்துபேன்!

சொமதூக்க வுடமாட்டேன்
என் புள்ளைங்கள
என்னபோல ஒருநாளும்!

இமபோல பார்த்துபேன்
என் ராசா போல
எந்நாளும்!

விகடன்
25-05-2007, 09:09 AM
அன்ன ஷீ-நிசி?
நாட்டில வெய்யில் கொடுமை அதிகமாகிவிட்டதோ?

வெய்யில் கொடுமையில் ஆரம்பித்து தித்திப்பான குடும்ப வாழ்க்கையில் முடித்துள்ளீர்கள்.

மிகவும் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

அமரன்
25-05-2007, 09:55 AM
வாழ்த்துகள் நிஷி. சித்தாளாக இருக்கும் ஒரு பெண்ணின் அடிமன ஆசைகளை அழகாக் கூறியுள்ளீர்கள். கவிதையின் சாரம்சம் மட்டுமல்ல வரிகள் கூட யதார்த்தமானவை. எளிமையான சொற்களை வைத்து விளையாடி இருக்கின்றீர்கள். சித்தாள் பேசுவது எப்படி இருக்குமோ அப்படியே இருக்கின்றது. நன்றி நிஷி.

சொமதூக்கவிடமாட்டான்
ஒருநாளும்! -எனக்கு
இமப்போலகாவலிருப்பான்
எந்நாளும்!

இங்கே இப்படிச் சொல்லிவிட்டு இறுதியில்

இமபோலபார்த்துபேன்
என்ராசாபோல
எந்நாளும்!

இப்படி முடித்து கலக்கிவிட்டீர்கள். அவன் அவளைக்காக்க அவள் அவனைக் காக்கின்றாள். எல்லோரும் வாழ்க்கையில் இப்படி இருந்து விட்டால் விவாகரத்துகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் இருக்கமாட்டார்கள்.

shangaran
25-05-2007, 10:00 AM
மிக நல்ல கவிதை, ரசனையான வார்த்தைகள்.

ஷீ-நிசி
25-05-2007, 10:00 AM
நன்றி ஜாவா...

-----------------

நன்றி அமரன்...

நான் முடித்து வைத்த தொனியை நீங்கள் புரிந்துகொண்டீர்கள்.. ஒரு சின்ன திருத்தம்...

அவன் அவளைக் காக்க, அவள் அக்குழந்தைகளையும் அவனையும் அதுபோல காக்கிறாள்...

நன்றி அமரன்..

அமரன்
25-05-2007, 10:06 AM
உங்கள் விளக்கத்தைப் பார்த்தபின்னர் கவிதை இன்னும் அழகாக ஜொலிக்கின்றது நிஷி. நன்றி.

ஓவியன்
29-05-2007, 04:53 AM
ஷீ! கவிதையைப் படித்தேன், சுமைதூக்கும் ஒரு பெண் தொழிழாளியின் ஆதங்கத்தை அவர் தம் மனதில் உள்ள எதிர்பார்ப்புக்களை உங்கள் கவி வரிகள் வெளிச்சம் போட முற்பட்டு அவற்றில் வெற்றியும் அடைந்துள்ளன.

சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்ல வந்தமை உங்களது இந்தக் கவிதையின் வெற்றி எனலாம், உங்களது வழமையான வார்த்தைச் செழுமை இந்தக் கவிதையில் இல்லையோ என்று ஒரு ஆதங்கம் வந்தது எனக்கு.

இருந்தாலும் ஒரு ஏழ் நிலையிலுள்ள பெண் தொழிலாளியின் சட்டத்தில் இருந்து கவி வரிகளைக் கோர்த்தமையாலேயே உங்களது வழமையான வார்த்தைச் செழுமை குறைவடைந்துள்ளது என்று நம்புகிறேன். அந்த சட்டத்திலே நின்று கொண்டு கவி வரிகளைத் தரும் போது கடினமான, நளினமான வார்த்தைப் பிரயோகம் அந்தக் கவிதைக் கருவின் இயற்கைத் தன்மையை சிதைத்துவிடக் கூடாது என்பதற்காக விசேட கவனமெடுத்து வழமையான பேச்சு வழக்கில் கவி வரிகளைத் தந்தமை கவிதைக்கு மேலும் அழகு!.

ஷீ!
இந்தக் கவிதை நாயகிகள் எத்தனை பேர் இன்னமும் இவ்வாறான ஏங்கங்களுடனும் எதிர்பார்ப்புகளுடனும் மட்டுமே தங்கள் வாழ்க்கையை எங்களிடை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

என்று தான் இவர்களது எதிர்பார்ப்புகள் எல்லாம் கை கூடி இவர்களது சந்ததியினர் நல்ல நிலைக்கு வருவார்களோ? என்று ஏக்கத்தை விதைத்த உங்கள் வரிகளுக்கு நன்றிகள்.

சிவா.ஜி
29-05-2007, 05:15 AM
மிக அருமையான கவிதை. நான் டிப்ளமோ படித்துக்கொண்டிருந்தபோது குடும்பத்தில் ஏற்பட்ட பணக்கஷ்டத்தால் அப்போதைக்கு தேவைப்பட்ட பணத்திற்காக நானும் செமெஸ்டர் விடுமுறையில் சித்தாள் வேலைக்கு போயிருக்கிறேன். அருகில் இருந்து அவர்கள் கஷ்டத்தை பார்த்திருக்கிறேன்.உடல் கஷ்டம் ஒருபுறமென்றால மேஸ்திரிகளால் கொடுக்கப்படும் பாலியல்தொல்லையால் ஏற்படும் மனக்கஷ்டம் மறுபுறம். அத்தனையையும் தாங்கிக்கொண்டு சனிக்கிழமை கூலிக்காக காத்திருக்கும் கொடுமைகள். என்னசெய்வது விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எந்தவேலையோ ஒன்றை வயிற்றுப்பிழைப்பிற்காக செய்துதானே ஆகவேண்டியிருக்கிறது. அந்த கஷ்டத்திலும இந்த கவிதையின் நாயகியின் நாளையை பற்றின ஆரோக்கியமான சிந்தனை பாராட்டுக்குரியது.பாராட்டுக்கள் ஷீ-நிசி.

கோபி
29-05-2007, 01:35 PM
சுமை தூக்கும் பெண்ணின் மன ஓட்டங்களை மிக இயல்பான நடையில், வார்த்தைகளில் தநத ஷீ-நிசிக்கு பாராட்டுக்கள்...

leomohan
29-05-2007, 04:46 PM
கனவுகளே கையிருப்பாய் போன வாழ்கை. நெஞ்சை தொட்டது ஷீ.

மனோஜ்
29-05-2007, 05:04 PM
கண்ணீருக்குள் கணவுகள் மெய்படும் நாளை
அருமை ஷீ
ரசித்த வரிகள்

கல்ல தலயிலயும்
கனவ மனசிலயும்
தூக்கிட்டு போறேன்...

அக்னி
29-05-2007, 05:17 PM
ல கரமும், ர கரமும் இலகுத் தமிழில் அழகுற கலந்த ஒரு கவிதை...

வாழ்வின் அந்த நிலையில், படிக்க முடியாமல், மணக்க முடியாமல் சோகங்களையும் சுமையோடு சுமக்கும் ஒரு இளம் மனதின் எதிர்பார்ப்பு, மனக்கண் முன் வருகின்றது....


எனக்கும் வருவான்
ஒருத்தன் ராசாப் போல!

தனக்கு மணம் ஆகவில்லை என்று சொல்லவில்லை...


சொமதூக்க விடமாட்டான்
ஒருநாளும்!
தான் படும் கஸ்ரத்தைச் சொல்லவில்லை...


அதுங்க கிட்ட நானும்
அ.ஆ.இ.ஈ... கத்துபேன்!

தான் படிக்காதவள் என்று சொல்லவில்லை...


சொமதூக்க வுடமாட்டேன்
என் புள்ளைங்கள
என்னபோல ஒருநாளும்!

தனது அடுத்த தலைமுறைக்கான எதிர்பார்ப்பை மட்டும் சொல்கின்றாள், கவிதையின் நாயகி...

சொல்லாமலே குறிப்புணர்த்தும் அழகுக் கவிதை போல,
நிற்காமலே என்றும் வரவேண்டும் உங்கள் கவிதைகள்...

வாழ்த்துக்கள் ஷீ-நிசி...

ஷீ-நிசி
31-05-2007, 03:51 AM
நன்றி ஓவியன்,

நன்றி சிவா,

நன்றி கோபி,

நன்றி மோகன்ஜி,

நன்றி மனோஜ் மற்றும்

நன்றி அக்னி அவர்களே!

ஆதவா
31-05-2007, 06:23 AM
சித்தாட்களின் கனவுகள்.... மிக அருமை.. மிக அருகே இருந்து அதை உணர்ந்தவன் என்ற அனுபவம் என்னிடமுண்டு..
அதை மீண்டும் கொண்டுவர வைக்கிறீர்கள்... பிரமாதம் ஷீ! பாசையிலும் கலக்குறீங்க.... சபாஷ்..

உச்சி வெயிலு
கால பதம் பார்க்குது
மிச்ச(ம்) இருக்குற
கல்லப் பார்த்தா,
எச்சி வரண்டு
நாக்கும் ஒட்டி போகுது!

உங்களிடம் பிடித்த விஷயமே இதுதான்.. இயல்பாக ஒட்டும் எதுகைகள்.. உச்சி , மிச்ச, எச்சி என்று கதைக்கு ஒட்டும்
எதுகைகள் மிக அருமை... இந்த மாதிரி கவிதைகள் எழுதும்போது அடைப்புக்குறி வேண்டியதில்லை... தானாகவே
மக்கள் புரிந்துகொள்வார்கள்.. வரண்டு என்ற சொல் சரியான சொல்லா? ( வரண்டு - வரட்சி ; வறண்டு - காய்ந்து.. எது
சரி? ) அழகான தொடக்கம்...

கல்ல தலயிலயும்
கனவ மனசிலயும்
தூக்கிட்டு போறேன்...

சில வார்த்தைகளை உன்னிப்பாக கவனிக்கத் தோணும்.. அந்த வகை வார்த்தைகள் இவை. பொதுவாக சித்தாட்கள்
கனவைத் தூக்கிக் கொண்டு போவது உண்மைதான்.... நன்றாக கவனிக்கவேண்டும்.. தூக்கிக் கொண்டு போதல்.. கனவை
நினைப்பது வேறு.. தூக்குவது வேறு...

எனக்கும் வருவான்
ஒருத்தன் ராசாப் போல!
என்ன பார்த்துபான்
அவன் ரோசாப் போல!

நாயகிக்கு கல்யாணம் ஆகவில்லை... அப்படியென்றால் இருபதைத் தாண்டாத மங்கை. பள்ளிக்கு அநேகமாகச்
சென்றிருக்காதவள்... இன்னும் சொல்லப் போனால் சிறு பெண்/சிறுமி என்று கூட சொல்லலாம்.. ராசா ரோசா விளையாட்டு சூப்பர்..

சொமதூக்க விடமாட்டான்
ஒருநாளும்! -எனக்கு
இமப்போல காவலிருப்பான்
எந்நாளும்!

இருக்கலாம்... எல்லாருமே அப்படி அமைவதில்லை. சொமதூக்க விடாத ராசாவாக இருந்தால் பரவாயில்லை.. சுமையான ராசாவாக இருந்தால் இன்னும் வேதனைதான்.. பொதுவாக இம்மாதிரி உள்ளவர்களுக்கு கனவு சரிவர அமைவதில்லை.. பட்ட காலிலே படும் என்று சும்மாவா சொன்னார்கள்?

வேர்த்து வேலைசெஞ்சி
பசியா வரும் என் ராசாக்கு
சோறு கறி சமைச்சி
ருசியா நான் போடுவேன்!

அந்த ராசா நல்ல ஆளாக இருந்தால் நிச்சயம் செய்யலாம். தவறில்லை.. ஒரு குடும்பப் பெண்ணாக வீட்டில் இருந்து கணவனைக் கண்காணிக்கும் பணி கிட்டாதா என்று ஏங்கும் நிலைக்கு இப்போது கவிதைப்பெண் வந்துவிட்டாள்... அது நியாயமான கோரிக்கை.. நினைப்பு...

ஏப்பம் விட்டு என் ஐயா
எழுந்த பின்னே
அந்த எச்சி தட்டில்
சோறுபோட்டு சுவையா
நானும் திம்பேன்!

தமிழ்நாட்டு பாரம்பரியம் என்று சொல்கிறார்கள்.. இன்னும் சிலர் கடைபிடிக்கிறார்கள்.. அதில் அலாதி சுகம் மனைவிகளுக்கு.. அதிலும் கணவன்கள் மிகச் சரியாக இருக்கும் பட்சத்தில் என்னவேண்டுமானாலும் மனைவிகள் செய்வார்கள்... ஒருவகையில் அது தவறில்லை என்று சொல்லலாம்.. சில பணக்கார பெண்கள் நாய்க்கு ஊட்டுவதை விட இது கேவலமானதல்ல... ஒரு வகையில் புனிதமானதும்கூட... (இதை ஏன் கணவன்கள் செய்யக்கூடாது???)

புள்ளைங்க ரெண்டு
சீக்கிரமா பெத்துபேன்...
அதுங்க கிட்ட நானும்
அ.ஆ.இ.ஈ... கத்துபேன்!

சீக்கிரமே என்றாலும் நான்கு வருடங்கள் ஆகிவிடும் :D. கற்றுக் கொள்ள பத்து வருடங்கள் ஆகிவிடும்... நிறைய பெண்களுக்கு தம் குழந்தைகளே தனக்கு வாத்தியாராக வர வேண்டும் என்ற ஆர்வமுண்டு.. அதுபோலவே சீக்கிரமாக பிள்ளைகளைப் பெற்று சீராட்டும் ஆர்வமும் உண்டு... நல்ல கருத்துள்ள வரிகள்..

சொமதூக்க வுடமாட்டேன்
என் புள்ளைங்கள
என்னபோல ஒருநாளும்!

நிச்சயமாக ஒவ்வொரு தாயும் நினைக்கும் வரிகளிவை... அழகு...

இமபோல பார்த்துபேன்
என் ராசா போல
எந்நாளும்!

இது டபுள் கேம் என்று சொல்வார்கள்... கணவனைப் போலவே பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வேன் என்பது...

------------------------------------------------------------------
அழகாக ஆரம்பித்து அழுத்தமாய் உள் நுழைந்து முடித்திருக்கிறீர்கள்.. இயல்பும் எளிமையும் வார்த்தை விளையாட்டுக்கள் அவ்வளவாக இல்லாத ஜாலங்களுமாய் கவிதை எழுதுவதில் உம்மை யாரும் மிஞ்சமுடியாது... வாழ்த்துக்கள்....

பணமாக 250.....காசுகள்.

ஷீ-நிசி
31-05-2007, 06:30 AM
நன்றி ஆதவா...

வறண்டு என்பதே சரி.. எழுத்துப் பிழைதான்..

மிக ஆழமான விமர்சனம்.. நன்றி ஆதவா...

இதயம்
31-05-2007, 06:58 AM
நன்றி ஆதவா...

வறண்டு என்பதே சரி.. எழுத்துப் பிழைதான்..

மிக ஆழமான விமர்சனம்.. நன்றி ஆதவா...

வறண்டு என்பது தான் சரி. வறண்டு என்பதின் அர்த்தம் வறட்சி. அதாவது நீர் வற்றி, காய்ந்து, உலர்ந்து போதல். வறண்ட பூமி, வறண்டு போன காடு என்று சொல்லலாம்.

எச்சி வறண்டு என்றால் உமிழ்நீர் காய்ந்து, வற்றி போய் என்று பொருள் படும். அதுமட்டுமில்லாமல் உச்சி, எச்சி என்ற எதுகை மோனையான வார்த்தைகள் இந்த கவிதைக்கு இன்னும் சிறப்பு சேர்க்கிறது. கவிதைக்கு பொய் அழகு என்பது எல்லா கவிதைகளுக்கும் ஆகாது. பொய் கொண்டு புனையப்படும் கவிதைகள் சொற்சுவை, பொருட்சுவைக்கு மட்டுமே.

ஆனால், இந்த கவிதையில் இரு சுவைகளும் கொண்டு, அதன் பின்னே எதார்த்தநிலையும், ஏக்கமும், எதிர் கால கனவும் சேர்ந்து நிற்கிறது. எழுத்துப்பிழை என்றது உங்கள் தன்னடக்கத்தை காட்டும் அளவுகோலை காட்டுகிறது.

மிகச்சிறப்பான கவிதை. பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
31-05-2007, 07:20 AM
இதயத்திடமிருந்து வந்த விமர்சனம் நன்று...

நன்றி இதயமே!