PDA

View Full Version : பொல்லாதகாலம்



சிவா.ஜி
24-05-2007, 07:32 AM
பொல்லாத காலம்

செல்லாத்தா செல்ல மாரியாத்தா
நான் சொல்வதைக் கொஞ்சம் கேளாத்தா
உண்டுக்கொழுத்த குறிசொல்லிகள்
உன்னை மறைத்து
அவர்களே அம்மாவாய் ஆனதைப் பாராத்தா!
கல்லிலும் மண்ணிலும்
கடவுளைக் கண்டோம்
கடவுளை மட்டுமே கண்டோம்!
இதனிடையில்
எங்கிருந்து வந்தார்கள்,
உன் பேர் போர்த்திய இந்த போலிகள்?
பக்தியை வியபாரமாக்கி
சக்தியும் சிவனும் நானேயென்று
கூவிக்கூவி அழைக்கும்
இந்த மோடி மஸ்தான்கள்?
ஆள்பவர்களும் அதிகாரிகளும்
இவர்களை ஆண்டவர்கள் என்று
அதிகாரப்பூர்வமாய் அறிவித்துவிட்டார்கள்!
புத்தியை தொலைத்துவிட்ட
என் தேச மக்களும்
இந்த ஏமாற்றுக்காரர்களை ஏற்றுக்கொண்டார்கள்!
அம்மா என்று
ஆசாமிகளை கும்பிடத்தொடங்கிவிட்டார்கள்!
பகவான் என்று
போலிகளை தொழுது வருகிறார்கள்!
போ... உனக்கு இனி பொல்லாத காலம் தான்
சாட்சாத் பிரசன்னமெல்லாம் இனி
சாத்தியமில்லை!
நீ தான் நீ என்று நிரூபிக்க
'அம்மாக்களிடம்' அனுமதி வாங்க வேண்டும்!
'பகவான்கள்' உன்னைப் பரிந்துரைக்க வேண்டும்!

அமரன்
24-05-2007, 07:40 AM
ஆம் தோழரே! கடவுளின் பெயரால் சம்பாதிப்போர் தொகை அதிகரித்துக்கொண்டே போகின்றது. போலி ஆன்மீகம் தலை விரித்தாடுவது ஆன்மீகத்தின் மீதான நம்பிக்கையையும் அதன் மீதுள்ள மரியாதையையும் குறைத்து விடலாம். சமுதாய விழிப்புணர்ச்சியைத் தூண்டும் உணர்சிப்படைப்பு. வாழ்த்துகள்.

சிவா.ஜி
24-05-2007, 10:36 AM
நெடு நாட்க்களாய் என் மனதில் இருந்துவரும் வருத்தம் இது. மனிதனை கடவுளாய் காண்பது அவரின் செயல்களை வைத்துதான். இருப்பினும் வழிபட முடியாது.