PDA

View Full Version : விட்டுக்கொடு!



ஷீ-நிசி
22-05-2007, 06:02 AM
புரியாமலே கொல்வது
போதுமடி கண்ணே!
புரிந்து கொள்ளடி!
இனியாவது என்னை!

என் விருப்பமெல்லாம்
உன்னை சார்ந்ததே! -நீ
மறுப்பதனாலே என்
உள்ளம் சோர்ந்ததே!

எனக்காகவே கேட்கிறேனென்று
உன் உள்ளம் சொன்னாலும்!
உனக்காக செய்வேனென்று,
உன் உதடுகள் சொல்லாதா?!

சண்டையிட்டுக்கொள்வதே
வாடிக்கையாகிறது!
சமாதானம் நமக்கிடையில்
வேடிக்கையாகிறது!

நாம் சமாதானமாவதே,
அடுத்தமுறை
சண்டையிடத்தானோ?!

வார்த்தைகளினாலே
காயம் செய்து,
பொத்தலாக்குகிறோம்
வாழ்க்கை படகை!

முடிவில்,
நீயோ!, நானோ, நாமோ
மூழ்குவது நிச்சயம்!

விட்டுக்கொடு பெண்ணே!
வாழும் வாழ்க்கை
வசந்தம் ஆகும்!

இல்லை,
நாளும் நமக்கது
கசந்து போகும்!

மதி
22-05-2007, 06:11 AM
நல்ல கவிதை ஷீ-நிசி. இதில் என் கருத்து சற்றே வேறுபடுகிறது. தான் தன் எல்லைவரை விட்டு கொடுத்து விட்டோம் என்ற எண்ணம் தலைதூக்குவதால் மற்றவரை விட்டுக் கொடுக்கும்படி சொல்கிறோம். காதல், நட்பு, உறவு எதுவாக இருந்தாலும். தன்னைத் தானே புரிந்து கொள்ள இயலாமல் தான் மற்றவரை மாற சொல்கிறோம்.

இது என்னுடைய கருத்து மட்டுமே. யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

ஷீ-நிசி
22-05-2007, 06:15 AM
நல்ல கவிதை ஷீ-நிசி. இதில் என் கருத்து சற்றே வேறுபடுகிறது. தான் தன் எல்லைவரை விட்டு கொடுத்து விட்டோம் என்ற எண்ணம் தலைதூக்குவதால் மற்றவரை விட்டுக் கொடுக்கும்படி சொல்கிறோம். காதல், நட்பு, உறவு எதுவாக இருந்தாலும். தன்னைத் தானே புரிந்து கொள்ள இயலாமல் தான் மற்றவரை மாற சொல்கிறோம்.

இது என்னுடைய கருத்து மட்டுமே. யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை. தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

நன்றி மதி!

அவரவர் கருத்துக்கள் அவரவர் சூழ்நிலையை பொருத்தே உருவாகிறது.. என்பதே என் கருத்து.

அமரன்
22-05-2007, 06:39 AM
புரியாமலே கொல்வது
நாம் சமாதானமாவதே,
அடுத்தமுறை
சண்டையிடத்தானோ?!

வார்த்தைகளினாலே
காயம் செய்து,
பொத்தலாக்குகிறோம்
வாழ்க்கை படகை!

முடிவில்,
நீயோ!, நானோ, நாமோ
மூழ்குவது நிச்சயம்!

விட்டுக்கொடு பெண்ணே!
வாழும் வாழ்க்கை
வசந்தம் ஆகும்!

இல்லை,
நாளும் நமக்கது
கசந்து போகும்!
நல்ல கவிதை நிஷி. புரிவதுக்கு இலகுவாக எளிய நடையில் அமைத்துள்ளீர்கள். கூடுவதும் பிரிவதும் வாழ்வில் சகஜம் என்பார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவே அதிகமாகும் போது விபரீதங்களை உருவாக்கலாம். அதை வலியுறுத்திய வரிகள் அருமை. ஒரு மனக்குறை. ஆண்கள் பக்கம் இருந்து கவிதை எழுதப்பட்டிருப்பதால் அது பெண்களை நோக்கி தொடுக்கபடுகின்றது. உண்மையில் இது இரு பாலாரையும் நோக்கி தொடுக்கப்படவேண்டியது. பீண்டும் நன்றிகளும் வாழ்த்துகளும் உங்களுக்கு.

ஷீ-நிசி
22-05-2007, 06:42 AM
உண்மைதான். நன்றி அமரன்.....

மதி
22-05-2007, 06:48 AM
நன்றி மதி!

அவரவர் கருத்துக்கள் அவரவர் சூழ்நிலையை பொருத்தே உருவாகிறது.. என்பதே என் கருத்து.
நிச்சயமாய்..

ஆதவா
23-05-2007, 08:55 AM
அருமை... சில எதுகை வார்த்தைகள் பிரமாதம். விட்டுக் கொடுப்பதுதானே வாழ்க்கை... அதைக் கடைசி வரிகளில் சொன்னாலும் பொதுவாக சொல்லியிருக்கலாம்... அதாவது பெண் விட்டுக் கொடுப்பதாக இல்லாமல் இருவருமே விட்டுக் கொடுக்கவேண்டும் என்று...
அதனால் ஆரம்பத்திலிருந்தே கவிதையின் போக்கு மாறுபடுகிறது. பொதுப்படையாக இல்லாமல்.

கொல்வது ; கொள்ளடி.. ரசித்தேன். புரியாத வாழ்க்கையும் ஓர் வாழ்க்கையா??

சார்ந்தது ; சோர்ந்தது. அழகான கருத்துடன் நான்குவரிகளில் எல்லா மறுப்புக்கும் சோர்வென்றால் வாழ்வே சோர்வுதான்...

வாடிக்கை ; வேடிக்கை... பிரமாதமான கருத்து. சமாதானத்தை வேடிக்கை பார்க்கும்படியான வார்த்தை புகுத்தல் அருமை.. ஷீ-நிசியின் சிறப்பில் ஒன்று...

சமாதானம் அடைவது அடுத்தமுறைக்கான சண்டை... எவ்வளவு அர்த்தம் பொதிந்து இருக்கிறது பாருங்கள்.. இது வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும்தான்

வாழ்க்கைப் படகை பொத்தலாக்கி மூழ்க்கச் செய்வது அட்டகாசமான கற்பனை. அது அவனோ அவளோ... எக்ஸலண்ட்

விட்டுக் கொடு பெண்ணே!! ஏன் ஆண் விட்டுக்கொடுக்கக் கூடாதா? வசந்தம் என்பது இருவரின் விட்டுக் கொடுத்தலில் இருக்கிறதே,,, இந்த வரிகள் மட்டுமே உதைக்கிறது நண்பரே

கசக்காத வாழ்க்கை என்றுமே வேண்டும்...

அழகிய கவிதை. அற்புதக் கருத்து... நடுநிலையின்றி தவிக்கிறது... மற்றபடி ஷீ-நிசியின் கைத் திறமை கவிதையில் தெரிகிறது. 100 காசுகள்...

ஷீ-நிசி
23-05-2007, 09:01 AM
அருமையான விமர்சனம்! நன்றி ஆதவரே!

இருவருமே விட்டுக்கொடுத்தல் வேண்டும்! இதுவே என் கருத்தும்....

அக்னி
24-05-2007, 02:30 AM
கவிதையைப் படித்த போது இந்த வரி மட்டும் நெருடியது...

விட்டுக்கொடு பெண்ணே!
வாழும் வாழ்க்கை
வசந்தம் ஆகும்!

ஆனால் ஆதவன் விளக்கமளித்துவிட்டார்.

அதைவிடுத்தால், சொல்லாட்சி அழகு செய்யும் கவிதை...

ஷீ-நிசி
24-05-2007, 03:24 AM
நன்றி அக்னி.. சில கவிதைகள் சில சூழலில் பிறக்கிறது... உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்...

ஓவியன்
29-05-2007, 09:14 AM
எதுகை, மோனை சரிவர வரிகளில் மிளிர்வது ஷீயின் திறமை. அந்த திறமை இங்கேயும் அழகு வரிகளாக

பாராட்டுக்கள் ஷீ!

ஆனால் ஷீ!, வாழ்க்கையில் போராட்டங்கள் இருக்கவேண்டும் அப்போதுதான் வாழ்கை இனிக்கும், வாழ்க்கையில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் என்பது என் கருத்து.

எல்லாவற்றையும் இருவரும்(கணவனும் மனைவியும்) மாறி மாறி விட்டுக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் வாழ்க்கை போரடித்துவிடாதா?

கணவன் மனைவியிடை ஊடலும் அவசியம் தானே, காதலின் வலிமையைக் கூட்டுவதில் ஊடலுக்கும் முக்கிய பங்குள்ளது. ஆனால் அதுவும் ஒரு அளவோடு இருக்கவேண்டும் என்பது என்னவோ உண்மைதான்.

ஊடல் வேறு தினமும் அடித்துப் பிடித்துகொண்டு சண்டை போடுவது வேறு. இரண்டையும் வேறுபிரித்து புரிந்துணர்வுடன் நடாத்தும் வாழ்க்கை என்றுமே வெற்றிப் பாதையிலேயே செல்லும்.

ஷீ-நிசி
31-05-2007, 03:57 AM
நன்றி ஓவியன்....

நாளுக்குநாள் ஓவியனின் விமர்சனத்தில் மெருகு கூடுகிறது... தொடருங்கள் தோழரே!