PDA

View Full Version : வாடிக்கை மனிதர்கள்..



rambal
02-04-2003, 08:31 AM
அரசு அங்காடியின்
நீண்ட வரிசையில்
நிற்கும் பொழுது
ஏறிவிட்ட விலைவாசி பேசும்..

கால தாமதமாய்
வரும்
பேருந்தின் கூட்டம் கண்டு
போக்குவரத்துக் கழகம்
பற்றியும் பேசும்..

ஏறிவிட்ட பேருந்தினுள்
ஜந்துக்களிடையே அகப்பட்ட
இளம்பெண்ணைக் கண்டு
ஓர் நொடி கோபம் கொண்டு
குடும்பம் கண்முன் வர
கையாலாகத்தனத்தை
ஞாயிறு ஹிண்டுவிலும் எழுதும்...

தேர்தலில் குத்த வேண்டிய
முத்திரையை
மனதிற்குள் நினைத்து
எல்லோருமே
அயோக்கியர்கள் என்று
வீட்டிலேயே
முத்திரை குத்தி
தொலைக்காட்சி பார்க்கும்..

ஓய்வு பெறுவதற்குள்
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்
ஒரு மனையடி வாங்கி
வீடு கட்டி பார்த்து
ஓய்வாய் நாற்காலியில்
அமர்ந்து
செய்தித்தாள் படித்து
கண் மூடும்..

aren
02-04-2003, 12:43 PM
அந்த வாடிக்கை மனிதர்களில் நானும் ஒருவனோ என்று நிறைய சமயங்களில் நினைத்துப் பார்த்ததுண்டு. அருமையாக ஒரு சராசரி மனிதனைப் பற்றி கவிதை எழுதியதற்கு பாராட்டுக்கள் ராம்பால்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
02-04-2003, 05:49 PM
அருமையாய் சொன்னீர்கள் ராம்...
வெந்ததைத் தின்று
விதி வந்தால் போவோம் என்று
நம்மில் பலரும் (நான் உள்பட)
சராசரிகளின் சந்தடிகளில்
தொலைந்து
போய்க்கொண்டே......
புதைவது தெரிகிறது....
காலம் கரைகிறது........
வெண்ணை உணங்கல் போல...
இதுவும் ஒரு கையறு நிலையே.....

madhuraikumaran
02-04-2003, 06:42 PM
கையாலாகாத்தனத்துடன் 'நமக்கெதுக்கு வம்பு' என்கிற மனநிலையையும் சேர்த்துப் படம் பிடித்துள்ளீர்கள்... நல்ல கவிதை... நல்ல சூடு !

Narathar
03-04-2003, 05:31 AM
நம் கையாளாகாத்தனத்தை
நமக்குணர்த்தும் கவிதை........... நன்றி

gankrish
03-04-2003, 06:23 AM
ராம் இன்றைய மனிதனின் எண்ணத்தை அப்படியே புடம் பிடித்து காட்டியுள்ளீர். இங்கு எது வந்த போதும் நமேக்கேன் வம்பு என்று இருப்பவர் நிறைய பேர்.

madhuraikumaran
03-04-2003, 05:46 PM
நம் கையாளாகாத்தனத்தை
நமக்குணர்த்தும் கவிதை........... நன்றி

வார்த்தையில் விளையாடி உள்ளீர் நாரதரே !!! யாருக்கு 'கையாள்' ?

Nanban
10-01-2004, 02:56 PM
ஹிண்டுவுக்கு கடிதம் எழுதுவதே பிறப்பெடுத்ததின் அர்த்தம் என்று எழுதிக் கொள்ளும் அந்த மனிதன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்....

சராசரி மனிதன்......

நல்ல கவிதை.......