PDA

View Full Version : பொய்க்கா(ல்) குதிர - முடிவு



ஆதவா
14-05-2007, 05:01 PM
கெழவி கூட கருங்குதிர போனான்... மதுரைக்கி. மீனாச்சி அம்மாவை பாத்துப்புட்டு, நல்ல பொய்க்கா குதிர வாங்கிட்டு ஊருக்கு வந்தாங்க... மனசெல்லாம் ஒரே சந்தோசந்தான். ஒன்னும் சொல்றாப்டி இல்ல... மதுரைக்கு போனப்போ ஆத்தாவ கூட்டிட்டுபோய் ஓட்டல்ல புரோட்டா வாங்கிக் கொடுத்தான்... கெழவி இதுக்கு முன்னாடி தின்னதே இல்ல. நமுக்கு நமுக்குனு ஒரே மூச்சுல தின்னுபுடுச்சு.. ம்ம்.... இதுகளுக்கு இப்படியும் ஒரு சந்தோசந்தான்..

உன்னும் ஒருவாரந்தான் இருக்கு. பங்குனி திருவிழாவுக்கு... பதினாலு நாளு ஊரே கலகலனு இருக்கும்.. தெனமும் கூத்து கட்டுவாங்க... பொய்க்கால் குதிர ஆட்டம் ஒருவாரமாவது நிக்கும்.. எப்படியும் ஐநூறு ரூவா அடிச்சுப்புடலாம்.. கருங்குதிர நல்லா கணக்கு பன்னீட்டு இருந்தான்.

திருவிழா வந்திருச்சி,. புது சட்டை, புதுவேட்டி, புது பொய்க்கா குதிர. எல்லாமே புதிசு. சம்புலி ஊட்ல போயி குதிரைக்கு அலங்காரம் பண்ணீட்டு இருந்தான். ரெண்டு பேருமா சேந்து கடப்பாரையைக் கூட்டிட்டு போனாங்க.. விழா கமிட்டிக் காரனுங்க திடீர்னு இவனுகள தனியா கூப்புட்டானுங்க..

" ஏ! இந்த தடவ கூத்து இல்லப்பா, "

" என்னா சாமி. இப்படி சொல்லி வயித்துல ஆசீட்டு ஊத்துறீங்க.. இத வெச்சுதானே எங்களுக்கு பொழப்பே நடக்கி."

" ஏ என்ன வெளயாடரயா? என்னிக்காச்சி கூத்து நடக்கும். அது உனக்கு வருசம் பூராவா கஞ்சி ஊத்துது. வெலங்காத பயலுகளா... இந்த வருஷம் சினிமா ஓட்டறம்டா..""

" அப்பறம் எதுக்கு சாமி எங்கள வரச்சொன்னீங்க"

" வந்திட்டீங்கல்ல.. அன்னதானம் நடக்கும். போய்த் தின்னுட்டு ஊட்டுக்குப் போற வழியப் பாருய்யா... "

" சாமி.."

போய்ட்டாரு... கருங்குதிரைக்கு இப்படி ஒரு சோதனை வரும்னு யாருமே எதிர்ப்பாக்கல. பாவம். கவுண்டரு கொடுத்த ரெண்டாயிரத்த அப்படியே செலவு பண்ணிப்புட்டான்... ஏதோ கடை கன்னி வெச்சிருந்தா பொழச்சிருப்பான்.. எழவு கூத்து கூத்துனு இப்படி வாழ்க்கையில கூத்து அடிச்சுப் புடிச்சே இந்த பாழாப் போன சினிமா... அசராம எப்பவும் இருக்கற கடப்பாரை அழுதே போட்டான்.

மெதுவா நடந்து ஊட்டுக்கு வந்தானுங்க.. கருங்குதிர கெழவிகிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தான்...

" கெழவி, தா கெழவி,, இந்த வருஷம் கூத்து இல்லியாம்.. சினிமா ஓட்டறானுங்களாம். ஏமாத்திப்புட்டானுங்க படுபாவிங்க" அப்படின்னே அழுதுட்டான்... கெழவி கயித்துக் கட்டில்ல படுத்திருந்துச்சு..

" கெழவி, சோறு போடு , அந்த நாய்ங்க அன்னதானம் பண்றாங்க. என்னால அது சாப்பட முடியாது. எந்திரி கெழவி."

கெழவி அசரவே இல்ல. இவன் போய் உலுக்குனான்.. அது நிரந்தரமா போய்ச் சேந்திருச்சு..

கெழவி சந்தோசமாத்தான் செத்துருக்கு... பாவம் கருங்குதிர. அத நம்பிதான் இருந்தான். போய்ச் சேர்ந்திருச்சி.. அதோட கையில பழைய குதிரையோட மேல்துணி கெடந்திச்சி.

கருங்குதிர குதிரக்கட்டையே வெறுத்துப் பார்த்தான்...

பாரதி
15-05-2007, 01:14 AM
அருமை ஆதவா..!

அருமையான நடை.. மனதை தைக்கும் முடிவு. தொடராத கதையாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்களா..? சிறுகதையாகவே இதை வடித்திருக்கலாம்.

உங்கள் எழுத்தில் கமழும் மண்வாசத்தில் மயங்கி கிடக்கிறேன். காலமாற்றங்களை அறியாத வெள்ளந்தி கிராமமக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது என்னவோ உண்மைதான்.

தொடர்ந்து உங்களின் கதைகளை எதிர்பார்க்கிறேன்.

என் இதயம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

ஆதவா
15-05-2007, 09:25 AM
உங்கள் பாராட்டுக்களுக்கு மிகவும் பெருமைப் படுகிறேன்.. நன்றி அண்ணா.. மேலும் எழுத ஆவல் தூண்டுகிறது உங்கள் வரிகள்.. முதலிலேயே எல்லாவற்றையும் எழுதி முடித்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். கடைசிபாகம் சற்று வேகமாக முடித்துவிட்டேன்.. அடுத்த பாகம் வேண்டாம் என்ற காரணமும் கூட..

நன்றி

ஷீ-நிசி
15-05-2007, 04:44 PM
கிராமத்து சொல்வழக்கு அழகாக அமைந்திருக்கிறது.... முடிவுதான் திடுதிப்பென்று முடிவுக்கு வந்தது போல் உள்ளது...

அறிஞர்
15-05-2007, 04:46 PM
கடைசிபாகம் சற்று வேகமாக முடித்துவிட்டேன்.. அடுத்த பாகம் வேண்டாம் என்ற காரணமும் கூட..

நன்றி இந்த கதை முடிந்ததால்.. அடுத்த கதை விரைவில் வரும் என எண்ணுகிறேன்...... தொடருங்கள் ஆதவா..

ஓவியா
15-05-2007, 04:53 PM
ஏன்னப்பு கதய இம்புட்டு அவசரமா முடிச்சே!!!!

கத நல்லதேன் இருக்கு. இன்னும் கொஞ்சம் இழுத்து ஓட்டி இருக்கலாமே!!!

மிகவும் அசத்தல், எல்லா விசயத்திலும் சும்மா பொளந்து கட்டுகிறாய் ஆதவா. வாழ்த்துக்கள் ராஜா.


- பொறாமையுடன் லண்டனம்மா

ஆதவா
16-05-2007, 06:11 AM
நன்றி ஷீ-நிசி... எனக்கு ஏனோ கதையை வளர்த்த விருப்பமில்லாமல் போய்விட்டது. அதனால்தான் திடுதிப்பென்று நிறுத்திவிட்டேன்.
----------------------------------
அடுத்த கதைக்குண்டான கரு உள்ளது.. எழுதலாமா வேண்டாமா நேரம் கிட்டுமா கிட்டாதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் நன்றிங்க அறிஞரே!
-----------------------------
நன்றிங்க ஓவியா

மனோஜ்
19-05-2007, 07:56 AM
முடிச்சிட்டிங்களா ஆதவா
கதையுடன் கிராமத்தில் சில நாட்கள் கடந்த ஆனுபவம் கிடைந்தது
நன்றி