PDA

View Full Version : நவீன நீரோ மன்னன்



சுட்டிபையன்
11-05-2007, 04:22 PM
நவீன நீரோ மன்னன்
நாடு கெட்டுக்கிடக்கிறது. இரவில் நிம்மதியாகக் கூடத்தூங்க முடியாமல் சனங்கள் பரிதவிக்கிறார்கள். பஸ்ஸில் கலக்கமில்லாமல் பயணம் செய்;யமுடியாது. விதைத்த வயலை அறுக்கமுடியாமல், வீட்டிலிருக்கும் நெல்லையோ அரிசியையோ போய் எடுக்க வழியில்லாமல் அகதி முகாம்களில் சனங்கள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு வீடுகளில்லை. அப்படியல்ல வீடுகளிருக்கு ஆனால் அவற்றில் இருப்பதற்கு அனுமதி இல்லை. நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிகள் நடக்கவேயில்லை.

பாதைகளுமில்லாமல் பயணங்களுமில்லாமல் மக்கள் முடக்கப்பட்டிருக்கிறார்கள். தினமும் ஒரு தடவையாவது பங்கருக்குள் நுழையாமல் அன்றிரவு படுக்கைக்குச் செல்ல முடியாது. இவ்வளவும் இலங்கைத்தீவில் நடக்கிறது. அதுவும் தமிழ்மக்களுக்குத்தான் இந்தப்பரிசெல்லாம்.

தமிழர்களுக்கு இந்தப்பரிசைக்கொடுத்து விட்டு சிறிலங்கா ஜனாதிபதி மேற்கிந்தியத்தீவுகளுக்கு உலகக் கிண்ணப்போட்டியைப்பார்க்கப் போயிருந்தார். அவர் என்ன செய்வார். இந்தப்பிரச்சினைகளுக்காக விறுவிறுப்பாக நடக்கும் கிரிக்கெற்றைப் பார்க்காமலிருக்க முடியுமா. அதுவும் உலகக்கிண்ணப்போட்டியை. அதிலும் அவருக்கு இப்போது பல தரப்பாலும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதிலிருந்து அவர் சற்று விலகி றிலாக்ஸாக இருக்கவேண்டாமா.

விடுதலைப்புலிகளின் விமானங்கள் பறக்கின்றன, தாக்குதல் நடத்தப் போகின்றன என்ற அச்சத்தில் கொழும்பு இரவிரவாக அல்லோலப்படுகிறது. கட்டுநாயக்காவுக்கு வருகின்ற பயணிகள் விமானங்களைக்கூட தரையிறக்க முடியாத நிலையில் விமான நிலைய அதிகாரிகள் திண்டாடுகிறார்கள்.

தரை இறங்க வேண்டிய விமானத்தை சென்னைக்கு வழிமாற்றி, சென்னையில் கெஞ்சிக்கூத்தாடி அங்கே தரையிறக்க வேண்டிய இக்கட்டில் தாங்களிருப்பதாக அந்த அதிகாரிகள் மேலும் கவலை தெரிவிக்கிறார்கள். அமைச்சர்களும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் வெளியாரைச் சந்திக்கும்போது இலங்கையில் தொடரப்படும் மனி உரிமை மீறல்கள் தொடர்பாக அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப்பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார்கள். இப்படியெல்லாம் பல பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இதற்காக உலகக்கிண்ணப்போட்டியை அவர் பார்க்காமலிருக்க முடியுமா.

நடப்பது நடக்கட்டும். எது நடக்குமோ அது நடக்கிறது. எது நடக்கவுள்ளதோ அது நடக்கும். இந்தமாதிரியான ஒரு எண்ணப்போக்கில் திரு. மகிந்த ராஜபக்ஸ கிரிக்கெற் ஆட்டக்களத்தின் ஓரத்தில் கைகளைத்தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி இருந்தார். அவர் தன்னுடைய வீரர்களை உற்சாகப்படுத்தினார். வெற்றிகளைக்குவிக்கவேண்டும் என்று அவர்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

இப்படித்தான் அவர் வாகரையிலும் தமிழ்ச்சனங்களின் வீடுகளையும் வாழிடங்களையும் அழித்த படை வீரர்களைத்தட்டிக் கொடுத்தார். தினமும் தமிழ்ச் சனங்களின் தலைகளிலே குண்டுகளைப்போடும் விமானமோட்டிகளையும் அவர் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். அவருக்கு எல்லாமே விளையாட்டுத்தான். எல்லாமே வேடிக்கைதான். அவருக்கு மகிழ்ச்;சி வேணும். சந்தோசத்தை விரும்பாமல் இந்த உலகத்தில் யாராவது இருப்பார்களா. அதுவும் இந்தப்பெரிய அதிகாரத்தை வைத்துக்கொண்டு. கடவுளே

அவருடைய மகிழ்ச்சிக்கு இப்படியெல்லாம் அவர் கஸரப்படவேண்டியிருக்கிறது என்பது கொஞ்சம் கவலையளிக்கிற விசயம்தான். என்றாலும் இதைத்தவிர, இப்படி மகிழ்ச்சி அடைவதைத்தவிர அவரால் வேறு என்னதான் செய்யமுடியும்.

மனித உரிமை மீறல்கள் நடக்கிறது, அதைக்கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது, போர் நிறுத்தத்தை மீறியதன் விளைவுகளே இவையெல்லாம் என்று தொடர்ந்து அவரை எல்லோரும் நச்சரித்தால் அவர்தான் என்ன செய்வார். உலகத்தில் மற்றவர்கள் செய்யாத குற்றங்களையா தான் செய்கிறேன் என்று குற்றம் சாட்டுகிற ஆட்களைப்பார்த்து நாலு கேள்வி கேட்கவேண்டும் போலத்தானிருக்கிறது அவருக்கு. ஆனால் அப்படிக்கேட்டு ஏன் இப்ப இருக்கிற நிலைமையைவிட மோசமான நிலைமையை உருவாக்க வேணும் என்றும் உள்ளுர ஒரு அச்சம். அதைவிட அப்படிக்கேட்டாலும் பிறகு அவர்களிடம்தானே காசுக்கும் பிற தேவைகளுக்கும் போக வேணும் என்றும் அவர் யோசிக்கிறார்.

கையேந்தி நிலையில் இருந்து கொண்டு கண்டபடிலெ;லாம் கதைக்கக்கூடாது என்பார்கள். அப்படி ஏதாவது ஏடாகூடமாக கதைத்து பிறகு தீராத சிக்கலில் மாட்டிவிட்டால் அது தேவையில்லாத வம்பாகி விடும். அவரைப்பொறுத்தவரை இப்பவே ஒரு நாளைக்கடத்துவதற்கு படுகிற பாடுகள் கொஞ்சமல்ல. இதைவிட இன்னும் கூடுதல் துன்பம் என்றால் பேசாமல் யாரையாவது அந்த இடத்திற்கு மாட்டிவிட்டு தப்புவதைத்தவிர வேறுவழியில்லை என்றும் ஒரு எண்ணம் தோன்றுகிறது.

தனக்கு முதல் ஆட்சியில் இருந்தவர்கள் எதைத்தான் உருப்படியாகச் செய்திருக்கிறார்கள். போரை ஒழுங்காகச் செய்தார்களா. அல்லது நாட்டை அபிவிருத்தி செய்து உருப்படுத்த்;p வைத்திருக்கிறார்களா. புலிகளை ஒடுக்கினார்களா. எதைத்தான் சரியாகச் செய்திருக்கிறார்கள். கடைசியில் பொறிந்து விழக்கூடிய நிலையில் கதிரையை வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அந்தப்பொறிந்து விழும் கதிரையில்தான் இப்போது தான் இருக்கிறேனா என்ற சந்தேகம் ராஜபக்ஸவுக்கு வந்தது.

ஜே.ஆர் பதினேழு வருசம் ஆட்சி நடத்தியிருக்கிறார். கடைசியில என்னத்தைப்புடுங்கிக்கிழித்தார். அடுத்தது சந்திரிகா. பத்து வருசம் ஆட்சியில் இருந்து போரில் புலிகளை வெல்லுறன் வெல்லுறன் எண்டு சொல்லிச்சொல்லி அவர்களைப்பலப்படுத்தினதுதான் மிச்சம். சரி நாட்டைத்தான் வளமாக வைச்சிருந்தாரா. அதுவும் இல்லை.

இதெல்லாம் போதாதென்று அடுத்தவர் வந்தார், ரணில். அவர்வந்து காட்டுக்குள் அனுப்ப வேண்டிய புலியை பிளேனில ஏத்தி உலகமெல்லாம் கொண்டுபோனார். புலிகளுக்கு சர்வதேச ஆதரவைத்தேடும் வேலையைத்தான் ரணில் பார்த்தார். நல்ல வேளை இதெல்லாம் முற்றி பெரும் பிரச்சினை வரமுதல் தான் எப்படியோ ஆட்சிக்குவந்து விட்டேன் என்று ஒரு ஆறுதல் சின்னதாக அவருக்கேற்பட்டது. சரி அப்படித்தான் ஆட்சிக்கு வந்தாலும் இப்போது நிம்மதியாக இருக்க முடிகிறதா. நிம்மதியாக இருக்கத்தான் விடுகிறார்களா.

காலுக்குள்ளேயே குழி பறிக்கிறார்கள். மங்கள இப்படிச்செய்வாரெண்டு யார்தான் எதிர்பார்த்தது. மங்களவுடன் சேர்ந்து சிறீபதியும்தான் குழி தோண்டுகிறார். எத்தனைக்குத்தான் அவதானமாகவும் கவனமாகவும் இருக்கிறது. சீ இதென்ன சீவியம். கொஞ்;சம் ஆறதலாக சந்தோசமாக இருப்பம் என்றால் யார் விடுகிறார்கள். இரவில் புலிகளின் விமானங்கள் வருமென்றும் சொல்கிறார்கள். வந்தால் நிலைமையென்ன. கடவுளே, இதென்ன சோதனை.

குண்டுவீசி புலிகளின் விமானத் தளத்தையே அழித்து விட்டோம் என்றுதானே சொன்னார்கள் விமானமோட்டிகளும் படை அதிகாரிகளும். அதற்காக எத்தனை கோடி ரூபாய்களைச் செலவு செய்திருப்பார்கள். அப்படியென்றால் புலிகள் ஓடுபாதை இல்லாமலே தங்களுடைய விமானங்களை பயன்படுத்துகிறார்களா. அவர்கள் ஓடுபாகையில்லாமலே விமானங்களைப்பயன்படுத்தவும்கூடிய ஆட்கள்தான் என்றும் சிலர் சொல்கிறார்கள்.

அப்படியென்றால் அடுத்து என்ன செய்வது. சீ தொடக்கத்த்pல் என்னமாதிரி சில காரியங்கள் வாய்ப்பாக நடந்தன.

மூதூரை பறிகொடுத்தாச்சா என்று பயந்து கொண்டிருக்க, அதை ஒருவாறு படையினர் மீட்டார்கள். பிறகு வாகரை. எப்படியோ படாத பாடெல்லாம் பட்டாலும் ஒருவாறு அதையும் மீட்டாயிற்று. படுவான்கரை என்று சொல்வார்களே, புலிகளிடமிருந்த அந்தப்பகுதியையும் ஒருவாறு கைப்பற்றியாயிற்று. கொஞ்சம் கஸ்ரப்பட்டாலும் எல்லாம் இப்படி வெற்றி கொள்ளக்கூடியமாதிரித்தான் இருந்தது. ஆனால் புலிகள் இப்படித்திடீரென எதிர்பாராத விதமாhக தங்களுடைய விமானங்களைக் களத்தில் இறக்கி கலக்குவார்கள் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள்.

இதுக்கு முதல்ல ஆட்சியில் இருந்த எவரும் படாத கஸ்ரத்தையெல்லாம் இப்போது தான் படவேண்டியிருக்கு என்றெல்லாம் ராஜபக்ஸ துக்கப்படுகிறார்.

அவர் எதைமறந்து விடமுனைகிறாரோ அவையெல்லாம் அவரின் உள்ளேயும் வெளியேயும் வந்து அவரை ஆட்டிப்படைக்கின்றன. உடல் இங்கே, உயிர் அங்கே என்று சொல்வார்களே அதுமாதிரி. துன்பம் மிகுந்த லங்காபுரியை விட்டு மேற்கிந்தியத்தீவுகளுக்கு வந்தாலும் இங்கேயும் அந்த நினைவுகள் தானா. அந்த துன்பம் தருகின்ற நினைவுகளிலிருந்து விலகவே முடியாதா. ஐயோ, இதென்ன கொடுமை. கடவுளே

மகிந்த ராஜபக்ஸ மேற்கிந்தியத்தீவுகளுக்கு செல்லும்போது தன்னுடைய எல்லாப்பொறுப்புகளையும் அவருடைய இரண்டு சகோதரர்களிடமும் பகிர்ந்து கொடுத்து விட்டுப்போனார்.

பிரச்சினைகள் ஏதாவது ஏற்பட்டால் அவற்றைத்தீர்ப்பதற்கான அதிகாரத்தையும் அவருடைய சகோதரர்களாகிய பஸில் ராஜபக்ஸவிடமும் கோதாபய ராஜபக்ஸவிடமும் கொடுத்து விட்டே வந்தார். இதை அவர் வெளிப்படையாகச் செய்ய முடியாது. எல்லாவற்றிலும் தன்னுடைய சகோதரர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறார் என்றும் அவர்கள் சொல்வதைக்கேட்டுத்தான் ஜனாதிபதி செயற்படுகிறார் என்றும் குற்றம்சாட்டி இப்போதே கட்சிக்குள் ஏகப்பட்ட குத்து வெட்டுகளுண்டு. இந்த நிpலையில் சகோதரர்களுக்கே எல்லாத்தையும் கொடுக்கிறார் என்று யாராவது ஏதாவது புரளியைக்கிளப்பி விட்டுவார்கள். அதனால் ரகசியமாக அவர் சகோதரர்களிடம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பொறுப்புகளைக்கொடுத்து விட்டு சிலநாளாவது நிம்மதியாக இருக்கலாம் என்றுதான் மேற்கிந்தியத்தீவுகளுக்குப் புறப்பட்டார்.

அட, இவ்வளவு தூரம் கடந்து இங்கே மேற்கிந்தியத்தீவுகளில் வந்து நின்றாலும் விட்டுவந்த பிரச்சினைகள்தானே தலைக்குள் விடாமல் பிடித்துக்கொண்டிருக்கினறன. அவர் இலங்;கையை விட்டுப்புறப்படும்போது தன்னுடைய சகோதரர்களுக்கு இரண்டு விசயங்களைச்சொல்லியிருந்தார். ஒன்று என்ன பிரச்சினை என்றாலும் அதைச்சொல்ல தொலைபேசியை தனக்கு எடுக்கக்கூடாது. அடுத்தது, பிரச்சினைகளை உருவாக்காமல் அவற்றைச் சுமுகமாகத் தீர்க்கவேணும். இதில் இரண்டாவதற்கு அவர் கோதாபய ராஜபக்ஸவை மனதில் வைத்துத்தான் இதைச்சொன்னார். ஏனென்றால் அவர்தான் எப்போதும் எதையும் பொருட்படுத்தாமல் யாரையும் பொருட்படுத்தாமல் நடந்து கொள்ளும் ஆள். சில பிரச்சினைகளை அடிதடிப்பாணியில் கையாண்டு அடக்கிவிடும் கெட்டித்தனம் அவருக்குண்டு. ஆனால் சில பிரச்சினைகளை அவர் சில வேளைகளில் தேவையில்லாமலே மொக்குத்தனமாகப் பெருப்பித்தும் விடுவார்.

கோதாபய ராஜபக்ஸ சிறுவயதிலேயே இப்படித்தான். பள்ளியில் படிக்கிற காலத்திலேயே ஏதாவது பிரச்சினைகளோடுதான் வீட்டுக்கு வருவார். வளர்ந்த பிறகும் அவரிடமிருந்து இந்த இயல்பு விலகவில்லை. அவர் முன்கோபக்காரர். சிலதை வெட்டியாடுவார். சிலதைத் தேவையில்லாமலே பலதாக்கி பெருப்பித்தும் விடுவார். எனவேதான் மகிந்த ராஜபக்ஸ மேற்கிந்தியத்தீவுகளுக்குககிளம்பும்போது இப்படிக்கூறிவிட்டுப் போனார்.

ஆனால், தான் இலங்கைக்குத்திரும்பி;விடுவதற்குள் ஏறுக்குமாறாக பல சம்பவங்கள் நடந்துவிடலாம் என்று மகிந்த ராஜபக்ஸவுக்குப்பட்டது. நிலை கொள்ளாமையால் அவர் தவித்தார். கட்சிக்குள்ளும் உள்நெருக்கடிகள் உண்டு. வெளியே ஏதாவது தெரிந்தால் ரணில் அதைவைத்துக்கொண்டு பிரச்சினைகளைக் கிளப்பலாம் என்று ;காத்திருக்கிறார். ரணிலைத்தான் இலகுவாகச் சமாளித்து விடலாம். ஆனால் புலிகளை அப்படிச் சமாளிக்க முடியுமா. அவர்கள் எந்த நேரத்த்pல் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. அதுதான் பெரும் பிரச்சினையே.

வெல்லலாம் என்று தோன்றக்கூடிய இடங்களில் இருந்தெல்லாம் வெற்றியைப் பெற்றாயிற்று. சில வேளை படையினர் தன்னை ஏமாற்றி விட்டார்களோ என்றும் அவருக்குள் ஒரு சந்தேகம் பொறிதட்டியது. அதிகம் எதிர்ப்பில்லாமல் பிடிக்கக்கூடிய பிரதேசங்களில் பெற்ற வெற்றியைக்காட்டி தனக்கு அதிகமாக நம்பிக்கையூட்டி விட்டார்களோ என்றும் அவருக்குப்பட்டது. இப்படித்தான் முன்பு சந்திரிகாவையும் ரத்வத்த பிழையாக வழிநடத்தியிருந்தார். தான் பிழையாக வழிநடத்தப்பட்டதை சந்திரிகா உணரும்போது நிலைமை முற்றிலும் அவருடைய கையை விட்டுப்போயிருந்தது. ஆனால் அப்போது புலிகள் பெரும் பலம் பெற்று விட்டார்கள்.

புலிகளின் இயல்பே இதுதான் போலிருக்கிறது. அவர்கள் பெரும் நெருக்கடி வரும்போதுதான் பெரும் வளர்ச்சியடைகிறர்கள். அவர்களை யார் முழுதாக ஒடுக்கலாம் என்று நினைக்கிறார்களோ அவர்கள் தான் அதிகமாக புலிகளை வளர்த்து விடுகிறார்கள் என்று எங்கோ படித்தநினைவு ராஜபக்ஸவுக்கு வந்தது.

அப்படியென்றால் தானும் புலிகளை வளர்க்கத்தான் போகிறேனா என்று அவருக்குச் சந்தேகம் வந்தது. அப்படியென்றால் இதுக்கு வேற வழிதான் என்ன. அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தலை சுற்றுவது போல இருந்து.

போன் அடிக்கிறது. எதற்காக இப்படி இப்போது அவசரப்பட்டு போன் எடுக்கிறார்கள். என்ன பிரச்சினையோ. மீண்டும் புலிகள் கட்டுநாயக்காவிற்கு வந்து விட்டார்களா. அல்லது பலாலிக்குப்போய்விட்டார்களா. அல்லது வேறு புதிய இடம் எதற்காவது போய்விட்டார்களா.

இதுவொரு தீராத பிரச்சினையாகத்தான் இருக்கப்போகிறது போலிருக்கு. சும்மா எடுத்ததற்கெல்லாம் கொழும்பில் பயந்து சாகிறார்கள். அப்படியென்றால் தமிழ்ச்சனங்கள் எப்படியெல்லாம் பயந்திருக்க வேண்டும். அதுவும் மிக், கிபிர் போன்ற விமானங்களை அவர்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்.

யுத்தம் என்றால் எல்லாம் இருக்கத்தான் செய்யும். போருக்கு ஆதரவு தெரிவிக்கிற ஆட்களெல்லாம் அதால வருகிற விளைவுகளையும் கொஞ்சம் ஏற்கத்தான் வேணும். அரசாங்கம் எல்லாவற்றையும் ஏற்கமுடியுமா. ஆட்டுக்கு உள்ளது குட்டிக்கும் உண்டுதானே. இலங்கைக்குப்போனதும் இதைப்பற்றிக் கட்டாயம் கதைக்கவேண்டும்.

இந்தப்பத்திரிகைகள் ஒன்றுக்கும் உதவாதவை. எந்த நேரத்தில் எதை, எப்படிஎழுதுவதென்று தெரியாதவை. எப்போது அவை எப்படிக்குழிபறிக்கும் என்றும் சொல்ல முடியாது. அப்படிப்பார்த்தால் இந்தப்பத்திரிகைகளும் ஒருவகையில் புலிகளைப்போலத்தானோ. புலிகளும் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள், எதைசசெய்வார்கள், அடுத்து எவைப்பற்றிச்சிந்திப்பார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது.

அதைப்போல இந்தப்பத்திரிகைகளும் பாராட்டினால் எல்லாம் ஒத்து நின்று ஒரேயடியாகப் பாராட்டுவார்கள். திட்டத்தொடங்கினால் அழியும்வரை திட்டிக்கொண்டேயிருக்கும்.

மகிந்த ராஜபக்ஸவினால் தொடர்ந்து கிரிக்கெற் ஆட்டத்தைப் பார்க்க முடியாமலிருந்தது. ஒரு பக்கத்தில் போன் தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கிறது. மறுபக்கத்தில் சிறிலங்கா அணியினர் ஆட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கினறனர். இதென்ன துன்பம். துன்பம் வரும்போதுது எல்லாம் ஒரேயடியாகச் சேர்ந்து வரும் என்பார்களே அதுதான் இதுவா.

எந்த வீரருக்காவது அவர்கள் நாட்டின் தலைவர் ஒருவர் விளையாட்டு மைதானத்துக்கே நேரில் வந்து பாராட்டி உற்சாகப்படுத்துவார்களா. அதுவும் நாடு இப்படிப்பத்தீயெரியும் நிலையில் இருக்கும்போது யாராவது இவ்வளவு தொலைவு கடந்து வருவார்களா.

தான் இப்படி மேற்கிந்தியத்தீவுகளுக்கு புறப்படும்போது சிறிலங்காவில் சிலர் குறைசொன்னதும் மகிந்த ராஜபக்ஸவின் நினைவுக்கு வந்தது. நாடு தீப்பற்றி எரியும்போது ஜனாதிபதி கிரிக்கெற் பார்க்கப் போகிறார் என்று ரணில் திட்டுகிறாராம். அவர் மட்டும் என்ன தொடர்ந்து நாட்டில்தானா நிற்கிறார்.

சிறிலங்காவில் உள்ள தலைவர்களுக்கு அடுத்த ஜுலை மாதம் வரையில் கெடுதி என்று சாத்திரிமாரும் சொல்லியிருக்கிறார்கள். அதுதான் இப்படிக் கிடைக்கிற ஏதாவது சாட்டுகளை வைத்துக்கொண்டு நாட்டை விட்டு வெளியில் எங்காவது நிற்கலாம் என்றால் அதற்கும் விடுகிறார்களில்லை. சிரியான எரிச்சல்காரர்கள்.

இதென்ன போன் தொடர்ந்தும் அடித்துக்கொண்டிருக்கிறது. ஏதாவது பெரும் பிரச்சினைதான் நடந்திருக்குமா என்று யோசித்தபடி அவர் தொலைபேசியை எடுத்தார்.

புலிகள் மீண்டும் கொழும்பில் தாக்குதலை நடத்திவிட்டார்கள். கொலன்னாவ எண்ணெய்க்குதமும் முத்துராஜவெல எரிவாயு நிரப்பு நிலையமும் எரிந்து கொண்டிரக்கின்றன என்று கோத்தபாய ராஜபக்ஸ மகிந்த ராஜபக்ஸவுக்கச் சொன்னார். அவ்வளவுதான்;.

முட்டாளே, இதைச்சொல்லத்தான் உன்னை அங்கே விட்டு விட்டு வந்தேனா. புலிகள் வந்து தாக்குதலை நடத்திவிட்டுப்போக விட்டு விட்டு, இப்போது அதைப் பற்றி எனக்கு விளக்கமளிக்கிறாயா. எனக்கு இதைச்சொல்வதைவிட அதைப்புலிகளுக்கே தாக்குதல் வெற்றியென்று சொல்லியிருக்கலாம். எவ்வளவு எதிர்ப்புகளின் மத்தியில் உன்னைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்து வைத்திருக்கிறேன் தெரியுமா. புலிகள் வந்து தாக்குதல் நடத்தாமல் முதலில் தடுத்திருக்கவேணும். சரி அதைத்தான் செய்யவில்லை. தாக்குதல் நடத்தும்; போதாவது தடுத்திருக்கலாம். அதையும் செய்யாமல் விட்டுள்ளீர்கள். அதையும்விட தாக்குதலை வெற்றிகரமாக நடத்திவிட்டு புலிகள் பாதுகாப்பாக தங்களுடைய தளத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள். அந்த விமானங்களைக் கலைத்துத்தாக்கி அழிக்க முடியவில்லை. இப்போது போன் எடுத்து எனக்கு விவரம் சொல்கிறீர்களா. எல்லோரும் என்ன கிரிக்கெற் மட்சையா பார்த்துக்கொண்டிருந்தீர்கள் என்று ஜனாதிபதி கத்தினார்.

அவர் கத்தியதில் என்னதான் தப்பிருக்கிறது. அவரைப்பொறுத்தவரையில் அவர் இதைவிட வேறு என்ன செய்யமுடியும்.

புலிகளின் விமானங்கள் இனிக் கொழும்பில் தாக்குதல் நடத்த முடியாது என்று அவருக்கு எல்லோரும்தானே சொன்னார்கள். அவருடைய தம்பி கோதாபய ராஜபக்ஸ இதை அடித்துச் சொன்னார். ஆனால் மீண்டும் புலிகள் இப்படி கொழும்பைக் கொளுத்தி விட்டார்கள்.

சிலர் சொல்வதைப்போல தானும் கடைசியில் தோற்றுத்தான் போவேனோ என்று மகிந்த நடுங்கினார். அவருக்குத்தாகம் எடுத்தது. எங்கே தண்ணீர். அதைக்கொண்டு வாருங்கள்.

அவர் தன்னுடைய கையிலிருந்த போனைத்தூக்கித் தூர வீசியெறிந்தார். தண்ணீர்ப்போத்தலை வாங்கி மடமடவென குடித்தார்.

ஜனாதிபதியின் கைகள் நடுங்குவதை அவருடைய உதவி ஆள் பார்த்தான்.

அப்போது சிறிலங்கா அணி கிறிக்கெற்றில் தோற்றுவிட்டதென்று அறிவித்தார்கள்.

இந்தத் தோல்விச் செய்திகளைக் கேட்கத்தான் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேனா என்று அவர் தன்னைத்தானே கேட்கிறார். இந்தக் கிரிக்கெற் தோல்வியைப்போலத்தான் இனித் தொடர்ந்து தனக்கு தோல்விச்செய்திகள் காத்திருக்கின்றனவோ என்றும் அவருக்குச் சந்தோகம் தோன்றுகிறது.

நாடு தீப்பற்றி எரியும் போது மன்னன் கிரிக்கெற் ஆட்டம் பார்க்கப் பரதேசம் போயிருந்தான் என்று யாரோ சொல்லிக்கொண்டு போகிறார்கள்.

ஆக்கம் - மனோகரன்
நன்றி பதிவு

அறிஞர்
11-05-2007, 04:49 PM
சாட்டையடியாக எழுதியிருக்கிறார்கள்...

எப்பவும் பிரச்சனை இருப்பதால்... அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லையே...

gragavan
11-05-2007, 05:14 PM
ம்ம்ம்ம்..படிக்கக் கஷ்டமாக இருந்தது. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள். சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

ஜோய்ஸ்
13-05-2007, 06:03 AM
பதிக்கப்பட்ட கருத்து சரிதானே.அதை மொழிந்த விதத்தை பாராட்டியே ஆகவேண்டும்(மூலத்தைத்தான்)

crisho
14-05-2007, 10:33 AM
எழுதியவரை பாராட்டியே ஆகவேண்டும்... செஞ்சரி அடிச்சியிருக்கார்!!

மாப்பு இங்கு பதித்தமைக்கு நன்றி!!

அன்புரசிகன்
14-05-2007, 10:47 AM
இனி ஒரு உதாரணம் சொல்லலாம். நாடு பற்றி எரியுது. ஜனாதிபதி ஆட்டம் பார்த்த விசில் அடித்துக்கொண்டிருக்கிறார் என்று.

முன்னர் ஒன்று கேள்விப்பட்டிருந்தேன். காடு பற்றி எரியுது. நரி லோங்சு போட்டு காவடி ஆடிச்சாம் என்று. (தீயை அணைக்க)

மனோஜ்
14-05-2007, 10:54 AM
சித்தரிப்பு அருமை
சுட்டிக்கு ஒரு சுட்டிநன்றி

ஜெயாஸ்தா
14-05-2007, 11:56 AM
ராஜபாக்சேவின் நிலைமையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. (!)

praveen
14-05-2007, 12:12 PM
எந்த நாட்டு அரசியல்வாதி நாடு பற்றி உண்மையிலே கவலைபட்டிருக்கிறார். கேட்டால் ஓவரா நாட்டை பற்றி கவலைப்பட்டு அதை மறக்க தான் வெளிநாட்டு பயனம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

மக்கள் தான் பாவம், திரும்ப திரும்ப இம்மாதிரி ஆட்களிடமே நாட்டை ஆளும் வாய்ப்பு அளிக்கிறார்கள்.

அமரன்
18-05-2007, 08:36 AM
இது ஒட்டு மொத்த அரசியல்வாதிகளின் நாடகம்.