PDA

View Full Version : நந்தியாவட்டைப் பிள்ளையார்!!!தீபன்
10-05-2007, 05:11 PM
நந்தியாவட்டைப் பிள்ளையார்!!!

விடிந்தும் விடியாதுமாய் ஒருபொழுது
விழிகளைக் கசக்கியபடி படுக்கையில் நான் - மனிசி
அள்ளிக் குளிக்கும் சத்தம்
வெள்ளிக் கிழமை என்று நினைவுபடுத்தியது...

யன்னல் வழியே சரசரக்கும் சத்தம்
என்னவா இருக்குமென்று சன்னமாய் பார்த்தேன்,
சத்தத்திற்கு காரணம் சர்ப்பம்..!

அருகே நின்ற நத்தியாவட்டையில்
சரசரவென்று ஏறுகிறது,
கொத்தாக பூத்த வெளேரென்ற பூவில்
சிட்டாக பறந்து அமர்தெழும்பும் சிறு குருவியை குறிவைத்து

வழமையாக வரும் பால்க்காரன் மணியடிக்க
பாம்பு மிரளத் தொடங்கியது!
பால் வந்திருக்கு என்னப்பா பார்த்துக் கொண்டிருக்கிறியள்
குளியல் முடித்த குறுக்குக் கட்டுடன்
குறுக்கிட்டாள் என் மனையாள்!
சர்ப்பம் மேலும் மிரண்டது..!

சத்தம் போடாதே என்று சைகை காட்டிவிட்டு
சர்ப்பத்தை பார்த்தேன் - அரோகரா
அது வைத்த குறி தப்பி குருவி தப்பித்தது..!
பாய்ந்து கவ்வியதில் பாம்பின் வாயில்
பாலுடன் ஒட்டிய சில வெள்ளைப் பூக்கள்!

மனிசியிடம் சொன்னேன்
பாம்பு பூ கொண்டுபோறதைப் பார் என்று,
அவளுக்கு பெரு வியப்பு!
ஓமப்பா இண்டைக்கு வெள்ளிக்கிழமை, பிள்ளையார் கதை வேற
அங்கதான் கொண்டு போகுதுபோல
நிண்ட இடத்திலேயே கும்பிடத்தொடங்கினாள்..!

நகர்கிறது நாட்கள்,
நாளாந்தம் கால் ரம்ளர் பால்
நந்தியாவட்டைக்கு படைப்பு..!?
அடுத்த வெள்ளி பொங்கல்..!?
கோயில் கட்டக் கொன்றாக்கும் ஆச்சு

போற போக்கைப் பொறுக்க முடியாமல்
விசயத்தை விளக்கிச் சொன்னேன் மனிசிக்கு- நம்பவில்லை
தொடர்ந்து நடக்குது பால்வைப்பு!

நம் வீட்டிலும் வரக்கூடும்
நாளடைவில் ஒரு
நந்தியாவட்டைப் பிள்ளையார்!!!

தீபன்
14-05-2007, 06:20 PM
இந்தப் பிள்ளையாரை தரிசிப்பார் எவறுமில்லையா..?

ஓவியன்
15-05-2007, 09:46 AM
அருமை தீபன்!!

இலங்கை வழக்குத் தமிழில் உங்கள் கவிதை நன்றே இருந்தது.

உங்கள் கவியின் கருவைச் சரியென்றும் சொல்ல முடியவில்லை, தப்பென்றும் கூற முடியவில்லை.

சில நம்பிக்கைகளை நம்பித்தானாக வேண்டும் எங்கள் வாழ்க்கையில்.

namsec
15-05-2007, 09:56 AM
இந்தப் பிள்ளையாரை தரிசிப்பார் எவறுமில்லையா..?

உங்களின் மனையாள் இருக்கிறாளே

lolluvathiyar
15-05-2007, 10:34 AM
பாம்பை அடிக்க கூடாது என்று நல்ல
என்னத்தில் தான் அந்த காலத்தில்
அவை தெய்வமாக கருத பட்டன.

ஆனால் மூட நம்பிக்கையை அழகான
கவிதையால் விளக்கி இருகிறீர்கள்

தீபன் நானும் ஒரு பட்டிகாட்டான் தான்
ஆனாலும் எனக்கு இந்த நந்தியாவட்டை என்றால்
என்ன என்று தெரியவில்லையே

தீபன்
16-05-2007, 05:54 PM
பாம்பை அடிக்க கூடாது என்று நல்ல
என்னத்தில் தான் அந்த காலத்தில்
அவை தெய்வமாக கருத பட்டன.

ஆனால் மூட நம்பிக்கையை அழகான
கவிதையால் விளக்கி இருகிறீர்கள்

தீபன் நானும் ஒரு பட்டிகாட்டான் தான்
ஆனாலும் எனக்கு இந்த நந்தியாவட்டை என்றால்
என்ன என்று தெரியவில்லையே

நித்தியகல்யாணிபோல ஒருவகை பூக்கும் தாவரம்தான் நந்தியாவட்டை செடி. (நித்தியகல்யாணி எப்படின்னு கேட்டுடாதிங்க... )

தீபன்
16-05-2007, 05:57 PM
உங்களின் மனையாள் இருக்கிறாளே

அதுகூட கற்பனையில்தானே ஐயா...!

தீபன்
16-05-2007, 06:04 PM
அருமை தீபன்!!

இலங்கை வழக்குத் தமிழில் உங்கள் கவிதை நன்றே இருந்தது.

உங்கள் கவியின் கருவைச் சரியென்றும் சொல்ல முடியவில்லை, தப்பென்றும் கூற முடியவில்லை.

சில நம்பிக்கைகளை நம்பித்தானாக வேண்டும் எங்கள் வாழ்க்கையில்.

அதனால்தான் அடிக்கடி கடவுள்கள் ரத்தக் கண்ணீர் ட்டிப்பதும் ஒளிவட்டம் தெரிவதும் நிகள்கின்றன...

தீபா
09-07-2008, 07:15 AM
இப்படியும் நடக்குதுங்க. அதுஎன்னங்க மனிசி? நந்தியாவட்டைன்னாலும் என்னன்னு தெரியலைங்க.

நல்ல சமூக கருத்துள்ள கவிதைங்க.

தீபன்
09-07-2008, 02:45 PM
இப்படியும் நடக்குதுங்க. அதுஎன்னங்க மனிசி? நந்தியாவட்டைன்னாலும் என்னன்னு தெரியலைங்க.

நல்ல சமூக கருத்துள்ள கவிதைங்க.
மனிசி - மனைவி (இலங்கையில் பேச்சு வழக்கில் வழங்கும் பதம்).
நந்தியாவட்டை - ஏற்கனவே மேலுள்ள ஒரு பின்னூட்டத்தில் இந்த சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளேன்.
படைப்புக்களை படிக்கும் அவசரத்தில் பின்னூட்டங்களை கவனிக்க மறத்து விட்டீர்கள். உண்மைல்யில் படைப்புக்களைவிட அதற்கு வரும் பின்னூட்டங்களே ரசனை மிகுந்தவை. அந்தப்படைப்பை ஒவ்வொருவரும் எந்த விதத்தில் விளங்கிகொள்கின்றனர் என்பதையும் படைப்பின் நோக்கம் வெற்றியடைந்துள்ளதாவென்பதையும் அவற்றிலிருந்தே அறியலாம்.

அன்புரசிகன்
09-07-2008, 02:53 PM
Ervatamia divaricata என கூறுவது தான் நந்தியாவட்டை.....

இங்கே (http://images.google.ae/images?q=Ervatamia%20divaricata&ie=UTF-8&oe=utf-8&rls=org.mozilla:en-US:official&client=firefox-a&um=1&sa=N&tab=wi)பாருங்கள். உங்களுக்கே புரியும். சென்னையில் பல இடங்களில் கண்டிருக்கிறேன்...

தீபன்
09-07-2008, 03:07 PM
நன்றி ரசிகா...
நான் நினைக்கிறேன், சென்னையில் இதற்கு வேறு பெயர் இருக்குமென்று!

இளசு
13-07-2008, 03:45 PM
நந்தியாவட்டை - தமிழகத்திலும் புழங்கும் பெயரே தீபன்..

மனிசி - நான் அறியாத சொல்.. கற்றேன்!

பால்குடிக்கும் பிள்ளையார்
மரவேரில் தெரியும் அம்மன் முகம்
பசு கண்ணில் தெரியும் எம்ஜியார்..

எத்தனை எத்தனை ''மாஸ் ஹிஸ்டீரியாக்கள்'' நம் சமூகத்தில்..

ஒருவர் நம்ப, ஆதார நம்பிக்கைகள் உந்த ----> பலரும் நம்ப
தீவிரத் தொற்றுச் சக்தி கொண்டது இவ்வகை பக்தி!


இந்த வகை தொற்று அலைகள் -- பக்தி மட்டுமன்று
சில அரசியல் நம்பிக்கைகள்
சில பொருள் தட்டுப்பாடுகள்
சில திரைப்பட வெற்றிகள்
என பலவற்றில் காணலாம்!

வெள்ளாட்டு மந்தை என நம்மைச் சொன்னால் ஒருவகையில் தப்பில்லை!

வட்டார வழக்கில் உங்கள் கவிதை அழகு...!
வாழ்த்துகள் தீபன்!

தீபன்
15-07-2008, 08:46 AM
நன்றி இளசு அண்ணை.

வெள்ளாட்டு மந்தைகள் நாமென்று சொல்லும் குற்றச்சாட்டுக்குள் உங்களையும் அடக்கி பலரின் எதிர்ப்பு வாதங்கள் உங்களை நோக்கி திரும்பிவிடாமல் தப்பித்துக்கொள்ளும் உங்கள் சாமர்த்தியத்தை பல பின்னூட்டங்களில் நான் அவதானித்திருக்கிறேன். நல்ல தந்திரம்....

மனிசி என்பது மனுசன் என்பதின் பெண்பதம். பொதுவாக வயதான மத்திய வயதுள்ள பெண்களைப்பற்றி குறிக்கையில் மனுசி என்ற பதத்தை பேச்சுவழக்கில் பயன்படுத்துவர். சந்தர்ப்பத்திற்கேற்ப மனைவி என்ற அர்த்தத்திலும் பயன்படும்.

பாராட்டுக்களிற்கு நன்றி அண்ணா.