PDA

View Full Version : குறிப்பைவிட்டுப் பார்க்கும் இரு கண்கள்



பிச்சி
26-01-2007, 08:55 AM
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள்
என்னை ஒருவன் காதலித்தான்... வேதனை செய்தான்... என் மனம் அறியாமல் தோற்றோடிவிட்டான்... அவனைப் பற்றி...............

வீதியில் நின்று சிரித்தோடிவிடுகிறது
இளமை பொங்கும்
இன்ப நிலா!

கண்டாவது களித்திடுவோமென
கங்கணம் கட்டியே
காத்துக் கிடக்கிறது
ஒரு கவியின் கரு.

அயர்ந்து போன வானத்தில்
கோபக் கூட்டமாய்
பால்வழியில் கூடுகின்றன
பூமியில் காதல் மறுப்பை
மறுத்து ஏங்கும்
கவிஞர்கள் கவிதைகள்

நிலவை நிந்தித்தே
நித்தம் கூடிடுவார்கள்
தீட்சணம் இல்லாமல்
தீண்டிடுவார்கள்
அனலின் அனுபவத்தை
எப்போதும் தாங்கியே போன
நிலவின் மையத்தில்
பனிகளை உருக்கி ஊற்றுவார்கள்
கவிஞனின் அநுமானத்தில்
ஏதாவது மிச்சமிருக்கலாம்
ஆம்! நிலவுக்கும் நிழழுண்டு
நிழற்சரிவு ஏற்படுத்த முடியுமா
சூரியனின் காதலியை ஏய்க்கும்
சூரிய பருக்கள்?
நெஞ்சு பிளந்தாலும்
நெருங்க முடியாத ஒரு
நட்சத்திரத்தின் அனல் மட்டும்
எப்போதும் வீசிக்கொண்டேதான் இருக்கும்...

பிச்சி
26-01-2007, 03:07 PM
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 2

சொரிந்து கிடக்கின்றன
வெந்தழலில் கருகப்போகும் பூக்கள்
முழித்துப் பார்த்து சிரிக்கிறதே
தேனுக்குச் சுற்றும் வண்டுகள்

இதே தெருவில்தான்
ரதிமன்மத ஊர்வலம்
கண்டதுகள் இந்த சக்கைகள்.
நர்த்தனம் போட்டு
வரவேற்றதுவும் இவைகளே!!

நெளிந்து வளைந்தாடும்
இலைகளின் நுனியில்
சொட்டாக அமர்ந்து
கனம் ஏற்றும்
தீப்பந்த்ததின் துளிகள்
இவ்விரண்டு உதிர்தலை
கவனிக்காமல் போய்விடுகின்றன
அல்லது தடுப்பணை போடுகின்றன.
வெந்தழல் மெருகினில் பூக்கள்
செம்மையாகத் தெரியலாம்
மாயம் அது.

மீதியின்றி கருகிப் போகும்
பூக்களின் வாசனை நுகருவது
வண்டுகளின் நோக்கமென்றால்
தீந்துளிகளின் தடுப்பணை
தோற்று விடுகிறதே!
இறைவா! விட்டுவிடு
இனி மென்மையாகப் படைப்பதை.

(பூக்கள் என்பது பெண்கள்; வண்டுகள் என்பது ஆண்கள். தீந்துளி என்பது இவர்களது பெற்றோர்கள்)

பிச்சி
03-02-2007, 03:56 PM
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 3

கீழ்நோக்கிய
தென்னங்கீற்றின்
ஓர் காய்ந்துபோன மூலையில்
படர்ந்து கொண்டிருக்கும்
புழுதியினைப் போல்
நெளியாது, வழியாது
உறங்கிக் கொண்டிருக்கிறது
நெஞ்செலும்பில்லாத
ஓர் புழு

மாலைச் சூரியனைத்
தன் ஓரக் கண்ணால் சிமிட்டும்
கீத்துக் கீத்தாக கிழிந்து
அதேசமயம் அழகாய் வடிந்து
இருக்கும் இரு இலைகளின் மேல்
முள் பாதுகாப்பில் விழித்திருக்கும்
ஒரு சிவப்பு நிற மெல்லிதழ்

மெல்லிய இச்சைக் காற்றின்
ஊதலில், நிசப்தமாய்
இயற்கையின் காகிதமான
இதழ்களில் விழுந்து
அலைகிறது; துலாவுகிறது
இந்தப் புழு
எங்காவது தேன் இருக்குமா என்று!

மெல்லிதழ்கள்
புழுக்களின் ஊரலில்
காயமாகாது
காற்றைத் துணைக்கழைத்து
வீழ்த்திவிடும் எண்ணத்தோடு
சிரித்து மகிழ்கிறது
முற்களைச் சூழ்ந்து வைத்திருக்கும்
பல இதழ்களின் தொகுப்பு.

என்றுமே மீண்டும்
எட்டிப் பார்க்க நினைக்கும்
குலைந்துபோன சேற்றின்
உருவங்களை
ஒதுக்கி வைத்து வாழ
நினைக்கும் பூவின் வாசனை

ஒளியில்லா பேதையினை
சீண்டுவது
நெருப்பின் நுனியில்
வேக வைத்த புழுவாய் போகும்

புழுக்களே!
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்காதீர்கள்
உங்களின் கண்கள்
நித்திய சூரியனின் அனலில்
காணாமல் போய்விடும

பிச்சி
07-02-2007, 12:05 PM
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 4

காற்றின் சலனத்தில்
காய்ந்தாடும் வேள்விழியை
கசந்துபோன ரசங்களைக் கொண்டே
கையாடுகிறாய்

சருகுகளின் சந்தடியில்
அவித்துப் போன செவியை
வைத்துக் கொண்டு
புன்னை மரத்து இலைகளின்
துளிர்ப்பாய் ஜீவிதம் கொள்ளூம்
உனக்கு விழிப்படலத்தில்
விழுந்தவைகள் சொர்ணமா?
காட்சிப் பிழையில்லாத வர்ணமா?

நீ காண்வதெல்லாம்
பூவின் கலசம் என்று
அறியும் போது
என் கருவூல இதயம்
கொள்ளைகொள்கிறது..
தோட்டத்துப் பாதையில்
பூஞ்சருகுகள் இருக்கலாம்
சப்பாத்திப் பூக்கள் இருக்கலாமா?
குத்திய வேதனைகள்
வெள்ளை இறகுகளுக்குத் தெரியும்
வர்ண குருதியாக
உன் மனதை மட்டும்
கொடூரமாய் வைத்துக்கொண்டாய்
மறதியாக.....

உன் பாடக் குறிப்புகளில்
a+b = ab என்றும்
என் பாடக் குறிப்புகளில்
a>b என்றுமே
எழுதப்பட்டிருக்கிறது.
உன் குறிப்புகள் தவறா?
என் கணிப்புகள் தவறா?
எட்டிப் பார்க்கும்போது
பார்வைக் கோளாறாக
என்றுமே உனக்குத் தெரிகிறது
a+b = abc
தோண்டிய குறிப்புகளை விடு
அல்லது
விஷமிழந்த கள்ளிச் செடியாக
அழுதிடுவேன் வர்ணமற்ற ரத்தத்தோடு
எண்ணுவதை விடு
நாட்களையும்
என்னையும்.....

பிச்சி
28-02-2007, 02:18 PM
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 5

எட்டிப் பார்த்த
இரு விழிகளின் நரம்புகள்
என் குத்தல் பார்வையில்
விழி நடுங்கிப் போயின

மரண வேதனை நிகழும்
நெஞ்சாய் உருமாறிக்
கொண்டிருந்த அவன் நெஞ்சில்
துர்நாற்றம் வீசியதைக்
கையால் தடவிப் பார்த்தான்.

ஏந்தெழில் மேனியென் மேனி
போர்த்திய சீரைக்குள்
ஒளிந்திருக்கும்
பூந்தளிர் மனதினை,
நரம்புகளை அம்பாய்க் கோர்த்து
புதைத்திடத்தான் எய்தினான்.

பள்ளியெழுந்த கண்களும்
காணும் தெளிவாக, அவன் பார்வை
துள்ளியெழுந்த இமை முடியும்
தூங்கிவிடும் தாக்குதலில்.
துஷ்டனே என
துர்வாசன் சாபமிட்டாலும்
சிரித்துக்கொண்டுதான் இருப்பான்
புழுக்கள் நெளியும் பற்களோடு..

குடல்பிடுங்கும் வாசனை
நாசியில் ஊற,
மெல்ல எழுந்து வந்து
நெஞ்சைக் கீறிய கைகளால்
தொட்டுப் பேசிட முனைந்தான்.

புழுக்களின் அடுக்கடுக்கான
மேனியும் அழகு என்று
பூச்சிகள் பயணித்திட முடியுமா?

வாயிலிருந்து வெளியேறும்
எச்சில், நூல்களை விட
மெல்லிய இழையென்றாலும்
ஆளையே கொல்லும் விஷமல்லவா?

ரெளத்திரம் கண்களில் ஏற
சிவந்துபோன நரம்புகளின்
வெடிப்பில், நிலைகுலைந்து
நினைவு மலுங்கிப் போனான்.

மின்னலின் தடம் பற்ற
முடியாது யாராலும்
இன்னலின் தடம் பற்றிட
முடியும் யாராலும்.
இவன் வினாடி நேரத்தில் என்னை
அடையப் பார்க்கிறான்
நான் கொட்டிய உதிரத்தை
கண்களில் வீசிடவே பார்க்கிறேன்.

தொடரும்.........

பிச்சி
06-03-2007, 01:03 PM
குறிப்பை விட்டு எட்டிப் பார்க்கும் இரு கண்கள் 6

உதிர்வினில் அழுதிடும்
மெல்லிலை மேலே
வெட்கம் பொருள் பாறாது
உமிழ்கிறாய்
உன் தாய் படைத்த வாயிலிருந்து

என்றாவது உதிர்பூக்களின்
விம்மிய மனத்தினைப் பார்த்ததுண்டா ?
உன் சந்தடி பட்டு
பொடியாய்ப் போகும் அவைகளின்
மனவேதனை ஒலியாவது கேட்டதுண்டா?

வாசம் வீசும் ஏலக்காயின்
உட்புற விதைகளை
உன் எச்சில் படுத்தி
எரிமலையின் உலைக்களமாய்
மாற்றிவிட்டாய்
உன் கொட்டம் அடக்கத்தான்
புனைப்பெண்ணாய் மாறினேனோ?

ஈறு பற்களின்
சந்து இடைவெளியில்
ஊறும் புழுக்களைப் போக்குவதில்லை
உன் காமவேட்கை படிந்த விரல்கள்
உள்துழாய்க் குடல்களின்
நாற்றத்தை மீறி
பரிகாசமாய் சிரிக்கிறது
உன் மந்தப்புத்தியுடைய மனது

கீறிய ரணங்களிலிருந்து
ஒரு துளி விழுந்திடினும்
புகைச்சல் ஆரம்பமாகும்
உன் கெட்டுப்போன இதயத்தின்
மேற்புற சவ்வுகளிலிருந்து..........

வீக்க மிகுதியில்
இடும் சாபங்களின் உஷ்ணம்
உன் உடலை எரித்துவிடும்.
உன் கனவை கலைத்துவிட்டு
நித்திரை கொள் புழுவே !
மிடிமை கொண்ட இதயத்திற்கு
என்று பிச்சி
அடிமை கொள்ளமாட்டாள்
பூச்சடங்கிய இதயத்திற்கு
எந்த பெண்ணும் மயங்கமாட்டாள்..

தொடரும்///

பிச்சி
07-11-2007, 12:23 PM
யாரவது இந்த பக்கம் எட்டிப் பாருங்களேன்.

அன்புடன்
பிச்சி

அக்னி
17-11-2007, 06:41 AM
அடடா... அருமையான ஒரு கவிச்சுனை...
முதலிரண்டு அள்ளிப் பருகினேன்... தெள்ளமுதம்...
ஆழமாகப் பருக, ஆறுதலாக வருகின்றேன்.

சிவா.ஜி
17-11-2007, 06:50 AM
அதே அதே சகோதரி. அக்னி சொன்னதைப் போல அள்ளிப்பருக அவகாசம் வேண்டும்.அத்தனையும் தேன் ஆனால் திகட்டாதது.முழுதும் நனைந்து மீண்டும் வருகிறேன்.நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் பிச்சி.

பூமகள்
17-11-2007, 07:07 AM
பிச்சி மா...!
உமது கவியை சுவைக்க காலம் கருணை காட்ட காத்திருக்கிறேன்..!
முதல் படைப்பு அழகு...! பாராட்டுகள்..!
உன் கற்பனா சக்தியை முழுதும் படித்து லயிக்க காத்திருக்கிறேன்..
பொறுத்தருள்க தங்கையே...!!

பிச்சி
24-01-2008, 02:21 PM
நன்றி அக்னி அண்ணா, சிவாஜி அண்ணா பூ அக்கா.