PDA

View Full Version : இரு கண்களும் சிலசூரியன்களும்



மதுரகன்
19-02-2007, 04:59 PM
பாகம் - 1(ஆரம்பம்)

இருகண்களும் சில சூரியன்களும்...

சிலவேளைகளில் நானும் இந்த தென்றலும் அமைதியாக இருந்திருக்கக்கூடும்
உன்னைக்கண்டிராவிடின்...

அன்று சூரியன் மறைந்திருந்து ஒளிவீசியபோது எனக்குப்புரியவில்லை
யாரைக்கண்டு இந்த நாணம் என்று...
இந்த மேகக்கூட்டங்களெல்லாம் சிதறி ஓடியபோது நான் ஆச்சரியப்பட்டேன்
எந்தப்புயலுக்கு இந்த ஜீரணிக்க முடியாத அமைதியைப்பிடிக்கவில்லை...
எந்தக்காற்றுக்கு அஞ்சி இந்தவேகமான ஓட்டம்...

அந்த வழியால் உன்னைப்பார்த்தபோது புரிந்தது
இது ஒன்றும் பெரியவிடயமில்லை.......
ஆனால்..
நான் ஓட நினைத்தபோது என்கால்களும் ஓடின உன்னை நோக்கி...


தொடரும்

ஷீ-நிசி
20-02-2007, 03:42 AM
அருமையான ஆரம்பம் மதுரகன், தொடருங்கள்... நாங்களும் உங்களோடு பவனி வருகிறோம்!

மதுரகன்
20-02-2007, 05:05 PM
இரு கண்களும் சில சூரியன்களும்..

பாகம் 2

அந்தச்சாலை நிச்சயமாகவே கொடுத்துவைத்தது...
அந்த தேவதையின் கால் தடங்களை அந்தவீதியில் கண்டுபிடித்தபின்
நான் ஏறத்தாழ காவலனாகவே மாறிவிட்டேன் அதற்கு...

என்னுடைய நாட்களின் பெரும்பங்கு இப்பொழுதெல்லாம்
காத்திருத்தலுடனேயே முடிந்து விடுகின்றது.
நான் அவளுக்காக காத்துக்கொண்டிருப்பேன்..

வீதி என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருக்கும்..
நான் வானத்தைப்பார்த்து சிரித்துக்கொண்டிருப்பேன்...
அந்த தெருவை கடந்து செல்பவர்களெல்லாம் என்னைக்கண்டு சிரித்துக்கொண்டிருப்பார்கள்...

காத்திருந்து அவள் வரத்தாமதமாகும் போதெல்லாம்
என் பேச்சுக்களெல்லாம் அந்த வீதிக்கே கிடைக்கும்..

அந்தச்சாலை என்னைப்பொறுத்தவரையில் ஓர் உயிருள்ள அங்கமாகிவிட்டது..

அன்று..

சூரியனும் சந்திரனும் புணர்ச்சியில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அந்திப்பொழுதில்
அந்தச்சாலையில் .. நீ வெட்கப்பட்டுக்கொண்டே
காய்ந்து விழுந்து கிடந்த இலைச்சருகுகளை
அழகாக மிதித்துக்கொண்டு வந்துகொண்டிருந்தாய்...

நான் நின்று வான் பார்த்தேன்
நீ குனிந்து நிலம் பார்த்தாய்...

நீ தலைகவிழ்ந்தபோது நட்சத்திரங்கள்
ஒளியிழந்து வாடிப்போயின
நீ தலை நிமிர்ந்தபோது நிலவு
உன்னைப்பார்த்து தலைகுனிந்தது...

சூரியன் விலகிக்கொண்டான்

அவன் விட்டுச்சென்ற போர்வை என்மீது படிந்தது.
அந்தப்போர்வை விலகியபோது உன் முகம்
காணாமல் போயிருந்தது.

நான் மூர்ச்சையுற்றேன்.........
தொடரும்..

அமரன்
20-02-2007, 05:22 PM
அருமையான வைர வரிகள். மதுவரவனின் தேன்மதுரக்கவி பொங்கிப் பிரவாகமாகப் பாயட்டும். அதில் குளித்து முத்தெடுக்க நாம் தயாராவோம்.

அறிஞர்
20-02-2007, 06:39 PM
காதலியை விவரிக்க வார்த்தைகள் கிடையாது..

மதுரகனின் வரிகளில்... வீதியும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் படும்பாடு அழகாக உள்ளது.

இன்னும் தொடரட்டும்...

மதுரகன்
31-03-2007, 06:56 PM
என்னுடைய பிரச்சனைகள் தொடர்ந்து துரத்தினாலும் நான் மீண்டும் களத்தில்....

இருகண்களும் சில சூரியன்களும் பாகம் 3
அன்று..
எந்தப்பெண்ணிடமோ அவமானப்பட்டதற்காய்
வெட்கப்பட்டுக்கொண்டு
சூரியன் தன் முகத்தை மூடிக்கொண்டான்.
சூரியனைக்காணாத துயரில் வெண்மேகங்கள் முகம் கறுத்து
அழுதுகொண்டிருந்தன..
அந்தச்சாலையின் ஓரத்தில் அந்த மரம் என்ன பாக்கியம் செய்தது....
அந்தப்பாவை அதற்குக்கீழே பாதி நனைந்தும் நனையாமலும்...
தன்னுடைய தாவணித்தலைப்பினால் தலையை மூடி
இரு கைகளையும் நெஞ்சுக்கு குறுக்கே அணைபோட்டவாறு...
வடிந்து செல்லும் நீரை கால்களால் எத்தி விளையாடியபடி,

அந்தக்காட்சிகளை கண்களால் பருகியபடி திரங்கி நிற்கும் நான்
என் கையிலிருந்த ஒற்றைக்குடைக்குள்
அவளையும் அழைத்துக்கொள்ளலாமா..? அழைத்தால் வருவாளா..?
வராவிட்டால் என்னால் தாங்க முடியுமா..?
சிந்தனையிலிருந்து தெளிவாகி அவளை அழைக்க எண்ணியபோது
மழை நின்று விட்டிருந்தது...
"ஏன் எனக்கு தூக்கம் வரும்போது மாத்திரம்
கனவுகள் காணாமல் போய்விடுகின்றன"

என்னுடைய உள்ளங்கால் வரை கூசியது.
தோல்வி ... வேறு வழியின்றி கிடந்து அழுகின்றேன்..
பாவம் என்னுடைய குடையின் விதி அன்று நிர்ணயிக்கப்பட்டது...

தொடரும்...

ஆதவா
31-03-2007, 07:08 PM
முதலில் மீண்டும் உங்களை நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்ததில் மகிழ்ச்சி. நலமா?
தொடருங்கள் மதுரகன்.... உங்கள் சூரியனைச் சுற்றிவர இந்த ஆதவனுக்கும் ஆசைதான்..... பாகம் முடிந்ததும் முழுமையான விமர்சனம் இடுகிறேன்... அதுவரையில் படித்து பொருள் விளங்கிக்கொள்கிறேன்...

மதுரகன்
31-03-2007, 07:10 PM
நான் நலமே ஆதவா நிச்சயம் தொடர்கிறேன்....

மதுரகன்
06-05-2007, 05:44 PM
இரு கண்களும் சில சூரியன்களும்... பாகம் - 4

மீண்டும்...
மற்றொருமுறை...
கட்டிவைக்கப்பட்ட என்னுடைய சோகங்களை
அவிழ்த்துவிட்டது போல மழைபொழிகின்றது...
அந்த சாகரத்தில் நனைந்தவாறு
ஒரு வெறியுடன் நடந்துகொண்டிருக்கிறேன்...

திடீரென நீ அந்தச்சாலையில் நுழைகின்றாய்
மேகங்களால் சமுத்திரங்களுக்கு தூதுவிடப்பட்ட
அந்த நீர்த்துளிகளின் அன்றைய தூக்கத்தை
கெடுக்க விரும்பாததுபோலே நீ ஒரு குடையுடன் வந்துகொண்டிருக்கிறாய்...

நீ என்னை நெருங்க நெருங்க இதயம் படபடக்கின்றது குடைக்குள் வரச்சொல்வாயோ..?
இதற்காகத்தான் அன்றைய நாள் தவிர்க்கப்பட்டதோ...
எல்லா ஆதங்கங்களையும் மீறி நீ நேரே கடந்து செல்கிறாய்..
அந்தச்சாலையில் கிடந்து துடிக்கின்ற என் இதயத்தை மிதித்து உழக்கிவிட்டு...

எனக்கு தலை சுற்றியது.. உடனடியாக அவள் கண்பார்வையில் சந்தேகம் வந்தது.
இல்லை என தீர்மானித்தபோது என் மனம் மீண்டுமொருமுறை அதிர்ச்சியுற்றது...

தொடரும்..

அறிஞர்
08-05-2007, 07:30 PM
காதல் வரிகள் கொஞ்சம் உலுக்குகிறது....

தொடருங்கள்.. மதுரகன்.