PDA

View Full Version : இது அழகான நினைவல்ல..! (பத்தாம் ஆண்டு நினைவு நாள்)அக்னி
05-05-2007, 06:13 PM
பயணங்களில் இன்னுமொரு பக்கமுண்டு. ஈழத்தமிழர் கூடுதலாக அனுபவித்திருக்கிறார்கள். இன்றும், அனுபவிக்கின்றார்கள்... இனவாதத்திலிருந்து தப்பிப், புலம்பெயரும்போது அனுபவிக்கும் இன்னல்கள், சொல்லில் வடிக்க முடியாதவை.

அப்படியொரு பயணத்தில், என் கண்முன்னே போயின இரு உயிர்கள்...
மொஸ்கோவிலிருந்து உக்ரேன் போகும் வழியில் நிகழ்ந்த உண்மை நிகழ்வு இது...
பனி மூடிய நீர்ப்பரப்பில், நெஞ்சளவு நீரில், நீண்ட தூரம், நீண்ட நேரம், மறைக்குளிரில் நடந்தபோது வந்த வேதனை இது...

2002 ம் ஆண்டில் நான் இதனை எழுதியிருந்தாலும், இதுவரை என்னுடனேயே வைத்திருந்தேன். இன்றுதான் இதனை வெளியெடுக்கின்றேன்.

அந்த, துக்கநிகழ்வு நடந்தபின், குளிரின் விறைப்பினின்றும் ஓரளவு உடல்தேறி, ஒரு மாதத்தின் பின் எழுதியதை, இன்று, தமிழ்மன்றில், மரணித்த அந்த உயிர்களுக்காகச் சமர்ப்பணம் செய்கின்றேன்...


இது அழகான நினைவல்ல..!
அழுத்தமான நிகழ்வு..!!
(15.02.2002 02:00-03:30)


காதலர் தினம்
தாண்டிய
அந்த நள்ளிரவு..,
இரு கல்லறைகள்
புதிதாய்ப் பூமியில்
எழுந்தன...
இதயத்தை
உடைத்துவிட்ட
அந்தக்
கறுப்பு நிமிஷங்களுக்கு..,
பனிக்குளிரும் காற்றும்
கட்டியம் கூறி
நின்றன...


அந்தக்
குளிர்மையின் உச்சத்திற்கு
முகம் கொடுக்க முடியாத
இரு ஆத்மாக்கள்..,
புத்துலகம் தேடிப்
பறந்து போயின...
கனவுகளும்
எதிர்பார்ப்புகளும்
அவர்களுக்கு
கானல் நீராகிப் போயின...


அன்புத் தோழர்களே..!
அப்பன், அன்பழகன்
என்ற நாமங்கள், இனி
யாரை
உரிமை கூறி நிற்கும்..?
பழகிய
உள்ளங்கள் நாங்களே
கலங்கிப் போயல்லவா,
நிற்கின்றோம்...
உங்கள்
இரத்த உறவுகள்
எங்கெங்கோ
கதறியல்லவா நிற்கும்..!


உங்கள் திருமுகங்கள்
அந்நிய நாட்டின்
புதைகுழிகளுக்குள்
விழிமூடிப் போனதேன்..?


உம்மைச்
சுமக்க முடியாமற் போன
எம்மை நினைக்கையில்
வெட்கமும், வேதனையும்
சேர்ந்து நின்று
வாட்டுகின்றன...


மறைந்து போன
தோழர்களே..!
எங்களை
மன்னித்து விடுங்கள்..,
உங்களை மட்டும்
விட்டுவிட்டு
நாம் மட்டும்
நழுவி விட்டதற்கு...


உங்கள்
நினைவுகளைச் சுமந்தபடி..,
இனிவரும்
பெப்ரவரி பதினைந்துகள்..,
எம்மை
நாடி வரும்...


உங்கள்
சுவாசம் கலந்த
இந்தக் காற்று...
உங்களைத்
தினம்தினம் எமக்குள்
கொண்டுவரும்...

ஆதவா
05-05-2007, 06:16 PM
நண்பரே! நாளை எழுதுகிறேன் விமர்சனம்...

நன்றி.

சக்தி
05-05-2007, 06:20 PM
நண்பர்களுக்கு தாங்கள் அளித்த புஷ்பாஞ்சலி என் உள்ளத்தை உலுக்கிவிட்டது. உங்களின் நண்பர்களுக்கு
என் இதயம் கனிந்த இரங்கல்கள் உரித்தகட்டும்.

இணைய நண்பன்
05-05-2007, 06:41 PM
கவிவரிகள் உங்கள் வேதனையை எடுத்துக்காட்டியதுடன் எங்களையும் அந்த
துயரத்தில் பங்ககெடுக்க வைத்தது.

அக்னி
06-05-2007, 09:52 PM
நண்பரே! நாளை எழுதுகிறேன் விமர்சனம்...

நன்றி.

ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.


நண்பர்களுக்கு தாங்கள் அளித்த புஷ்பாஞ்சலி என் உள்ளத்தை உலுக்கிவிட்டது. உங்களின் நண்பர்களுக்கு
என் இதயம் கனிந்த இரங்கல்கள் உரித்தகட்டும்.

எனது உணர்வில், உங்கள் அஞ்சலிகள், அவர்களுக்கு ஆத்மசாந்தி தருவதாக...


கவிவரிகள் உங்கள் வேதனையை எடுத்துக்காட்டியதுடன் எங்களையும் அந்த
துயரத்தில் பங்ககெடுக்க வைத்தது.

என்றும் என்னால் மறக்க முடியாத நாள் அது...
உங்களின் பங்கெடுப்பு அவர்கள் குடும்பத்திற்கு அர்ப்பணம்...

நன்றி நண்பர்களே... துயரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு...

ஓவியா
06-05-2007, 09:57 PM
வருத்தங்கல் நண்பரே.

கவி புஷ்பாஞ்சலி நன்று.

இயற்கையை மிஞ்சி உலகில் ஏதுவுமில்லை.
அவைகளின் ஆட்சியில் அவைகலே நீதிபதிகள். தீர்ப்பும் அப்படியே.

அக்னி
06-05-2007, 10:19 PM
இயற்கையை மிஞ்சி உலகில் ஏதுவுமில்லை.
அவைகளின் ஆட்சியில் அவைகலே நீதிபதிகள். தீர்ப்பும் அப்படியே.

உண்மைதான் ஓவியா...
விஞ்ஞானம் விண்வெளிக்குப் போனாலும், மனிதனால் இயற்கை அனர்த்தங்களை வெல்ல முடியாது என்பதை, என்றுமே மனிதன் நினைவில் கொள்ளவேண்டும்...

poo
08-05-2007, 06:56 AM
உங்கள் கவிதாஞ்சலியில் இணைகிறேன்..

கண்முன் மறைந்த இரு உள்ளங்களின் ஆத்மாவும் திருப்தியடைந்திருக்கும்.. ஆத்மார்த்தமாக இந்தக் கவிதை அவர்களுக்கு உணர்ந்திருக்கும்..

அரசன்
08-05-2007, 07:06 AM
இந்த கவிதையைப் படிக்கும்போதே உங்களின் துயரத்தைக் கான முடிகிறது. வரிகளின் நடுவே வாழ்வின் உண்மைகளையும் காட்டியுள்ளீர்கள்.

ஓவியன்
08-05-2007, 08:58 AM
உலுக்கிவிட்டது உங்கள் வரிகள் அக்னி!

விறைத்து செத்தோர்
கடலில் வீழ்ந்து செத்தோர்
டாங்கரில் மூச்சு முட்டி செத்தோர்
எல்லைகளில் மாண்டோர்
என்று நீளும் இந்த பட்டியல்

உலகை ஆண்டவனும் தமிழன் தான்
இன்று உலகமெல்லாம் புலம் பெயர்வனும் தமிழன் தான்
கவலை வேண்டாம் விடிவு ஒன்று பிறக்கும்
அந்த விடியலை வரவேற்க தயாராகுங்கள்
நானும் வருகிறேன் - தாயகத்தை வரவேற்க

நம்பிக்கையுடன் ஓவியன்

மனோஜ்
08-05-2007, 09:07 AM
மனம் ரனமானது
கவிதாஞ்சலியில் நானும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோன்

அக்னி
09-05-2007, 12:40 PM
அனைவரது உணர்வுகளுக்கும் நன்றிகள்...

அக்னி
09-05-2007, 12:43 PM
உலகை ஆண்டவனும் தமிழன் தான்
இன்று உலகமெல்லாம் புலம் பெயர்வனும் தமிழன் தான்


தமிழன் இல்லாத நாடுமில்லை..,
தமிழனுக்கு என்றொரு நாடுமில்லை...

அமரன்
26-05-2007, 05:39 PM
ஒரு (ஈழத்)தமிழனாக உங்கள் உணர்வுகளுக்குத் தலைவணங்குகின்றேன்.

அக்னி
12-06-2007, 12:54 AM
ஒரு (ஈழத்)தமிழனாக உங்கள் உணர்வுகளுக்குத் தலைவணங்குகின்றேன்.
இது ஈழத்தமிழர் வாழ்வினின்றும் களையப்பட வேண்டும்...
நன்றி நண்பா...

அக்னி
15-02-2008, 12:01 AM
ஆறாண்டுகளுக்கு முன்னர், இந்த நாள்...
என்னை இன்னமும் சில்லிட வைக்கின்றது.
அன்று குளிரின் கொடுமை... இன்று நினைவின் கடுமை...
ரஷ்யப் பனிவயல்கள்... இல்லை இல்லை... பனிப்புதைகுழிகள்...
தமக்கு இரையாக, ஈருயிர் உண்ட நாள்...
விதைக்கப்பட்டது அன்று...
நெஞ்சில் நிழலாடுகின்றது இன்று(ம்)...


உயிர் காக்கும் பயணத்தில், உயிரிழந்த நண்பர்கள்...
அப்பன், அன்பழகன்...
இருவருக்கும் எனது நினைவஞ்சலிகள்...
இருவர் ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திப்பதோடு,
அவர்களின் குடும்பத்தவர்களின் மன ஆறுதலுக்காகவும் இறைவனை இறைஞ்சுகின்றேன்...

ஜெயாஸ்தா
15-02-2008, 02:34 AM
ஈழத் தமிழரின் வாழக்கை பாலாஸ்தீனிர்களின் வாழ்க்கை போல் எப்பொழுதுமே இன்னல்மயமாகவே இருக்கிறது. அவர்களுக்கு நல்வாழ்வு அமைய இறைவனை பிரார்த்திப்பதை தவிர எனக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இயலாமையின் முடிவு இறைவன்தானே...!

மலர்
15-02-2008, 03:40 AM
உயிரிழந்த சகோதரர்கள்.. அப்பன் அன்பழகன் இருவருக்கும்
என்னுடைய நினைவஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்...
அவர்கள் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிராத்தனைகள்...

இளசு
15-02-2008, 06:28 AM
அப்பன், அன்பழகனுக்கான - அக்னியின் நினைவாஞ்சலியில் நானும் கண்ணீர் சிந்தி பங்கெடுக்கிறேன்..

புலம் பெயர்ந்து சிதறி, சிரமப்படும் தமிழர் வாழ்வில் இன்னல்கள் மறைந்து,
மீண்டும் அமைதி, நிலைப்பு, அங்கீகாரம், உரிமை நிலவும் நற்காலம் விரைவில் அமைய வேண்டும்.. அது ஒன்றே இவ்வகைக் கொடும் இழப்புகளை தடுக்கும்...

அக்னி
15-02-2008, 10:13 PM
என்னோடு நினைவாஞ்சலியில் பங்கு கொண்ட அனைவருக்கும்
எனது நன்றிகள்...

ஓவியா
15-02-2008, 10:57 PM
தம்பி அக்னி செங்குருதி வடியும் உன் நினைவுகளை வருடிச்செல்லும் இந்த தினம் இனி உதிக்காமல் இருக்க நான் என்ன செய்வேன்? கடவுளின் படைப்பில் என்றும் இயற்க்கையே வெல்லும்.

உங்களுடன் இணைந்து நானும் நம் சகோதரர்கள் அப்பனுக்கும், அன்பழகனுக்கும் என்னுடைய நினைவஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்...

வாழ்க உன் தெய்வீக அன்பு.

சிவா.ஜி
16-02-2008, 03:35 AM
புலம் பெயரும் துயரத்தில்..உடன் வந்தோர் உலகம் நீங்கிய நிகழ்வு...அருகிருந்து கண்ட அக்னியின் மனம் எத்தனை வேதனைக்குள்லாகியிருக்குமென்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
இன்னும் எத்தனை துன்பங்களைத் தான் இறைவா என் சகோதர்களுக்கு கொடுப்பாய்?
குண்டுகளுக்குத் தப்பி...குளிரில் மாய்ந்து போன அந்த அப்பன்,அன்பழகன்...என்றும் நம் இதயத்தில் இருப்பார்கள்.அவர்களின் ஆன்மாவுக்கு என்னுடைய ஆழ்ந்த அஞ்சலி.

யவனிகா
16-02-2008, 05:22 AM
தனிமையில், அணு அணுவாக நிகழும் மரணம் குறித்த சிந்ததனைகள் கூட பெரும் துக்கத்தைத் தரும்...உயிரிழந்தவர்களை விட நேரில் பார்த்தவர்களுக்கு அதிலிருந்து காலம் முழுதும் விடுபடுதல் இயலாத ஒன்று,,,சகோதரர் அக்னி...இறந்தவர்களுக்கு என்னுடைய அஞ்சலியுடன், உங்களுக்கு ஆறுதலும்.

அனுராகவன்
16-02-2008, 09:54 AM
நல்ல கவி..
அக்னி என் நன்றி..

அக்னி
17-02-2008, 04:46 PM
அனைவரின் நினைவாஞ்சலிகளும்,
அவர்களை இழந்து துயருறும் குடும்பத்தினருக்கு,
ஆறுதலாகவும், தேறுதலாகவும் அமைய,
சமர்ப்பணம்...

அக்னி
15-02-2010, 11:12 AM
உயிரும் உடலும் விறைத்த
அந்தக் கணம்,
இன்னமும் உறைந்த நிலையில்
என் மனதில்...

அந்த நாளுக்கு நினைவு செல்கையில்,
மனம் உதறும்... கண் கலங்கும்...

ஆத்மாக்களே!
உங்களுக்கு என் இதய அஞ்சலிகள்...

அப்பன் என்கின்ற ஜெயக்குமார்!
எனக்கு நீச்சல் தெரியாது, பயணத்தில் ஆறு குறுக்கிட்டால் எப்படிக் கடப்பது என நான் பயந்தபோது,
என்னுடன் ஒத்துழை, உன் முடியைப் பற்றி நான் அழைத்துச் செல்வேன்
என்றவன்.
அந்த உறுதியான மனத்தினனை, மரணம் ஏன் ஜெயம் கொண்டது...

கிளிநொச்சியைச் சேர்ந்த அன்பழகன்!
தன் அன்பு மனைவியையும், மூன்று பிள்ளைகளையும் விட்டுப் பிரிந்த ஏக்கம்,
அதனால் ஏற்படும் சோகம் எப்பொழுதும் பிரதிபலிக்கும் முகம்.
ஆஜானுபாகுவான அன்பழகன்,
மரணித்தபின்னும் வள்ளலானவன்.
விறைப்பிற் பாதணி கழன்றதறியாது தொலைத்துவிட்ட ஒருவனுக்கு இறந்தபின் தன் பாதணி தந்தவன்.
அவனுக்கு ஏன் மரணம் இரக்கம் காட்டவில்லை...

இவர்கள் போல் எத்தனையோ பேர்.
ஆனாலும இவர்கள், கண்முன்னே மரத்து மறைந்ததால்,
என் மனதில் மறையாமலே...

உங்கள் உறவுகள் இன்னமும் உங்களைத் தேடி அலைவார்களோ...
உங்கள் வருகைக்காக நம்பியிருப்பார்களோ...
இந்த வேதனை, உங்கள் மரணத்தையும் மேவி,
என் மனதில்...

உங்கள் ஆத்ம சாந்திக்காகவும், உங்களை இழந்த உறவுகளின் ஆறுதலுக்காகவும்
இறைவனை இறைஞ்சுகின்றேன்...

அமரன்
15-02-2010, 08:50 PM
அக்னியுடன் சேர்ந்து பயணிப்பதில்ப் பெருமை..

கீதம்
16-02-2010, 06:56 AM
அக்னி அவர்களின் மனக்காயத்திற்கு மருந்து, அவர்களை எண்ணி இதுபோல் கவிதை வடிப்பதுதான். மனம் கொள்ளாத் துயரங்களுடன் நானும் அந்நண்பர்களுக்கு என் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

அக்னி
16-02-2010, 12:27 PM
நன்றி அமரன்...


மனம் கொள்ளாத் துயரங்களுடன் நானும் அந்நண்பர்களுக்கு என் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
உங்கள் அஞ்சலிகள் அந்த ஆத்மாக்களுக்கு ஆறுதலளிக்கும்.
நன்றி கீதம்...

lenram80
17-02-2010, 12:41 PM
மனதை பாதிக்கும் நிகழ்வு. கண் முன்னே கண்மணிகள் வீழ்வது மிகப் பெரிய துயரம். அன்னல்களுக்கு நினைவஞ்சலிகள்!

அக்னியாரே...
இக்கட்டான சூழ்நிலை காரணமா?

ஏன் இப்படி கடும் குளிர் என்று தெரிந்தும் பிப்ரவரியில் புறப்பட்டீர்கள்? ( கிட்லர் இந்த தவறைத் தான் செய்தார் என்று படித்திருக்கிறேன்.)

அக்னி
18-02-2010, 07:10 PM
ஆமாம் லெனின்...
நம் ஹிட்லர்கள் தான் அப்படி நம்மை அனுப்பி வைத்தவர்கள்.
கடும் குளிர் காலத்தில், நாடுகளின் எல்லைப்பாதுகாப்புகளில் எப்படியும் ஒரு தொய்வு இருக்கும்தானே.
அதனை இந்த ஹிட்லர்கள் பயன்படுத்திக் கொ(ண்ட)(ன்ற)னர்.

அவர்கள் சொல்லும் நேரத்திற், காட்டும் திசையில்
நாம் பயணித்தே ஆக வேண்டியத் தவிர்க்கவேமுடியாத இக்கட்டானநிலைதான்.

உங்கள் பெயரிலும் ஒரு ஹிட்லர் (பிரதான தமிழ்முகவர்) இருந்தார்... :cool:

பின்னூட்டத்திற்கு நன்றி...

ஓவியன்
20-02-2010, 11:00 AM
என்ன சொல்ல அக்னி, பல தடவை உங்களிடமிருந்து இந்த சம்பவத்தினை அறிந்திருந்தாலும் ஒவ்வொரு வருடத்திலும் உங்கள் வரிகளிலிருந்து ஆழமாக பற்றும் அந்த வலிகளை.....அந்த இருவரது எட்டாம் ஆண்டு நினைவஞ்சலியில் நானும் நனைகின்றேன்...

அக்னி
15-02-2011, 06:59 AM
நிஜத்திற் செய்ய முடியாதுபோன
அடக்கத்தினை,
நினைவிற் செய்துவைத்தேன்.
அந்த நினைவுச் சமாதியில்,
வார்த்தைகள் தூவி
அஞ்சலிக்கின்றேன்.

ஆண்டுகள் ஒன்பதில்,
அப்பன்..! அன்பழகனே..!
உங்கள் உடலங்கள் உக்கியிருக்கும்.
உங்கள் உயிர்கள் நித்தியமடைந்திருக்கும்.
ஆனால்,
என் நினைவில் உயிர்ப்பாய் நீங்கள்...

வலிமையிழந்த
அக்கணத்தின்
வலிகளுடன்,
அஞ்சலிக்கின்றேன்...

ஒன்பதாம் ஆண்டு நினைவில்
என் இதயவஞ்சலிகள்...

கீதம்
15-02-2011, 07:06 AM
அக்னியின் உக்கிரம் தணியாத
ஆழ்நினைவுகளின் நாயகர்களுக்கு
அஞ்சலிசெலுத்துகிறோம்,
எங்கள் நினைவுத்தூறல்களால்!

malarvizhi69
15-02-2011, 07:25 AM
உங்கள் கவிதாஞ்சலி படித்து மனம் கனத்து போனது.உங்கள் துயரத்தில் நானும் பங்கெடுத்து கொள்கிறேன்.அவர்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் .

Nivas.T
15-02-2011, 07:48 AM
அக்னி உங்கள் அஞ்சலியில் பங்குகொள்வதில் நான் பெருமைடைகிறேன்

நண்பர்களின் பிரிவில் வாடும் உங்களுக்கு கூறுவதற்கு ஆறுதல்தான் ஏது?

ஆண்டவா எம்மக்களின் இன்னல்களுக்கு முடிவு கிடையாத?
விடிவுதான் ஓர்நாள் வாராதா?

நாஞ்சில் த.க.ஜெய்
15-02-2011, 08:16 AM
ஒரு இழப்பினை நேரில் காணும் போது ஏற்படும் நினைவின் வலியே மிகவும் அதிகம் ....ஆனால் நம்மில் ஒருவரை நம் கண்முன் இழக்கும் போது அதன் வலி அன்று மட்டுமின்றி ஆண்டாண்டு காலம் நினைவிநூடே துன்புறுத்தும் ..அந்த நினைவினையும் மாற்றும் வல்லமை இந்த இயற்க்கைக்கு உண்டு ..இதில் அது சாத்தியமா என்று தெரியவில்லை ..இருப்பினும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் நானும் தூவுகிறேன் உங்கள் நினைவின் அஞ்சலிகளை என்னிநூடே... உங்கள் நண்பர்கள் அப்பன் மற்றும் அன்பழகன் ஆத்மா சாந்தியடைய என்னை ஆளும் என் இறைவனை வேண்டுகிறேன் ..

அக்னி
15-02-2011, 10:41 AM
அஞ்சலி செலுத்திய உறவுகளுக்கு,
என் நன்றிகள்...

அக்னி
15-02-2012, 08:11 PM
பத்து ஆண்டுகள்...
ஒரு தசாப்தம்...

உம் உறைந்த நினைவுகள்
இன்னமும்
என் மனம்விட்டு உருகவில்லை...

எழுத்துப்பூக்கள் தூவி
மௌனகீதமிசைத்து
உம்மை நினைக்கின்றேன்...

உங்கள் அகால மரணம்,
எத்தனை தசாப்தம் கடந்தாலும்
என் துயர் தணிக்காது...

ஒவ்வோர் வருடமும்
நீங்கள் இறந்த இதேநாள்தான்
நான் மறுபடி பிறந்தநாள்...

மறக்க முடியாத வலி நாள்...
மறக்க விரும்பாத துயர நாள்...

உங்கள் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன்,
என் இதயவஞ்சலிகளோடு...
உங்களை இழந்த உறவுகளுக்காகப் பிரார்த்திக்கின்றேன்,
என் இதயவாறுதல்களோடு...

கீதம்
15-02-2012, 08:17 PM
காலம் உங்களுக்கு கருணை காட்டட்டும்.

நண்பர்களுக்கான அஞ்சலியில் நானும் உங்களோடு.

சிவா.ஜி
15-02-2012, 08:22 PM
எனது இதயாஞ்சலியும் அக்னி.