PDA

View Full Version : விதிகளை உடைக்கவா?



ஆதவா
02-05-2007, 06:00 AM
நொடிகள்
மழையிலழிந்த கோலமாய்
உருகிக்கொண்டிருந்தன.
காலங்கள் வழிந்துகொண்டிருந்தன.

பெருக்கெடுத்து ஓடும்
வியர்வைகள்,
முகச்சுருக்கத்தைக்
காணாமல் ஓவியமாய்த்
திகழ மறுத்தன.
குங்குமத்தைக் கலைப்போமா
என்று இல்லாத பொருளைத்
தேடி அலைந்தன.

கண்கள்
கண்டவர்களைத் தேடின.
காட்சி பிழையானது.
நெஞ்சம் பெருத்து இறங்கியது.
காற்றோ சுவைத்து மகிழ்ந்தது.

ரணம் சூழ்ந்த காலத்தை
மறந்துபோய்
மீண்டுமொரு மீண்டெழுதல்
கிட்டுமா என்று
படபடக்கிறது இமைகள்.

ஏழாவதாக கிட்டய சுவை
மீண்டும் வருமா
என்று தவிக்கிறது அதரம்.

வீணில் கழிகிறது
தேகம்
கனவுகள்
வெடிக்கிறது இரவில்..

என்ன செய்வது?
உறவுகள் சொப்பவில்லை
மறுஉறவுக்கும் ஒப்பவில்லை.

உணர்வுகளைப் புதைத்து
அதன் மீதமர்ந்திருக்கிறார்கள்.

நான் எழுந்திடவா ?
தூங்கிவிடவா ?

ஜெயாஸ்தா
02-05-2007, 11:37 AM
தூக்கம் வராத ஒரு கைம்பெண்ணின் கதறல்தானே இது? அருமை ஆதவா.

ஆதவா
02-05-2007, 11:38 AM
நன்றிங்க ஜே.எம்... இன்னுமொருமுறை படித்தீர்களென்றால் கருவை கப்பென்று பிடித்துவிடலாம்...

praveen
02-05-2007, 11:58 AM
விதவையொருத்தியின் விரக தாபம்? சரியா நண்பரே.

எனக்கு கவிதை சுட்டுப்போட்டாலும் வராது. ஆனால் அடுத்தவர் அதைப் பற்றி கூறுவதை வைத்து ஓரளவு புரிந்து கொள்வேன்.

ஆதவா
02-05-2007, 12:00 PM
பாதிவரை சரிதான்... நன்றிங்க ஆசோ! விரகதாபம் இல்லாமல் வேறு யோசியுங்கள்... படக் கென க்ளிக் ஆகும்..

ஷீ-நிசி
02-05-2007, 12:29 PM
விதவையின் குமுறல் தெளிவாக தெரிகிறது...

ஏழாவது சுவை இங்கேயும் பயன்படுத்தபட்டிருக்கிறது....

மறுதிருமணத்திற்கும் ஒற்றுக்கொள்ளாத உறவுகள்!

கடைசியில் அவள் கேட்கும் கேள்வியின் அர்த்தம் பலவாறாய் யோசிக்கவைக்கிறது....

கவிதை நன்றாகவே இருக்கிறது.. உபயோகிக்கும் வார்த்தைகள் தான் மிகவும் அழகாக இருக்கின்றன...

தொடருங்கள் தோழரே!

ஆதவா
02-05-2007, 12:31 PM
நச் சென்று பிடித்துவிட்ட ஷீநிசிக்கு மிகவும் நன்றிகள்...

என்னங்க... கடினமான வார்த்தைகள் ஏதுமில்லையே?? எளிமையான கவிதை என்று நினைத்தல்லவா எழுதினேன்..

சுட்டிபையன்
02-05-2007, 12:35 PM
கணவனை இழந்தவளின் தணிமையை அழகாக சுட்டி கவிதை எழுதப் பட்டிருக்கிறது

தலை வாழ்த்துக்கள்

ஜெயாஸ்தா
02-05-2007, 12:55 PM
என்னங்க... கடினமான வார்த்தைகள் ஏதுமில்லையே?? எளிமையான கவிதை என்று நினைத்தல்லவா எழுதினேன்..

ஒவ்வொரு வரியும் பல பரிமாணங்களை காண்பிக்கிறது ஆதவா. ஒவ்வொருவரின் படைப்பு ஒவ்வொரு ரகம். அதில் தங்கள் கவிதை தனி ரகம். பல முறை மீண்டும் மீண்டும் படித்தேன். பின்பு ஓரளவுக்கு புரிந்து கொண்டேன். இப்படி முழுமையாய் புரியாமல் 'அதுவாய் இருக்குமோ? இதுவாய் இருக்குமோ?" - என நினைக்க வைத்தது உங்கள் வெற்றிதான். இது கூட ஒரு சுவைதான்.

ஆதவா
02-05-2007, 01:16 PM
ஒவ்வொரு வரியும் பல பரிமாணங்களை காண்பிக்கிறது ஆதவா. ஒவ்வொருவரின் படைப்பு ஒவ்வொரு ரகம். அதில் தங்கள் கவிதை தனி ரகம். பல முறை மீண்டும் மீண்டும் படித்தேன். பின்பு ஓரளவுக்கு புரிந்து கொண்டேன். இப்படி முழுமையாய் புரியாமல் 'அதுவாய் இருக்குமோ? இதுவாய் இருக்குமோ?" - என நினைக்க வைத்தது உங்கள் வெற்றிதான். இது கூட ஒரு சுவைதான்.

உண்மைதான்.... நன்றிங்க ஜே.எம். ஆனால் பாருங்கள்.. நான் எளிமையான கவிதை என்று நினைத்து எழுதியது... நீங்கள் சொல்லுகிறீர்கள் சற்று புரிதலில் சிரமம் என்று.. கவிதைமேல் பிடிமானம் உள்ளவர்கள் ஒருமுறைக்கு இருமுறை படித்தாவது புரிந்துகொள்ளுவார்கள்.. ஆனால் அவ்வாறில்லாமல் பாமரர்கள்.??? நிச்சயம் புரியவில்லை எனில் அவர்களின் கணிப்பில் என் கவிதை ஜீரோ... இன்னும் எளிமைப்படுத்த தெரியவில்லை எனக்கு... அந்த வகையில் நான் தோற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்..

leomohan
02-05-2007, 02:20 PM
என்ன செய்வது?
உறவுகள் சொப்பவில்லை
மறுஉறவுக்கும் ஒப்பவில்லை.


அடடடா, ஆதவன் டச். கலக்குங்க.

ஆதவா
02-05-2007, 02:25 PM
நன்றிங்க மோகன்..

ஷீ-நிசி
02-05-2007, 03:31 PM
நச் சென்று பிடித்துவிட்ட ஷீநிசிக்கு மிகவும் நன்றிகள்...

என்னங்க... கடினமான வார்த்தைகள் ஏதுமில்லையே?? எளிமையான கவிதை என்று நினைத்தல்லவா எழுதினேன்..

கடினமான வார்தைகள் இல்லை நண்பரே! எப்படி இப்படி என்று யோசிக்கும்படியான வார்த்தைகள்... அந்த ஏழாம்சுவை... வாழ்த்துக்கள்!

ஆதவா
02-05-2007, 03:34 PM
ஓ!!!!

மனோஜ்
02-05-2007, 03:46 PM
இலை மறைகாயாய் எழதியது அருமை நன்பா

பென்ஸ்
02-05-2007, 11:59 PM
"விதிகளை உடைக்கவா..!!!" தலைப்பை கண்டவுடன் என்ன வில்லங்கம் இது என்ற்று ஓடி வந்து பார்த்தால் , இது ஆதவன் கவிதை....

ஆதவா...

நல்ல கவிதை\
நல்ல கரு...

ஷீ சொல்லியது போல பல வார்த்தைகள் பலமுறை வருவது போல ஒரு உணர்வு... மேலும் உன் கவிதைகள் எல்லாம் ஒரே மாதிரியா ஆகி வருகிறதோ என்ற பயமும் வருகிறது...

காமம் மட்டுமே அதிக கவிதைகளில் தலையானதாக தெரிகிறது...
காமம் விலக்க கூடியதா என்று கேட்பாய்..!!! இல்லைதான், ஆனால்
தேனை குடிக்கலாம், குளிக்கலாமா???

என்னுடைய முன்னுரையில் நான் சொல்லியிருந்தது போல கவிதையின் எல்லா வடிவையும், எல்லா துறையையும் காணாதவனை உலகம் சிறந்த கவியாக ஏற்றிருக்கிறதா????

காமம் என்ற குண்டுசட்டியில் இருந்து வேளியே வந்து மீண்டும் யோசி...
நான் மற்ற கவிதைகள் எழுதவுன் செய்கிறேனே...!!! என்பாய்...
செய்கிறாய்... ஆனால் அதன் பங்கு என்ன????

கவிதை அருமை...
சொல்ல வந்ததை அழகாக சொல்லிவிட்டாய்...

கவிதையில் நீ இன்னும் நீண்ட பயணம் போக வேண்டி இருக்கிறது...
அதற்கு உன்னை தயாரித்து கொள்....


உன் வளர்ச்சியை என்றும் விரும்பும்.....

ஓவியா
03-05-2007, 01:11 AM
ஆதவா,
பெண்ணின் குமூறலை அழகிய வார்த்தைகளில் அடக்கியுல்லாய்.

சில உணர்வுகளுக்கு பூமியில் இன்னும் வார்தைகள் பிறக்கவில்லை.
உன் கதானாயகியின் கண்ணீரும் அதில் அடங்கும்.

கவிதை அழகு. ரசித்தேன். நன்றி.


கோவம் வேண்டாம் ஆதவா,
மேற்பார்வையாளர் பென்சுவின் கருத்துக்கள் சரியே. நன்றி பென்சமீன்.


உன் வளர்ச்சியை என்றும் விரும்பும்.....(நன்றி: பென்சு)
அக்கா.

ஷீ-நிசி
03-05-2007, 03:44 AM
ஆதவா, கோபம் கொள்ளக்கூடிய மனிதர் அல்ல என்பதை நான் நன்கு அறிவேன்.. தன் வளர்ச்சிக்காகத்தான் பென்ஸ் கூறுகிறார் என்பதை அவர் புரிந்துகொள்வார் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை... சவாலை விரும்புகின்ற மனிதர் ஆதவா... இனி பல வடிவங்கள் பெற்று வரும் அவரின் கவிதைகள்.. வாழ்த்துக்கள் ஆதவா!

poo
03-05-2007, 09:30 AM
கைம்பெண்ணானவளுக்கான கனவுகள், வாழ்வுகள் அவள் அந்த நிலை அடைந்த பருவம், சூழல் ஆகியவற்றைப் பொருத்தே அமைகிறது... ஒருவருக்கு உணவு விற்க வேண்டியிருக்கும்... ஒருவருக்கு ஆன்மிகம் தழுவி
வாழ்வை ஓட்ட வேண்டிய வசதியிருக்கும்..
ஒருவருக்கு தன்னையே விற்க வேண்டியிருக்கும்.... இப்படியான சூழல் வரிசையில் இன்னொன்று.., சுழலில் சிக்கியவளின் உணர்வுகள்... சொல்லப்பட்ட விதத்தில் குறையில்லையென நினைக்கிறேன்....
கண்ணாடிமேல் நடப்பதும்.. காமத்தை கவிதையில் எழுதுவதும் ஒன்று..

கவிஞர் மேத்தா அண்மையில் சொல்லியிருந்தார்.. பெண்ணியம் எழுதுங்கள்.. கண்ணியம் குறையாமல் என்று... , ஆதவன் நாசுக்காகவே எழுதியிருக்கிறார் என்று நினைக்கிறேன்..

ஆதவனின் தொடர்ந்த கவிதைகளை படித்து வந்தாலும், பண்பட்டவர் பகுதியில் நுழைந்துப் படிப்பதில்லை நான்.. தனிப்பட்ட காரணம் எதுவுமில்லை.. அங்கே ஆதவன் சில கவிதைகளை எழுதியிருக்கிறார் என்று மேல் பார்த்து அறிகிறேன்.. அதனால் அப்படியான எண்ணம் வந்திருக்கலாம்... ஆனாலும், ஆரம்பகால வளர்ச்சிக் கவிஞர்கள்.. குறிப்பாக பெண் கவிஞர்கள்.. (சண்டைக்கு வரப்போறாங்க...) காமத்தை தூக்கலாக எழுதுவது நடைமுறையில் இருக்கும் ஒன்று.. அந்த அவசியம் நம் ஆதவனுக்கு இல்லை... பல்துறை வித்தகனின் ஒரு பரிணாமம்,.. ஒரு சிறகு என்றே பார்க்கிறேன்...

பென்ஸின் ஆலோசனை சரியான தருணத்தில் கிடைக்கப்பெற்ற ஒன்றாகவே நினைத்துக் கொண்டு, உங்கள் சிறகுகளை குறிப்பிட்ட இடைவெளியில்.. விரித்துக் கொண்டே இருங்கள் ஆதவன்.. உங்கள் திறமைகளுக்கு தீனிப் போடுவதில்லை உங்கள் நேரமும், சூழலும் என்று நினைக்கிறேன் நான்...

என் எண்ணங்களை ஏமாற்றத்தோடு பார்க்காமல்..., உங்கள் மீதான என், எங்கள் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றி, நிறைவான கவிஞன் ஒருவன் மன்றத்தில் இருக்கிறானென எங்களை மார்தட்ட வைப்பீர்களென நம்புகிறேன் ஆதவன்....

மீண்டும் வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய எழுதுங்கள்!!





இது ஒரு

இயல்பான கவிதை.. பாராட்டுக்கள் ஆதவன்...

ஆதவா
03-05-2007, 11:13 AM
அன்பு பெஞ்சமின் அவர்களுக்கு...
தவறு வந்தால் அதை ஏற்பதுதான் மனிதனுக்கே அழகு.. இம்மாதிரியான குறைகள் நிச்சயம் எல்லா கவிதைகளிலும் ஏற்பட வாய்ப்புண்டு... இதற்கு என்றுமே கோபப்படுபவன் நானல்ல.. தட்டியதை வாங்கி தவறிழைக்காமல் பாடுவதுதான் முன்னேற்றத்திற்குண்டான படிகள்.. தவறிழைப்பவன் எப்போதுமே ஒரு நியாயமும் காரணமும் வைத்திருப்பானே? ஆம் என்னிடமும் உண்டு.

ஒரு சமயத்தில் எழுத நேர்ந்தால் மூன்று முதல் நான்கு கவிதை வரை எழுதிவிடுகிறேன்.. அதனால் வார்த்தைகள் ஒரேமாதிரி வர வாய்ப்புண்டு. அதனை சுட்டிக்காட்டிய ஷீ-நிசிக்கும் உங்களுக்கும் என் நன்றி...

ஆனால்... எனக்கு சற்றூ விளங்காத விஷயம்தான் நீங்கள் கேட்டிருக்கும் மற்றொரு கேள்வி.. இந்த கவிதை காமத்தை சுட்டுகிறதா? இருக்கலாம்.. ஆனால் நான் நினைக்கவில்லை. நினைத்திருந்தால் நிச்சயம் பண்பட்டவர் பகுதிக்குத்தான் இட்டிருப்பேன்..
ஒரு இளம் விதவையின் காமத்தேடல் என்று வைத்துக்கொள்வோம்... இது காமம் என்று மட்டுமே ஒதுக்கிவிடமுடியாதே.. சமூகம் இருக்கிறது. அவள் காதலைத் தேடுவதாக நான் எழுதியிருந்தால் நிச்சயம் நீங்கள் காமம் என்ற வார்த்தை எழுதியிருக்கமாட்டீர்கள்.. ஆனால்....
இளம் விதவைகளில் சிலர் காமத்திற்கும் ஏங்குவது நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மறு உறவுக்கு அதாவது மறுமணத்திற்குத் தடையாக உறவினர்கள் இருப்பது இன்றைய சமூக நிலை... காமம் கலக்கப் பட்டிருந்தாலும் சமூகப் பார்வை கொஞ்சம் எட்டிப் பார்க்கிறதே என்று நான் நினைத்தேன்...

இருந்தாலும் நான் ஒப்புக் கொண்டுதான் ஆகவேண்டும்...

ஆனால் மறுக்கவேண்டிய ஒன்று... காமம் மட்டுமே அதிக கவிதைகளில் இருப்பதாக நீங்கள் சொல்வது...
நிச்சயம் என்னால் மறுக்கமுடியும்.. காமமே வேண்டாம் என்றால் அதற்குத்தக்கவும் எழுதப்பட்ட கவிதைகள் நிச்சயம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நீள கவிதைகள் பாதிக்கும் மேலே தம்பதியருக்கிடையே உண்டானவற்றை காமம் தீண்டாமல் சொல்லியிருக்கிறேன்.
காமக் கவிதைகள் என்ற பெயரில் பத்துக்கும் உள்ளே நீள கவிதைகளும் ஏனைய சிறு சிறு கவிதைகளும் உள்ளன. ஆக ஒட்டுமொத்த அடிப்படையில் நான் காமம் வேறு ஏனைய கவிதைகள் வேறு என்றே பிரித்து எழுதியிருக்கிறேன். அதுபோக எண்ணிக்கையிலும் குறைவாகவே இருக்கிறது. சமீபகாலத்தில் ஐந்தாறு கவிதைகள் காமத்தில் எழுதியது நீங்கள் நினைப்பதற்கு வாய்ப்பாக இருக்கக் கூடும்...

காமம் அது எனக்கு தலைக்கு மேலே தொங்கும் கத்தி.
சமூகம் அது எனக்கு கையில் கிடத்த வாள்.

பென்ஸ்
03-05-2007, 05:29 PM
ஆதவா... இதில் தவறு இருப்பதாக நாம் சொல்லவேயில்லை....

கவிதை எழுத ஆரம்பிக்கும் பொழுதுகளில் நாம் எழுதும் கவிதைகள் பாராட்டபடும் போது அதை திரும்ப திரும்ப செய்கிறொம்....

சாதாரணமாக காதல் கவிதையில் துவங்குபவர்கள் , அது நன்றாக இருக்கிறது என்று அதையே சுற்றி சுற்றி வருவார்கள்...

இதை நமது மன்றத்தில் பலர் செய்தார்கள்... ஆனால் அவர்களை பலர் இப்படி செய்யாதே என்ரு உணர்த்தவும் இருந்தார்கள்...

பிரியன்(முத்துகுமரன்) காதல் கவிதைகள் மட்டும் எழுதிய நாட்களில் நண்பன் அவரை சமூக கவிதைகள், அரசியல் இதை பற்றை கவிதை எழுத சொல்லியதாக , பிரியன் கூறி இருக்கிறார்...

ப்ரியனிடமும் (விக்கி) நான் நான் இதே கோரிக்கையை வைத்திருக்கிறேன்....

பூ.. சமூக கவிதைகளை மட்டும் எழுதி தள்ளி வருகிறார்... எனக்கு அவை பிடிக்கும் என்பதாலோ என்னவோ அவரை சுட்டிகாட்டாமல் விட்டுவிட்டிருக்கிறென்... என் தவறு...

மன்றத்தில் நண்பன், ராம்பால், இளசு, கவிதா, செல்வன் இவர்கள் கவிதைகளை பாருங்கள் இது ஒரு கலவையாக இருக்கும் ... இவர்களின் ஒரு கவிதை கூட மற்றொரு கவிதையை ஒத்து வந்திருக்காது...

இவர்கள் வார்த்தைகளும் கதியை போல கூர்மையாக இருந்தாலும், தலைமேல் கத்தியாக இருந்ததில்லை...

இதற்க்கு ஒரு காரணம் இருக்கலாம் என்று நான் நினைக்கிறென்.. அது ...
தன்னை சுற்றி ஒரு சுகமான நிலையை (Comfort Zone) இவர்கள் உருவாக்கிகொள்ளவில்லை.....

கொஞ்ச காலம் காமத்தை விலக்கி கவிதைகளை எழுது...
இனிப்பு அறும் சுவையில் ஒன்றுதான் என்பதை மறவாதே....

ஆதவா
03-05-2007, 06:48 PM
உங்கள் பதிலுக்கு நன்றி பென்ஸ்..

நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்..

கவிதை எழுதியபிறகு அது பாராட்டு பெறப்படும் போது மீண்டும் மீண்டும் ஒரே எண்ணங்கள் வருவது சகஜமான ஒன்றுதான்... நான் இன்னும் அந்த நிலையைத் தாண்டவில்லை. ஆனாலும் நான் ஒன்றையே பிடித்துக் கொள்ளவில்லை என்பதையும் சொல்லவேண்டும்.. உதாரணத்திற்கு ஏனைய கவிதைகளுக்குண்டான வரவேற்புகள்தான் மிகுந்து இருக்கிறதே தவிர காமக் கவிதைக்கு அதிகப்படியான வரவேற்புகள் இல்லை... அது பின்னூட்டங்களின் மூலம் தெரியலாம்.. அதிலும் சிலரிடம் நான் தனிமடலில் கேட்டு பின்னூட்டம் பெற்றிருக்கிறேன். ஆக விருப்பமில்லாமல் இருந்தாலும் எழுதிய கவிதைகளை நான் வீண் செய்யவில்லை...

இது ஒரு புறம் இருக்கட்டும். என் கவிதைகள் எல்லாம் (காமக் கவிதை தவிர்த்து) ஒரே மாதிரியாக இருக்கக் கூடின் அது எம் துர்பாக்கியமே... மன்றத்தில் பதிப்புகள் தொடங்கி ஐந்து மாதங்களில் கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியிருக்கிறேன்... இன்னும் திருப்தி இல்லை.. காரணம்..?? மேற்சொன்ன நிலையாகக் கூட இருக்கலாம்....

திருத்திக் கொள்ள பார்க்கிறேன்... நிச்சயமாக.............. அன்றியும் முடியாவிடில் அப்படியே தொடருகிறேன்...

காதல், சோகம், சந்தோசம், சமூக நலம், தம்பதியர்கள் பிரச்சனைகள் என்ற பல நிலைகள் எழுதப்பட்டு வந்தாலும் இன்றைய தினங்களின் இம்மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடுகிறது.

அறுசுவையில் காமமுண்டென்பதும் நீவிர் அறிந்ததே...
ஆனால் எனது கவிதைகள் கொஞ்சம் கலவைகள்தான்... ஒத்துக்கொண்டே ஆகவேண்டும்... தனியாக நீர்பட்ட எண்ணையாக நிற்க முடியவில்லை... என்ன காரணமோ?

தற்காலிகமாக காமக் கவிதைகள் எழுதுவதை நான் நிறுத்திக் கொள்கிறேன்...

ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி அண்ணா
ஆதவன்:natur008: