PDA

View Full Version : பாதச் சுவடுகள்



இளசு
02-04-2003, 05:23 AM
பாதச் சுவடுகள்

என் உற்ற நண்பருக்கு அர்ப்பணம்!

என் மடல்:
நடந்து வந்த பாதை
திரும்பிப் பார்க்கிறேன்
அழகாய் இரு ஜோடி
அடுத்து நடந்தபடி
பதித்த சுவடுகள் - வாழ்க்கைப்
பாதைப் பதிவுகள்

துள்ளித் தவழ்ந்தபோது
பள்ளி கற்ற போது
பரிசுகள் பெற்ற போது
பதவிகள் உயர்ந்தபோது
உறவுகள் மலர்ந்தபோது
உயிர்க் குருத்து பிறந்தபோது

அணுவும் எனை விலகாது
அடியொற்றி எனை ஒட்டி
பாதுகாத்து வந்ததுபோல்
பாதை நெடுக சுவடு கண்டேன்!

என்னே என்மேல் கரிசனம்
வேண்டாமல் நீ தந்த தரிசனம்
கருணைக்கு மறு பெயர் நீதான்- உன்
பெருமைக்கு ஈடிங்கு யார்தான்

இன்னும் கொஞ்சம் உற்றுப்பார்க்க
என்ன இது கொடுமை!
தென்றல் வீசும் பூங்காவில்
ஒன்றாக உலாவிவிட்டு
புயல் அடித்த பொழுதில் எல்லாம்
அயலாய் என்னை விட்டதென்ன?

நெஞ்சம் பிளந்து உதிரம் உறிந்தாளே-அந்த
வஞ்சினக் காலம் ஒரு காலடி
நோயெனும் தீயில் தீய்ந்து எமன்
வாயில் வரை போன காலம் ஒரு காலடி
வேலை இன்றி வறுமையெனும்
பாலையில் நான் வறண்டகாலம் ஒரு காலடி
குற்றம் செய்யாமலே தப்பாய் புரிந்த நண்பர்
அற்றுப் போன வேதனைக்காலம் ஒரு காலடி

அறுவடை காலம் உடன் வந்த தோழன்
அடைமழைக் காலம் போனது எங்கே
நிச்சயம் உன் துணை வேண்டி உருக
நைச்சியமாய் நீ மறுத்ததற்கு சாட்சி இங்கே
இஷ்டப்பட்டால் கூட வருவாய்
கஷ்ட காலம் தனியாய் விடுவாய்
பேரன்பு உனக்கு என்று சொன்னவன் யார்?
பேர் உனக்கு கடவுள் என்று தந்தவன் யார்?

பதில் மடல்
துன்பச் சகதியில் உன் பிஞ்சுப் பாதம் சிக்காமல்
தூக்கி நான் சென்ற காலம் ஒரு காலடி!

Narathar
02-04-2003, 05:35 AM
அருமையான கவிதை இளசு தொடருங்கள்....

aren
02-04-2003, 12:51 PM
வாவ்!! அருமையாக உள்ளது இளசு அவர்களே. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

rambal
02-04-2003, 02:48 PM
அனுபவங்கள்தான் உண்மையான கடவுள்..
காலடி வைத்தது எல்லாம் கடவுளோடுதான்..
நல்ல கவிதை இளசு அவர்களே..

madhuraikumaran
02-04-2003, 07:00 PM
இந்தக் கதையை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்... அதை அழகுத் தமிழில் சொன்ன விதம் அருமை !!! அந்தக் கடைசி வரி பன்ச்-ஐ கொடுத்த விதம் மிக அருமை !!!

Narathar
03-04-2003, 05:10 AM
இந்தக் கதையை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்... !!!

அப்போ இளசை தமிழ்மன்ற கமல் என்கிறீர்களா??
நாராயணா!!!

rambal
03-04-2003, 07:50 AM
இந்தக் கதையை ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்... !!!
அப்போ இளசை தமிழ்மன்ற கமல் என்கிறீர்களா??
நாராயணா!!

எங்கிருந்து எடுக்கிறோம் என்பது முக்கியமல்ல..
அதை எப்படி கொடுக்கிறோம், எத்தனை பேருக்குப் போய்ச்சேர்கிறது என்பதுதான் முக்கியம்.
ஆயிரம் ஆங்கில படங்கள் பார்த்தும் உருப்படியாய் ஒரு படம் எடுக்கத்தெரியாததற்கு இது எவ்வளவோ மேல்..
ஆகையால் எழுதத் தெரியாவிட்டால் சும்மா இருங்கள். அல்லது அடுத்தவர் எழுதுவதை
பாராட்டுங்கள். அல்லது எள்ளி நகையாடாதீர்கள்..

இளசு
03-04-2003, 08:02 AM
ராம், நாரதர் சொல்வதை நல்ல முறையில்...
சுகமான நெருங்கிய நண்பர்களுக்கிடையேயான சுவைப்பேச்சாய் எடுப்பதுதான் சரி! அவர் மனம் நமக்குத் தெரியாதா என்ன...
எனக்கென்னவோ அவர் கருத்துகள் மன்றத்துக்கு தனிச்சுவை தரும் என்றே
தோணுகிறது.

madhuraikumaran
03-04-2003, 05:36 PM
நக்கல் பார்ட்டி நாரதரே.... உம்ம வேலையை இங்கும் காட்டி ராம் கிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டீரா?.... நன்றாக வேண்டும் உமக்கு நாராயணா !!!

ராம்... இளயவர் சொல்வது போல், இது போல் ஒரு ரவுசுப் பார்ட்டி இருந்தால் தான் சபை கலகலப்பா இருக்கும். !!!

இளசு
04-04-2003, 03:39 AM
நண்பர்களே
மூலக்கருத்து கேட்ட ஒரு (ஆங்கிலக்) கதைதான்!
இனி கண்டிப்பாய் விமர்சனம் வரும் வரைக் காத்திருக்காமல்
முதலிலேயே மூலம் உரைப்பேன்...( எனக்கு உறைத்துவிட்டதால். ஹிஹி..)!

அதுக்காக கமல் அளவுக்கு உயர்த்திப் பாராட்டுவது குசும்புதானே...!

Nanban
10-01-2004, 02:38 PM
மூலம் உரைத்து பின்னர் தனி பிரிவாக போனதன் காரணம்.......

உந்தப்படுவதினாலே அது தரம் தாழ்ந்து போவதில்லை......

சக படைப்பாளியை பிரதியெடுத்து முந்திக்கொண்டு அது தனதென அடம் பிடிப்பது தான் - தவறு...

எட்டுத் திக்கும் சென்றிடுவீர் என்ற பாரதி கூட, பல புது வடிவங்களை முயற்சிக்க, அவர் கற்று பெற்ற ஆங்கிலக் கல்வியும் ஒரு காரணம்........

Nanban
10-01-2004, 02:40 PM
அது சரி, அந்த உற்ற நண்பர் தான் மூலவரா......

இளசு
12-01-2004, 12:05 AM
அது சரி, அந்த உற்ற நண்பர் தான் மூலவரா......

நன்றி நண்பன்..

அவர்தான் எல்லாமே!

Mano.G.
12-01-2004, 03:36 AM
பின் நோக்கி பார்ப்பது எதற்கு
எதை எங்கே விட்டோம்
என பார்ப்பதற்கா?
அல்லது
செய்த தவறை திரும்ப செய்யாமல்
இருப்பதற்கா?

அல்லது செய்த நல்லவற்றை
நினைத்து பெருமிதம் கொள்ளவா?

நீயே கூறு காலமே.

மனோ.ஜி

இக்பால்
12-01-2004, 04:25 AM
அண்ணாவின் அழகு கவிதையுடன் ...மனோ அண்ணாவின்
அறிவுரையும் கவிதை நடையில் அழகுதான்.
இருவருக்கும் பாராட்டுக்கள்.
-அன்புடன் அண்ணா.

இளசு
12-01-2004, 11:13 PM
அருமை மனோஜி நண்பரே.. பாராட்டுகள்..

நன்றி இளவலே.

பாரதி
03-05-2008, 06:59 AM
நடந்து வந்த பாதையையும் சுவடுகளையும் மீண்டும் ஒரு கணம் பார்க்க வைக்கிறது அண்ணா இந்தக்கவிதை.

மூலம் எங்கிருந்தால் என்ன..? முழுவதும் புரியும் படி - படித்தால் தெளியும்படி... இவ்வளவு எளிமையாய்....!

எப்படி அண்ணா..??

அனுராகவன்
03-05-2008, 07:03 AM
வாழ்க்கையில் எத்தனையோ பாதசுவடுகள்..
அதை அருமையாக உங்கள் கவிமழையில் காண முடிந்தது..
நன்றி இளசு அவர்களே!!

பூமகள்
03-05-2008, 10:18 AM
(இது என் உற்ற தோழிக்குச் சமர்ப்பணம் - பெரியண்ணா, இந்த கவிக்கு பூவுக்கு தான் முழு உரிமமும்..!!)
கேள்வி:
பதிந்த சுவடுகள்
திரும்பிப் பார்க்க
காணக் கிடைத்தது
ஒரு காலடி..!!

வண்ணக் கனவுகளில் உடன் வந்த நீ
திசைமாறிய நிறப்பிரிகையில் போனதெங்கே??!

உன் என் பேதமின்றி ஓர் தட்டில் உண்டு..
நட்புச் சரித்திரம் படைப்போமென
உறுதிபூண்டவளே..!!

சிங்கார சிந்தையில் சிலிர்ப்பூட்டும் அன்பு பரிமாறி
சிரித்துக் களிப்பூட்டிச் சென்றவளே..!!

தனியான சாலையில் புழுதிப்போரில் மட்கிப்போய்
துமைந்து விழுந்த வேளையில் விட்டு நீ
போனதெங்கே??!

என் பாசம் புரிந்து கொள்ள
ஐநூறு நாட்கள் ஆனதா உனக்கு??

பதில்:
வழி மாறிய நீ - சரியாக
தடம் மாறும் வரை நான்
நிழலாகி வந்திருந்தேன்..
உன் பார்வை தப்பி பறந்திருந்தேன்..

துன்பத்தில் நீ ஒடிய
உடன் இருந்து பார்க்க
உற்ற மனம் உடன்படலை..
நீ பாடம் கற்கும் வரை
நெஞ்சில் அன்புடன்
நிந்தித்தபடியே காத்திருந்தேன்..!!