PDA

View Full Version : அவன் இன்னும் மாறவேயில்லை....!



ஜெயாஸ்தா
21-04-2007, 10:47 AM
மூச்சுவாங்க ஓடிக்கொண்டிருந்தான் கோபால் சாமி. பின்னால் அவனைத் துரத்தியபடி பெருங்கூட்டம். மாட்டினால் தொலைந்தோம் என நினைத்துக் கொண்டே ஓட்டத்தை விரைவு படுத்தினான் கோபால்சாமி. துரத்தி வந்த கூட்டம் கோபால் சாமியின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் தங்கிக் கொண்டிருந்தது. ஒரு வழியாய் தப்பித்த கோபால் அருகிலிருந்து விநாயகர் கோயிலுக்குள் வந்து பிரகாரத்தில் அமர்ந்தான். பின் தன் 'அடித்து" வந்த மணிபர்ஸை எடுத்து திறந்து பார்த்தான்.

"அட ச்சீ... சரியான பிச்சைக்காரப்பயலாய் இருப்பான் போலிருக்கே...!" - பர்ஸினுள்ளிருந்து அவனைப் பார்த்து ஒரு ஐந்து ரூபாய் நாணயம் மட்டும் சிரித்தது. இந்த ஐந்து ரூபாய்க்காகவா இப்படி உயிரைப் பணயம் வைத்து ஓடி வந்தோம். அவனுக்கு இப்போது அவன் தொழில் மேல் ஒரு வெறுப்பு வந்தது. ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து தன் சட்டைப்பையில் போட்டுக்கொண்டு, பின் தன் கையிலிருந்த காலி பர்சை தூக்கி சாக்கடையில் வீசினான்.

தற்செயலாய் நிமிர்ந்து எதிரேயிருந்த சுவரைப் பார்த்தான். சுவற்றில் லித்தோ போஸ்டாரில் "அமைச்சர் முனுசாமி காதுகுத்து விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறார்" என்ற வாசகத்துடன் ஒரு அமைச்சர் கைகளைக்கூப்பியபடியே சிரித்துக் கொண்டிருந்தார்.

"அட... இவரை எங்கேயோ பார்த்தது போலிருக்கிறதே...." நெற்றியைச் சுருக்கி யோசித்தான் கோபால்சாமி.

அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. 'அட.. இவன் நம்ம முனுசாமி....!".

முன்பெல்லாம் இருவரும் சேர்ந்துதான் 'தொழில்' செய்து வந்தார்கள். முனுசாமியால் வேகமாய் ஓடமுடியாததால் அடிக்கடி கூட்டத்திடம் மாட்டி அடிவாங்கிய அனுபவம் நிறைய உண்டு. கடைசியில் ஒரு நாள் கோபால் சாமியிடம் வந்து "கோபாலு.... நம்மளுக்கு இந்ததொழில் ஒத்து வராது..... நான் வேற தொழிலுக்கு போறேன்...!" என்று சொல்லிவிட்டு போனவன்தான். தொழில் பரபரப்பில் முனுசாமியை மறந்தே விட்டான் கோபால் சாமி.


நம்ம முனுசாமி இப்போது அமைச்சாராகிவிட்டானா? -நினைக்கும் போதே பெருமையாய் இருந்தது கோபால்சாமிக்கு. நமக்கும் முன்னைப்போல் இப்போது ஓட முடிவதில்லை. ரொம்ப ரிஸ்க்கெடுத்து பர்சை அடித்தாலும் அதில் ஒரு ரூபாயும், ஐந்து ரூபாயும் இருக்கிறது. நாமும் பேசாமல் இந்த தொழிலைவிட்டுவிட்டு வேறு ஏதாவது தொழில் செய்தால் என்ன? நம் முன்னாள் நண்பன் முனுசாமியிடம் போய் உதவி கேட்போமா? இப்போது அவன் அமைச்சர் அல்லவா? அவன் முன்பைப் போல் இருப்பானா? இல்லை மாறியிருப்பானா?

-முடிவில் முனுசாமியிடம் போய் ஏதாவது உதவி கேட்பது என்று தீர்மனத்தை மனதினுள் நிறைவேற்றி, கோயிலைவிட்டு வெளிநடப்பு செய்தான் கோபால் சாமி.

மாலை வேளை. தன்னிடமிருந்த உடைகளில் நல்ல உடைகளை அணிந்து கொண்டான். வழிச்செலவுக்கு காலையில் அடித்த 'ஐந்து ரூபாயை" எடுத்து பத்திரமாக சட்டைப் பையில் போட்டுக் கொண்டான். முனுசாமியைப் பார்க்க கிளம்பினான் கோபால்சாமி.

சில நிமிட நடைக்கு பின் முனுசாமி பங்களாவை அடைந்தான் கோபால்சாமி. பங்களாவாயில் தலைவரைப் பார்க்க வந்த தொண்டர்களின் கூட்டம். காக்கிச்சீருடையணிந்து துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு வேறு.

'முனுசாமியை பார்க்கமுடியுமா?" சந்தேகம் வந்தது கோபால்சாமிக்கு. அவன் முன்பு போலிருப்பானா? இல்லை மாறியிருப்பானா? -யோசனையாய் இருந்தது. அவனுக்கு பங்களாவினுள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை.
.
'தலைவர் இப்போ வெளியே வருவாரு அப்போ பார்த்துக்கோ...." -சொன்னார் ஒரு காவலர். முனுசாமிக்காக வெளியே காத்து நின்றான் கோபால்சாமி.

சிறிது நேரத்தில் தலைவர் பரிவாரங்கள் புடைசூழ வெளிவந்தார். கோபால்சாமி கூட்டத்தில் நீந்தி சென்று முனுசாமியை நெருங்கி வணக்கம் வைத்தான். முனுசாமி, சில விநாடி யோசனைக்கு பிறகு 'ஏலே.... நம்ம கோபால்சாமியாடா நீ.... வாடா எந்தங்கமே..... இத்தனை நாளாய் எங்கடா போயிருந்தே...." என்று சத்தமாய் கூறியவாறு கோபால்சாமியை நெருங்கி பாசத்துடன் இறுக கட்டியணைத்தார். அவனின் இறுகிய அணைப்பில் மெய்மறந்தான் கோபால்சாமி.

"ச்சே... நம்ம நண்பனை பற்றி நாம் தப்பாய் நினைத்து விட்டோமே.... முனுசாமி இன்னும் அப்படியேத்தான் இருக்கிறான். மாறவேயில்லை...!" மனதினுள் மகிழ்ச்சியுடன் நினைத்துக்கொண்டான்.

"நான் வெளியூருக்குப் போறேன் கோபாலு.... நீ இரண்டு நாள் கழிச்சுவந்து என்னைப் பாரு!" -சொல்லிவிட்டு அவனிடம் விடை பெற்று கிளம்பினார் முனுசாமி.

முனுசாமியுடன் கூட்டமும் காரில் ஏறி சென்றது. மிகுந்த சந்தோசத்துடன் தன் வீட்டை நோக்கி நடந்தான் கோபால்சாமி.

கொஞ்சம் களைப்பாக இருந்தது. "ஒரு டீ குடித்தால் என்ன?"

அருகிலிருந்த டீக்கடைக்கு சென்றான் கோபால் சாமி. "ஒரு டீ போடுப்பா" என்று சொல்லிவிட்டு, யதேச்சையாக தன் சட்டைப்பையில் கைவிட்டான் கோபால்சாமி. அங்கே, அவனிடமிருந்த அந்த ஐந்து ரூபாய் காணாமல் போயிருந்தது. திடுக்கிட்டான் கோபால்சாமி. அப்போது அவனுக்கு அவனுடைய பால்ய நண்பன் முனுசாமி அவனை இறுக கட்டியணைத்ததுதான் ஞாபகம்வந்தது. மீண்டும் நினைத்துக்கொண்டான் கோபால்சாமி.

"அவன் இன்னும் மாறவேயில்லை...அப்படியேத்தான் இருக்கிறான்."

ஓவியன்
21-04-2007, 10:51 AM
ஹா!,ஹா!

அருமை ஜே.எம் கதை நன்றாக இருந்தது பாராட்டுக்கள்.

இளசு
21-04-2007, 09:47 PM
ஜென்மத்தில் ஊறியது எதால் அடித்தாலும் போகாது..

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில்..

ஐந்தில் திருந்தாதது ஐம்பதில் திருந்துமா?

நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்?

பல பழமொழிகளை நினைவூட்டிய சிறுகதை..

உள்ளடக்கம் அருமை.. சொல்லும் பாணியில் இன்னும் கொஞ்சம்
நவீன பாணி சேர்ந்தால், பிரசுரிக்கத் தக்க கதை...
(நம் விகடனில் வரும் ஒரு பக்கக்கதை போல்
இக்கதையை மாற்றி எழுதிப்பார்க்கலாம் என என் ஆலோசனை..)

பாராட்டுகள் ஜே.எம்.

இன்னும் படைப்புகளை உற்சாகமாய்த் தொடர வாழ்த்துகள்!

ஓவியா
22-04-2007, 07:33 PM
நல்ல கதை பாராடுக்கள் ஜே.எம்.

ஒரு குறை, இன்னும் சற்று விரிவாக எழுதியிருக்கலாம். அடுத்த முறை முயர்ச்சி செயுங்களேன்.

இளசுவின் பதிவு நன்று,

மனோஜ்
23-04-2007, 08:36 AM
நல்ல சுவவையான கதை ஜே
தொடர வாழ்த்துக்கள்

ஜெயாஸ்தா
25-04-2007, 06:07 AM
நண்பர்களின் கருத்துக்களுக்கு நன்றி....! நண்பர்களின் கருத்துகளுக்கேற்ப அடுத்த படைப்பில் குறைகளை சரிசெய்துகொள்கிறேன். நன்றி.

Gobalan
25-04-2007, 06:02 PM
நல்ல "க்லைமேக்ஸ்". பழக்க தோஷம் கோபலசாமியின் நண்பன் மற்றும் மந்திரி முனுசாமிக்கு. இளசு கூறியதுபோல், பல பழமொழிகளை நினைவுக்கு வந்தன. நல்ல நடையுடன் எழுதிய சிறு கதை. ஜே. எம் உங்களுகு என் வாழ்த்துக்கள். நன்றி. கோபாலன்

அன்புரசிகன்
26-04-2007, 07:58 PM
அப்போது அவனுக்கு அவனுடைய பால்ய நண்பன் முனுசாமி அவனை இறுக கட்டியணைத்ததுதான் ஞாபகம்வந்தது. மீண்டும் நினைத்துக்கொண்டான் கோபால்சாமி.

"அவன் இன்னும் மாறவேயில்லை...அப்படியேத்தான் இருக்கிறான்."

அது பரவாயில்லை. அவன் அமைச்சராகியும் அதை மறக்காமல் இருந்ததற்கு.
வாழ்த்துக்கள் ஜே...

அமரன்
21-05-2007, 03:56 PM
அரசியல்வாதியாகி அதிகமாக சுருட்டினாலும் பழகிய தொழிலை முனுசாமியால் விடமுடியவில்லை. ஐந்து ரூபாயைத் திருடி எடுத்துவிட்டானே. பழைசை மறக்காத இவனைப் பராட்டுவதா இல்லை இவனது செய்கையை நினைத்து வருத்தப்படுவதா. எப்படி இருப்பினும் கதை நச்சென்று இருக்கு.
(50 இ-பணம் உங்களுக்கு எனது பரிசாக)

அக்னி
21-05-2007, 04:01 PM
பதவி, புகழ், பணம் வந்தும் பழசை மறக்கக்கூடாது என்பது நற்குணம்தான். அதற்காக, தீயவற்றை தொடர்ந்தும் பேணுவதில் என்ன நன்மை.

சிறப்பான, அலுக்காத சிறுகதை...

சக்தி
21-05-2007, 04:02 PM
கதை அருமை. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

மயூ
21-05-2007, 04:40 PM
சபாஷ்.. ஹா.. ஹா.. நல்ல ஒரு கதை நண்பா.. தொடர்ந்து எழுதுங்கள்...
இரசித்தேன் சிரித்தேன்!!!

ஜெயாஸ்தா
27-09-2007, 03:49 AM
அது பரவாயில்லை. அவன் அமைச்சராகியும் அதை மறக்காமல் இருந்ததற்கு.
வாழ்த்துக்கள் ஜே...
உங்கள் வாழ்த்திற்கு நன்றி அன்புரசிகா...!



பதவி, புகழ், பணம் வந்தும் பழசை மறக்கக்கூடாது என்பது நற்குணம்தான். அதற்காக, தீயவற்றை தொடர்ந்தும் பேணுவதில் என்ன நன்மை.

சிறப்பான, அலுக்காத சிறுகதை...

உண்மைதான் அக்னி. சில அரசியல்வாதிகள் பழைய குணங்களில் நற்குணங்களை மட்டும் மறந்து விடுகின்றனர். ஒரு வேளை 'செலக்டிவ் அம்னீசியா'வாக இருக்குமோ என்னமோ?


எப்படி இருப்பினும் கதை நச்சென்று இருக்கு.
(50 இ-பணம் உங்களுக்கு எனது பரிசாக)

நன்றி அமர். உங்கள் வாழ்த்துக்களோடு போனசாய் இணையகாசுகளும். மீண்டும் நன்றி.

மேலும் விமர்ச்சித்து ஊக்கம் கொடுத்த நண்பர்கள் சக்தி மற்றும் மயூக்கும் நன்றி.

lolluvathiyar
27-09-2007, 05:52 AM
அடபாவமே மந்திரி ஆகி ஊர் பனத்தையே கோடிகனக்கில் வாயில் போடர ஆசாமி கேவலம் இன்னும் 5 ருபாய கூட விடலியா. அருமையான கதை