PDA

View Full Version : சாமிக்குத்தம்!



poo
20-04-2007, 07:02 AM
கூழு ஊத்தி
கொடி கட்டியாச்சு..

ஊரெல்லை
தாண்டக்கூடாதுன்னு
காப்பு கட்டியாச்சு..

சாதிக்கொரு நாள்
சாமியை பங்கு வைச்சாச்சு..

வாசத் தெளிச்சி
கோலம் போட்டாச்சு..

தெருவுக்குள்ள
சாமி வந்தாச்சு..

போனமுறை
நேந்துக்கிட்டது..
முருங்கை முழுக்க
பிஞ்சு வைச்சிருக்கு..

நைவேத்யம் காட்டியாச்சு
எல்லா உயிரையும்
காப்பாத்து சாமி..
நெத்தியில போட்டுகிட்டாச்சு..

வீட்டைக் கடக்கப்போன
சாமிக்கு செரமம்..
படக்குனு
முறிச்சி எறிஞ்சாங்க
தலை நெறைய
பூவோட மதுலோரம்
விழுந்துச்சி
கனமான முருங்கைக்கெளை..

மனசு
அடிச்சிக்கிச்சி..
சாமிக்குத்தம்
வாயைப் பொத்திக்கிச்சு..

சாமிக்குப் போட்ட
கோலம்
கால்தடத்துல கலைஞ்சிக்கிடக்கு
கூட்டிப்பெருக்கி
வேற கோலம் இன்னைக்கு..
வேற சாதி இன்னைக்கு..
வேற சாமி இன்னைக்கு..

கேக்க நாதியில்லாம
செவுத்தோராமா முருங்கைக் கெளை..
எலையை
எட்டி எட்டி அவசரமா
மென்னுக்கிட்டிருந்திச்சி
சாமி ஆடு...

பாக்கப்
பாவமா யிருந்திச்சி...
மனசு
அடிச்சிக்கிச்சி.....

ஷீ-நிசி
20-04-2007, 07:15 AM
கிராமிய மணம் வீசும் ஒரு சாமி கவிதை.....

ஊர்திருவிழாவில ஓரொரு சாதிக்காரருக்கும், ஓரொரு நாள் ஒதுக்கிடுவாங்க! இன்னைக்கு இந்த சாதிக்காரங்க இந்த சாமிய தூக்குவாங்க, நாளைக்கு வேற சாதிக்காரங்க வேற சாமிய தூக்குவாங்க!
சாமி வீதி வழி பவனி வரும்..

வேற கோலம் இன்னைக்கு..
வேற சாதி இன்னைக்கு..
வேற சாமி இன்னைக்கு..

மூன்றே வரிகளில் அடங்கிவிட்டது இந்த நிகழ்வு....

ரசித்தேன் பூ!

சுட்டிபையன்
20-04-2007, 07:20 AM
அழகான கிராமியக் கவிதை
வாழ்த்துக்கள் பூ

இளசு
20-04-2007, 09:13 PM
ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்பார்கள்..

உண்மையில் முருங்கை மரத்தைத்தான் சொல்ல வேண்டும்..


அதிலும் எந்த சாமிக்கு வேண்டி காய் காய்த்ததோ...
அந்த சாமித்தேராலாயே முறிவும்.. முடிவும்...
மிச்ச மீதியை முடிக்க சாமி ஆடு!

ஒரு முரண் சோகம்....முகத்தில் அறைக்கிறது ..
(வெளிப்படையான கவிப்பொருளில்..
உட்கரு வேறிருந்தாலும் இருக்கும்..)

பாராட்டுகள் பூ...

மளுக்கென முறிந்த முருங்கையால் என் நினைவுகள் மீண்டும்...

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4959



பல விஷயங்கள் பிடிக்கும்படி இருக்கும் முருங்கையிடம்
ஒரு பிணக்கு உண்டு எனக்கு.
மின் -தந்திக்கம்பிகளுடன் சபலம் கொண்டு கொஞ்சுவதால்
அடிக்கடி வாரியக்காரர்களால்
வெட்டுப்படுவதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியும் என்னால்..
சிறு புயல் அடித்த இரவின் முடிவில்
மளுக்கென முறிந்து கிடக்கும் அதன் பலவீனம் கண்டு ஆற்றாமல்
மளுக்கென கோபக்கண்ணீர் வந்து முட்டும்.

poo
21-04-2007, 04:29 AM
நன்றி ஷீ, நன்றி சுட்டிப்பையன், நன்றி அண்ணா...

அண்ணா உட்பொருள் ஏதுமில்லை..... நம் இயலாமைதான் இருக்கிறது.. சாமி ஆட்டைவிட பாவமாக இருப்பது சாமிதான்,.. செய்வதெல்லாம் நாம், ஆனால் பலிகடா அவர்!.

நெஞ்சுக்குள்ள ஈரம் இருந்தாலும் வெட்டாதீங்கன்னு(ஆசையா வளர்த்த முருங்கையானாலும் சரி, ஆட்டுக் குட்டியானாலும் சரி..) சொல்லமுடியாம தவிக்கிறோம்.. சாமிக்குத்தம்-ன்னு சொல்லி மௌனமாகி விடுகிறோம்.

எங்கள் ஊரில் திருவிழா நடக்கிறது.. என் வீட்டில் இருக்கும் முருங்கை மரத்தை என் மனைவி அவ்வளவு பத்திரமா பார்த்துப்பா.. ஒரு சின்ன கிளையை வழியில நீட்டிக்கிட்டு இருக்கும்மான்னு சொல்லி ஒடைச்சிட்டாலும் பயங்கரமா சண்டை போடுவா.. ஆனா நேற்று இரவு சாமி தெரு உலா வந்தப்ப ஒரு வார்த்தைக்கூட சொல்லாம மக்கள் பாதி மரத்தை உடைச்சிப் போட்டுட்டு போய்க்கிட்டே இருந்தாங்க...என் மனைவி ஒண்ணுமே சொல்லாம கன்னத்துல போட்டுக்கிட்டு ஓரமா இழுத்து விட்டுட்டா..,

அண்மையில் மரக்காணம் தாண்டி ஒரு ஊர் கோயிலுக்கு போயிருந்தோம். அங்கே ஒரு குடும்பம் ஒரு வேனில் வந்து இறங்கியது. கூடவே ஒரு ஆடும். அந்த ஆட்டை ஓரமா கட்டி வைச்சிருந்தாங்க.. , அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சின்னப்பையன் (6 அல்லது 7 வயதிருக்கும்..) அந்த ஆட்டோட முகத்தை ரெண்டு கையாலயும் ஏந்தி கொஞ்சி, அதோட நெத்தியில நிறைய முத்தம் கொடுத்து, மூக்கோட மூக்கை வைச்சி உரசிக்கிட்டு இருந்ததைப் பார்த்ததும் கண் கலங்கிட்டேன். இத்தனைக்கும் நான் புலால் உண்பவன்தான்.
( அந்த காட்சியை படமெடுத்திருந்தால் நிச்சயமாக விருதே வாங்கி இருக்கும்.. அவ்வளவு நெகிழ்ச்சி, மனதைப் பிசையும் காட்சி). கண் கலங்கினதைத் தாண்டி என்னால என்ன செய்ய முடிஞ்சிது?!!.. (அந்த ஆட்டைவிட்டு விட்டு, வெட்டுக் கொடுத்துவிட்டு அவன் வீடு சென்றதும் அவன் மனம் எப்பாடு பட்டிருக்கும்?!..) .

இந்த இரு நிகழ்வுகளும்தான் இந்த கவிதைக்கு விதை. இதில் நான் போட்டிருக்கும் வார்த்தைகளைவிட அதன் பின்னனியும் , அதன் விளைவான உணர்ச்சிகளும் அதீக வீரியம் கொண்டவை. என்னால் முழு உணர்ச்சியையும் கொண்டு வடிக்க முடியவில்லை..

ஷீ-நிசி
21-04-2007, 04:42 AM
இளசு அவர்கள் நான் நினைத்ததை அழகாக வார்த்தைகளில் வெளிப்படுத்தியுள்ளார். உட்கருத்து ஏதாகிலும் இருந்திடுமோ என்றென்னியே விமர்சனத்தை விரிவாக எழுத இயலவில்லை... உண்மையிலேயே உங்கள் விளக்கம் மனதை நெகிழ செய்தது பூ....

ஓவியன்
21-04-2007, 04:55 AM
அருமையான வரிகள், மீண்டும் மீண்டும் வாசித்து வரிகளிலேயே லயித்தேன். என்னை சம்ப இடத்திற்கே கொண்டு சென்று விட்டது வரிகள்.

பாராட்டுக்கள் பூ அண்ணா!



சாதிக்கொரு நாள்
சாமியை பங்கு வைச்சாச்சு..

என்று தொலையுமா இந்த சாதி பாகுபாடு?
சாமியையே பங்கு போடுமளவிற்கு?


போனமுறை
நேந்துக்கிட்டது..
முருங்கை முழுக்க
பிஞ்சு வைச்சிருக்கு..
..........
........
வீட்டைக் கடக்கப்போன
சாமிக்கு செரமம்..
படக்குனு
முறிச்சி எறிஞ்சாங்க
தலை நெறைய
பூவோட மதுலோரம்
விழுந்துச்சி
கனமான முருங்கைக்கெளை..
என்ன அழகாக முரண்பாடுகளை வெளிச்சம் போட்டு இருக்கிறீர்கள் பூ அண்ணா வாழ்த்துக்கள்.


கேக்க நாதியில்லாம
செவுத்தோராமா முருங்கைக் கெளை..
எலையை
எட்டி எட்டி அவசரமா
மென்னுக்கிட்டிருந்திச்சி
சாமி ஆடு...

பாக்கப்
பாவமா யிருந்திச்சி...
மனசு
அடிச்சிக்கிச்சி.....

வாசிக்க வாசிக்க மனசு என்னவோ செய்கிறது!
தெய்வ நம்பிக்கை தேவைதான் - ஆனால் மூட நம்பிக்கைகளையும் யதார்த்ததையும் வேறு படுத்திப் பார்க்க வேண்டியது அவசியம்.
என்று அந்த நிலை வருமோ அன்றே இதற்கெல்லாம் விடிவு காலமொன்று பிறக்கும்.

poo
21-04-2007, 05:00 AM
நான் உங்கள் கருத்தை கண்டதுமே நினைத்தேன் ஷீ, நினைத்தேன் என்று சொல்வதைவிட ஏமாந்தேன் என்று சொல்லலாம்..

ஏனெனில் நீங்கள் கவிதையின் ஆழ்ந்த கருவை கையிலெடுக்காமல் மேலோட்டமாக பதில் சொல்லியிருந்தீர்கள்.

தவறு என்மேல்தானே... சாயத்தை பூசிக் கொண்டவன் நான்தானே!!..

poo
21-04-2007, 05:12 AM
நன்றி ஓவியன்...

உங்கள் கருத்துக்கள் அருமை,

சாதி பேரைச் சொல்லி கூப்பிட்டால் வரும் கோபமெல்லாம் இந்த திருவிழா அன்னைக்கு காணாமப் போய்டும்.. வார்த்தைக்கு வார்த்தை "........." வூட்டுத் திருவிழான்னு சொல்லிப்பாங்க. ஆனா வானம் விடறதில ஒரு குறை சொன்னாக்கூட அவ்வளவுதான்... இந்த கவிதை எழுத நினைச்சப்ப மணி 3. (அதிகாலை). ஊரே அதுவரைக்கும் முழிச்சி சந்தோஷமா இருக்கிறதப் பார்த்தா மனசுக்கு நிறைவா இருக்கு.. ஆனா, இந்த சின்னச் சின்ன நெருடல்கள்.மோதல்கள்.. மூட நம்பிக்கைகள் இல்லாம அமைதியா கும்பிட்டுகிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்!

ஓவியன்
21-04-2007, 05:25 AM
உண்மை தான் பூ
தெய்வங்கள் தங்களை வழிபடுவதற்கு யாரையும் துன்புறுத்தச் சொல்லவில்லையே?

நாமாக வகுத்துக் கொண்ட வழிமுறைகள் அவை!
நாமாகவே மாற்றியமைக்கலாம் - ஆனால் எத்தனை பேர் அதனை மாற்றி அமைக்கத் தயாராக இருக்கின்றார்கள் அல்லது மாற்றியமைக்க முனைவோரை ஆதரிக்க தயாராக இருக்கின்றார்கள் என்று கேட்டால் ஏமாற்றமே மிஞ்சும்.

இதற்கு காரணம் உங்கள் கவிதையின் தலைப்புத் தான் - சாமிக் குத்தம்.

kavitha
21-04-2007, 11:15 AM
சாதி பேரைச் சொல்லி கூப்பிட்டால் வரும் கோபமெல்லாம் இந்த திருவிழா அன்னைக்கு காணாமப் போய்டும்.. வார்த்தைக்கு வார்த்தை "........." வூட்டுத் திருவிழான்னு சொல்லிப்பாங்க. ஆனா வானம் விடறதில ஒரு குறை சொன்னாக்கூட அவ்வளவுதான்... இந்த கவிதை எழுத நினைச்சப்ப மணி 3. (அதிகாலை). ஊரே அதுவரைக்கும் முழிச்சி சந்தோஷமா இருக்கிறதப் பார்த்தா மனசுக்கு நிறைவா இருக்கு.. ஆனா, இந்த சின்னச் சின்ன நெருடல்கள்.மோதல்கள்.. மூட நம்பிக்கைகள் இல்லாம அமைதியா கும்பிட்டுகிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்!
__________________
என் பூக்களின் வாசம்..
எனக்கு சுவாசம்!!

எப்போதும் போல உங்களது பொதுநலப்பார்வை நெகிழவைக்கிறது பூ.

மனிதனின் ஒவ்வொரு செயலுக்குமே அவனது சுயநலமே காரணமாகிவிடுகிறது. குறைந்த பட்சம் தன் மனதிருப்தி என்கிற சுயநலமாவது மிஞ்சிவிடுகிறது.

எளிமையான கவிதை அருமையான உட்பொருளுடன்... நேரடியாகப்பார்த்து அங்கலாய்த்து எழுதியது எங்கள் கண்முன்பும் காட்சியை விரியச் செய்துவிட்டீர்கள். நன்றி

lolluvathiyar
21-04-2007, 11:59 AM
பூ என்ன வித்தியசாம பேரு
சாமி ஊர்வலம் பற்றி அருமையான
கவிதை படைத்திருந்தாய்.
பாராட்டுகிறேன்

நகரத்தில் இதை விட மோசம்
மந்திரி யாரவது வீதி வலி ஊர்வலம்
வந்தால், முருங்கை மரமென்ன
வீட்டையே இடிச்சுருவாங்க

mravikumaar
21-04-2007, 12:15 PM
வாழ்த்துக்கள் பூ

மீண்டூம் மீண்டூம் படிக்க தூண்டும்
அருமையான வரிக்கள்

அன்புடன்
ரவி

ஓவியா
22-04-2007, 09:16 PM
பூ
கவிதையை வசிச்சு
மனசு அடிச்சிக்கிச்சி.....

என்ன நேர்தியான பார்வை, உணர்ச்சி பூர்வமான கவிதை.

கண்கள் மட்டுமல்லாமல் மனதும் கலங்கிடுச்சு.

நன்றி. பாராட்டுக்கள்

ஷீ-நிசி
23-04-2007, 04:49 AM
நான் உங்கள் கருத்தை கண்டதுமே நினைத்தேன் ஷீ, நினைத்தேன் என்று சொல்வதைவிட ஏமாந்தேன் என்று சொல்லலாம்..

ஏனெனில் நீங்கள் கவிதையின் ஆழ்ந்த கருவை கையிலெடுக்காமல் மேலோட்டமாக பதில் சொல்லியிருந்தீர்கள்.

தவறு என்மேல்தானே... சாயத்தை பூசிக் கொண்டவன் நான்தானே!!..

மன்னிக்கவும்! பூ! ஆழ்ந்து விமர்சிக்கிறேன் என்று நினைத்து கவிதையின் கருப்பொருளை விட்டு விலகிடுவேனோ என்றென்னியே தாங்கள் சொல்வது போல் மேலோட்டமாய் விமர்சித்திருந்தேன்...

poo
23-04-2007, 05:12 AM
நன்றி கவிதா... நீண்ட நாட்களுக்குப்பின் உங்களிடமிருந்து பின்னூட்டம் பெற்றிருக்கிறேன்..

"மனிதனின் ஒவ்வொரு செயலுக்குமே அவனது சுயநலமே காரணமாகிவிடுகிறது. குறைந்த பட்சம் தன் மனதிருப்தி என்கிற சுயநலமாவது மிஞ்சிவிடுகிறது."

உண்மை.. என்னைக்கூட கவனியுங்கள்.. இதை கவிதையாக எழுத வேண்டுமென்ற சுயநலம் ஒட்டிக் கொண்டிருக்கிறதே..

poo
23-04-2007, 05:15 AM
நன்றி நல்ல வாத்தியார் அவர்களே...

வீட்டை இடிக்கும் கூட்டத்துக்கு மந்திரிதான் சாமி.

poo
23-04-2007, 05:16 AM
நன்றி ஓவியா...

கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறதுபோல உங்களுக்கு...என் கவிதைகளுக்கு பதில் அளித்திருப்பதில் மகிழ்கிறேன்...

poo
23-04-2007, 05:18 AM
பரவாயில்லை ஷீ.. இது எல்லோருக்கும் நடக்கும் ஒன்றுதான்.. ஆனால் கவலைப்படுமளவு யோசிக்கவைக்கும் நிகழ்வு.

ஓவியா
24-04-2007, 04:53 AM
நன்றி ஓவியா...

கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறதுபோல உங்களுக்கு...என் கவிதைகளுக்கு பதில் அளித்திருப்பதில் மகிழ்கிறேன்...

பூ
எனக்கு நேரம் கிடைத்தால் அனைத்து கவிதைகளையும் விமர்சிக்க ஆசைதான்.