PDA

View Full Version : தமிழின் மீது ரஜினியின் கொலைமுயற்சி



ஜெயாஸ்தா
12-04-2007, 04:42 PM
தமிழை கொலை செய்ய ரஜினி எடுத்த கலை அரிவாள்! ரஜினியின் பொருள்கள் அனைத்தும் கர்நாடகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. - ஒரு அவசிய அலசல்!

பகல் முழுவதும் உழைத்து வியர்வையை ஆறாக்கி விளைச்சலைப் பெருக்கிய விவசாயத் தொழிலாளர்கள் 3 ரூபாய்க் கூலி உயர்வு கேட்டதற்காகச் சாட்டையடியையும் சாணிப்பாலையும் பரிசாகப் பெற்ற மண்தான் தமிழகம். இங்கேதான் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசை நடிகர் ரஜினிக்குக் கூலியாகக் கொடுத்தார்கள் தமிழக மகா ரசிகர்கள்.

இந்த அநியாயக் கூலிக்கு நன்றிக்கடனாக உடல்-பொருள்-ஆவி அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் ரஜினி தருவார் என்று பாட்டு எழுதினார் கவிப்பேரரசு வைரமுத்து. ரஜினியின் பொருள்கள் அனைத்தும் கர்நாடகத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன. மிச்சமுள்ள உடலையும் ஆவியையும் கேட்கக்கூடிய அளவுக்குக் கொடூர எண்ணம் கொண்டவர்களல்லர் தமிழக மகா ரசிகர்கள். குறைந்தபட்சம் தன்னுடைய படங்களில் தமிழைக் கொல்லாமலாவது இருக்கட்டும் என்றுதான் எதிர்பார்த்தனர். ஆனால், ரஜினிக்காகக் கவிப்பேரரசு கொடுத்த உறுதிமொழியைக் காலில் போட்டு நசுக்கிவிட்டு, அதே ரஜினியின் அனுமதியோடு தமிழ்க் கொலை செய்திருக்கிறார் வித்தக் கவிஞர் பா.விஜய்.

பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சிகளைத் தொடர்ந்து உலகப் புரட்சி செய்யப்போகிற 'சிவாஜி' படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில், தன் வியர்வைக்குத் தங்கக்காசு கொடுத்த தமிழுக்கு ரஜினி செய்திருக்கும் 'சேவை'யைப் பாருங்கள்.

ஒரு கூடை முன்லைட்
ஒன்றாகச் சேர்ந்த கலர்தானே என் வெய்ட்
.... ........... ....................
......... ............ ..............
ஆ.. ஓ.. லெட்ஸ் த்ரொ எ ஃபிடோ
ஹீரோ...ஹீரோ... ஹீராதி ஹீரோ
ஸ்டாரோ ஸ்டாரோ.... நீ சூப்பர் ஸ்டோரோ

-இப்படி செம்மொழித் தமிழில் பொளந்து கட்டியிருக்கிறார்கள். பாடலின் இசையும் மேற்கத்திய பாணிதான். தமிழ் மண்ணின் வாசனையைத் தேடினாலும் கிடைக்காது.

கதையமைப்பின்படி இது வெளிநாட்டில் பாடப்படும் பாடல் என்று வரிந்துகட்டிக் கொண்டு வருவார்கள் ரஜினியின் ரசிகாதி ரசிகர்கள், நிற்க...

'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா'

என்பதும் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்ப்பட பாடல்தான். 'பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ' என்பதும் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட பாடல்தான். 'அன்பு நடமாடும் கலைக்கூடமே, ஆசை மழை மேகமே, கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே.. கன்னித் தமிழ் மன்றமே' என்பதும் வெளிநாட்டுப் படப்பிடிப்புப் பாடல்தான். சில மாதங்களுக்கு முன் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் நியூயார்க் நகரின் எழிலைக் கண்களுக்கு விருந்தாக்கிய பாடலும்கூட, 'வெள்ளி நிலவே... நட்சத்திரப் பட்டாளம் கூடிக்கொண்டு வந்தாய்' என்றுதான் அமைந்திருக்கிறது.

ரஜினியே ஒரு காலத்தில் 'அக்கறைச் சீமை அழகினிலே மனம் ஆடக் கண்டேனே' என்று தான் வெளிநாட்டுப் படப்பிடிப்பில் வாயசைத்தார். அவருடைய ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தும் அதற்கு நன்றிக்கடனாக மூன்லைட், டியூப்லைட் என வெளுத்து வாங்குகிறார். ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட இசைப்புயல்கள், சூறாவளிகள், சுனாமிகள் வருகைக்குப்பின் தமிழ்ப்படப் பாடல்களில் தலைதூக்கிய ஆங்கில ஆதிக்கம் இப்போதுதான் மெல்ல மாறிவந்தது. பாவலர்கள் அறிவுமதி தாமரை, நா.முத்துக்குமார், யுகபாரதி உள்ளிட்டோர் முடிந்த அளவு பிற மொழிக்கலப்பைத் தவிர்த்து வந்த நிலையில்தான் ரஜினி+ஷங்கர்+ஏ.ஆர்.ரகுமான்+சுஜாதா+பா.விஜய் கூட்டணி மீண்டும் ஆங்கிலத் திணிப்பை நடத்தியிருக்கிறது.

செத்த மொழியான சமஸ்கிருதத்தின் கருட புராணத்தைத் தூக்கிப்பிடிக்கும் 'அந்நியன்', சமூக நீதிக்கு எதிரான சித்தரிப்புகளைக் கொண்ட 'ஜென்டில்மேன்', வாலிபத்தின் வக்கிரங்களை மட்டும் தேடியெடுத்து ஆராதிக்கும் 'பாய்ஸ்' என்று தமிழ் மொழிக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் நிறையவே 'புண்ணியம்' செய்திருக்கிற ஷ்ஷ்ஷ்ஷ்ஷங்கர் தனது 'டேக் இட் ஈசி பாலிசி'யின் படி, ரஜினியுடன் கூட்டணி போட்டுக்கொண்டு தமிழ்க் கொலைகளைப் புரிய, திரைப்படம் எனும் கலை அரிவாளைத் தீட்ட ஆரம்பித்திருக்கிறார். இவர்களின் வியர்வைக்குத்தான் நாமும் தங்கக்காசுகளை அள்ளித் தரப்போகிறோம். தமிழக அரசும் 'சிவாஜி' என்கிற தமிழ் 'டைட்டிலுக்கு' வரிவிலக்கு தரப்போகிறது.

நன்றி -தாகம் இதழ்

பின்குறிப்பு : இது என்னுடைய கருத்தாக்கம் இல்லை. வேறொரு இணையதளத்தில் படித்தது. (ஏன்னா யாரும் நம்மை போட்டு குத்து குத்துன்னு குத்திப்புடக்கூடாதல்லவா... அதான் இந்த முன்னெச்சரிகை பின் குறிப்பு)

leomohan
12-04-2007, 05:40 PM
அட ராமா

இங்கேயுமா

ஜோய்ஸ்
13-04-2007, 04:19 PM
அப்ப வேற எங்கயாம்? !

சுட்டிபையன்
13-04-2007, 04:29 PM
அது சரி 'சிவாஜி' யில் வரும் 'ஜி' தமிழ்ச் சொல்லா?. கலைஞரின் அரசு இதற்கும் வரி விலக்கு வழங்குகிறதா?

சுட்டிபையன்
13-04-2007, 04:36 PM
சிக்கலை கிளப்பும் சிவாஜி பாடல்கள் - ஆவேசமாகும் தமிழர் அமைப்புகள்

Sunday, 08 April 2007
எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் வெளிவர இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிவாஜி படம், ஏற்கெனவே பல பரபரப்புக்களை ஏற்படுத்தி விட்டது. படத்தின் ஆடியோ சிடி, காஸெட்டுகள் ஏப்ரல் 2_ம் தேதி விற்பனைக்கு வந்து அப்படியரு அசுரவேகத்தில் விறுவிறுவென விற்றுத் தீர்ந்தன. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் அந்த ஏழு பாடல்களும் சந்துபொந்தெல்லாம் இப்போது ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

சிவாஜி படத்தில் பல்லேலக்கா... என்று ஒரு பாடல். பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதிய இந்தப் பாடல், புதிய பூகம்பத்துக்குப் புள்ளி வைத்திருக்கிறது. அந்தப் பாடலில் ரஜினி பாடுவதாக வரும் காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா? என்ற வரிகள் தான் கண்டனத்துக்குக் கால்கோள் விழா நடத்தியிருக்கின்றன.

இந்த வரிகள் தமிழர்களின் உணர்வுகளைக் கிண்டல் செய்வதாக, பெரியார் திராவிடர் கழகம் போன்ற இயக்கங்கள் பிரச்னையைத் தொடங்கியுள்ளன. கோவையில் உள்ள தமிழ் ஆர்வலர்களும் இந்தப் பாடல் வரிகளால் கொந்தளித்துப் போய் உள்ளனர்.

அந்தப் பாடல் வரிகளில் சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு என்னதான் இருக்கிறது? என்று கோவையில் தமிழர் பாதுகாப்பு வழக்கறிஞர் மைய அமைப்பாளரான சிவசாமி தமிழனிடம் கேட்டோம். அவ்வளவுதான், பொரிந்து தள்ள ஆரம்பித்து விட்டார் அவர்.

அண்மைக் காலமாக ரஜினி, தமிழ்க் கவிஞர்களை விலைக்கு வாங்கி, தன் படப்பாடல்களை எழுதுவதை ஒரு பழக்கமாக்கி வைத்திருக்கிறார். அதற்கு விலை போகும் கவிஞர்கள் ரஜினியை ஒரு மாமன்னனாக, தமிழர் தலைவனாக தமிழ்ப் பாதுகாவலராக உச்சாணிக் கொம்பில் உயர்த்தி வைத்துச் சித்திரிக்கிறார்கள்.

ரஜினியின் பெரும்பாலான சினிமா பாடல்கள், பிறமொழி வார்த்தைகளுடன்தான் தொடங்குகின்றன. உதாரணமாக சந்திரமுகியில் தேவுடா, தேவுடா முத்துவில் குலுவாலிலே பாட்ஷாவில் இக்கட ராரா ராமய்யா, அருணாசலத்தில், மாத்தாடு மாத்தாடு மல்லிகே போன்ற பாடல்களைச் சொல்லலாம். இப்படிப் பிறமொழி வார்த்தைகளுடன் பாடலைத் தொடங்க, ரஜினியே நிர்ப்பந்தம் செய்கிறார். இதன் மூலம் தன்னை தேசியவாதி போல சித்திரித்து, சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்.

தமிழகத்தில் தனது பிழைப்பை ஓட்ட, தமிழையும், தமிழர்களின் உணர்வுகளையும் படங்களில் பயன்படுத்திக் கொள்வதும் தமிழர்களுக்கான பிரச்னை வரும்போது ஆன்மிக போர்வையைப் போர்த்திக் கொண்டு வடநாட்டுக்கு ஓடி விடுவதும் ரஜினிக்கு வாடிக்கை. அதேசமயம், இவரின் துதிபாடிகள் இவரை எப்படியாவது அரசியலுக்குக் கொண்டு வரத் துடிக்கிறார்கள். அதற்காக எம்.ஜி.ஆரைப் போல பாடல் வரிகள், வசனங்கள் அமைக்க ரஜினியைத் தூண்டுகிறார்கள்.

எம்.ஜி.ஆர். தமிழர்களோடும் தமிழ் மண்ணோடும் பின்னிப் பிணைந்து வாழ்ந்த ஒரு தலைவர். அவர் ஓர் அரசியல்வாதி. ஆனால், ரஜினியோ முழுக்க முழுக்க ஒரு பிழைப்பு வாதி. காவிரிப் பிரச்னை கிளம்பும்போதெல்லாம் ரஜினி வாய்மூடி மௌனம் காப்பதில் இருந்தே அவர் தமிழனின் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த நிலையில்தான் சிவாஜி படத்தில் இப்படியரு பாடல் அவருக்காக அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் வரும் காவிரி ஆறு பற்றிய வரிகளை, எந்த ஒரு தமிழனும் இந்த மண்ணில் உள்ள விவசாயிகளும் மன்னிக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் தன் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள, தான் அரசியலுக்கு வருவது போன்ற ஒரு தோரணையை ஏற்படுத்துவது ரஜினி அவ்வப்போது செய்யும் தந்திரம். அதைத்தான் இந்தப் பாடலிலும் செய்திருக்கிறார். ஆனால் இன்று தமிழர்கள், சினிமா வேறு, அரசியல் வேறு என்பதைப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதன் அடையாளமாகத்தான், அண்மையில் ரஜினி வீட்டின் முன் விவசாயிகள் முற்றுகையிட்டு காவிரிப் பிரச்னையில் ஏன் குரல் கொடுக்கவில்லை? என்று போராடினார்கள்.

இந்த நேரத்தில் காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா? என்று ஒரு கவிஞரை எழுத வைத்து ரஜினி புளகாங்கிதம் அடைவது, அவருக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால், தமிழர்களை அது கேலிக்கூத்தாக்குகிறது. காவிரி ஆறு இவருக்கு மறந்து போகாத ஒரு விஷயம் என்றால், ஏன் அந்தப் பிரச்னை பற்றி இவர் கருத்தேதும் சொல்லவில்லை?

காவிரிப் பிரச்னையைக் கண்டு கொள்ளாமல் ரஜினி ஒதுங்கி ஓடுவதே, அவர் ஓர் கன்னட ஆதரவாளர் என்பதை நிரூபிக்கிறது. கர்நாடகாவில் இருக்கும் மனிதாபிமானமுள்ள கிரிஸ் கர்னாட் என்ற நடிகர் கூட தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கிறது என்று ஆண்மையோடு சொல்லியிருக்கிறார். ஆனால் ரஜினியோ, காவிரி பற்றி மூச்சே விடவில்லை.

தமிழகத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போதும் குரல் கொடுக்காமல் தப்பித்து ஓடியவர், படம் எடுக்கும்போது மட்டும் காசு பார்ப்பதற்காக காவிரி, தமிழ், தமிழர் என்று பாடல், வசனங்கள் அமைப்பது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.

இதுவரை ரஜினியின் செயல்களைப் பொறுத்துக் கொண்ட தமிழன், இனிமேலும் பொறுத்துக் கொள்ள மாட்டான். நாங்கள் தமிழ் ஆர்வலர்களையும், விவசாயிகளையும் திரட்டி, சிவாஜி படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப் போகிறோம். அதில் ரஜினி யாரென்று தமிழக மக்களுக்கு தோலுரித்துக் காட்டப் போகிறோம் என்றார் அவர் காட்டமாக.

பெரியார் திராவிடர் கழகத் தலைவரான கொளத்தூர் மணியிடம் இதுபற்றிக் கேட்டோம்.

தமிழகத்தின் மேல் கரிசனம் கொண்டவர் போல ரஜினி பாடுவதாக இயற்றப்பட்டிருக்கும் காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா? என்ற

நா. முத்துக்குமாரின் பாடல் வரியை நான் தவறு என்று சொல்லவில்லை. யாருக்காக அந்தப் பாடல்வரி இயற்றப்பட்டிருக்கிறது என்பதில்தான் சர்ச்சையே!

தமிழகத்தில் வசித்துக் கொண்டு வளமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரராகியுள்ள ரஜினிக்கு தமிழ் மீதோ, தமிழர்கள் மீதோ துளி கூட அக்கறை கிடையாது. காவிரி நீரை தமிழகத்துடன் பங்கிட ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கன்னட நடிகர்கள் கர்நாடகத்தில் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களை காவிரிப் பிரச்னையைக் காரணம் காட்டி அடித்து நொறுக்குகிறார்கள். இந்த கன்னட அமைப்புகளுக்கு அங்கேயுள்ள ஒரு சில தமிழ் இயக்கங்கள்கூட ஆதரவு தெரிவித்திருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

ஆனால், தமிழ்நாட்டுக்காரராக தன்னை காட்டிக்கொள்ளும் ரஜினிகாந்த், இங்கே காவிரி தொடர்பாக எந்தக் கருத்தும் கூறாமல் தன்னை தற்காத்துக் கொண்டார். காவிரிப் பிரச்னையில் அவருக்கு எந்த அக்கறையும் இருந்தது கிடையாது. அப்படியிருக்க, சிவாஜி படத்தில் காவிரியாறு பற்றி கரிசனமாக அவர் பாடுவது நெருடலாக இருக்கிறது.

நதிகளை இணைக்கும் திட்டத்துக்காக ரஜினிகாந்த் ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்குவதாகச் சொன்னது கூட ஒரு வகை விளம்பரமே! சாத்தியமில்லாத ஒரு திட்டத்துக்கு இரண்டு கோடி ரூபாய் தருகிறேன் என்று நான் கூட எளிதாகச் சொல்லி விட முடியுமே?

காவிரி ஆறு பிரச்னையால் தமிழகம் வறண்டு போய் கிடக்கிறது. அதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு நடிகர் காவிரி ஆறும், கைக்குத்தல் அரிசியும் மறந்து போகுமா? என்று பாடுவதாக அமைக்கப்பட்டிருப்பது அபத்தமானது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். அதில் என்ன தவறு? என்று முடித்துக் கொண்டார் கொளத்தூர் மணி.

நன்றி குமுதம்

leomohan
13-04-2007, 08:10 PM
அது சரி 'சிவாஜி' யில் வரும் 'ஜி' தமிழ்ச் சொல்லா?. கலைஞரின் அரசு இதற்கும் வரி விலக்கு வழங்குகிறதா?


ஹா ஹா

கருணாநிதி என்ற பெயரில் வைத்து படம் எடுத்தால் கூட வரிவிலக்கு கிடைக்காது. ஏனென்றால் அதுவே வடமொழி சொல்.

ஆதவா
14-04-2007, 12:53 AM
ஹ!!!
எனக்குள் நிறைய கருத்துக்கள் ஊறிக்கொண்டு இருக்கிறது............. எழுதுவதற்கு நேரமில்லை

நான் ரஜினி ரசிகனல்ல.... யாருக்கும் ரசிகனல்ல...

ஆனால் சில கேள்வி கேட்கிறேன்..


தமிழகத்தில் சினிமாவை சினிமாவாகப் பார்க்கிறீர்களா?
பிறமொழிப் பாடல் வரிகள் அமைந்த பாடலை ரஜினி மட்டுமா பாடுகிறார்?
ஒருவரின் சொந்த வாழ்க்கையில் நுழைய உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?இந்த கேள்விக்கு சரியான விடை சொல்லுங்கள்..... கருத்துக்களை நான் தருகிறேன்.....

mukilan
14-04-2007, 01:32 AM
ஆதவன் உங்களுக்குத் தோன்றிய அதே எண்ணங்கள் தான் எனக்கும். ஏ.ஆர்.ரகுமானும், வைரமுத்துவும் வாலியும் ஏன் ரஜினியே கூட சினிமா என்ற ஒரு தொழிலில் தங்களுக்குப் பிடித்ததை அல்லது தங்களுக்கு பணம் கொடுக்கும் ஒருவருக்குப் பிடித்ததை செய்கின்றார்கள். காசு கொடுப்பவர் "நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்" என்றால் போன்ற பாடல் வேண்டும் என்றால் ஏ.ஆர். ரகுமான் அதற்கும் அருமையாக இசையமைத்துக் கொடுப்பார். வைரமுத்து வைர வார்த்தைகளால், முத்து வாக்கியங்களால் (நன்றி: பாரதிராஜா) பாடல் எழுதுவார். வாலி மட்டும் என்ன சளைத்தவரா? இது கன்னங்களா? இல்லை தென்னங்கள்ளா? என்று வார்த்தை ஜாலங்களில் புகுந்து விளையாடுவார்.காசு கொடுப்பவரும் இயக்குநரும் குத்துப் பாட்டு வேண்டுமென்றால் வைரமுத்து "ரகுமான் தம்பியின் இசையில் இரைச்சல் வந்து சப்பணமிட்டு அமர்ந்து கொள்கின்றது" என்று கூறுமளவிற்கும் இசைப்புயல் மோசமாகவும் இசையமைப்பார். கொள்கையும் தொழிலும் ஒன்றோடொன்று ஒன்றிப் போக முடிவதில்லை என்பது கசப்பான உண்மை!
இதை கலை விபச்சாரம் என்றெல்லாம் வகைப் படுத்தத் தேவையில்லை. மிக முக்கியமாக பதிந்துள்ள இரு பதிவுகளும் மன்றத்தின் பதிவர்களுடையது அல்ல என்பதால் நாம் தனியாக திரி தொடங்கி வேண்டுமானால் விவாதிக்கலாம்.

ஜெயாஸ்தா
14-04-2007, 02:38 AM
தமிழகத்தில் சினிமாவை சினிமாவாகப் பார்க்கிறீர்களா?
[/LIST]
தங்கள் கருத்துக்கு நன்றி ஆதவா.

தமிழகத்தில் 60 சதவீத மக்கள் திரைப்படங்களை திரைப்படங்களாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் மீதமுள்ள 40 சதவீத மக்கள் சினிமாவை உண்மையென்ற நம்பும் மக்கள். இவர்கள் கிரமாங்களில் அதிகமாகவும் நகரங்களில் குறைவான சதவீதத்திலும் உள்ளனர். சில குக்கிராமங்களில் புரட்சித்தலைவர் எம்.ஜி.யாருக்காக இன்னும் கூட ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத செய்தி. (என் கிராமத்தில் கூட இன்னும் இந்த நிலைதான்). இந்த 40 சதவீத மக்கள் இவரைப் போன்ற வாய்ஜால நடிகர்களின் மாய்மால வார்த்தைகளில் ஏமாந்து போகிறார்கள் என்பதுதான் உண்மை. சினிமா மனிதனை முற்றிலுமாக மாற்றவிட்டாலும் கூட அவனது மாற்றமான சிந்தனைக்கு வித்திடுகிறது.

"சினிமா பார்த்துதான் வங்கியை கொள்ளையடிக்கும் எண்ணம் வந்தது. அந்த சினிமாவில் எப்படி காட்டினார்களோ அதே போல்தான் வங்கியை கொள்ளையடித்தேன்" -இது ஒரு வங்கி கொள்ளையனின் வாக்குமூலம். நீங்கள் கேட்கலாம் "சினிமாவில் டுயட் பாடும் போது மரங்களை சுற்றி சுற்றி கதாநாயகனும், கதாநாயகியும் ஆடுகிறார்களே, நிஜ வாழ்க்கையில் யாரும் அவ்வாறு செய்கிறார்களா?.

இதற்கு என் பதில் என்ன தெரியுமா? நிஜவாழ்க்கையில் அவ்வாறு செய்யாவிடிலும் கற்பனையில் அனைவருமே மனதினுள் டுயட் பாடத்தான் செய்கிறோம்.

ஈவ்டீசிங் செய்வதைப்பற்றி சொல்லிக்கொடுப்பது அதிகப்படியாக சினிமாதான் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறது.

டி.வி. மற்றும் சினிமா பார்த்து விட்டு இன்று 5 ஆம் வகுப்பு மாணவர்கள் கூட காதலில் ஈடுபடுகிறார்கள். இன்னும் என்னென்வோ செய்கிறார்கள் என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.


சினிமா நம்மை மாற்றாவிடிலும் மாற்றத்திற்கான வித்தையிடுகிறது. அதனால் சினிமாவின் மூலம் ஆக்கப்பூர்வமான நம் வாழும் சமுதயாத்திற்கு சார்ந்த, தேவையான கருத்தைக் கொடுக்கலாம் என்பது என் எண்ணம்.

ஆகவே இந்த நிழல் நிஜமாகிறது என்பது என் கருத்து.

(உங்கள் மற்றைய கேள்விக்கு விரைவில் பதிலளிக்கிறேன்)

ஆதவா
14-04-2007, 02:54 AM
நன்றிங்க முகிலன்ன்... உங்கள் கருத்து மிக அருமை.......

என்னதான் காசுக்காக அப்படி எழுதினாலும் அவர்களின் திறமைகளை மிக அழகாக புத்தகங்களில் நாம் பார்க்கிறோம்..

ஆதவா
14-04-2007, 02:58 AM
ஜே.எம்.!! முகில் அவர்கள் சொன்னதுபோல தனித் திரியாக நான் இடுகிறேன்.. அங்கு வந்து இக்கருத்தை பதிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..

நன்றி...

பரஞ்சோதி
14-04-2007, 04:27 AM
ஏனுங்க,

பாட்டை எழுதியவர் சுத்தமான தமிழ் புலவர், படம் எடுத்தவர் சுத்தமான தமிழ் இயக்குநர், தயாரிப்பவர் சுத்தமான தமிழ் தயாரிப்பாளர், இசை அமைத்தவவரும் சுத்தம் தான். இவர்கள் அனைவரையும் விட்டு விட்டு வாயசைத்த ஒருவரை போட்டு இப்படி வதைக்கிறீங்களே!

எதை எழுதினாலும் படிக்க ஆள் இருக்காங்கன்னு நினைக்கிறவங்களால் எதையும் எழுத முடியும் என்பதற்கு இது ஒரு சாட்சி.

lolluvathiyar
15-04-2007, 11:21 AM
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு
சினிமாவில் தூய தமிழை தமிழர்களாகிய
நாங்கள் எதிர்பார்க்க வில்லை

தமிழ் என்ன பொழுது போக்கு அம்சமா?

நடிக்க வந்தவன் யார இருந்தா என்ன
எங்களுக்கு பிடித்த மாதிரி நடிச்சால்
நாங்கள் ரசிக்கிறோம்.

பிடிச்சா பாரு இல்லாட்டி கம்முனு கிட

நீ என்ன தான் முக்கி முக்கி தெருவுல நின்னு
கத்தினாலும் நாங்கள் எங்கள்
சூப்பர் ஸ்டாருக்கு ஜே போடுவோம்
தங்க காசும் தருவோம்.

devendira
22-05-2007, 10:21 AM
ரஜினி என்ற மனிதனின் முதல் முயற்சியான தமிழ்த்திரை நுழைவுக்காக தன் கன்னட வெறித்தனத்தை முழிங்கிக்கொண்டு பிறகே ஒட்டமுடிந்தது.
அவன் எப்படியும் சூப்பரானாவனா இருந்தாலும் சரி...........எப்படியிருந்தாலும் சரி....ஆனா ரஜினி ரசிகர்கள் என தம்மை அழைத்துக்கொண்டு அரசியல் நுழைவுக்கு தன் தலைவன் வந்து அவனும் உயர்ந்து தானும் உயரலாம் என கனவு காணும் பல்லாயிர ரசிகர்களான மன்றௌறுப்பினர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.


எம்.ஜி.ஆர் வேற.......மற்றவர்கள் வேற....தமிழக மக்கள்பால் அக்கறை இருப்பதாக குறைந்தது நடிக்கவாவது செய்யலாமில்லையா......

lolluvathiyar
22-05-2007, 11:05 AM
நடிகர்கள் திரையில் நடிப்பவர்கள்

அரசியல் தலைவர்களும் ஆட்சியில் நடிப்பவர்கள்

இரண்டு பேருமே மக்களை முட்டாளாக்கி பிழைப்பவர்கள்

மக்கள் என்றுமே முட்டாள்கள் தான்

leomohan
22-05-2007, 12:08 PM
நடிகர்கள் திரையில் நடிப்பவர்கள்

அரசியல் தலைவர்களும் ஆட்சியில் நடிப்பவர்கள்

இரண்டு பேருமே மக்களை முட்டாளாக்கி பிழைப்பவர்கள்

மக்கள் என்றுமே முட்டாள்கள் தான்

வாத்தியாரே நீங்கள் எழுதுவது எல்லாமே பஞ்ச் வரிகள். அருமையாக சொன்னீர்கள்.

ஓவியா
23-05-2007, 12:42 PM
நடிகர்கள் திரையில் நடிப்பவர்கள்

அரசியல் தலைவர்களும் ஆட்சியில் நடிப்பவர்கள்

இரண்டு பேருமே மக்களை முட்டாளாக்கி பிழைப்பவர்கள்

மக்கள் என்றுமே முட்டாள்கள் தான்

அதே அதே சபாபதே.

ஒரே குத்து மூக்கு உடைந்தது கதை போல் வந்து நைசா குத்திட்டு போகும் வாத்தியார் வாழ்க. :medium-smiley-029: