PDA

View Full Version : கரையோர மீன்கள்!



ஷீ-நிசி
11-04-2007, 05:04 AM
போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர் நால்வரும்!

புதுமனைவிக்கு
கையசைத்தான் ஒருவன்!

நேற்று தந்தையாக்கிய
குழந்தைக்கு விரலசைத்தான்
மற்றொருவன்!

காதலிக்கு கண்ணசைத்தான்
இன்னொருவன்!

நிச்சயிக்கபட்டவளை
எண்ணி நினைவசைத்தான்
வேறொருவன்!

கடலில் மீன் பிடிக்க
புறப்பட்டன
கடலோர மீன்கள்!

கரையோரத்தில் வாழும்
மீன் கூட்டங்கள்!

சுனாமிக்கும், சூறாவளிக்கும்
தப்பியதில்லை குடிசைகள்!

அடங்கியபின் மீண்டும்
அங்கேயே குடிசைபோடும்,
அசராத கடல் மைந்தர்கள்!

நிச்சயமில்லாத
பயணம்தான் நாளும்!

நிச்சயமில்லாததாலேயே
பயணங்களும் நீளும்!

ஒரு நாள் பயணமும் உண்டு!
ஒரு வார பயணமும் உண்டு!

அதிர்ஷடமிருந்தால்
மீன்கள் சிக்கி
வலையே கிழியும்!

அதிர்ஷ்டம் மறைந்தால்
வீணிலே சிக்கி
வலை மட்டுமே கிழியும்!

வாகனம்,
காட்டிலே பழுதானால்
காலார நடக்கலாம்!

கடலிலே பழுதானால்?!

தூரத்தில் மிதக்கும்
கட்டையும் கூட
காப்பாற்றப்போகும்
படகாய் தோன்றும்!

தண்ணீரும், அரிசியும்
தவணைமுறையில்
உட்கொள்ளவேண்டும்!

கடல்வீதியை
கிழித்துக்கொண்டு
நால்வரோடு பயணமானது
வாழ்க்கைப் படகு!

ஆகாயத்தில் ஆடாமல்
நிற்கும் நிலா,
கடலின் மீது மட்டும்
ஆடிக்கொண்டேயிருந்தது!

நடுக்கடலில் படகு
இளைப்பாறிக்கொண்டிருந்தது!

வலைவீசி காத்திருந்தனர்!

வீசின ஒவ்வோரிடத்திலும்
மீன்களைத் தவர
வேறெல்லாம் சிக்கின!

அதோ! அங்கே சென்றால்
மீன்களை அள்ளலாம்
என்றான் ஒருவன்!

அவன் விரல்கள்
எல்லைத் தாண்டி காட்டியது!

வேண்டாம் என்றான்
மற்றொருவன்!

வெறுங்கையுடனா
கரைக்கு செல்வது?!

சிக்கினால்,
வெறுங்கை கூட
கரைக்கு செல்லாது!

வாக்குவாதம் முற்றி
எல்லை தாண்டியது..

வாதமும்! படகும்!

படகின் சத்தத்தையும்,
விளக்கையும் அணைத்தனர்!

இருளோடு கலந்து
வலை வீசினர் கடலில்!
நடுக்கம் வாட்டியது
அவர்கள் உடலில்!

தூரத்தில் மின்னொளியில்
ஓர் படகு ஊர்ந்துவந்தது!

சந்தேகமேயில்லை,
கடல் கொள்ளையர்கள்தான்!
கதறினான்,
புது மனைவி கண்டவன்!

கடல்கொள்ளையர்களிடம்
ஒரு கொள்கை உண்டு!

பக்கத்தில் வந்துவிட்டால்
படகை ஓட்டக்கூடாது!

உடன்பட்டால்
உயிர் மட்டும் தப்பும்!
மற்றவை மட்டும்
சூறையாடப்படும்!

மீறினால் உயிரும்
சூறையாடப்படும்!

காதலிக்கு கண்ணசைத்தவன்
தான் படகையும் அசைப்பவன்!
(ஒட்டுநர்)

கடல் கொள்ளையரின்
படகை கண்டதும்
இன்ஜினை முடுக்கினான்..
ஏதோ வேகத்தில்!

எட்டும் தூரத்தில்
நெருங்கியது படகு
அவர்கள் பக்கத்தில்!

ஒரு கண்மூடி, ஒரு கண்வழியே
குறிபார்த்தான் கொள்ளையன்!

துப்பாக்கி குண்டு
தப்பாமல் தன்கடமையை
முடித்தது அவன் மார்பில்!

தேக்கிவைத்த காதலெல்லாம்
இரத்தமாய் வழிந்தது
அவன் மார்பின் வழியே!

காதலியின் முகம்
நினைவில் நிறுத்தி,
சுவாசத்தை நிறுத்தினான்..

தந்தையானவனும்
கணவனானவனும
சடுதியில் குதித்தனர்!

கடலின் மடியில்
படகின் அடியில்
ஒளிந்தனர்!

நிச்சயிக்கபட்டவன்,
நிச்சயிக்கபட்டான்!
இன்னொரு குறிக்கு!

இந்தக் குண்டு அவன்
வயிற்றை நேசித்தது!

குடலையும் குருதியையும்
பெற்றெடுத்து இறந்தான்...

விலைமதிப்புள்ள பல
வலையையும், கயிறையும்
சூறையாடினர்....

சுற்றும் முற்றும் தேடிவிட்டு
அடுத்த உயிரை எடுக்க
படகை எடுத்தனர்...
கடல் எமதர்மர்கள்!

கடலின் மடியில்
விழுந்த இருவர் மட்டும்
கரை சேர்ந்தனர்!

இறந்தவனின் சொந்தங்கள்
அழுது புரண்டன!

மீண்டவனின் சொந்தங்கள்
அழுவதா! சிரிப்பதா என்று
மிரண்டன!

ஊர்த்தலைவர்கள்
கோட்டையில் நின்றனர்...

தலைப்புச் செய்தி:
கடல்கொளையர்களின் அட்டகாசத்தை
தடுக்க மத்திய அரசுக்கு கடிதம்....

ஒரு வாரம் கழித்து....

போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்.....

இளசு
11-04-2007, 06:08 AM
இன்றைய இந்த ஒப்பமுடியாத் துயர நிலையையும்
தொடரும் கொடுமையைத் தடுக்க முடியா கையாலாகாத்தனத்தையும்
மீன்பிடிக்கச் செல்வோரையும் கொல்லும் சிங்களக் கொலைகாரர்களின் மிருகச்செயலையும்...

வாகனம் பழுது, தவணைத்தண்ணீர் போன்ற அழகிய புதுவீச்சுடன்
அருமையாகச் சொன்ன ஷீ-நிசிக்குப் பாராட்டுகள்...

ஷீ-நிசி
11-04-2007, 06:13 AM
மிக்க நன்றி இளசு அவர்களே!

gayathri.jagannathan
11-04-2007, 07:04 AM
ஷீ நிசி அவர்களே கவிதை மிகவும் அருமை.. அதை விட கவிதைத் தலைப்பு அடடா...(அதுவே பல கதைகளைச் சொல்கிறது)....

கரையோரத்தில் வாழும் மீனவக் குடும்பங்களின் நிதமும் செத்துப் பிழைக்கும் வாழ்வை மிக அருமையாக, எளிமையான சொற்களால் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்....

கடலில் செல்லும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கனவு... அந்தக் கனவுகளின் உயிராய் இருக்கும் குடும்பம்,குழந்தை மனைவி, காதலி ஆகியோரின் நிஜத் தவிப்பு...

இவர்கள் தண்ணீரில் மீன்களாய் நீந்த... அங்கே கரையில் அவர்களது குடும்பம், தரையில் இட்ட மீன்களாய்த் தவிக்கும் தவிப்பை கவியின் வார்த்தைகளால் விவரிதது நெஞ்சை விம்மச் செய்து விட்டீர்கள்...

இளசு
11-04-2007, 07:08 AM
முகிலன், பென்ஸ், ஆதவன், ஷீ-நிசி வரிசையில்
காயத்ரியின் விமர்சனங்கள் - விரும்பித் தேடிப் படிக்கவைக்கின்றன..

என் மனமார்ந்த பாராட்டுகள் காயத்ரி!

ஷீ-நிசி
11-04-2007, 07:14 AM
காயத்ரி... கடலில் மீன்களாய் கணவன், கரையில் துடிக்கின்ற மீன்களாய் அவர்களின் குடும்பம்.. அருமையான விமர்சனம்.. கவிதையில் இதை விட்டோமே என்று எண்ண வைத்தீர்கள்.. இளசு சொல்வதுபோல் உங்கள் விமர்சனம் மிக அருமையாக உள்ளது... நன்றி காயத்ரி..

gayathri.jagannathan
11-04-2007, 07:43 AM
படைக்கத் தெரியாவிட்டாலும் இது நாள் வரை எனது படித்தலின் அனுபவங்களின் (கற்றது கையளவே) அடிப்படையில் இட்ட விமர்சனம் அது..

மிகத் தரமான விமர்சங்களை இடும் மன்றத்தின் தூண்கள் வரிசையில் என்னையும் சேர்த்ததற்கு நன்றி இளசு அவர்களே,

நன்றி ஷீ-நிசி அவர்களே

தங்களது இந்தக் கவிதையைப் படித்த போது எனக்கு வைரமுத்து எழுதிய "தண்ணீர் தேசம்" கவிதை நாவல் நினைவுக்கு வந்தது.... (தவறாகக் கொள்ள வேன்டாம்)...

ஷீ-நிசி
11-04-2007, 07:49 AM
தவறென்ன இதிலே.. தண்ணீர் தேசம் கவிதையை ஒரே இரவில் படித்தவன் நான்... அதன் தாக்கம் இல்லையென்று சொல்வேனாகில் அது பொய்..

gayathri.jagannathan
11-04-2007, 10:36 AM
காயத்ரி... கடலில் மீன்களாய் கணவன், கரையில் துடிக்கின்ற மீன்களாய் அவர்களின் குடும்பம்.. அருமையான விமர்சனம்.. கவிதையில் இதை விட்டோமே என்று எண்ண வைத்தீர்கள்.. இளசு சொல்வதுபோல் உங்கள் விமர்சனம் மிக அருமையாக உள்ளது... நன்றி காயத்ரி..


ஷீ-நிசி, கவிதையின் தலைப்பே இந்த விளக்கத்தைக் கொடுத்து விடும் பொது, கவிதையில் இல்லயே என எண்ண வெண்டாம்.

தலைப்பைப் பார்த்தவுடன் மனதில் வந்த வரிகள் இவை.

kavitha
11-04-2007, 10:53 AM
நெஞ்சத்தைத்தொட்ட கவிதை.
வாழ்க்கையைச்சவாலாக தினம் சந்திக்கும் மனிதர்களின் கதை.


அவன் விரல்கள்
எல்லைத் தாண்டி காட்டியது! தினமும் நாளிதழில் படிக்கும் அவலச்செய்தி இது.




மேலே விண்மீன்கள்
கீழே கடல்மீன்கள்


'தண்ணீர் தேசம்' -வைரமுத்துவின் வரிகள் இவை.

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி!

ஷீ-நிசி
11-04-2007, 11:15 AM
நன்றி கவிதா...

எழுதும்போது கவிஞரின் வரிகளிவை என்று எண்ணவில்லை... எண்ணியிருந்தால் நிச்சயம் தவிர்த்திருந்திருப்பேன்.

மாற்றிவிட்டேன்...

ஆகாயத்தில் ஆடாமல்
நிற்கும் நிலா
கடலின் மீது மட்டும்
ஆடிக்கொண்டேயிருந்தது!

அன்புரசிகன்
11-04-2007, 11:21 AM
கடலில் கடல் - உயிர் கொள்ளையர்கள் கையில் துப்பாக்கி. தரையில் உள்ள கொள்ளையர்களின் உடலில் வெள்ளை வேஷ்டி கலர்கலராக சால்வை.
இது இரண்டும் உள்ளவரை மனிதன் இடுப்பில் துண்டு சந்தேகமே..

ஷீ-நிசி
11-04-2007, 12:49 PM
உண்மைதான் அன்புரசிகன்... நன்றி நண்பரே!

பென்ஸ்
11-04-2007, 01:38 PM
ஷீ...

கண்ணசைப்பவர் முதல் விரல் அசைப்பவர் வரை , அதிகாலை கடலில் இறங்கும்போது மனதை மட்டும் கரையில் வைத்து கொண்டு...

மீனால் வலை கிளிந்தால் புத்தாடை...
வீனாய் கிழிந்தால் வலையோடு வயற்றையும் தைத்து கொள்ளவேண்டும்..

கடர் கொள்ளையர்கள் கூட எப்போதாவதுதான், அன்டைநாட்டு கப்பல் படையினரின் தாKகுதலும், சிறை பிடிப்பும் அதைவிட அதிகமாகிவிட்டதே...!!!

தண்ணீர்தேசத்தை வாசித்து முடித்ததில்லை... (அந்த அளவு பொறுமையில்லை)
ஆனால் கரையோரமீன்களில் அழகாய் நீந்தி வந்தேன்...

காயத்ரி...
மீண்டும் ஒரு முத்திரை விமர்சணம்...

மனோஜ்
11-04-2007, 02:10 PM
ஷீ கவிதை அருமை மீனவர்களின் வாழ்வை அப்படியே கவிதைஆக்கபட்டது அருமை நன்றி
வாழ்த்துக்கள் தொடர....

ஷீ-நிசி
11-04-2007, 03:13 PM
நன்றி பென்ஸ்... மிக அழகாக விமர்சித்துவிட்டீர்கள் நிஜத்தை....

நன்றி மனோஜ்

poo
12-04-2007, 05:22 AM
பாராட்டுக்கள் நண்பரே...

சமீபகாலமாய் அதிகரித்துவரும் துயரத்தை அழகாக கையாண்டிருக்கிறீர்கள்..

கடல் நடுவே எல்லைக்கோடு அமைப்பதுதான் இந்த பிரச்சினைக்கு தீர்வு என நினைக்கும் அரசாங்கத்தை என்ன சொல்வது?!..

நம் மீன்களின் வளத்தை கவனிக்க மறக்கிறது அரசு.. கரையோர மீன்களின் நலத்தையும்தான்..!

இழந்தவன் சொந்தம் அழுவது இயல்பு... மீண்டவன் சொந்தம் தவிப்பதை எளிய சொல்லில் சொல்லியிருக்கிறீர்கள்.. அது அருமை..

தண்ணீர் தேசத்தில் வைரமுத்து படிக்க ஆரம்பித்தவுடன் நம்மை உடன் இழுத்துக் கொண்டே செல்வார்... அதே வெற்றி இந்த கரையோர மீன்களிலும்...

ஷீ-நிசி
12-04-2007, 05:40 AM
இழந்தவன் சொந்தம் அழுவது இயல்பு... மீண்டவன் சொந்தம் தவிப்பதை எளிய சொல்லில் சொல்லியிருக்கிறீர்கள்.. அது அருமை..

இந்த வரிகள் ரசிக்கபட்டு மேற்ற்கோள் காட்டப்படும் என்று எண்ணினேன்..

நன்றி பூ..

செல்விபிரகாஷ்
12-04-2007, 12:06 PM
கடல்மீன்கள் என்ற தலைப்பைக் கண்டதும் கடலின் ஆழத்தில் மறைந்து கிடக்கும் அழகினை எடுத்துரைத்திருப்பீர் என்றுதான் படிக்க ஆரம்பித்தேன், ஆனால் கவிதையோ மனிதன் மனதின் ஆழத்தில் மறைந்து போன மனிதநேயத்தை எடுத்துரைக்கிறது. அருமையான கவிதை

என்றும் அன்புடன்
செல்விபிரகாஷ்

உதயசூரியன்
12-04-2007, 12:19 PM
வைர முத்துவின் பாதிப்பு இருக்க தானே செய்யும்...
பரவாயில்லை நன்றாக இருந்து...

ஆனால்.... மீனவர்கலை குறிப்பிடும் போது... மீன் கூட்டம் என்பது போல் குறிப்பிட்டது எனக்கு வருத்தமளிக்கிறது...

இயறகையை எதிர்த்து போராடும் ஒரே இனம் மீனவர் இனம்..

அவர்கல் சாதாராண மனிதர்களை விட வீரர்கள்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

ஷீ-நிசி
12-04-2007, 12:59 PM
நன்றி செல்விபிரகாஷ், நன்றி உதயசூரியன்..

ஓவியா
12-04-2007, 01:21 PM
நல்ல படைப்பு ஷிநிஷி.

வர்தைகள், அதுவும் ஓவ்வொரு மீனவ நன்பனின் உணர்வையும் சொன்ன விதம் அருனைப்பா. ரசித்தேன்.

தொடர்ந்து எழுதுங்கள். நன்றி!

ஓவியா
12-04-2007, 01:49 PM
இது என் பொதுவானா பார்வை. கவனிக்க, இது கவிதையை வைத்து எழுதவில்லை

இதில் நான் மீனவ நன்பர்களை எந்த வகையிலும் குறை கூரவில்லை. மாறாக அவர்களின் மேல் எனக்கு அதிகம் அன்புண்டு.

ஒரு மீனவரின் குடும்பம் ஒரு வேலையாவது கஞ்சியுண்டு வாழ்வதே, அவர்களின் மீனவ தொழில் தான்.

இந்த மீனவ தொழில் மிகவும் உன்னதமானது, சொல்லப்போனால் நண்பர் உதயசூரியன் போனல் கூரியது போல் அவர்கள் மாவிரர்களே.



என்னிடமுல்ல ஒரு கேள்வி, இது அசட்டாகவோ அல்லது முட்டள்தனமாகவோ இருக்கலாம், ஆனால் மனதில் தோன்றியது.

மிருகம் 5தறிவு கொண்டது அதனால் வாழ்வதற்க்கு சகா மிருகத்தை வேட்டையாடி கொன்று உண்டது.

நாம் 6றிவு படைத்தவர்கள், நாமும் அந்த தப்பை செய்கிறோமே, மீனை வேட்டையாடுவது ஒரு வகையில் தப்புதானே???? எத்தனையோ ஜீவராசிகள் அழுவதை நான் பார்த்திருகிறேன். சொ, அவைகளுக்கும் உணர்ச்சி இருகின்றது. (மீன்பிடி தொழிலால்தான் கோடான கோடி மானிடர்கள் வாழ்வது என்பது எனக்கும் ஓரளவு தெரியும்.)

நமக்கு உயிர்பலி எற்ப்படும் பொழுது நாம் கலங்குகிறோம், அப்படி இருப்பின், சகா ஜீவராசிகளுக்கும் அந்த துன்பம் இருக்கும் தானே????

நான்கு உயிர்களுக்கு கலங்கும் நாம் ஏன் அந்த கோடான கோடி ஜீவராசிகளின் இழப்பிற்க்கு என்றுமே கலங்குவதில்லை???

காரணம், அவைகலுக்கு நாம் வாழ்வது போல் குடும்பம், கடமை, பணம், பஞ்சம் என்று எதுமே இல்லையென்று நினைத்தால்??? அவைகளின் உணர்ச்சியை நாம் மதிக்கவில்லையே!!! ஃஊ ஃகேர்ஸ் என்று நினைக்கிறோமோ???இங்கே நாம் சுயனலவாதிகலாகி விடோமே????

இதுதான் புரியாத புதிரா???

தப்பாகின் மன்னிக்கவும் மக்கா!!

ஷீ-நிசி
12-04-2007, 04:07 PM
நன்றி ஓவியா...

உங்கள் விவாதத்தில் நான் பங்கு கொள்ள விரும்புகிறேன்.. தனித்திரி துவக்குங்கள்...

ஓவியா
12-04-2007, 04:45 PM
நன்றி ஓவியா...

உங்கள் விவாதத்தில் நான் பங்கு கொள்ள விரும்புகிறேன்.. தனித்திரி துவக்குங்கள்...



நன்றி ஷீ-நிசி,

தாங்கள் விரும்பியபடி தனித்திரி ஆரம்பிக்கபட்டுள்ளது.

இதோ சுட்டி
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8753

lolluvathiyar
15-04-2007, 08:53 AM
கவிதை அருமை நிசி
அதில் உள்ள உனச்சியும் அருமை
என்னால் இப்படி கஷ்டபடும் மீனவர்களுக்கு
என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை
அவர்கள் ஒரு வேலை கஞ்சி உண்ண
ஞாயிற்று கிழமையான இன்று
கோழிக்கு பதில் மீண் வாங்கி சாப்பிட்டேன்
இதை தவிர எனக்கு வேறு உதவி செய்ய முடியவில்லையே

இளசு
15-04-2007, 09:48 AM
விகடனில் படித்தது -

முன்பெல்லாம் கடலில் வலைவீசினால்
மீன்கள் கிடைக்கும்
இப்போது
மீனவர்கள் கிடைக்கிறார்கள்!

ஷீ-நிசி
15-04-2007, 10:45 AM
நன்றி வாத்தியார்... நாம் ஏதும் பன்னமுடியாது.. அவர்களுக்கு யாரும் எதுவும் செய்ய வேண்டாம், கடல் அவர்களை வாழவைத்திடும்.. ஆனால் அரசாங்கம் அவர்களின் உயிருக்கு மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்திட வேண்டும்..

----------

கவிதை மிகவும் அருமை இளசு அவர்களே!...
நிதர்சன உண்மை கவிதையில் அழகாய் தெரிகிறது,

ஆதவா
16-04-2007, 06:26 PM
சமூகக் கவிதைகளில் உங்களுக்கு எப்போதுமே இடமுண்டு. அந்த கவிதைகளில் என்றுமே நல்ல திடமுண்டு.
இக்கவிதையும் அம்மாதிரிதான்... தலைப்பே கவிதையாக இருக்கிறது. படித்தபின் மனமோ கடலை வெறுக்கிறது.
அத்தனை ஆழங்கள்.. அத்தனையும் வறுமைக் கோலங்கள்..

கொள்ளையர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட மீன்களாகத் துடிக்கும் இவர்களை கொள்ளையடிக்கும் அதிகாரத்தவர்கள்
காப்பாற்றுவதாக நடிப்பதும் வேதனை. கவிதை ஒரு சின்ன கதையைச் சொல்லுகிறது. அக்கதையாலே கவிதை
வெல்லுகிறது. ஆனால்.... ஷி!! இன்னும் சுருக்கியிருக்கலாம். சுருக்கியிருந்தால் ரசனை பெருகியிருக்கலாம்... இது என்
கருத்து.. கவிதை வெகு நீளமாகப் படுகிறது. வெகு எளிமையாகவும் இருக்கிறது.. சுருக்கமாகச் சொன்னால் மச்ச
வாசனை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது,,, முற்களோடு..

--------------------------------------
புது புருஷன், புதுத் தகப்பன், காதலன், என கடலோரத்து மீன்கள் யாவரும் ஒன்றாக ஒரு குடும்பமாக, மீன்களைத் தனியே
பிடிக்க இயலாது.. அவை கூட்டங்கள்.. அதனோடே ஊறிப் போன இவர்களும் ஒரே கூட்டம் தான். போட்டிகளின்றி
கூட்டங்கள் வேட்டைக்குச் செல்லுகிறது.

சூறாவளி போன்ற சூரனுக்கும் தப்பியதில்லை இக்குடிசைகள். சூரனி சம்ஹாரத்திற்குப் பின்னும் அடங்காமல் அதே
இடத்தில் குடிசை கட்டும் மீன் கூட்டங்கள்..

நிச்சயமில்லாத
பயணம்தான் நாளும்!
நிச்சயமில்லாததாலேயே
பயணங்களும் நீளும்!

இந்த வரிகள் உயர்வானவை, இதைத் தவிர வேறு சொல்லில்லை சொல்ல.

ஒவ்வொரு வரிகளும் நேர்த்தி, கவிதையின் நீளத்தை இந்த வரிகளெனும் மலர்களே வரவேற்க்கின்றன, கொண்டு
செல்கின்றன.

கடல்வீதியை
கிழித்துக்கொண்டு... சிந்திக்க வேண்டிய வரிகள். அழகிய கற்பனை .. ஆகாய நிலவும்தான்.

எல்லை தாண்டிய படகு,
எல்லை தாண்டிய வாதம்,, அழகான சுருக்கம். ரசனைப் பெருக்கம். நீரின்றி அமையா துலகு இது நிலத்தவருக்கு,
மீனின்றி அமையா துலகு, இது நீர் கரையிலிருப்பவர்களுக்கு.

வெறுங்கை எதுகை, அழகிய அர்த்தம். இரு பொருள்,

கொள்ளையர்கள் காணும் பகுதியில் கண்முன் செல்லுகிறது படகு.

உடன்பட்டால்
உயிர் மட்டும் தப்பும்!
மற்றவை மட்டும்
சூறையாடப்படும்!

இந்த கொள்கை உடையவர்கள் கொள்ளையர்கள்.. நல்ல கொள்கை, நல்ல வேட்கை.

தேக்கிவைத்த காதலெல்லாம்
இரத்தமாய் வழிந்தது
அவன் மார்பின் வழியே!

வரிகளை அமைப்பதில் சிறந்த கவிஞரப்பா நீங்கள்.
பிரிதலை விளக்குவதில் அற்புத ராசனப்பா நீங்கள்

நிச்சயிக்கபட்டவன்,
நிச்சயிக்கபட்டான்!
இன்னொரு குறிக்கு!

இது அருமையான எதுகை. நல்ல பொதியப் பட்ட கருத்து. இப்படி ஒவ்வொரு வரிகளையுமிட்டால் முழுக் கவிதையும்
இடவேண்டியதுதான்.

இறுதி வரை அழகிய வரிகளாகவே அமைந்திருப்பது கவிதைக்கே அழகு, நிறைய வரிகள் என்ற குறையைப்
போக்குவதும் இரண்டர்த்த எதுகைகளும் இன்னும் சில வார்த்தைகளும். கடைசி வரிகள்... யதார்த்தம். கடலன்னை
அத்தனை பேரை அள்ளிப் போன பின் அசராத மீனவர்கள். இந்த நால்வரின் இறப்புக்கா அடிபணிவார்கள்..

இனிமையான வார்த்தை விளையாட்டு, சோகக் கவிதையில் துள்ளுகிறது. குறைகள் ஏதுமில்லை,, நிறைகளே
நிரம்பியிருக்கின்றன. வாழ்த்துக்கள் ஷீ! மாதமொருமுறை என்றாலும் அமாவசை நல்ல தரிசனம்.... அது போலத்தான்
உங்கள் கவிதைகள்.. எப்போழ்து வந்தாலும் மனதைக் குடைந்துவிட்டு சென்றுவிடுகிறது..

பாராட்டுக்கள் ஷீ!

ஷீ-நிசி
17-04-2007, 03:45 AM
என்னை மிகவும் கவர்ந்துவிட்டது ஆதவா, உங்கள் விமர்சனம்.. மிக்க நன்றி ஆதவா...

மயூ
17-04-2007, 01:43 PM
தற்போதைய நிலையில் நிசத்தைப் பிரதிபலிக்கும் ஒரு உண்மை நிலையியிது. அத்தனை காட்சிகளையும் கண்ணெதிரில் கொண்டுவந்த ஷீயிற்கு நன்றிகள்!!!

புதுமனைவிக்கு
கையசைத்தான் ஒருவன்!
குழந்தைக்கு விரலசைத்தான்
மற்றொருவன்!

நன்றி ஷீ.. காட்சிகள் நேரில் வந்து கண்ணெதிரில் அமர்ந்து கொண்டது!!!

கடல்வீதியை
கிழித்துக்கொண்டு
நால்வரோடு பயணமானது
வாழ்க்கைப் படகு!
வாழ வைப்பதனால் அது வாழ்க்கைப் படகுதான் ஏற்றுக்கொள்கின்றேன்..!!!

ஷீ-நிசி
17-04-2007, 04:53 PM
அழகாக விரிவாக விமர்சித்திருக்கிறீர்கள் மயூ... மிக்க நன்றி.

slgirl
18-04-2007, 05:56 AM
கண்கள் பனிக்கின்றன நிஜத்தினை ஆழமாக எழுதிய நண்பனுக்கு நன்றிகள்

சுட்டிபையன்
18-04-2007, 06:01 AM
போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர் நால்வரும்!
----------------
-------------
போய்வருகிறேன்
என்று சொல்லி
விடைபெற்றனர்!
இன்னொரு நால்வர்.....



கண்ணீரை வர வைக்கும் கவி
இன்று இலங்கை தமிழனும் இந்தியத்தமிழனும் சேர்ந்து அனுபவிக்கும் கொடுமையை வார்த்தைகளில் அடக்கி கவியாக வடித்த நிசிக்கு பாராட்டுக்கள்

ஷீ-நிசி
18-04-2007, 06:05 AM
நன்றி இ.பெண்.. நன்றி சுட்டி பையன்

pradeepkt
18-04-2007, 06:30 AM
சுட்டிபையன்,
முடிந்த அளவு மொத்தப் பதிவையும் கோட் செய்வதைத் தவிர்க்கலாமே...