PDA

View Full Version : "செம்மீன்" - நாவல் விமர்சனம்இளசு
09-04-2007, 09:45 PM
"செம்மீன்" - நாவல் விமர்சனம்
(திஸ்கியில் இருந்து மறுபதிப்பு)
--------------------------------------------------------------------------------"

செம்மீன் - தகழி சிவசங்கரன் பிள்ளை
தமிழாக்கம் : சுந்தர ராமசாமி


சில வாரங்களுக்குமுன் வெளியூர்ப் பயணத்தின்போது படிக்க
கைக்கடக்கமாக ஒரு நூல் தேவைப்பட்டது..

நான் பிறக்குமுன்னேயே எழுதப்பட்ட நாவல்...
இதுவரை படிக்க வாய்ப்பமையாத நாவல்..
வெற்றித்திரைப்படமாய் வடிக்கப்பட்டும் நான் பார்க்காததால்
கதை பரிச்சயமாகாத நாவல்...
சாகித்திய அகாதமி பரிசு பெற்ற மலையாள நாவல்...
எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்க முடியா நாவல்..

செம்மீன்...

மீனவர் சமூகத்துக்கதை...
செம்பன்குஞ்சுவின் வாழ்வையும் வீழ்ச்சியையும் சொல்லும் கதை..
கடற்கரைக்கன்னி கருத்தம்மாவின் தூயக் காதல் கதை..
தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி
பரீக்குட்டியின் கதை..
ஊக்கமும் உற்சாகமுமே உருவான சக்கியின் உழைப்புக்கதை..
ஆண்மையும் ரோஷமும் மிக்க இளைஞன் பழனியின் கதை...
மேலைக் கடலன்னையின் செல்லக்குழந்தைகளின் நித்தியக்கதை..

"எளிய கதாபாத்திரங்களையும் சாதாரண சம்பவங்களையும் கொண்டு
தகழி வரைந்த காலத்தாக் அழியா வண்ணச் சொற்சித்திரம்''
நூலின் பின்பக்கம் இப்படி அச்சிட்டிருக்கிறது.....
உள்ளே வரிக்கு வரி நம் மனதில் அச்சு பதித்து அமர்ந்துவிடுகிறது...

சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்பு அருமை...

சிறுவயது முதல் பழகி, உள்ளுக்குள் காதலாய் கனிந்துவிட்ட
நட்பு கருத்தம்மாவுக்கும், பரீக்குட்டிக்கும்.
மத வேற்றுமை பிரிக்கிறது...
ஒரு மரக்கானை மட்டுமே மணக்க விதிக்கப்பட்டவள் அவள்.
விதிப்படி பழனியை மணக்க ஒப்புக்கொள்கிறாள்...

சில கணக்குகள் " சொல்லிக்கொண்டு பிரியாமல்" தீர்வதில்லை..
சில கணக்குகள் " சொல்லிக்கொண்டு பிரிந்தாலும்" தீர்வதில்லை...

" சொல்லிக்கொண்டு" பிரிந்தால் கணக்கு தீர்ந்துவிடும்
என நம்புகிறாள் கருத்தம்மா...
ஒரு நள்ளிரவில் அவளுக்கும் பரீக்குட்டிக்கும்
காற்றலை வீசும் கடற்கரையில்... நிலவொளியில்
நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி இதோ:

அவள் : நான் என்னைக்கும் உங்களெ நெனச்சுக்கிட்டிருப்பேன்
அவன்: எதுக்காக... அது வேண்டாம்...
சில நிமிஷங்கள் மௌனத்தில் கழிந்தன...
பேசுவதை விடவும் பொருள் அதிகம் நிறைந்த நிமிஷங்கள் அவை..
ஒரு பறவை தென்னை மரத்திலிருந்து, ஜிவ்வென மேலெழுந்து
வானத்தில் பறந்து சென்றது. தான் கண்டுகொண்ட காட்சிகளை
உலகெங்கும் பறைசாற்றச் செல்லுகிறதோ...?
சற்று தொலைவில் ஒரு நாய் அவர்களையே உற்றுப் பார்த்தபடி
நின்றது. சாட்சிகள் ஒன்றுக்கு இரண்டாகிவிட்டனவா..?
பரீக்குட்டி : இந்தக்கடற்கரையிலெ நாம ஓடியாடித் திரிஞ்சதும்
கிளிஞ்சல் பொறுக்கி விளையாடினதும்.... எல்லாம் கதையா முடிஞ்சு
போச்சு...
பெருமூச்சு விட்டுக்கொண்டே அவன் மேலும் சொன்னான்:
" அந்தக் காலம் முடிஞ்சு போச்சு"
"ம்."
"நான் மட்டும் இனிமே, இங்கே தன்னந்தனியா நாளை எண்ணிக்கிட்டு
இருக்கணும்."
அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனத்தைப் பிளந்தன.
அவன்: "சொல்லிட்டுப்போக நீ வரமாட்டேன்னுதான் எண்ணிக்கிட்டிருந்தேன்."
கடைசியில் அவன் கூறி முடித்தான்...:
" இந்தா பாரு, எனக்கு யாரு பேரிலும் வருத்தமில்லே. நீ மட்டும்
சொல்லிக்காம போயிருந்தா, என் மனசு ரொம்ப வருத்தப்பட்டிருக்கும்.
ஒருவேளை நீ அப்படியே நீ நடந்துகிட்டாலும் நான் வருத்தப்படுறதிலே
அர்த்தம் கிடையாது. உன் மேலே எனக்குக் கொஞ்சமும் கோபம் இல்லெ"
கைகளால் முகத்தை மூடியவாறு அழுதுகொண்டிருந்தாள் கருத்தம்மா..
பரீக்குட்டி அதையும் கவனித்தான்.
" கருத்தம்மா... எதுக்கு அழறே...? பழனி ரொம்ப நல்லவன்..கெட்டிக்காரன்."
அவன் குரல் தழுதழுக்கச் சொன்னான்:
" உனக்கு எல்லாம் நல்லபடியா வரும்".

அதற்குமேல் கருத்தம்மாவாலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை.
அவள் சொன்னாள்:
" நான் செத்துப் போயிட்டேன்... இனிமேலாவது என் மனசைக்
குத்தாம விட்டுடுங்க.."
அவள் சொன்னது பரீக்குட்டிக்குப் புரியவில்லை. அவள் மனம் புண்படும்படி
முரட்டுத்தனமாக எதையாவது பேசிவிட்டோமா என்ற எண்ணத்தில்
தடுமாறினான் அவன். அப்படி ஒன்றும் சொல்லவில்லையே...!

அவளுக்குத் துக்கம் மார்பை அடைத்தது.
அவள்:" எப்படியானாலும் உங்களுக்கு மனக்கஷ்டமாய்த்தான் இருக்கும்"
அவன்: " ஏன் அப்படிச் சொல்றே..?எப்படியும் நீ சந்தோஷமாக வாழவேண்டும் என்பதுதான் என் ஆசை'
என்று சத்தியமிட்டுச் சொன்னான் அவன்.

"நான் இங்கே உட்கார்ந்து பாடிக்கிட்டே இருப்பேன். முடிஞ்சவரை
சத்தம் போட்டுப் படிக்கிட்டிருப்பேன்" என்றான் அவன்.
அவள் பதில் சொன்னாள்:
" எங்கேயோ இருக்கிற திருக்குன்றப்புழை கடல் கரையிலே
உக்காந்து நான் கேட்டுக்கிட்டிருப்பேன்"
"அப்படியே பாடிப்பாடித் தொண்டை கிழிஞ்சு செத்தே போயிடுவேன்"
" அப்போ, இந்தக் கடற்கரை நிலாவிலெ ரெண்டு ஆத்மா எப்போதும்
பறந்து திரிஞ்சுகிட்டிருக்கும்"
"ஆமாம்" என்றான் பரீக்குட்டி.
அவள் பேசாமல் மெதுவாக அங்கிருந்து நடந்து சென்றாள்.
ஆம்; அவள் விடை பெற்றுக் கொண்டுவிட்டாள்.
அவன் கண் இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
ஆம்; அவன் அவளுக்கு விடை கொடுத்து விட்டான்.
அவர்கள் பிரிந்தனர்.

------------------------------------------------
கேரளத்துக் கடற்கரையின் எத்தனையோ
குக்கிராமங்களில் ஒன்றுதான் நீர்க்குன்றம்...
கடலுடன் தம் வாழ்வைப் பிணைத்துக்கொண்ட
எளிய மீனவர்கள் வாழும் குடியிருப்புகள் அவை.

மீனவர்களின் சமூக வாழ்க்கை முறை,
அவர்களின் நம்பிக்கைகள், அபிலாஷைகள்,
மரபுகள், படும் கஷ்டங்கள்.....
இவற்றின் கற்பனை கலந்த நேர்த்தியான வர்ணனை...
ஒழுக்கம் மிக்க வாழ்வு வாழும் மறவ இனத்தின்
நேர்முக வர்ணனை இந்நாவல்....

(தகழி அம்பலப்புழை எனும் ஊரில் நடுத்தரப்பள்ளியில்
படித்தவர். அப்பள்ளிக் கடற்கரையில் மீனவர் பகுதியினிடையே
இருந்தது. இங்கே தகழி மீனவர் வாழ்வை நேருக்கு நேர்
கண்டார். சில ஆண்டுகளுக்குப் பின் அவர் வக்கீலாக இதே
பகுதியில் பணியாற்றியபோதும் மீனவர் பலர் அவர்
கட்சிக்காரராயிருந்தனர். செம்மீன் கண்ட பரீக்குட்டிகளும்
கருத்தம்மாக்களும் முற்றிலும் கற்பனை கதாபாத்திரங்கள் அல்லர்;
அவர் நேரில் அறிந்த யதார்த்த மனிதரின் வடிவங்களே...)

படகோட்டி படத்தில் வரும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...
மீனவ சமுதாய அன்பை ( பின்னாளில் தேர்தல் வாக்குகளை )
அப்படியே ஒட்டு மொத்தமாய் எம்ஜியார் அவர்களுக்கு
அள்ளிக்கொடுத்த பாடல் - வாலியின் வைரவரிகளில்...
இங்கே நினைவு கூறுவது பொருத்தமாயிருக்கும்...

உலகத்தின் தூக்கம் கலையாதோ.....
ஒரு நாள் பொழுது புலராதோ........

தரைமேல் பிறக்கவைத்தான் - எங்களைத்
தண்ணீரில் பிழைக்க வைத்தான்...
கரைமேல் இருக்கவைத்தான் - பெண்களைக்
கண்ணீரில் மிதக்க வைத்தான்...

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலைகடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
ஒரு நாள் போவார் - ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை - வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்....

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ...
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு...
முடிந்தால் முடியும் - தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை...

ஆம்.... மீனவர்களின் கொடிய வறுமை, அயரா உழைப்பு,
எளிமை, கடல் தாய் மேல் அவர்கள் கொண்ட மாறாப் பாசம்
கலந்த பக்தி - இவற்றை நேரில் கண்டாலொழிய நம்புவது
கடினம்...

அவர்களது வாழ்க்கையே ஒரு நீ...ண்ட போராட்டம்..
அந்த சாகச வாழ்க்கை விதிக்கப்பட்டு, பின்னர் அதிலே
சுகம் கண்டு விரும்பி பெருமையுடன் ஏற்றுக்கொண்ட
கடல்தாயின் குழந்தைகள் அவர்கள்...
அவர்களில் பலருக்கு வேறுவிதமாய் வாழவும் தெரியாது...
வாழவும் இயலாது..

நல்லோரைக் காத்து, தீயோரைத் தயவின்றி தண்டித்துவிடும்
கடலன்னையிடம் உள்ள நம்பிக்கைதான்...
அவர்கள் வாழ்க்கைச் சக்கரத்தின் அச்சாணி...
இந்த எளிய சமூக அமைப்பிலும் பல கட்டுப்பாடுகள்..
கட்டமைப்புகள்...
துறைத்தலைவர் ( அரையன்)
சொந்தத் தோணி வைத்திருப்போர்
கடல் வேலைக்கு (மட்டும்) போய் கூலி (பங்கு மீன்) சம்பாதிப்போர்
வெளியிலிருந்து இதர வேலை ( மீன் அவித்து காயப்போடுவது போன்ற)
செய்ய வரும் வேற்று இனத்தவர்...
வியாபாரிகள்.. (பெரும்பாலும் முஸ்லீம்கள்)
கிராமத்தலைவர் - கட்டுப்படுத்தும் சர்வாதிகாரி...
சச்சரவா... மத்தியஸ்தம் அவரே..
வம்பு - வழக்கா... நீதிபதி அவரே...
அவர் ஆசியின்றி படகு வாங்க முடியாது...
திருமணம் செய்ய முடியாது..
(செம்பன்குஞ்சு இது இரண்டையுமே துறைத்தலைவர்
அனுமதி இன்றி செய்து, அல்லாடுவது இக்கதையில்
முக்கிய கட்டங்கள்..)

பெண்களுக்குக் கற்பும் தூய்மையும்...
ஆண்களுக்கு உடலுறுதியும் நெஞ்சுரனும்...
கரையிலுள்ள பெண்களின் கற்பின் வலிமைதான்
கடலில் படகேறிச் சென்றுள்ள மீனவருக்குப் பாதுகாப்பு..
இது அச்சமுதாயத்தின் ஆழ்ந்த நம்பிக்கை...
காலம் காலமாய் ஆழப்பதிந்து ஆலவிருட்சமாய் வியாபித்த நம்பிக்கை..

கருத்தம்மா.... ஒரு மரக்கானை மணந்து மரக்காத்தி ஆகிறாள்.
உழைப்பு, உறுதி இவற்றின் மறு உருவம் அவள் கணவன் பழனி.
உடலால் மிகத் தூய்மையானவள் கருத்தம்மா...
ஊர் அதை நம்பவில்லை...
நீர்க்குன்றம் கடற்கரையில் " நாலாம் மதத்துக்காரனோடு"
பாடித் திரிந்தவளாம்....
பழனி காதுபட பேச்சு....
அவள் உடல் தூய்மையை அவன் நம்பவே செய்கிறான்...
ஆனால்... அவள் உள்ளத்தில்..???????
அங்கே இன்றும் பரீக்குட்டி இல்லை என்று அவளால்
நிரூபிக்க முடியுமா?

முதற்காதலன்.... தன்னை - தன் அன்பை எந்த
எதிர்பார்ப்பும் இன்றி அப்படியே அர்ப்பணித்த கண்ணியன்
..பரீக்குட்டி.... அவனிப்பற்றிய நினைவுகள்....
சூ என்று விரட்டினால் ஓடிவிட அது உறியேறி வந்த
பூனையா என்ன..?
உடலோடு கலந்துவிட்ட உதிர நினைவுகளை
உதறிவிட முடியாமல்.....
கடலம்மையின் கோபத்துக்கு ஒரு பாவமும் அறியாத
அப்பாவிக்கணவன் ஆளாகிவிடக்கூடாது என்ற
பதைபதைப்பும் குறையாமல்.....
கருத்தம்மாவின் நிலை....
இருதலைக்கொள்ளி எறும்பு
அலைமேல் துரும்பு...

ஆரம்பத்திலேயே தெரியுந்தானே பரீக்குட்டிக்கும்...
கருத்தம்மாவுக்கும்... அவர்கள் தூய காதல் நிறைவேறப்
போவதில்லை என்று..? அந்த சமூகக் கட்டுப்பாடுகள்
அவ்வளவு வலுவானவை என்று...!
பின் ஏன் காதலித்தனர்...?
வசந்த நாளில் ரோஜா மலர்வது தவிர்க்கமுடியாத இயற்கை...
அதேபோல் மலர்ந்த அன்பு அது...
அவர்கள் நினைத்தாலும் தடுத்திருக்க முடியாது அதை...
சமூக நிலைக்குக் கட்டுப்பட்டு அவள் மௌனமாக, ஆனால்
சோகமாக பழனியைக் கைப்பிடித்து வேறூர் போகிறாள்...
தூரம் மட்டுமே அன்பின் அலைவீச்சை மட்டுப்படுத்திவிடுமா?
பரீக்குட்டியின் நிழல் அவள் வாழ்க்கையில்
தொடர்ந்து படர்ந்துகொண்டே வருகிறது....

காதல் ஆரம்பம் - எப்படி தவிர்க்க முடியாத சுகமோ
அதே போல் அவர்கள் காதலின் முடிவும் அவர்களாலேயே
தவிர்க்க முடியாததாகி விடுகிறது... சோகமாய்..

இதுதான் செம்மீனின் கதைக்களம்...

சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் அப்படி ஒரு
நேர்த்தியுடன் செதுக்கி நம் கண்முன்னே உலவவிடும்
தகழியின் கைவண்ணம்.. உருக வைக்கும், சிலிர்க்க வைக்கும்.

தகழி மிக வேகமாக எழுதக்கூடியவர்.
செம்மீனை 20 நாளில் எழுதிமுடித்துவிட்டாராம்..
விகாரமான ஒரு சொல் கூட இல்லாமல்...

உயர்நிலைப்பள்ளி மாணவராய் இருந்த காலத்தில்
அவர் சந்தித்த முக்கிய நபர் பெரும்புலவர் குமாரப்பிள்ளை.
தகழி கவிதை எழுத ஆரம்பித்த காலம் அது.
தகழியின் திறமை வசனத்தில் அதிகமாகச் சுடர்விடுகிறது
என்பதை உணர்ந்து, குமாரப்பிள்ளை அவரை
வசனத்துறைக்குத் திருப்பிவிட்டார்.
சட்டக்கல்லூரி மாணவராய் திருவனந்தபுரத்தில் இருந்த
காலகட்டத்தில் தம்முடைய "அறிஞர் குழுவில்" தகழியைச்
சேர்த்து, அவரின் இலக்கிய ரசனையை பட்டை தீட்டியவர்
ஏ. பாலகிருஷ்ணப்பிள்ளை.


செம்மீன்...
படித்து முடித்ததும்....
மழை ஓய்ந்த வயல்வெளி போல் மனமெல்லாம்
ஈரநெகிழ்வு... சோவென்ற மழைச்சத்தம் நின்றுபோன வெறுமை...
அந்த அற்புத நிமிஷங்களில் என் மனம் ஏனோ
குமாரப்பிள்ளைக்கும் பாலகிருஷ்ணப்பிள்ளைக்கும்
நன்றி சொல்லியபடியே இருந்தது...

mukilan
10-04-2007, 01:33 AM
அன்பு இளசு அண்ணா,

ஒன்றா இரண்டா, நான் ஒன்றி ரசித்த வரிகள் இவ் விமர்சனத்தில்? உங்களின் இப்பதிவு முழுவதுமே நான் மேற்கோள் காட்ட வேண்டியிருக்கும். படிக்கும் ஒருவரை அந்தப் புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டுவதுதான் சிறந்த திறனாய்வு! எங்கே செம்மீன் புதினம் என்று நான் தேடிக் கொண்டிருப்பது போல மன்றத்தில் பலரும் தேடுவார்கள் என்பதே நிதர்சனம். "கடலினக்கரை போனோரே!" என்ற பிரபலமான பாடல் கொண்ட அந்தத் திரைப்படத்தையாவது இணையத்தில் காணமுடியுமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

இளசு
10-04-2007, 06:27 AM
நன்றி முகிலன்..

ரசித்துப் படித்ததை ரசிக்கும்படி சொல்ல முயன்றதை
உன் பின்னூட்டம் உற்சாகப்படுத்துகிறது!

paarthiban
10-04-2007, 10:55 AM
இந்த புத்தகம் வாங்கி உடனே படிக்க தோணுது. அருமையான விமர்சனம். பாராட்டுகிறேன் இளசு அண்ணா அவர்களை.

இளசு
10-04-2007, 07:54 PM
நன்றி பார்த்தி

இந்த நீ....ண்ட பதிவை அலுப்பின்றி படித்தமைக்கு
அண்ணனின் அன்பும் நன்றியும்...

இன்னொரு விமர்சனம் இருக்கு...
இருங்க..இருங்க.. பார்த்தி..ஏன் ஓடுறீங்க?
வாங்க..உட்கார்ந்து பேசுவோம்....................................

ஓவியா
10-04-2007, 08:02 PM
நான் பக்கத்தை திறந்து பார்த்தோட சரி, ஒரே :auto003: ஸ்பீடிங் 150..

பரிட்சை.

இளசு
10-04-2007, 08:07 PM
ஓவியா (பருத்தி வீரி பாணியில்)

இத்தா பெரிய விமர்சனத்துக்கு.. நாங்க அந்த புஸ்தகத்தையே வாங்கி
படிச்சுடுவமில்ல...

பரீட்சை முடியட்டுமில்ல.... பார்த்துடுவமில்ல....

பென்ஸ்
10-04-2007, 08:09 PM
ஓவியா (பருத்தி வீரி பாணியில்)

இத்தா பெரிய விமர்சனத்துக்கு.. நாங்க அந்த புஸ்தகத்தையே வாங்கி
படிச்சுடுவமில்ல...

பரீட்சை முடியட்டுமில்ல.... பார்த்துடுவமில்ல....
:4_1_8: :4_1_8: :4_1_8: :4_1_8:

பென்ஸ்
10-04-2007, 08:16 PM
இளசு...
என்னுடைய சின்ன வயசில் இருந்து இந்த படத்தை நான் சுமார் 10 தடவைக்கு மேலாவது பார்த்து இருப்பேன்....
என்னவோ, எனக்கு இந்த காதல் கதை பிடித்திருக்கவில்லை...
வேலையில்லாமல் திரியும் பரீகுட்டி......
தன்வேலையை கண்ணும்கருத்துமாய் செய்யும் பழனி...
மனதை அலைபாயவிடும் கருத்தம்மா...
முடிவு... காதல் வென்றாலும்... நியாயமானதாய் இல்லையே...

இளசு
10-04-2007, 08:18 PM
இளசு...
என்னுடைய சின்ன வயசில் இருந்து இந்த படத்தை நான் சுமார் 10 தடவைக்கு மேலாவது பார்த்து இருப்பேன்....
என்னவோ, எனக்கு இந்த காதல் கதை பிடித்திருக்கவில்லை...
...

பிடிக்காததையே பத்து முறை பார்த்தால்...????!!!!!!

பென்ஸ்
10-04-2007, 08:21 PM
பிடிக்காததையே பத்து முறை பார்த்தால்...????!!!!!!
அப்போ சன் டீவி கிடையாது....
சனி இரவு ஒரு இந்திப் படமும் ஞாயிறு இரவு ஒரு மலையாளப்படமும் திருவனந்தபுரம் அலைவரிசையில் கிடைக்கும்...
அதை பார்க்காமல் வேறு வழியில்லையே...

இளசு
10-04-2007, 08:26 PM
சரி..சரி.. ஒப்புக்கிறேன் பென்ஸ்..

நான் படம் பார்த்ததில்லை..

கதை மட்டுமே வாசித்ததில், குறைபாடுள்ள மனிதர்களின் வாழ்க்கைப்பதிவை நேர்த்தியாய் செய்த விதம் கவர்ந்தது..

முழுக்க நியாயமானவர்களை மதிக்கிறோம் - அவர்கள் சூரியன்.
கொஞ்சம் சறுக்கல் , கறை உள்ளவர்களை உற்று நோக்கி அறியும்போது நேசிக்கிறோம் - அவர்கள் நிலவைப்போல..

(அப்பாடி..ஒரு வழியா சமாளிபிகேஷன் தயார்..)

இதயம்
11-04-2007, 02:59 PM
இளசு...
என்னுடைய சின்ன வயசில் இருந்து இந்த படத்தை நான் சுமார் 10 தடவைக்கு மேலாவது பார்த்து இருப்பேன்....
என்னவோ, எனக்கு இந்த காதல் கதை பிடித்திருக்கவில்லை...
வேலையில்லாமல் திரியும் பரீகுட்டி......
தன்வேலையை கண்ணும்கருத்துமாய் செய்யும் பழனி...
மனதை அலைபாயவிடும் கருத்தம்மா...
முடிவு... காதல் வென்றாலும்... நியாயமானதாய் இல்லையே...

பிடிக்காததையே பத்து முறை பார்த்ததிலிருந்தே அந்த படத்தின், கதையின் வெற்றி தெளிவாக தெரிகிறதே..!!

பென்ஸ்
11-04-2007, 04:19 PM
இன்று முழுவதுமாய் உங்கள் விமர்சனத்தை வாசித்தேன் இளசு....மீண்டும்.

பரீக்குட்டி - கருத்தம்மா காதல்...
பிரிவு..
பழனியுடன் திருமணம்...
சந்தோச வாழ்க்கை...
மனதில் காதல் வதைப்பு...
பழனி மரணம்...
பரிக்குட்டியுடன் இனைகிறாள்...

இது நான் கண்ட திரைபடம்...

சமுதாய சிந்தனைகள் அனைத்தும் எந்த ஒரு மனிதனின் மனதும் அல்லது பெரும்பான்மையானோர் மனது புன்படாத வகையிலே எழுத வகுக்கபடுகின்றன...

என்னுள் இருக்கும் சில கேள்விகள் இளசு...

1) திருமணமாணவள் என்று அறிந்தும் அவள் நினைவுகளில் வாழ்கிறென் என்று இருப்பது நியாயமா????
2) திருமணமானபிறகும் கணவனிடம் வெறும் உடம்பால் ஒன்றி இருப்பது நியாயமா???
3) பரீத், இவள் குழந்தைகளுடன் (இருந்திருந்தால்) இவளை ஏற்று இருப்பானா???

உணர்வுகள் மேலேளும்புவது காதல் பிரிவில் சரியானதுதான், ஆனால், அது தேவைகள் நிறைவேறியதும் , அடுத்த பக்கத்தை வாசிக்க தாவிவிடும்...

பரித்துடன் இவள் இனைந்ததை காண்பித்து இருக்கும் இவர்கள் , அதன் பிறகு என்ன நடந்தது என்பதையும் காண்பித்து இருக்கவேண்டும்...

என் கருத்துகள் என் உணர்வுகளின் அடிப்படையில் மட்டுமே உள்ளவை, என் சிந்தனைக்கு இது வேறாக தெரிந்தாலும்... "காதலை பற்றி பேசும் போது என் மனம் அறிவை முந்தி விடுகிறது".

கருத்துகளை சொல்லுங்கள்... விவாதிக்கலாம்....

இளசு
16-04-2007, 07:51 PM
மனயியல் தெரிந்த பென்ஸ் எதைச்சொன்னாலும்
அதை நானே சொல்லியதுபோல் எனக்குள் ஒரு மயக்கம் வரும்!

இப்போ இதைப்படிச்சும்...

நான் பரீக்குட்டி பக்கமா? இல்லையா?

பென்ஸ்.. இது நியாயமா?

பென்ஸ்
16-04-2007, 07:57 PM
மனயியல் தெரிந்த பென்ஸ் எதைச்சொன்னாலும்
அதை நானே சொல்லியதுபோல் எனக்குள் ஒரு மயக்கம் வரும்!

இப்போ இதைப்படிச்சும்...

நான் பரீக்குட்டி பக்கமா? இல்லையா?

பென்ஸ்.. இது நியாயமா?

ஒரு தனிபட்ட மனிதரை புகழ்வது எனக்கு பிடித்ததில்லை...
ஆனால் எப்போதும், அதில் சிலர் விதிவிலக்காகிவிடுகிறார்கள்... அந்த வெகு சிலரில் நீங்களும்...

"மனயியல் அறிந்தவரெல்லாம் உங்களை போல் மனங்களை அறிந்தவராக முடியாது..."

மனம் அறிந்து பேசும் உங்களுக்கு எப்பவும் என் தொப்பியை தூக்கி விடுவேன் (hats-off) தான்...

தங்கவேல்
21-04-2007, 02:10 AM
இளசுவின் திறனாய்வு நாவலை படிக்க தூண்டுகிறது. ஆனால் பொருளாதாரக் கதவுகள் இன்னும் திறக்க வில்லை. தமிழ் மன்றம் தான் எனக்கு நிரந்தரமோ ? பணத்தினால் எவ்வளவோ இழக்க வேண்டி உள்ளது.

மரணத்துக்கு இடையில் படித்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை...வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது.

பார்க்கலாம்...

kavitha
16-05-2008, 07:45 AM
முதலில் அமரன் அவர்களுக்கு நன்றி. இச்சுட்டியை புதிய மன்றப்பிரிவு பக்கம் தந்தமைக்கு. இல்லையென்றால் இப்பதிவு என் கண்ணில் இப்பொழுது பட்டிருக்கவாய்ப்பில்லை.இளசுவின் திறனாய்வு நாவலை படிக்க தூண்டுகிறது. ஆனால் பொருளாதாரக் கதவுகள் இன்னும் திறக்க வில்லை. தமிழ் மன்றம் தான் எனக்கு நிரந்தரமோ ? பணத்தினால் எவ்வளவோ இழக்க வேண்டி உள்ளது.
சரியாகச்சொன்னீர்கள் தங்கவேல். (ஒருமையில் அழைப்பதாக நினைத்தால் மன்னியுங்கள். இங்கே நான் எழுத்துக்களையும் அதன் வாயிலாக நிற்கும் மனங்களை மட்டுமே பார்ப்பதால் வயது தெரிவதில்லை. அதை அறிய வேண்டிய அவசியமுமில்லை என்பார் அனைவரையும் நட்பால் நோக்கும் நமது மன்ற கவிஞர் நண்பன். எனக்கும் அந்த கருத்தில் உடன்பாடு உண்டு. பொதுவாக புதியவர்களை பெயரிட்டு அழைப்பதால் அவர்கள் பேசுபவரிடம் அங்கீகாரம் பெற்றவர் ஆகிவிடுகிறார் என்று எங்கோ படித்த ஞாபகம்.....
மன்றத்திற்கு நீங்கள் பழகியவர். எனக்கும் உங்களின் பயோடேட்டவை படித்ததாக நினைவு. அயல்நாட்டில் வேலைத்தேடிக்கொண்டிருந்த அந்த தங்கவேலா நீங்கள்?)

செம்மீன் .... நான் சிறுபிள்ளையாக இருந்தபோது போன தலைமுறை மக்களிடம் மிகப்பிரபலமாக பேசப்பட்ட கதை. எனக்கப்போது அது புரியவும் இல்லை. சுவாரசியமாகவும் இல்லை.
இளசு அண்ணாவின் விமர்சனமும், பென்ஸ் -ன் திறனாய்வும்... கதையை புரியவைத்துவிட்டது. தவிர ஒரே மூச்சில் படிக்கச்செய்யும் தூண்டுதல் அதன் எழுத்தாளரின் கைவண்ணத்தையும் காட்டிவிட்டது.

இ-நாவல் கிடைக்காமலா போய்விடும். கவலையை விடுங்கள்.இன்னொரு விமர்சனம் இருக்கு...
இருங்க..இருங்க.. பார்த்தி..ஏன் ஓடுறீங்க?
வாங்க..உட்கார்ந்து பேசுவோம்....................................

ஏற்கனவே படித்த நாவல் என்றால் பேச ஆவல் பிறக்கும். படிக்காவிட்டால் படிக்கத்தோன்றும். இன்னொரு விமர்சனம் என்னது அண்ணா?

பூமகள்
04-06-2008, 07:30 AM
மிகச் சிறந்த படைப்பிலக்கியம் ஒன்றின்.. வெற்றியாக எண்ண, இளசு அண்ணாவின் விமர்சனம் ஒன்றே போதுமென நம்புபவள் நான்..!!

அவ்வகையில்.. இந்த நாவல்... கவி அக்கா சொன்னது போல...
எனது மழலைப் பருவத்தில்.. எல்லாப் பெரியோர்களாலும் பேசப்பட்டது.. முக்கியமாக இதைத் தழுவி எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படம்.. செம்மீன் பாடலான.. "கரையினக்கர போனோரே..!" எனது 2 அல்லது 3 வயதுகளில் கேட்ட நினைவு மங்களாக வருகிறது.. ஆனால்.. இன்னும் காதுகளில் ஒலிக்கிறது..

இங்கே.. இளசு அண்ணாவின் விமர்சனம்... மீனவர் பற்றிய சூழலை அழகாக எடுத்தியம்புவதுடன்.. எத்தகைய வலிமையான உணர்வை அவர் மனத்தில் அந்த நாவல் ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் உணர முடிந்தது..

பென்ஸ் அண்ணாவின் விமர்சனம்... என்னுள் இக்கதை பற்றிய அதே தோற்பாட்டை விளக்கியது... ஒருவேளை மூவரின் சிந்தனையும் ஒரே கப்பலில் தான் பயணிக்கிறதோ??!! (பூவு இது உனக்கே ஓவரா இல்லை.. அப்படின்னு மனசாட்சி திட்டுவது புரியுது..ஹீ ஹீ...)

அதாவது...

கருத்தம்மாவின் மழலை மாறா அன்பு.. காதலாகிறது..
பரீயினை இணைய முடியா சமூக மதச் சிக்கல்..
பழனியின் நல்குணம்.. வன் மெய்...
கருத்தம்மாவுக்கேற்ற மணாளர் எனினும்..
மணமான பின் அவள் மனம் அலைவது சரியா??

இந்த கேள்வி எழுந்ததாளேயே.. நான் அதிகம்.. இப்படத்தினை ஊன்றிப் பார்த்ததில்லை... இப்போது கொஞ்ச காலம் முன் வந்த... ஆனால்.. நாயகியின் அலைபாய்வுக்கு பதில்.. நாயகன்.. படம்.. "அழகி" இதே போல அலைபாயும் மனம் கொண்ட.. ஆனால்.. வெவ்வேறு கதைக்களத்தில் அமைந்த கதை...

இந்த நாவலில்... காதல் இரண்டாம்பட்சமாக்கி மற்ற விசயங்களை நோக்குகையில்.. இளசு அண்ணா விவரித்த பல நல்ல தகவல்கள்.. வரலாற்று கருவூலங்களாக அறியப்பெறுகிறோம்..

உங்கள் விமர்சனத்துக்காகவே.. இன்னும் பல நாவல்கள் வர வேண்டுமென்று மனம் பேராசைப்படுகிறது பெரியண்ணா..!!

மனமார்ந்த பாராட்டுகள்..! :)

கீதம்
10-04-2010, 05:05 AM
இன்றுதான் இத்திரியைக் காணநேரிட்டது. வெகுநாளாக செம்மீன் திரைப்படம் பார்க்க ஆவலாயிருந்தேன். அந்த வாய்ப்பு இன்றுவரை கிடைக்கவில்லை. இனியும் கிடைக்கவேண்டாமென்று மனம் விரும்புகிறது. காரணம் அண்மையில் படித்த செம்மீன் நாவல். நாவலைப் படித்தபோது எழுந்த உணர்வுக்கோவையை திரைப்படத்தில் அனுபவிக்க இயலுமா என்பது எனக்குச் சந்தேகமே.

இளசு அவர்கள் சொன்னது போல் புத்தகத்தை எடுத்தபிறகு வைக்க மனம் வரவில்லை. இரவு பத்து மணிக்கு வாசிக்க ஆரம்பித்தேன். முடிக்கும்போது நள்ளிரவு இரண்டு மணி.

இளசு அவர்களின் விமர்சனம் கண்டு மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. ஏனெனில் இந்நாவலை இதைவிடவும் அற்புதமாய், நுண்ணிய உணர்வுகளோடு விமர்சிக்க எவராலும் இயலாது.

மனம் நிறைந்த நன்றிகள் பல, இளசு அவர்களே.

கலையரசி
10-04-2010, 11:01 AM
நான் செம்மீன் படமும் பார்த்திருக்கிறேன். மொழிப்பெயர்ப்பு நூலையும் வாசித்திருக்கிறேன். ஆனால் அது சுந்தர ராமசாமி அவர்களது மொழிபெயர்ப்பா என்பது நினைவில்லை.
இளசு அவர்களின் விமர்சனத்தைப் படித்து மிகவும் வியந்து போனேன். ஒரு நாவலை இவ்வளவு அழகாக ஒருவரால் விமர்சிக்க முடியுமா என்று எனக்கு ஆச்சரியம். எழுதியது அவர்தானா, இல்லை நூலின் முன்னுரையிலிருந்து எடுத்துக் கொடுத்திருக்கிறாரா என்று மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொண்டேன். அவ்வளவு அருமையான விமர்சனம். அந்தளவுக்கு நாவலை அவர் அனுபவித்து உள்வாங்கிக் கொண்டிருக்கிறார். இதைப் போன்று நல்ல நாவல்களைத் தொடர்ந்து அவர் விமர்சனம் செய்தால் தேடிப் பிடித்து நாம் அதைப் படிக்க உதவியாயிருக்கும். செய்வீர்களா இளசு அவர்களே!