PDA

View Full Version : திரைவிலகக் காத்திருக்கிறேன்!....poo
03-04-2007, 08:56 AM
தெருவோரப் புழுதிகளின்
உறக்கத்தை
நீர்த் தெளித்தெழுப்பியதை....

புரண்டுபடுத்து
இழைந்ததில்
விளைந்த வாசத்தினை
நாசிவழி ஏற்றிக் கொண்டதை..

உலர்ந்துபோன
உதடுகள்
நாவின் ஒத்தடத்தில்
பிழைத்துக் கொண்டதை....

விரித்து விட்டிருந்த
கேசத்தில்
வாழ்ந்திருந்தத் திவலைகள்
வழுக்கிக் கொண்டிருந்ததை..

விரல் பிரசவித்த
புள்ளிகள்
தரைதொட்ட அமிலத்தில்
அழிந்து கொண்டிருந்ததை..

வீதி வந்த
பூசணிப்பூவிடம்
புன்னகை வீசிக் கொண்டிருந்ததை...

தொலைவிலிருந்து
ஓரிணை விழிகளேனும்
விழுங்கியிருக்குமா...

என்
வினாக்களை
அர்த்தமற்றதாக்கிக்
கொண்டிருந்தது
என்னைச்சுற்றிப்
போர்த்தியிருந்த
பனித்திரை!..

ஆதவா
03-04-2007, 10:51 AM
எனக்கு காதல் கவியாகவே தோன்றுகிறது பூ அண்ணா! ! அதிலும் நிகழ்வுகளை சிறு வார்த்தைகளில் அடக்கியிருப்பதைக் கண்டு சிலாகிக்கிறேன். மண் வாசனை நுகர்தல், உதடுகளை எச்சப்படுத்துதல்,. கோலமிடும்போது நீரினால் அமிழ்ந்துபோகும் பொடிகளைக் காணுதல், போன்ற விஷயங்களை அருமையாகச் சொல்லியிருப்பது எனக்கு மிகவும் ஆச்சரியம்....

கவிதை என்றால் இப்படித்தான் எழுதவேண்டும் என்ற விதத்தில் எழுதும் கவிஞர்கள் இங்கே இருக்கிறார்கள்.. அதில் உங்கள் பாணி தனி. என்னால் இக்கவிதையை காதலாகவோ அல்லது மனைவியின் அன்பில் திளைப்பதாகவோ மட்டுமே காணமுடிகிறது.

இறுதி வரிகளான விழிகள் விழுங்கியிருக்குமா, பனித்திரை ஆகியவற்றிற்கு அர்த்தம் அறிந்தால் நான் முழுக்கவியும் அறிந்தவனாவேன்... உவமைகளை உணர்ச்சிகளாய் பயன்படுத்தும் திறமை உங்களைச் சாரும்... அந்த வகையில் அமைந்திருக்கிறது இவைகள்...

தொடருங்கள் அண்ணா! பயணத்தில் நான் மெல்ல தொத்திக்கொள்கிறேன்...

அன்புரசிகன்
03-04-2007, 11:00 AM
தெருவோரப் புழுதிகளின்
உறக்கத்தை
நீர்த் தெளித்தெழுப்பியதை....

மண்ணின் உறக்கம் தீர்ந்தால் மண்வாசனை.


என்
வினாக்களை
அர்த்தமற்றதாக்கிக்
கொண்டிருந்தது
என்னைச்சுற்றிப்
போர்த்தியிருந்த
பனித்திரை!..
இதுதான் எமது அறியாமையோ..? மீண்டும் ஒரு சிறந்த பூ.

விகடன்
03-04-2007, 11:10 AM
மிஅக்வு அருமையாக வடித்திருக்கிறீர்கள்.

அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். சுட்டிக்காட்டவேண்டியவற்றையெல்லாம் கவி ஆதவனும், அன்புரசிகனும் காட்டிவிட்டனர். இதற்குமேல் என்னால் என்னத்தை சொல்லமுடியும்!

வாழ்த்துக்கள்.

ஷீ-நிசி
03-04-2007, 11:23 AM
கவிதை எல்லாப் பகுதிகளும் விளங்குகின்றன.. கடைசி பகுதி தவிர...

நான் ரசித்தது, முதல் பகுதி...


நீரை தெளித்தவுடன், புழுதியிலிருந்து புறப்படும் புகையை, அதன் தூக்கத்திலிருந்து எழுப்பியதாய் இருப்பது, முற்றிலும் புதிய ஒப்புமை..

இரண்டாவது பகுதி, அதன் தொடர்ச்சியாய் உள்ளது, அந்த வாசத்தை அவன் நுகர்வதாய், மண் வாசனை அறியாதார் யார் இங்கே....

பூ வின் கவிதை வரிகள் அருமை.. ஆனால் அந்தக் கடைசி பகுதி புரிந்தால் தான் எனக்கு கவிதையின் முழு வடிவம் கிடைக்கப் பெறும்..

பரஞ்சோதி
03-04-2007, 11:30 AM
நல்லதொரு கவிதை நண்பா.

வழக்கம் போல் கவிதையை ரசித்தேன், பொருள் காண காத்திருக்கிறேன்.

ஆதவா
03-04-2007, 11:57 AM
இன்னொரு கோணத்தில் எனக்கு கணவன் மனைவி கூடல் நிலை தெரிகிறது... மன்னிக்க மக்களே!... என் பார்வையை முழுமையாக இடுகிறேன்.

இது சரி என்று பூ அண்ணா சொல்லும் பட்சத்தில் விமர்சனம் தொடர்கிறேன்... ஏனெனில் நான் ஒருவேளை சொல்லும் பட்சத்தில் அது பண்பட்டவர் இடத்துக்கு மாற்றலாம் அல்லவா?

இளசு
04-04-2007, 09:57 PM
உள்ளுணர்வு -
பெண்மைக்கு இயற்கை அளித்த
வரப்பிரசாதம்!

பின்னால் மொய்க்கும் விழிகளை
திரும்பிப்பாராமலே உணர்ந்து
ஆடை திருத்தும் சாதுர்யம்!

மார்கழிப்பனி மூடிய காலையில்
கடமையும், கவனிக்கப்படுகிறோமா என்ற
கவலையும் கலந்து இழைக்கும் சௌந்தர்யம்!

கவனிக்கப்படுகிறோமோ என அஞ்சுவதும்
கவனிக்கப்படவில்லையே என ஏங்குவதும்
இடத்துக்குத்தக்க விளையும்
பெண்மனவயல் சுழற்சிப்பயிர்!

பொதுவாய் மூடிய மொட்டு - பெண்!
சரியான சூரியன் வரும் வரை!

இங்கே அதிகாலை
எந்தச்சூரியன் வந்தால்
விலகும் பனித்திரை?

அழகிய பனிக்காலை போல
புத்துணர்ச்சி ததும்ப வைத்த கவிதை!
பூசணிப்பூவைக் கோலநடுவில் கொலுவைத்த
குளித்துவந்த பூவையை விட அழகான கவிதை!

நன்றி பூவுக்கு!

poo
05-04-2007, 04:34 AM
அண்ணா... இதற்காகத்தான் காத்திருந்தேன்.... அழகாக பிடித்துவிட்டீர்கள்....

நண்பர்களே... உங்கள் பதில்களுக்கும் கேள்விகளுக்கும் மௌனம் சாதித்தமைக்கு மன்னிக்க.

சின்ன நிகழ்வுகளை நான் சொல்லும்போது யோசித்தேன்.. இது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படுமாவென... ஆனால் அதை குறிப்பிட்டு ஷீ, ஆதவன் போன்ற கவிகள் வாழ்த்தியதில் உள்ளம் மகிழ்கிறேன்..

என் கவிதையின் நாயகி "முதிர்கன்னி"

இப்போது மீண்டும் படியுங்கள்... சொன்ன வரிகளில் இருக்கும் உள்அர்த்தங்களை புரிந்து கொள்ளுங்கள்.. விளக்கம் வேண்டுமெனில் தருகிறேன்...

மீண்டும் நன்றிகள் அண்ணனுக்கு, அன்புத் தோழன் பரம்ஸுக்கு, அன்பு நண்பர்கள் அன்புரசிகன், ஜாவா, ஷீ, ஆதவன் மேலும் பார்த்துச் சென்ற நண்பர்கள் அனைவருக்கும்..

ஷீ-நிசி
05-04-2007, 04:52 AM
மிக அருமை பூ! மிக அருமை... என்ன சொல்ல....

விரல் பிரசவித்த
புள்ளிகள்
தரைதொட்ட அமிலத்தில்
அழிந்து கொண்டிருந்ததை..

என்ன என்ன என்று யோசித்தேன், இந்த வரிக்கான விளக்கங்களை... விரல் பிரசவிக்கும் என்றால் என்ன என்று யோசித்தும் பிடிபடாமல் இருந்தது...

அது புள்ளி வைத்த கோலங்கள் என்று இளசுவின் விமர்சனத்திலிருந்து இப்பொழுது பிடிபடுகிறது...
-------------------------------------

இந்தக் கவிதையை இன்னும் எளிமைபடுத்தியிருக்கலாம் என்று உள்மனம் சொல்கிறது.. (தவறாக எண்ண வேண்டாம்)

poo
05-04-2007, 05:07 AM
நன்றி ஷீ..

இல்லை நண்பரே... எளிமைப்படுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்காது என்பதே என் எண்ணம். விளக்கம் பின்னர் எழுதுகிறேன்.

ஆதவா
05-04-2007, 05:45 PM
பூ அண்ணா! என்ன சொல்வது?... நானெல்லாம் கவிஞனா? இந்த சாதாரண வரிகள் கூட புரியாமல்...
அதிலும் நான் எங்கோ நினைத்துவிட்டேனே!! நல்லவேளை பதிவு எழுதாமல் போனேன்.. எழுதியிருந்தால் அது எனக்கு கரும்புள்ளியாகப் போயிருக்கும்..

கவிதையைப் பொருத்தவரை அழகான காதல் கவியோ என்று தோன்றுமாறு கொண்டு சென்று அப்படியே சமூகத்தைக் கடையும் பிரச்சனைகளைக் கொண்டுவந்தது இன்னும் அழகு. என்னால் இது முடியாதண்ணா! முடியவே முடியாது.. நெருங்கவும் எனக்குத் தகுதியில்லை..

முதிர்கன்னி என்ற தலைப்பில் கவிதை எழுதலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன்... ஆனால் கைவிட்டுவிட்டேன்.. அது நல்லதாக போய்விட்டது. இல்லையென்றால் இப்படி ஒரு அருமையான கவிதை கிடைத்திருக்குமா?

தொலைவிலிருந்து
ஓரிணை விழிகளேனும்
விழுங்கியிருக்குமா...

இந்த வரிகளை இன்னும் சற்று கவனித்திருந்தேன் என்றால் எனக்கு ஒருவேளை விளங்கியிருக்கும்... முந்திய கவிதைகளைவிட மிக எளிதான கவிதைதான் என்றாலும் நான் ஒரே பார்வை மட்டுமே வைத்திருந்தேன்..

தொடருங்கள்.... முடிந்தவரையில் விளங்க முயற்சித்து பயணிக்கிறேன்....

poo
07-04-2007, 07:17 AM
அன்பின் ஆதவன்..
உங்கள் வார்த்தைகளில் என்மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பை மட்டுமே காண்கிறேன்... திறமையில் உங்களை விஞ்சியவன் அல்ல நான்.

மீண்டும் நன்றிகள்..

poo
07-04-2007, 08:25 AM
விளக்கம் யாரும் கேட்காத நிலையிலும்.. ஆதவன் அடக்கி வாசித்திருப்பதால் என் பார்வை முன்வைக்கிறேன்..

கவிதையை இயல்பாய் வாசித்தால் அண்ணன் இளசு சொன்னதுபோல பெண்மையின் இயல்புகள்..

அதில் என் சின்னத் திருத்ததைப்போல முதிர்கன்னியின் கனவுகள்...

என்னை ஒருவன் காதலிக்க மாட்டானா... தூரத்திலிருந்து அந்தக் காதலன் என் இந்த செய்கைகளையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்க மாட்டானா... ஆனால் அதைக் அறிய முடியாமல் இந்த அதிகாலைப் பணி கெடுக்கிறதே.. .

--- இதை மீறிய சில உள் அர்த்தங்களை இங்கே சொல்கிறேன்..

விரிவாக சொல்ல வேண்டிய அவசியம் இருக்காதென மேலோட்டமாய் கருத்தை மட்டும் சொல்கிறேன்.. அதை வரிகளில் ஒட்டிப் பார்க்க தாழ்மையாய் வேண்டுகிறேன்.

---

தெருவோரப் புழுதிகளின்
உறக்கத்தை
நீர்த் தெளித்தெழுப்பியதை....

--அவள் பூப்படைந்த சடங்கு--

புரண்டுபடுத்து
இழைந்ததில்
விளைந்த வாசத்தினை
நாசிவழி ஏற்றிக் கொண்டதை..

-- மணமான தோழிகளின் அருகாமை அவஸ்தை.
(கூடவே அரங்கேற்றம் ஏறாத அவளின் சில ஒத்திகைகள். அறியாத மனசு. புரியாத வயசு)

உலர்ந்துபோன
உதடுகள்
நாவின் ஒத்தடத்தில்
பிழைத்துக் கொண்டதை....


--- கடை விரித்தேன்.. கொள்வாரில்லை.. கனவுகளில் விற்பனை.---

விரித்து விட்டிருந்த
கேசத்தில்
வாழ்ந்திருந்தத் திவலைகள்
வழுக்கிக் கொண்டிருந்ததை..

--- படரவிட்ட ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாய் பட்டுப்போய்.. பருவம் சொன்ன பருக்களெல்லாம் வடுக்களாய்...--


விரல் பிரசவித்த
புள்ளிகள்
தரைதொட்ட அமிலத்தில்
அழிந்து கொண்டிருந்ததை..

--- வெட்க வரைபடங்களெல்லாம் கண்ணீரால் காணடிக்கப்பட, அந்த நாட்கள் தானாகத்தான் நிற்குமா.. ---


வீதி வந்த
பூசணிப்பூவிடம்
புன்னகை வீசிக் கொண்டிருந்ததை...

--- கூந்தலேறாதெனத் தெரிந்தும் பூசணிப்பூவை நேசிப்பதென்ன, பூவுக்குள் ஒளிந்திருந்த வண்டுகள் வாடகைக்கு வந்தமர்ந்து தேன் குடிக்க முயல்கிறதே.. ---


தொலைவிலிருந்து
ஓரிணை விழிகளேனும்
விழுங்கியிருக்குமா...

--- தொடரும் அவஸ்தைகளைப் பார்த்த கண்களில் ஒன்றாவது தன் இதயத்திற்கு அதை சொல்லி அனுப்பியிருக்குமா.. ஒருவனாவது என்னை முழுவதுமாய் புரிந்து , திரைவிலக்க இனியாவது ஒரு சூரியன்---


என்
வினாக்களை
அர்த்தமற்றதாக்கிக்
கொண்டிருந்தது
என்னைச்சுற்றிப்
போர்த்தியிருந்த
பனித்திரை!..

--- வறுமை, முதுமை இரட்டை உறைக்குள் சிறை.
வயிற்றுச் சுருக்கங்கள் மறைந்தாலும் முகச்சுருக்கங்கள் ??!....---

ஓவியா
07-04-2007, 01:36 PM
பூ, முதலில் என்னை மன்னியுங்கள். உங்கள் கவிதைக்கு விமர்சனம் எழுத எனக்கு நேரமில்லை. இருப்பினும் மறவாமல் படித்து செல்வேன். புரியும் புரியாது அது இரண்டாம் கேள்வி. ஆனாலும் படிக்க தவறுவதில்லை.

இந்த கவிதையின் விமர்சனம் கண்டு உன்மையிலே மெய் சிலிர்த்தேன்.
பெண்களேன்றாலே ஏலனமாக காணும் மனிதர்களின் மத்தியில் இப்படியும் உயர்வான சிந்தனை படைத்த ஆண்கள் இருக்கதான் செய்கின்றனர். சபாஷ்.

எத்தனை சிறந்த கவிஞசர் தங்கள்.
அடடா......கவிதை அழகோ அழகு.


கரு உயர்ந்த சிந்தனை, வடித்த விதம் உணர்சியின் உச்சம்.

மிகவும் ரசித்தேன். உங்கள் பணி வாழியே.

சிறந்த கவிஞரை பாராட்டுகிறேன்.

கவிதைக்கு நன்றி பூ.

இளசு
07-04-2007, 07:59 PM
நுனிப்புல் மேய்ந்ததிலேயே
லயித்துக் கிடந்த எனக்கு
வேரின் வாசம் வரை ஊட்டிய
வீரியக்கவிஞன் பூ-வுக்கு நன்றி!

மனோஜ்
07-04-2007, 08:27 PM
பூ அவர்களே கவிதை உண்மையில் சதாரனமாக படித்தால் புரியாது என்றாலும் உங்கள் விளக்கத்தோடு படித்ததில் மெய் சிலிர்த்தேன் ஒரு சின்ன வரிக்கு இத்தனை அர்த்தங்களா மிக மிக அருமை
நன்றி வாழ்த்துக்கள்

poo
09-04-2007, 04:54 AM
நன்றி ஓவியா.. இனி உங்கள் விமர்சனங்கள் கிடைக்குமென நம்புகிறேன்..

நன்றி அண்ணா.. ஒரு நாளைக்கு இருபத்தி நான்கு மணி நேரம்தான் என்பதில் உங்களுக்கு மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு கிடைத்தால் என்ன எனத் தோன்றுகிறது.

நன்றி மனோ. இன்னும் பல அர்த்தங்கள் உங்களைப்போன்று இந்தக் கவிதை படித்தவர்கள் மனதில் எழுந்திருக்கும்..

ஓவியா
09-04-2007, 11:58 AM
நன்றி ஓவியா.. இனி உங்கள் விமர்சனங்கள் கிடைக்குமென நம்புகிறேன்..

..

அன்பின் இனிய பூ,
என் விமர்சனம் இனியல்ல எப்பொழுதும் கிடைக்கும், பரீட்சை முடிந்ததும் கடைவிரித்து விமர்சனம் போடுகிறேன். எனக்கு ஒரு வரியில் அருமை, பாராட்டுகள் என்று போட வராது, அதுதான் பிரச்சனையே!!!!!

உங்கள் கவிதை அனைத்தும் கலைவாணியின் முத்து பதித்த ஒட்டியாணம், எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சிறக்கும்.


அட நம்ப பூதானே, எப்ப வெண்டுமென்றாலும் விமர்சனம் போடலாமென்று ஒரு யோசனை. கோவிக்க மாட்டர் என்றுதான். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். :huepfen024: ஹி ஹி


அன்பு ஓவி

gayathri.jagannathan
10-04-2007, 04:39 AM
விளக்கம் யாரும் கேட்காத நிலையிலும்.. ஆதவன் அடக்கி வாசித்திருப்பதால் என் பார்வை முன்வைக்கிறேன்..

கவிதையை இயல்பாய் வாசித்தால் அண்ணன் இளசு சொன்னதுபோல பெண்மையின் இயல்புகள்..

அதில் என் சின்னத் திருத்ததைப்போல முதிர்கன்னியின் கனவுகள்...

என்னை ஒருவன் காதலிக்க மாட்டானா... தூரத்திலிருந்து அந்தக் காதலன் என் இந்த செய்கைகளையெல்லாம் ரசித்துக் கொண்டிருக்க மாட்டானா... ஆனால் அதைக் அறிய முடியாமல் இந்த அதிகாலைப் பணி கெடுக்கிறதே.. .

--- இதை மீறிய சில உள் அர்த்தங்களை இங்கே சொல்கிறேன்..

விரிவாக சொல்ல வேண்டிய அவசியம் இருக்காதென மேலோட்டமாய் கருத்தை மட்டும் சொல்கிறேன்.. அதை வரிகளில் ஒட்டிப் பார்க்க தாழ்மையாய் வேண்டுகிறேன்.

---

தெருவோரப் புழுதிகளின்
உறக்கத்தை
நீர்த் தெளித்தெழுப்பியதை....

--அவள் பூப்படைந்த சடங்கு--

புரண்டுபடுத்து
இழைந்ததில்
விளைந்த வாசத்தினை
நாசிவழி ஏற்றிக் கொண்டதை..

-- மணமான தோழிகளின் அருகாமை அவஸ்தை.
(கூடவே அரங்கேற்றம் ஏறாத அவளின் சில ஒத்திகைகள். அறியாத மனசு. புரியாத வயசு)

உலர்ந்துபோன
உதடுகள்
நாவின் ஒத்தடத்தில்
பிழைத்துக் கொண்டதை....


--- கடை விரித்தேன்.. கொள்வாரில்லை.. கனவுகளில் விற்பனை.---

விரித்து விட்டிருந்த
கேசத்தில்
வாழ்ந்திருந்தத் திவலைகள்
வழுக்கிக் கொண்டிருந்ததை..

--- படரவிட்ட ஆசைகள் கொஞ்சம் கொஞ்சமாய் பட்டுப்போய்.. பருவம் சொன்ன பருக்களெல்லாம் வடுக்களாய்...--


விரல் பிரசவித்த
புள்ளிகள்
தரைதொட்ட அமிலத்தில்
அழிந்து கொண்டிருந்ததை..

--- வெட்க வரைபடங்களெல்லாம் கண்ணீரால் காணடிக்கப்பட, அந்த நாட்கள் தானாகத்தான் நிற்குமா.. ---


வீதி வந்த
பூசணிப்பூவிடம்
புன்னகை வீசிக் கொண்டிருந்ததை...

--- கூந்தலேறாதெனத் தெரிந்தும் பூசணிப்பூவை நேசிப்பதென்ன, பூவுக்குள் ஒளிந்திருந்த வண்டுகள் வாடகைக்கு வந்தமர்ந்து தேன் குடிக்க முயல்கிறதே.. ---


தொலைவிலிருந்து
ஓரிணை விழிகளேனும்
விழுங்கியிருக்குமா...

--- தொடரும் அவஸ்தைகளைப் பார்த்த கண்களில் ஒன்றாவது தன் இதயத்திற்கு அதை சொல்லி அனுப்பியிருக்குமா.. ஒருவனாவது என்னை முழுவதுமாய் புரிந்து , திரைவிலக்க இனியாவது ஒரு சூரியன்---


என்
வினாக்களை
அர்த்தமற்றதாக்கிக்
கொண்டிருந்தது
என்னைச்சுற்றிப்
போர்த்தியிருந்த
பனித்திரை!..

--- வறுமை, முதுமை இரட்டை உறைக்குள் சிறை.
வயிற்றுச் சுருக்கங்கள் மறைந்தாலும் முகச்சுருக்கங்கள் ??!....---

முதிர்கன்னியின் முத்திரையிட்ட கவிதை.. கவிதையை விட ஆழமான, கவித்துவமான வரிகளில் விளக்கம்...

ஒரு மார்கழி வைகறையின் விளக்கம் இந்தக் கவிதை என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு, புதிய கோணத்தில் (சிந்திக்கத்)சிந்தனையைத் தூண்டியது உங்கள் விளக்கம்...

நன்றி பூ

காலம் தாழ்த்திய பின்னூட்டத்திற்காக மன்னிக்கவும்

poo
10-04-2007, 04:49 AM
நன்றி ஓவியா.. தேர்வில் சிறப்பான வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன்!.

நன்றி காயத்ரி அவர்களே.., உங்கள் பின்னூட்டம்கண்டு பெருமிதம் கொள்கிறேன்...

நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ள நபர் நீங்கள். மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை.

ஆதவா
10-04-2007, 04:56 AM
ஆமாம் ஆமாம்... நானும் இன்னும் சிலர் கவிதைக்கு பின்னூட்டம் இடவேண்டியிருக்கிறது.,.. ஆனால் மன்னிப்பு எதற்கும் வேண்டாம்.,..
பூ அண்ணா... அடுத்த கவி எப்போது?

poo
10-04-2007, 05:34 AM
இப்போதைக்கு எதுவும் யோசிக்கவில்லை ஆதவன். (எந்த நேரத்தில் அடுத்த கவிதையில் சந்திக்கிறேன் போட்டேனோ?!)

பூமகள்
12-10-2007, 06:36 PM
பூ அண்ணாவின் மற்றுமொரு முத்தாய்ப்பு கவிதை...!!
வரிகளின் உள்ளார்ந்த அர்த்தம் அருமை..!!

விரித்து விட்டிருந்த
கேசத்தில்
வாழ்ந்திருந்தத் திவலைகள்
வழுக்கிக் கொண்டிருந்ததை..

விரல் பிரசவித்த
புள்ளிகள்
தரைதொட்ட அமிலத்தில்
அழிந்து கொண்டிருந்ததை..

ரசிக்க நேரம் போதவில்லை...!!

மீட்டுக் கொடுத்த அமர் அண்ணாவிற்கு மனமார்ந்த நன்றிகள்.