PDA

View Full Version : செதுக்கப்பட்ட சிற்பத்தின் வருத்தம்ஆதவா
30-03-2007, 02:51 PM
செதுக்கப்பட்ட சிற்பத்தின் வருத்தங்கள்

கோடைத் தாக்குதலில்
உதடுகள் உலர்ந்த
இலைகளை
வாரி யணைத்துக் கொண்டது
ஒரு ஆலமரம்.

பீறிட்ட ஞாபங்கள்
ஒன்று சேர
மெல்ல கிளைமேல்
படர்ந்தேன் ஒரு பாம்புபோல.

ஒரு கிளையினுள் நுழைந்த
அக்கணமே கண்டேன்.
அங்கே பல சிற்பங்கள்
செதுக்கப் பட்டுக் கொண்டிருந்தன.
சிறு வலியோடு தண்டனைகள்
நிறைவேற்றப்படுகின்றன.
முன்பொருநாள் எனக்கும்..

"நீ யார்?
உனக்கு என்ன வேண்டும்?"
அதே அதிகாரத் தோரணையில்
கேள்வி கேட்கப்பட்டது.
என் பதிலை எதிர்பாராது
உளியை கையில் எடுத்துக்கொண்டான்
என்னையும் செதுக்கிய சிற்பி.
நான் ஞாபகங்களுடன்
வெளியேறினேன்.

அன்று
அழுத விழிகளுடன்
அதே கிளையில் தண்டனை
நிறைவேற்றப்பட்டதால்தான்
இன்று
அழகிய சிற்பமாய்
ஆதவனாய் நான்....

சாபமிட்ட அதே நாக்கு
வாழ்த்தவும் தயங்குகிறது.
என் செவிக்கு
பலரின் சாபங்கள் கேட்டன.
வருங்காலத்தில் அதைப் பற்றி
வருத்தப்படப் போவதறியாமல்.

அறிஞர்
30-03-2007, 03:28 PM
அன்று
அழுத விழிகளுடன்
அதே கிளையில் தண்டனை
நிறைவேற்றப்பட்டதால்தான்
இன்று
அழகிய சிற்பமாய்
ஆதவனாய் நான்....


சாபமிட்ட அதே நாக்கு
வாழ்த்தவும் தயங்குகிறது.
என் செவிக்கு
பலரின் சாபங்கள் கேட்டன.
வருங்காலத்தில் அதைப் பற்றி
வருத்தப்படப் போவதறியாமல்.

அன்று வலிகளுடன் தண்டனை...
இன்று அழகிய சிற்பம்....

கிளை மேல் படர்ந்தேன் பாம்பு போல் .... இது புதுக்கிளையை குறிக்கிறதா... சிறிய விளக்கம் தேவை.

leomohan
30-03-2007, 03:31 PM
புரிந்துக் கொள்ள சற்று கடினமாகவே இருக்கிறது. உங்கள் வாழ்கையின் ஊடே நடந்த சம்பவங்களை பின்னனியாக கொண்டதா?

இளசு
31-03-2007, 05:39 PM
ஆலமரம் என்றால் பிரம்மாண்டம், விசாலம், தாராளம்..

பயிலரங்கம் எதற்கும் ஆலமர உவமை பொருந்தும்..

கல்விச்சாலை, எழுத்தாளர் வட்டம், இணையம் இப்படி..

சருகுகளையும் அணைக்கும் என்றால்
சாலப்பரிந்தூட்டும் தாயன்பான நிலையம்..

விரும்பி ஊர்ந்தேறிப்போனது மனதார செய்த செயல்..
உளியால் செதுக்கப்பட்டது - வலியான உருவாக்கம்!

தேவையற்றவை நீக்கப்பட்ட பாறையே சிற்பம்!

முதலில் பாறையாக இருக்கவேண்டும்..
நல்ல உளியும் வாய்க்கவேண்டும்..
வலியை ஏற்கவேண்டும்..

சிற்பத்துக்கு வாழ்த்துகள்!

நாளை விமரிசைகள் நடக்கும் சிற்பத்துக்கு!
வாழ்த்தத் தயங்குவோரையும்
வசவு சாபம் இடுவோரையும்
விழாக்கூட்டம் புறந்தள்ளிவிடும்..!
அல்லது மனம் மாற்றிவிடும்!!


பாராட்டுகள் ஆதவனுக்கு!

ஆதவா
31-03-2007, 07:02 PM
அறிஞர் மோகன் மற்றும் இளசு அண்ணா ஆகியோருக்கு என் நன்றிகள் பல....

இளசு
31-03-2007, 07:04 PM
அறிஞர் மோகன் மற்றும் இளசு அண்ணா ஆகியோருக்கு என் நன்றிகள் பல....


ஆ ..ஆ...ஆ..ஆதவா...

நன்றி மட்டும் சொன்னால் போதுமா?

உன் மனப்பொருளை சொல்லி விளக்க வேண்டாமா?

ஆதவா
31-03-2007, 07:12 PM
ஆஹா!! அண்ணா! நீங்கள் சொன்ன பிறகு விளக்கம் இந்த கவிதை தேவையில்லை என்றே நினைக்கிறேன்... நீங்கள் குறிப்பிட்டது போல ஒரு ஆசிரியரிடம் தண்டனை வாங்கும் மாணவனைப் பற்றி எழுதியதுதான்.... சற்றே மாறுபட்டாலும் உங்கள் கருத்து நன்றாக ஒத்துப்போகிறது. மன்ற நண்பர்கள் மனதில் என்ன படுமோ தெரியவில்லை!!!

என் மனக் கருத்தாக :

படித்த பள்ளிக்கு சென்று ஒரு வகுப்பறையில் நின்று தான் அடிவாங்கிப் படித்த அதே ஆசிரியரைப் பார்க்கையில் அவர் மற்ற மாணவர்களைத் திருத்த தண்டனை வழங்குகிறார்... அந்த தண்டனைகள் தான் நாளை இன்று நம்மை உயர்த்தியது என்று அறிந்துவிட்டு மெல்ல வெளியேறுகிறான்...

தவறுக்கு தண்டனை இன்றி பாடங்கள் நுழையாது....

(தப்பு இருந்தா குட்டுங்க அண்ணே!)

மனோஜ்
31-03-2007, 08:10 PM
முதலில் எதே உடற்யிற்ச்சி பகுதியே என்று நினைத்தேன்
அருமை ஆதவா எப்ப பள்ளிக்கு பேனிங்க கவிதை அருமையா வந்திருக்கு வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
01-04-2007, 08:02 AM
கவிதை பதித்தவுடனே படித்தேன்... சுத்தமாக எனக்கு புரியவில்லை... கிட்டத்தட்ட 10 முறைக்கும் மேல் படித்தேன்.. சரி, இளசு அவர்களின் விமர்சனத்திற்காக காத்திருந்தேன்.... இதோ இப்பொழுது பார்க்கிறேன். மிக எளிதில் புரிய மறுக்கிறது என் மனம்... தொடர்ந்து வித்தியாசமாக எழுதிடுங்கள்! வாழ்த்துக்கள்!

ஓவியன்
01-04-2007, 08:12 AM
ஆதவா நீங்கள் படித்த பாடசாலைக்குச் சென்று உங்களை ரொம்பவும் பாதித்த ஆசிரியரைச் சந்தித்த போது ஏற்பட்ட அனுபவங்களா?

அருமையாக இருக்கின்றது வாழ்த்துக்கள்!

ஆனால் எல்லாம் உணர்ந்து கொண்ட பின்னரும் அவருக்கு நன்றி சொல்லி வாழ்த்த தயங்கியது ஏன்?

ஆதவா
01-04-2007, 08:40 AM
மிகவும் நன்றி நண்பர்களே! ஆலமரத்தை பள்ளிக்கு உவமையாகவும்
கிளைகளை வகுப்பறைக்கு உவமையாகவும் சிற்பத்தை நான்" என்று உவமையாகவும் உளியை ஆசிரியரின் கண்டிப்புக்கு உவமையாக்வும் இட்டிருக்கிறேன்....

எளிய வலிய கவிதை எழுத இனி முற்படுகிறேன்....

ஆதவா
01-04-2007, 08:44 AM
நன்றி மனோ!!! உங்கள் வாழ்த்துக்கள் என் நெஞ்சைக் குளிரச்செய்கிறது இந்த கோடையிலும்

ஷீ!! உங்கள் மனது என்ன நினைக்கிறதோ அதை இங்கே இட்டது ஒன்றே எனக்கு கிடைத்த வெற்றி.... திறந்த புத்தகத்திலிருந்துதான் நாம் கற்றுக்கொள்ள முடியும்... மூடிய விழிகளுடன் புத்தகம் படித்து கருத்து சொல்வது யதார்த்த மனிதர்களுக்கு ஒவ்வாது...

நன்றியுடன் பெருமையாக ஆதவன்

------------------------------------

ஓவியன்! அச்சமயத்தில் அவரிடம் மன்னிப்பு கேட்க முடியதே!! அவர் என்னை மறந்துவிட்டார்... என்னைப் போல பல சிற்பங்களைச் செதுக்கிவிட்டார்.... நான் மனதில் இன்றும் அவரை நினைத்திருப்பது ஒன்றே அவருக்கு நான் செய்யும் தட்சணை....

நன்றிங்க ஓவியன்....

இளசு
01-04-2007, 08:34 PM
முழுவிளக்கமும் அறிந்தபிறகு கவிதை இன்னும் மணக்கிறது ஆதவா!

நன்றி...

poo
02-04-2007, 09:14 AM
படிக்கும்போது கற்பனைகள் விரியத்தான் செய்கின்றன.. ஒரு கட்டம் வந்தவுடன் நிலை கொண்டுவிடுகிறது.. ஆதவனின் கருப்பொருளில் காதல் வந்துவிடுகிறது..

பாராட்டுக்கள் ஆதவன்.. இந்த கவிதையை பள்ளி வாழ்வு தாண்டியும் கையாளலாம்தானே... வாழ்வின் கடைவரை செதுக்கப்படுகிறோம்.. ஒரு கட்டம் தாண்டியபின் பலநேரம் நம்மால்.. சிலநேரம் மற்றவரால்..!

_______

படைப்பாளி - களம் .... ஒரு நிஜ சிற்பமே உயிர்வந்து பேசுவதைப்போலவும் தோன்றுகிறது.. காதலன் .. கடந்துபோன காதல்.. இதற்கும் ஒட்டிப் பார்த்தாலென்ன..?

ஆதவா
02-04-2007, 07:47 PM
ஆமாம் பூ!! மிக நன்றாக இருக்கும்... நன்றிகள் பல..