PDA

View Full Version : மறுபடி மலருமா?



lenram80
29-03-2007, 03:14 AM
யாருடி இவன்?
திடீரென்று வந்தான்!
குளிரக் குளிர மழை கொடுத்தான்!
குலுங்கக் குலுங்க மலர் கொடுத்தான்!
சிலிர்க்க சிலிர்க்க சிரிப்பு கொடுத்தான்!
இப்போது, விடிய விடிய வெளிச்சம் கொடுக்கிறான்!

சில விதைகளால் மட்டும் எப்படி ஆலமரமாய் வளரமுடிகிறது?
சில காற்றுகளால் மட்டும் எப்படி புயலாய் மாறமுடிகிறது?
சில மேகங்களால் மட்டும் எப்படி கொட்டெனக் கொட்டமுடிகிறது?
சில மனிதர்களால் மட்டும் எப்படி நம் உயிரின் அடிவரை தொடமுடிகிறது?

இவர்களால் மட்டும் தான், எடுத்த எடுப்பிலேயே
நம் உடம்பை ஊடுறுவி உயிரைத் தொடமுடிகிறது!
அதன் முதுகை தட்டிக் கொடுத்து, முடி வருடமுடிகிறது!
ஆறுதல் தேடி அலையும் தருணங்களில்
ஆண்டவனாகவும் வரமுடிகிறது!

அப்படிப் பட்டவர்களில் இவனும் ஒன்றா?
என் சோகம் தாங்க இவன் வருவது நன்றா?
இவன்,
துக்கங்களை உறிஞ்சிக் கொண்டு, சுகப்பழம் தருகின்ற கன்றா?

குளிர்காற்று பட்டால் தானே மேகம் கூட மழை பொழியும்?
எப்படி இவனால் என் மூச்சுக் காற்றுக்கே மழை பொழியமுடிகிறது?

காதலிக்கும் நேரத்தில் கனிய கனிய பேசிவிட்டு
கல்யாணம் என்றவுடன் காணாமல் போய்விட்ட
கயவன் - ஒரு ஆண் என்பதால்

நொடி நொடியாய் ரசித்து
அணு அணுவாய் புசித்து
செல் செல்லாய் செதுக்கிய காதல் கோட்டையை
கவலைப் படாமல் இடித்த காதலன்
கயவன் - ஒரு ஆண் என்பதால்

ஆணினத்தையே அழிக்க நினைத்தபோது

சில்லென்று வந்து
சிறு மழை தூவி
சிறு நகை புரிகிறானே!
இவன் யார்?

இவன் என்னை அக்கரைக்கு அழைத்துச் செல்லும் ஆறா?
இல்லை,
மீண்டும் அழுகையில் மூழ்கவிடும் ஆழ்கடலா?

இவனிடம் பேசுவது ஆறுதல் என்பது மறுக்கப்படாத உண்மை!
இது அடுத்த காதலாக மாறுதல் என்பது மறைக்கப்பட வேண்டிய உண்மை!

மூன்று வருடங்களுக்கு முன்பு நான் புத்தம் புது மலர்!
அவனுக்காக மணம் கொடுத்தேன்!
மணம் குறைந்தது என்று நினைத்தானோ?
இல்லை,
மற்றொரு மணத்தில் மனதை நனைய விட்டானோ?
தெரியவில்லை!
கயவன் அவன் கால் வாரிவிட்ட வேளையில்

இவன் மீண்டும் வந்து எனக்கு தண்ணீர் விடுகிறானே!
என்னோடு சேர்ந்து கண்ணீர் விடுகிறானே!
இவன் காலம் மாறி பொழியும் பருவ மழையா?
இல்லை,
என் காலம் மாற்ற வந்த பருவ மழையா?
தெரியவில்லை!

அடுத்த உறவுக்கு நான் இன்னும் ஆயுத்தமாகவில்லை!
அதற்குள் என்னை இப்படி ஆறுதல் ஆயுதத்தால் அடிக்கிறானே?

இவன் என்னை சந்தோஷப்படுத்த வந்த மாயனா?
இல்லை,
சங்கடப்படுத்த வந்த பேயனா?

விடை தேடி அலைகின்றேன்!
விடியல் தேடி அழுகின்றேன்!

ஷீ-நிசி
29-03-2007, 03:47 AM
விதவை, ஏமாற்றபட்ட பெண், இவர்களின் வாழ்வில் ஆறுதலாய் வந்த ஒருவனின் அன்பில் மூழ்கியுள்ளவள், ஆனாலும் ஒரு வித அச்சம் மனதில் இவளுக்கு உள்ளுக்குள் இருக்கிறது. முடிவடுக்க முடியாமல் தயக்கத்தில் இருக்கும் அவளுக்கு அவனே முடிவைத் தருவானா?

நல்லதொரு கவிதை லெனின், இவர்களின் பார்வையில் இதுபோல் கவிதை மிக அதிகம் கிடைக்காது, பல கவிதைகளின் கரு நம்மைச் சுற்றியிருக்கும் ஜனங்களிடமிருந்துதானே.. வாழ்த்துக்கள்!

(மற்றவர்களது கவிதையும் பார்வையிட்டு உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள்..)

guna
29-03-2007, 04:37 AM
அவனின் விழிக்கதிர்கள்
எந்த அமிலத்தில்
உருவாக்கப்பட்டவை?

இரும்பான அவள் இதயத்தை
இப்படி
துரும்பாக தேய்க்கிறதே!

முடிவெடுக்கத் தெரியாமல் விழிக்கும் ஒருவரின் தவிப்பை அழகான கவிதையாக சொன்ன லெனின்க்கு குணாவின் வாழ்துக்கள்..

விகடன்
29-03-2007, 04:40 AM
இவன் மீண்டும் வந்து எனக்கு தண்ணீர் விடுகிறானே!என்னோடு சேர்ந்து கண்ணீர் விடுகிறானே!
இவன் காலம் மாறி பொழியும் பருவ மழையா?
இல்லை,
என் காலம் மாற்ற வந்த பருவ மழையா?
தெரியவில்லை!

அடுத்த உறவுக்கு நான் இன்னும் ஆயுத்தமாகவில்லை!
அதற்குள் என்னை இப்படி ஆறுதல் ஆயுதத்தால் அடிக்கிறானே?

இவன் என்னை சந்தோஷப்படுத்த வந்த மாயனா?
இல்லை,
சங்கடப்படுத்த வந்த பேயனா?



சற்று காமம் கொப்பளிக்க எழுதியிருப்பது போலத் தோன்றுகிறதே.

நன்றாக இருக்கிறது.

இளசு
29-03-2007, 09:29 PM
பாராட்டுகள் லெனின்..

இந்த அவஸ்தைகளை வார்த்தைகளில் வடிப்பது மிகக்கடினம்..
(மறுபடியும் பட இறுதியில் ரேவதியின் முகபாவமும் சேர்ந்து மட்டுமே
உணர்த்திய அவஸ்தை..)

உங்களால் வரிகளை மட்டும் வைத்து
எண்ணக்கடத்தல் செய்ய முடிந்திருக்கிறது..

வியக்கிறேன்.. பாராட்டுகிறேன்..

அறிஞர்
29-03-2007, 10:28 PM
ஏமாற்றப்பட்டவளின் ஆதங்கம் வரிகளில் வெளிப்படுகிறது..
இப்படிப் பட்ட கயவன்களால்... ஆணினத்திற்கு அவமானம்..

தொடரட்டும் லெனின் கவிதைகள்..

அமரன்
30-03-2007, 08:26 AM
ஏமாற்றப்பட்டவளின் வலி, அதனால் ஏற்பட்ட எச்சரிக்கை உணர்வு, முதல் காதலால் பட்ட காயம் புதியவனின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இனியொரு அதிர்ச்சியை தாங்கும் வலி அவள் இதயத்துக்கு இல்லையோ.
நல்ல கவிதை லெனின்.

lenram80
31-03-2007, 12:34 PM
நன்றி ஷிநிஷி, குணா, ஜாவா, இளசு, அறிஞர் & நரண்

மனோஜ்
31-03-2007, 02:56 PM
அருமை
காதலில் தோற்றவளின் மனவேதனை
ஆறுதலைத் தேட ..
மனமோ சந்தேகத்தில்

வரிகள் நன்று

poo
02-04-2007, 10:23 AM
பாராட்டுக்கள் நண்பரே...

வரிகளில் வலியை உணர்த்தும்விதம் அருமை.

சுகந்தப்ரீதன்
17-06-2008, 11:02 AM
லெனின் அண்ணா.. உங்கள் கவிதைகள் பெரும்பாலும் பெண்பால் உரைப்பதுபோல் அமைந்திருப்பது சிறப்பு.. இங்கேயும் அச்சிறப்பு தொடர்கிறது..!!

உறவுகளின் மீதான நம்பிக்கையை ஒருவள் இழந்திருக்கும் தருணங்களில் மெல்லிய மயிலிறாய் புதிய உறவொன்று மனதினை வருடும்.. அதன் இதம் சுகம் எப்போதும் இருக்கவேண்டுமென என்னும் அவள் எண்ணம்..!! அதேசமயம் பழைய அனுபவங்கள் வந்து அவளை பயமுறுத்தும்..!! இருதலைக்கொல்லி எறும்பாய் அவளின் நிலையை வரிகளில் இங்கே நீங்கள் வடித்தவிதம்...

இவனிடம் பேசுவது ஆறுதல் என்பது மறுக்கப்படாத உண்மை!
இது அடுத்த காதலாக மாறுதல் என்பது மறைக்கப்பட வேண்டிய உண்மை!!
அற்புதம் அண்ணா..!!


விடை தேடி அலைகின்றேன்!
விடியல் தேடி அழுகின்றேன்!

ஏனோ தெரியவில்லை லெனின் அண்ணா..!!
எனக்கே எனக்கு என்று எடுத்துக்கொள்ள தோணுகிறது இவ்விரு வரிகளை மட்டும் எனக்கு..!!

lenram80
19-06-2008, 07:42 PM
நன்றி மனோஜ், பூ, சுகந்தப்ரீதன்.

சுகந்தப்ரீதன், பழைய கவிதையை தூசி தட்டி, கொஞ்சம் முட்டி முன்னால் வைத்ததற்கு ஸ்பெசல் நன்றி. அப்பரம், நல்ல விடையொடு, நல்ல விடியல் வரும்... நம்பிக்கையோடு காத்திருங்கள்