PDA

View Full Version : தொங்கவிடப்பட்ட மானம்ஆதவா
28-03-2007, 04:10 PM
பின்னலாடைகளுக்கு
உயிர் கொடுக்கும் தேர்ந்தவள் நீ

வேகமாக இயங்கும் கரங்களினால்
காணக் கூடாதவைகளைக்
காணத் துடிக்கிறது
என் கருவாட்டுக் கண்கள்
உன் மேனியின் ஈர்ப்பும்
அதன் மேல் படர்ந்திருக்கும்
ஆடையின் விலகலும்
என் நெருப்புக்குத் தீனியாக
மாறிவிட்டிருந்தது,

என் கரங்களின் தீண்டலால்
எழுந்து வருவாய்
நமக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில்.
பஞ்சுக் கொடோனுக்குள்
பிஞ்சு மனதாய் நுழைவாய்.
பணிக்காகத்தான் என்று நீயும்
எனக்காகத்தான் என்று நானும்
நினைத்திருப்போம்.

அலைகழிக்கப்பட்ட
காற்று அறியும், அங்கே
அரங்கேறக் கூடாதவைகள்
அரங்கேறியது என்று.
உன் முனகலுக்குப் பூட்டாக
வெட்டுபட்ட துணிகள் கிடக்கின்றன.
இல்லையேல் வெட்டுபடும் சம்பளபாக்கி.

ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்ததும்
ஏற்பட்ட சலசலப்பில்
ஒரு லோகத்தை விட்டு
கலைந்து எழுவோம்.
கலைந்துபோய் நீயும்
கலையாக நானும்.

எனது அடுத்த இலக்கெல்லாம்
ஆடைகளை ஏற்றுமதி செய்வதுவும்
கூலியாக ஆடைகளைக் கலைப்பதுவும்////

என்றாவது ஒருநாள்
உன் மனம் பதறினால்
வீதியில் நடந்து செல்.
'சிங்கர், கைமடி*
ஆள்தேவை' என்ற
அட்டை தொங்கவிடப்பட்டிருக்கும்
உன் மானம் போல...

* சிங்கர் - துணியைத் தைப்பவர்,
கைமடி - ஒரு ஆடையின் மேல்பாகமும் கைப்பாகமும் இணைத்துக் கொடுப்பவர்...

ஷீ-நிசி
29-03-2007, 04:36 AM
எக்ஸ்போர்ட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு அவ்வபோது நடக்கும் நிகழ்ச்சி.. மெஷின் ஓடினால்தான் இவர்களின் வாழ்க்கையும் ஓடும் என்ற அவல நிலையில், இதுபோல் சகித்துக்கொள்ளவேண்டிய நிலையில்தான் அவர்கள்...

என்றாவது ஒருநாள்
உன் மனம் பதறினால்
வீதியில் நடந்து செல்.
'சிங்கர், கைமடி*
ஆள்தேவை' என்ற
அட்டை தொங்கவிடப்பட்டிருக்கும்
உன் மானம் போல...

நிஜ வரிகளிவை.. நல்ல படைப்பு ஆதவன்....

விகடன்
29-03-2007, 04:46 AM
பொருளாதாரத்தால் பின் தள்ளப்பட்டிருக்கும் மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் அதற்கு எதிராக குரல் கொடுக்க இயலாமையின் காரணத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டி நிற்கிறது இந்த கவிதை.

வழ்த்துக்கள்.

pradeepkt
29-03-2007, 05:57 AM
ம்ம்ம்... ஒரு கவிஞன் பிறப்பதில்லை ... உருவாகிறான்... அவன் சூழலும் வாழ்வியலும் அவனை உருவாக்குகின்றன என்று கேள்விதான் பட்டிருக்கிறேன். இன்று கண்டேன்.

பஞ்சுக் கொடோனுக்குள்
பிஞ்சு மனதாய் நுழைவாய்
-- ம்ஹூம்... பிள்ளைப் பூச்சியாய் இருந்த பிஞ்சு மனதுகள் தேள்கள் கொட்டிக் கொட்டி நஞ்சாய் மாறி நாளாகிவிட்டன ஆதவா!

கலையாக நானும்
-- ???????

எனது அடுத்த இலக்கெல்லாம்
ஆடைகளை ஏற்றுமதி செய்வதுவும்
கூலியாக ஆடைகளைக் கலைப்பதுவும்
-- கவிதைப் பார்வைகளில் உன் தாக்கம் கூடிக் கொண்டே போகிறது கண்டு மிக்க மகிழ்ச்சி. வெகு நாளைக்கப்புறம் ஒரு குற்றவாளியின் பார்வையில் கவிதை, வாழ்த்துகள்!

டாக்டர் அண்ணாதுரை
29-03-2007, 07:45 AM
ஆதவா,
கவிதையில் கவிநயம் ஒருபக்கம் இருக்க, கவிதையின் கோனமே கனமாக இருக்கிறது.
வாழ்துக்கள்.
அன்புடன்

ஆதவா
29-03-2007, 05:13 PM
நன்றி நண்பர்களே

அறிஞர்
29-03-2007, 07:19 PM
வயிற்று பிழைப்புக்காக வேலை செல்லும் இடத்தில் நிகழும் சம்பவங்களை கோர்த்து கொடுத்தது.. அருமை ஆதவா..

இளசு
29-03-2007, 08:28 PM
கூண்டுக்கிளி படக்காட்சி:

கணவன் சிறையில்
கைப்பிள்ளை பசியில்
அவளின் மார்பில் கோடை
அவள் வயிற்றில் நெருப்பு..

அவன் -
சுண்டும் கையில் காசு
தூண்டில் கண்ணில் ஆசை..

குழந்தை இன்னும் அழுதபடி..

இம்முறை
சுண்டிய காசு தரைவிழவில்லை
முந்தானை விழுந்தது..!


மேல்வயிற்றின் நெருப்பணைக்க
அடிவயிற்றில் நெருப்பேற்கும் அவலம்..!

துணிகள் -
காயத்தை மறைக்கத்தானே!


-------------------------------------------

ஆதவனுக்கு அண்ணனின் அன்பும் பாராட்டும்!

பார்வைகள், பதிவுகள் தொடரட்டும்!

ஆதவா
05-04-2007, 04:43 PM
அட! அண்ணாவின் பதிலை இத்தனை நாள் எப்படி பார்க்காமல் விட்டேன்.... மன்னிக்க அண்ணா

நன்றிகள் கோடி....

nonin
07-04-2007, 11:40 AM
வணக்கம் ஆதவன். நலமா? மன்றத்தில் ஈடுபட்டு நாட்கள் பலவாகிறது. நுனிப்புல் மேய்வதோடு சரி.எழுத எழுத உங்கள் கவிதைகள் செழுமை அடைய காண்கிறேன்.ஆனாலும் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்துக்கொள்ள இயலாத நிலைதான் இன்னும் எனக்கு. குறிப்பாக கருவாட்டு கண்கள்,
உன் முனகலுக்குப் பூட்டாக
வெட்டுபட்ட துணிகள் கிடக்கின்றன.
இல்லையேல் வெட்டுபடும் சம்பளபாக்கி.
கலையாக நானும்,
கூலியாக ஆடைகளை கலைப்பதுவும்,

கூலிக்காக ஆடைகளை கலைப்பதுவும் என இருந்திருப்பின் புரிந்துக்கொள்ள முடிகிறது.ஆனால் நீங்கள் எழுதிய பொருளில் "கூலியாக ஆடைகளை கலைப்பதுவும்" என்பதில் விபரீத அர்த்தம் வருவது போல் உள்ளது.எப்படியெனில் அவள் தினவெடுத்தவள், ஆகவே அவள் செய்த பணிக்கு கூலியாக ஆடை கலைத்து கூடி களித்தால் போதும் என்பது போல் இந்த கவிதையின் நோக்கத்துக்கே மாறாக அமைந்ததுபோல் வார்த்தை பிழறி விட்டதாய் படுகிறது. மற்றபடி, நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்த காணாத அபூர்வ சொல்லாடலில் வாழும் உங்கள் கவிதைகள்.

ஆதவா
07-04-2007, 11:59 AM
நன்றி நண்பரே! அதிக நாட்களாகவே உங்களின் பங்களிப்பைக் காண முடியவில்லை. தேடிப்பிடித்து இக்கவிதைக்கு விமர்சனமிட்டு கேள்வி எழுப்பியது மனதிற்கு நெகிழ்ச்சி அளிக்கிறது....

கருவாட்டுக் கண்கள் : இறந்துபோன கண்கள்... உயிரில்லாத கண்கள்... இப்படி பலவாறு அர்த்தம் கொள்ளலாம். கவிதை நாயகன் அவளைத் தவறாகப் பார்ப்பதை அப்படி சொன்னேன்..

உன் முனகலுக்குப் பூட்டாக
வெட்டுபட்ட துணிகள் கிடக்கின்றன.
இல்லையேல் வெட்டுபடும் சம்பளபாக்கி.

அவள் கூடலின் போது எழுப்பிய சப்தத்தை அடைப்பதற்கு அருகில் கிடக்கும் வேஸ்ட் துணிகள் கிடக்கின்றன... (பஞ்சுக் கொடோனுக்குள் நுழைவோம் என்று முன்பு சுட்டியிருப்பதைக் காணுங்கள்..) அதை ஒத்துழைக்கத் தவறும் பட்சத்தில் அவள் சம்பளத்தில் இவன் கைவைப்பான்.. இவன் காண்ட்ராக்டர் பொறுப்பில் இருப்பதால்..

கலைந்துபோய் நீயும்
கலையாக நானும்.

கற்பழிப்பு சம்பவம் முடிந்தபின் பெருமிதத்தில் இவன், கலைந்து போன கோலமாய் அவள்..

ஆடைகளை ஏற்றுமதி செய்வதுவும்
கூலியாக ஆடைகளைக் கலைப்பதுவும்////

ஆடைகளை ஏற்றுமதி செய்ய வேலை வாங்குவது... அதற்கு கூலியாக கற்பழிப்பது.... என்று இவன் நினைக்கிறான்,.. அடுத்த இலக்காக படுகிறது இவனுக்கு..

கவிதை கற்பழிப்பு செய்பவன் பார்வையில் எழுதப்பட்டிருக்கிறது...

ஓவியன்
08-04-2007, 05:39 AM
ஆதவா உங்கள் கவி அழகோ, அழகு!
கவியை சொல்ல நீங்கள் தேர்ந்தெடுத்த பார்வை (குற்றவாளியின் பார்வையாக) தான் இந்த கவிதையின் சிறப்பம்சமென நான் கருதுகின்றேன்.

பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் வஞ்சிக்கப் படுவதை வார்த்தைகளால் உரித்துக் காட்டியுள்ள உங்கள் சமூகப் பொறுப்புணர்ச்சி போற்றப் பட வேண்டியதொன்று.

அநீதியைச் சுட்டிக் காட்டுவதிலும், தட்டிக் கேட்பதிலும் கவிஞன் தான் முதலிலேயிருக்க வேண்டும்.

நீர் அதில் முதலாவதாக இருக்கின்றீர்!

வாழ்த்துக்கள்!கலைந்துபோய் நீயும்
கலையாக நானும்.


ஆதவா!

"கலைந்துபோய் நீயும்
களையாக நானும்" என்று வந்திருக்க வேண்டுமோ என்றொரு சந்தேகம் எனக்கு?, உங்கள் கருத்து என்னவோ?

ஆதவா
08-04-2007, 06:03 AM
நன்றிங்க ஓவியன்....

கலை - அழகு, பிரகாசமான,

களை - சோர்வு

இரண்டில் எது இட?.....

உங்கள் இஷ்டம் தான் முக்கியம்... எந்த பொருள் உங்களுக்கு சரியாக வருகிறதோ அதை நீங்கள் தாராளமாக இடலாம்...

ஓவியன்
08-04-2007, 06:13 AM
இரண்டும் பொருந்தும் ஆதவா!

ஆனால் களை என்பதிலே இன்னுமொரு அர்த்தம் வருமே அதாவது சமூகத்திலே களைய வேண்டிய ஒரு நச்சுக் களையாக அவன் என்று.

அதனாலே தான் அப்படிக் கூறினேன்.

ஆதவா
08-04-2007, 06:22 AM
அப்படி வராதே ஓவியன்.. ஏனென்றால் இது குற்றவாளியின் பார்வை..

அவனே தன்னை ஒரு நச்சாக நினைக்கமாட்டானே! இருப்பினும் உங்கள் கவிதையின் ஆராய்வு மிகவும் பிடித்திருக்கிறது.. நன்றிப்பா!

ஓவியன்
08-04-2007, 06:58 AM
உண்மை தான் ஆதவா, குற்றவாளி ஒரு போதும் அப்படி நினைக்க மாட்டான்.

இப்போது நான் கலை என்பது தான் மிகப் பொருத்தமென்று எண்ணுகின்றேன்.

poo
09-04-2007, 07:54 AM
பாராட்டுக்கள் ஆதவன்...

அவள் வெளியேறி அடுத்த ப(ம)டி நுழைவது மனம் பதறியல்ல, உடல் சளைத்து என்றே புரியப்படும் என்பதை சொல்கிறது.. அந்த இறுதி வரிகள்... "தொங்கவிடப்படும் அவளது மானம்"

(களையாக அவனை சொல்லிக்கொள்ள விரும்பாதவன் கருவாட்டுக் கண்கள் என்ற அளவில் ஒப்புக் கொண்டானே.. அதுவே அதிகபட்சம்தான்!)

nonin
09-04-2007, 11:30 AM
விளக்கத்திற்க்கு நன்றி ஆதவன்.

ஆதவா
09-04-2007, 01:03 PM
நன்றி அனைவருக்கும்