PDA

View Full Version : நிறமிழந்து போகிறேன்...!



poo
27-03-2007, 06:55 AM
கையில்
நீண்ட கழியோடு
களமிறங்கினேன்..
கண்களை மட்டும்
கட்டிக் கொள்ளவில்லை
மறந்தும்கூட...

பார்வையில்
ஒருவருமில்லை..
உரியடியொன்றுதானென்
நோக்கம்...
விளங்க மறுத்த விழிகள்
அச்சத்தோடு விலகி நின்றன..

ஒவ்வொரு முறையும்
எம்பி எம்பி
முயற்சிக்கிறேன்..
எங்கிருந்தாவது
ஒரு சொம்புத் தண்ணீர்
என் மேல் விழும்..
முகம் வழியும்
சாயங்களை
துடைக்க மறந்து...
சொற்பத் துளிகளில்
தாகம் தீர்த்து
எம்பிக் கொண்டிருக்கிறேன்
மீண்டும்.. மீண்டும்..

என்றாவது ஒருநாள்
உரியடியில்
வெற்றியடைந்ததாய் கூத்தாடுவேன்...
ஆனால்
அன்றென்னை
எவருக்கும் அடையாளம்
தெரியாது...
முகம் வழிந்த
சாயங்களை துடைக்க
மறந்ததால் என்
முகத்தின்
நிறமே மாறிவிட்டிருக்கும்...

இளசு
27-03-2007, 10:00 PM
வாழ்க்கைப் போராட்டங்கள்...
முகங்களில் வரியாகவும்...
முகச்சாய பூச்சாகவும்...
தேங்கித்தான் போகின்றன பூ...

ஏற்றங்கள் மாற்றங்களால்தான் என்றால்
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்...


பொன்னகை உள்ள அந்த உறி மட்டும்
குதிரை முன் கட்டப்பட்ட புற்கட்டாய்
இன்னும் இன்னும் வாழ்க்கை வண்டியை
இழுத்துச் செல்ல உந்தியபடியாய்...


அழகிய ( வாழ்க்கை அவல உண்மைக்) கவிதைக்குப் பாராட்டுகள்!

ஷீ-நிசி
28-03-2007, 04:10 AM
உரியடி நிகழ்ச்சி.. ..
கண்கள் கட்டியபடி கையில் கொம்புடன், மேலே கட்டியிருக்கும் உரியை அடிக்க அவன் முயற்சிக்கிறான்.. சுற்றி நிற்கும் கூட்டத்திலிருந்து வரும் குரல்களில் உற்சாகமும் இருக்கலாம், ஏளனமும் இருக்கலாம்! அவற்றை அவன் பொருட்படுத்துவதில்லை.. அவன் கண்களில் அந்த உரி மட்டுமே தெரிகிறது.. ஒரு முறை அவன் எம்புவதற்குள் பலமுறை சொம்பு தண்ணீர் அவன் மேல் ஊற்றபடுகிறது.. சொம்பு தண்ணீரின் நோக்கம் அவன் கவனத்தை கலைப்பது, ஆனால் அதையே அவன் முயற்சியினிடையே வரும் களைப்புக்கு, தாகத்துக்கு பயன்படுத்திக்கொள்கிறான்..

சாயம் என்பதை நான் விளங்கிக்கொண்ட வரை..

அந்த தண்ணீர் அவன் கவனத்தையும் கலைக்கிறது, அவன் முகத்தின் சாயத்தையும் கலைக்கிறது... அவன் வெற்றிபெற்றபின் அவன் நிஜத்தை அவன் தொலைத்திருக்கிறான், இது முழுக்க முழுக்க, சம்பாதிக்க விரும்பி வெளிநாட்டிற்கு சென்று உழைக்கும் மண்ணின மைந்தர்களுக்கு மிக பொருத்தமாய் உள்ளது இக்கவிதை.

எல்லா சுகம், துக்கம், பாசம், அன்பு எல்லாவற்றையும் இழந்து முடிவில் வெற்றிபெற்று பணமூட்டையுடன் வரும்பொழுது அவனின் நிஜ சாயம் அவன் முகத்திலிருந்து கரைந்திருக்கும். அவன் வெற்றிபெற்றவன்தான். ஆனால் அவன் இழந்தது நிஜத்தை.

வாழ்த்துக்கள் பூ...

எண்ண ஓட்டங்களை தூண்டின கவிதை..

அறிஞர்
28-03-2007, 04:45 AM
பூவின் கவிதைக்கு நீண்ட விளக்கம் கொடுத்த ஷீ-நிசியின் பதில் அருமை....

நிஜத்தை இழந்து கிடைத்த வெற்றியை எப்படி கொண்டாடுவது...

poo
28-03-2007, 05:09 AM
நன்றி அறிஞரே...

நிஜமிழந்து போனதை மறைக்க அல்லது மறக்க கொண்டாடுகிறார்களோ என்னவோ?!
சிலர் நிஜம் இழந்ததையே தெரிந்திருக்க மாட்டார்கள், அது எல்லாவற்றையும்விட சிறந்தது.