PDA

View Full Version : காதல் காலம்....



ஷீ-நிசி
27-03-2007, 05:53 AM
மெல்லிய தூறல்
விழுந்துக்கொண்டிருக்கும்
மழைக் காலம்!
மாலை காலம்!!

வானம் வடிகட்டி
பூமிக்கு அனுப்பிக்கொண்டிருந்தது
சுத்தமான மழைத்துளிகளை!

அலைபேசி அலறியது...

'இதோ வந்துவிட்டேன்'..
என் நிலா செய்தியனுப்பினாள்!

எங்கிருக்கிறாய்? என்று
எண்ணிலா செய்தியனுப்பியபின்!

வழக்கமாக சந்திக்கும் பூங்காதான்!

அன்று மட்டும்
பூக்களெல்லாம் குளித்து
தலைதுவட்டாமலிருந்தன!

சுற்றிக் கொண்டே
வந்தவனின் கண்கள்
ஓரிடத்தில் நின்றன.

தலைதுவட்டாமலிருந்த
பூக்களில் ஓன்று, பூங்காவிற்குள்
நுழைந்துக்கொண்டிருந்தது!

கைப்பை குடையாய்
மாறியிருந்தது..

அவள் கூந்தலை தொடமுடியாத
மழைத்துளிகளெல்லாம்,
கைப்பையோடு யுத்தமிட்டு
அவள் கைவழியே வழிந்தன!

அவள் கைகள்கூட அழுகிறதே!

பூமியில் தேங்கியிருந்த
வான் துளிகளை
அவள் பாதங்கள் தொட்டன,

அக்கணத்தில், அக்கர்வத்தில்
இருபக்கமும் தெறித்துநினறு
அவைகள் அவளை
வரவேற்றன...

ஒவ்வொரு அடியிலும்
தண்ணீர் பூக்கள் தெறித்தன...

அருகே வந்தவள்
ஸாரிடா என்றாள்!

மரத்தினிலையால்,
மழைத்துளிகள் தொடாத
இடத்தில் அமர்ந்தோம்!

மரங்களுக்கிடையில் சிக்கின
மழைத்துளிகளுக்குள் வாக்குவாதம்!
அவள் மீது விழுந்திட விரும்பி -அதில்

வெற்றிபெற்ற துளிகள்..
அவள் மீதும்,
தோல்வியடைந்த துளிகள்
என் மீதும்,
அவ்வப்போது ஒவ்வொன்றாய்
விழுந்துக்கொண்டேயிருந்தன!

பேசிக்கொண்டிருந்ததில்
வானத்திலும் ஒரு நிலா
வந்துவிட்டதை கவனிக்கவில்லை!

நேரமாகியது என்றாள்...
ஈரமான தலையை
துவட்டிக்கொண்டே!

பூங்காவை விட்டு
வெளியேறினோம்!

சற்றுமுன் தலைதுவட்டிக்
கொண்டிருந்த பூக்களில் பல,
காம்பின் வழியே
அழுதுகொண்டிருந்தது!

காவல்காரன்
வினோதமாய் பார்த்தான்...

பூங்காவின் பூவை
ஏன் எடுத்துச்செல்கிறாய்
என்று பார்ப்பதுபோல்!

என் இருசக்கர வாகனத்தின்
பின்னிருக்கை, என்னிருக்கையை
ஏளனமாய் பார்த்தது..

தோளை தொட்டபடி
ஏறியமர்ந்தாள் வாகனத்தில்...

பூங்காவிற்கு கையசைத்து
விடைபெற்றோம்!

ஒரு மெல்லிய காற்று
உண்டானது!

பூக்களெல்லாம்
எங்களைநோக்கி கையசைத்தன...

poo
27-03-2007, 06:01 AM
மனதை மயக்கும் கவிதை...

ஒரே மூச்சில் படித்து முடித்து மனம் குதூகலிக்கிறது...

சின்னச்சின்ன நிகழ்வுகள் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது...

பாராட்ட வரிகளில்லை நண்பரே.... சொக்கிப்போகிறது.

இடைவெளிவிட்டு வந்த கவிதை இனிக்கிறது... இத்தனை இனிப்புக்காக, இனிமைக்காக இன்னும் இன்னும் காத்திருக்கத் தயார்.

நிறைய எழுத வாழ்த்துக்கள்!!!

மதி
27-03-2007, 06:13 AM
என்னமோ தெரியல. கொஞ்ச நாளா கவிதைகள் படிக்கிறதையே நிறுத்தியிருந்தேன். மனத்தினுள் சிறு சஞ்சலம். அட..நமக்கு ரசிப்புத் திறனே செத்துவிட்டதோ என்று..

இல்லை..இன்னும் சாகவில்லை என நிரூபித்தது உங்கள் கவிதை...
கற்பனைகள் விரிகிறது.. மனம் பரவசப்படுகிறது... கடைசியாய் மீட்டுவிட்டேன் என்னை..

பாராட்டுக்களும் நன்றியும். ஷீ-நிசி

ஷீ-நிசி
27-03-2007, 06:27 AM
உங்களின் ஆழ்ந்த பாரட்டுகளுக்காய் நன்றி பூ மற்றும் ராஜேஸ் அவர்களே..

அறிஞர்
29-03-2007, 03:31 PM
பூங்காவில் பூவை சந்திப்பதில்
ஏற்படும் இயற்கையான நிகழ்வுகளை
அழகாக படம் பிடித்து உள்ளீர்கள்...
மழைத்துளிகள் இன்னும் அழகை சேர்க்கின்றன..
வாழ்த்துக்கள் ஷீ-நிசி...

ஷீ-நிசி
29-03-2007, 03:33 PM
நன்றி அறிஞரே!

விகடன்
29-03-2007, 04:39 PM
எங்கிருக்கிறாய்? என்று
எண்ணிலா செய்தியனுப்பியபின்!



பொதுவாக பலர் வாழ்க்கையில் நடப்பது ஒன்றுதான்.

ஆமாம்.
அனுபவத்திலிருந்துதான் சொல்கிறேன்.
அனுபவித்த அனுபவமில்லை!
அனுபவத்தோரை பார்த்த அனுபவம்.

பி.கு:- ஓவியன் இதுபற்றி இன்னும் பல தகவல்களை தருவார்.

ஷீ-நிசி
29-03-2007, 04:43 PM
நன்றி ஜாவா....

ஆதவா
29-03-2007, 04:49 PM
இக்கவிதைக்கு நான் என்னவென்று பின்னூட்டமிடுவேன்?... அத்தனை அழகு...

இத்தனை நாள் ஆன காரணமென்ன என்று கேட்டால்,,,, அட உலகம் கண்டு வியக்கும் ஒரு அற்புத சிற்பம் செதுக்கவேண்டுமல்லவா என்று பதில் கிடைத்திருக்கிறது இக்கவியின் மூலம்... சிறு நிகழ்வுகள்.. அதைச் சொன்ன விதம் மிக அருமை........ (இப்படி சொல்லி சொல்லியே அருமைங்கற வார்த்தை புளிச்சுப்போச்சு.. வேற வார்த்தை சொல்லுங்கப்பா :D )

நான் இந்த வரிகள் தான் அழகு என்று சொல்லவேண்டுமென்றால், முழுக்கவிதையும் இடவேண்டும். எதை விட?

ஒரு நிகழ்வு.. காதலன் காதலியின் சந்திப்பு, இந்த காதலைவிடவும் அழகாய் சொன்னவிதம்........... எல்லாம் சேர்ந்த ஒரு பூக்களின் தொகுப்பு.

துவட்டாமலிருந்த பூக்கள்... அசந்துபோனேன் வரிகளில் அதே பூக்கள் அழுகின்றன.......... காதலி செல்லும்போது.. அட அட!!! மழையின் வர்ணிப்பு இந்த பூக்களை மிஞ்சும் அழகு.

அவள்மேல் பட்ட துளிகள் வென்றுவிட்டது..... ம்ம்ம்ம்... வார்த்தையில்லை கவிஞரே!

இரவு நேரத்தைச் சுட்டிக்காட்டுவதிலும் என்ன ஒரு கவித்திறமை./! அதிலும் வானத்திலும்.... இந்த வரிகள் கூட அவளைப் பாடுகிறது. நண்பரே! இந்த அழகிய கவிதைக்கு நான் விமர்சனம் என்ற பெயரில் ஏதாவது போட்டுவிடப்போகிறேன்..!! முழுவதுமாக எடுத்து வடித்து எழுத வேண்டுமென்றால் என் விரல்கள் பிறகு அழ நேரிடும்..

காற்றால் ஆடிய பூக்கள் = கையசைத்த பூக்கள்...

ம்ம்ம்... இப்படித்தான் எழுதவேண்டும் கவிதை என்று உணர்த்துகிறது.. இனி காதல் கவிதை எழுதும்போது ஒருதரம் இந்த கவிதையைப் பார்க்கவேண்டும்....

இளசு
29-03-2007, 10:26 PM
... கடைசியாய் மீட்டுவிட்டேன் என்னை..



மதியின் இந்தப்பாராட்டும்
பூ, ஆதவா உள்ளிட்ட நண்பர்களின் சீராட்டும்
இவையும் இன்னமும் தகும் இக்கவிதைக் காட்சி ஓவியத்துக்கு!

வேறெந்த ஊடகங்களிலும் வெளிவரும் சிறந்த காதல்கவிதைகளை
விஞ்சும் அழகும், நேர்த்தியும் ... பாராட்டுகள் ஷீ-நிசி...


ஹச்..ஹச்..

வெறென்ன?
அந்தப் பூங்காவில் உங்களை மெய்மறந்து
பார்த்திருந்தவனுக்கு
மழை தந்த பரிசு...

மழையில்லா மற்றொரு மாலையில் உங்களைப்
பார்க்கும்வரை இதையே அசைபோடப் போகிறேன்...

டாக்டர் அண்ணாதுரை
30-03-2007, 01:27 AM
இயற்கையின் மடியில் அமர்ந்து தென்றலின் தாலாட்டும் சேர்ந்தால் எப்படியோ....அப்படி!
வாழ்துக்கள்.
அன்புடன்

ஷீ-நிசி
30-03-2007, 03:49 AM
ஆதவாவின் விமர்சனமும்,, இளசு அவர்களின் விமர்சன்மும் கவிதையின் சிறப்பை இன்னும் உயர்த்துகின்றன... நன்றி நண்பர்களே!

ஷீ-நிசி
30-03-2007, 03:49 AM
மிக்க நன்றி ஆனந்த் அவர்களே!

crisho
30-03-2007, 05:46 AM
மத்தியக்கிழக்கை
சுட்டெறிக்கும் ஆதவனின்
சூட்டை மிஞ்சும்
குளிர்ச்சியை உணர்ந்தேன்
இக் கவியில் -

சகோதரன் ஆதவனின் ரசனையை தொடர்ந்து
நான் ரசித்தவை -

காதலியின் வருகை -
மழைத்துளி - கைப்பை யுத்தம் -
தேங்கிய நீரின் வரவேற்பு -
மழைத்துளிகளின் வெற்றி - தோல்வி -
காவளாளியின் நினைப்பு -
இருசக்கர வண்டியின் இருக்கை - ஏளனம் -

ஓ... ஓ.... ஓ....
ரசித்தேன்... சுவைத்தேன்.... மனம் குளிர்ந்தேன்!! :4_1_8:

பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்
மேலும் உங்கள் கவி காண ஆவலாய் காத்திருக்கிறேன்!

ஷீ-நிசி
30-03-2007, 05:52 AM
நன்றி கிரிஸ்சோ.... வானத்திலும் ஒரு நிலா வந்துவிட்டதை கவனிக்கவில்லையா நீங்கள்....

crisho
30-03-2007, 07:00 AM
கவனித்தேன்! அவதானித்தேன்!!

சகோதரன் ஆதவன் அதை குறிப்பிட்டிருந்தார்!! இருப்பினும்....

இரண்டாவதாக வானத்திலும் ஒரு நிலா எனக் கூறி...
காதலியை முதன்மை நிலவாக காட்டியமையையும் ரசித்தேன்!!

இப்படியான ஒரு கவியமைக்க நிச்சயம் ஒரு காதலனால் தான் சாத்தியம்!!

எல்லாம் நல்லபடி கை கூட... வாழ்த்துக்கள்!!! :080402gudl_prv:

ஷீ-நிசி
30-03-2007, 11:49 AM
எல்லாம் நல்லபடி கை கூட... வாழ்த்துக்கள்!!! :080402gudl_prv:

:sport-smiley-007:

:209:

:violent-smiley-010: :sport-smiley-002:

ஓவியா
05-04-2007, 12:28 AM
சில நாழிகைகள் மட்டும் அரங்கேரும் ஒரு சின்ன நிகழ்வினை சொன்ன விதம் அஹா ஓஹொ அருமையோ அருமை.

இது இதுதான்,
அவள் அழகை இயற்க்கையுடன் (மழைத் துளியையும், பூக்களையும், நிலாவையும்) ஒப்பிடும் விதம் மிகவும் அசத்தல்.

இந்த ரசனைதான் உங்க சிறப்பே!!!!

நன்று. பாராட்டுகிறேன்.

ஷீ-நிசி
05-04-2007, 04:32 AM
மிக்க நன்றி ஓவியா...

எல்லாக் கவிதைகளும் படிக்க இப்போதுதான் நேரம் கிடைத்தது என்று என்னுகிறேன்.. ஒரே மூச்சில் படித்து தள்ளிவிட்டீர்கள்... நன்றி ஓவியா.

பிச்சி
05-04-2007, 09:45 AM
வாவ்! கவிதை... ரியலி சூப்பெர்... என்னமா பிச்சி பிச்சி எழுதரீங்க.. பிச்சி சொக்கிட்டேன் போங்கள்

nonin
05-04-2007, 03:29 PM
நாட்கள் பலவாகின்றன ஷி நிசி இம்மன்றம் வந்து. பின்னூட்டமும் அவ்விதமே.எனினும் கூட்டத்தில் முட்டி மோதி, வியர்வை கசகசக்க,மூச்சு காற்றுக்கு தவித்து,தப்பித்தோம் பிழைத்தோம் என வெளி வந்தவுடன் முகத்தை வருடுமே மெல்லிய தென்றல் அதை போன்ற தீண்டலை உங்கள் கவிதையில் கண்டவுடன் சும்மா போக இயலவில்லை.காதல் கனியான பின்னும் இந்த காதல் மனம் தங்கிவிடுமெனில், உங்கள் காலமெல்லாம் கவிதைதான்.

ஷீ-நிசி
08-04-2007, 04:49 AM
நன்றி பிச்சி! பிச்சியின் பின்னூட்டம் காண்பதே அரிதாகிறது... தொடர்ந்து வாங்க பிச்சி..
------------

நன்றி நானின்..முடிந்தமட்டிலும் அவ்வபோது மன்றத்திற்கு வாங்க....

ஓவியன்
08-04-2007, 05:15 AM
'இதோ வந்துவிட்டேன்'..
என் நிலா செய்தியனுப்பினாள்!

எங்கிருக்கிறாய்? என்று
எண்ணிலா செய்தியனுப்பியபின்!

வழக்கமாக சந்திக்கும் பூங்காதான்!

அன்று மட்டும்
பூக்களெல்லாம் குளித்து
தலைதுவட்டாமலிருந்தன!

சுற்றிக் கொண்டே
வந்தவனின் கண்கள்
ஓரிடத்தில் நின்றன.

தலைதுவட்டாமலிருந்த
பூக்களில் ஓன்று, பூங்காவிற்குள்
நுழைந்துக்கொண்டிருந்தது!
................

................
மரங்களுக்கிடையில் சிக்கின
மழைத்துளிகளுக்குள் வாக்குவாதம்!
அவள் மீது விழுந்திட விரும்பி -அதில்

வெற்றிபெற்ற துளிகள்..
அவள் மீதும்,
தோல்வியடைந்த துளிகள்
என் மீதும்,
அவ்வப்போது ஒவ்வொன்றாய்
விழுந்துக்கொண்டேயிருந்தன!

பேசிக்கொண்டிருந்ததில்
வானத்திலும் ஒரு நிலா
வந்துவிட்டதை கவனிக்கவில்லை!
..........................
..........................
..........................
பூங்காவின் பூவை
ஏன் எடுத்துச்செல்கிறாய்
என்று பார்ப்பதுபோல்!


அற்புதமான ஒரு கவியை இது வரை வாழ்த்தாமைக்கு மன்னியுங்கள் ஷீ-நிசி.

தான் பெற்ற மக்களில் தனக்குப் பிடித்தது யாரென்று சொல்ல இயலாத தாயின் நிலையில் நான்!

ஆமாம் எனக்குப் பிடித்த வார்த்தைகளை பிரித்தெடுக்க எத்தனித்தேன் முடியவில்லை - எல்லாமே பிடிக்கிறதே!

அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள், என்னையும் அனுபவிக்க வைத்தீர்கள் - நன்றிகள் கோடி.


முடிவாக

அடிக்கத் தான் வேண்டுமெனக்கு - இப்படி ஒரு கவியை இது வரை கண்டு கொள்ளாதற்கு.

ஷீ-நிசி
08-04-2007, 05:31 AM
நன்றி ஓவியன்.. பரவாயில்லை... உங்கள் கண்ணில் படாததனால்தானே பின்னுட்டமிடவில்லை..

பென்ஸ்
09-04-2007, 08:11 PM
ஷீ...
உங்கள் காதல் கவிதைகளில் வரும் எ(ளி)ழிமையான வரிகள் தான் உங்கள் பலம். இது எந்த ஒரு காதலரையும் ஒரு முறை கூட காதலிக்க வைக்கும்.... இங்கே காதலில்லாது யாருளார்.... (நன்றி: ஆதவன்).
கதையையும் கவிதையாய்... தொடருங்கள்...

gayathri.jagannathan
10-04-2007, 03:25 AM
எளிமையான வார்தைகளில் அழகாகப் பின்னப்பட்ட இனிமையான காதல் நிகழ்வு...

சிறிய அசைவையும் காதலின் கோணத்தில் பார்க்கும் ஒரு காதலனின் ரசனையான மனம்

கலக்கிட்டீங்க ஷீ...... (இந்தப் பின்னூட்டத்தை மிகவும் காலம் தாழ்த்தி இட்டமைக்காக மன்னியுங்கள்...)

ஷீ-நிசி
10-04-2007, 03:31 AM
நன்றி பென்ஸ்.. எளிமையா பின்னூட்டம் இட்டிருக்கீங்க.....

நன்றி காயத்ரி.. இனிமேல் சீக்கிரமாய் பின்னூட்டமிடுங்க....

gayathri.jagannathan
10-04-2007, 05:15 AM
நன்றி காயத்ரி.. இனிமேல் சீக்கிரமாய் பின்னூட்டமிடுங்க....

சரிங்க ஆபீசர் (சும்மா டமாசு):medium-smiley-080:

அமரன்
30-07-2007, 06:41 PM
இனி காதல் கவிதை எழுதும்போது ஒருதரம் இந்த கவிதையைப் பார்க்கவேண்டும்....
ஆதவன் சொன்னது..
இதில் காதலை தவிர்த்தால் அது என(து)க்கு (பின்)ஊட்டம். நன்றி ஷீ.

சிவா.ஜி
31-07-2007, 04:41 AM
முதலில் அமரனுக்கு என் நன்றிகள் உரித்தாகுக. இப்படிப்பட்ட பொக்கிஷங்களை மீண்டும் வெளிக்கொண்டு வருவதற்கு.
ஷீ இந்த கவிதை பதிக்கப்பட்ட காலங்களில் நான் மன்றத்தில் இணந்திருக்கவில்லை.அதற்காக மிக மிக வருத்தப்படுகிறேன்.இருந்தாலும்,எங்கே ஒளித்து வைத்தாலும் சந்தனத்தின் மணத்தை மறைத்து வைக்க முடியாது என்பது போல மனதிற்கு இதமான வாசம் வீசும் இந்த கவியை மனதார ரசித்தேன். வரிவரியாய் சுவைத்தேன். இதைப்போல் ஒரு கவிதையை நாமும் படைக்கமாட்டோமா என ஏங்க வைத்த கவிதை. மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷீ−நிசி.

ஷீ-நிசி
31-07-2007, 05:15 AM
நன்றி அமர்... நன்றி சிவா.....

lolluvathiyar
31-07-2007, 01:31 PM
அந்த பூவை கண்டு முதலில்
மழைதுளிகளை ஏங்க வைத்து விட்டு
பிறகு பூக்களை பொராமை பட வைப்பீர்கள் என்று நினைத்தேன்
அட பூக்களையும் வாட்ச்மேனை விட ஏங்க வைத்து விட்டீர்களே
சூப்பர வரிகள் நிசி
பாராட்டுகள் 25 இபணத்துடன்

ஷீ-நிசி
31-07-2007, 03:02 PM
நன்றி வாத்தியாரே!

இனியவள்
31-07-2007, 03:05 PM
வாழ்த்துக்கள் ஷீ

தலைப்புக்கு ஏற்ற
மாதிரி கவிதையும்
வார்த்தை ஜாலங்களும்
அருமை

வெண்தாமரை
31-07-2007, 03:08 PM
என்ன அருமையான வரிகள் இவை.. இன்பத்தமிழுக்கு உங்கள் கவிதை அமிர்தமாகிறது.. வாழ்த்துக்கள்..

அக்னி
31-07-2007, 03:10 PM
மழையில் ஒரு காதலின் சந்திப்பு...
பூங்காவனத்தில் நுழைந்த காதலி அழகிய கா...
பூங்காவனத்தில் காத்திருந்த காதலன், காதலி என்கின்ற காவின் காவலன்...

மிக அழகான பிரயோகங்கள்...

வெற்றிபெற்ற துளிகள்..
அவள் மீதும்,
தோல்வியடைந்த துளிகள்
என் மீதும்,
அவ்வப்போது ஒவ்வொன்றாய்
விழுந்துக்கொண்டேயிருந்தன!

அவள் மீது விழும் மழைத் துளிகளுக்கே வெற்றி பெற்ற மமதை என்றால்,
காதலனுக்கு...

அவள் பிரிந்து செல்லும் கணங்களில் பூக்களின் கண்ணீர் காம்புவழி...
மிக அழகான கற்பனை...

மழைநாளொன்றில்,
குடைபிடிக்காமல் வந்தவளால்,
குடைசாய்ந்த மனது,
நிரந்தரமாக முடங்கிக்கொண்டது,
அவள் மனதில்...

பாராட்டுக்கள் ஷீ-நிசி....

ஷீ-நிசி
01-08-2007, 03:45 AM
நன்றி இனியவள், நன்றி சன்ஃபிளவர்...

ஷீ-நிசி
01-08-2007, 03:46 AM
மழைநாளொன்றில்,

குடைபிடிக்காமல் வந்தவளால்,
குடைசாய்ந்த மனது,
நிரந்தரமாக முடங்கிக்கொண்டது,
அவள் மனதில்...

அழகிய வரிகளில் சிறப்பான விமர்சனம் அக்னி.. நன்றி!

ஆதவா
04-08-2007, 11:19 AM
இன்னும் பார்க்கப்படுகிறது என்பது கவிதையின் பெரும் சிறப்பையும் மிகப்பெரும் வெற்றியையும் காட்டுகிறது. வாழ்த்துக்கள் ஷீ−நிசி

leomohan
04-08-2007, 11:24 AM
தலைதுவட்டாமலிருந்த
பூக்களில் ஓன்று, பூங்காவிற்குள்
நுழைந்துக்கொண்டிருந்தது!

...

அழகிய கற்பனை. மேலும் உங்கள் கவிதைகளை படிக்கத்தூண்டியது. வாழ்த்துக்கள் ஷீ.

ஷீ-நிசி
06-08-2007, 03:40 AM
நன்றி ஆதவா! நன்றி மோகன் அவர்களே!

ஓவியா
07-08-2007, 01:29 AM
மீண்டும் கவியதையை படித்து மகிழ்தேன். பலே.

நன்றி ஷீ.

ஷீ-நிசி
07-08-2007, 02:37 AM
மீண்டும் நன்றி ஓவியா....

இலக்கியன்
07-08-2007, 08:06 AM
அழகாக தமிழ் விளையாடுகின்றது உங்கள் கை வண்ணத்தில்

ஷீ-நிசி
07-08-2007, 08:34 AM
நன்றி இலக்கியன்

aren
07-08-2007, 02:30 PM
பூங்காவில் நடந்த அழகான சந்திப்பை அருமையான நடையில் இங்கே அளித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளையடித்துவிட்டீர்கள் ஷீ−நிசி. பாராட்டுக்கள.

ஷீ-நிசி
07-08-2007, 04:36 PM
நன்றி ஆரென்.. உங்கள் பார்வை இப்போதுதான் வீசியதா இந்த பூங்காவில்....

aren
08-08-2007, 01:41 AM
நன்றி ஆரென்.. உங்கள் பார்வை இப்போதுதான் வீசியதா இந்த பூங்காவில்....

கவிதையென்றால் காததூரம் ஓடினேன் முன்னால். இப்பொழுதுதான் கொஞ்சம் தைரியம் வந்து இந்த பக்கம் வருகிறேன்.