PDA

View Full Version : குளிர்காலம்பாரதி
26-03-2007, 06:55 PM
தேதியில்லா குறிப்புகள்
குளிர்காலம்


பலப்பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம்தான் பழையகாலத்தைப் போல முன்பனி கொட்டத் தொடங்கி இருக்கிறது. குளிர்காலம் என்றால் என்ன என்பதே மறந்து போய் விட்ட போது, காலம் தான் இன்னும் இருப்பதை இப்போது உணர்த்தி இருக்கிறது. பெரியப்பா மகன் கணேசன் சொல்லுவான் - "ஆங்கில வருடங்களைப் போல அன்றி, தமிழ் வருடங்கள் ஒருவருடைய சராசரி வயதை ஒத்து கணக்கிடப்பட்டு
முன்னோர்களால் கணிக்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் மறுபடி வர அறுபது வருடங்களுக்கு மேலாகும். அப்போது அந்த வருடத்தில் என்ன விதமான காலச்சூழலலோ அதுதான் அறுபது வருடங்களுக்குப் பின்னர் வரும் போதும் நிகழும் என்று". அதெல்லாம் உண்மையா என்று யோசித்ததேயில்லை. இப்போதும் உணர்வதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என்பதும் சந்தேகமே.

அப்போதெல்லாம் குளிர்காலத்தில் காலையில் எழுந்திருக்கவே பிடிக்காது. பெரும்பாலும் படுக்கையில் இருந்து எழுப்பும் போதே, சூடான கருப்பட்டிக்காப்பியின் மணம் நாசியை துளாவும். கண்ணை மூடிக்கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக்குடிப்பதும் தனி சுகம்தான்!

அப்படிக்குடித்து விட்டு மறுபடியும், கம்பளியை இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கும். மீறி எழுப்பினால் நேரே செல்வது சமையலறைதான். அடுப்பின் முன்னால் அமர்ந்து கொண்டு, ஊதுகுழலால் நெருப்பை ஃபூ..ஃபூ என்று ஊதிவிட்டு, லேசாக எழும் புகையை சுவாசித்துக்கொண்டே, உள்ளங்கைகளை நெருப்பின் முன்னர் நீட்டி குளிர் காய்வது மிகவும் பிடிக்கும்.

வீட்டு முற்றத்திலும், வெளியிலும் வந்தால் பேசும் போது, புகைபிடிக்காமலே எல்லோருடைய வாயிலிருந்தும் புகை வருவது வேடிக்கையாக இருக்கும். வெறும் விரல்களை வாயில் வைத்து, புகை பிடிப்பதைப்போன்ற பாவனைகளை சிறுவர்கள் காட்டுவது எல்லாம் சகஜமான ஒன்றுதான்.

குளிர் அதிகமான நாட்களில், சிறுவர்கள் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவு வைக்கோல்போரை அள்ளிக்கொண்டு வரவேண்டும். எல்லோரும் விளையாடும் இடத்தில் ஒன்று கூடி, வைக்கோல் போரைக்கொளுத்தி, அனைவரும் அதைச்சுற்றி அமர்ந்து, கொஞ்சம் கொஞ்சமாக வைக்கோல் போரை எரித்து குளிர்காய்வதையும் மறக்கத்தான் முடியுமா..? உள்ளங்கைகளை சரசரவென்று தேய்த்துக்கொண்டே, நெருப்பில் கை வைப்பதும், பின்னர் அப்படியே கன்னத்தில் வைத்து குளிர்காய்வதும் வழக்கம். அப்படிக் குளிர்காயும் போது, ஒவ்வொருவரும் ஒரு சிறிய கல்லை எரியும் தனலில் இடுவது வழக்கம். வைக்கோல் எல்லாம் தீர்ந்து, எரிந்து முடிந்த பின்னர், பொறுக்க முடியாத சூட்டுடன் இருக்கும் கற்களை எடுத்து, இரண்டு கைகளிலும் மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டே, அருகில் இருக்கும்
சாக்கடையில் போடுவதும் வழக்கமே..! சுர்..என்று சத்தத்துடன் கற்கள் நீரில் குளிர்வதை காண்போம். யாருடைய கல் அதிக நேரம் சத்தம் தருகிறதோ அவனுடைய முகத்தின் மகிழ்ச்சியை எல்லாம் அளவிட முடியாது.

பெரும்பாலும் குளிர்காலங்களில் தோட்டங்களிலும், வயல்களிலும் செடிகளுக்கு மேலாக மெல்லிய புகை போல காட்சியளிக்கும். தூரத்தில் மரக்காமலையும், கொடைக்கானல் மலையில் இருக்கும் கண்ணாடி கோபுரமும் காண்பதும், மறைவதுமாக கனவுக்காட்சிகளில் வரும் சொர்க்கம் போல காட்சியளிக்கும்.

பிள்ளையார் படித்துறைக்கு செல்லும் வழியில் அடர்ந்த புளியமரங்கள், விளவ மரங்கள், கருவேல மரங்கள், மாமரங்கள் நிறைந்த தோப்பிருக்கும். சாலையில் செல்லும் போதே, மயில்கள் அகவும் ..உவாங்... என்பதை ஒத்த ஒலிகள் கேட்கும். குளிர்காலத்திற்கே உரிய, வார்த்தைகளில் வர்ணிக்க இயலாத ஒருவித மணமும் ஒருவிதமான கிளர்ச்சியை ஏற்படுத்தும். மயில்களும் மனிதர்களுக்கு அருகில் பயப்படாமல் உலாவும். மயில்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாவிட்டாலும் அந்த வட்டாரத்திலேயே அறிவிக்கப்படாத புகலிடமாக, மயில்கள் சரணாலயமாக எங்கள் கிராமம் திகழ்ந்தது என்றால் மிகையில்லை. சிட்டுக்குருவிகள்,கிளிகள்,மைனாக்கள்,குயில்கள் இன்னும் பெயர் தெரியாத பல வண்ணப்பறவைகளுமாய் நந்தவனம் போலத்தான் காட்சி அளிக்கும்.

சிறிய தூறல் வந்து விட்டாலும் போதும். மரங்களின் வேர்களுக்கு குடை பிடிக்க காளான்கள் கிளம்பி விடும்.ஊரில் தானாக விளையும் காளான்களில் பெரும்பாலானவை உணவிற்கு மிகவும் உகந்தவை. ஆயிரங்கால் பூச்சி(!)களும் தங்கள் இருப்பை அங்கிங்கெண்ணாதபடி எல்லா இடங்களையும் வியாபித்துக் கொண்டிருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் சிறிய பட்டுப்பூச்சிகளும் இங்குமங்குமாய் ஓடும். வெல்வெட் துணியை யாரும் தைக்காமலே அணிந்து கொண்டு உலாவும் பூச்சிகளை தடவிக்கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியைத்தரும்.

தும்பிகளும், பட்டாம்பூச்சிகளும் செடிகளை ஆராய்வது போல மாறி மாறி செல்வதுமாய், இயற்கை விடும் பட்டங்களோ இவை என்று எண்ண வைக்கும். இவ்வளவு வண்ணங்களில், அளவுகளில் மனங்கவரும் விதமாய் பட்டாம்பூச்சிகள் எவ்விதம் வந்தன என்று வியக்காத நாட்களே கிடையாது.

ஆங்காங்கே ஈசல்களை பிடிக்கவென்று சிலர் தரையில் துளையிடுவதும், அதன் அருகில் சென்று "ஈச்சப்பொந்துல பாம்பிருக்கு.. குன்னாங்குன்னாங் ஹோய்.." என்று சத்தமிடுவதையும் காணலாம். இவர்களின் அபாய எச்சரிக்கையை அறிந்தோ என்னவோ (!) ஈசல்கள் கூட்டம் கூட்டமாய் வெளிக்கிளம்ப அதை அப்படியே குடுவைகளில் அடைத்துக்கொள்வார்கள். பாவம் அந்த ஈசல்கள்...!?

காலையில் ஆற்றிலும், வாய்காலிலும் சூடு கிளம்புவதைப் போல மெல்லிய புகை எழுந்துகொண்டிருக்கும். குளிர் காலத்தில் காலையில் ஆற்றில் நீராடப்போவது அவ்வளவாகப்பிடிக்காத ஒன்று. வேப்பங்குச்சிகளை ஒடித்து, பல் துளக்கிக்கொண்டு படித்துறையில் நின்று கொண்டு குளிப்போமா, வேண்டாமா என்ற சிந்தனை வராத நாட்கள்
மிகக்குறைவு. ஆனால் என்ன.. ஒரு முறை தலை நனையும்படி நீரில் மூழ்கி எழுந்து விட்டால் குளிர் தூர ஓடிவிட்டது போன்று தோன்றும் - ஆனந்தமாய் குளித்து முடித்து உடம்பை சிவப்புநிற கதர் துண்டால் துவட்டிக்கொள்ளும் வரை. பின்னர் மெலிதாக காற்றடித்தால் போதும் -பற்கள் தட்டச்சு செய்ய ஆரம்பித்து விடும்!

மார்கழி மாதங்களில் பெரும்பாலான வீடுகளின் வாசல்களில் விதவிதமான கோலங்கள் - வண்ணப்பொடிகளின் தூவலின் நடுவே, சாணி உருண்டைகளில் பூசணிப்பூ சொருகப்பட்டு அலங்காரமாய் இருக்கும். "மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளாய் - நீராடப்போகுவீர் போகுமினோ நேரிழையீர்" என்று இளம்பெண்கள் பயபக்தியுடன் திருப்பாவை, திருவெம்பாவையை புத்தகங்களைப் பார்த்து, சத்தமிட்டு பாராயணம் செய்து கொண்டிருப்பார்கள். நான்கு, ஐந்து பேர் கொண்ட ஒரு சிறு பஜனைக்குழு "வெங்கட்ராமா கோயிந்தா.." என்று பாடிக்கொண்டு தெருக்களை வலம் வரும்.

நினைத்து எழுத ஆரம்பித்தால் எழுதிக்கொண்டே இருக்கலாம் என்பது போல இருக்கிறது. ஹூம்.... இப்போது எல்லாம் மயில்கள்,குயில்கள்,கிளிகள் எல்லாவற்றையும் குழந்தைகளுக்கு புத்தகங்களைப் பார்த்து சொல்லித்தர வேண்டியதிருக்கிறது. மயில்கள் ஏதோ ஒரு வியாதிக்கு மருந்து என்று வேட்டையாடப்பட்டு, கண்ணாடிக்குடுவைகளில் எலும்பாக மாறி காலம் பல ஆகிவிட்டது. குருவிகளையும் காகங்களையும் கூட மிக அரிதாகத்தான் காண முடிகிறது.

பலவிதமான செடிகளை, மரங்களை எங்கேயும் காண முடியவில்லை. சாலைகளுக்கும் நிழல் தந்து கொண்டிருந்த பல புளியமரங்களின் சுவடுகள் கூட இப்போது இல்லை. செருப்பு அணியாமலே அக்கம்பக்க ஊர்களுக்கு கால் நடையாகவே சென்ற காலம் எல்லாம் கதைகளில் மட்டுமே இடம்பெறுபவை என ஆகி விட்டன. சாலை விரிவாக்கம் என்றும், விறகுக்கு என்றும், வயதாகி விட்டது(!),பட்டுப்போய் விட்டது என்றும் மரங்களை அழிக்கும் பணி இன்னும் இடைவிடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நூற்றாண்டுகளை கண்ட மரங்கள் எல்லாம் சில நொடிகளில் மாய்க்கப்படுவதைக் கண்டால் மிக மிகக் கவலையாக இருக்கிறது.

பாசனத்திற்காக பயன்பட்ட வாய்க்கால்கள் இப்போது வெறும் கழிவுநீர் சாக்கடைகளாக மாறி விட்டன. ஆலைக்கழிவுகளும் ஆனந்தமாய் அதிலேதான் கலக்கின்றன. வாய்க்காலின் கரையோரங்களை அழகு பார்த்த கோரைப்புல், தொட்டாச்சிணுங்கி, நன்னாரிவேர் போன்ற பலவிதமான இயற்கை மருந்தாவரங்களை காணவே முடியவில்லை.

கால ஓட்டத்தில் வீட்டிலேயே வெந்நீர் குளியல் என்பதுதான் நாகரீகமாகி விட்டது. வருடத்தின் எல்லா நாட்களிலும் ஆற்றில் நீராடப்போவது எல்லாம் வெறும் கனவாக மாறிப் போய் விட்டது. ஆற்றிலும், வாய்க்காலிலும் நீரோடுவதை வித்தியாசமான நிகழ்வாக குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டியதிருக்கிறது. அணைப்பிரச்சினை என்று அரசுகள் நீதிமன்றத்தில் நிற்கின்றன. அடுத்த உலகப்போர் நீருக்காக மூளும் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. எல்லாம் அழிந்த பிறகு வரும் தீர்வினால் என்ன பயன்..??

சில வருடங்களாகவே வயல்கள், தோட்டங்கள் எல்லாம் பயிர்களைப் பற்றி கனவு மட்டுமே கண்டு கொண்டிருக்கின்றன. களிமண்ணை செம்மண்ணால் மூடி, குடில்களை கட்டுவதில், பணத்தை உண்டாக்குவதில் மனிதர்களுக்கு இருக்கும் அவசரத்தில் இயற்கை யார் கண்களில்தான் படப்போகிறது?

எதைக்குறித்தும் கவலைப்படாமல் கிராமத்து அத்தியாயங்களை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து, அழிப்பதில் மனிதர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். சிறுவர் முதல் பெரியவர் வரை 'தொலைக்காட்சிகளும், திரையரங்குகளும் மட்டுமே நிஜம்' என்ற மாயையில் தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்கால சந்ததிகளை உண்டாக்குவதில் வெற்றி பெறுபவர்கள், உருவாக்குவதில் கிஞ்சித்தும் அக்கறையின்றி, நிகழ்காலத்து பிரம்மையில் மூழ்கி விட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையை மீண்டும் கண்டெடுக்க முடியாத அளவிற்கு நாமும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை காலக்கண்ணாடி கண் முன்னே காட்டிக்கொண்டிருக்கிறது.


தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:


1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை

இளசு
26-03-2007, 08:13 PM
உன்னிடம் நான் எதிர்பார்த்ததை முற்றிலும் பூர்த்தி செய்த பதிவு இது பாரதி. அண்ணனின் நிறைந்த பாராட்டுகள்.

தற்காக்க இயலாத மயிலை வேட்டையாடி உண்பதிலேயே
மனிதனின் சில இயல்புகள் வெளிப்படுகின்றன இல்லையா?

அண்மையில் காவேரியில் புண்ணிய நீராடிய பலருக்கு
அடுத்தநாள் தோலெல்லாம் கொப்புளங்கள்..
இரசாயனக் கழிவின் பரிசு!


மிக அழகாய் மார்கழி நினைவுகளை பனிச்சரமாய் தெளித்து
உண்டாக்கியவர்கள் உருவாக்கத் தவறும் நெருப்பு நிஜத்தைத் தொட்டு

படைப்பாளியின் மனநோக்கத்தை படிப்பவருக்கு முழுமையாய்
அளித்த குளிர்காலம்-- காலச்சுவடு... இலக்கியப்பதிவு..

இவை தொகுக்கப்பட்டு நூலாய் வர என் விருப்பம், பாரதி!

அறிஞர்
26-03-2007, 08:28 PM
அருமையான மலரும் நினைவுகள்.. பாரதி அண்ணா...

இதில் பாதியளவில் குளிர் காலத்தை ரசித்து இருக்கிறேன்....

இன்று கிராமத்து அத்தியாயங்கள்.. அழிந்து வருகிறது என்பது அனைவருக்கும் வருத்தம் தரும் செய்தி...

march
27-03-2007, 10:36 AM
அருமையான கோடை வெயிலை அனுபவத்துகொண்டுஇருக்கிறோம்
இப்போது குளி கலத்தை பற்றி பேசுகிறீர்களெ

இது கொஞ்சம் ஒவரா தெறியில உங்களுக்கு.

வித்லவ்
மார்ஷ்

பென்ஸ்
27-03-2007, 02:31 PM
பாரதி...
உங்கள் பதிவுகளை நீங்கள் போட்ட உடனையே வாசித்துவிடுவேன்...
ஆனால் பதில் எழுத எடுக்கும் நேரம் அதிகம், பதிவின் ஒவ்வொரு வரியையும், எழுத்தையும் கவனித்து எழுத வேண்டியதால் இந்த நிலை...
ஒருவித மரியாதை கலந்த பயம்... மனிதர்கள் மேல் மரியாதை வருவது அவர்கள் செயல்கள், நெறிகளால்...
எனக்கு உங்கள் மேல் மரியாதை உங்கள் பதிவுகளால்... தெள்ளிய பதிவுகளால்...
கிராமத்து நினைவுகளை இன்றும் நினைக்கையில் சுகம்தான், ஆனாலும் கிராமம், காலநிலை மாறியதைவிட நாம் அதிகமாக மாறிவிட்டோமோ பாரதி..!!!!
மழையே பெய்தாலும், ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் அளவுக்கு மாறி போய்விட்டோமே...

நினைவுகள் சுகம்... அதுவும் உங்கள் தமிழில் வாசிக்கையில் இன்னும் சுகம்.

பாரதி
27-03-2007, 06:12 PM
அன்புள்ள அண்ணா...
வழக்கம் போலவே வஞ்சனையில்லாமல் அள்ளித்தரும் உங்கள் பாராட்டுகளுக்கும், அதீத நம்பிக்கைக்கும் என் அன்பு.

அன்பு அறிஞர்....
கருத்துக்கு மிக்க நன்றி. கிராமங்களை எல்லாம் காணக்கிடைக்காத அளவிற்கு மக்களிடையே நாகரீகம்(!) மாறி விட்டது. காந்தியடிகள் கிராமங்களை இந்தியாவின் உயிர்நாடியாக கருதினார். இன்று ...??

அன்பு மார்ஷ்...
உங்கள் கருத்துக்கு நன்றி. இப்பதிவு எழுத ஆரம்பிக்கும் போது குளிர்காலமாகத்தான் இருந்தது. சில காரணங்களால் பதிவு நிறைவு பெறவில்லை. அதனாலேதான் தாமதம் - மன்னிக்கவும்.

அன்பு பெஞ்சமின்...
உங்கள் கருத்துக்கு நன்றி. பதிவுகளுக்கு பதிலாக வரும் மன்ற உறவுகளின் கருத்துக்கள் என்றும் எனக்கு மகிழ்ச்சியைத்தான் தந்திருக்கின்றன - பிழையை சுட்டினாலும் கூட. பயம் எல்லாம் தேவையில்லை - ஏன் பயப்பட வேண்டும்? மனதிற்கு பட்டதை நேரடியாக சொல்லுங்கள். மன்றத்தில் சொல்லாவிட்டால் வேறு எங்கு சொல்லுவோம்..??

அமரன்
27-03-2007, 06:19 PM
பாரதி அண்ணா
சொந்த ஊரை விட்டு, உறவுகளை விட்டு தனித்திருக்கும் எனக்கு ஊரின் பனிக்கால மார்கழியின் அழகை நேரில் பார்த்த அனுபவித்த அனுபவத்தை தந்துள்ளீர்கள். இப்படியான பதிவுகளைப் பார்க்கும்போது நம்மவர்களுடன் இரூப்பதைப் போல உணர்கின்றேன். நன்றி. நன்றி. நன்றி.

பென்ஸ்
27-03-2007, 06:22 PM
அன்பு பெஞ்சமின்...
உங்கள் கருத்துக்கு நன்றி. பதிவுகளுக்கு பதிலாக வரும் மன்ற உறவுகளின் கருத்துக்கள் என்றும் எனக்கு மகிழ்ச்சியைத்தான் தந்திருக்கின்றன - பிழையை சுட்டினாலும் கூட. பயம் எல்லாம் தேவையில்லை - ஏன் பயப்பட வேண்டும்? மனதிற்கு பட்டதை நேரடியாக சொல்லுங்கள். மன்றத்தில் சொல்லாவிட்டால் வேறு எங்கு சொல்லுவோம்..??
அன்பின் பாரதி...
இந்த பயம் மரியாதையின் நிமித்தம் வந்தது என்று சொல்லவந்தேன்...
அதனாலையோ என்னவோ என்னுடைய தமிழ் சிறிதேனும் முன்னேறி வருகிறது.

உங்கள் அன்பு எங்களுக்கு என்றும் தூணாய்....

mukilan
27-03-2007, 08:10 PM
நான் ஏற்கனவே ஒரு முறை கூறி இருக்கிறேன். நான் தமிழ்மன்றத்தில் முதல் முதலாகப் படித்தது தங்களின் படைப்பும் ராகவனின் படைப்பும்தான். என்னை தமிழ்மன்றத்தோடு கட்டிப் போட்ட எழுத்துக்குச் சொந்தக்காரர் நீங்கள்.நடந்த நிகழ்வுகளை கண்முன்னே காண்பிக்கும் எழுத்தாளர்கள் மிகவும் சிலரே! அத்தகைய சிலரில் நீங்களிம் ஒருவர் என்பது மன்றமறிந்த உண்மை. வார்த்தைகள் விளையாடி இருப்பதன் அழகே தனி.
மரங்களின் வேர்களுக்கு குடை பிடிக்க காளான்கள் கிளம்பி விடும் தற்குறிப்பேற்ற அணி!

சிறிய உதாரணம் தான். இது போல ஏராளம். இது போல முத்தாய்ப்பான பதிவுகள் படைக்க நீங்கள் நிறைய நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் என்ற சிறிய குற்றச்சாட்டை உங்கள் முன்வைக்கிறேன். ஏற்கனவே அனைவரும் பாராட்டிக்கொண்டிருப்பதால்.

பாரதி
28-03-2007, 06:14 PM
கருத்துகளுக்கு மிக்க நன்றி நரன், பெஞ்சமின், முகில்.

அன்பு பெஞ்சமின், உங்கள் பதிவிலேயே எனக்கும் நன்றாக புரிந்தது. நண்பர்களுக்கிடையில் ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றம் தேவை. பயம் - அது எந்த காரணத்தினால் என்றாலும், சொல்ல வரும் கருத்துக்கள் சற்றேனும் தடைபட அல்லது தடம் மாற காரணமாக இருக்கும் என்பதைத்தான் நானும் குறிப்பிட விரும்பினேன். என்றும் மன்ற உறவுகளின் அன்பில் எவ்வித மாற்றமும் இருக்கப் போவதில்லை. நன்றி.

அன்பு முகில்,
மிக்க நன்றி. ரசித்துப்படித்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. உங்கள் குற்றச்சாட்டில் சற்றும் தவறில்லை. நீங்கள் கூறியது போல நிறைய நேரம் மட்டுமல்ல... மாதங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். தேதியில்லா குறிப்புகளின் ஆரம்பத்திலேயே இதைக்குறித்து சொல்லியிருக்கிறேன். என்ன செய்வது..? எழுதிய பின் படித்துப்பார்த்து திருப்தி இல்லையெனில் அழித்து விடுவதும் ஒரு காரணம். சில பதிவுகளை எப்படிப் பதிவு செய்ய என்ற குழப்பமும் ஒரு காரணம்.

உங்களின் சரியான பின்னூட்டம் பதிவுகளை நேர்த்தியாக்குகிறது. அணியை நினைவு கூர்ந்தமைக்கும் மிகவும் நன்றி முகில்.